Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 46

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 46

றக்கம் கலைந்ததும் ஏதோ வித்யாசமான உணர்வில் விழித்தான் ஜிஷ்ணு. தூக்கக்கலக்கத்தில் புரண்டு அவளது இடுப்பினை வளைத்து வயிற்றில் முகம் புதைத்து உறங்கியிருந்தான். மெலிதாக குளிர்காற்றிலிருந்து ஜிஷ்ணுவைக் காக்கும் பொருட்டு சரயு அவளது ஸ்லீவ்லெஸ் ப்ராக் மேல் போட்டிருந்த ஓவர்கோட்டைக் கழற்றி அவன் மேல் போர்த்தியிருந்தாள்.

கண் விழித்ததும் இருள் கவிழ ஆரம்பித்த வேளையிலும் யானைத் தந்தத்தைக் குடைந்து செய்தார்போலிருந்த மெல்லிய கைகளும், நீண்ட விரல்களும் ஜிஷ்ணுவின் கண்களில் பட்டன. காலை அசைத்தால் ஜிஷ்ணுவின் தூக்கம் கலைந்து விடுமோ என்று அச்சப்பட்டு அதே போஸில் அமர்ந்திருந்த சரயுவைப் பார்த்தான்.

“இருட்டிடுச்சு, ரொம்ப நேரமாச்சா…?” என்றவாறு மணியைப் பார்த்தான்.

“ஐயோ, இவ்வளவு நேரமா தூங்கினேன். நீ வேற அஞ்சு மணிக்கு எங்கயோ போகணும்னு சொன்னியே.. எழுப்பி விட்டிருக்கலாம்ல” என்றான் பதறிப்போய்.

“நீ களைப்பா இருந்த, உன்னைத் தொந்தரவு பண்ண மனசில்ல”

சட்டென்று எழுந்து நின்றவன், “சரி எந்திரி கிளம்பலாம்…” என்றான் கலைந்த தலை முடியை சரி செய்தவாறே.

சரயு இன்னமும் எழாமலிருப்பதைக் கண்டு, “இப்படியே உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம். உன்னைக் கார் வரைக்கும் தூக்கிட்டுப் போகணுமா?”

“அப்படித்தான் செய்யணும் போலிருக்கு. உன் தூக்கம் கலையக்கூடாதுன்னு அசையாம உட்கார்ந்திருந்தேனா, காலெல்லாம் மரத்துடுச்சு” என்றவள் மறுநொடி அவனது கைகளில் இருந்தாள்.

“எனக்காக சின்ன சின்ன விஷயத்துல கூட நீ காட்டுற அக்கறை… இதுக்கு பேர் என்னரா… காதலா இல்ல அதுக்கு மேல ஏதாவது ஒண்ணா?” வினா எழுப்பியபடி அவளை காரில் அமரவைத்தான்.

“உன் ஆபிஸ்ல விடட்டுமா?”

“என் மாமனார் ஆபிஸ் பாரு, இந்நேரத்துக்குத் திறந்து வச்சிருக்க…”

“உன் கார் அங்கதான இருக்கு. பார்கிங் லாட் கூடவா திறந்திருக்காது”

“மத்யானம் நீ மடில படுத்து தூங்கினல்ல, உன் ஹெட் வெயிட்டால என் காலே வலிக்குது. என்னால டிரைவ் பண்ண முடியாது. வீட்டுல டிராப் பண்ணிடு”

‘இவ்வளவு நேரம் என் தலைசாய மடி கொடுத்தியே… அன்னைக்கு ஒரே ஒரு நிமிஷம் நான் சொன்னதைக் கேட்க உனக்கு மனசு வரலையே’ அவன் மனதில் நினைத்ததைப் படித்தவளாய்,

“அன்னைக்கு நீ உன் குடும்பத்தோட சந்தோஷமா வாழணும்னு நெனச்சேன் விஷ்ணு. நான் அங்க உன் வாழ்க்கையைக் கெடுக்க வந்தவளா இருக்கக்கூடாதுன்னு உறுதியா இருந்தேன். அந்த சமயத்துல நீ பேசுறதை கேட்டா என் உறுதி தளர்ந்திருக்கும்’ என்றாள்.

“அதனால கெட்டவளா வேஷம் கட்டுனியாக்கும்”

“வேஷம் கட்ட உனக்கு மட்டும்தான் தெரியுமா… என் பார்வை படுறமாதிரி இடத்துல ஜேம்ஸ்பாண்ட் மாதிரி நீச்சலுடை அழகிகளோட சுத்துறது, வேற யாருக்கோ தர்றதா நெனச்சேன்னு பொய் சொல்லிட்டு ஆசையா திருட்டு முத்தம் தர்றது… எங்களுக்கும் இதெல்லாம் வரும்… கமல், சிவாஜி எல்லாம் எங்க ஊருதான்டா…”

பேசியபடியே அவளது வீட்டு முன் காரை நிறுத்தினான். சரயு காரிலிருந்து இறங்க, வீட்டு வாசலில் அம்மா என்று குதித்தோடி வந்த அபியைக் கண்டு திகைத்து நின்றான் ஜிஷ்ணு.

‘இவங்கள ரிசீவ் பண்ணப் போகாமத்தான் நான் தலை சாய மடி தந்தியா?’ சரயுவைப் பார்க்க, சரயு கதவைத் திறந்து அபியை வெளியே நின்றபடியே கொஞ்ச ஆரம்பித்திருந்தாள்.

“தங்கப்பையன் ஊருல இருந்து வந்திங்களா…?”

“ம்ம்…”

“அம்மாவ விட்டுட்டு சமத்தா இருந்திங்களா… அப்பாவ ரொம்பத் தொந்தரவு பண்ணிங்களா…?”

“ம்ஹும்… அபி குட் பாய்… ப்பா குட் ப்பா” என்று தன் தாய்க்கு மட்டுமே புரிந்த மொழியில் பேசினான்.

“சிண்டு நல்ல பையனா இருந்திங்களா… அப்பா குட் பாய் சொன்னாங்களா…?” என்று சரயு கேட்டதும் ஆமாமெனத் தலையாட்டினான்.

சரயு கைப்பையிலிருந்த சாக்லெட்டை எடுத்துத் தர, வாங்கிக் கொண்டு சரயுவின் முகத்தை எச்சிலாக்கியவன், “ஸ்வீட் மம்மி, கிஸ் தா” என்று கேட்டு வாங்கினான்.

நிமிர்ந்து பார்த்தவன், தாயின் அருகே புதிதாய் ஜிஷ்ணுவைக் கண்டு வெட்கத்துடன் தாயின் தோளில் முகம் புதைத்துக் கொண்டான். தாய்-மகனின் அன்பைக் கண்டு சொக்கிப் போய் நின்றான் ஜிஷ்ணு.

“உன்னை விளையாட்டுத்தனமான ஸ்கூல் கோயிங் கேர்ளா பார்த்திருக்கேன். உன்னுள்ள இருந்த டீன் ஏஜ் பிளேயரை அட்மையர் பண்ணிருக்கேன், என்ஜினீயரிங் காலேஜ்ல நீ படிச்சப்ப கார்டியனான எனக்கு அனுப்புற மார்க்ஷீட்ல உன் மணி மணியான மார்க்ஸ் பார்த்து வியந்திருக்கேன். ஒரு காதலியா நீ காட்டின அன்பு மழைல நனைஞ்சிருக்கேன். நீ எவ்வளவு அன்பான அம்மான்னு இன்னைக்குப் பார்த்துட்டேன்டி… யூ ஆர் சோ லவ்லி டியர்”

ஆசையோடு சொன்னான். “சரயு, அபி எவ்வளவு அழகா இருக்கான். அப்படியே கிருஷ்ணனைப் பாக்குற மாதிரி இருக்கு. நீ சின்ன பிள்ளைல பண்ணுற வாலைப் பார்த்து இவ பையனா பொறந்திருக்க வேண்டியது தப்பிப் பொறந்துட்டான்னு நெனச்சுப்பேன். நீ மட்டும் பையனா இருந்தா இப்படித்தான் இருந்திருப்ப. அப்படியே நீதாண்டி…”

சரயுவின் தோளில் சாய்ந்து வேடிக்கை பார்த்த சிண்டுவை, ஒரு மலரை தொடுவதைப் போல் மென்மையாகத் தொட்டான். அவன் கன்னங்களை வருடினான். குழந்தை ஊரிலிருந்து வந்ததை தன்னிடம் சொல்லாத சரயுவைக் கடிந்தபடி காரிலிருந்த பெரிய புலி பொம்மையைத் தந்தான்.

“சிண்டுவைப் பத்திக் கேள்விப்பட்டவுடனே எவ்வளவு பொம்மை வாங்கினேன் தெரியுமா? எல்லாம் ஹோட்டல்ல இருக்கு. இவன் வந்தது தெரிஞ்சிருந்தா அள்ளிட்டு வந்திருப்பேன். இப்ப பாரு இந்த பொம்மை மட்டும்தான் கையிலிருக்கு. என்கிட்டே முன்னாடியே சொல்லாததால உனக்கு இது கிடையாது போ” என்று அபியிடம் பொம்மையைத் தந்தான்.

“டைகத்” அவனை விடப் பெரிதாய் இருந்த அந்த புலி பொம்மையை கஷ்டப்பட்டு வாங்கிக் கொஞ்சினான் அபி.

“சந்தனா பொண்ணா பொறந்துட்டாளே, நமக்கு வயசானவுடனே அவளால பிஸினஸ அலைஞ்சு கவனிக்க முடியுமான்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன். இப்ப அந்தக் கவலை தீர்ந்துடுச்சு. இவனை என்கிட்டே தந்துட்டு நீ வேற பாப்பா பெத்துக்கோடி” ஆசையாய் சொன்னான் ஜிஷ்ணு.

“இவன் உனக்குக் கிடையாது. அபி அவங்க அப்பாவாட்டம் டாக்டர் ஆவானாம். இப்பயே டாக்டர் செட் வச்சுத்தான் விளையாடுறான் தெரியுமா… உனக்கு வேணும்னா அடுத்த பாப்பாவைத் தரேன்”

“ஓகே அக்செப்ட்டட், காணி அடுத்த பாப்பாவையும் உன்னை மாதிரியே பெத்துத் தரணும்” கண்டிஷன் போட்டான்.

அபியிடம், “என்கிட்டே வருவியா?” என்று கையை நீட்ட, சட்டென தாவிச் சென்றான் குட்டிப் பையன். சரயுவின் குட்டிப் பதிப்பாய் இருந்த அந்த குழந்தையிடம் சரயுவின் வாசத்தைக் கண்டவன், ஆசையுடன் கன்னத்தில் முத்தம் பதித்தான்.

“உன் மீச குத்துது” என்று உதட்டை சுழித்தான் அபிமன்யு.

“சரயு… இங்கபாருடி அப்படியே உன்னை மாதிரியே சொல்லுறான்” தன்னை மீறி வியந்தவன் யாரோ தொண்டையைக் கனைக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.

யாரிவன்? கருப்பாய், ஒல்லியாய் சரயுவை விட பிடி உயரம் கம்மியாய்…

அபி இருக்கிறான் என்றால் அவனது தகப்பனும் அங்கிருப்பானில்லையா… அப்ப… திடுக்கிட்டுப் பார்த்தான் ஜிஷ்ணு.

கடவுளே! இவன்தான் ராமா? சரயு ராமபஜனை செஞ்சுட்டு இருக்குறது இவனை நெனச்சா? பௌர்ணமி நிலவா ஜொலிக்குற என் சரயுவுக்கு இணையா அமாவாசை வானம் மாதிரி இருக்குற இவனா? ஜிஷ்ணுவுக்கு தலையே சுற்றியது.

“அம்மா, சரயு வந்துட்டா” உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தான் ராம். அதில் கோவமா, சந்தோஷமா என்று தெரியாத, உணர்வுகளை வெளியில் காட்டாத ஒரு மரத்த தொனி இருந்தது.

‘நேத்து கிஸ் பண்ணப்ப சரயு என்னமோ சொன்னாளே ‘ராம் அப்பவே சொன்னான்னு’ அப்ப இவனுக்கு எங்களோட காதல் பத்தித் தெரியும்னுதானே அர்த்தம். பொண்டாட்டி அவனோட பழைய காதலனோட வர்றா, இப்படி ஒரு லுக் விடுறானே… ஒருவேளை உள்ளே கூட்டிட்டு போய் செமத்தியா கவனிப்பானோ… சரயு மாதிரி ஒருத்தியைக் கல்யாணம் செய்திருக்கவன் அடி வாங்கித்தான் பழகி இருக்கணுமே தவிர அடி கொடுக்கறத நெனச்சே பாக்கக் கூடாதே…’ – ஜிஷ்ணு.

“சரயு… வாசல்லயே நின்னுட்டு என்ன பேச்சு? மூணு பேரும் வீட்டுக்குள்ள வாங்க” ஜிஷ்ணுவை முறைத்தபடி உத்தரவிட்டான் ராம்.

‘என்னையுமா வீட்டுக்குள்ள கூப்பிடுறான்? இல்லையே… இவன் பாடி லாங்குவேஜ பார்த்தா சண்டைக்கு வந்தவன் மாதிரியே இருக்கே’ என்றபடி ஜிஷ்ணு திருதிருவென விழித்தான். தனது கையில் உட்கார்ந்து தோளில் சாய்ந்து, சரயு தந்த சாக்லேட் கவரைத் தாறுமாறாய் கிழித்து ஜொள் வடிய சாப்பிட்ட அபிமன்யுவைப் பிரியவே மனமில்லை. இருந்தாலும் இது சரயு குடும்பத்துடன் இருக்க வேண்டிய தருணம். சரயுவுக்கு தான் எவ்வளவுதான் முக்கியமாய் இருந்தாலும் இந்த அழகான கூட்டில் இவனுக்கு இடமில்லை என்பதுதான் நிதர்சனம். ஒரு முடிவுக்கு வந்தவனாக சரயுவின் காதில் மெதுவாய் சொன்னான்.

“நான் இப்படியே போறேன் சரயு… இவன் கூட நீ நிக்கிறத என்னால சகிச்சுக்கக் கூட முடியாது. ப்ளாக் அண்ட் வைட் படம் மாதிரி இருக்கும்” என்று சரயுவின் காதில் முணுமுணுத்தான்.

“போயி என்ன செய்யப்போற?” அலட்சியமாய் கேட்டாள் சரயு.

“புண் பட்ட மனதைப் புகையை விட்டு ஆத்தணும். இவனுக்கு வாய்ச்ச அதிர்ஷ்டத்தை நெனச்சு, எரியுற என் வயத்துல கொஞ்சம் ஆல்கஹால் ஊத்தி அணைக்கணும்”

“அப்பறம் அணைக்கலாம். முதல்ல வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போ”

“முடியாது… ரெண்டு வாரம் கழிச்சு பாக்குறிங்க… அவன் அபி உனக்குத் தந்த மாதிரி ஏதாவது உன் முகத்துல தருவான். என்னால நீ உன் புருஷன் கூட குலாவுறதை எல்லாம் பாக்க முடியாது. என் மனசு தாங்காது…”

“நீ தந்த மூணு நிமிஷ கிஸ், மங்கையர் புடைசூழ செஞ்ச ஜலக்ரீடை இதெல்லாம் எல்லாம் நான் பாக்கல… இப்ப நீ பாரு…” ஜிஷ்ணுவின் கையைப் பிடித்து காம்பவுண்ட் உள்ளே இழுத்து, காம்பௌன்ட் கதவைத் தாழ் போட்டாள்.

“ஹஸ்பன்ட் முன்னாடி என்ன இது விளையாட்டு? என் கையை விடுடி” மெலிதான குரலில் உறுமினான்.

பல்லைக் கடித்தபடி பதில் சொன்னாள் சரயு. “அப்ப ஹஸ்பன்ட் இல்லாதப்ப பார்க்ல நான் உனக்கு கிஸ் தந்தா இனிக்குமா…? அடுத்தவன் பொண்டாட்டிய ஒரு நாள் டைம் தர சொல்லிக் கேட்டுட்டு இப்பப் பெருசா நியாயம் பேசுறான்…”

“உன்னைப் பார்த்தா அடுத்தவன் பொண்டாட்டி மாதிரியே எனக்குத் தோணல. இப்பக்கூட என்னோட பங்காரம்ன்னுதான் தோணுது” என்றான் தலைகுனிந்தபடி.

அவனை நிதானமாய் ஒரு பார்வை பார்த்தவள், “ராமுக்கு ஏற்கனவே உன் மேல பயங்கர கோவம். அவனே கீழ இறங்கி வந்து உன்னை வீட்டுக்குக் கூப்பிடுறான். வாயை மூடிட்டு உள்ள வா” ஜிஷ்ணுவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.

வாசலுக்கே வந்த பொற்கொடி,

“வாங்க தம்பி” என்று அழைத்தார்.

‘என்னங்கடா நடக்குது இங்க?’ என்றவாறு ஒன்றும் புரியாமல் விழித்தான் ஜிஷ்ணு.

அவனை மேலும் சிந்திக்கவிடாமல், “இந்தா…” என்று அபி தான் எச்சில் செய்த சாக்லட்டை ஜிஷ்ணுவின் வாயில் திணிக்க, சுவை பல்மடங்குப் பெருகி அவன் நாக்கில் அது அமுதமாய்த் தித்தித்தது.

“வெல்கம்” என்றவாறு ஜிஷ்ணுவின் வலக்கையைப் பற்றி ராம் குலுக்கியபோதுதான் வளைந்த அவனது வலது கையைப் கவனித்தான் ஜிஷ்ணு. பொற்கொடி சரயுவிடம் கண்களால் விசாரித்தபடி செல்ல, இனிப்பு பட்டு பிசுபிசுத்த அபியின் சட்டையை மாற்றி அழைத்து வருவதாகக் கூறி சரயு அபியை ஜிஷ்ணுவிடமிருந்து பிரித்து உள்ளே தூக்கிச் சென்றாள்.

“உள்ள வா விஷ்ணு” ராம் அழைத்தான்.

“அணு..குண்டு… நீயா!” திகைப்பு விலகாமல் ஜிஷ்ணு கேட்க,

“ஹோம்வொர்க் செய்யாம தினமும் அடிவாங்குற அணுகுண்டு எப்படிடா டாக்டருக்குப் படிச்சான்னு ஆச்சரியமா இருக்குல்ல” கண் சிமிட்டியபடி கேட்டான் ராம் மன்னிக்கவும் அணுகுண்டு.

“இந்த சரவெடி வேற என் காதே செவிடாகிற வரை ராம் ராம்னு பேசித் தள்ளிட்டா. இருந்தாலும் கடைசில பார்த்தா… டேய்… நீதான் சேதுராமா… எனக்குத் தெரியவே தெரியாதேடா… ரெண்டு தொங்காங்களும் சேர்ந்து மறைச்சுட்டிங்களேடா” அன்போடு அணுகுண்டை அணைத்துக் கொண்டான் ஜிஷ்ணு.

“சரவெடி பேரை சரயுன்னு தெரிஞ்சுட்ட நீ, என்னைக்காவது என் பேரைக் கேட்டுறிக்கியா? நானெல்லாம் அப்ப உன் கண்ணுக்கு எங்கடா தெரிஞ்சேன். ஏதோ சரயு பிரெண்டா போன பாவத்துக்காக என்னைக் கூட்டிட்டு சுத்தின” என்றான்.

ராமைப் பார்த்தவுடன் எழுந்த பொறாமையுணர்வும், கசப்பும் மறைந்து தன் சிறுவயது தோழன் மேல் அன்பு சுரந்தது ஜிஷ்ணுவுக்கு. காணாமல் போன அவனது குறும்பும் ஓடி வந்து உட்கார்ந்து கொண்டது.

“கோச்சுக்காதேரா அப்பேல இருந்தே எனக்கு கேர்ள்ஸ்ன்னா மன்சி கிக்குத்தான். ஆமாம் பன்னிரண்டு வயசில பிரிஞ்ச இந்த பாதை மறுபடி எங்க எப்ப இணைஞ்சது?”

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 31என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 31

அத்தியாயம் – 31   “ஸ்ராவணியை படாதபாடு பட்டுக் காப்பாத்தினேன். வனி பொழைச்சுட்டா. இந்தத் தகப்பனோட வேதனை பொறுக்காம கடவுள் அவளுக்கு ஆயுளைக் கொடுத்துட்டார். அப்பறம் குழந்தையைத் தூக்கிட்டு அம்மாவைப் பார்க்கக் கிளம்பினேன். என்னோட நல்ல நேரம் வீட்டுக்குப் போனப்ப அம்மா

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 39தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 39

காலையில், தீயாய் எரிந்த கன்னங்களைத் தடவியபடி கண்ணாடி முன் நின்றான் ஜிஷ்ணு. “சரவெடி… அடின்னா அடி பலே அடிடி. இந்த மாதிரி ஒரு அறையை நான் யார்கிட்டயும் வாங்கினதே இல்ல. உனக்கு என் மேல வெறுப்பு வரணும்னுதான் அந்த கிஸ்ஸை தந்தேன்.