Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 27

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 27

சில மாதங்களில் ஜிஷ்ணு அடைந்த உயரம் பிரமிப்பு தருவது. வங்கிக் கடனை மட்டும் நம்பி வியாபாரத்தை விரிவு படுத்தினான்.

“ஜிஷ்ணு, பேசாம உன் மாமனார் ஆரம்பிச்சுத் தர கம்ப்யூட்டர் கம்பனில போய் தினமும் உட்கார்ந்துட்டு வா. மக்கள் பர்கர், பீட்சான்னு சாப்பிடுற இந்தக் காலத்துல ஊறுகாய் கம்பனின்னு சொல்லவே கொஞ்சம் மட்டமா தெரியல. அதாவது பரவால்ல, ஏகப்பட்ட கடன் வாங்கி அகலக்கால் வைக்கிற… புதை குழில பணத்தைப் போடுற, எல்லாம் மூழ்கப் போகுது. அப்பறம் நாணா பணம் தாங்கன்னு வந்து நின்னா ஒரு பைசா தரமாட்டேன்” என்று எச்சரித்தார் சலபதி.

“பயப்படாதிங்க கேட்க மாட்டேன்” என்று முகம் பார்க்காமல் சொல்லிச் சென்றவனை இமைக்காமல் பார்த்தார்.

ஆரம்பத்தில் பயப்படுத்திய சலபதியே சில மாதங்களில் அவனது உயரத்தைக் கண்டு பெருமிதம் கொண்டார்.

ஜிஷ்ணு கடைக்குட்டி என்பதால் செல்லம் அதிகம். சலபதியின் அப்பாவைப் போலவே உயரம், கம்பீரம், ஒவ்வொரு செயலிலும் ஒரு அழகு என்று சிறுவயதிலேயே அனைவரையும் கொள்ளை கொண்டவன். அம்மா நாணா மேல் பாசம் அதிகம். அவர்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டான். அதனாலேயே துணிந்து ஜமுனாவுடன் திருமணம் செய்து வைத்தனர். இப்போது திருமணத்துக்குப் பிறகு ஜிஷ்ணுவிடம் ஏதோ ஒரு ஒதுக்கம். யாரிடமும் தகவல் சொல்வதில்லை. தானே யோசித்து முடிவெடுக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாய் அவன் விலகுவது தெரிந்தது.

“பார்க்கலாம் இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு” சிகிச்சை முடிந்து, உடல் தேறி ஜம்மென்று ரெண்டு சுற்று எடை போட்டிருந்த மனைவியிடம் சொல்லிச் சிரித்தார்.

அமெரிக்கா சென்றதும் ஜிஷ்ணு முதலில் மாமனார் வாங்கித் தந்த வீட்டை மறுத்துவிட்டு, ஒரு அபார்ட்மென்ட் ஒன்றுக்குக் குடி போனான். முதலிலேயே ஜமுனாவிடம் தெளிவாகச் சொல்லிவிட்டான்.

“ஜமுனா, நான் இப்பத்தான் பிசினஸ் பண்ண ஆரம்பிச்சுருக்கேன். என் வசதிக்கு இந்த வீடுதான் முடியும். உங்க வீட்ல வீட்டோட மாப்பிள்ளையா இருக்க எனக்குப் பிடிக்கல. உங்கப்பா தர்ற பணமும் எனக்கு வேண்டாம்”

“நான் எங்க வீட்டுக்குப் போகலாமா?”

“நம்ம ரெண்டு பேரும் தாராளமா போவோம். ஆனா என் வீட்லதான் நான் தங்குவேன். நீ உங்க அம்மா அப்பா வீட்டுல தாராளமா தங்கிட்டு வா. நான் தடுக்க மாட்டேன். ஆனா என்னை கம்பெல் பண்ணாதே. இன்னும் பதினோரு மாசம்தானே நாம சேர்ந்து இருக்கப் போறது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றான்.

தன் பின் ஒரு மாதத்தில் ஜமுனா முன் வந்து நின்றான்.

“ஜமுனா நான் என் வியாபார விஷயமா கொஞ்ச நாள் ஊர்ல இருக்க வேண்டியிருக்கு… தாரணிக்கோட்டைலதான் தங்குவேன்”

“உன் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு ஜிஷ்ணு… இந்த ஒரு வருஷமும் நீ நிஜம்மாவே எனக்கு மட்டும்தான் கணவனா இருப்ப அப்படின்னுறதுல எனக்கு சந்தேகமே இல்ல. போயிட்டு வா”

“இல்ல… பேங்க் லோன் கிடைச்சிருக்கு. மெஷின்ஸ் வாங்கி, பேக்டரில செட்அப் பண்ணுற வேலை இருக்கு. நான் வர ஒரு மாசம் ஆனாலும் ஆகும்… நீ இந்த ஒரு மாசத்தை கணக்குல வச்சுட்டு டைவேர்சையும் ஒரு மாசம் தள்ளிப் போடுவியா”

சின்னப் பிள்ளையைப் போல் கேட்டவனைப் பார்த்து ஜமுனா விழுந்து விழுந்து சிரித்தாள்.

“ஜிஷ்ணு, ஜிஷ்ணு… யூ ஆர் சோ ஸ்வீட் டார்லிங்… தள்ளிப் போட மாட்டேன். ஒரு மாசம் என்ன, ரெண்டு மூணு மாசம் கூட என் தொல்லையில்லாம இருந்துட்டு வா…” அவன் தலைமுடியைக் கலைத்து இதழ்களில் முத்தமிட்டாள்.

“மூணு மாசம் உனக்கு லீவ் தந்திருக்கேன்ல… பதிலுக்கு எனக்கு ஒரே ஒரு கிஸ் தரமாட்டியா?” என்று கேட்டவளுக்கு ஜீவனில்லாத இதழ் ஒற்றல் ஒன்று கிடைத்தது.

அவனது மூன்று மாத ட்ரிப் வேலைகள் அதிகமானதால் ஐந்து மாதமானது. நடுவே அவன் லாஸ் ஏஞ்செல்ஸ் சென்றபோது ஜமுனா ப்ளாரிடா சென்றிருந்தாள். அதனால் அவளைப் பார்க்க முடியவில்லை. இருந்தும் தவறாமல் தினமும் ஒரு முறை பேசிவிடுவான். இல்லை மெயில் செய்துவிடுவான். பிறந்தநாளுக்கு ஜமுனாவுக்கு விருப்பமானதை வாங்கிக் கொள்ளச் சொல்லி ஒரு கணிசமான தொகையைத் தந்தான். ஒரு வருடமும் அவனுக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க வேண்டும் என்று தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்தான்.

தலையில் விழுந்த இடி போல, ஒரு நாள் அவளுக்கு வளைகாப்பு என்ற தகவல் வந்ததும் கலங்கிப் போனான்.

புயலாய்க் கிளம்பி சென்று அவள்முன் நின்றவன், “நம்ம முன்னாடியே வேண்டாம்னு தீர்மானம் செய்திருந்தோம் ஜமுனா…” என்றான் ஏமாற்றப் பட்ட ஆதங்கத்துடன்.

“எப்படியோ மிஸ் ஆயிடுச்சு ஜிஷ்ணு” கவலைப்படாதே இதுக்கும் நம்ம முடிவுக்கும் ஒரு சம்மந்தமுமில்லை என்றாள் காம்பாக்ட்டை ஒற்றியபடி.

“எப்படி மிஸ்ஸாகும் ஜமுனா? நீ ஒரு டாக்டர் வேற… என்னை ஏமாத்திட்டியே” என்றான் துக்கக் குரலில்.

“சாரி ஜிஷ்ணு… உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நிரந்தரமா என்கிட்டயே பிடிச்சு வச்சுக்க வேற வழி தெரியல” முணுமுணுத்தாள் ஜமுனா.

கண்களை மூடியபடி அப்படியே நாற்காலியில் அமர்ந்துக் கொண்டான்.

“நான் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டுத்தான் உனக்குக் கணவனா இருந்தேன்… மனசொப்பி இந்த வாழ்க்கையை வாழல. உனக்குப் புரியலையா… என் மனசை உனக்குத் தர முடியாது. ஏன்னா அது என்கிட்டயே இல்லயே. இருந்தாத்தானே உனக்குத் தர முடியும்”

“மனசு கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருள். அதைப் பத்தி நான் பெருசா கவலைப்படுறதில்லை… எனக்கு உன் கூட வாழுற இந்த வாழ்க்கையே பிடிச்சிருக்கு ஜிஷ்ணு…” என்றாள் பெரிய வயிறை சாய்த்து நின்றபடி.

“அந்த அரவ்வாடு போட்டோஸ் உன்னோட மொபைல பார்த்தேன். ரொம்ப சின்ன பொண்ணுல்ல… உன்னோட எத்தனை வயசு சின்னவ?”

தன் கேள்விக்கு பதிலில்லை எனவும் தொடர்ந்தாள். “ஒரு ஏழெட்டு வயசுருக்குமா?”

ஜிஷ்ணு ஜன்னல் வழியே வெளியே முறைத்தான்.

“எப்படி ஜிஷ்ணு உனக்கு என்னை விட அவளைப் பிடிச்சது? ஒரு வாரம் அவ கூட பழகிருப்பியா? அதுவும் வரம்பு மீறாமத்தான் பழகிருக்கன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன். எப்படின்னு கேக்காதே… நம்ம பர்ஸ்ட்நைட் அப்பவே நீ ஒரு அக்மார்க் முத்திரை குத்தின தங்கப்பையன்னு எனக்குத் தெரிஞ்சுடுச்சு.

என்னை விட அவகிட்ட என்ன உசத்தியா கண்டுட்ட? படிப்பு, அழகு, திறமை எல்லா வகையிலும் அவ நெனச்சாக் கூட என்னை எட்டிப் பிடிக்க முடியாது. ஆனா என் புருஷன் மனசில மட்டும் என்னை நுழைய விடாம உட்கார்ந்து என் உயிரை எடுக்குறா…

அதுதான் யோசிச்சேன். ஜிஷ்ணு எனக்குத்தான் வேணும்னு நெனச்சேன். நீ ரொம்ப பாசக்காரன். ஆனா மஞ்சள் கயிறு மந்திரம் உன்கிட்ட வேலை செய்யல. ஆனா ஒரு மனைவியால முடியாத மாயத்தை நம்ம குழந்தை செய்யும்னு தோணுச்சு. அதனாலதான் பெத்துக்க முடிவு செய்தேன்”

‘கல்யாணமும் என் கல்யாணம்னு தான் சொன்னா, இப்ப குழந்தை பெத்துக்கனும்னு முடிவு செஞ்சேன்னு சொல்லுறா… எல்லாத்தையும் இவளே முடிவு செய்துட்டு கஷ்டத்தை மட்டும் எனக்குத் தர்றா’

“உனக்கு நான் என்ன பாவம் செஞ்சேன் ஜமுனா… எல்லாரும் ஏன் என் வாழ்க்கைல இப்படி விளையாடுறிங்க”

“நாங்க விளையாடல ஜிஷ்ணு நீதான் லஸ்ட்டுக்கும் லைப்புக்கும் வித்யாசம் தெரியாம குழம்பியிருக்க. இனிமே தெளிஞ்சுடும்” என்றவாறே மேஜையில் இருக்கும் பழச்சாறை எடுக்க எழுந்தாள்.

“உன் மேல எனக்கு லவ்வும் இல்லை லஸ்ட்டுமில்லை… உனக்கு இன்னமும் காதலுக்கும் கடமைக்கும் வித்யாசம் தெரியாம போனது என் துரதிர்ஷ்டம்” என்றவாறே ஜிஷ்ணுவே நடந்து போய் அவளுக்கு பழச்சாறைக் கொண்டுவந்தான்.

“குழந்தை பொறக்கட்டும் நீ எப்படி டைவேர்ஸ் கேட்பன்னு பாக்குறேன்” என்றாள் திமிராக.

‘என் மேல அக்கறையில்லாமலா பழச்சாறு எடுத்துத் தர்றான். ஈகோ கண்ணை மறைக்குது’ என்றவாறு ஜூசை அருந்தினாள் ஜமுனா.

ஜிஷ்ணு விண்ணென்று தெரிந்த நெற்றியை பிடித்தவாறே அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான்.

‘சரயு நம்ம பழகினது சில நாள் தானாம்… ஜமுனா சொல்லுறா… அந்த சிலநாட்கள் நீ காட்டின அன்பை ஆயுசு முழுக்க நெனச்சாக்கூட இவளால தரமுடியுமா? குழந்தையை வச்சு என் மனசில் நுழைவாளாம். என் குழந்தை வேணும்னா இதயத்தில் நுழையலாம் ஆனா தப்பு தப்பா அடி எடுத்து வைக்கிற இவ எப்படி என் மனசில வர முடியும்’

வாய்விட்டு சொன்னான்.

“பங்காரம் உன்னை மறக்க சொல்லுறாங்கரா… எப்படிரா உன்னை மறப்பேன்?”

அவன் பெட்டியிலிருக்கும் துணிகளுக்கிடையே பொக்கிஷமாய் வைத்திருக்கும் கைக்குட்டையை எடுத்தான். பாஸ்கெட்பால் போட்டியின்போது சரயுவின் வியர்வையைத் துடைக்கப் பயன்படுத்திய அவனது கைக்குட்டை. அதனால் முகத்தை மூடிக் கொண்டான். சரயுவின் வாசம் அதில் இருப்பதைப் போலவே ஒரு எண்ணம். எல்லாவற்றையும் விட்டுட்டு அவளிடம் ஓடிப் போய்விடலாம் போல் ஆத்திரம் வந்தது.

அவன் காதில் பேசினாள் சரயு.

“விஷ்ணு நீ மெட்ராஸ்ல என்னை பார்க்கலேன்னா இதுக்கு இவ்வளவு தயங்குவியா… எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிப் போகணும்னு நினைச்சிருப்பியா… உண்மையை சொல்லு”

“தயங்கிருப்பேன்… ஆனால் விட்டுட்டு ஓடிருக்க மாட்டேன்”

“இப்பயும் அதையே செய்…”

“சரயு… தப்போ சரியோ நீ சொன்னதை நான் கேக்குறேன்…” படுக்கையில் கவிழ்ந்து படுத்தபடியே அந்தக் கைக்குட்டையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் ஜமுனாவிடம் கேட்டான்.

“என்ன குழந்தைன்னு சொல்லிருப்பாங்களே”

“பொண்ணு” என்றாள் முகம் விகாசிக்க. அந்த நொடி சரயுவின் முகம்தான் ஜிஷ்ணுவின் கண் முன்னே தோன்றி மறைந்தது. ‘அவளை மாதிரியே துருத்துருன்னு அன்பா ஒரு பொண்ணு வேணும்’

ஜமுனா சொன்னதைப் போலத்தான் ஆயிற்று. மனைவியைப் பிரியத் துடித்த ஜிஷ்ணுவுக்கு மகளைப் பிரியத் துணிவில்லை. சந்தனா பிறந்ததும் இயந்தரமாகவே மாறிவிட்டான். அவன் வாழ்க்கை சந்தனாவை சுற்றியே அமைந்தது. அவள் அம்மா என்றழைத்ததை விட நாணா என்று சொன்னதுதான் அதிகம். வெளியூர் பயணங்களைக் குறைத்து மகளுடன் பொழுதைக் கழிக்க ஆரம்பித்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 9தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 9

“என்னடா ஜிஷ்ணு… இப்படி வந்து படுத்துகிட்ட” அங்கலாய்த்தபடி வந்தான் வெங்கடேஷ். நெல்லையப்பன் சீவித் தந்திருந்த இளநியை… வாயால் வண்டி ஓட்டியபடி வந்த அணுகுண்டும் சரயுவும் நண்பர்கள் இருவருக்கும் தந்தார்கள். “என்னமோ நான் ஆசைப்பட்டு வந்து ஹாஸ்பிட்டல்ல படுத்துட்ட மாதிரி சொல்லற” இளநியை

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 58தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 58

ஜெர்மனி சென்றதும் அவளை ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துவிட்டு ராம் வேலையில் சேர்ந்தான். நாட்கள் நகர்ந்தன. இயல்பாகவே சூழ்நிலையோடு பொருந்திக் கொள்ளும் சரயு புதிய இடத்தில் பழகிக் கொண்டாள். கவலையை மறக்க உழைப்பை அதிகப்படுத்து என்பது அவளது வழக்கமாய் இருந்ததால்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 14என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 14

அத்தியாயம் – 14 வழக்கத்துக்கு மாறாக அன்று காலை சித்தாரா எழுந்தபோது அரவிந்த் எழுந்து சென்று விட்டிருந்தான். ‘இவனுக்கு என்ன வந்தது? நான் வந்து காபி கொடுத்து, வனி அவன் மேல ரெண்டு குதி குதிச்சாத்தானே எழுந்திருப்பான்’ என்று எண்ணிக்  கொண்டே