Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 26

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 26

 

றுபடியும் ஜிஷ்ணுவின் அறை முதலிரவு மேக்அப் போட ஆரம்பித்தது. எரிச்சலுடன் அறைக்கதவைத் தாள் போட்டான்.

‘நானும் அம்மா உடம்பு சரியாகணும்னு பாத்தா தாலி கட்ட வச்சதுமில்லாம இப்ப முதலிரவாம். முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவாங்க? நாலு சுவத்துக்குள்ள நடக்குற விஷயத்துக்கும் மிரட்டுவாங்களா? கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சதுமில்லாம ஒரு கட்டாய முதலிரவு வேறக் கொண்டாட சொல்லுறாங்களே இவங்களுக்கு இது வெட்கமா இல்ல… இவங்களுக்கே வெட்கமில்லைன்னா நான் ஏன் வெட்கப்படனும்… நான் இப்பவே கிளம்புறேன். இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல இருக்க மாட்டேன். என் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டுச்சு அதே மாதிரி இவங்களும் மனசு கஷ்டப்படட்டும் ‘குக்கா கட்டுகி செப்பு டெப்பா’ (நாய்கடிக்கு செருப்படி)

பை ஒன்றில் துணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான். அவனது அறையின் அட்டாச்டு பாத்ரூமிலிருந்து குளித்துவிட்டு, டவலைக் கட்டிக் கொண்டு வெளியே வந்த ஜமுனா சுவாதீனமாய் கப்போர்டைத் திறந்து அவளது மாற்றுடைகளை எடுத்தாள். அவளைக் கோவமாய் முறைத்த ஜிஷ்ணு விறுவிறுவென அறைக் கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியே சென்றான்.

வேகமாய் காரைக் கிளப்பிக் கொண்டு பறந்தான். மெலிதாய் ஒலித்தது செல்… சட்… அன்று அம்மாவைப் பார்க்கும் அவசரத்தில் சரயுவுக்கு நம்பர் தந்திருந்த மொபைலைக் காரில் வைத்துவிட்டு சென்றிருந்தான். சரயு பத்திரமா ஊருக்குப் போனாளா? சடன் பிரேக் போட்டுவிட்டு அலைபேசியைப் பாய்ந்து எடுத்தான். தெரியாத நம்பர்… ஆனால் எஸ்டிடி எண் தென்தமிழகத்திலிருந்து என்பது தெரிந்தது. அவசரமாய் போனை ஆன் செய்தான்.

“சரயு… பங்காரம்…” என்றான்.

“விஷ்ணு… எப்படி இருக்க?” அவனை ஏமாற்றாது ஒலித்த சரயுவின் குரல் அவன் காதின் வழியே சென்று இதயத்தில் ஏற்பட்ட ரணத்துக்கு மருந்து தடவியது. கண்களை மூடி அமைதியாக சீட்டில் சாய்ந்து கொண்டான்.

“நிறைய தடவை உனக்குக் கால் பண்ணேன் விஷ்ணு… போன் அடிச்சுட்டே இருந்தது. யாரோ பொம்பள என்னமோ சொன்னா எனக்குப் புரியவே இல்ல… அதுதான் வச்சுட்டேன்”

“அது வாய்ஸ் மெசேஜ்ரா… என்னால எடுக்க முடியலைன்னா அந்த மெசேஜ் முடிஞ்சதும் ஒரு பீப் சத்தம் வரும். அதுல நீ சொல்ல வேண்டியதை சொல்லிடு நான் கேட்டுக்குறேன்”

“சரி… உங்கம்மா எப்படி இருக்காங்க விஷ்ணு… அவங்களுக்கு என்னாச்சு?”

“ம்ம்… என்னமோ டியூமர்ன்னு சொல்றாங்க சரயு. ஆப்ரேஷன் செஞ்சிருக்காங்க. இப்ப பரவல்ல. மேற்கொண்டு ட்ரீட்மென்ட்டுக்கு அமெரிக்காவுக்குப் போகலாம்னு இருக்கோம்”

‘அமெரிக்கா போற அளவுக்கு சீரியஸா’ என சரயு மனதில் நினைத்துக் கொண்டாள்.

அவர்கள் வாழ்க்கை ஸ்ரீவைகுண்டத்தில் தொடங்கி அதிகபட்சம் மதுரையில் முடியும். ஊர் பெருசா இருந்தா நோயும் பெருசாத்தானே இருக்கும் என்று அவளது குழந்தை உள்ளம் நினைத்தது. ஜெயசுதாவின் அமெரிக்க சிகிச்சை ஜிஷ்ணு-ஜமுனாவின் இணைப்பை இறுக்கப் போடப்படும் ஒரு திட்டமே என்பதை ஜிஷ்ணுவே அறியாதபோது சரயு எப்படி அறிவாள்.

“உன் நாணா எப்படி இருக்காருரா?”

“ம்ம்… வீட்டுக்குக் கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க. கொஞ்ச நாள் பத்திரமா பாத்துக்கணும்னு சொல்லிருக்காங்க” மற்ற எதையும் சொல்ல விரும்பவில்லை. ‘அம்மா இறந்தது தெரிஞ்சதுமே அழுதுட்டான்… அப்பாவைப் பத்தி சொன்னா இன்னமும் கஷ்டப்படுவான். என் விஷ்ணு கண்ணுல தண்ணியே வரக்கூடாது’

“நான் அவ்வாகிட்ட தெலுங்கு கத்துகிட்டிருக்கேன் விஷ்ணு… மீரு பேரு ஏமி… மீரு எலா உன்னாரு… போஜனமாயிந்தா… அப்பறம்… வந்து வந்து அன்னைக்கு நீ சொன்னதுக்கு பதில்… நேனு நின்னு ப்ரேமிஸ்த்துன்னானு…”

‘பிச்சி… இந்த மாபாவிகிட்ட இப்ப போய் ஐ லவ் யூ சொல்லுறியேரா’ ஜிஷ்ணுவின் கண்கள் வேதனையில் மூடியது.

“தப்பா பேசிட்டேனா விஷ்ணு… என் தெலுங்கு பாகலேதா?”

அவள் பேசும் சர்க்கரை மொழிகளைக் கேட்டவன் “நல்லாயிருக்காவா… சரவெடி, ஸ்வீட்டுக்கு அர்த்தமா உன் பேரைப் போட்டுடலாம் போலிருக்கே… தெலுகு உன் வாயிலருந்து வரும்போது எப்படியிருக்குன்னு தெரியுமா… அந்தம்… அமிர்தம்… மதுரம்… தெலுகை ஏன் சுந்தரத் தெலுகுன்னு பாரதியார் சொன்னாருன்னு எனக்கு பாக அர்த்தமாயிந்தி” மனம் லேசாகச் சிரித்தான்.

அவனை மேலும் சந்தோஷமாக்க, “உனக்கொரு ஹாப்பி நியூஸ் சொல்லட்டுமா?”

“சொல்லேன்” என்றான் ‘நீயாவது சந்தோஷமா இருந்தா சரி’

“அப்பா இனிமே என் கல்யாணம் பத்திப் பேச மாட்டாரு… நான் கண்டிப்பா என்ஜினியரிங் படிப்பேன்னு நினைக்கிறேன்” என்றாள் ‘இனிமே அவரால பேசவே முடியாது’ என்று அழுத மனதை அடக்கிக் கொண்டு அவனை சந்தோஷப்படுத்த முயன்றாள்.

“சரயு பி.ஈன்னு நான் பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லுவேன். வீட்டுக்கு முன்னாடி உன் பேரைப் போட்டு பெரிய போர்டு மாட்டி வைப்பேன். நீ படிச்சு முடிச்சதும் மெர்சிடிஸ் பென்ஸும், பிஎம்டபிள்யூவும் சரவெடிக்குப் போட்டிப் போட்டுட்டு வேலை கொடுப்பாங்க…”

“கிண்டல் பண்ணாதே விஷ்ணு…” சிணுங்கினாள் சரயு.

“சரயு… நம்ம ரெண்டு பேரும் எங்கயாவது ஓடிப் போயிடலாமா? எனக்கு இங்கிருக்கவே முடியலடி… மூச்சு முட்டுது…” தாங்க முடியாமல் கேட்டுவிட்டான் ஜிஷ்ணு.

“என்னாச்சு விஷ்ணு… உன் அம்மாவைப் பாத்துக்க வேண்டாமா… நானும் கொஞ்ச நாள் அப்பாவைப் பாத்துக்கணும். நம்ம ரெண்டு பேருக்கும் கடமை இருக்கு”

“கடமை என்னடி கடமை… பெரிய புண்ணாக்கு… உன்னையும் என்னையும் பிரிக்கிற கடமை எனக்குத் தேவையில்லை”

“ஏன் கோவப்படுற விஷ்ணு…”

கல்யாணத்தைப் பற்றி சொன்னால் பயந்துவிடுவாள் என அதை மறைக்க முடிவு செய்தான். “பங்காரம்… புரிஞ்சுக்கோரா… என்னை ஒரு முக்கியமான லைப் கமிட்மென்ட்ல வலுக்கட்டாயமா இழுத்து விட்டுட்டாங்க. அதுல இறங்கிட்டா வெளிய வர முடியாத சுழல்ல சிக்கிடுவேன். உன்னை விட்டுத் தூரமா விலகிடுவேன்ரா”

“நீ சொல்லுறது எனக்குப் புரியல விஷ்ணு. பரவல்ல எனக்குப் புரியும்னா நீயே முழுசா சொல்லிருப்பல்ல… கமிட்மென்ட் பத்தி சொன்னேல்ல… அதுக்கு மட்டும் எனக்குத் தெரிஞ்ச அளவுக்குப் பதில் சொல்லுறேன். உனக்கு யூஸ் ஆகுமான்னு பாரு…

எங்க பாஸ்கெட் பால் டீம் மேட்சுக்குப் போவோம். பெண்கள் டீம், அதனால பெண்களுக்கு ஏற்படுற சில சிரமமும் வரும். எனக்கு இன்னைக்கு வயத்துவலி விளையாட முடியாலன்னு கோச் கிட்ட சொல்லிட்டு வெளிய நிக்க முடியுமா? முடியாது… ரொம்ப வலிச்சதுன்னா மாத்திரையைப் போட்டுட்டு விளையாடப் போயிடுவோம்.

அதுனால விளையாட்டுதான் எங்க எல்லாருக்கும் உயிர்மூச்சுன்னு தப்பா எடுத்துக்காதே. நம்ம டீம் இந்த தேதில விளையாட ஒத்துகிட்டோம். அதை நல்லபடியா முடிக்கணும்னு நினைக்குறது… அதுக்கு இங்கிலீஷ்ல ஒரு பேர் சொல்லுவாங்களே… என்ன டெடிக்கேஷன்.

கமிட்மென்ட்டுன்னு வந்துட்டா அதை எப்படியாவது முடிக்கணும்னு ஒரு டிட்டர்மினேஷன் வேணும். அதுக்கு தேவையான டெடிக்கேஷன் வேணும். இது முடியலைன்னா அந்த கமிட்மென்ட்டை நீ ஒத்துகிட்டு இருந்திருக்கக் கூடாது. இதெல்லாம் எங்க மனோரமா டீச்சர் என்கிட்டே சொன்னது. உனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கோ” தந்தைக்கே உபதேசம் செய்யும் செந்தில் வடிவேலவனாய் சரயு ஜிஷ்ணுவிடம் பேசினாள்.

இந்தச் சின்ன வயசில உனக்கு இருக்குற தெளிவு எனக்கில்லாம போச்சு கண்ணம்மா என்று நினைத்தவன், “இதுல பாதிக்கப் படுறது நம்ம ரெண்டு பேரும்தான் சரயு… சொல்லுறதைக் கேளு… அதனால இந்த கமிட்மென்ட் நமக்கு வேணாம்ரா” என்றான் கெஞ்சலாக. பின்னர் கோவமாக, “கடைசியாக் கேக்குறேன்… இப்ப என் கூட வர முடியுமா முடியாதா?” என்றான்.

“விஷ்ணு நீ எங்க கூப்ட்டாலும் கண்ணை மூடிட்டு வர ரெடியா இருக்கேன். ஆனா இப்ப அப்பா படுத்த படுக்கையா இருக்கார். அவருக்கு எல்லாமே நான்தான் செய்யணும். அவரு உயிரோட இருக்கபோறது சில மாசம்தான் விஷ்ணு, நான் எங்கப்பாவைப் பாத்துக்கனுமில்ல. நான்தானே நெல்லையப்பனோட சிங்கக்குட்டி…” சரயுவின் குரல் தளுதளுத்தது.

அவள் குரலில் தெரிந்த மாற்றம் ஜிஷ்ணுவை உலுக்கியது. ‘மனசு நொந்திருக்கா போலிருக்கே… இப்பப் போயி நானும் ஒரு இக்கட்டான சூழ்நிலைல மாட்டிகிட்டேனே…’

“சரயு… எனக்குத் தெரியாதேரா… ச்சே நீ இந்த மாதிரி சூழ்நிலைல இருக்கும்போது ஒரு போன் கூட அட்டென்ட் பண்ணல பாரு… நான் உடனே கிளம்பி வரேன்…”

“வேண்டாம் விஷ்ணு… நீ உங்கம்மாவைப் பாரு… எனக்கு எதுவும் ஒண்ணுன்னா நான் உன்னைக் கண்டிப்பாக் கூப்பிடுவேன்… உன்னைவிட நெருக்கமா இந்த உலகத்துல எனக்கு யாரிருக்கா”

 “சரயு… ஏண்டி நாணா நல்லாயிருக்காருன்னு என்கிட்டே பொய் சொன்ன…”

“ம்ம்… திருவள்ளுவர் சொல்லிருக்காரே ஏதாவது நன்மைக்காக பொய் சொன்னாத் தப்பில்லை… இது தெரிஞ்சா நீ உடனே வந்து நிப்ப… அதுனாலதான் அப்படி சொன்னேன்”

“நான் வரேன் சரயு…”

“வேண்டாம்… நீ உன் கமிட்மெண்டை வெற்றிகரமா முடி… பிரச்சனைகளை எல்லாத்தையும் சரி பண்ணிட்டு வா…”

“ஹே பிச்சி நான் என்ன சொல்லிட்டிருக்கேன் நீ என்ன சொல்லுற. என்னால முடியாதுடி…”

ஒரு சில வினாடிகள் மறுமுனையில் மௌனம். சரயுவின் வாயிலிருந்து அந்த வார்த்தை முத்துக்கள் சிதறியது. அந்த வார்த்தைகள் ஜிஷ்ணுவின் மனதில் கல்வெட்டாய் பதியப் போகிறது என்பதை அந்தப் பேதை உணரவில்லை. அவளது விஷ்ணு தடுமாறும் ஒவ்வொரு சமயத்திலும் அந்த வார்த்தைகளைக் கொண்டே தனது முடிவுகளை எடுக்கப் போகிறான் என்பதைத் தெரியாமலேயே சொன்னாள்.

 “நீ மெட்ராஸ்ல என்னை பார்க்கலேன்னா இதுக்கு இவ்வளவு தயங்குவியா… எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிப் போகணும்னு நினைச்சிருப்பியா… உண்மையை சொல்லு”

“தயங்கிருப்பேன்… ஆனால் விட்டுட்டு ஓடிருக்க மாட்டேன்”

“இப்பயும் அதே செய்…”

“சரயு…”

“விஷ்ணு எனக்காக நீ எல்லாத்தையும் விட்டுட்டு வரத் தயாரா இருக்கலாம். நீ என் பக்கத்துல ஆதரவா இருந்தாத்தான் உன்னைப் பிடிக்கும்னு இல்லை. எப்போதுமே எனக்கு உன்னைப் பிடிக்கும். என் மனசுல நீ எப்போதும் இருக்க.

அக்காவெல்லாம் அடிக்கடி வந்து பாத்துகிட்டாலும் அவங்க வீட்டுக்குப் போயிடுவாங்க. எங்கப்பா கூட என்னைத்தவிர யாரிருப்பா. பேசக்கூட முடியாம குழந்தை மாதிரி இருக்குற அவரை எப்படி விட்டுட்டு வர முடியும் சொல்லு.

நீயும் உங்கம்மாவை அமெரிக்கா டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போகணுமில்ல… எனக்காகப் பாக்காதே விஷ்ணு… போய் உன் கடமையை செய்.

நீ வந்தேதான் ஆவேன்னா… வா… ஆனா உன்னைப் பாத்ததும் நான் உடைஞ்சு போய்டுவேன். நீ வான்னு கூப்பிட்டா அப்படியே எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வந்துடுவேன். அதுல உனக்கு சம்மதமா?”

“வேணாம்… நீ போய் நாணாவைப் பாத்துக்கோ. நானே ஒரு நாள் உன்னைக் கூப்பிடுவேன். அப்ப மாட்டேன்னு சொல்லாம என்கூடவே வந்துடணும். அவுனா…”

“கண்டிப்பா விஷ்ணு”

அழுத்தமாய் ஒரு இச் சத்தம் மறுமுனையிலிருந்து வர, சரயுவின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

போனை வைத்துவிட்டு பில்லைப் பார்த்தாள் சரயு. முன்னூறு ரூபாய்களைக் காட்டியது. அவளது கையில் நூறு ரூபாய்தானிருந்தது. ஆர்வமாய் பேசிக்கொண்டிருந்த விஷ்ணுவை இடைமறித்து போனை வைக்க மனமில்லை. அதனால் அவன் குரலைக் கேட்டுக் கொண்டே இருந்துவிட்டாள். பணத்துக்கு என்ன செய்ய, ஒரு வினாடி யோசித்துவிட்டு காதிலிருக்கும் கம்மலைக் கழற்றி போன் பூத் பெண்மணியிடம் கொடுத்தாள்.

“ஏய் உனக்கு அறிவிருக்கா… முன்னூறு ரூபாய் பில்லுக்கு ரெண்டாயிரம் ரூபா தோட்டைக் கொடுக்குறியே”

“அக்கா இந்தக் குரலைக் கேக்க என் உசுரையும் கொடுப்பேன்” என்றாள்.

அவளை ஆச்சரியமாய் பார்த்த அந்தப் பெண்மணி “இருக்குற துட்டைத் தந்துட்டுப் போ… மிச்சத்தை முடியுறப்ப கொண்டு வந்து தா” என்றார்.

வியப்போடு பார்த்த சரயுவிடம், “நானும் காதல் கல்யாணம் பண்ணிகிட்டவதாண்டி” என்றார் சிரித்தபடி.

ரயு போனை வைத்துவிட்டு சென்றதைக் கூட உணர முடியாது மரத்து போய் நீண்ட நேரம் அமர்ந்திருந்தான் ஜிஷ்ணு. கடமையை செய் செய்ன்னு எல்லாரும் சொல்லுறிங்களே அப்ப என் காதல்… என் நிம்மதி… அதைப் பத்தி யாருக்குமே அக்கறையில்லையா… ஒவ்வொரு நிமிடமும் அவன் மனது இறுகியது.

சரயுவின் வயசுக்கு அவளுக்கு அதிகமா மனசு கஷ்டத்தைத் தரக் கூடாது… அவ படிக்கட்டும்… அவ படிச்சு முடிக்குறதுக்குள்ள என் பிரச்சனைகளை சரியாக்கிட்டு அவளைத் தூக்கிட்டுப் போய்டுவேன்.

ஜமுனாவின் யோசனையை ஒப்புக்கொண்டு சத்தமில்லாமல் விவாகரத்து வாங்குவதுதான் விவேகமாகப் பட்டது ஜிஷ்ணுவுக்கு. அவன் செய்வது சரியா என்று பலமுறை யோசித்தான். சரயுவின் புன்னகை தவழும் முகம் அவன் கண்முன் வந்தது. சரயு நீயும் நானும் போறது வேற வேற பாதையாயிருக்கலாம் ஆனா என் ஒவ்வொரு அடியும் உன்னை நோக்கித்தான். நீ வரப்போறதும் என்கிட்டத்தான். அப்போதே முடிவு செய்தான். “பங்காரம்… நீக்கோசம் எதைனா சரி”

‘விஷ்ணு என்னை மன்னிச்சுக்கோடா எனக்கு வேற வழி தெரியல… கொஞ்ச நாள் கண்ணை மூடிட்டு சவபெட்டில படுத்துக்கோடா… ஜிஷ்ணுவாய் மட்டும் இருக்குறேன்… நிலைமை சரியானவுடனே நானே உனக்கு உயிர் கொடுக்குறேன்’ ஜிஷ்ணு மனதினுள் சரயுவின் காதலன் விஷ்ணுவிடம் மண்டியிட்டுக் கெஞ்சினான். அதன் பின் ஜிஷ்ணுவின் கையால் விஷ்ணு மனதுக்குள் ஆழமாய் புதைக்கப்பட்டான். ‘ரொம்ப மூச்சு முட்டுச்சுன்னா சொல்லு… நான் கொஞ்ச நேரம் மட்டும் திறந்து விடுறேன்’ விஷ்ணுவை முழுவதுமாய் மூடும்முன் சமாதானம் சொன்னான் ஜிஷ்ணு.

பாருக்கு சென்றவன் அங்கு நேரத்தைக் கழித்துவிட்டு நள்ளிரவில் அறைக்கு வந்தான். அவன் கண்ணில் பியானோ பட்டது… அதன் முன் உட்கார்ந்தான்

“ஜமுனா உனக்கு பாட்டு பிடிக்குமா?”

“எனக்குக் கர்னாடிக் தெரியாது… இங்கிலீஷ் பாட்டுத்தான் பரிச்சியம்… உனக்குத் தெரியுமா எனக்காக ஒரு பாட்டுப் பாடுறியா?” என்றாள் ஆர்வத்துடன்.

“சரி எனக்கு இங்கிலீஷ் பாட்டு சுமாராத்தான் பாட வரும்…

This song is dedicated to poor Vishnu என்றவாறு தொடங்கினான்.

Maybe I’ve been here before.
I know this room, I’ve walked this floor.
I used to live alone before I knew you.
I’ve seen your flag on the marble arch.
Love is not a victory march,
It’s a cold and it’s a broken hallelujah
.

Maybe there’s a God above.
And all I ever learned from love
Was how to shoot at someone who outdrew you.
It’s not a cry you can hear at night.
It’s not somebody who’s seen the light.
It’s a cold and its a broken hallelujah.

கண்ணீர் வழியப் பாடியவனை அதிர்ந்து போய் பார்த்தாள் ஜமுனா.

அவன் முடித்தவுடன் அவனைத் தனது வயிற்றோடு அணைத்துக் கொண்டவள், “ஜிஷ்ணு I am sorry dear… I really want to help you… But unfortunately I can’t. Because I need you badly and madly… I can’t loose you”

என்றபடி விலகியவளின் கையைப் பிடித்தான் ஜிஷ்ணு.

“என்ன ஜிஷ்ணு?”

“ம்ம்… ஒரு புருஷனோட கடமையை நிறைவேத்துறேன் வா”

காலையில் விழித்த ஜிஷ்ணுவுக்கு ஜமுனாவின் உடல் ஆசையைத் தரவில்லை. குளியலறைக்கு சென்றவன் கண்ணாடியில் தன்னைப் பார்த்துப் பாராட்டிக் கொண்டான்.

“வெல்டன் ஜிஷ்ணு… கடமையை ஒழுங்கா செய்ய ஆரம்பிச்சுட்ட… கீப் இட் அப்”

கையிலிருந்த ஆர்கனைசரில் ஒரு நாளை அடித்தவன் சொன்னான் “ஐயோ இன்னும் முன்னூத்தி அருவத்தி நாலு நாளிருக்கே”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’

அத்தியாயம் – 5 கோடை ரோடு ரயில் சந்திப்பில் டீ காபி…. என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தவர்களிடம் வேண்டாம் என மறுத்துவிட்டு, தமிழ் பத்திரிக்கைகளை மட்டும் வாங்கிக் கொண்டான் ப்ரித்வி.   பயணிகள் கவனத்திற்கு…… யாத்திரிகா க்ருபயா ஜாயங்கே….  

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 41தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 41

இன்று மியூனிக் காலை வழக்கம்போல் மெதுவாக எழுந்து, வேகமாய் அலுவலகத்துக்குக் கிளம்பினாள் சரயு. ‘பத்து வருஷமா இதே தொல்லை. இவனால என் தூக்கமே கெட்டுப் போகுது’ மனதினுள் ஜிஷ்ணுவைத் திட்டியபடியே சாவியை ஸ்டைலாய் சுழற்றியவாறு, கோட்டை எடுத்துத் தனது தோளில் போட்டுக்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 6தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 6

சரயு காலையில் அலைப்பேசியின் அலறலில்தான் எழுந்தாள். தலை வரை போர்த்தியிருந்த போர்வையிலிருந்து கையை மட்டும் நீட்டி பெட்சைடு டேபிளிலிருந்த மொபைலை தேடி எடுத்து, பின் போர்வைக்குள் இழுத்துக்கொண்டாள். ‘இந்த ராம் காலைல எழுப்பி விட்டுடுரான்பா. போன ஜென்மத்துல கடிகாரமா பொறந்திருப்பான் போலிருக்கு’