சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 16’

விநாயக பாத நமஸ்தே!!!

வேப்பம்பூவின் தேன்துளி – 16

 

கனவுகள் கூட தொந்தரவு செய்திடாத ஆழ்ந்த உறக்கம் ரஞ்சிதாவிற்கு. யாரோ வெகுநேரம் உலுக்கிக்கொண்டே இருப்பது போல பிரமை. அது உண்மையும் தானோ!?

 

“பாப்பா எழறதுக்குள்ள எழுந்திருச்சுக்கோ ரஞ்சி” எனக் கெஞ்சிக் கொஞ்சிக் கொண்டிருந்தது அசோகனே தான்!

 

வெகு சிரமத்திற்கிடையில் விழிகளைப் பிரித்தவளிடம், “என்ன பண்ணுது ரஞ்சி? ரொம்பவும் சிரமப்படுத்திட்டேனா? இவ்வளவு நேரமாகியும் எழலையே… பாப்பாவே எழற நேரம் ஆயிடுச்சு” என்று படபடப்பான குரலில், முகத்தில் பதற்றத்துடன் அசோகன் கேட்டிட, எதற்கிந்த ஆர்ப்பாட்டம் என்று அவனைக் குழப்பமாக ஏறிட்டாள்.

 

ரஞ்சிதாவின் குழப்பத்தைப் புரிந்து, “ரொம்ப நேரமா எழுப்பறேன். நீ அசையவே இல்லை… நேரம் ஆகிடுச்சு” என்று பாவமாக முறையிட்டான் கணவன். கொஞ்சம் பயந்து விட்டான் என்பது அவன் முகத்திலிருந்தே தெரிந்தது. கூடவே அவள் வழக்கமாக எழும் நேரம் வெகுவாக கடந்து விட்டதையும்!

 

ஒருவழியாக விடிந்து விட்டது விளங்க அடித்துப் பிடித்து எழுந்தவள், அவசரமாகக் குளித்து விட்டு வந்தாள். சற்றே தாமதமாய் எழுந்து கொண்டதால், அதற்கடுத்து நிற்கக்கூட நேரமில்லாமல் வேலைகள் பிடித்துக் கொள்ள இன்றும் கணவனிடம் முறைப்பு தான்!

 

கிடைத்த இடைவெளியில், மனைவியை ஒருவழியாக இழுத்து நிறுத்தி, “இன்றைக்கு என்ன?” என்று அதட்டலாக அசோகன் கேட்டான். விலகி நின்று வேடிக்கை பார்க்கும் நிலையை தான் நேற்றிரவே கடந்தாயிற்றே!

 

அதற்கும் அவளிடம் முறைப்பே!

 

“நீ சொல்லாம உன்னை விட மாட்டேன்” என்று அடம் செய்தான் அவன்.

 

“பாப்பா பக்கத்துல இருக்கும்போது…” என்று கணவனின் முந்தைய நாள் செய்கையைக் குறை படித்தாள் மனைவி.

 

ரஞ்சிதா சொல்ல வருவது புரிய, “அவ தூங்கினா எழ மாட்டா… சின்னக்குழந்தை தானே” என்று சமாதனக்குரலில் கணவன் பதிலுரைத்த போதும், அவளுக்கு அது போதவில்லை.

முகத்தைச் சுருக்கி தொங்க வைத்தபடி, “போங்க நீங்க” என்றாள் அவனது சமாதான பேச்சிலும் முகம் தெளியாமல்.

 

மெல்லிய சிரிப்புடன், மனைவியின் தாடையை வலக்கரத்தால் தாங்கி நிமிர்த்தி, “ம்ப்ச்… இங்க பாரு, அக்கா இங்க ஏன் வந்திருக்கா?” என்று அசோகன் கேட்டான்.

 

“உடம்பு சரியில்லையாம். ஓய்வெடுக்கணுமாம்”

 

“போன வாரம் தான இப்படி சொல்லிட்டு வந்தா”

 

“ஆமா…” இதென்ன புதுசா என்கிற தினுசில் ரஞ்சிதாவின் பதில் வந்தது. வேணி ஏதாவது நொண்டி சாக்கிட்டு வந்து இங்கு டேரா போடுவது வழமை தான் என்பது ரஞ்சிதா வந்த கொஞ்ச நாளிலேயே புரிந்திருந்தாள். இவளும் அனுசரணையான பெண் என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவரவர் பொறுப்பை உணரும்போது தன்போல இதுபோன்ற செய்கைகள் எல்லாம் நின்றுவிடும் என்று எண்ணினாள். குழந்தைகள் பள்ளி செல்ல தொடங்கி விட்டால் பின்பு வேணிக்குச் சீராட நேரம் இருக்காது என்பது அவளது கணிப்பு.

 

ரஞ்சிதாவின் பாவனையில், “மண்டு…” என்று மனைவியின் நெற்றியில் தட்டியவன், “அவ மாசமா இருக்கான்னு நினைக்கிறேன்” என்று தன் அனுமானத்தை அசோகன் கூறினான்.

 

“அப்படியா?” என்றவளின் முகத்தில், குடும்பத்தில் புது உறவை வரவேற்கும் மகிழ்ச்சி.

 

“ஹ்ம்ம்….” என்று நிறுத்தியவன் சிறு இடைவெளியின் பின்பு, “நம்ம கனி குட்டி எப்பவும் அவங்க அப்பா, அம்மா கூட தான் தூங்குவா” என்று கேலியாகச் சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

 

அவளுக்கு அவன் சொல்ல வருவது விளங்கவே இல்லை. புரியாமல் விழித்தவள், “ஏன் சம்பந்தம் இல்லாம பேசறீங்க” என்றாள் குழப்பத்துடன். கூடவே, “சரி என்னை விடுங்க. வேலை நிறைய இருக்கு” என்று அவனை விலக்க நினைத்தாள்.

 

அவளை விலக அனுமதிக்காமல், அவன் சொல்ல வந்ததற்குக் கேலி சிரிப்புடன் விளக்கம் தந்தான். அவளுக்கு அவன் சொல்ல வந்தது புரியவில்லை என்று நினைக்கையில் இன்னும் சிரிப்பு பொங்கியது.

 

“உனக்கு விளங்க வைக்கறதுக்குள்ள…” என்று சிரிப்பைக் கட்டுப்படுத்தியபடி போலியாக சலித்தவன், “ரெண்டாவது குழந்தைக்கு பிளான் பண்ணறவங்க, முதல் குழந்தையை தூங்கத் தான் வைப்பாங்களே தவிர, தனியா தூங்க வைக்க மாட்டாங்க. இதுக்கூட உனக்குப் புரியாதா?”என நெற்றி முட்டி கூற அவளுக்கு விஷயம் விளங்கச் சட்டென்று முகம் சிவந்து விட்டது.

என்னவெல்லாம் விளக்கம் தருகிறான் என்ற எண்ணத்தில் அவனை நன்கு முறைத்தவள், “விடுங்க… உங்களோட…” என்று அலுத்து, சிலுத்துக் கொண்டாலும் கணவன் மீது கொண்ட கோபம் அவளிடம் நீடிக்கவில்லை. அதன்பிறகு வேறு எந்த விஷயத்திற்கும் எழும் கோபங்களையும் அசோகன் நீடிக்க விட்டதில்லை.

 

அவளின் செல்ல கோபங்கள் அவர்கள் வாழ்வில் இன்றியமையாததாகி இனித்துக் கொண்டிருந்தது.

சலவை செய்த நிலவே… என்னை மன்னிப்பாயா…

 

*** மாதங்கள் விரைய, கோபி ஸ்வீடனிலிருந்து வரும் நாள் நெருங்கியது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து வருகிறான்.

 

இந்த இடைவெளியில் மோசமான உடல்நிலையில் இருந்த அசோகனின் தந்தை மாணிக்கம் இறந்திருந்தார். ஏற்கனவே நோயில் இருந்தவர் என்றபோதும் பேத்தியை பார்த்துவிட்டுப் போயிருக்கலாம் என்ற வருத்தமும், அங்கலாய்ப்பும் குடும்பத்தினருக்கு இருக்கத்தான் செய்தது.

 

ஆம், அசோகனுக்கும், ரஞ்சிதாவிற்கும் மகள் பிறந்திருந்தாள். குட்டி தேவதை அமுதினி கருவில் இருக்கும்போதே பெரியவர் தவறியிருந்தார்.

 

மாணிக்கம் தவறிய போதும், அமுதினி பிறந்தபோதும் கோபியால் வரமுடியாமல் போயிருக்க, ஒருவழியாகச் சின்னவள் பிறந்த சில மாதங்கள் கழித்து வரவிருக்கிறான்.

 

முத்துச்செல்வம், ஜோதிமணி தம்பதிகளுக்கு,  மகன் விடுமுறையில் வரும் சமயத்தில் அவனுக்கு வரன் பார்த்து முடித்து வைத்து விடலாம் என்றொரு யோசனை. மீண்டும் ஒரு நீண்ட விடுமுறை எப்பொழுது கிடைக்குமோ என்ற எண்ணத்தில்! அதற்குத்தக்க இரண்டு, மூன்று ஜாதகங்கள் பொருந்தி வந்திருந்தது. கோபி இங்கு வந்ததும், இதுகுறித்து அவனிடம் கலந்து பேசி அவன் விருப்பம்போல் மேற்கொண்டு செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தனர்.

 

ஒருவழியாக நீண்ட நெடிய அயல்நாட்டு வாசத்தின் பிறகு கோபி தாயகம் வந்திருந்தான். முன்பைவிட வெகு பொலிவாய், கம்பீரமாய் இருந்தவனை ஆசையாக ரசித்துப் பார்த்து வரவேற்றனர் குடும்பத்தினர். அனைவரின் கண்களையும், மனதையும் நிறைத்திருந்தான் அந்த இளைஞன்.

 

“அண்ணா…” என்று ஆர்ப்பரித்துப் பலத்த வரவேற்பு தந்தாள் பூரணி. அண்ணன் வந்ததும் குட்டி தேவதை அமுதினியின் அட்டகாசங்களை மடை திறந்த வெள்ளம் போலக் கொட்டி தீர்த்தாள்.

 

“ரஞ்சிக்கா மாதிரி முகம்… கண்ணு மட்டும் மாமா மாதிரி… நான் காலேஜ்ல இருந்து வந்ததும் என்னைப் பார்த்து கையை, காலை ஆட்டி சிரிப்பா தெரியுமா… குப்புறக் கூட விழுந்துட்டாண்ணா… வீடு முழுக்க நீந்தறா” என்று ஆசை ஆசையாகத் தான் பெறாத மகளின் செயல்களை விவரித்துக் கொண்டிருந்தாள்.

 

ஆசையாகவும், ஆர்வமாகவும் கேட்டுக்கொண்டிருந்த கோபி, பூரணி சொல்லி முடிக்கவும்… சிறு வயதில் அவள் செய்ததை எல்லாம் அடுக்கி அவளை வம்பு செய்தான்.

 

கோபி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்திருந்தபடியால், அவனுக்கு இழுத்துக்கட்டிச் செய்ய வேண்டிய (வெட்டி) வேலைகள் ஏராளம் இருந்தது. நண்பர்களை பார்க்க, முக்கிய உறவினர்களைப் பார்க்க, சொந்த ஊர் காற்றைச் சுவாசித்தபடி ஊரை சுற்ற, அம்மா கையால் வகை தொகையாய் உணவை உண்ண என்று ஒருவார காலம் வேகமாக கடந்தோடிவது.

 

அவன் ஓரளவு ஓய்வாக இருக்கவும், அவனது பெற்றோர் மெல்ல அவனிடம் திருமண பேச்சை எடுத்தனர். கோபி வெகுவாக அதிர்ந்து தான் போனான் இந்த பேச்சில்! இன்னும் சொல்லப்போனால் அவன் மனம் இதற்குத் தயாராய் இருக்கவில்லை என்பதைவிட இதைப்பற்றி யோசிக்கக் கூட இல்லை என்பதுதான் பொருந்தும்.

 

தன்னை நிராகரித்தவள் எங்கோ வளமாக வாழ்ந்து கொண்டிருக்க… திருமணம் என்னும் பேச்சு, ஆண்டுகள் கடந்தும் தனக்கு மட்டும் ஏன் இத்தனை அதிர்வைத் தருகிறது என்று அவனுக்குப் புரியவில்லை.

 

இன்னமுமே தன்னால் அந்த வேதனையிலிருந்து மீள முடியவில்லையா என்று யோசித்தால், தீபலட்சுமி இழைத்த துரோகத்தின் வடுவிலிருந்து மீள முடியவில்லை என்பது தான் விடையாக இருந்தது.

 

இதென்ன துரோகத்தையும் அனுபவித்து, வாழ்வின் அடுத்த கட்டத்திற்கும் செல்ல முடியாமல் என்று அவனுக்கே அவன்மீது வெறுப்பாக வந்தது.

 

“என்ன கோபி? நீ என்ன சொல்லற?” என்று அவனது யோசனையான முகத்தைப் பார்த்து ஜோதிமணி மீண்டுமொருமுறை கேட்டார்.

 

“அது இன்னும் பூரணிக்குச் செய்யலையே மா…” இன்னமும் தன் எண்ணங்களில், முடிவுகளில் தெளிவில்லாததால் மெலிதாக தடுமாறினான்.

 

“உனக்கு முடிச்சுட்டு அவளுக்கு பார்த்துக்கலாம் பா. இப்ப தான் கடைசி வருஷ எக்ஸாமே எழுதிட்டு இருக்கா… படிச்சு முடிக்கட்டும். அவளுக்கு ஆறு வயசு மூத்தவன் நீ, உனக்கு முடிச்ச கையோட அவளுக்கும் பார்த்துடலாம்” என்று ஜோதிமணி சொல்ல, பூரணி வேகமாக இடையிட்டாள்.

 

“அதெப்படி பெரியம்மா, அக்கா மட்டும் படிச்சு முடிச்சு ஒரு வருஷம் வீட்டுல இருந்தா. நான் மட்டும் உடனே கட்டிக்கணுமா முடியாது போங்க” என்றாள் இளையவள் சிணுங்கலாக.

கேட்டுக்கொண்டிருந்த ரஞ்சிதாவோ, ‘அடிப்பாவி நீதி மாமா இன்னும் எத்தனை வருஷம் தான் காத்திருக்கணும்…’ என்று வாயைப் பிளந்தாள்.

 

“சும்மா இரு புள்ள, அண்ணன் கல்யாணத்தை தான பேசறோம், முதல்ல நீ அதை அவன்கிட்ட கேளு. இல்லாட்டி உங்க அண்ணன் சொல்லற மாதிரி உனக்கு முடிச்சு வெச்சுடுவோம்” என்றாள் பெரியவள் மிரட்டலாக.

 

அதில் அரண்ட பூரணி, “அச்சச்சோ அண்ணா அவங்களுக்குத் தேவை ஒரு ஆடு தான். அது நீயாவே இருந்துக்க…” என்று கோபியை உலுக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதா சின்னவளின் செய்கையில் உரக்கச் சிரித்தாள்.

 

அதில் கடுப்பான இளையவள், “ஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்… என்ன ரஞ்சிக்கா சிரிப்பு? அங்க மாமா என் பொண்டாட்டியை அனுப்பி வையுங்க, பிள்ளையை அனுப்பி வையுங்கன்னு சோககீதம் வாசிக்கறாங்க. நீ இங்க சிரிச்சுட்டு சுத்தறது நல்லவா இருக்கு” என்று வம்பு செய்தாள்.

 

ரஞ்சிதாவோ மனதிற்குள், ‘என் புருஷனாச்சும் அஞ்சு மாசம் விட்டு வெச்சிருக்காரு. நீதி மாமா உன்னைப் பிரசவத்துக்குப் பிறந்த வீட்டுக்கு விடுவாரோ என்னவோ’ என்று மனதிற்குள் எண்ணிக்கொள்ள அதற்கும் அவளுக்குச் சிரிப்பு பொங்கியது.

 

அவள் எதையோ நினைத்துச் சிரிப்பதைக் கவனித்து, “ரஞ்சிக்கா… என்ன, என்ன நினைச்ச? சொல்லு… என்னைத் தானே நீ கிண்டல் செஞ்சு சிரிக்கிற?” என்று அருகே போய் இளையவள் அமர, அருகில் படுத்திருந்த அமுதினி பாப்பா சித்தியைப் பார்த்ததும் உற்சாகமாகி கையை, காலை ஆட்டி தூக்கச் சொல்லி சமிக்ஞை செய்தாள்.

 

இவர்கள் பேச்சு ஒருபுறம் போன போதும், கல்யாண பேச்சில் பெற்றவர்கள் உறுதியாக இருந்துவிட, கோபியும் ஆறு மாதங்கள் சென்னை அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதன்பிறகு, பிராஜெக்ட் லைவிற்கு மீண்டும் ஸ்வீடன் செல்ல வேண்டும். சென்றால் இரண்டு வருடங்கள் அதிக வேலையாக இருக்கும் அவ்வளவு எளிதில் இந்தியாவிற்கு வந்துவிட்டுச் செல்ல முடியாது என்பதெல்லாம் யோசித்து, “சரி பாருங்க” என்று சொல்லிவிட்டான்.

 

நிச்சயம் முழு மனதோடு இல்லை. ஆனால், வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்றாகவே வேண்டும் என்கிற கட்டாயம் அவனுக்கு!

 

கோபிக்கு வந்திருந்த ஜாதகங்களில், லாவண்யா என்ற பெண்ணின் ஜாதகத்தை அவனுக்காகப் பெரியவர்கள் தேர்ந்தெடுத்தனர். அவள் முத்துச்செல்வம் வகையில் தூரத்து உறவு!

அடுத்த சில தினங்களில், லாவண்யாவை பெண் பார்க்கும் வைபவத்திற்கு நெருங்கிய உறவினர்களோடு அனைவரும் புறப்பட்டனர்.

அரைகுறை மனதோடு பெண்பார்க்கும் வைபவத்திற்கு வந்திருந்த போதும், கோபியே ஆச்சரியப்படும் விதத்தில் லாவண்யாவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. காரண, காரியங்கள் இல்லாமல் ஒரு பிடித்தம் வருமே… அது போன்றதொரு பிடித்தம்!

 

அவள் விழிகளின் மிரட்சியும், எதைச் செய்யும் முன்பும் தாயையோ, தந்தையையோ தயங்கி தயங்கி ஏறிட்டுப் பார்க்கும் வெகுளி முகமும், தான் செய்வது சரிதானா என்று தன்னைத்தானே குழப்பிக் கொள்வதுமாக அவளுடைய மொத்த செய்கைகளும் கோபியை வசீகரித்தது.

 

ஜம்பமாக அமர்ந்து அவளை மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். யார் என்ன நினைப்பார்கள் என்ற தயக்கம் அவனிடம் சிறிதும் இல்லை!

 

ஆனால், கோபியின் இடைவிடாத பார்வையால் லாவண்யாவிற்கு தான் லஜ்ஜையாகிப் போனது… அவனது பார்வையின் தாக்கத்தில் அவள் மேலும் பதற்றமானாள். முன்பைவிட தடுமாறினாள். அது அவனுக்கு இன்னமும் வேடிக்கையாக, ரசனையாக இருந்தது.

 

பூரணியின் உதவியோடு லாவண்யாவின் கைப்பேசி எண்ணைக் கோபி பெற்றிருந்தான். அவளிடம் சில விஷயங்கள் குறித்துப் பேசியாக வேண்டுமே! அப்படிப் பேசாமல் இருப்பது சரியல்ல என்று அவனுக்குத் தோன்றியது. ஏற்கனவே அடிப்பட்டவன் ஆயிற்றே! மீண்டுமொரு ஏமாற்றத்தை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான சுதாரிப்பு அவனிடம்!

 

பெண்ணைப் பார்த்துவிட்டு வந்து இரண்டு நாளில் கோபி லாவண்யாவிற்கு அழைப்பு விடுக்க, எதிர்புறம் அவளுக்குச் சற்று பதற்றம். இன்னும் திருமணம் உறுதி செய்யாத நிலையில் பேசலாமா என்று தெரியவில்லை. வெகுவாக தயங்கினாள்.

 

அதைக் கவனிக்கும் மனநிலையில் இல்லாதவனோ நேரடியாக, “உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே” என்றான் மெல்லாமல், விழுங்காமல்.

 

தன் பயத்தை, பதற்றத்தை மறைத்து, “ஹ்ம்ம்” என்று மட்டும் சத்தம் எழுப்பினாள். என்ன விஷயமாக இருக்கும் என்று உள்ளுக்குள் ஒரு இயல்பான பதற்றம் இருக்கத்தான் செய்தது.

 

கோபியோ, “அது உன்னை நேரில் பார்த்து பேசறது சாத்தியமில்லைன்னு தோணுது. வீடியோ கால் ஓகேவா?” என்று கேட்டான்.

 

அவள் பதில் சொல்லத் தயங்கினாலும், அவளது முகபாவனையில் அவளின் எண்ணவோட்டத்தை தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணம் அவனுக்கு!

 

ஆனால், லாவண்யாவோ வேறுவிதமாகப் பதறினாள். “அது நான் நைட் ட்ரெஸ் போட்டிருக்கேனே…” என்று அவசரமாகச் சொன்னாள்.

 

அவள் சொன்ன விதத்தில் அவன் சட்டென்று சிரித்து விட்டான். ‘அதுனால என்ன? நான் தான…’ என்று வாய் வரை வந்த வார்த்தைகளைச் சிரமப்பட்டு உள்ளடக்கினான்.

 

சிடுவேஷன் சாங் வரலாம்… இவனுக்கோ சிடுவேஷன் டையலாக் பின்னணியில் ஒலித்தது.

 

“அதுக்குள்ளேயேவா இன்னும் நாளிருக்கு…” என்று வடிவேலு சரத்குமாரிடம் உச்சரிக்கும் வசனம் மனதிற்குள் ஒலிக்க, கோபியின் முகபாவம் நிச்சயம் இஞ்சி உண்ட குரங்கின் தோற்றம் தான்!

 

‘என்னது வீட்டுல எல்லாருக்கும் கப்பிள் சாங்… எனக்கு மட்டும் கப்பிள் டையலாக் ஆ… இதென்னடா கோபிக்கு வந்த சோதனை’ என்று நொந்துபோனான்.

 

‘இவரென்ன ஒன்னும் பேச மாட்டேங்கிறாரு…’ என்று யோசித்த லாவண்யா, “கண்டிப்பா வீடியோ கால் தான் பேசணுமா? நான் வேணா சுடிதார் போட்டுக்கவா?” என்று தயக்கமாகக் கேட்டாள்.

 

அவளுடைய இன்னொசென்ஸ் அவனை இழுத்துப்பிடித்தது. இனியும் இழுத்துப் பிடிக்கும் என்ற நம்பிக்கை அசைக்க முடியாமல் தோன்றி அவனுக்கு ஆச்சரியமூட்டியது. அதிசயிக்கத்தக்க விதமாக அவனை அவளால் மாற்ற முடிந்தது! நம்பவே முடியாத அதிசயம் தான்… ஆனால், இனிமையாகக் கோபியின் வாழ்வில் நடந்து கொண்டிருந்தது.

 

மென்சிரிப்புடன், “சரி மாத்திட்டு கூப்பிடு. வெயிட் பண்ணறேன்…” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

 

‘எதுக்கு சிரிப்பு? என்னைக் கிண்டல் செய்யறாரா என்ன?’ என்று போனைப் பார்த்து மலங்க மலங்க விழித்தவள், அவசரமாக உடைமாற்றி அவனுக்கு அழைப்பு விடுத்தாள். இவளையும் கோபப்படுத்தும் வல்லமை அவனுக்கிருக்கிறது என்று அறியாமல்!

 

சுடிதார் மாற்றுகிறேன் என்றவள், துப்பட்டா முதற்கொண்டு பக்காவாக மாற்றியிருக்க, அவனோ வெறும் உள்பணியனுடன் பந்தாவாக அமர்ந்திருந்தான். ஒரு வாடாத சிரிப்பு அவன் முகத்தில்… ‘சுடிதார் சரி துப்பட்டா எதற்கு?’ என்று கேலியாகக் கேள்வி கேட்டது அவன் பார்வை!

 

அது புரிய தன் பார்வையை தலைத்தவள், “சொல்லுங்க…” என்றாள்.

 

“உனக்கு என்னை பிடிச்சிருக்கா? உன் அம்மா, அப்பா எதுவும் கல்யாணத்துக்குக் கட்டாய படுத்தறாங்களா?” என்று கோபி கேட்டான்.

தன் அபிப்பிராயத்திற்கு முன்னுரிமை தருகிறான் என்பதில் உச்சி குளிர்ந்தது லாவண்யாவிற்கு. ஆனால், அவன் ‘உன்னைப் பிடித்திருக்கிறது’ என்று சொல்லும் முன்பு, இவளாக இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது.

 

‘என்னடா ரியாக்ஷன் இது?’ எனக் குழம்பியவன், “என்ன? உனக்குப் பிடிக்கலையோ?” என்று கேட்டான். இப்பொழுது அவனது ரியாக்ஷன் வரையறுக்க முடியாமல் இருந்தது. பின்னே உள்ளுக்குள் ஒரு அச்சம் எழுவதை அவன் மட்டும் தானே அறிவான்!

 

அவனது கேள்வியில் அவசரமாக, “நீங்க பிடிச்சிருக்கா இல்லையான்னு இன்னும் சொல்லவே இல்லையே!” என்று பாவமாகக் கேட்டாள்.

 

‘அந்த ரியாக்ஷனுக்கு இதுதான் அர்த்தமாக்கும்?’ என்று சிரிப்பு வந்துவிட்டது கோபிக்கு. “பிடிக்காம தான் போன் நம்பர் வாங்கியிருக்கேனா?” என்று ஆனந்தக்குரலில் கேட்டான்.

 

மெலிதாக அவளுக்குள் சிலிர்க்க, தைரியத்தைத் திரட்டி, “நாங்களும் சும்மாவா வீடியோ கால் பேசுவோம்” என்று சொல்லிவிட்டு கீழுதட்டை அழுந்த கடித்து பார்வையை வலப்புறம் திருப்பிக் கொண்டாள்.

‘டிசைன் டிசைனா வெட்கப்படறா டா!’ என்று எண்ணியபடி ரசனையான பார்வையால் அவளை அளவிட்டவன், பின் வெகு பொறுப்பாக, பொறுமையாக தன் வேலை, சம்பளம், குடும்பத்தில் தன் பொறுப்பு, கடமை, அவனது குடும்ப நிலை என்று ஒவ்வொன்றாக விளக்க… எல்லாமே பணக்கணக்கு மட்டும் என்று லாவண்யாவுக்கு தெளிவாகப் புரிந்தது.

அவனைப்பற்றிச் சொல்லாமல், அவனுக்கு பிடித்தமானதை பற்றிப் பேசாமல், அவன் வேலை, அவன் இருக்குமிடம் இதைப்பற்றியெல்லாம் எதுவும் பகிர்ந்து கொள்ளாமல் இதென்ன என்று தோன்ற, “இப்பவே ஏன் இத்தனை விவரம் சொல்லறீங்க?” என்று கேட்டு விட்டாள்.

 

அபஸ்வரமாக, “என் பினான்ஷியல் ஸ்டேட்டஸ் உனக்கு ஓகேவா?” என்று நேரடியாகக் கேட்டு விட்டான்.

 

அதிர்ந்து விழித்தவள், “புரியலை…” என்றாள். பினான்ஷியல் ஸ்டேட்டஸ் எப்பொழுதுமே ஒரே அளவில் இருக்காதே… ஏறக்குறைய தானே இருக்கும்! அதிலென்ன வந்தது? என்று விழித்தாள். அவனது மனக்kகாயங்கள் இவள் அறிய வாய்ப்பில்லையே!

 

கோபி எதையும் யோசிக்காமல், “நல்ல வசதியான மாப்பிள்ளை வேணும்ன்னு நினைச்சிருந்தா… நான் பெஸ்ட் சாய்ஸ் இல்லை” என்று பட்டென்று சொல்லிவிட, லாவண்யாவின் கோபம் அவளது முகபாவனையில் நன்றாகவே பிரதிபலித்தது.

 

அவளின் கோபம் அவனை என்னவோ செய்ய, “ஹே… நான்… ஜஸ்ட்… உன் விருப்பத்தை கன்பாஃர்ம் பண்ண…” என்று திணறித் தொடங்கியவனை, “கன்பாஃர்ம் பண்ணிட்டீங்க தானே” என்ற அவளின் வார்த்தைகள் இடை நிறுத்தியது.

 

கோபியோ, “ஸ்ஸ்ஸ்… இரு இரு நீ கோபப்படாத… கோபமா இருக்கப்ப ரொம்ப சுமாரா இருக்க. பார்க்கவே முடியலை…” என்று அவளைச் சீண்டிப் பேசி பேச்சைத் திசை திருப்ப முயலோ, அவளோ அதற்கெல்லாம் திசை திரும்பும் ரகமாக இல்லை.

 

கூடவே, அவனைப்போன்றே, இவள் வீட்டில் இவளுக்கு என்ன சீர் செய்வார்கள், இவளுக்கென்று என்னென்ன செய்முறைகள் வரும் என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போக, “ஏய்… ஏய்… போதும் போதும்… நான் உன்கிட்ட இதையெல்லாம் கேட்டேனா?” என்று கோபமாக இடை நிறுத்தினான் அவன்.

 

“பின்ன நான் மட்டும் கேட்டேனா? எதுக்கு சொன்னீங்க?” என்று அவளும் பதிலுக்கு முறைத்தாள்.

ஒரு ஆழ்ந்த நிசப்தம் இருவரிடத்திலும்!

 

“நீ ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைச்சேன்” என்று அவளோடு வார்த்தையாட முடியாமல் கோபி பாவமாகப் புலம்பினான். அவன் ஒன்று நினைக்க நடப்பது வேறாக இருந்து அவனைச் சோதித்தது.

 

“நான் அப்படின்னு சொன்னேனா? இல்லை என்னைப்பத்தி தெரிஞ்சுக்க தான் நீங்க எனக்கு கூப்பிட்டீங்களா? வெறும் பணக்கணக்கு மட்டும் தான பேசறீங்க” என்று கண்களை உருட்டி அவள் மிரட்டிய தினுசில் “நாமளா தான் வந்து மாட்டிட்டோமா” என்று வடிவேலு மீண்டும் வந்து மனதிற்குள் அழுகைக்குரலில் சொல்லிச்சென்றார்.

 

இது வேலைக்கே ஆகாது என்று புரிய, “சாரி…” என்று உடனடியாக மன்னிப்பு கோரியவன், “எனக்குப் பேசத் தெரியலை போல… சோ நீயே தொடங்கி வெச்சிடேன்” என்று மீண்டும் பாவமாகக் கேட்டான்.

 

இதற்கு மேலும் முடியாது என்பது போல அவளது கோபம் தளர்ந்து சிரிப்பு வந்தது. அதை வெளிக்காட்டாமல், “அதெல்லாம் இப்பவே பேசிக்கலாமான்னு தெரியலை. பெரியவங்க நம்ம கல்யாணத்தை உறுதி செஞ்சுடட்டும். அப்பறம் பேசிக்கலாம். இப்படி கதவைப் பூட்டி திருட்டுத்தனமா பேச எனக்கு சங்கடமா இருக்கு” என்று தன்னிலையை விளக்கினாள்.

 

அவளது நிலைமை புரிந்தாலும், “என்னது அவ்வளவுதானா?” என்று அதிர்ந்தான். முதல் பேச்சே இன்று தான் தொடங்கியிருக்கிறது. அதற்குள் போதும் என்று தடை போட்டால் அவனும் என்ன செய்வான்?

 

அவளோ அசராமல், “அவ்வளவே தான்… பை சொல்லுங்க…” என்றாள் அதட்டலாக. அந்த அதட்டலில் செல்லமும் வழிந்தோடியது பேரழகாக இருந்தது.

 

“என்னை மிரட்ட கூட செய்வியா? நீ வெட்கப்பட்டு சுத்தினது பார்த்து ஏமாந்துட்டேனே” எனக் கோபி புலம்ப, இதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாது என்பது போல அவள் உரக்கச் சிரித்தாள்.

 

புன்னகையோடே, “இனி ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது…” என்று செல்லமாகக் கேலி பேசினாள். யார் யாரிடம் மாட்டினார்களோ தெரியவில்லை. ஆனால், இருவரும் வசமாகக் காதலில் மாட்டியிருந்தனர் என்பது மட்டும் உறுதி!

அவனோ வெகு நிதானமாக, “உனக்குள்ள ஒழிஞ்சுப்பேன்” என்று இடது கண்ணைச் சிமிட்டி, உதட்டை குவித்து காதலாகப் பேச, இத்தனை நேரமும் எங்கோ ஓடி ஒளிந்திருந்த வெட்கம் மீண்டும் அதே வேகத்தில் ஓடி வந்து அவளை ஆரத்தழுவிக் கொண்டது.

பை கூடச் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்திருந்த லாவண்யாவின் முக வண்ணம் இளஞ்சிவப்பில் மிளிர்ந்தது. கல்யாணக்கலையோ?!?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 19’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 19’

வேப்பம்பூவின் தேன்துளி – 19 நீதிவாசன், அன்னபூரணியின் திருமண வரவேற்பு அனைத்து உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து சீரும் சிறப்புமாக நடந்து முடிந்திருந்தது.   பூரணி அந்த வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருந்திப் போனாள். மாமனார் மகேந்திரனும், வீட்டு வேலைகளைக் கவனிக்கக் காலையிலும்,

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 09சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 09

வேப்பம்பூவின் தேன்துளி – 9 தீபலட்சுமியின் திருமணம் முடிந்த பிறகு, அவள் தெளிவாக உணர்ந்து கொண்ட விஷயம், அன்பரசுவின் குடும்ப சொத்துக்கள் என்பது சொற்பமே! அவர்கள் கூட்டுக் குடும்பத்தினில் இருக்கிறார்கள் என்பதை முன்னமே தெரிந்து தான் இருந்தாள். ஆனால், சொத்துக்களும் சரிசமம்

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 21′(final)சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 21′(final)

வேப்பம்பூவின் தேன்துளி – 21   நேரத்திற்கு, சூழலுக்கு தக்கவாறு மாற சிலரால் மட்டுமே முடியும்! தீபலட்சுமி அனைத்தையும் நொடியில் தனக்குச் சாதகமாக மாற்றி அமைத்துக் கொள்ள… சூழலும் வேறு அவளை நல்லவளாகக் காட்டும்படி தானே அமைந்து விட்டது! இதற்கு என்ன விளக்கம்