Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29

ரயு நெல்லையப்பனின் கட்டிலுக்குக் கீழேயிருந்த பெட்பானை எடுத்து வெளியே சென்றாள். தனது தகப்பனுக்கே தாயான தோழியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சேர்மக்கனி. தந்தை படுக்கையில் விழுந்ததிலிருந்து சரயுதான் எல்லா வேலையும். கையை சுட்டுக் காலை சுட்டு சமைக்கக் கற்றுக் கொண்டாள். நோயாளித் தகப்பனை கவனித்துக் கொண்டு கல்லூரிக்கும் படிக்க வந்தாள். தந்தைக்கு வைக்கும் கஞ்சியில் சிறிது உப்புப் போட்டு அருந்திவிட்டு வேலை செய்யும் தோழிக்கு முடிந்த போது வந்து உதவுவாள் சேர்மக்கனி. மனோரமா டீச்சர் விருப்ப ஓய்வு பெற்று தனது மகனுடன் டெல்லிக்கு சென்றது சரயுவுக்கு கொஞ்சம் வருத்தம்தான். இருந்தாலும் தனிமையை கல்லூரி வாழ்க்கையிலும், அப்பாவை கவனிப்பதிலும் மூழ்கடித்துக் கொண்டாள்.

பரிட்சை முடிவுகள் வந்துவிட்டது. மறுநாள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிட்டு, மதுரையிலிருக்கும் கம்பனி ஒன்றுக்கு நேர்முகத்தேர்வு நெல்லையில் நடந்தது. அதற்குப் போகலாம் என முடிவு செய்தார்கள்.

‘நம்மதான் வேலைக்குப் போகணும்னு தலையெழுத்து… சரயுவை அப்படி உள்ளங்கைல வச்சுத் தாங்கின விஷ்ணு என்ன ஆனான், எங்க போனான்?’ யோசனையில் புருவங்கள் முடிச்சிட சமையலறையில் தகப்பனுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த சரயுவிடம் சென்றாள்.

“அப்பாவுக்கு உடம்பு தொடச்சு விட்டுட்டுக் கஞ்சி கொடுத்துட்டு வந்துடுறேன். போயிடாதடி… காலேஜ் முடிஞ்சதும் உங்க யாரையும் பார்க்காம பைத்தியம் புடிச்சது மாதிரியிருக்கு”

சரயு வரும்வரை பாட்டிலில் வைத்திருந்த பொரிகடலையை எடுத்துக் கொறித்தாள். பின்னர் தனக்கும் சரயுவுக்கும் சூடாக டீ ஒன்றைப் போட்டு கிளாசில் ஊற்றித் தந்தாள். கைவேலை செய்த நிமிடங்கள் யோசித்த சேர்மக்கனிக்கு விஷ்ணுவின் மேல் நம்பிக்கை முழுவதுமாய் விட்டுப் போயிற்று. ‘இவ அப்பா இப்பவோ அப்பவோன்னு இழுத்துகிட்டுக் கெடக்காரு… இவன் ஒழுங்கானவனா இருந்திருந்தா இந்த நேரத்துக்கு சரயுவுக்குத் தாலியக் கட்டிக் கையோடக் கூட்டிகிட்டுப் போயிருக்கனும். பணக்கார பயலுவ… பொண்ணுங்க மனசுல விளையாடுறதே இவனுங்களுக்கு வேலையாப் போயிடுச்சு…’

தான் கண்டறிந்த உண்மையை சரயுவுக்கு உணர்த்த முடிவு செய்தாள்.

“சரயு மெட்ராஸ்ல பாத்தோமே அந்த விஷ்ணுவோட வீடு தெரியுமா?”

“தெரியாது”

“அம்மா அப்பா”

“ம்ஹும்”

“என்ன வேலை பாக்குறார்?”

“தெரியல கனி… ஆனா பெரிய பணக்காரர்ன்னு நினைக்கிறேன். என்ஜினியர்… கம்ப்யூட்டர் சயின்ஸ்… அமெரிக்காவுக்கெல்லாம் போய் படிச்சுட்டு வந்திருக்கார்”

“இத்தனை மாசமாச்சு… இன்னமுமா அவங்கம்மாவுக்கு உடம்பு சுகமில்லாம இருக்கு?”

“பெரிய வியாதி போலிருக்குடி… வைத்தியம் பாக்க அமெரிக்கா கூட்டிட்டு போயிருக்காங்களாம்”

“நம்ம ஊருக்கு வந்ததுக்கப்பறம் அவர்கிட்ட பேசினியா?”

“பேசினேனே… பத்திரமா வந்துட்டேன்னு தகவல் சொல்லிட்டேன்”

“அது சரி… நம்ம பத்திரமா வந்து, பரிச்சை எல்லாம் எழுதி மொத்ததுல படிச்சே முடிச்சுட்டோம்… இன்னமுமா அவர் அமெரிக்கா…லேருந்து வரல”

தனது தோழியைப் பரிதாபமாகப் பார்த்தாள் சரயு.

“இது சென்னைல நாம இருந்தப்ப என்கிட்டயும் ரத்தினசாமிகிட்டயும் விஷ்ணு கொடுத்த நம்பர். அப்ப நாங்க போன் பண்ணி பேசினோம். உங்க வீட்டுல போனை நிறுத்திட்டிங்கன்னு தெரியும். அதனால நான் ரத்தினசாமியோட போனைக் கடன் வாங்கிட்டு வந்திருக்கேன். இதுலேருந்து விஷ்ணுவுக்கு ட்ரை பண்ணலாம்” என்று முயற்சி செய்தார்கள். அந்த எண் உபயோகத்தில் இல்லை என்ற செய்தியில் சற்று கலங்கிப் போனாள் சரயு.

“இந்த நம்பர்லதான் நான் பேசினேன்டி” நம்ப முடியாமல் தலையை உலுக்கிக் கொண்டாள்.

“ஆறு மாசத்துக்கு மேல உபயோகிக்கலைன்னா நம்பர் இருக்காதுன்னு எங்கண்ணன் சொல்லிருக்கு” கனி சொன்னாள்.

“எனக்கு அவர் வேற செல் நம்பர் தந்திருக்கார்” அவசரமாக சொன்னாள் சரயு.

“எப்ப தந்தாரு?”

“நான் எட்டாவது படிக்குறப்ப” சொல்லும்போதே சரயுவின் குரலில் சுருதி இறங்கியது. அப்பறம் ஜிஷ்ணு அமெரிக்கா போனானே. மெட்ராஸ்ல பாத்தப்பக் கூட இந்த நம்பர மாத்திட்டேன்னு சொன்னானே? நான் புது நம்பர்ல தான பேசினேன் கேள்விகள் தட்டாம்பூச்சியாய் மண்டையை சுற்றியது.

“உன் ஆசையை ஏன் கெடுப்பானேன். எட்டா…வது படிக்குறப்ப அவரு தந்த நம்பர சொல்லு. அதுக்கும் முயற்சி செய்து பாத்துடலாம்”

“இல்ல வேணாம்” அவசரமாக மறுத்தாள் சரயு.

“ஏண்டி பயம்மாருக்கா?”

“பயமில்லடி… சந்தேகம்னு ஒண்ணு இருந்தாத்தானே பரிட்சை செய்யத் தோணும்… விஷ்ணு மேல எனக்கு சந்தேகமே இல்லை”

“சொல்றேன்னு தப்பா நெனக்காத சரயு… ஆள் யாருன்னு தெரியாது. அட்ரஸ் தெரியாது… சின்ன வயசில ஊர்ல ஒரு தடவை பார்த்திருக்க. மெட்ராஸ்ல சில நாள் பார்த்திருக்க. இதை வச்சு அவர் மேல ஆசய வளத்துக்கிடாதே” தோழியிடம் தன் மனதில் பட்டதைச் சொல்லிச் சென்றாள்.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போல, அமைதியாக இருந்த மனதில் தோழி கல்லெறிந்துச் சென்றது சற்று யோசனை செய்யத் தூண்டியது சரயுவுக்கு.

‘கனி சொல்லுறது நிஜமா… விஷ்ணு ஏன் அவன் வீட்டு விவரத்தைக் கூட சொல்லல. அவனுக்குக் கூடப் பொறந்தது எத்தனை பேருன்னு கூட எனக்குத் தெரியாதே… அங்கிருந்த எல்லா நாளும் கார்ல கூட்டிட்டு சுத்தினானே தவிர வீட்டுக்கு ஒரு நாள் கூடக் கூட்டிட்டு போகலையே அது ஏன்?’ இப்படி ஏகப்பட்ட ஏன்கள் அவள் மனதில்.

‘விஷ்ணுவால் என்னை ஏமாத்த முடியுமா?’ நினைக்கக் கூடப் பிடிக்காமல் அமர்ந்திருந்தாள் சரயு.

கால்வலியைக் கண்டதும் கண்கலங்கி நின்றவன்,

அவளைக் காயப்படுத்திய ஒரே காரணத்துக்காக பூஜாவை அடித்துக் காலொடியச் செய்தவன்,

அவளிடம் தப்பாக நடக்க முயன்றவனைக் கொல்லும் அளவுக்குப் போனவன்,

சாப்பாட்டுத் தட்டுடன் காருக்கு சென்றவன்,

குட் டச், பேட் டச் சொல்லித்தந்தவன்,

முதல் முத்தத்தினால் பெண்ணாக உணரச் செய்தவன்,

‘நாம ரெண்டு பேரும் எங்கயாவது ஓடிப் போயிடலாமா?’ என்று காதில் ஒலித்த விஷ்ணுவின் ஏக்கக் குரல்…

அனைத்தும் ரீவைன்ட் செய்தாற்போல் அவள் மனதில் வந்து சென்றது.

‘இந்த கனிக்கு என் விஷ்ணுவப் பத்தி என்ன தெரியும். ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தா ரெண்டாகுறது பாடக்கணக்கு. ஆண் ஒண்ணும் பெண் ஒண்ணும் சேர்ந்தா புதுசா ஒண்ணுன்னு சொல்லுறது குடும்பக்கணக்கு. ஆண் மனசும் பொண்ணு மனசும் சேர்ந்து ஒரே மனசாகுறது காதல்கணக்கு. இந்தக் கணக்கு எல்லாமே சரிதான். அவ விஷ்ணுவை தகவலை வச்சு எடை போடுறா. நான் என் மனசால எடை போடுறேன். எனக்குத் தெரியும். அவன் வருவான். எங்களுக்காக மூங்கில் குடிசையும், நீந்துறதுக்காக ஆறும், அனுபவிக்கிறதுக்காக வாழ்க்கையும் காத்திருக்கு’

மனம் தெளிந்தவுடன், குறுக்கு சாய்த்துப் படுத்திருந்தவள் எழுந்து வாரியலை எடுத்து வீட்டைப் பெருக்கினாள். குப்பையை வாரிப் பொறத்தால கொட்டி வந்தாள். பின் நன்றாகத் தேய்த்து முகம் கழுவினாள். தேங்காய் எண்ணை வைத்துப் படியத் தலை சீவினாள். பூ வைத்துக் கொண்டாள். லக்ஷ்மி அக்கா வைத்துவிட்டுப் போன பேர் அண்ட் லவ்லி கிரீமை முகத்தில் பூசி அதன் மேல் கோகுல் சாண்டல் பவுடரை ஒற்றிக் கொண்டு கையளவுக் கண்ணாடியில் பார்த்தாள். கண்மை டப்பியைத் தேடி எடுத்து முதன் முதலாகக் கண்ணில் எழுதிப் பார்த்தாள். பழக்கமில்லாததால் கண் முழுதும் மை ஈஷிக் கொண்டது. இருந்தாலும் இப்ப பொண்ணு மாதிரி இருப்பதாக மனதில் பட்டது.

‘விஷ்ணு எனக்குக் கண்மை கூட வைக்கத் தெரியல பாரேன். உன்னை மறுபடியும் பாக்குறப்ப நான் கொஞ்சமாவது பொம்பளப் புள்ளையா மாறியிருக்கணும்’ கண்ணாடி முன் நின்று சிணுங்கினாள்.

அட உன்மேல் கொண்டக் கிறுக்கு

என் உசுருக்குள்ள இருக்கு

நீ வருவாய் என்னும் நெனைப்பில்

என் வாழ்க்கைத் தொத்திக் கிடக்கு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5

மதியம் அனைவரும் உணவு உண்டுக்  கொண்டிருந்தனர். குடும்பத்தினர் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கூடத்தில் இருந்தனர். தலை வாழை இலையில் உணவு பரிமாறி  இருக்க, அரவிந்த், முதல் பெண் சுதாவின் கணவன் நாதன், இரண்டாவது மகள் சங்கீதாவின் கணவன் கதிர், புதிதாக

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 38தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 38

காலை உணவை அறைக்கே வரவழைத்து அருந்தினர் ஜிஷ்ணுவும் சரயுவும். “ரெண்டு இட்லி மட்டும் போதுமா? என்னடி இவ்வளவு கொஞ்சமா சாப்பிடுற… இந்த பூரியையும் சாப்பிட்டாத்தான் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போவேன்” ஜிஷ்ணு கண்டித்தான். “ப்ளாக்மெயில் பண்ணாதே… என்னால சாப்பிட முடியல… வேணும்னா அந்தப்