சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 15’

வேப்பம்பூவின் தேன்துளி – 15

நீதிவாசன் வாயிலில் நின்றபடி கைப்பேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான். இவர்களுக்காகக் காத்திருந்தானா இல்லை பொதுவாக நின்றிருந்தானா தெரியவில்லை… ஆனால், அவனது பார்வை மட்டும் வாயிலில் ஆர்வமாகப் பதிந்து பதிந்து மீண்டு கொண்டிருந்தது. யாரையோ எதிர்பார்ப்பது போல!

 

தூரத்திலேயே அவனைக் கண்டு கொண்ட அன்னபூரணிக்கு தூக்கிவாரிப் போட்டது. அவன் வீட்டிற்கு செல்லவே வெகுவாக தயங்கியவள், அவன் இந்த நேரத்தில் இருக்க மாட்டான் என்கிற சுயசமாதானத்தின் பேரில் தான் கிளம்பி வந்திருந்தாள்.

 

இப்பொழுது அவன் இருக்கிறான் என்று தெரியவும் தன்போல பெரியம்மாவின் பின்னால் ஒன்றிக் கொண்டாள்.

 

ஆர்வமாய் தங்களை வரவேற்று பெரிய புன்னகையுடன் நின்றிருந்தவனைப் பார்த்து விட்டவளுக்கு, இதயம் சிறகடித்தது. அவனின் விழிகளின் மலர்ச்சியும், முகத்தின் விகசிப்பும் சொல்லாமல் சொல்லியது… இத்தனை நேரமும் வாசலில் தவம் கிடந்தது இவர்களுக்காகவென்று!

 

மனதிற்குள் பனிச்சாரலை வாரி இறைத்த உணர்வு! அதீத குளிர்ச்சி! மூச்சு முட்டியது மகிழ்ச்சியில்! அதை நொடியில் கலைக்கவென்று ஒலித்தது அவனது குரல்.

“ஏன் அத்தை உங்க பொண்ணு காலேஜ் போகலையா?” என்றான் நீதிவாசன் பூரணியின் வருகையை குறித்து. அவன் சொன்னதைக் கேட்டதும் அவளின் மனம் கயிறருந்த காற்றாடியாய் தள்ளாடி தரை தொட்டது!

 

ம்ப்ச் அப்போ ‘வழி மேல் விழி வைத்து…’ என்றளவு காத்திட்டிருந்தது நமக்காக இல்லையா? அவங்க பாசக்கார அத்தைக்காகவா!

 

“நல்லா கேளு நீதி, படிக்கிற புள்ளைங்க இப்படி மட்டம் போடலாமா?”

 

“கண்டிப்பா அத்தை. அதெப்படி லீவு போடலாம்… அதுவும் படிக்கிற பிள்ளைங்க” என்று கேலிக்குரலில் கூட சேர்ந்து போட்டுக் கொடுத்தான் மருமகன்.

“சொன்னா எங்க கேக்கிறா? இப்படி படிக்காம தப்பிக்கிறதுக்கு தகிடுதத்தம் பண்ணற புள்ளைய வெச்சுட்டு என்ன செய்யறது சொல்லு?” என்று ஜோதிமணி மேலும் புலம்ப, “பெரியம்மா…” என்றாள் பூரணி அவரின் கையை சுரண்டி சிணுங்கல் குரலில்!

 

அவளைக் கண்டு கொள்ளாமல், “ஆமா, உன்கிட்ட தான் போன்லயே சொன்னேனே நீதி, நானும் பூரணியும் வருவோம்ன்னு… நீ என்ன புதுசா கேட்கிற மாதிரி கேட்கிற?” என்று மருமகனிடம் ஆராய்ச்சி குரலில் விசாரித்தார்.

 

சங்கடமாய் சிரித்தவன், “மறந்துட்டேன் போல” என்று சமாளிப்பாகக் கூறினான்.

இவரு மறப்பாராக்கும் என்று பூரணிக்குத் தோன்றியது! அப்படின்னா, நான் வருவேன்னு இவருக்கு முன்னமே தெரியும். ஒருவேளை தெரிஞ்சதால தான் இப்ப வீட்டுல இருக்காங்களா? என்று எண்ணியவள் மேற்கொண்டு யோசிக்க முடியாமல் திணறினாள்.

ஜோதிமணி மருமகனிடம் தனது ஆராய்ச்சி பார்வையை மாத்தாமல், “அதுசரி நீ என்ன இந்த நேரத்துல வீட்டுல இருக்க?” என்று கேட்க, இந்த கேள்விக்குத் திருட்டு முழி முழித்ததென்னவோ பூரணி தான்.

 

நீதிவாசனோ வெகு இயல்பாக, “வெளி வேலை இருந்தது அத்தை, அதை முடிச்சுட்டு வீட்டுக்கே வந்துட்டேன்” என்று பதில் சொல்லியபடியே மூத்தவளுடன் கூட சேர்ந்து வீட்டினுள் நடந்தான்.

 

அதற்கு மேல் ஜோதிமணிக்கு அண்ணனின் நினைவுகள் முன்னின்று கொண்டது போல! மேற்கொண்டு தோண்டி துருவாமல்,“அண்ணன் முழிச்சுட்டு தானே இருக்காரு…” என்றபடி மகேந்திரன் இருக்கும் அறை நோக்கி சென்றாள் பெரியவள்.

அவரை வால் பிடித்துப் பின்தொடர்பவளின் செவிகளில் கேலியாய் வந்து விழுந்தது, “அழுமூஞ்சி…” என்னும் நீதிவாசனின் குரல்! அன்று அழுததற்காக இப்படிச் சொல்கிறான் என்று புரிந்தாலும், பெரியம்மா இருந்ததால், அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

அவர் இல்லாவிட்டால் மட்டும் இவளால் என்ன செய்திருக்க முடியும்? ஒருமுறை அவனைப் பார்த்து முறைப்பதற்குக் கூட அஞ்சி நடுங்குபவள் தானே!

மகேந்திரனுக்கு இவர்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி! வெகு ஆசையாகப் பேசிக் கொண்டிருந்தார். பூரணியிடமும் வெகு பிரியமாகப் பேசினார். அவருக்கும் அவளிடம் வேறுபாடு காட்டவோ, ஐயோ பாவம் என்று பரிதாபம் காட்டவோ தெரியாது! பூரணியும் தன் தங்கை மகள் என்பது போல தான் அவரது பார்வை, பேச்சு எல்லாமும் இருக்கும். அது பூரணிக்கு எப்பொழுதும் ஒரு நிறைவைத் தரும்!

அண்ணனிடம் பேசியபடியே, “பூரணி, வேலைக்கு ஆள் வர நேரம் ஆகும். போய் எல்லாருக்கும் டீ வெச்சு கொண்டு வா…” என்று மகளைப் பணித்தார் ஜோதிமணி.

 

அன்னையிடம் தலையாட்டியவள், “மாமா டீ குடிப்பீங்க தானே?” என்று மகேந்திரனிடமும் உறுதிப்படுத்திக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.

அவள் சென்றவுடனேயே நகராமல் சிறிது நேரம் கழித்து கைப்பேசியில் யாருடனோ பேசுவது போலச் சமையலறை வாயிலில் வந்து நின்றவன், “ஏதாவது வாங்கிட்டு வரணுமா?” என்று கேட்டான்.

“இல்லை எல்லாம் இருக்கு. இதோ வெச்சுட்டேன்” என்றவள் அவனது பின்புறம் எட்டிப் பார்த்தாள். பெரியவர்கள் உள்ளறையில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, “அசோகன் மாமா சிகரெட் பிடிக்கிறாரு” என்றாள் முகத்தைத் தொங்கப் போட்டபடி!

புருவங்கள் சுருங்க, “அதுக்கென்ன?” என்றான் அவன்.

நிமிர்ந்து அவனை நோக்கியவள், “என்ன இப்படி பொறுப்பில்லாம சொல்லறீங்க. நீங்க தான மாமா ஜாதகத்தை அக்காவுக்கு கொண்டு வந்தீங்க, அப்ப இதெல்லாம் நீங்க தானே கவனிக்கணும்” என்றாள் குற்றம் சாட்டும் தொனியில்!

மறுப்பாக தலையசைத்தவன், “அண்ணா சிகரெட் பிடிப்பாங்கன்னு எனக்குத் தெரியாது. அதோட, சிகரெட் பிடிக்காதவங்களைத் தான் கட்டி வைக்கணும்ன்னா… மாப்பிள்ளை தேடறதே சிரமம்!” என்றான் தோளைக் குலுக்கியபடி!

இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது போல அவன் இலகுவாகப் பேசியது அவளுக்கு வாட்டத்தைத் தந்தது! முகம் சுருங்கியவள், “அக்காவுக்கு அந்த ஸ்மெல் பிடிக்கவே பிடிக்காது” என்றாள்.

இதற்கு நான் என்ன செய்ய முடியும்? இல்லை இவள் தான் என்ன செய்ய முடியும்? என்ற எண்ணம் தான் அவனுக்கு! பூரணிக்கு நிதர்சனத்தை விளக்கிவிடும் எண்ணத்துடன், “அந்த பிரச்சனையை அவங்க பார்த்துப்பாங்க” என்று பொறுமையான குரலில் அவன் சொல்ல, அவளுக்குத் தான் அதை ஏற்க முடியவில்லை.

இன்னமும் முகம் தெளியாதவள், “அக்கா ரொம்ப கஷ்டப்படுவா… பாவம்!” என்று சொல்லும்போதே அவளது குரல் உடைவது போல இருக்க,

“ஸ்ஸ்ஸ்… நம்ம எல்லை எதுன்னு நமக்கு புரியணும் பூரணி. கணவன், மனைவி விவகாரத்துல நாம எப்பவும் தலையிட கூடாது. ஏதாவது அக்காவைச் சமாதானம் பண்ணறேன், மாமாகிட்ட சண்டை போடறேன்னு செஞ்சு வெச்சுடாத! புரியுதா? அவங்களே அவங்க பிரச்சனையைச் சரி செஞ்சிப்பாங்க. அதுதான் அவங்களுக்கும் நல்லது” என்று அறிவுரை வழங்கினான்.

அவன் சொல்வது சரிதான் எனப் புரிந்தாலும் மனம் ஒப்ப மறுத்தது. அக்காவின் தெளிவில்லாத, சோர்ந்த முகம் மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை வதைப்பது போல இருந்தது.

அக்கா வாழ்க்கை நேராகிவிட வேண்டும் என்ற பிரார்த்தனையைத் தவிர, இளையவளால் வேறு எதுவும் செய்ய முடியும் போலத் தோன்றவில்லை.

இன்னமும் முகம் வாடி இருப்பவளிடம், “அதை அவங்க பாத்துப்பாங்க அன்னம்” என்றான் மீண்டும் பரிவான குரலில்.

“ம்ம்…” என்று தலையை அசைத்தவள், தேநீரை வைத்து முடித்திருந்தாள்.

நீதிவாசன் இன்னமும் நகரவில்லை. பூரணியிடம், “அந்த தீபன் மறுபடியும் எதுவும் தொல்லை தந்தானா?” என்று கேட்க, ‘ஓ இதைக்கேட்க தான் பின்னாடியே வந்தாராக்கும்’ என்று எண்ணியவள், “அதெல்லாம் எதுவும் இல்லை” என்று முணுமுணுத்தாள்.

“காதுக்கு கேட்கிற அளவாச்சும் பேசேன்” என்று அவன் சலிப்பாகக் கூற, அவள் பதற்றம் அவளுக்கு! இப்படி இருவரும் எத்தனை நேரம் பேசிக்கொண்டு நிற்பது? பெரியம்மாவும், மாமாவும் வந்துவிட்டால்?

அதே தவிப்புடன், “ம்ப்ச்… டீ வெச்சு முடிச்சிட்டேன். நீங்க… நீங்க… இன்னும் இங்கேயே இருக்கீங்க. பெரியம்மா வந்துட போறாங்க. கிளம்புங்களேன்” என்று பதற்றத்துடன் சொல்லி முடித்தாள்.

‘பேசறதுக்கே இங்க அக்கப்போரு’ என்று மனதோடு சலித்துக் கொண்டாலும், அவளது பதற்றம் அவனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. இத்தனை நேரமும் இல்லாமல் அவன் இதழ்கள் மெலிதாக விரிந்தது. அவளது பதற்றம், அதில் எழுந்த தடுமாற்றம் என்று நின்றிருந்தவளை ரசனையாகப் பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

திருமணம் இப்பொழுதில்லை என்ற எண்ணம் தான் அவனுக்கு! அவளது படிப்பு முடிய இன்னும் ஒரு வருடத்திற்கும் மேல் இருக்கிறதே, அது முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்! அவள் படிப்பை முடித்ததும், ஊர் மெச்ச திருமணம் செய்ய வேண்டும் என்று அவனுக்குக் கொள்ளை ஆசை! அதற்குள் தன் கடன்களை எல்லாம் கொஞ்சம் கட்டி முடித்து அவனும் சற்று இலகுவாக இருப்பான் என்பது அவனது எண்ணம்.

ஆனால், வாழ்க்கை நம் திட்டப்படி தான் நடந்தேறுமா என்ன? இவர்களுக்கான பயணம் என்னவென்பது தான் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்ததே! எதற்குமே சந்தர்ப்பம் அளித்திடாத ஒரு பயணம்!

*** மனைவியை நூல் பிடித்து சுத்த முடியாமல் தவித்தான் அசோகன். அவள் வேறு முகம் கொடுத்தே பேசாமல் இருக்க அவனுக்கு ஆற்றாமையாக இருந்தது.

“என்னடா நேரமாவே வந்திருக்க” என்று அன்னை வளர்மதி மட்டும் தான் கேட்டுக் கொண்டார். அவள் அதைக்கூட கேட்கவில்லை!

“கொஞ்சம் உடம்பு அசதியா இருந்தது மா” என்று சொன்னவன், ரஞ்சிதா சென்று மறைந்த சமையலறையை நோட்டம் விட்டான். இப்ப சமைக்க என்ன இருக்க போகுது என அவனுக்கு கடுப்பாக வந்தது.

அதையே வளர்மதியும் மருமகளிடம் கேட்டார். “என்ன ரஞ்சிதா இன்னும் கிச்சன்ல என்ன செஞ்சுட்டு இருக்க?”

“இந்த கீரையைச் சுத்தம் பண்ணி வெச்சுடலாம்ன்னு பார்த்தேன் அத்தை”

“அதை இங்க கொண்டு வந்து செய்ய வேண்டியது தானே!”

“இதோ முடிச்சிட்டேன் அத்தை” என்றவள், சிறிது நேரத்தில் அந்த வேலைகளை முடித்தும் இருப்பாள் போலும்! ஆனால், சமையலறையை விட்டு வெளியே வந்தவள், மாடிக்குச் சென்று துவைத்துக் காயப்போட்ட துணிகளை அள்ளிக்கொண்டு வந்து மடிக்கத் தொடங்கினாள்.

‘பார்க்கிறேன். இன்னும் எத்தனை நேரம்ன்னு… ராத்திரி தூங்க வந்து தானே ஆகணும்’ என மனதிற்குள் முறைத்துக் கொண்டான்.

“நீயேன்டா உடம்பு அலுப்பா இருக்குன்னு சொல்லிட்டு இங்கேயே உட்கார்ந்து பராக்கு பார்த்துட்டு இருக்க… கொஞ்சம் தூங்கி எழ வேண்டியது தானே!” என்று வளர்மதி கேட்க,

“உங்களுக்கு தூக்கம் வந்தா நீங்க தூங்குங்கம்மா. என்னை எதுக்கு கேட்கறீங்க” என்று எரிந்து விழுந்தான் மகன்.

“இவன் ஒருத்தன்… எங்கேயோ இருக்க எரிச்சலை எல்லாம் வீட்டுல கொட்டிட்டு இருப்பான். அப்படி யாரு எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்ய சொன்னாங்க…” என்று ஜாடையாகத் தொடங்கியவர், மகனின் முகம் கடினப்படுவதைப் பார்த்ததும், “நம்ம வேணி வரேன்னு சொன்னா… இன்னும் காணோம்” என்று உடனே பேச்சை மாத்தி வாசலைப் பார்த்தார்.

“அக்கா வராளா?”

“ஆமாம் டா. போன் செஞ்சிருந்தேன். அங்க தான் கிளம்பிட்டு இருக்கேன்மான்னு சொன்னா…”

“ஹ்ம்ம் சரி சரி” என்று அசோகன் சொல்லி முடிப்பதற்கும், வேணி தன் மூன்று வயது மகள் கனிஷ்காவுடன் வருவதற்கும் சரியாக இருந்தது.

“என்னடா அதிசயம் இந்நேரத்துல வீட்டுல இருக்க?”

“சும்மா தான்கா. நீ எப்படி இருக்க?”

“ஏதோ இருக்கேன் டா. எங்கிருந்து தான் இந்த நோவு வருமோ, ஏதாவது ஒன்னு வந்து படுத்திடுது” என்று புலம்பினாள். இவ ஒருத்தி எனக் கடுப்பாக வந்தது அவனுக்கு!

வீட்டில் எல்லாரிடமும் பேசி, நலம் விசாரித்து, சிற்றுண்டி எடுத்து என வேணிக்கு நேரம் சென்றது.

அவளுக்கு உடம்பு சரியில்லையாம். அங்கு இருந்தால் ஓய்வாக இருக்க முடியாதாம்! மாமியார் எதுவும் வேலை தந்து கொண்டே இருப்பாராம். கனிஷ்காவும் இவளை நச்சரித்துக் கொண்டே இருப்பாளாம். அதனால் தான் கொஞ்சம் ஓய்வெடுக்க வந்திருக்கிறாளாம்.

என்றாவது இந்த காரணங்களை அடுக்கிக் கொண்டு பிறந்தவீடு வந்தால் பரவாயில்லை. அக்காவிற்கென்று தலைவலியும், காய்ச்சலும் எங்கிருந்து தான் மாதத்திற்கு இருமுறை வருமோ? என்று அசோகனுக்குச் சலிப்பாக இருந்தது.

இரவு உணவை முடித்தும் அசோகன் வெளியில் செல்லாமலேயே இருக்க, அவனை அதிசயமாகப் பார்த்த வேணி, “என்னம்மா பொண்டாட்டி வந்ததும் வீடு தங்கறான் போல” என அன்னையின் காது கடித்தாள்.

“நீ வேற, அதெல்லாம் தினமும் சுத்திட்டு வழக்கம்போல தான் வரான். இன்னைக்கு வெளில என்ன பிரச்சனையோ தெரியலை… காலையில பதினொன்றைக்கு வீட்டுக்கு வந்தவன் இன்னும் கடுகடுன்னு தான் இருக்கான். ஏன் பசங்களைப் பார்க்க போகாம இருக்கான்னு தெரியலை”

“எங்க வீட்டுக்காரர் கேட்டதை அவன்கிட்ட சொன்னியா?”

“ஏன்டி அவன் கிட்ட கேட்க முடியுமா? சாமி ஆடிடுவான். நீ அந்த பேச்சை எதுவும் எடுத்து வாங்கி கட்டிக்காத…” என்று மகனின் கோபம் தெரிந்தவராய் எச்சரித்தார்.

“சரி சரி…” என்றவளுக்கும் அசோகன் பற்றி நன்கு தெரியும் என்பதால் அதைக்குறித்துப் பேசும் தைரியம் எழவில்லை.

இரவு உறங்கச் செல்லும் முன்பு, “கனிஷ்காவை உங்க கூடவே தூங்க வெச்சுக்க ரஞ்சிதா, இவ என்னைய தூங்கவே விட மாட்டா… அதோட என் காய்ச்சலும் இவளுக்கு ஒட்டிக்க போகுது” என்று சொல்ல, குழந்தை எப்படி தன்னிடம் உறங்கும் என்று அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

“ஏன் உங்களுக்குத் தொந்தரவா இருக்குமா?” என்று வேணி நாசூக்கு பார்க்காமல் கேட்க, என்ன இப்படிப் பேசுகிறார்கள் என்று ரஞ்சிதா சங்கடம் கொண்டாள்.

வேணியோ, “அதெல்லாம் நேரத்துல தூங்கிடுவா. தொந்தரவு செய்ய மாட்டா…” என மேலும் பேச,

விட்டால் பேசிக்கொண்டே போவார் போல என நினைத்தவள், “அச்சோ அதுக்கில்லை அண்ணி குழந்தை எங்கிட்ட தூங்குமான்னு யோசிச்சேன். மத்தபடி எதுவுமில்லை” என்று அவசரமாக தன் எண்ணத்தைக் கூறினாள்.

“அதெல்லாம் தூங்கிப்பா. அத்தை அத்தைன்னு உன்கிட்ட பிரியமா தான இருக்கா” என்று வேணி சொல்லிவிட, இனியும் மறுத்தால் நன்றாக இருக்காது என்று புரியக் குழந்தைக்கு விளையாட்டு காட்டி பேசியபடி தங்கள் அறைக்கு எடுத்துச் சென்றாள்.

“பாப்பாவை அக்கா கிட்ட கொடுக்காம இன்னும் என்ன செய்யற?” அசோகன் மனைவியை முறைத்தபடி கேட்க, வேணி சொன்னதை அவனிடம் சொன்னாள்.

“ஓ…” என்றவன், சரி குழந்தை தூங்கட்டும் இவகிட்ட அப்பறமா சமாதானம் பேசிக்கலாம் என்று விட்டு விட்டான். ஆனால், கனிஷ்கா உறங்குவதாக தெரியவில்லை. அவளுக்கு அத்தையிடம் கேட்க நிறைய விஷயங்கள் இருந்தது. கதை சொல்லச் சொன்னாள். அதை அப்படியே கேட்டுக் கொள்ளாமல் ஒற்றை கதையில் ஆயிரத்தெட்டு சந்தேகம் கேட்டாள்.

குழந்தையை அசோகனுக்கும் அவளுக்கும் இடையில் தான் ரஞ்சிதா படுக்க வைத்திருந்தாள். கனிஷ்கா கேட்ட கேள்விகளில் பொறுமை பறந்தது என்னவோ அசோகனுக்குத் தான்!

“பேசாம தூங்கு பாப்பா…” என்று சற்று குரல் உயர்த்தி அசோகன் சொல்ல, “மாமா வேணாம் போ… நீ வேணாம் போ…” எனக் குழந்தை அழ ஆரம்பித்து விட்டாள்.

ஒருவழியாக தோளில் போட்டுத் தட்டி, ஜன்னலைத் திறந்து வேடிக்கை காட்டி எனச் சமாதானம் செய்வதற்குள் ரஞ்சிதாவிற்கு ஒருவழியாகிப் போய்விட்டது. அழுகை நின்றதும் மீண்டும் படுக்கைக்குக் கொண்டு வர, மாமாகிட்ட படுக்க மாட்டேன் என்று அடம் செய்தாள்.

வேறு வழியில்லாமல் குழந்தையைச் சுவர் புறம் படுக்க வைத்து, இவள் இருவருக்கும் நடுவில் படுக்க… குழந்தையின் புறம் திரும்பிப் படுத்துக்கொண்டவளுக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை. அசோகனுக்கு தான் பார்வை முதல்… எண்ணங்கள் வரை… அனைத்தும் சதி செய்தது.

ஒருவழியாக ஆறாவதாகக் கூறிய நரி கதையின் முடிவில் குழந்தை வெற்றிகரமாக உறக்கத்தைத் தழுவியிருந்தாள்.

கனிஷ்காவின் குரல் வராததும் மெல்ல எட்டிப் பார்த்தவன் அவள் உறங்கி விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு ரஞ்சிதாவின் இடைவளைத்து தன்னருகே இழுத்தான்.

இதை எதிர்பாராதவள் அவனிடமிருந்து திமிர, “ஸ்ஸ்ஸ்…” என்றவன் தன் இதழ்களை அவளது மேனியில் படர விட்டிருந்தான்.

ரஞ்சிதா, “அச்சோ பிளீஸ்… குழந்தை இருக்கா…” என்றாள் தவிப்பான குரலில்!

“அவ தூங்கிட்டா…” என்றவன் மனைவியை தன்புறம் திருப்பி, “என்னை ஏன் அவாய்ட் பண்ணற… காலையில இருந்து எனக்கு ஒன்னுமே ஓட மாட்டீங்குது தெரியுமா… அதுவும் இப்படி முகத்தை வேற உம்முன்னு வெச்சுட்டு சுத்துவாங்களா? ரொம்ப ரொம்ப சாரிம்மா, கண்டிப்பா இனி தண்ணியடிக்க மாட்டேன். நேத்து அவனுங்க போர்ஸ் பண்ணவும்… ம்ப்ச்… யாரு என்ன சொல்லியிருந்தாலும் அப்படி பண்ணியிருக்கக் கூடாது தான். உனக்கு பிடிக்காட்டி சண்டை போடணும். அதைவிட்டு இப்படித்தான் இருப்பியா?” என்று அவள் கன்னம் வருடி கரிசனமாகக் கேட்க, இன்னைக்கு ஏன் இப்படி செய்யறான் எனப் புரியாமல் விழித்தாள் அவள்.

“நான் எனக்கு பிடிச்சதை எப்பவும் விட்டுக்கொடுத்தது இல்லை. அதேசமயம் உனக்கு பிடிக்காததை, காரணம் சரியா இருக்கும் போது நான் இழுத்து பிடிச்சு தொங்குவேனா… என்னை வில்லன் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணாதடி… வாழ்க்கை உனக்கு வாய்ப்பு தரலைன்னு சொல்லற? அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தான் நாம வாழ்ந்துட்டு இருக்கோமா? அதுதான் என்னைக் கல்யாணம் செஞ்சதுக்கு உனக்கு கிடைச்சதா? உன்னோட விருப்பு, வெறுப்புக்கு முன்னுரிமை தராம…” என்று சங்கடமான குரலில் உரைக்க, என்ன பதில் சொல்வது என்று கூட தெரியாமல் விழித்து வைத்தாள்.

“இப்படி கண்ணை உருட்டி உருட்டி பார்த்தா என்ன அர்த்தம்… வாழ்க்கை எனக்கும் கூடத் தான் ஒரு வாய்ப்பையும் உருப்படியா தர மாட்டீங்குது” என்று புலம்பலாகச் சொல்லியவன்,

“இல்லாட்டி… இந்த அழகான கன்னம் என் எச்சில் படாம இருந்திருக்குமா? சிட்டுக்குருவி வாய் மாதிரி பிளந்து இருக்கும் வாயை மூடி வைக்காம காலத்தை கடத்தி இருப்பேனா?” என்றவன் பேச்சோடு செய்கையிலும் இறங்கியிருக்க, அருகில் உறங்கும் குழந்தையை வைத்துக் கொண்டு தவித்துப்போனது என்னவோ ரஞ்சிதா தான்!

“இத்தனை நாளா அக்கா வந்துபோயிட்டு தான் இருந்தா… ஆனா ஒருநாளாவது இப்படி கனிஷ்காவை நம்மளோட முன்னமே தூங்க அனுப்பியிருந்தாளா? முன்னாடியே அனுப்பி இருந்தா நீ ஒரு மூலையிலேயும் நான் ஒரு மூலையிலேயும் தூங்கி இருப்போமா? இல்லை நீ என்கிட்ட நெருங்கிப் படுக்கும்போது நான் கெட்ட பையனா மாறிடுவேன்னு எனக்கு தெரிஞ்சு தான் இருக்குமா?”

கடவுளே! இவர் ஏன் இத்தனை பேசுகிறார் என ரஞ்சிதா நொந்து தான் போனாள்.

“என்னடா பேசிட்டே இருக்கானே, செயல் கம்மியா இருக்கேன்னு யோசிக்கிறியா” என்று கண்ணடித்து அசோகன் கேட்க, “அச்சோ பிளீஸ்…” என்றாள் அவனது வாயை அடைத்து!

“அப்ப என் சாரியை அக்சப்ட் பண்ணிட்டேன்னு சொல்லு” என்று பிடிவாதம் செய்தான்.

“அச்சோ அக்சப்டேட்… அக்சப்டேட்… ப்ளீஸ் விடுங்க தூங்குவோம்” என்று அவசரமாக சொல்லிவிட்டு அவன் பிடியிலிருந்து விடுபட நெளிந்தவளிடம், “கண்டிப்பா இப்போதைக்குத் தூங்க விட மாட்டேன்” என்று காதை கடித்தவன், அதற்கான செயல்களிலும் அதிரடியாக இறங்கி விட்டான்.

அவனின் தீராத தேடலால், அவளது ஓய்ந்த உறக்கம் மட்டுமே… அவர்களது கூடலுக்கு அன்றைய இரவு எல்லை வகுத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 04சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 04

வேப்பம்பூவின் தேன்துளி – 4 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் தானே! மனம் அலைபாயும் போது அது பட்டவர்த்தனமாக வெளிப்படும் நிலையை என்னவென்று சொல்வது? நீதிவாசனைச் சந்தித்து விட்டு வந்ததிலிருந்து அன்னபூரணிக்கு இதே யோசனை தான்!   காரணமே இல்லாமல் சமீபமாக அவளுக்கு

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 06சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 06

வேப்பம்பூவின் தேன்துளி – 6   தீபலட்சுமி ஒரு தனிப்பிறவி! பணத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பாள். யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணும் நீதிவாசனின் நேரெதிர் துருவம் அவனது தங்கை!   எவரிடம் பணம் இருக்கிறதோ அவர்களிடம் மட்டும் இழைவாள்!

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 12’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 12’

வேப்பம்பூவின் தேன்துளி – 12   ரஞ்சிதாவின் திருமணத்திற்குச் சென்று வந்ததில் இருந்து தீபலட்சுமிக்கு அப்படியொரு எரிச்சல்! அவள் மனம் உலைகலனாக கொதித்துக் கொண்டிருந்தது.   தன்னைப்பார்த்து ஊரே வாயைப் பிளக்க வேண்டும். வாழ்ந்தால் இவளைப்போல ஒரு ராஜவாழ்க்கை வாழ வேண்டும்