சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 18’

வேப்பம்பூவின் தேன்துளி – 18

 

முகூர்த்த நேரத்திற்கு முகம் கசங்க வந்தமர்ந்த அன்னபூரணியை, நீதிவாசன் சுட்டெரிக்கும் பார்வை பார்த்திருக்க அப்பொழுது அவளது தொண்டைக்குழியில் அமிழ்ந்து போனது தான் அவளது அழுகை. விழிகளும் அதற்கு மேலும் சுரப்பதற்கு மறந்து போனது.

 

‘எதற்கிந்த திருமணம்?’ எனப் பெரியம்மா, பெரியப்பா, அண்ணன், அக்கா என அனைவரிடமும் நேற்றிரவே சத்தமிட்டு அழுது பிரண்டு நியாயம் கேட்டிருக்க, அவளோடு வார்த்தையாட யாருக்கு நேரம்? ரஞ்சிதாவை கோர்த்து விட்டுவிட்டு அனைவரும் கல்யாண வேலைகளைக் கவனிப்பதற்கு சென்று விட்டார்கள்.

 

ரஞ்சிதாவோ அறிவுரை, சமாதானம் மட்டும் தான் செய்தாள். இவள் சொல்வதைக் கேட்பதாகவே தெரியவில்லை! மனம் வலித்தது இளையவளுக்கு!

 

இரவின் எரிச்சல்கள் பூரணியிடம் இன்னும் மிச்சமிருக்க, இப்பொழுது தனக்குத் தாலி கட்டிவிட்டு ஜம்பமாக அமர்ந்திருந்தவன் மீது கோபம் வந்தது. ‘அவங்க சொன்னது, பேசினது எல்லாம் உண்மை ஆகிடாதா? எதுக்கு இத்தனை அவசரமா கல்யாணம் செய்யறாரு?’ என்று மனம் சுணங்கினாள்.

 

‘ரூமுக்குள்ள யார் இருக்காங்கன்னு கூட கவனிக்காம நீ உள்ள போயி கதவடைப்பியா?’ என்று ஆயிரமாவது முறையாக தன் செய்கையைத் தானே நொந்து கொண்டாள்.

 

ஏதோ ஒருவித கலவையான மனநிலை! எது எப்படியோ… தற்பொழுது அவள் திருமதி நீதிவாசன் என்னும் நினைவு மனதில் பதிந்தால் சரிதான்.

 

திருமணம் நல்லபடியாக முடிந்து, மற்ற சடங்குகள் முடிந்ததும், “எங்களை மறுவீடு அழைச்சிட்டு போக ஏற்பாடு செய்யுங்க மாமா. கோபியும், அவன் மனைவியும் வரவேற்புல நிக்கட்டும். எங்க கல்யாணத்துக்கான வரவேற்பை நான் தனியா இன்னொரு நாள் ஏற்பாடு பண்ணிக்கிறேன்” என்று நீதிவாசன் சொல்லிவிட்டான்.

 

இப்பொழுது நீதிவாசன், பூரணியோடு முறையே மாப்பிள்ளை வீட்டிற்கும், பெண் வீட்டிற்கும் இவர்கள் குடும்பம் சார்பில் யாரை அனுப்புவது என்று குழப்பம் மூத்தவர்களுக்கு! மண்டபத்திலும் குடும்ப ஆட்கள் வேண்டுமே!

 

ஒருவழியாக யோசித்து, மண்டப பொறுப்பை ரஞ்சிதாவிடமும், அசோகனிடனும் விட்டுவிட்டு, முத்துச்செல்வமும், ஜோதிமணியும் மகளோடு மறுவீடு செல்லும் நிகழ்விற்கு புறப்பட்டனர்.

 

ஆயிரம் தான் ஆண்பிள்ளை உசத்தி என்றபோதும், பிள்ளைகளுக்கான பெற்றவர்களின் தேடலில், பெற்றவர்களுக்குப் பெண்பிள்ளைகளைத் தான் முன்னிலைப்படுத்தத் தோன்றும். மகன் சமாளித்துக் கொள்வான், மகள் என்ன செய்வாளோ என்பதே சராசரி பெற்றவர்களின் மனப்பான்மை, கவலை எல்லாம்.

 

மணமக்கள் புகுந்தவீடு செல்லும்போது, ஆரத்தி எடுக்க, சாமி முன்பு விளக்கேற்ற, பால், பழம் சாப்பிட… போன்ற சடங்குகளுக்குத் தேவையான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்ய வேண்டுமே… மகேந்திரன், தன் மகள் தீபலட்சுமியையும், இன்னும் சில முக்கிய உறவுகளையும் முன்னே அனுப்பி வைத்து ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லி அனுப்பினார்.

 

தீபாவிற்கு முகமே இல்லை. அத்தனை சுணக்கம். அன்பரசன் வேறு, “என்ன பிரச்சனை? எதுக்கிந்த அவசர கல்யாணம்?” என்று நேற்றிரவு தகவல் கிடைத்து வந்ததிலிருந்து மனைவியை துளைத்தெடுத்து விட்டான். அப்போதைக்கு அவனிடமிருந்து தப்பிப்பதற்காக எதையோ அரையும், குறையுமாக மழுப்பலாகச் சொல்லிச் சமாளித்தாள்.

 

இவள் சொல்லாவிட்டால் அவனுக்குத் தெரிய வராதா என்ன? சிறிது நேரத்தில் மண்டபத்தில் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த பேச்சுகளின் விளைவால் அன்பரசன் விஷயத்தை தெரிந்து கொண்டிருக்க, “எதுக்கு இப்படி செஞ்ச?” என்று மனைவியிடம் பல்லைக் கடித்தபடி கேட்டான்.

 

சமீபமாக அவனது பொறுமையை வெகுவாக சோதித்துக் கொண்டிருக்கிறாள் அவனது மனைவி!

 

தற்போதும் மனைவி செய்தது மிகவும் அதிகப்படி என்பது மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷங்களிலிருந்து அன்பரசனுக்குப் புரிந்திருந்தது. ஒருவேளை அவன் உடனிருந்திருந்தால் இந்தளவு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்காமல் போயிருக்கலாம். ஆனால், விதி என்றவொன்று இருக்கிறதே! இதுதான் அவர்களுக்கு விதித்தது போலும்!

 

தீபலட்சுமி என்னவென்று பதில் சொல்வாள்? இன்னமும் அடங்காமல் கணவனிடமும் பழைய நாடகத்தையே தொடர்ந்தாள். “அண்ணனைத் தேடி போனேங்க. அவரு இருந்த ரூமுக்குள்ள இருந்து இவ வரா” என்று முக சுழிப்போடு கூற,

 

போதும் என்பது போலக் கையை உயர்த்திய அன்பரசன், “உங்க அண்ணன் பாத்ரூமுக்குள்ள இருந்ததை கவனிக்காம இந்த பொண்ணு துணி மாத்த போயிட்டா. அவ்வளவு தானே?” என்றான் நடந்ததை வெகு சரியாகக் கணித்து.

 

“அதெப்படிங்க அண்ணன் இருக்கிறது தெரியாமப் போகும்?” என்றபோது தீபாவிற்குக் குரலே எழும்பவில்லை. இப்படியெல்லாம் அனைவரும் தோண்டி துருவிக் கேட்டால் இவள் குட்டு வெளியில் தெரிந்து விடுமே! தெரிந்துவிட்டால் என்னாவது என்று நினைக்கையிலேயே அவளுக்கு பகீரென்றது. பதற்றத்தின் விளைவாய் முகத்தில் வியர்வை பூத்தது.

 

இரண்டு வருடத்திற்கும் மேலான குடும்ப வாழ்க்கை, அன்பரசனுக்கு அவளது பதற்றத்தைச் சரியாகக் கணிக்க வைத்தது. “எப்படி தெரியாம போகும்ன்னா? என்ன அர்த்தம்? இதென்ன உங்க வீடா? இல்லை அந்த பொண்ணு துணி மாத்த போனது தான் உங்க அண்ணனோட ரூமா? அந்த பொண்ணுக்கு எப்படி நீதிவாசன் உள்ளே இருக்கிறது தெரிஞ்சிருக்கும்ன்னு சொல்லற? கண்டிப்பா தெரியாமத்தான் அந்த பொண்ணு துணி மாத்தப் போயிருக்கும். அதுக்கு நீ என்ன பண்ணின சொல்லு?” என்று கேட்டவனின் பார்வை அவள்மீது ஆராய்ச்சியாய் படிந்தது.

 

அவன் விளக்கமாகக் கேட்கக் கேட்க அவளுக்கு உள்ளுக்குள் தடதடத்தது. முகத்தில் வியர்வை தன் கட்டுப்பாட்டையும் மீறி உற்பத்தியாக, பயத்தில் வெகுவாக பதறிக்கொண்டிருந்தாள்.

 

சிரமப்பட்டு தன்னை நிலைப்படுத்தி, “அவளை அண்ணன் இருந்த ரூமுக்குள்ள பார்த்ததும் கோபம் வந்திடுச்சுங்க” என்றாள் தன்பக்கத்தை இன்னமும் நியாயப்படுத்தும் விதமாக!

 

உன் பதில் திருப்தியில்லை என்பது போன்ற பாவனையைக் காட்டியவன், “இன்னும் அந்த பொண்ணு மேல உனக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கிற மாதிரி உன் பேச்சு இல்லை. நான்கூட எதுக்கு சண்டை, சச்சரவுன்னு உன் செய்கையைக் கண்டும், காணாம சில சமயம் விட்டுட்டு போயிடுவேன். ஆனா உன் அண்ணன் அப்படியில்லை. வீணா எந்த வம்பு தும்பும் வெச்சுக்காத” என்று எச்சரிக்கை விடுத்தான்!

 

அதன்பிறகு தீபலட்சுமி வெகுவாக அடக்கி வாசித்தாள். கணவன் கூடவே இருப்பதால் திருமணத்தின் மீதான தன் அதிருப்தியை முகத்தில் வெளிக்காட்டாமல் வளைய வந்தவள், இப்பொழுது மற்ற ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காகவும் தன் பிறந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறாள்.

 

நேற்றிரவே அண்ணனிடம் மீண்டுமொருமுறை, “அவசரப்படாதண்ணா. வேற நல்ல இடமா பார்த்துக்கலாம்” என்று சொல்லி அவனது முறைப்பை வேறு பரிசாகப் பெற்றாயிற்று! அது வேறு மனதிற்குள் இன்னமும் நமைச்சல்.

 

இப்பொழுதும் அன்பரசன் உடனிருந்தபடியால், அவளால் எந்த சடங்கிற்கும் முகம் திருப்ப இயலவில்லை.

 

இவர்கள் வீட்டிற்குச் சென்று அனைத்தையும் தயாராக வைத்திருக்க, மணமக்களும் நல்ல நேரத்திற்குள் வந்து சேர்ந்தனர். இருவருக்கும் ஆலம் சுற்றி, திருஷ்டி கழித்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

பூஜை அறையில் பஞ்சமுக தீபத்தை அன்னபூரணியின் கையால் ஏற்ற சொன்னார்கள். தீபத்தை ஏற்றிவிட்டு தம்பதிகள் இருவரும் இறைவனை வணங்கி வந்தனர்.

 

மணமக்களை அருகருகே அமர்த்தி பால், பழத்தை பகிர்ந்துண்ண பெரியவர்கள் சொல்ல, நீதிவாசனின் அருகில் முகத்தில் கூட சுணக்கத்தைக் காட்டிட முடியவில்லை அன்னபூரணியால். என்னவோ வழக்கமாக ஓரளவு இளக்கமாக இருப்பவன், நேற்றிரவிலிருந்து இறுக்கமாகத் தெரிவதால் தன்போல அச்சம் பிறந்திருந்தது பெண்ணவளுக்கு!

 

மீண்டும் மணமக்களைப் பெண்வீடு அழைத்துச் சென்று, அங்கும் ஆரத்தி எடுத்து, பால், பழம் கொடுத்து, மறுவீடு சம்பிரதாயங்கள் முடித்து, மீண்டுமொருமுறை மணமகன் வீடு நோக்கி பயணம்.

 

இம்முறை கோபியின் மறுவீடு சடங்கிற்காக ரஞ்சிதா பிறந்தவீடு வந்தவள், தங்கை புகுந்த வீட்டிற்குப் போகத் தேவையான உடைமைகளை அனைத்தும் பேக் செய்து மூன்று பைகளில் தயாராக வைத்திருந்தாள்.

 

இரவிலிருந்தே ஓய்ந்து போய் இருந்த பூரணிக்கு அலைச்சலில் ஏற்கனவே மனதிற்குள் இருந்த எரிச்சல் பலமடங்கானது. கூடவே அவளது மூட்டை முடிச்சுகளைப் பார்த்ததும் இன்னும் எரிச்சல் பொங்கியது. திடீரென்று அனைத்தும் மாறிப்போய்விட்டதே என்று நினைக்கையில் உள்ளுக்குள் ரணமாய் வலித்தது.

 

முறையாக ஏற்பாடாகியிருந்த திருமணம் என்றால் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்கலாம். மனதைச் சற்று திடப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவசரகதியில் நடந்த திருமணத்தின் விளைவாய் எத்தனை எத்தனை மனத்தவிப்புகள், ஏக்கங்கள்! வெகுவாக நொந்துபோனாள்.

 

நீதிவாசனின் வீட்டிற்குச் சென்றதும் அன்னபூரணியை காலியாக இருந்த அறைக்குள் அழைத்து சென்று சற்று ஓய்வெடுக்கச் சொன்ன ஜோதிமணி, சிலபல அறிவுரைகளையும் மேலோட்டமாக வழங்கத் தொடங்க,

 

அந்த அறையில் இவர்களைத் தவிர யாரும் இல்லை என்பதால் தன் எரிச்சலை எல்லாம் தாயிடம் கொட்டிவிட்டாள். “இதெல்லாம் எதுக்கு சொல்லறீங்க பெரியம்மா. நானா கல்யாணம் வேணும்ன்னு சொன்னேன். அவசர அவசரமா கல்யாணமும் பண்ணி வெச்சு, ‘இனி இது தான் உன் குடும்பம். பொறுப்பா இருக்கணும். பொறுமையா இருக்கணும்’ன்னு கதை சொல்லிட்டு இருக்கீங்க” என்று வாதிட்டுக் கொண்டிருந்தாள்.

 

“இப்ப அதுக்கு என்ன செய்யறது? கல்யாணம் நடந்திடுச்சு. அது எப்படி நடந்தா என்ன? அவசரமா நடந்தாலும் கல்யாணம் கல்யாணம் தானே” என்று ஜோதிமணி மகளை அதட்டிக் கொண்டிருந்தபோதே அந்த அறைக்கு முத்துச்செல்வமும் வந்திருந்தார். இனி தங்கள் வீடு செல்ல வேண்டுமே மகனைப் பார்த்துக் கொள்ள… அதற்காக மகளிடம் விடைபெற்று மனைவியை அழைத்துச் செல்ல வந்திருந்தார்.

 

ஏற்கனவே எரிச்சலின் உச்சத்திலிருந்த அன்னபூரணிக்கு ஜோதிமணி இப்படிப் பேசியதும் வார்த்தைகள் தடித்தது. “உங்க புள்ளையா இருந்திருந்தா இப்படி அவசர அவசரமா பண்ணி வெச்சிருப்பீங்களா?” என்று கண்ணில் நீரைத் தேக்கி வைத்து ஆத்திரமாகக் கேட்டிருந்தாள்.

 

கண்டதையும் நினைத்துக் குழப்பிக் கொண்டிருந்தவள், சிறிதும் யோசிக்காமல் வார்த்தையை விட்டிருந்தாள். முத்துச்செல்வம் இந்த பேச்சில் ஸ்தம்பித்து நிற்க, பூரணி இந்த வார்த்தைகளைச் சொல்லி முடிப்பதற்குள் அவள் கன்னம் பழுக்குமளவு ஒரு அறை விழுந்தது ஜோதிமணியிடமிருந்து.

 

விக்கித்து நின்று விட்டாள் பூரணி. முட்டிக்கொண்டிருந்த கண்ணீர் கரகரவென கன்னத்தில் இறங்கிக் கொண்டிருந்தது.

 

“தொலைச்சு போடுவேன். என்ன வாய் இம்புட்டு நீளுது. விளக்குமாறு எடுத்து விலாசுனா இம்புட்டு பேச்சு வருமா?” என்று ஜோதிமணி ஆவேசமாகப் பேச, இளையவள் நடுங்கி போனாள்.

 

“விடு சின்ன புள்ளை அதுக்கென்ன தெரியும்?” என்றார் முத்துச்செல்வம் மனைவியிடம் சமாதானமாக. அவருக்கு அடிவாங்கியள் மீது இரக்கம் சுரக்க, அவள் பேசியது இப்பொழுது இரண்டாம் பட்சமாகிப் போனது.

 

பெரியம்மாவின் கோபத்தில் மிரண்ட பூரணியோ, “இல்லை பெரியம்மா… ஏதோ கோபத்துல… தப்பு தான் பெரியம்மா… இனி கண்ட பேச்சும் பேச மாட்டேன்” என் கதறி அழுதபடி மன்னிப்பு கேட்டாள்.

 

அவள் வீசிய வார்த்தைக்கு இந்த அழுகை சமாதானம் எல்லாம் மூத்தவளுக்கு போதவே இல்லை! முகத்தை வெடுக்கெனத் திருப்பிக் கொண்டாள்.

 

“பெரியம்மா…” எனப் பாவமாக கையைப்பிடித்துக் கொண்டு இளையவள் கெஞ்ச, “என் அண்ணன் மகனோட நல்லபடியா குடும்பம் நடத்தற வழியை பாரு” என்று அப்பொழுதும் அதட்டினாரே தவிர அவளிடம் இளக்கம் காட்டவில்லை. பின்னே என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்!

 

“தெரியாம பேசிட்டேன் பெரியம்மா. இன்னும் கூட அடிச்சுக்கங்க. இப்படி கோச்சுக்கிட்டு போகாதீங்க” என்று பூரணி பாவமாக அழ, அதேநேரம் நீதிவாசனின், “அத்தை…” என்ற அழைப்பு கேட்டது.

 

“சொல்லு நீதி…” என உடனேயே நீதிவாசன் இருக்கும் இடம் தேடி ஜோதிமணி விரைந்து விட்டார்.

 

அவர்கள் இருந்த அறைக்கு வெளியே நின்றிருந்தவனோ நிதானமாக, “என்ன பிரச்சனை?” என விசாரிக்க, “ஒன்னுமில்லை பா… எப்படி நடந்துக்கணும்ன்னு புத்திமதி சொல்லிட்டு இருந்தேன்” என்று ஜோதிமணி முடித்து விட்டார்.

 

அவனோ தன் அத்தையைத் தீர்க்கமாகப் பார்த்தபடி, “நீங்க உங்க மகளுக்குப் புத்தி சொல்லறது, கண்டிக்கிறது எல்லாம் சரி…” என்றவன் சிறு இடைவெளி விட்டு, “நேத்து வரை அவ உங்க பொண்ணு. நீங்க அடிச்சிருக்கலாம். இனி அவ என் மனைவிங்கிறது ஞாபாகம் இருக்கட்டும்” என்று அத்தை என்றும் பாராது எச்சரிக்கை விடுக்க, ஜோதிமணி வாயைப் பிளந்தார்.

 

ஆனால் அதற்கெல்லாம் ஜோதிமணி அசந்து போவாரா என்ன? “நல்ல கதை உன்கூட… முயற்சி செஞ்சு பார்க்கறேன்.. உன் பொண்டாட்டி என்கிட்ட வாங்கி கட்டிக்காம இருக்கிறது அவளோட சாமர்த்தியம்” என்று முகத்தை மருமகனிடம் வெடுக்கென்று திருப்பிக் கொண்டு சென்று விட்டார்.

 

மருமகனைப் பார்க்க ஆவலாகப் போய்விட்டு, இன்னமும் முகம் நிறைய எரிச்சலோடு வந்த மனைவியைப் பார்த்த முத்துச்செல்வம், “என்ன ஜோதி? என்ன சொல்லறான்?” என்று கேட்க,

 

கோபமான குரலில், “அவன் பொண்டாட்டியாம். நான் அடிக்கக் கூடாதாம். ரெண்டும் நான் பார்த்து வளந்ததுங்க, என்ன பேச்சு பேசுது பாருங்க” என்று பொரிந்து தள்ளினாள்.

 

அழுது கொண்டிருந்த பூரணிக்கே சங்கடமாகிப் போனது. ‘அச்சோ ஏன் இப்படி சொன்னாரு?’ என முகம் சுருக்கினாள்.

 

“அவன் சொன்னது கூட பரவாயில்லை. நீ பேசின பாரு பேச்சு…” என ஜோதிமணி மீண்டும் ஆத்திரமாகப் பூரணியைப் பார்த்துக் கத்த, திருதிருவென முழித்தபடி, “சாரி பெரியம்மா” என்றாள் மீண்டும்.

 

“விடு ஏதோ எரிச்சல்ல பேசி இருப்பா. நல்ல நாள் அதுவுமா” என்று மனைவியை அதட்டிய முத்துச்செல்வம் மகளிடம் திரும்பி, “நீதியை பத்தி நாங்க சொல்ல வேண்டியதில்லை புள்ளை. கல்யாணம் முடிஞ்சது. இனிதான் எங்களுக்கு நீ நல்ல பேரு வாங்கி தரணும். கவனமா இருந்துக்க. என்ன வேணும்ன்னாலும் கூப்பிடு. உடனே வந்துடுவோம்” என்று தலையை தடவி பாசமாகச் சொன்னார்.

 

“சொல்லுங்க சொல்லுங்க… அப்படியே கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பா. கூறு கெட்டவ. நேத்து என்ன நடந்துச்சுன்னு ஒரு வார்த்தை அவளை அதட்டியிருப்போமா? விளக்கம் கேட்டிருப்போமா? இல்லை அவளை நம்பாம தான் பேசினோமா? சபையில அப்படியொரு பேச்சு வந்துடுச்சு. அது இனி அப்படியே நிக்குமா? எவ எப்படி திரிச்சு பேசுவான்னு சொல்ல முடியுமா? ஏன் எவனோ போற வரவனையா பிடிச்சு கட்டி வெச்சிருக்கோம். நீதியை இவளுக்குத் தெரியாதா? பின்ன எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யறா?” என்று மீண்டும் ஜோதிமணி வசைபாட, பூரணிக்கு முகமே தொங்கி விட்டது.

 

“நீ நல்லா பேசலைன்னா உன்கூடவே வந்துடுவேன் பார்த்துக்க” என்று ஜோதிமணியைப் பூரணி மிரட்ட, “அந்த விளக்குமாறு எடுங்க. கல்யாணம் ஆன அன்னைக்கு பேசற பேச்சை பாருங்க” என்று பெரியவள் மீண்டும் சாமியாடினாள்.

 

“இவ ஒருத்தி… சின்ன புள்ளை கிட்ட சரிக்கு சரி சண்டை கட்டுவா… புள்ளை கிட்ட நல்லா பேசிட்டு வா. புள்ளைக்கு முகமே விழுந்துடுச்சு” என்று முத்துச்செல்வம் மகளுக்குச் சிபாரிசு செய்ய,

 

“சரி சரி சொன்னதெல்லாம் கவனம். நான் போயிட்டு அக்காவை அனுப்பி வைக்கிறேன். எதுவும்ன்னா போன் பண்ணு. கவனமா இருந்துக்க” என்று சொல்லியவர் அவளை விட்டுவிட்டுக் கிளம்பி விட்டார். வாசல் வரை வந்து வழியனுப்பியவளுக்கு கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

 

நீதிவாசனின் பெரியம்மா தான் வந்து, “உள்ள வாம்மா. வந்து குளி” என்று அவள் ஏற்கனவே அமர்ந்திருந்த அறையில் விட்டுச் சென்றார். அவளுடைய உடைமைகள் கூட அந்த அறையில் தான் இருந்தது.

 

பெரியவர்கள் சொன்னதைத் தட்ட முடியாமல் போய் குளித்துவிட்டு வந்தாள். அதற்குள் நீதிவாசனின் உறவுப் பெண்கள் சிலர் வந்து அவளைச் சூழ்ந்து கொள்ள அவளுக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.

 

இவளுக்கு ரெடிமேட் பிளவுசுடன் புதிய சேலை ஒன்றைக் கொடுத்து அணிவிக்கச் சொல்லியவர்கள், அலங்காரம் செய்யத் தொடங்க, நடுக்கம் பிறக்காத குறை தான். நல்லவேளையாக ரஞ்சிதா வந்துவிட, “அக்கா…” என்று பாவமாக அவளது கரங்களை இறுக பற்றிக் கொண்டாள்.

 

சுற்றியும் ஆட்களை வைத்துக் கொண்டு ரஞ்சிதாவால் என்ன சொல்ல முடியும்? கண்களாலேயே ஆறுதல் கூற, அதற்குள் இவளுக்கான இரவுணவை கொண்டு வந்து தந்தனர்.

 

“சாப்பிட்டதும் கூப்பிடுங்க. ஹால்ல தான் இருப்போம்” என்று ரஞ்சிதாவிடம் சொல்லிவிட்டு அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

 

தனிமை கிடைத்ததும், “என்ன ரஞ்சிக்கா இது?” என்று பூரணி தவிப்பாகக் கேட்டபோது அவளுக்குக் கண்கள் உடைப்பெடுத்திருந்தது.

 

“என்ன பூரணி குழந்தை மாதிரி. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க?” என்று சொல்லிவிட்டு ரஞ்சிதா அவசரமாகக் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

 

அதேநேரம், “ரஞ்சிதா” என்று அழைத்துக் கொண்டு கைக்குழந்தையுடன் அசோகன் உள்ளே வந்தான். “பசிக்கு அழறா” என்றபடி அமுதினியை மனைவியிடம் தர, “சரிங்க பால் தரேன்” என்று மகளை வாங்கிக் கொண்டாள்.

 

அசோகன் வெளியில் சென்றதும் கதவடைத்து விட்டு மகளுக்குப் பசியாற்றியவள், தங்கையிடமும் நிதர்சனத்தைப் புரிய வைக்கப் பார்க்க அவளுக்கு முகம் தெளிவதாகவே இல்லை.

 

சிறிது நேரத்தில் அசோகன் வந்தவன், “பூரணி அழுதிட்டா இருந்தா?” என்று மனைவியிடம் ரகசியமாகக் கேட்க, “என்னாச்சு?” என்றாள் ரஞ்சிதா புரியாமல்.

 

“வெளியில பேசிக்கறாங்க. நீதிவாசனுக்கு அவங்க பேசினது கேட்டிடுச்சு போல. சடங்கெல்லாம் இப்ப வேண்டாம்ன்னு அவங்க பெரியம்மா கிட்ட சொல்லிட்டு இருக்கான். அவங்க பதிலுக்கு சத்தம் போட்டுட்டு இருக்காங்க” என்று விஷயத்தை சொல்ல, அவளுக்கு இதென்னடா இத்தனை குழப்பங்கள் என்றிருந்தது.

 

அதற்குள் பசியாறிய மயக்கத்திலும், அலைச்சலிலும் அமுதினி உறங்கியிருக்க ரஞ்சிதா குழந்தையை வாகாகக் கட்டிலில் படுக்க வைத்தவள், “அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்” என்று கணவனிடம் புலம்பலாகக் கூறினாள்.

 

அவர்கள் இருவரும் கேட்டுக் கொண்டிருந்ததைக் கேட்ட பூரணிக்கும் ‘அச்சோ…!’ என்றிருந்தது. என்னமோ சொதப்புகிறோம் என்று புரிந்தாலும், ஒரே நாளில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்தால், சொதப்பலை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்றே அவளுக்குப் புரிய மறுத்தது.

 

கையை பிசைந்து கொண்டு பூரணி நின்று கொண்டிருக்க, அந்த நேரம் கோபமாக நீதிவாசன் அறையினுள் வந்தவன், “இன்னொருமுறை அழுதினா தொலைச்சி கட்டிடுவேன்” என்று அதட்ட, மீண்டும் உதடு பிதுங்கியது.

 

“சும்மா எதுக்கு மிரட்டறீங்க?” என்றாள் தேம்பியபடி.

 

“ஸ்ஸ்ஸ் பூரணி” என்று ரஞ்சிதா ஏதோ குறுக்கே சொல்ல வர, அதற்கு இடம் தராமல் அசோகன் அவளை வெளியே கூட்டிக்கொண்டு வந்திருந்தான்.

 

“புருஷன், பொண்டாட்டி விஷயம் அவங்க பார்த்துப்பாங்க. நம்ம போகக் கூடாது” என்று பொறுப்பாக அசோகன் சொல்ல ரஞ்சிதாவிற்கும் அதுதான் சரியாகப் பட்டது. கூடவே, இந்த பூரணி எதையும் சிக்கலாக்கிக் கொள்ளக்கூடாதே என்னும் கவலையும்!

 

உள்ளே நீதிவாசனோ, “எதுக்கு உனக்கு இப்படி அழுகை வரும்? இப்ப நீ நிறுத்தப் போறியா? இல்லையா?” என்று மீண்டும் மிரட்ட, கண்ணைத் துடைத்தபடியே தேம்பினாள்.

 

“உன்னை என்ன என் கூட குடும்பம் நடத்தியே ஆகணும்ன்னு சொன்னேனா? இல்லை உன்னை கட்டாயப்படுத்தி எல்லாத்தையும் சாதிக்கப் போறேனா? எல்லார் முன்னாடியும் அழுது ஏன் என் மானத்தை வாங்கற?

 

நேத்தும் அப்படித்தான்… அழாம எழுந்து துணி மாத்துன்னு சொன்னா… காச், மூச்சுன்னு அழுதிட்டே இருக்க. சரி வெளியில கேள்வி தீபா கேட்கும்போதாவது பயப்படாம பேச வேண்டியது தானே? அப்பவும் அந்த அழுகை!

 

அப்படி என்ன நடந்திடுச்சு? நான் பாத்ரூமுக்குள்ள இருந்தேன், நீ அதை கவனிக்காம வந்து துணி மாத்திட்ட… அவ்வளவுதானே? அதென்ன எனக்கே எனக்குன்னு இருந்த ரூமா? நீ இவ்வளவு கில்டியா பீல் பண்ணறதுக்கு. கல்யாண மண்டபத்துல பொதுவா இருக்கிற மணமகன் அறை, அங்க தான் மாப்பிள்ளையோட சொந்த பந்தங்கள் எல்லாம் வருவாங்க, போவாங்க. என்னவோ நீ என்னைத் தேடி வந்து கதவடைச்ச மாதிரி அவ பேசினா அதுக்கு உனக்கு அழுகை வருமா?” என்று கடும் குரலில் நீதிவாசன் அதட்டினான்.

 

அவன் சொல்வது அத்தனையும் சரி தானே என்ற எண்ணத்தில், ‘இதெல்லாம் அந்த நேர பதற்றத்துல எனக்கு யோசிக்க வரலையே!’ என்று அன்னபூரணி தன்னைத்தானே மனதிற்குள் நொந்து கொண்டாள்.

 

தனக்குள் திரும்பத் திரும்ப மருகிக் கொண்டிருந்த தவறை, இது ஒரு விஷயமா என்பது போல அவன் பேசியதில் சற்று ஆசுவாசம் வந்தது. அவன் தன்னை கீழ்த்தரமாக நினைக்க மாட்டான் என்று தெரியும். நேற்று பயந்தது கூட, ‘என்ன இவள் இப்படி ஒரு கோலத்தில் இருக்கிறாள்? அப்படியென்ன அஜாக்கிரதை!’ என்று கடிவானோ அல்லது கோபம் கொள்வானோ என்னும் அச்சம் தான் உள்ளுக்குள். ஆனால், இவன் இத்தனை தூரம் புரிதலோடு பேசியதில் மனம் நெகிழ்ந்தது.

 

அவள் அழுதழுது சோர்ந்து, வாடித் தெரிவதால், கணவன் தன் கோபம் குறைத்து சற்று இளகினான்.

 

“காலையில இருந்து எதுக்கு அப்படியொரு அழுகை? எல்லாரும் என்ன நினைப்பாங்கன்னு யோசிக்க மாட்டியா? இப்ப கேட்க கூடாது தான்… இருந்தாலும் கேட்கிறேன். உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா என்ன?” என்று மனைவியின் முகத்தை ஆழப்பார்த்துக் கேட்டான்.

 

நன்கு பதில் தெரிந்த கேள்வி என்றபோதும், அவள் வாய் மொழியாகப் பதில் வந்தாக வேண்டும் என்று அவன் மனம் பிடிவாதம் செய்தது.

 

இந்த கேள்வியால் ‘என்ன அர்த்தமற்ற கேள்வி இது?’ என்று அன்னபூரணி அதிர்ந்தாள்! ‘திருமணம் பிடிக்கவில்லையா? திருமணம் நடந்த முறை மட்டும் தானே சுணக்கம். மற்றபடி திருமணம் என்ற எண்ணத்தின் நாயகனாய் என் மனதில் இதுவரை நீதிவாசன் மட்டும் தானே!’ இந்த உணர்வு அதிர்ந்த முகத்தைச் சட்டென்று சிவக்க வைத்தது.

 

அவள் பாவனையில் சிரிப்பு எட்டிப்பார்த்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், “பதில் சொல்லறதைத் தவிர எல்லாத்தையும் செய்யற?” என்றான் சலிப்புடன்.

 

தலையைக் குனிந்தபடி, “இந்த கல்யாணம் அவசரமா நடந்திருக்க வேணாமோன்னு தான்…” என்று மட்டும் முணுமுணுத்தாள்.

 

“நேத்து அத்தனை அவசரமா நலுங்கு முடியும் முன்னவே நீ துணி மாத்த வந்ததால தான் நம்ம கல்யாணத்துக்கும் அவசரமா அவசியம் வந்துடுச்சு” என்றவன், “ஆமா நேத்து எதுக்கு துணியை மாத்தின? உன் புடவை ரொம்ப அழகா தான இருந்தது” என்று மீண்டும் அதட்டலாகவே கேட்க,

 

‘அழகா இருந்ததா?’ என்று அன்னபூரணி விழி விரித்தாள். இதுபோன்ற நேரடி பாராட்டுகள் அவர்களுக்குள் இதுவரை இருந்ததில்லையே!

 

ஆனால், முன்னர் நேரடியாகப் பாராட்டைச் சொல்ல மனைவி என்ற உரிமையும் இருந்ததில்லையே! அது இன்னும் இந்த பேதைப்பெண்ணுக்கு உரைக்கவில்லையா என்ன?

 

கணவன் பதிலுக்காகக் காத்திருப்பது புரியவும், “அது காஃபி கொட்டிடுச்சு” என்றாள் சற்று திணறலாக. இப்பொழுதும் தீபலட்சுமி சிந்தியது அவசரத்துக்கு ஞாபகம் வராததால் மொட்டையாகச் சொன்னாள்.

 

ஆனால், நீதிவாசன் கணித்தான். அதாவது தீபலட்சுமி செய்திருப்பாள் என்பது போல இல்லை. சற்று வேறுவிதமாக! “காஃபி எப்படிக் கொட்டும்? நீ அவ்வளவு அஜாக்கிரதையா இருக்க மாட்டியே? அதுவும் பட்டுப்புடவை கட்டி இருக்கப்ப கண்டிப்பா கூடுதல் கவனம் இருந்திருக்கும். அப்பறம் எப்படி கொட்டுச்சு?” என்று கேட்டான்.

 

அவளுக்கும் சட்டென்று தீபலட்சுமி செய்த செயல் நினைவில் வந்துவிட்டது. அதைக் கணவனிடம் உடனடியாக சொல்லவும் செய்தாள்.

 

கேட்ட நீதிவாசன் அதிர்ச்சி, குழப்பம், சினம் என்ற கலவையான உணர்வுகளால் முகம் இறுகினான். நெற்றியில் பெருவிரல், ஆட்காட்டி விரல் கொண்டு நெற்றி சுருக்கங்களையும் சரி செய்ய… “என்னாச்சுங்க?” என்றாள் மெலிதாக பதறியபடி.

 

“ம்ப்ச் ஒன்னும் இல்லை. சரி இனி அழக்கூடாது புரியுதா?” என்று மெல்லிய கண்டிப்புடன் கேட்டவனின் முகம் தீவிர சிந்தனையில் இருந்தது. இவளோ பலமாக மண்டையை ஆட்டிக் கொண்டாள் அழ மாட்டேன் என்று சொல்லும் விதமாக!

 

அவனுக்குள் ஒரு பெரும் வினா தங்கையை நோக்கி… அதை உடனே கேட்டிடவும் முடியாது. கேட்காமல் மனதிற்குள் அழுத்துவதும் சிரமம்! என்ன இருந்தாலும் அம்மா இல்லாத பெண்பிள்ளை… நன்கு வளர்ந்த பின்பு தான் அம்மா தவறினாள் என்றபோதும், அம்மா என்ற உறவு இல்லை தானே? ஆக, சட்டென்று தங்கையை எட்டி நிறுத்தி கேள்விகளை தொடுக்க மனம் வரவில்லை.

 

ஆகையால் சுயசமாதானமாய், ‘எங்களுக்கு எழுதியது இது தான். இதில் எந்த ஆராய்ச்சியும், இதைக்கொண்டு எந்த ரசாபாசமும் வேண்டாம்’ என்று நினைத்துக் கொண்டான். அதன்படி இருக்கவும் செய்தான். ஆனால், தீபலட்சுமி சீண்டலை விடுவதாக இருந்தால் தானே இது நிலைக்கும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 08சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 08

வேப்பம்பூவின் தேன்துளி – 8 அன்னபூரணி கல்லூரிக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். இது அவளுக்கு இரண்டாம் வருடம். சலனம் கொண்ட மனது மேலும் சலனம் கொண்டிருந்தது, நீதிவாசனின் பார்வை வித்தியாசத்தை மெலிதாக இனம் கண்டு கொண்டதால்!   தீபலட்சுமியின் திருமணம் முடிந்து

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 12’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 12’

வேப்பம்பூவின் தேன்துளி – 12   ரஞ்சிதாவின் திருமணத்திற்குச் சென்று வந்ததில் இருந்து தீபலட்சுமிக்கு அப்படியொரு எரிச்சல்! அவள் மனம் உலைகலனாக கொதித்துக் கொண்டிருந்தது.   தன்னைப்பார்த்து ஊரே வாயைப் பிளக்க வேண்டும். வாழ்ந்தால் இவளைப்போல ஒரு ராஜவாழ்க்கை வாழ வேண்டும்

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 10சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 10

வேப்பம்பூவின் தேன்துளி – 10   கண்ணில் இருந்து நேர் கோடாய் விழிநீர் கசிய, தான் அழுகிறோம் என்பது கூட புத்தியில் உரைக்காமல் திகைத்த பார்வையுடனும், சோர்ந்து, வாடிய தோற்றத்துடனும் அமர்ந்திருந்தாள் அன்னபூரணி. இளையவளையே ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதாவிற்கு பாவமாய்