Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 38

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 38

காலை உணவை அறைக்கே வரவழைத்து அருந்தினர் ஜிஷ்ணுவும் சரயுவும்.

“ரெண்டு இட்லி மட்டும் போதுமா? என்னடி இவ்வளவு கொஞ்சமா சாப்பிடுற… இந்த பூரியையும் சாப்பிட்டாத்தான் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போவேன்” ஜிஷ்ணு கண்டித்தான்.

“ப்ளாக்மெயில் பண்ணாதே… என்னால சாப்பிட முடியல… வேணும்னா அந்தப் பூரி செட்டை நீ சாப்பிடு. உன் தட்டுல இருக்குற பூரியை நான் எடுத்துக்குறேன்” அவனது எச்சில் தட்டிலிருந்து இயல்பாக பூரியை எடுத்து சாப்பிட்டவளைத் தடுக்கத் தோன்றாமல் பார்த்தான். அவள் காக்காய் கடி கடித்துத் தரும் மிட்டாயும், அவன் எச்சில் கையால் எடுத்து வைக்கும் உணவும் அவர்களுக்குள் சகஜம்தானே.

ஐந்தே முக்காலடி ஒடிசல் தேகத்தில் புதிதாக வாங்கிய பேபி பிங்க் ஷார்ட் டாப்ஸ் மற்றும் நேவி ப்ளூ பாண்ட், நேவி ப்ளூவில் பேபி பிங்க் பிரிண்ட் போட்ட துப்பட்டா அணிந்து, இடைவரை தொங்கிய அடர்த்தியான முடியினை இழுத்துப் பிடித்து சடை பின்னி, குட்டியாய் ஒரு கறுப்புப் பொட்டினை நெற்றியின் மத்தியில் ஒட்டிவிட்டு,

“கிளம்பலாமா விஷ்ணு?”

வினவியபடி கண்முன் வந்து நின்ற பேபி டாலைக் கண்டு மூச்சு விடக் கூட மறந்தான் ஜிஷ்ணு.

“மேக் அப் போடல” என்றவனிடம்,

“மேக் அப்பா… நானென்ன சினிமாலையா நடிக்கப் போறேன்” என்று முறைத்தாள்.

“போயிடாதே… அப்பறம் உலக அழகியெல்லாம் வீட்டுக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான்”

கல்லூரி செல்லும் வழியில் சரயுவுக்கு என்ன மேக் அப் பொருட்கள் வாங்கலாம் என்று இருவரும் ஆலோசிக்க ஆரம்பித்தனர்.

“நீ சாப்பிடுற சாப்பாடெல்லாம் தலைமுடிக்குத்தான் போகுது போலிருக்கு. எப்படித்தான் தினமும் தலை பின்னுறன்னு தெரியல. சோ, புது ஹேர்ஸ்டைல்ன்னு தலைவிரி கோலமா நிக்காம, பெரிய ரப்பர்பாண்ட் வாங்கி இழுத்துக் கட்டு.

புருவம் – வானவில் மாதிரி ஏற்கனவே வளைஞ்சிருக்கு. சோ ஒண்ணும் பண்ண வேண்டாம்.

லிப்ஸ்- ஏற்கனவே ரோஸ் கலர்லதானிருக்கு லிப்ஸ்டிக் தேவையில்லை. வேணும்னா லிப் க்ளாஸ் போட்டுக்கோ.

ம்ம்… கண்ணு நல்லா பெருசா, என்னையே முழுங்கிடுற மாதிரி இருக்கு, அதுல கண்மையை வேற போட்டுட்டு போன… காலேஜ்ல பசங்க வசியமை வச்ச மாதிரி உன்னையே சுத்துவானுங்க. பாவம் படிக்குற பசங்க மனசை கெடுக்கக் கூடாது. சோ உனக்கு ஐலைனர் வேண்டாம்”

கடைசியில் அழகுக்கே எதற்கு அழகுப் பொருட்கள் என்ற நாட்டாமை தீர்ப்பை சொன்னான் ஜிஷ்ணு.

“ப்ரெண்ட் எவளாவது சொன்னான்னு அழகு நிலையம் போயி உன்னை அலங்கோலப்படுத்திக்காதே. உனக்கு மேக் அப்பே தேவையில்லை… வெறும் பவுடர் மட்டும் போதும். சோ.. யார்ட்லி, குட்டிக்யுரா, பாண்ட்ஸ்ன்னு வித விதமா டால்கம் பவுடர் வாங்கித் தரேன்”

அவன் பேசுவதை கவனிக்காமல் காரில் தொங்கிக் கொண்டிருந்த பொம்மையை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள். ஜிஷ்ணு தோளில் ஒரு அடி போட்டவுடன் முறைத்துக் கொண்டே அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“கவனி சரயு, நான் ஊருக்குப் போனா அடுத்து எப்ப உன்னை வந்து பார்ப்பேன்னு எனக்கே தெரியாது. கிளாஸ் முடிஞ்சதும் விளையாடப் போறேன், வம்பு வளக்கப் போறேன்னு சுத்தாம ஹாஸ்டல் போயி சேரு”

அவள் கைகளைப் பிடித்துக் காட்டியவன், “சும்மாவே ஒல்லி, இந்த ஒரு வருஷமா கொலைப்பட்டினியவா கெடந்த… பாரு ஒடிஞ்சு விழுறா மாதிரி இருக்க… சாப்பாடு மட்டும் நல்லா சாப்பிட்டு கொஞ்சம் குண்டாகு. காம்ப்ளான், பூஸ்ட் எல்லாம் வாங்கித் தந்துட்டுப் போறேன். தினமும் ரெண்டு வேளை குடிக்கணும். உன் பேருல பேங்க் அக்கௌன்ட் ஒண்ணு ஆரம்பிக்கிறேன். அதை உன் பணமா நெனச்சு செலவு பண்ணு”

என்னதான் மெதுவாக சென்றாலும் கல்லூரி வந்தேவிட்டது. பதில் வராதிருக்கவும் அவளைத் திரும்பிப் பார்த்தவன், “பதிலையே காணோம்… நான் என்ன தெலுகுலையா பேசிட்டு இருக்கேன். உனக்குப் புரியுற மாதிரி அட்சர சுத்தமா தமிழ்ல தானே பேசுறேன். பதிலே சொல்ல மாட்டிங்கிற”

“பதில் தானே… இன்னும் ஏழு மணி நேரம் கழிச்சுத்தான் உன்னப் பாக்க முடியும்னு நெனச்சா வெறுப்பா இருக்கு. கிளாசுக்கு போயிட்டு வரேன் விஷ்ணு” அவன் முகத்தைத் திருப்பி, வினாடியில் அவன் மூக்கோடு தன் மூக்கினை உரசிவிட்டு, அவனது திகைப்பினைப் பார்த்துக் கன்னம் குழிய சிரித்து சென்றவளின் காலடியில், தான் முதல் நாள் எடுத்த முடிவுகள் சில்லு சில்லாய் சிதறியதைக் கண்டான்.

ன்று மாலை ஜிஷ்ணு அவளை அழைக்க வந்தபோது சீனியர் மாணவர்களின் ராகிங்கில் மாட்டியிருந்தாள் சரயு. லேட்டிரல் எண்டரி என்று சொல்லப்படும் டிப்ளமோவிலிருந்து இரண்டாவது வருடம் சேர்ந்திருக்கும் மாணவர்களை ராக் செய்தபடியிருந்தார்கள் ஒரு க்ரூப் மாணவர்கள். அவர்கள் கேள்விக்கான பதிலை அபிநயம் பிடித்த வண்ணமிருந்தாள். ஜிஷ்ணுவின் அருகிலே பேசியபடி நடந்தனர் இரண்டு மாணவர்கள். அவர்கள் பேச்சிலிருந்து சரயுவைப் பார்ப்பதற்கென்றே இருவரும் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டான் ஜிஷ்ணு.

“எலா உந்திரா ஆ அம்மாய்?”

“பேபி பிங்குலோ ஒக பார்பி கேர்ள்லு… சால அந்தம்கா உந்திரா… ராஜமுந்திரியா?” என்று பேசியபடி சரயுவை நோக்கி சென்றார்கள்.

“இக்கடரா பாபு” இருவரின் மேலும் கையைப் போட்டு அன்பாக அழைத்தான் ஜிஷ்ணு.

ஜிஷ்ணுவின் ஆறடி உயரத்திலும் அதற்கேற்றார் போலிருந்த தேக்கு மர உடம்பிலும் பிரெஞ்ச் பியர்ட்டிலும் அவனருகே அந்த மாணவர்கள் சுண்டெலியைப் போலத் தெரிந்தனர். அழைத்து அவர்களின் பூர்வீகத்தை அன்போடு விசாரித்தான். அவன் தனக்கு இரண்டு அடிமைகளை செட்அப் செய்வது தெரியாமல் அவர்களும் ஊர் பாசத்தில் உருகினார்கள்.

“சூடு பாபு… ஆ பார்பி கேர்ளு, நா பேபி டாலு. இந்த நிமிஷத்துலே இருந்து அவ உங்களுக்குத் தங்கச்சி. காலேஜ்ல யாருக்கும் தெரியாம அவளுக்கு கார்டியன் வேலை பாக்குறிங்க. அவளுக்கு ஏதாவது பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன்… முதல்ல உங்க முதுகுத் தோலைத்தான் உரிப்பேன்” ஜிஷ்ணு போட்ட போடில் ரேகிங் கும்பலிடமிருந்து சரயுவை விடுவித்துக் கொண்டுவந்து பத்திரமாக அவனிடம் சேர்ப்பித்தனர்.

“என்ன சரவெடி… அடி வாங்க முதுகை காமிச்சுட்டிருக்க… நீயில்ல ராகிங் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன்” ஆதங்கப்பட்டவனிடம்,

“நீ கஷ்டப்பட்டு சீட்டு வாங்கித் தந்திருக்க விஷ்ணு… உன் பேரைக் கெடுக்க வேண்டாம்னு பாக்குறேன்” என்றாள் பெரிய மனதோடு.

“ஹே அதுக்காகவெல்லாம் கவலைப்படாதேரா… நீ என்ன வேணும்னாலும் கலாட்டா பண்ணு. மிஞ்சி மிஞ்சி போனா டிசி கொடுப்பாங்க அவ்வளவுதானே… கொடுத்தா சரிதான் போடான்னு டாட்டா காமிச்சுட்டு வேற காலேஜ்ல சேர்த்துப்போம்”

சரயுவின் டான்சை நினைத்து நகைத்தவன், “அங்கென்ன சீனியர்ஸ் முன்னாடி டான்ஸ் ஆடிட்டு இருந்த?”

“அவனுங்க இங்கிலீஷ்ல ஒரு வரி சொல்லி பத்து தடவை கட கடன்னு வேகமா தப்பில்லாம சொல்லணும்னு சொன்னானுங்க. நான் முடியாதுன்னு கைல சைகை பண்ணேனா, எனக்குப் பேச வராதுன்னு நெனச்சுட்டானுங்க. அப்பறம் என்ன… சைன் லாங்குவேஜ்தான்”

“அதென்ன வரி”

“A big black bug…” அழகாக தலையைத் தட்டி யோசித்தாள்.

“A big black bug bit the big black bear, but the big black bear bit the big black bug back!” முடித்தான் ஜிஷ்ணு.

“ஐயோ விஷ்ணு அதேதான் எனக்கு பா பா ப்ளாக் ஷீப் தான் வாயில வருது. இதை எப்படி தப்பில்லாம சொல்லுறது? ஒரு வேள உன்ன மாதிரி இங்கிலீஷ்காரங்க ஸ்கூல்ல படிச்சிருந்தா ஈஸியா இருந்திருக்குமோ”

“இதுக்கு பேரு டன்க் ட்விஸ்டர். என்னை காலேஜ்ல சேர்த்தப்ப உங்க மதுரை பசங்க என்னை தமிழ்ல ‘கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது’ன்னு ஒரு நிமிஷத்துல இருவதுதரம் தப்பில்லாம சொல்ல சொன்னாங்க. எனக்கு ஒரு மாசமாச்சு”

இருவரும் பேசிக்கொண்டே வந்ததில் விடுதி வந்துவிட்டது.

அன்று ஹாஸ்டலில் இடம் கிடைக்கவில்லை. சில மாணவிகள் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து படிக்கச் செல்வதால் மறுநாள் சீட் காலியாகும் என்று சொன்னார்கள். சம்மதம் சொல்லிவிட்டு கடைக்கு அழைத்து சென்று அவளுக்கு வேண்டிய புத்தகங்களை, லாப் யூனிபார்ம் மற்றும் உபகரணங்களை வாங்கினார்கள்.

றைக்கே சாப்பாட்டை ஆர்டர் செய்தான் ஜிஷ்ணு. சரயு குளித்து உடை மாற்றி வரத் தனது அறைக்கு சென்றாள். அவள் இலகுவான ஒரு பருத்தி சுடிதாரை அணிந்து வரும்போது, அறைக்கதவு திறந்திருக்க, ஜிஷ்ணு யாரோ ஒரு தமிழ் நண்பனிடம் பால்கனியில் நின்று அட்டகாசமாய் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். டிவி சத்தத்திலும், பேச்சு சுவாரஸ்யத்திலும் அவள் வருவதை அவன் கவனிக்கவில்லை. ஆனால் அவன் பேசிய அனைத்தும் சரயுவின் காதில் விழ, தான் கேட்பது உண்மையா என்று புரியாமல் நின்றாள்.

“என்னை மாதிரி அனுபவஸ்தன் ஒருத்தனோட ப்ரீ அட்வைஸக் கேட்டுக்கோ.

கண்ணோடு கண்ணைக் கலந்தாலென்றால்

களங்கம் உள்ளவள் எச்சரிக்கை.

உடனே கையுடன் கை கோர்த்தாளா…

ஒழுக்கங்கெட்டவள் எச்சரிக்கை.

ஆடையை களைகையில் கூடுதல் பேசினால்

அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை.

கலவி முடிந்ததும் கிடந்து பேசினால்

காதலாய் மாறலாம் எச்சரிக்கை.

கவிதை, இலக்கியம் பேசினாளாயின்

காசை மதியாள் எச்சரிக்கை.

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா…

உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை.

காமம் எனப்படும் பண்டை செயலில்

காதல் கலவாது காத்துக் கொள்.

இன்னொரு அட்வைஸ் டீன்ஏஜ் பொண்ணுங்கன்னா மறந்துடு… அனுபவமும் இருக்காது. அப்பறம் நம்ம பேசின ஒவ்வொண்ணுத்தையும் தெய்வீகக் காதல்ன்னு நெனச்சுட்டு நம்ம உயிரை எடுப்பாளுங்க.

அப்பறம் எல்லாத்தையும் விட முக்கியம். பொம்பளைங்களை நம்பாதே. குழந்தை எதுவும் வந்திடாம நீயே பாதுகாப்பா இருந்துக்கோ. ஹா ஹா ஹா”

சொல்லிவிட்டு ஹாஸ்யம் சொன்னதைப் போலப் பெரிதாக ஜிஷ்ணு சிரிக்க, அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சரயு.

“பொண்ணுங்களைப் பத்தி எவ்வளவு கேவலமா பேசுறான்? இவனா என் விஷ்ணு… அவன் கண்ணோடு என் கண் எத்தனை தரம் கலந்திருக்கு. அப்ப நான் களங்கமுள்ளவள்னு சொல்ல வர்றானா? அவன் கையைக் கோக்காம நடந்ததில்லையே நான் ஒழுக்கம் கெட்டவளா?”

கையிலிருக்கும் கியூபினை உடைக்கிறார் போலத் திருவிக் கொண்டிருந்தாள் சரயு. அவளது அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தான் ஜிஷ்ணு. அவனது உடையே வித்யாசமாய் இருந்தது. பணியாளன் ஒருவன் உணவினை அவளது மேஜையின் மேல் வைத்தான்.

“சரயு நான் ஸ்விம்மிங் பூல் போறேன். வர லேட்டாகும். நீ காத்திருக்காம சாப்பிட்டுப் படுத்துத் தூங்கு” பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டான்.

ஜிஷ்ணுவின் சொல்படி இரண்டு சப்பாத்தியை உண்பதற்குள் சரயுவுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. ‘இதைக் குடிக்கலைன்னா விஷ்ணு திட்டுவான்’ என்றெண்ணி மறக்காமல் பாலை அருந்தினாள். அவளுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அவள் பார்த்த விஷ்ணு வேறு, இப்போது பார்க்கும் விஷ்ணு வேறு. என்ன சுத்தி என்னதான் நடக்குது என்றெண்ணி விழித்தாள்.

நிறைய பாடம் படிக்க வேண்டியதிருந்தது. ‘புஸ்தகப் பையை வேற ஜிஷ்ணு ரூமுல வச்சுட்டேனே’ என்று நினைத்தவள் ஜிஷ்ணு சொன்ன டங்க் டிவிஸ்டரை நினைவு படுத்தி எழுதினாள். பின்னர் அதை சொல்லிப்பார்த்தபடி காரிடாரில் நடை போட்டாள் அந்த நீளமான காரிடாரில் ஒரு கோடியிலிருந்து நீச்சல் குளம் நன்றாகத் தெரிந்தது. அதை நெருங்கும் சமயத்திலேயே பெண்களின் குரலும் அவர்களுக்கிடையே ஜிஷ்ணுவின் நகைப்பும் கேட்க, விரைந்து சென்று எட்டிப் பார்த்தாள். கோபியர்கள் புடை சூழ நிற்கும் கண்ணனைப் போல சுற்றிலும் நீச்சலுடை மங்கைகள் நிற்க, சிலர் மேலே வந்து உரச சுகமாய் அவர்களுடன் சிரித்து பேசி விளையாடிக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு. அவனது ஒரு கையிலிருக்கும் மதுக் கோப்பையிலிருந்து அவன் எச்சில் செய்த மதுவை அமிர்தமாக எண்ணிப் பருகினாள் ஒருவள். தான் குடித்த வெண்சுருட்டை ஜிஷ்ணுவுக்குத் தந்தாள் இன்னொருத்தி. அவள் தந்த எச்சில் தம்மை ரசித்துப் புகைத்தான் ஜிஷ்ணு. சில நிமிடங்களில் இரண்டு பெண்களின் இடையை வளைத்தபடியே நீச்சல் குளத்தில் இறங்கியவனைத் திகைப்போடு பார்த்தாள் சரயு. அந்த ஜலக்கிரீடையில் நடந்த கூத்துக்களைப் பார்த்து மனம் நொந்து அறைக்கு சென்றாள்.

நள்ளிரவு ஜிஷ்ணுவின் அறை திறக்கும் சத்தம் கேட்டது. மெதுவாக எழுந்து அவனது அறைக்கு சென்றவளை திறந்திருந்த கதவு வரவேற்றது. லைட் எதுவும் போடப்பட்டிருக்கவில்லை. ரூமைத் திறந்துட்டு எங்க போனான் என்றபடி உள்ளே நுழைந்தாள். சரயுவுக்கு மறுநாள் கிளாசுக்கு கணக்குப் பாடங்களைப் செய்ய வேண்டியிருந்தது. அவளது புத்தகங்கள் ஜிஷ்ணுவின் அறையில் வைத்துவிட்டதால் அதனை எடுக்கலாம் என்றெண்ணி வந்தாள்.

“ஏண்டி டபிள் சார்ஜ் வாங்குரேல்ல ரூமுக்கு வர மட்டும் எவ்வளவு நேரமா?” கோவமாய் கேட்டபடி,

அவளை சடாரென இழுத்த ஒரு கரம் அணைத்து ஆவேசமாய் இதழோடு இதழ் பதித்தது. கைகளோ ஆசையுடன் தழுவின. என்னமோ இன்றுதான் உனக்கு கடைசி சாப்பாடு என்று சொன்னாற்போல அவளை அள்ளி விழுங்க முயன்றன. ஜிஷ்ணுதான் அது என்று அவனது தொடுகையில் உணர்ந்த சரயு திகைத்துப் போனாள். பலம் அனைத்தையும் திரட்டி அவனைத் தள்ளி விட்டவள் பொறி கலங்கும்படி அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள். திகைத்து அறையின் லைட்டைப் போட்ட ஜிஷ்ணு, “சரயு… நீ எங்க இங்க?” என வினவ,

அவனைப் புழுவினைப் போலப் பார்த்து, “ச்சீ…” என அருவருத்தபடி ஓடினாள்.

வேகமாய் தனது அறைக்குள் ஓடியவள்,

‘ச்சே இவனுக்காகவா நான் காத்திருந்தேன்? இவனையா மனசு முழுசும் பொத்தி வச்சிருந்தேன்? இருட்டுல யாரைக் கட்டிப்பிடிக்கிறோம்னு உணர்வே இல்லாத இவனை நெனச்சா கிறுக்குப் பிடிச்சு அலைஞ்சேன்?’

ஜிஷ்ணுவின் மேலிருந்து அவள் மேல் படிந்த சகிக்க முடியாத மதுவின் நாற்றத்தாலும், மனதுக்கினியவனின் செயலால் விளைந்த அருவருப்பாலும் உமட்டல் ஏற்பட, சாப்பிட்ட அனைத்தையும் பாத்ரூமில் சென்று வாந்தியெடுத்தாள்.

வெளியே நின்ற ஜிஷ்ணுவுக்கு அவள் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. அவனது செயலை நினைத்து இன்னம் ஒரு முறை அருவருத்துப் போனவன் ‘மன்னிச்சுடு பங்காரம்’ என்று முணுமுணுத்தபடி அறைக்கு சென்றான்.

சற்று நேரத்தில் அழுத்தமாய் ஜிஷ்ணுவின் அறையை நெருங்கிய ஹை ஹீல்ஸ் ஷூவின் ஒலியும், ‘ஹாய் டார்லிங் வழக்கமா போற பார்ட்டி நடுவில புடிச்சுகிட்டான். அவன் கீழ வெயிட் பண்ணுறான். சீக்கிரமா என்னை அனுப்பிடுறியா?’ என்ற கொஞ்சல் குரலும் சரயுவின் எரியும் மனதுக்கு எண்ணை வார்த்தார்போலிருந்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 34தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 34

சரயுவைப் பெண் பார்க்கும் வைபவத்தன்று, செல்வத்தின் குடும்பத்துடன் நடந்த கைகலப்பில் சம்முவத்துக்கு கையில் அரிவாள் வெட்டு பரிசாகக் கிடைத்தது. சம்முவத்தை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, லச்சுமி எங்கு சென்றாலும் சரயுவையும் கையோடு அழைத்துச் சென்றாள். சரயுவுக்கு திருமணமானாலும் செல்வம் விட்டு வைப்பானா என்ற

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 12தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 12

லக்ஷ்மியின் கல்யாணம் முடிந்ததும் சரஸ்வதிக்கும் நல்ல வரன் வர அதை முடித்துவிட நெல்லையப்பன் விரும்பி ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். முதலில் மாப்பிள்ளைகளை நொள்ளை நொட்டை சொல்லிய சரசு பின் ஒரு நல்ல நாளில் நெல்லையப்பனின் கடையில் வேலை செய்த செல்வத்தை ஓடிப்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 1தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 1

அத்தியாயம் – 1 மியூனிக், ஜெர்மனி ‘குக்கூ குக்கூ’ என்று கடிகாரத்தின் உள்ளேயிருந்து எட்டிப் பார்த்து கத்திய குக்கூப்பறவையிடம் விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள் சரயு. “என்னடா நேரமாச்சுன்னு சொல்லுறியா? இதோ கிளம்பிட்டேன். நேத்து அப்பா என்னை விட்டு சாமிட்ட போன நாள்.