Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 44

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 44

த்தரத்தைக் கிளப்பாதே ஜமுனா எங்க கஷ்டத்துக்குக் காரணமே நீதாண்டி”

“இது நல்லா இருக்கே… பிஸினெஸ் பண்ணறதுக்கு ஜிஷ்ணு மாதிரி அறிவு வேணும். அது இல்லாம அடுத்தவங்க மேல குறை சொல்லக் கூடாது”

“ஆமாண்டி அந்த அறிவில்லாமதான் உன் அப்பாவும் மாமியாரும் காலுல விழுந்தப்ப மாத்திரைல கரையுற சின்ன கட்டியை பூதாகரமாக்கி, ஜெயசுதா அத்தைக்கு பெரிய வியாதின்னு பில்ட் அப் பண்ணி, ஜிஷ்ணுவை உன் கழுத்துல தாலி கட்ட வச்சோம். அதனாலதான் எங்க ஹாஸ்பிட்டல் பேரே கெட்டுப் போச்சு. அன்னைக்கு மட்டும் அதை நாங்க செய்யல, அந்த அரவாடு இந்நேரம் உன்னிடதுல இருந்திருப்பா. நீ கல்யாணமே ஆகாம கன்னியாக்குமரியாட்டம் நின்னுட்டு இருந்திருப்ப”

“ஏய் இதுக்கு மேல என்னைப் பத்தி ஒரு வார்த்தை பேசினே பல்லை உடைப்பேன்”

“அதைத்தாண்டி உன்னால செய்ய முடியும். கல்யாணம் பண்ணி இவ்வளவு நாளாச்சு. உன் வீட்டுக்காரரை உன் வழிக்குக் கொண்டு வர முடியுதா? மாச சம்பளம் வாங்கினாலும் நானும் பானுவும் காதலோட வாழுறோம்டி. உன்னால அப்படி சொல்ல முடியுமா? சர்க்கஸ்ல சிங்கத்தைக் கட்டி வித்தை காட்டுற மாதிரி ஜிஷ்ணுவை மிரட்டி ஒரு பிள்ளை வேற பெத்துகிட்ட. சிங்கம் எத்தனை நாளைக்கு உன் கட்டுப்பாட்டுல இருக்கும்னு நினைக்கிற?” எகத்தாளமாய் கேட்டாள் ஸ்ரீவள்ளி.

அவ்வளவு நேரம் அங்கு நின்று நடந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த ஜிஷ்ணுவை சண்டை மும்முரத்தில் இருவருமே கவனிக்கவில்லை.

“ஜமுனா நீ ரூமுக்கு போ…” என்ற ஜிஷ்ணுவின் கணீர் குரலைக் கேட்டு திடுக்கிட்ட உறவினர்கள் சடுதியில் கலைந்தனர்.

ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேசாமல் அமைதியாய் உலவிய ஜிஷ்ணுவைத் திகிலுடன் பார்த்தனர் அனைவரும். அறையிலிருந்த பால்கனியில் நின்றபடி இருண்ட வானத்தை வெறித்தவனிடம் ஜெயசுதா வந்தார்.

“ஒரே ஜிஷ்ணு… ஏண்டா இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டு நிக்குறே… ஆமாண்டா நீ எவளோ ஒருத்தி பின்னாடி சுத்துனியே, அவளோட அப்பா செத்து போறாப்புல இருக்காருன்னு கேள்விப்பட்டோம். அவ கூட நீ அவங்க ஊருக்குக் கிளம்பிப் போவன்னு தெரியும். அப்படிப் போனா அவ சொந்தக்காரங்க சும்மா விடுவானுங்களா… வலுக்கட்டாயமா உன்னை அவ கழுத்துல தாலி கட்ட வச்சுடுவானுங்களே… நீ வேற உன் தாத்தா நீ அறியாத வயசுல ஊறுகாய் கம்பனியைப் பாத்துக்க சொல்லிட்டு செத்துப் போனதுக்கே அவர் கடைசி ஆசைன்னு பெனாத்திட்டு அந்த பிஸினெஸ்ல இறங்கிட்ட. அதையே அந்த அரவாடு வீட்டுலயும் கடைசி ஆசைங்குற தூண்டிலை உபயோகப்படித்திட்டா. அவளையெல்லாம் மருமகளா வீட்டுக்குள்ள விடுவேன்னு நினைக்கிறியா… அதனாலத்தான் அதை ஏன் நாமளே செஞ்சு ஜிஷ்ணுவுக்கும் ஜமுனாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கக் கூடாதுன்னு ஜமுனாவோட அப்பா கேட்டாரு. செஞ்சோம்… இப்ப என்ன குடி முழுகி போச்சு. பொண்டாட்டி பிள்ளை கூட நல்லாத்தானே வாழுற…”

ஜிஷ்ணுவுக்குக் கல்யாணமாகி குழந்தையும் பிறந்துவிட்டது. இனிமேல் அவனுக்கு உண்மை தெரிந்தாலும் ஒன்றும் குடி முழுகிப் போவதில்லை என்று தப்புக்கணக்கு போட்டார் ஜெயசுதா.

“நல்லா வாழலம்மா… பொணமா வாழுறேன். நீங்கதான் என்னை உயிரோட புதைச்சுட்டிங்களே…” கோவமாய் நடந்தவனைப் பின் தொடர்ந்த ஜெயசுதாவைப் பிடித்து இழுத்தார் வரலக்ஷ்மி.

“அக்கா வாயை மூடு. ஏற்கனவே உன் பணத்தாசையால அவன் மனச கொன்னுட்ட… இப்ப பேசியே அவனை உலகத்தை விட்டுப் போக வச்சுடாதே”

ன்றிரண்டு நாட்கள் மயான அமைதியுடன் சென்றது. ஜமுனா நீண்ட நேரம் யோசித்தாள். போன் பேசினாள். வீடியோ சாட் செய்தாள். நான்காம் நாள் காலை தாரணிக் கோட்டை கிளம்பிக் கொண்டிருந்த ஜிஷ்ணு முன் கையெழுத்திட்ட விவாகரத்துப் பத்திரத்தை வைத்தாள் ஜமுனா.

“ஜிஷ்ணு நீ நிஜமாவே ஒரு ஜென்டில்மேன். இத்தனை வருஷத்தில என்னை நல்லா பாத்துகிட்ட. உன் கடமையை ஒழுங்கா நிறைவேத்துன. ஆமா கடமைதான். நீ என் மேல காமிச்சதுல துளி கூட காதலில்லை. நீ சொன்ன கடமைக்கும் காதலுக்குமான வித்யாசத்தை நான் இப்பத்தான் உணருறேன்.

இந்த விவாகரத்தை நீ கேட்டப்பவே தந்திருக்கலாம். ஆனா அப்ப எனக்குக் கோவம், பொறமை, ஆங்காரம் இப்படி ஏகப்பட்ட தடைகள் இருந்தது. ஸ்ரீவள்ளி மேல இருக்குற பொறாமைல உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டது உனக்குத் தெரியும். அதைத் தவிர இன்னொரு காரணம் ஜேசன். என் கல்லூரியில் ஆராய்ச்சித் துறைல இருந்தவர். என்னோட பதினைஞ்சு வயசு பெரியவரான ஜேசனோட அறிவுல எனக்கு மயக்கம். விளைவு படிச்சுட்டு இருந்தப்பவே சேர்ந்து வாழ ஆரம்பிச்சோம். அந்த ஊருல இதெல்லாம் சகஜமான விஷயம். எனக்கும் தப்பாவே படல. ஆனா அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சதும் தாம் தூம்னு குதிச்சார். எனக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணார். அப்பா ஜேசன்கிட்ட என்ன சொன்னாரோ தெரியல அவரும் அப்பா சொல்படி என்னை நடக்க சொல்லிட்டார்.

என் மனசு நேர்மையா இருக்கணும்னு சொன்னதால பானு கிட்ட ஜேசனுக்கும் எனக்குமான உறவைப் பத்தி சொன்னேன். அவன் அதை ஒத்துக்க முடியாம வள்ளியைக் கல்யாணம் செய்துகிட்டான். அதுமட்டுமில்லாம அவ கிட்ட உண்மையை சொல்லிட்டான் போலிருக்கு. வள்ளி என்னை ஜாடையா பேச ஆரம்பிச்சா. அப்பாகிட்டயிருந்து தப்பு செஞ்சது மட்டுமில்லாம, அதை வெட்கமில்லாம வெளிய சொன்னதுக்காக எனக்கு பயங்கரத் திட்டு. அப்பத்தான் உன்னைக் கல்யாணத்துக்குப் பாத்தாங்க.

உண்மையை சொல்லப்போனா உன்னோட வெகுளித்தனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஜிஷ்ணு. உன்னை சீண்டிப் பாக்குறதும், பதிலுக்கு நீ உன் கோவத்தை அடக்கிட்டு முகம் சிவக்க என்னோட பேசுறதை ரசிக்கிறதும் எனக்கு இனிமையான பொழுதுபோக்கு. ஆனா அப்பகூட சத்தியமா உன்னைக் காதலிக்கலை.

ஒருநாள் ஷெர்வானி போட்டுட்டு என்னைப் பார்க்க வந்த பாரு. அப்பத்தான் நீ எவ்வளவு அழகுன்னு நெனச்சேன். என்னைப் பார்த்து சூப்பர் பிகர்ன்னு சொன்ன பாரு. அப்பத்தான் என் அழகு உன்னைக் கவருதுன்னு ஒரு கர்வம் ஏற்பட்டுச்சு. உன்கூட பேசினதும் நீ எனக்கு ஒரு நல்ல நண்பனா இருப்பன்னு தோணுச்சு.

அப்பறம் நம்மக் கல்யாணம் நடந்த சூழ்நிலை உனக்குத் தெரிஞ்சிருக்கும். அப்பயும் கலங்காம உன் காதலுக்காக போராடுன குணம் என்னை ரொம்பவே கவர்ந்தது. இந்த மாதிரி ஒரு உறுதி எனக்கு இல்லாம போச்சேன்னு என்னையே திட்டிக்கிட்டேன்.

அப்பறம்தான் எனக்குள்ள இருந்த சாத்தான் வெளிவந்தது. நீ கேட்ட விவாகரத்தை கொடுத்தா ஸ்ரீவள்ளி என்ன சொல்லுவா… நான் கெட்டுப் போனவன்னு தெரிஞ்சு நீ தள்ளி வச்சுட்டன்னு சொல்லுவா. அது எனக்குத் தேவையா…

என் காதலை எல்லாரும் அழிச்சாங்களே நான் மட்டும் தியாகியா நின்னு உன்னையும் உன் காதலையும் வாழ வைக்கணுமான்னு என் மனசில கேள்வி. காதல் எல்லாம் பொய். இந்த வசனம் எல்லாம் போயி முடியுற இடம் படுக்கைதான்னு எனக்குள்ள சொல்லிட்டேன்.

சரயுவை உன் நினைவில இருந்து மறக்கடிச்சு என் முந்தானையைப் பிடிச்சுட்டு உன்னை சுத்த வைக்கனும்னு சபதம் எடுத்துகிட்டேன். உன்னை என் பக்கம் வரவைச்சு காதலே ஒரு பித்தலாட்டம் அப்படின்னு எனக்கு நானே சமாதானம் செய்துக்க முயற்சி பண்ணேன்னு நினைக்கிறேன். அதுக்காக எவ்வளவோ கீழ்த்தரமா நடந்திருக்கேன். உன்னை அடிமைப்படுத்தனும்குற ஒரே நோக்கம் ஒண்ணுதான் எல்லாத்துக்கும் காரணம்.

ஆனா எனக்கு எல்லாத்திலையும் தோல்விதான் ஜிஷ்ணு. உன் காதலை பெற முடியல. குறைஞ்சபட்சம் உன்கிட்ட எனக்கான மரியாதையைக் கூட பெற முடியல. திருமண வாழ்க்கை ஒரு கடமையா இருக்கே தவிர துளி கூட காதல் இல்லை. எனக்கு இது வெறுப்பா இருக்கு. நான் மூச்சு முட்டி செத்துடுவேனோன்னு பயம்மா இருக்கு ஜிஷ்ணு.. உனக்குப் புரியுதா”

நீளமாய் மூச்சு விடாமல் பேசிவிட்டு, அவன் மடியில் முகத்தைப் புதைத்து ஓவென்று அழும் ஜமுனாவைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது ஜிஷ்ணுவுக்கு.

பெருமூச்சு விட்டபடி சொன்னான். “எனக்குப் புரியுது ஜமுனா… காதலை வலுக்கட்டாயமா யாராலும் வரவழைக்க முடியாது. தாலி கட்டினதாலையே காதலிக்கணும் அப்படின்னுற கட்டாயமெல்லாம் சினிமாவுக்கு வேணும்னா சக்சஸ் பார்முலாவா இருக்கலாம். ஒரு துளியாவது நம்ம துணை மேல அன்பிருந்தாத்தான் அது சாத்தியமாகும். இல்லைன்னா வாழ்நாள் முழுசும் ரெண்டு பேரோட வாழ்க்கையும் குடுவைக்குள்ள அடச்ச மாதிரி மூச்சு முட்டிப் போயிடும்”

“ஜிஷ்ணு நீ இத்தனை வருஷமா எவ்வளவு மூச்சு முட்டிக் கஷ்டப்பட்டுருப்பன்னு புரியுது… என்னால இதைத் தாங்க முடியல. நீ ஹாண்ட்சமா இருக்கலாம், கோடி கோடியா பணம் சம்பாதிக்குற சாமர்த்தியசாலியா இருக்கலாம், நம்ம ரெண்டு பேரும் காலத்தோட கட்டாயத்தால ஒண்ணு சேர்ந்து குழந்தை கூட பெத்திருக்கலாம்… ஆனா நீ வேற, நான் வேற… உன் பாஷைல சொல்லனும்னா ஸ்ருதியும் தாளமும் தப்பின அபஸ்வரமாத்தான் நம்ம வாழ்க்கை இருக்கு. இதுல இருந்து என்னை விடுவிச்சுடு ப்ளீஸ்”

அவன் காலருகே மண்டியிட்டு கண்களில் நீர் அருவியாய் கொட்ட தேம்பித் தேம்பி அழுத ஜமுனாவை முதன் முறையாக அன்போடு அணைத்துக் கொண்டான் ஜிஷ்ணு.

“ஜமுனா… நான் படுற கஷ்டம் வேற யாரும் படக்கூடாது. தாம்பத்யத்திலிருந்து, குழந்தை வரை நீ கேட்டதை நான் என்னைக்கும் மறுத்ததே இல்லையே இப்பமட்டும் மறுக்கவா போறேன். சரி உணர்ச்சி வேகத்துல விவாகரத்து பண்ணிட்டு எங்க போவ… என்ன செய்வ…”

“ஜேசன் கூட பேசினேன். அவர் இன்னமும் நாங்க வாழ்ந்த வீட்டுல என் நினைவோட வாழ்ந்துட்டு இருக்கார். எனக்காக என் காதலுக்காக காத்திட்டு இருக்கார். நான் இன்னைக்கே அவருகிட்ட கிளம்புறேன்” கர்வமாய் சொன்னாள் ஜமுனா.

‘இன்னமும் இவளுக்கு சுயநலம் போகல’ என்று எண்ணியவாறு, “நமக்கு சந்தனான்னு ஒரு பொண்ணு இருக்கா நினைவிருக்கா?” என்றான்.

அப்போதுதான் நினைவு வந்து, “சந்தனா…” திணறியவளிடம்,

‘காரியத்துக்காக குழந்தை பெத்துகிட்டவளுக்கு எப்படி அக்கறை இருக்கும்’ என்று சுடச் சுட சொல்ல வேண்டும் போல் வாய் துரு துருவென்றிருந்தது ஜிஷ்ணுவுக்கு. செத்த பாம்பை அடித்து என்ன பயன்? என்ற கேள்வி எழுந்ததும் விட்டுவிட்டான்.

“கவலைப்படாதே ஜமுனா… என் பொண்ணை உன்கிட்ட தரமாட்டேன். அவ என்கிட்டத்தான் வளருவா. நான் என் பிரெண்ட் கல்யாணத்துக்காக குண்டூர் போயிட்டு இருக்கேன். திரும்ப வந்து நீ கேட்டதைத் தரேன்” என்றான்.

“அதுக்குள்ளே உன் மனசு மாறிட்டா… இப்பவே அந்தக் கையெழுத்தை போட்டுட்டு போயிடேன்” என்றவளிடம் பேச மனமின்றி விவாகரத்துப் பத்திரத்தில் கையொப்பமிட்டான்.

பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த சந்தனாவை நெருங்கியவன், “சந்து நம்ம ரெண்டு பேரும் நம்ம ஊருக்கே திரும்பிப் போறோமாம். அம்மாவுக்குக் பெஸ்ட் ஆப் லக் சொல்லிட்டு வாங்க தங்கம்” என்று சொல்லி சந்தனாவைத் தூக்கிக் கொண்டான்.

“பெஸ்ட் ஆப் லக் மம்மி” என்றவாறு தனது தகப்பனுடன் ஊருக்குக் கிளம்பும் சந்தோஷத்தில் கிளம்பினாள் சந்தனா.

தனது சித்தி வரலட்சுமியை அழைத்தவன், “பின்னி எல்லாமே முடிஞ்சுடுச்சு. நானும் சந்துவும் கிளம்பி வந்துட்டு இருக்கோம். அவளை ஹாஸ்டல்ல சேர்க்குற வரைக்கும் கொஞ்ச நாள் பாத்துக்கிறியா?” என்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19

“லேட்டாச்சு… சாப்பாடு தீர்ந்துடும்… சாப்பிட வாங்க…” என்றபடி சரயுவின் கல்லூரி மாணவன் ஒருவன் வந்தான். அவனை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்த ஜிஷ்ணு கஷ்டப்பட்டு யோசித்து, சரயுவின் பிறந்ததினத்தன்று அவளுக்கு சுவாமி படம் கொடுத்தவன் என்று நினைவுக்குக் கொண்டு வந்தான். “பிஸியா

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25

  சத்தமில்லாமல் சில நாட்கள் கழிந்தது. ஜெயசுதா வீட்டுக்கு வந்துவிட்டார். ஜிஷ்ணு அவனது தொழிலை சீர்படுத்தும் வேலையில் முழு மூச்சாக இறங்கினான். செய்முறையில் சில மாற்றங்கள் செய்தான். ஆவக்காய், கோங்குரா தவிர மற்ற வகை ஊறுகாய்களையும் விற்பனை செய்யும் எண்ணத்துடன் அவற்றிக்கான