சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 17’

வேப்பம்பூவின் தேன்துளி – 17

 

திருமண இரவுகள் தான் எத்தனை கோலாகலம்! அந்த மிகப்பெரிய மண்டபம் முழுவதும் மின்விளக்குகளால் பிரகாசிக்க, அது கோபாலகிருஷ்ணன், லாவண்யாவின் திருமண வைபவம். திருமண ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பணத்தின் செழுமை தெரிந்தது.

 

லாவண்யா வீட்டினர் சற்று வசதியானவர்கள். பெண் பார்க்கும் வைபவம் முடிந்ததும்… கோபி அசடு வழிய, அபஸ்வரமாய் கேள்விகளை எழுப்பியதும் அதன் பொருட்டே! அதன்பிறகு லாவண்யாவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டது கிளைக்கதை.

 

மணப்பெண்ணுக்குச் செய்த சீர்வரிசைகள், அணிவித்திருந்த நகைகள் என எல்லாமே வருவோர் போவோரின் கண்களை நிறைத்தது. அனைவரையும் வெகுவாக வியந்து பார்க்க வைத்தது. மண்டபத்தில் ஆங்காங்கே அது குறித்த பேச்சுக்கள் தான்!

 

இத்தனை சீர் வரிசைக்கும் இவன் ஈடானவன் தான் என்ற மிடுக்கான தோற்றத்தோடு, வெகு வசீகரனாய் திருமண வரவேற்பில் கோபி நின்றிருந்தான். அழகானவன் என்பதையும் தாண்டி, அவர்கள் வட்டத்தில் பெரும்பாலானோர் உள்ளூரிலேயே வேலையில் இருக்க, கோபி போன்ற வெளிநாட்டு மாப்பிள்ளைகள் வெகு அரிது!

 

அதைக்கொண்டே லாவண்யாவின் வீட்டில் ஒரு மயக்கம். தோதாக கோபியும் ஆணழகனாக, குடும்ப பொறுப்பை உணர்ந்தவனாக இருக்க, குடும்பமும் நல்ல விதம் என்றதும், கண்ணை மூடிக்கொண்டு பெண்ணை திருமணம் செய்து வைக்கத் தயாராக இருந்தனர்.

 

அனைத்தும் ஒத்துவர, இதோ இன்று திருமணம்! பார்த்த முதல் பெண்ணே கூடி வருவது வெகு அபூர்வம். கோபியின் நல்ல மனதிற்கு அப்படி ஒரு கொடுப்பினை தான் அமைந்திருந்தது.

 

இதெல்லாம் பார்த்துப் பார்த்து வயிறெரிந்தது என்னவோ தீபலட்சுமி தான்! ‘தான் நிராகரித்தவனுக்கு வந்த வாழ்வை பாரேன்’ என்று மனதிற்குள் பொறுமிக் கொண்டிருந்தாள்.

 

அன்பரசன் காலையில் வந்து திருமணத்தில் கலந்து கொள்வதாகச் சொல்லியிருக்க, தீபலட்சுமி மட்டும் தனியாக வந்திருந்தாள். ஒரு ஓரமாக அமர்ந்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எதுவுமே ரசிக்கவில்லை. கையில் ஏதேனும் கிடைத்தால் இந்த மண்டபத்தையே அடித்து நொறுக்கி விடுவாள் என்பது போன்ற ஆவேசம். அவள் விழிகளில் உக்கிரம் டன் கணக்கில் வழிந்தது.

 

மணமக்களுக்கான மாலை ரிஷப்ஷன் முடிய, இரவில் நலுங்கு வைத்து, நிச்சய தாம்பூலம் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது. மணமக்கள் இருவரும் தத்தம் அறைகளுக்கு செல்ல, ஆத்திரத்தை அடக்க மாட்டாமல் தீபா கோபியைப் பார்க்க மணமகன் அறைக்கு சென்றாள்.

 

கோபியின் நண்பர்கள் சிலர் அவனோடு இருக்க, தீபா அவர்களிடம், “உங்களுக்கெல்லாம் தூங்க ஹோட்டல்ல ரூம் ஏற்பாடு பண்ணியிருக்காங்களாம். நீங்க எல்லாரும் சாப்பிட்டீங்கன்னா அங்க போக சொன்னாங்க” என்று சொல்லி அவர்களை வெளியே அனுப்ப முயன்றாள்.

 

நேரமும் தாண்டி இருந்ததால், அவள் கூறியது நன்றாகவே வேலை செய்ய, “சரி மச்சான் நாளைக்குப் பார்க்கலாம்” என்று கோபியிடம் சொல்லிவிட்டு அனைவரும் கிளம்பிவிட,

 

‘தங்களுக்குள் தனிமையை எதற்கு உருவாக்குகிறாள்? இவளிடம் வார்த்தையாட கூடாது’ என்று சற்று உஷாரானான் கோபி. மனதிற்குள் இருந்த எண்ணத்தை இம்மியும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் வெகு இயல்பாக இருந்தான். ஏன் அவளை ஒரு பொருட்டாக எண்ணிக் கண்டுகொள்ளக் கூட இல்லை.

 

அதில் அதிகமாகக் கடுப்பானவள், “என்ன ஒருவழியா உன்னை கட்டிக்கவும் ஒருத்தி கிடைச்சுட்டா போல” என்றாள் நக்கலாக.

 

கோபிக்கு எரிச்சல் கிளர்ந்த போதும், பதில் பேசாமல் முறைப்புடன் நிறுத்திக் கொண்டான்.

 

தீபாவோ, “கிடைத்தவளைப் பத்திரமா வெச்சுக்க. உன் ராசிக்கு அமையறதே பெருசு. அதிலேயும் பொண்ணு வசதி போலவே… உங்க ஓட்டை வீட்டைப் பார்த்து மிரண்டு ஒரே நாளுல ஓடிட போறா” என்றாள் வெகு அலட்சியமாக!

 

ஓடிவிடுவது, விட்டுவிட்டுச் செல்வது எல்லாம் இவள் புத்தி! இவள் என்னவளைச் சொல்கிறாளா? என்று கோபத்துடன், கோபி மீண்டும் முறைத்துப் பார்த்தான்.

தீபாவோ, “என்ன முறைப்பு உன்கூடவெல்லாம் இருப்பாளா? இத்தனை வசதியான பொண்ணை உனக்குக் கட்டி வைக்கும் போதே உனக்கு தெரிஞ்சிருக்க வேணாம், அவளோட லட்சணத்தைப் பத்தி… எங்கே எவனோட ஓடிப் போக இருந்தாளோ? இளிச்சவாயன் நீ கிடைச்சதும் உன் தலையில கட்டி வைக்க பார்க்கறாங்க. எதுக்கும் கவனமா இரு. இவளுங்க எல்லாம் எப்ப வேணா மறுபடி விட்டுட்டு ஓடிடுவாளுக” என்று விஷமாகப் பேசினாள்.

அவளின் நாகரீகமற்ற பேச்சு, கோபியை வெகுவாக சீண்டிவிட, அதற்கு மேலும் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல், “நீயும் ஒரு பெண் ஜென்மமா?”  என்று நேரடியாகவே சாடிவிட்டான். எரிச்சலில் அவனது முகம் சிவந்து விட்டிருந்தது. எத்தனை தான் பொறுத்துப் போவது?

 

தீபாவோ அவனுக்கும் குறையாத ஆத்திரத்துடன், “பின்ன உன் தங்கைங்க மாதிரி இருக்கணுமா? கைக்கும், வாய்க்கும் வர வருமானத்துல குடும்பத்தை ஓட்டிட்டு… தலையாட்டி பொம்மை மாதிரி!” என்றாள் ஏளனக் குரலில்.

 

நான் உன்னை விட்டுப் போனதில் தவறே இல்லை என்னும் வாதம் அவளுடையது! ஆனால், அது அவள் வரையில் தானே? கோபியாகச் சென்று ‘ஏன் என்னை விட்டுச் சென்றாய்? எனக்கு எதற்காக நம்பிக்கை துரோகம் இழைத்தாய்?’ என்று கேட்டிருந்தால், இவள் இவளுடைய தரப்பு வாதத்தை முன் வைக்கலாம். அதைவிடுத்து, அவன் உண்டு, அவன் வேலை உண்டு என்று  இருப்பவனைத் தேடி வந்து வம்பு செய்தால்?

 

என்னவோ கோபியால் இவள் செய்யும் அட்டகாசத்தைப் பார்த்துவிட்டு அமைதியாகக் கடந்து போக முடியவில்லை. ஏற்கனவே அவள் நிராகரிப்பில், காரண காரியங்கள் இல்லாமல் ஏமாற்றியதில், துரோகம் இழைத்ததில் பலத்த அடி வாங்கி, அதிலிருந்து மீளமுடியாமல் தத்தளித்து… ஒருவழியாக மெல்ல மீண்டு வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடிவெடுத்திருக்கையில், இப்படி வந்து தன் வருங்கால மனைவியைக் குறித்தும், தங்கைகள் குறித்தும் கண்டதையும் பேசும் போது, ‘குரைக்கிற நாய்’ என்று அவளை ஒதுக்கிவிட்டுப் போக முடியாமல் போனது.

 

அவள் வரைமுறையற்று பேசியதில் கோபிக்கு ஆத்திரம் கிளம்பியது. “ச்சீ என் தங்கைகளைப் பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு? பணத்துக்கு ஏத்த மாதிரி மாறிக்கிற பச்சோந்தி நீ! நீயும் அவங்களும் ஒன்னா? அவங்களுக்கு உன்னை மாதிரி வாழ்க்கையைப் பணத்தை வெச்சு நிர்ணயிக்கிற மோசமான குணம் இல்லை. ஒழுக்கமும், நல்ல பண்பும் தான் பெரிய சொத்துன்னு அவங்களுக்கு தெரியும். ச்ச ச்ச ஒழுக்கத்தைப் பத்தி போயும் போயும் உன்கிட்ட சொல்லறேன் பாரு” என்று  வெறுப்பாய் முகத்திருப்பலுடன் கூறினான்.

 

அவன் செய்கையில், பேச்சில் ஆத்திரம் அடைந்த தீபலட்சுமியோ அவனின் இருமாப்பை, கர்வத்தை உடைத்துக் காட்டும் வெறியில் குறுக்கு வழியில் கீழ்த்தரமாக யோசித்தாள்.

 

தன் வக்கிர எண்ணத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “ஆமாம் ஆமாம் உன் தங்கைங்க தான் ஒழுக்கத்துக்கே சிகரம்… நீயே கொண்டாடு அந்த வக்கத்தவங்களை…” என்று ஆத்திரமாக மொழிந்து விட்டு அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

 

செல்பவளின் முதுகை வெறித்தவன், ‘ச்சீ இதுவும் ஒரு பிறவி. இவளையா மூணு வருஷம் லவ் பண்ணேன்’ என்று அசூயையாக நினைத்துக் கொண்டான். அவள் செய்து வைக்கப்போகும் வேலை தெரியாமல், அவளைத் துச்சமென ஒதுக்கி, தனது கல்யாண நிகழ்வுகளில் மகிழ்ச்சியாகக் கலந்து கொண்டான்.

இருந்தும் அபஸ்வரமாய் மனதில் ஓரம் உறுத்தல் எழுந்து கொண்டே இருந்தபோதும், திருமண சடங்குகளில் கலந்து கொள்பவனால் வேறு எதிலும் எப்படி கவனத்தைச் செலுத்த முடியும்?

 

தீபலட்சுமிக்கோ ஆத்திரமாக வந்தது. ஏற்கனவே கல்யாண ஏற்பாடுகளில், லாவண்யாவின் வசதி வாய்ப்புகளில், கோபியின் தற்போதைய நிலையில்… வயிறெரிந்தவள்… இப்பொழுது கோபி பேசிய கீழ்த்தரமான பேச்சில் அதீத சினம் கொண்டாள். ‘அப்படியென்ன இவனோட தங்கைகள் ஒழுக்க சிகரம்? நான் குறைந்து விட்டேன்… அவங்களுடைய மானத்தை இந்த கல்யாணத்திலேயே ஏலம் விடறேன் அப்பறம் தெரியும் அவனுக்கு’ என்று ஆத்திரமாக எண்ணியவள் பார்வையைச் சுழற்றி அன்னபூரணி எங்கே என்று தேடினாள்.

 

ரஞ்சிதாவிற்கு சற்று ஓய்வு தருவதற்காக அமுதினி பாப்பாவை பூரணி பார்த்துக் கொண்டிருந்தாள்.

பூரணி அமைதியாக, ஒரு ஓரமாக நின்றபடி குழந்தைக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருக்க, ‘இவளை ஏதாவது செய்தாக வேண்டுமே’ என்று ஆத்திரத்துடன் அவளை உறுத்து நோக்கிக் கொண்டிருந்தாள் தீபா.

 

அந்த சமயம் நீதிவாசன் தங்கையைத் தேடி வந்தவன், “தீபா நீ தனியா என்ன செய்யற? அங்க போய் இரு… நலுங்கு வைக்கிறாங்க பாரு” என்று சொல்ல, முகத்தை சட்டென்று இயல்பாக்கிக் கொண்டவள், “இதோ போறேன்ண்ணா. நீங்க இங்க என்ன செய்யறீங்க?” என்று பதிலுக்குக் கேட்டாள்.

 

“ரிஷப்ஷன் முடிஞ்சதல்ல, அதான் இந்த குர்தாவை மாத்திட்டு வேஷ்டி, சட்டை கட்டிட்டு வந்துடறேன். நீ அங்க இரு போ” என்று சொல்லிவிட்டு மணமகன் அறைக்குள் நுழைய, அங்கு வேறு யாரும் இல்லை என்பதைத் தான் தீபா அறிவாளே! சட்டென்று அவளுள் ஒரு யோசனை கிளம்பியது.

 

திட்டத்தைத் தள்ளிப்போட முடியாது என்பதால் உடனடியாக செயல்பட ஆரம்பித்தாள். சமையலறையில் இருந்து காஃபியை பிடித்தவள் அன்னபூரணியிடம் சென்று, “பூரணி உனக்கு காஃபி தர சொன்னாங்க. குழந்தையை எங்கிட்ட கொடு” என்று பூரணி சுதாரிக்கும் முன்பு, வேகமாகக் குழந்தையைப் பறித்து அதே வேகத்தில் காஃபியையும் திணிக்க, தீபா எதிர்பார்த்தது போன்றே காஃபி முழுவதும் பூரணியின் மீது கொட்டியிருந்தது.

 

என்ன நடக்கிறது என்று அனுமானிப்பதற்குள் பூரணியின் மீது சூடான காஃபி! புடவை மீது கொட்டியதால் அவளுக்குச் சூடு படவில்லை.

 

மலங்க மலங்க விழித்தபடி பூரணி நிற்க, “அச்சோ பார்த்துப் பிடிக்க மாட்டியா பூரணி. பாரு சேலை முழுக்க காஃபி கொட்டிடுச்சு. இப்படியா பட்டுச் சேலையை செய்வ? சரி குழந்தை தான் தூங்கறாளே, நலுங்கும் வெச்சு முடிக்க போறாங்க. நீ வேற டிரஸ் வெச்சிருக்கியா? போயி மாத்திட்டு வா. நான் குழந்தையை பார்த்துக்கிறேன். சீக்கிரம் போ” என அவளுக்குப் பேசவே இடம் தராமல் தள்ளாத குறையாக அவளை அனுப்பி வைத்தாள்.

தீபலட்சுமி எதிர்பார்த்தது போலவே பூரணி மணமகன் அறையை நோக்கிச் சென்றாள். அவர்களின் உடைமைகள் அங்கு தானே இருக்கிறது! தீபா தன் எண்ணப்படி அனைத்தும் நடந்துவிடும் என்ற எண்ணத்தில் குரூரமாக சிரித்துக் கொண்டாள்.

 

பூரணிக்கு ஒன்றுமே புரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் காஃபி எதற்குத் தந்தார்கள்? அதை சொல்லிவிட்டாவது தந்திருக்கலாம். அவசரமாகக் குழந்தையைப் பிடுங்கி… காஃபியை திணித்து… அது உடையில் கொட்டி… ச்ச அண்ணன் ஆசையா வாங்கி தந்த பட்டு… இப்படியாகத்தான் அவளுடைய எண்ணங்கள்.

 

கல்லூரி கல்வியையே இப்பொழுது தான் முடித்திருக்கிறாள். தேர்வு முடித்து இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை. ஆட்களைப் பற்றி அதிகம் தெரியாது என்பதை விட, அவர்களின் குறுக்குப் புத்தியைப் பகுத்தறியத் தெரியாத இளம் பருவம்! இவளை அனைவரும் ஒதுக்கி வைப்பார்கள் என்று அவளுக்கு நன்கு தெரியும். ஆனால், இவளுக்கு தீங்கு நினைப்பார்கள், இவள் மீது பழி சுமத்தத் திட்டமிடுவார்கள் என்று அவள் என்ன கனவா கண்டாள்? அதைக்குறித்து ஆராய்வதற்கோ, சுதாரிப்பாக இருப்பதற்கோ!

 

உடை பாழாகி விட்டதே என்ற கவலையில் மணமகன் அறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டாள். நீதிவாசனும் குளியலறையில் இருக்க இவளுக்கு அவன் இருக்கிறான் என்பதே தெரியவில்லை. தெரிந்திருந்தால் சுதாரித்திருப்பாள். உடனே வெளியேறியும் இருப்பாள். ஆனால், தெரியவில்லை பாவம். இது தீபாவின் நல்ல நேரமா இல்லை இவளின் கெட்ட நேரமா என்று தெரியவில்லை!

 

இதற்கும் நீதிவாசனின் கைப்பேசி, அவன் மாற்றப் போகும் வேஷ்டி, சட்டை எல்லாம் அருகில் இருந்த மேஜை மீது தான் இருந்தது. தன் புடவை பாழானதையே யோசித்துக் கொண்டிருந்தவள், பெரியம்மாவிடம் என்ன சொல்லிச் சமாளிக்க என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருக்க மற்ற பொருட்களைக் கவனிக்கவில்லை.

 

அறையில் யாரும் இல்லை என்ற எண்ணத்தில், முன்பே கொண்டு வந்திருந்த ஒரு சாதாரண சேலையைப் பெட்டியிலிருந்து எடுத்து இவள் பாட்டிற்கு உடையை மாற்றத் தொடங்கினாள்.

 

சரியாக தன் பட்டுப்புடவையைக் கழற்றி சாதாரண சேலையை எடுத்துக் கட்ட தான் தொடங்கியிருப்பாள். அதற்குள் அந்த அறையோடு இணைந்திருந்த குளியலறை கதவை திறந்து நீதிவாசன் வந்துவிட்டான்.

 

‘அம்மா…’ என்று அலறியவள் அப்படியே மடங்கி அமர்ந்து விட, கண்களில் கண்ணீர் பெருகியது.

 

யாரும் இல்லாத அறை என்ற எண்ணத்தில் தானே உடை மாற்ற வந்தாள்? உள்ளே இவன் இருப்பது பலத்த அதிர்ச்சியாக இருந்தது. உடல் வெடவெடக்க தொடங்கியது.

 

இவன் முன்பு இப்படி அரையும் குறையாக இருந்தால் நம்மைப்பற்றி என்ன நினைப்பான்? இவனோடு பூட்டிய அறைக்குள் இருந்தால் உற்றார், உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? நிமிடத்தில் எண்ணங்கள் எங்கெங்கோ பயணிக்க… பயத்தில், பதற்றத்தில் கேவி கேவி அழுதாள்.

 

இவள் இங்கு இந்த கோலத்தில் இருப்பாள் என்று நீதிவாசன் என்ன கனவா கண்டான்? சட்டென்று சுவர் பக்கம் திரும்பி நின்று கொண்டான். “எனக்கு நீ இருப்பன்னு தெரியலை. ரொம்ப சாரி. நான் பாத்ரூம்லயே இருக்கேன். சீக்கிரம் புடைவை மாத்திக்க” என்று சொல்லிவிட்டு அவன் மீண்டும் குளியலறைக்குள் நுழைய எத்தனிக்க, சரியாக அந்த நேரம் கதவு தட்டப்பட்டது தீபலட்சுமியால்.

 

“அண்ணா… அண்ணா… உள்ள தான் இருக்கியா? கொஞ்சம் சீக்கிரம் வாயேன்” என்று அறைக்கதவை அவள் பலமாகத் தட்ட,

 

மடங்கி அழுது கொண்டிருப்பவளின் நிலையை எண்ணி அவனுக்குச் சங்கடமாகப் போனது.

 

“பூரணி அழாம எழுந்திருச்சு சேலை மாத்திக்க. தீபா கதவை தட்டறா பாரு. கதவைத் திறந்து நான் உள்ள இருக்கிறது தெரியாத மாதிரி பேசு. நான் பாத்ரூம்குள்ளேயே இருக்கேன்” என்று சிறு பிள்ளைக்குச் சொல்வது போல விளக்கமாக, பொறுமையான குரலில் சொன்னான்.

 

ஆனால், அதிர்ச்சியில் இருந்தவளுக்கு எதையும் யோசிக்க முடியவில்லை. கை, கால்கள் வெடவெடத்தது. அழுது கொண்டே இருந்தாலே தவிர நிலைமையைச் சமாளிப்போம் என்ற எண்ணமே வர மறுத்தது. அத்தனை தூரம் மிரண்டு போயிருந்தாள்.

 

அவள் அழுகை சத்தம் தொடர்ந்து கொண்டே  இருக்க, “ஸ்ஸ்ஸ்… அன்னம் என்ன பண்ணற நீ? முதல்ல அழறதை நிறுத்திட்டு எழுந்து புடவை கட்டு” என்று அதட்டல் போட்டான் நீதிவாசன்.

 

அவனும் என்ன செய்வான்? இந்த தீபா வேறு கதவை உடைப்பது போல தட்டிக் கொண்டிருக்கிறாள். இந்த நேரத்தில் இவள் இப்படி நடுங்கி, மடங்கி அமர்ந்து அழுது கொண்டிருந்தால்?

 

அவனின் அதட்டல் சற்று வேலை செய்தது. “ஹ்ம்ம்…” என்ற பதில் பூரணியிடமிருந்து ஹீனமாக ஒலித்தது. அவனுக்கே பாவமாகப் போய்விட்டது.

 

தெரியாமல் நடந்தது தானே இதற்கு ஏன் இப்படி அழுகிறாள்? என்று பரிதாபப்பட்டான்.

 

ஆனால், அவள் மீது சிறு குறையைப் பார்த்தாலும் பெரிதாக்கும் சுற்றத்தின் நடுவில் வளர்ந்தவள், ஏற்கனவே பலவிதமான பேச்சுக்களை, பலவிதமான தினுசில் கேட்டிருந்தவள், இப்படி ஊரார் வாயிற்கு அவலாக ஒரு செயல் கிடைத்து விட்டதே என்ற பேரச்சத்தில் இருக்கிறாள் என்பதை அவன் அறிய வாய்ப்பில்லையே!

 

அவள் உடை மாற்றுகிறேன் என்று ஒப்புக்கொண்ட பிறகே, சற்று ஆசுவாசமானவன் மீண்டும் குளியலறைக்குள் சென்று கதவை உட்புறமாக தாளிட்டுக் கொள்ள, இவள் எழுந்து அவசர அவசரமாகப் புடவையைக் கட்டினாள். அவசரத்தில் புடவை வேறு கட்ட வரவில்லை. தீபா வேறு “அண்ணா அண்ணா” என்று கத்திக் கொண்டிருந்தாள்.

 

அப்பொழுதும் அன்னபூரணியால் தீபாவைத் தவறாக நினைக்க முடியவில்லை. நடந்த சம்பவங்களை முடிச்சிட இந்த இளம்பெண்ணுக்குத் தெரியவில்லை. நீதிவாசன் இருப்பதைக் கூட சரியாக கவனிக்காமல் உள்ளே நுழைந்து கதவை நாளிட்டுக் கொண்டது, இவளுடைய பெரும் தவறு என்று தன் பிழையைக் குறித்த குற்றவுணர்வு மட்டுமே அவளிடம்!

ஒருவழியாகப் புடவையைக் கட்டி முடித்து, முகத்தை அழுந்த துடைத்து கதவைத் திறக்க, “நீ இங்க என்ன பண்ணற?” என்று தீபா அதட்டல் போட்டாள்.

 

இத்தனை நேரம் தீபா கத்திய கத்தலில், செய்த ஆர்ப்பாட்டத்தில் அறைக்கு வெளியே சில உறவினர்கள் கூறியிருந்தனர்.

 

இத்தனை கூட்டத்தை எதிர்பார்க்காத பூரணி மீண்டும் நடுங்கத் தொடங்கினாள். வெகு சிரமப்பட்டு, “புடவை கட்டிட்டு இருந்தேன். அது காஃபி நீங்க…” என்று தயங்கித் தயங்கி சொல்லத் தொடங்கியவளை,

 

“என் அண்ணன் மட்டும் தான உள்ள இருந்தான். அவன் இருக்கிற ரூம்ல நீ எதுக்கு புடவை கட்டற?” என்று ஆத்திரமாகத் தீபா கேட்டாள்.

 

“இங்க யாரும் இல்லை” என்று நடுங்கியபடி பதில் சொன்னவளுக்கு அழுகை பொங்கியது.

 

“நடிக்காதடி. ஆள் மயக்கி. என்ன எங்க அண்ணனை வளைச்சு போடாலாம்ன்னு யோசிக்கிறியா?” என்று தீபா அனைவரின் முன்னிலையிலும் கண்டபடி பேச,

 

“என்ன பேசற தீபா? சின்ன பிள்ளை கிட்ட போயி…” என்று ஜோதிமணி இடையிட்டு அதட்டினார். பெண்கள் மட்டும் சிலர் கூடியிருக்க, என்ன ஏதென்று பார்க்க ஜோதிமணி அவ்விடத்திற்கு வந்திருந்தார்.

 

“நான் என்ன இல்லாததையா சொன்னேன். என் அண்ணன் உள்ள தான் வந்தான். எனக்கு நல்லா தெரியும். இவளோட லட்சணத்தை சொன்னா உங்களுக்கு எதுக்கு கோபம் வருது. இவளை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்காம… நாயைக் குளிப்பாட்டி..” என்று தீபா வரைமுறையின்றி பேச,

 

“போதும் நிறுத்து தீபா…” என்று ஜோதிமணி கத்தினார். பூரணிக்கு அழுகை பொங்கியது. இப்படி எல்லாம் பேசுகிறார்களே என்று தாளவே முடியாமல் கதறி அழுதாள்.

 

“பெரியம்மா…” எனத் தேம்பியபடி ஆறுதலுக்காக மூத்தவளிடம் வந்து ஒன்றிக் கொண்டாள்.

 

தீபாவோ, “சும்மா என்னை எதுக்கு அதட்டறீங்க?” என்று எகிறியவள், “அண்ணா… அண்ணா…” என்று ரூமினுள் நுழைந்து ஏலம் விட, பாத்ரூம் உள்பக்கம் பூட்டியிருந்ததை கவனித்து விட்டாள். கூடவே மேஜை மீதிருந்த நீதிவாசனின் உடைமைகளையும்.

 

“பாரு… இதெல்லாம் எங்க அண்ணனோடது. இதை நீ எப்படி கவனிக்காம இருந்திருப்ப? பாத்ரூமுக்குள்ள ஆள் இருக்காங்கன்னு எப்படி உனக்கு தெரியாம போச்சு?” என்று தீபா மிரட்டினாள்.

 

“எனக்கு நிஜமாவே தெரியாது பெரியம்மா. என் மேல காஃபி கொட்டிடுச்சு. அதுதான் புடவை மாத்த வந்தேன். நான் வேற எதையும் கவனிக்கலை” என பூரணி அழுதபடியே கதறினாள். அதற்குள் ரஞ்சிதாவும் வந்திருக்க, அவளுக்குப் பாவமாகப் போய்விட்டது. தங்கையை தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டாள்.

 

சுற்றி இருந்த அனைவரும் பூரணியை ஆராய்ச்சியாகப் பார்ப்பதில் அவளுக்கு அவமானமாக இருந்தது.

 

அப்பொழுதும் விடாமல், “நடிக்காத…” என்று சீறிய தீபா, இப்பொழுது, “அண்ணா… அண்ணா…” என்று குளியலறையின் கதவைச் சென்று தட்டினாள்.

 

ஏன் இப்படி ஆங்காரமாக நடந்து கொள்கிறாள் என்று தீபாவின் புத்தி தெரிந்தவர்கள் மட்டும் முகம் சுளித்தனர். மற்றவர்கள் அனைவரும் ‘என்ன நடந்தது இங்கு?’ என்று தெரிந்து கொள்வதில் மும்மரமாக இருந்தனர்.

 

‘பெண் பார்க்கச் சாதுவாக இருக்கிறாள்? இவள் இப்படி ஒரு காரியம் செய்தாளா?’ என்றெல்லாம் ஆராய்ச்சி பார்வை பார்த்து அன்னபூரணியைக் குன்ற வைத்துக் கொண்டிருந்தனர்.

 

பூரணி எது நடந்து விடுமோ என்று அஞ்சி நடுங்கினாளோ அதுவே நடந்து கொண்டிருந்தது. அவளுடைய கால்கள் வலுவிழந்து தொய்ந்து போவது போல இருந்தது. அக்காவின் தோள்களில் இறுக முகம் புதைத்து நடுங்கியபடி நின்றிருந்தாள்.

 

இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்று புரிய நீதிவாசன் துவாளையில் முகத்தைத் துடைத்தபடி அறையினுள் வந்தான். இத்தனை நேரம் தீபா பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு கட்டுக்கடங்காத கோபம். முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தான். இப்பொழுது பூரணிக்கு ஆதரவாக அவன் பேசும் ஒற்றை சொல்லும் அந்த சின்ன பெண்ணிற்கு மேலும் பழிச்சொற்களை வாங்கித்தரும் என்று நன்கு அறிந்தவனாக அமைதி காத்தான்.

 

“என்ன தீபா? எதுக்கு இத்தனை பேரு இங்க இருக்கீங்க? ஏன் கத்திட்டு இருக்க? உன் சத்தம் உள்ள வரை கேட்குது?” என்று பொதுவாக எதுவும் தெரியாதவன் போல விசாரித்தான்.

 

“என்னண்ணா கதவை பூட்டிட்டு துணி மாத்த மாட்டியா? இந்த மேனா மினுக்கி என்ன பண்ணுனா தெரியுமா?” என்று பூரணியை சுட்டிக்காட்டி ஆத்திரமாக எதுவோ சொல்லவர,

 

“என்ன பேச்சு இது தீபா” என்று நீதிவாசன் அதட்டி நிறுத்தினான்.

 

“அண்ணா என்ன நடந்துதுன்னு முதல்ல கேளு. நீ உள்ள இருக்க, இவ பாட்டுக்கு வந்து கதவை பூட்டிட்டு புடவையை மாத்தறா? எதுக்கா இருக்கும்? நீ இவளைக் கண்டபடி பார்க்கணும்ன்னு தானே? அதைக்கொண்டு ஆதாயம் தேடத் தானே? என்ன ஒரு புத்தி? கேடுகெட்டவ…” என்று கண்டபடி பேச,

 

ஆத்திரம் எல்லையைக் கடந்த போதும், “என்ன தீபா பேசற? உனக்கு அவளை எப்ப இருந்து தெரியும்? அவ அப்படி செய்வாளா? ஏதாவது தெரியாம நடந்திருக்கும் விடு. அதோட துணியை மாத்தும்போது கதவை சாத்திக்கலாம்ன்னு நான் தான் லாக் பண்ண மறந்துட்டேன். அது அவளுக்கு எப்படித் தெரியும்? இதை பெருசு பண்ணாத விடு” என்று பொறுமையான குரலில் விளக்கம் கூறினான்.

நடுங்கியபடி அழுது கொண்டிருப்பவளின் குரல் அவனுக்கு உயிர்வரை வலியைத் தந்தது. இந்த பிரச்சனையை உடனடியாக முடித்து வைத்து அவளது நடுக்கத்தை அகற்றிவிடும் உத்வேகம் அவனிடம்!

 

அதற்குள் மேலும் கூட்டம் கூடிவிட்டது.

 

“என்னாச்சு பூரணி?” என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த தங்கையிடம் அவசரமாக கோபி நெருங்கினான்.

 

பேசும் நிலையில் அவள் இப்பொழுது இல்லை. தொண்டை அடைத்துக் கொண்டது. இத்தனை பேர் சுற்றி நிற்க என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்று தேம்பிக் கொண்டிருந்தாள். ‘நான் அப்படிப்பட்டவள் இல்லை’ என்று கத்திக் கதறிச் சொல்ல வேண்டும் போல அவளுக்கு இருந்தது.

 

தீபாவோ கோபியை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்தபடி, “இதுல இவளைப் பத்தி தெரிஞ்சுக்க என்ன இருக்குண்ணா. இவ எல்லாம் ஒழுங்கா இருந்திருந்தா இந்நேரம் இவளுக்கு தானே அத்தை கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாங்க. அதைவிட்டுட்டு கோபிக்கு முதல்ல பண்ணி வைக்கும்போதே அவ ஒழுங்கு தெரியலையா? அதுதான், இவளா யாரையும் தேடி பிடிக்கலாம்ன்னு யோசிச்சு உனக்கு வலை போட்டிருக்கா. இதுக்கு முன்ன எத்தனை பேருக்கு வலை போட்டாளோ” என்று இளக்காரமாகப் பேச, கோபி கோபத்தில் கையை முறுக்கினான்.

 

அவன் எதுவும் பேசி இருப்பானோ என்னவோ, அதற்குள் “தீபா…” என்ற அதட்டல் நீதியிடம்.

 

ஜோதிமணியும், “சின்ன புள்ளையைப் பார்த்து என்ன பேச்சு பேசற தீபா நீ? அவ இப்ப தான் படிச்சே முடிச்சிருக்கா. கோபி மறுபடியும் வெளிநாடு போகணுமேன்னு அவனுக்கு முதல்ல முடிச்சு வைக்கிறோம். நீ என்ன எங்க பொண்ணைப் பத்தி கண்டதையும் பேசிட்டு இருக்க. இது நல்லா இல்லை பார்த்துக்க” என்று சண்டையிட்டார்.

முத்துச்செல்வமும், “எங்க புள்ளையைப் பத்தி இன்னும் ஒரு வார்த்தை நீ பேசினாலும் நாங்க என்ன செய்வோம்ன்னே தெரியாது தீபா” என்று அதட்டினார்.

 

ரஞ்சிதா தங்கை அழுவதைத் தாங்க மாட்டாமல் தன் தோளோடு அணைத்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள். இத்தனை பேர் முன்பு தங்கையைத் தீபா தரக்குறைவாகப் பேசுவதில் அவளுக்கு ஆத்திரம் பொங்கியது. ஏற்கனவே அம்மாவும், அப்பாவும், நீதி மாமாவும் பேசிக்கொண்டிருப்பதால் இவள் அமைதி காத்தாள்.

 

பூரணி தேம்பியபடி, “அக்கா வீட்டுக்கு போலாமா க்கா” என்று கெஞ்சலாக கேட்டுக் கொண்டிருந்தாள். அவளால் இந்த இடத்தில் நிற்கவே முடியாது என்று தோன்றியது. இத்தனை பேரும் சுற்றி நிற்க தன் ஒழுக்கம் விமர்சிக்கப்படுவதை அவளால் தாளவே முடியவில்லை.

 

தீபாவோ யார் என்ன சொன்னாலும் அடங்காமல், “நீங்க சின்ன புள்ளைன்னு நினைக்கறீங்க. அவளுக்கு புருஷன் தேவைப்படுதே! ஒழுக்கம் கெட்டவ…” என்று ஆத்திரமாகச் சொன்னவள், கோபியைப் பார்த்து ஒரு எகத்தாள சிரிப்பை உதிர்த்தாள்.

 

சட்டென்று கோபிக்கு விளங்கி விட்டது. இவள் தன் மீதுள்ள கோபத்தை தன் தங்கையிடம் தீர்த்துக் கொள்கிறாள் என்று!

 

“என் தங்கச்சியைப் பத்தி எங்களுக்குத் தெரியும்… நீ பேசத் தேவையில்லை” என்று கோபி கத்தினான்.

 

நீதிவாசனோ, “போதும்…” என்று அந்த இடமே அதிரும்படி கத்தினான். அவன் தாடையின் இறுக்கமும், விழிகளின் சிவப்பும் அவனது கோபத்தைப் பறைசாற்றியது.

 

தான் இருந்த இடத்திலிருந்து வேகமாக தன் அத்தை, மாமாவை நோக்கி வந்தவன், “அத்தை நாளைக்கு இன்னொரு கல்யாண பந்தல் போட சொல்லுங்க. காலையில எனக்கும் உங்க பொண்ணுக்கும், கோபி கல்யாணம் முடிஞ்சதும் கல்யாணம். இப்பவே நிச்சய பத்திரிக்கை வாசிக்கிறது, தட்டு மாத்தறதுன்னு என்ன சடங்கு செய்யணுமோ செஞ்சுடுங்க. நாளைக்கு கல்யாணத்துக்கு, மாலையில் இருந்து தாலி வரை என்னென்ன பொருள் வேணுமோ எல்லாமே சொல்லுங்க. நான் இப்பவே ஏற்பாட்டை தொடங்கிடறேன்” என்று கடகடவென்று சொல்ல, சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்தனர் என்றால், தீபலட்சுமிக்கு பேச்சற்ற நிலை!

 

“அண்ணா என்ன பேசற நீ?” என்று வேகமாகத் தீபா நீதிவாசனின் அருகில் வர,

 

அவளின் முகத்திற்கு நேராகக் கையை காட்டியவன், “போதும் தீபா. ஏற்கனவே நீ நிறையத் தேவை இல்லாததை பேசிட்ட… இனி ஒரு வார்த்தை தப்பா பேசறதுக்கு முன்ன அவ உன் அண்ணின்னு நியாபகம் வெச்சுட்டு பேசு. எனக்கு அவ மேல, அவ ஒழுங்கு மேல முழு நம்பிக்கை இருக்கு. அதோட என்னை மயக்க அவளுக்கு அவசியம் இல்லைன்னு எனக்குத் தெரியும். அப்படி ஒரு கீழ்த்தரமான சிந்தனை அவளுக்கு எப்பவும் வராதுன்னும் எனக்குத் தெரியும்” என்று படபடவென பொரிந்து தள்ளினான்.

 

அன்னபூரணிக்கு மேலும் அழுகை பொங்கியது. இப்பொழுது திருமணம் நடந்தால் அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு உண்மையாகி விடாதா என்று கலங்கினாள்.

 

தீபாவோ அவசரமாக, “நீ சொன்னா சரியா இருக்கும்ண்ணா. நான் தான் ஆத்திரத்துல அறிவில்லாம பேசிட்டேன். அதுக்கெதுக்கு அவசர அவசரமா கல்யாணம்? வேணாம்ண்ணா இந்த பேச்சை இத்தோட விடு” என்று உடனடியாக அந்தர் பல்டி அடித்து பேச்சை மாற்றினாள்.

 

பின்னே அன்னபூரணி அவளுக்கு அண்ணியா? அந்த ஒன்றும் இல்லாத அனாதை! அவள் மனம் காந்தியது.

 

இப்பொழுது சுற்றி இருந்த கூட்டமே, ‘இவ என்ன பொண்ணு!’ என்பது போல முகம் சுளித்துப் பார்த்தது.

 

நீதிவாசனோ தீர்க்கமான குரலில், “எப்படியோ இந்த பேச்சு சபையில வந்துடுச்சு. இனி கல்யாணத்தை கையோட வைக்கிறது தான் சரி” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லியவன், தன் கைப்பேசியை இயக்கி தன்னிடம் விசுவாசமாக வேலை பார்க்கும் சிலரைத் திருமண வேலைகள் பார்ப்பதற்காக வரும்படி பணித்தான்.

 

யாருக்கும் பேசவோ, முடிவெடுக்கவோ நீதிவாசன் வாய்ப்பே வழங்கவில்லை. அவன் திருமணம் என்பது அனைவருக்கும் ஒரு அறிவிப்பே! அது பெண்ணின் பெற்றோர்கள் ஆகட்டும், அண்ணன் ஆகட்டும், ஏன் மணப்பெண்ணே ஆகட்டும்!

 

இதை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை!

 

அங்கிருந்த கூட்டமே அவன் செய்கையை, ஆளுமையை ‘ஆ…’ வென்று வேடிக்கை பார்த்தது.

 

யாருக்கும் எதற்கும் மேற்கொண்டு யோசிக்க நேரமில்லை. முன்பாவது மகனின் திருமணம் மட்டும். இப்பொழுது மகளுடையதும் சேர்த்தல்லவா! வேலைகள் இழுத்துக் கொண்டது.

 

அன்னபூரணியை தான் தேற்றவே முடியாமல் அழுது கரைந்தாள். ஆனால், ரஞ்சிதாவை தவிரக் கேட்பார் யாருமில்லை. ரஞ்சிதா செய்த சமாதானங்கள் எதுவும் இளையவளிடம் எடுபடவில்லை. கடைசியில் அழுது கரைந்து உறங்கியே விட்டாள்.

 

ரஞ்சிதாவிற்கு தான் பாவமாக இருந்தது. எப்படி நடந்திருக்க வேண்டிய திருமணம் இப்படி நடக்கிறதே என்று வெகுவாக கவலைப்பட்டாள்.

 

கோபி, லாவண்யா திருமணத்தோடு, நீதிவாசன், அன்னபூரணி திருமணமும் ஏற்பாடானது.

 

அவசர அவசரமாக நிச்சயத்திற்கான பொருட்கள் வாங்கி வந்து ஒரு எளிமையான நிச்சயதார்த்தம்! இருபக்க பெரியவர்களும் பாக்கு, வெற்றிலை மட்டும் மாற்றிக் கொண்டனர்.

 

ஆனால், திருமணம் அப்படி சாதாரணமாக நடக்கவில்லை. ஏற்பாடுகளைச் செய்ய ஒரு முழு இரவு இருந்ததே! நீதிவாசனின் விசுவாசிகள் அனைத்தையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். மணமேடை, ஐயர், புடவை, தாலி என அனைத்தையும் ஒற்றை இரவில் ஏற்பாடு செய்து அசத்தி விட்டனர்.

 

மறுநாள் அதிகாலை முகூர்த்தத்தில் முதலில் கோபி, லாவண்யாவின் திருமணம் நடக்க, அதற்கடுத்து நீதிவாசன், அன்னபூரணியின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

 

திருமணத்தை நடத்தியாக வேண்டும் என்ற தீவிரம், நீதிவாசனிடம்! அதை நடத்தியும் காட்டி விட்டான். பூரணிக்கு இதில் சம்மதம் இல்லை என்று நன்கறிந்திருந்த போதும் தன் முடிவில் உறுதியாக இருந்து திருமணத்தை முடித்துக் கொண்டான் அந்த சுயம்பு மனிதன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 21′(final)சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 21′(final)

வேப்பம்பூவின் தேன்துளி – 21   நேரத்திற்கு, சூழலுக்கு தக்கவாறு மாற சிலரால் மட்டுமே முடியும்! தீபலட்சுமி அனைத்தையும் நொடியில் தனக்குச் சாதகமாக மாற்றி அமைத்துக் கொள்ள… சூழலும் வேறு அவளை நல்லவளாகக் காட்டும்படி தானே அமைந்து விட்டது! இதற்கு என்ன விளக்கம்

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 18’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 18’

வேப்பம்பூவின் தேன்துளி – 18   முகூர்த்த நேரத்திற்கு முகம் கசங்க வந்தமர்ந்த அன்னபூரணியை, நீதிவாசன் சுட்டெரிக்கும் பார்வை பார்த்திருக்க அப்பொழுது அவளது தொண்டைக்குழியில் அமிழ்ந்து போனது தான் அவளது அழுகை. விழிகளும் அதற்கு மேலும் சுரப்பதற்கு மறந்து போனது.   ‘எதற்கிந்த திருமணம்?’

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 19’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 19’

வேப்பம்பூவின் தேன்துளி – 19 நீதிவாசன், அன்னபூரணியின் திருமண வரவேற்பு அனைத்து உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து சீரும் சிறப்புமாக நடந்து முடிந்திருந்தது.   பூரணி அந்த வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருந்திப் போனாள். மாமனார் மகேந்திரனும், வீட்டு வேலைகளைக் கவனிக்கக் காலையிலும்,