சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 14’

வேப்பம்பூவின் தேன்துளி – 14

 

ரஞ்சிதா தன் புகுந்த வீட்டில் இயல்பாகப் பொருந்திப் போனாள். மாமனார், மாமியார், கணவன் என்ற அளவான குடும்பம் தானே! இவளும் வெகு சீக்கிரமே ஐக்கியமாகிப் போனாள்.

 

“ஏன்மா நீ அவன்கிட்ட சொல்லக் கூடாதா?” மனத்தாங்கலோடு வளர்மதி கேட்க, மாமியாரிடம் என்ன சொல்லிச் சமாளிக்க என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

 

வளர்மதியே தொடர்ந்து, “இவனே எல்லா வேலையும் செய்யணும்ன்னு என்ன அவசியம்? இவங்க அப்பா தொழிலை பார்த்துக்க மருமகனையும் சேர்த்துக்கலாம் தானே?” என்று கேட்டார்.

 

ரஞ்சிதாவிற்கு மறுத்துப் பேசத் தயக்கமாக இருந்தது. “எப்படி அத்தை? நான் இதெல்லாம் சொன்னா அவரு என்ன நினைப்பாருன்னு தெரியலையே!” என்று வெகுவாக தயங்கிய குரலில் மறுத்தாள்.

 

திருமண வேலைகளை எல்லாம் கணவன் மட்டும் ஒற்றை ஆளாய் செய்தான் என்று தமையன் கோபி மூலம் அவள் ஏற்கனவே அறிந்ததே! மருத்துவமனைக்குச் செல்வது, தொழில்களைக் கவனித்துக் கொள்வது, திருமண வேலைகள்… என்று ஒற்றை ஆளாய் அனைத்திற்கும் அலைகிறார் என்று அண்ணன் வருந்தியது இன்னமும் நினைவில் இருக்கிறது.

 

அப்பொழுது உதவிக்கு வராதவர்கள், இப்பொழுது எதற்கு? என்று இவளுக்கே முரணாக தோன்றும்போது… கணவனிடம் போய் சொன்னால், அவன் என்ன நினைப்பான்?

 

வேணி அண்ணி அழைப்பு விடுத்தாலே இப்படி தான் அத்தை அவர்கள் குறித்து எதுவும் சொல்லி கணவனிடம் தூது அனுப்ப முயல்வார். என்னவோ அசோகனை இவள் தன் முந்தானையில் முடிந்து வைத்திருப்பதாக பெரியவளுக்கு எண்ணமோ என்னவோ? இவளுடைய கதை இவளுக்கு மட்டும் தானே தெரியும்!

 

அதோடு தன் சுதந்திரத்தைப் பெரிதாய் நினைக்கும் ஒருவன், மனைவியின் சொல்லுக்கு எப்படி அடி பணிவான்? இதையெல்லாம் பெரியவள் யோசிப்பதே கிடையாது போலும்!

 

“ஏன்மா ஒருமுறை கேட்கக் கூடாதா?” விடும் எண்ணம் இல்லை போல அவருக்கு!

 

“இல்லை அத்தை, போன முறை இப்படி தான் பசங்களோட சேர்ந்து சுத்திட்டு நேரம் கழிச்சு வீட்டுக்கு வராருன்னு கேட்க சொன்னீங்க… நான் அவர்கிட்ட அதைப்பத்தி கேட்கவும்… அது அவருக்கு பிடிக்கலை போல அத்தை. உங்க மகனைப் பத்தி, என்னைவிட உங்களுக்கு தான நல்லா தெரியும்” பட்டும், படாமலும் சூழலை விளக்கினாள்.

 

தினமும் ஏதாவது சொல்லி நச்சரிக்கும் மாமியாரை அவளும் என்ன சொல்லித் தான் தடுக்க முடியும்? அதுவும் பெற்ற அன்னையாலே சொல்ல முடியாத விஷயங்களை இவள் மட்டும் சொல்லிச் செயல்படுத்த முடியுமா என்ன? அதற்காகத்தான் முன்பே மூக்கறுப்பட்டு விட்டேன், என்னை விட்டுவிடுங்கள் என்று சொல்லாமல் சொன்னாள்.

 

“என்னவோ போ… மருமக வந்தா கைக்குள்ள இருப்பான்னு பார்த்தா, எல்லாமே அவன் ராஜ்ஜியம் தான்” என்று அலுத்துக் கொண்டார் மூத்தவள்.

அத்தை சொல்வதைக் கேட்கச் சிரிப்புதான் வந்தது! இவர்கள் நேரடியாக அணுக முடியாதபடி தான் கணவரும் வலம் வருகிறார் என்று புரியாமல் இல்லை!

 

ஆனால், அதைப்பார்த்தால் அவளுக்கு ஆகுமா? ஏற்கனவே அத்தை சொன்னதை மேலோட்டமாக தான் கணவனிடம் தொடங்கியிருந்தாள். அதற்கே அசோகனுக்கு எங்கிருந்து தான் கோபம் வந்ததோ… “இத்தனை நாளும் அவனுங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு தான் வீட்டுக்கு வரேன். இப்ப மட்டும் என்ன ஸ்பெஷலா மாத்திக்கணும்ன்னு தெரியலை” என்று முகத்தைக் கல்லென வைத்து, அவன் சொன்ன தினுசில் அவள் கப் சிப் என்றாகி விட்டாள்.

 

திருமணம் முடிந்து வரும் முதல் ஊடல்! மத்த தம்பதிகளுக்குள் எப்படியோ இங்கே தான் பேச்சுவார்த்தைகளோடு நிற்கிறதே! கணவனைப்பற்றி அதிகம் தெரியாததால் அவன் கோபச்சொற்கள் அவளுக்கு வெகுவாக அச்சமூட்டியது.

 

மறுநாள் காலையும் அவளிடம் முகத்திருப்பல் தான்! கலக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் மாலை நேரத்திற்காக ஆவலாகக் காத்திருந்தால் அன்றும் நண்பர்களோடு செலவழித்து விட்டு வெகு தாமதமாக வீடு வந்து சேர்ந்தான். இவளுக்கு என்ன முயன்றும் முடியாமல் முகத்தில் கவலை படர்ந்திருந்தது.

 

கணவனின் பாராமுகம் தாங்கமாட்டாமல், அவனிடம் இறங்கிப் போகும் எண்ணத்தில், உறங்க ஆயுத்தமாகிக் கொண்டிருந்தவனிடம், “சாரி…” எனத் தொடங்கினாள்.

 

அவன் கோபம் ஏன் குறையவில்லையோ புரியவில்லை! “என்ன சாரி? நீயும் ஏன் என்னோட அம்மா, அக்கா மாதிரி இப்படி பண்ணற? நான் என்ன ஒன்னும் தெரியாத குழந்தையா? எனக்கு நீங்கெல்லாம் புத்தி சொல்ல…” என்று அடிக்குரலில் கோபமாக உரைத்தவன்,

 

“இதுக்கு தான் கல்யாணமெல்லாம் வேணாம்ன்னு சொன்னேன்…” என்று அலுப்புடன் தொடங்கியவனின் பேச்சு அவளது திகைத்து விழித்த விழிகளைப் பார்த்ததும் இதழ்களுக்குள்ளேயே புதைந்து கொண்டது.

 

அந்த பேச்சு அவளை வெகுவாக பாதித்தது. சட்டென்று முகம் சுருங்கிப் போகவும், எதுவும் பேசவோ, எதிர்கொள்ளவோ முடியாமல், அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.

 

கோபத்தில் வார்த்தையை விட்டு விட்டோம் என்று புரிந்தாலும், அவனால் எதுவும் சமாதானமாக பேச முடியவில்லை. இவள் எப்படி அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று புத்தி கூற வரலாம். இவளை நான் அப்படி தான் சொல்கிறேனா? என்ற கோபம் அவனுக்கு!

 

மறுநாள் காலையில் கோபத்தை இழுத்துப் பிடிக்காமல் அசோகன் பேசத் தொடங்கி விட்டான். நேற்று அப்படிப் பேசி அவளை வருந்தச் செய்து விட்டதில் அவனுக்குமே சற்று மனவருத்தம் தான்!

 

ரஞ்சிதாவும் கோபத்தில் சிதறவிட்ட வார்த்தையாக இருக்கும் என்று தனக்குள்ளேயே உருப்போட்டிருந்ததால், அவனிடம் முகம் திருப்பாமல் பேசியிருந்தாள்.

 

அன்றைய ஊடலின் பிறகு, ஓரளவு கணவனின் நடைமுறைக்குப் பழகும் வரையிலும் எந்த வம்பு தும்பும் வளர்ந்து விடக்கூடாது என்பதில் ரஞ்சிதா வெகு கவனம் காத்தாள்.

 

அதைக்கொண்டே, இப்பொழுது மாமியார் வளர்மதி அடுத்த தூது அனுப்பத் தீவிரமாக இருந்தபோதும் நிர்தாட்சண்யமாய் மறுத்து விட்டாள்!

 

ஆனால், கணவனிடம் வம்பு, தும்பு இல்லாமல் இருப்பது அத்தனை எளிதானதில்லை என்பது அடுத்த சில நாட்களில் அவளுக்குத் தெரியவந்தது.

 

வழக்கம்போல நண்பர்களோடு நேரத்தைச் செலவழித்து விட்டு அசோகன் அன்று தாமதமாகத் தான் வீடு வந்தான். உணவு பரிமாற முன்வந்தவளிடம், “வேண்டாம் சாப்பிட்டு விட்டேன்” என்று மறுப்பு சொல்லிவிட்டு அறையினுள் நுழைந்து கொள்ள, அவன் நடையின் தடுமாற்றமும், லேசாகச் சிவந்திருந்த விழிகளும், முகத்தின் சோர்வும் அவளுக்கு சூழலை விளக்கி விட்டது.

 

அவ்வப்பொழுது சிகரெட்டின் நெடி அவனிடமிருந்து வருவதைக் கவனித்திருக்கிறாள் தான், ஆனால் இந்த மதுப்பழக்கம்… இன்று தான் முதல்முறை தெரிந்து கொள்கிறாள். மனம் வெகுவாக சோர்ந்து போனது.

 

அவள் பிறந்த வீட்டு ஆண்களுக்கு இந்த பழக்கங்கள் கிடையாது! புகுந்த வீட்டில் அனைத்து விதமான பிறந்த வீட்டுச் சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது தான்! ஆனாலும் என்னவோ இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் முரண்டியது.

 

கணவனிடம் இதுகுறித்து கேட்கவும், பேசவும் வேறு முடியாது! அதுதான் முதல் நாளே தெள்ளத்தெளிவாக விளக்கம் தந்துவிட்டானே… ‘எனக்காக நீ எதையும் மாற்றிக் கொள்ளாதே! நீ உன் இயல்போடு இரு!’ என்பதுபோல!

 

இப்பொழுது விதி இரண்டு புறமும் தானே பொருந்தும்! அவனும் அவளுக்காகவென்று தன் இயல்பிலிருந்து மாற மாட்டான் என்பதுதானே, அவன் சொன்னதின் உட்பொருள்! முத்தாய்ப்பாய் சென்றமுறைதான், தாமதமாக வருகிறானே என்பது குறித்துக் கேட்டு பட்டும் இருக்கிறாளே! ஆக, அவன் தன் எண்ணங்களில் மிகத் தெளிவாகத் தான் இருக்கிறான்!

 

அவளுக்குத் தான் மனதைப் பிசைந்தது. என்னவோ ஒரு சோர்வு! உணவுண்ண கூட பிடிக்காமல் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு வந்து, பேசாமல் படுத்துக் கொண்டவளுக்குக் கண்கள் தன்னையறியாமல் கலங்கியது.

 

துடைக்கத் துடைக்க கண்ணீர் பெருகி அவளது சோர்வை மேலும் அதிகமாக்கியது. அன்றிரவு அவள் உறங்க வெகுநேரம் பிடித்தது.

 

காலையில் எழுந்ததிலிருந்து அசோகனுக்கு பெரும் சஞ்சலம். அவன் பொதுவாகப் புகை பிடிப்பதோடு நிறுத்திக் கொள்ளும் ரகம். மதுபானங்களை அவ்வளவு எளிதாக நாட மாட்டான்.

 

அதிலும் மனைவி என்றொருத்தி வீட்டிற்கு வந்தபிறகு அவளுக்குச் சங்கடம் தரும் என்ற எண்ணம் மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தபடியால், திருமணத்திற்குப் பிறகு மதுபானத்தை அவன் தீண்டியதே இல்லை.

 

நேற்று நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வற்புறுத்தி, வெகுவாக தொல்லை செய்யவும் குடித்துத் தொலைத்து விட்டான்! இப்பொழுது சூழலை எதிர்கொள்ள மிகவும் சங்கடமாக இருந்தது. ரஞ்சிதா என்ன நினைத்தாளோ என்று தவிப்பாக இருந்தது.

 

காலையில் எழுந்ததிலிருந்து அவளிடம் பேசலாமா என்று யோசிப்பதும், பேசுவதற்கு மனம் சஞ்சலப்படுவதுமாக இருக்க, நேற்றைய விஷயத்தைக் குறித்து எதுவும் பேசாமலேயே அலுவல் பார்க்கக் கிளம்பிப் போய்விட்டான்.

 

அசோகன் அலுவலகம் கிளம்பி வந்து விட்டாலும் மனதிற்குள் பெரும் தவிப்பு! பொலிவிழந்து, புன்னகை இல்லாமல் சோர்ந்த தோற்றத்துடன் இருந்த மனையாளின் முகம் நினைவலையில் மீண்டும் மீண்டும் எழ, அவனால் வேலையில் கவனம் செலுத்த இயலாமல் தடுமாறினான்.

 

‘கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். மனசு கஷ்டப்படுவா’ அவனது எண்ணங்கள் அவளில் இருந்து மீள மறுத்தது! இதற்கு மேல் தாங்காது என்று வீட்டிற்குக் கிளம்பி விட்டான்.

 

அவனின் நண்பன் ஒருவன் அவர்கள் ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கிறான். அங்குதான் முதலில் போனான். என்னவோ இப்படி இடைப்பட்ட நேரத்தில் வீட்டிற்குப் போய் பழக்கம் இல்லாததால் கொஞ்சம் கூச்சமாக இருந்தது!

புது மாப்பிள்ளையாக வலம் வந்தபோதே இதெல்லாம் அவன் செய்ததில்லை! அப்படியிருக்க மணமாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேல் ஆன நிலையில் இப்படிப் போய் எப்படி நிற்பான்?

 

இந்த நேரத்தில் கடைக்கு வந்திருக்கும் நண்பனை அவன் தோழனும் எதிர்பார்க்கவில்லை போலும்! “என்னடா நேரமாவே வந்துட்ட?” என்று ஆச்சரியமாக வினவினான்.

எந்த கேள்விக்குப் பயந்து வீட்டிற்குப் போகாமல் இங்குத் தாமதம் செய்து தடுமாறினானோ அதையே நண்பன் கேட்க, அவனை முறைப்பாகப் பார்த்தபடி, “சிகரெட் எடுடா. இருக்கிற டென்ஷன்ல இவன் வேற…” எனக் கடுகடுப்புடன் கூறினான்.

 

அவன் வழக்கமாகப் புகைக்கும் பிராண்டை எடுத்து நீட்டிய நண்பனோ, ஏதோ டென்ஷன் போல என்று தோண்டி துருவாமல் விட்டுவிட்டான்.

 

அசோகனுக்கு இது ஒரு கெட்ட பழக்கம்! எங்கோ எப்படியோ நண்பர்களோடு சேர்ந்து தொடங்கியது இன்னமும் நிறுத்த முடியாமல் பயணிக்கிறது! கொஞ்சம் யோசனையா புகைக்க வேண்டும்! நேரம் போதவில்லையா புகைக்க வேண்டும்! நேரம் போகவில்லையா அதற்கும் புகைக்க வேண்டும்! டென்ஷனா கண்டிப்பாகப் புகைத்தே தீர வேண்டும்!

 

அப்படித்தான் இன்றும் அந்த ஆறாம் விரல் முளைத்துக் கருகிக் கொண்டிருந்தது! என்னவோ இதன் பாதகங்களை… படித்தவர்களும் உணராமல், உணர்ந்தும் நடைமுறைப் படுத்தாமல் இருப்பது பெரும் கொடுமை!

 

அசோகன் புகைப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அவன் அறியாதது… ரஞ்சிதாவை பார்க்கவென்று வந்த ஜோதிமணியும், அன்னபூரணியும் இவன் புகைப்பதைக் கவனித்து விட்டு சங்கடத்துடன் கடந்து சென்றது!

 

அது தெரியாமல் நிதானமாகப் புகைத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பிச் சென்றான். கூடத்தில் வளர்மதியும், ஜோதிமணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மாமியாரை அவன் எதிர்பார்க்கவில்லை!

 

“வாங்க அத்தை. வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?” என்று பொறுப்பாக விசாரித்தான். கண்கள் மனையாளைச் சத்தமில்லாமல் தேடியது!

 

பதில் கூறியவரிடம் மீண்டும் சம்பிரதாயமாக, “நீங்க மட்டும் தான் வந்தீங்களா அத்தை?” என்று வினவினான்.

 

“அன்னபூரணியும் வந்திருக்கா மாப்பிள்ளை. அக்காவும், தங்கச்சியும் பின்னாடி செடி பார்க்க போயிருக்காங்க” என்று விவரம் கூறினார் மூத்தவர்.

 

தலையசைத்துவிட்டு பின்கட்டுக்குச் சென்றான். பூச்செடிகளைப் பார்வையிட்டபடி பூரணி ரஞ்சிதாவிடம் பேசியது சரியாக அவனது காதிலும் விழ, மிகவும் சங்கடப்பட்டுப் போனான்.

 

அசோகனின் புகைப்பிடிக்கும் பழக்கம் தெரிந்து கொண்டதில் இருந்து பூரணிக்கு மனமே இல்லை! அக்காவுக்கு இந்த வாசனையே பிடிக்காதே, பாவம் கஷ்டப்படுவாளோ என்று மனசஞ்சலம் கொண்டாள்.

 

அதே அச்சத்துடன், “அக்கா உனக்கு தான் தண்ணி, தம் வாசம் எல்லாம் பிடிக்காதே! மாமா சிகரெட் பிடிப்பாங்க போலக்கா” என்று தயக்கமாகப் பூரணி கேட்டாள். தமக்கை எப்படிச் சமாளிக்கிறாளோ, மாமாவிடம் எடுத்துச் சொல்லக்கூடாதா என்ற எண்ணம் அவளுக்கு!

 

காலையிலிருந்து இருந்த சோர்வும், அழுத்தமும் மூத்தவளுக்குக் கண்ணீரை உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டிருந்தது. முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தவள் ஜீவனே இல்லாத சிரிப்பை உதிர்த்து, “கல்யாணத்துக்கு முன்ன தான் நமக்கு பிடிச்சது, பிடிக்காதது எல்லாம் பூரணி… கல்யாணத்துக்கு அப்பறம் அப்படி எல்லாம் பார்க்க… யோசிக்க… வாழ்க்கை நமக்கு வாய்ப்பு தருமா தெரியலை” என்றாள் கசப்பான குரலில்.

வலியைப் பூசி மொழுகிய குரல்! கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் அது புரியாமல் இருக்குமா என்ன?

 

அந்த சொற்கள் பூரணியைப் பாதிப்பதைக் காட்டிலும், பல மடங்கு அதிகமாய் அசோகனை பாதித்தது. என்னவோ ஒரு சலனம், மனதில் குடிகொண்ட பெரும் பாரம்… அப்பப்பா நிலை கொள்ளாமல் தவித்துப் போனான்!

 

“என்னக்கா இப்படி சொல்லற” என்று பூரணி ஆதரவாக ரஞ்சிதாவிடம் நெருங்கி அவளது வலது கரத்தை பற்றிக்கொள்ள,

இதற்கு மேலும் இப்படியே பேசுவதைக் கேட்டபடி நின்று தாமதித்தால் நன்றாக இருக்காது என்று புரிய, “பூரணி வாம்மா. இப்பதான் வந்தீங்களா?” என்று கேட்டபடி அசோகன் அவர்களை நெருங்கினான்.

 

பூரணியின் கவனம் அசோகனின் புறம் திரும்பவும், ரஞ்சிதா இருவருக்கும் முதுகாட்டி திரும்பி நின்று கொண்டவள், யாரும் அறியாமல் விழியில் துருத்திக் கொண்டிருந்த நீரைத் துடைத்துக் கொண்டாள்.

 

ஓரவிழியில் கவனித்த அசோகனின் கால்கள் மனைவியை நோக்கி எட்டுவைக்க பரபரத்தது. என்னவோ அவளை உடனே அணைத்து ஆறுதல் சொல்ல மனம் உந்தியது.

 

இப்படி எட்டாம் அதிசயமாய் எண்ணங்கள் தோன்றும் நாட்களில் தான்… பட்டப்பகலும், வெட்ட வெளியும், அருகில் மச்சினியுமாய் ஒரு சூழல் அமைய வேண்டுமா? கடும் சோதனை தான்!

 

நினைத்ததைச் செயல்படுத்த முடியாமல் திண்டாடினான். அதற்குத்தக்க அவள் வேறு அவனிடம் எதையும் கேட்கவில்லை. ‘ஏன் நேரமா வந்தீங்க?, எதுவும் எடுக்க வந்தீங்களா?’ இப்படி எந்த வினாக்களும் அவளிடமிருந்து இல்லை! பெரிதாகக் கணவனை கண்டுகொண்ட மாதிரியும் தெரியவில்லை. அவனின் கண்ணில் படாமல் கண்ணாமூச்சி வேறு!

 

பூரணிக்கு அசோகனின் செயலில் மனதே இல்லை. இதென்ன இந்த மாமா இப்படி சிகரெட் எல்லாம் பிடிக்கிறார் என்று அசூயையாய் உணர்ந்தாள். எப்படி இவர் இப்படிச் செய்யலாம்? என்றொரு கோபம். அசோகனிடம் பேசும்போது முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு தான் பதில் கூறினாள்.

அசோகனுக்கே சிரிப்பு வந்துவிட்டது. நண்டு சிண்டுக்கெல்லாம் பயப்படணும் போலவே! என்று நினைத்துக் கொண்டான். பூரணியின் செய்கை அவனை வெகுவாக கவர்ந்தது. அவள் வெளிப்படையாக தன் விருப்பமின்மையை கோடிட்டு காட்டுகிறாளே! இந்த செல்ல மனைவி ஒதுங்கியல்லவா நிற்கிறாள்!

மனைவியின் பாராமுகம் தாங்கமாட்டாமல் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தால், இப்பொழுதும் ஒதுங்கி நின்றல்லவா சோதிக்கிறாள். பெருமூச்சு விட்டபடி நேரத்தைக் கடத்தினான்.

ஜோதிமணி மூத்த மகளின் வீட்டிலிருந்து கிளம்பி, தன் அண்ணன் மகேந்திரன் வீட்டிற்கு சென்று விட்டு போகலாம் என்று எண்ணியிருந்தார். ரஞ்சிதாவின் வீட்டிலிருந்து இரண்டு பேருந்து நிறுத்தம் தாண்டி தான் அண்ணனது வீடு இருக்கிறது. இவ்வளவு தூரம் வந்துவிட்டு அண்ணனைக் காணாமல் சென்றால் நன்றாக இருக்காது.

பூரணியை அழைத்துக் கொண்டு நீதிவாசனின் வீட்டிற்குக் கிளம்ப, “என்ன பெரியம்மா அக்காவை பார்க்கணும்ன்னு தானே சொன்னீங்க” என்று முகத்தைச் சுருக்கி வைத்து சண்டை பிடித்தாள்.

“இவ்வளவு தூரம் வந்துட்டு, எங்க அண்ணனை பார்க்காம வருவேனா புள்ள, சும்மா வா… காலேஜுக்கு மட்டம் போட்டுட்டு இப்ப என்னை கேள்வி கேட்டுட்டு இருக்கா… கூறு கெட்டவ”

“என்னைத் திட்ட மட்டும் காரணத்தைக் கண்டு பிடிப்பீங்களே” எனத் தாடை வரை கடைவாயை இழுத்தவளிடம்,

“நீ எதுக்கு லீவு போட்ட? நீ காலேஜுக்கு மட்டம் போட்டா கொஞ்சுவேனாக்கும்”

“அது எனக்கு அக்கா கண்ணுக்குள்ளேயே நின்னா…”

“எனக்கும் எங்க அண்ணன் கண்ணு, மூக்கு, வாயி எல்லாத்துக்குள்ளேயும் தான் நிக்கிறாரு. பேசாம வா…”

“ரொம்பத்தான் பாசமலர் படம் ஓட்டாதீங்க”

“நான் ஏன் புள்ள பழைய படத்தை ஓட்டணும். கிழக்கு சீமையிலே படத்தை ஓட்டிக்கிறேன்” என்றாள் பெரியவள் அவளுக்குச் சரிக்குச் சரியாய் வம்பு வளர்த்தபடி!

அந்த படத்தின் பெயரைச் சொன்னதும், ‘முத்து மாமா என்னை விட்டுப் போகாதே!’ என்ற பெற்றோரின் கப்பிள் சாங் நினைவு எழ, அழையா விருந்தாளியாய், ‘சர்க்கரை இனிக்கிற சர்க்கரை’ என்கிற இவர்களுடைய பிரத்தியேக கப்பிள் சாங்கும் சேர்த்து நினைவில் வந்து பெண்ணவளுக்கு மூச்சடைத்தது.

“என்ன சத்தத்தையே காணோம்” என்று ஜோதிமணி மகளைக் கேட்டபடி திரும்பிப் பார்க்க,

“பெரியம்மா…” என்றாள் திருட்டு முழி முழித்து காற்றாகிப் போய்விட்ட குரலில்!

என்னவோ தவறு செய்யும் பதட்டமும், பரபரப்பும்! இந்த நினைவு நம்மை விட்டுப் போகவே போகாதா என்றிருந்தது. சட்டென்று ஒரு சோர்வு சூழ்ந்து கொண்டது.

அந்த சோர்வும், அந்த அழகான வீட்டினில் பேரழகான புன்னகையுடன் வரவேற்றவனின் தோற்றத்தில் சுவடின்றி மறைந்து போயிருந்தது! இந்த வேளை கெட்ட வேளையில் நீதிவாசன் வீட்டில் இருப்பான் என்று அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை! மனம் அவனைப்பார்த்த சந்தோச மிகுதியில் படபடத்துச் சிறகடித்தது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 18’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 18’

வேப்பம்பூவின் தேன்துளி – 18   முகூர்த்த நேரத்திற்கு முகம் கசங்க வந்தமர்ந்த அன்னபூரணியை, நீதிவாசன் சுட்டெரிக்கும் பார்வை பார்த்திருக்க அப்பொழுது அவளது தொண்டைக்குழியில் அமிழ்ந்து போனது தான் அவளது அழுகை. விழிகளும் அதற்கு மேலும் சுரப்பதற்கு மறந்து போனது.   ‘எதற்கிந்த திருமணம்?’

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’

வேப்பம்பூவின் தேன்துளி – 11 நீதிவாசன் வந்துவிட்டு சென்றபிறகு, அன்னபூரணியிடம் நிறைய மாறுதல்கள்! இன்னதென்று வரையறுக்க முடியாத வகையில் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே சென்றது! இலகுத்தன்மை அவளிடம் நிரந்தர வாசஸ்தலம் கொண்டுவிட, பூரிப்பு அவளது முகத்தை பலமடங்கு பொலிவாக்கியது.

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 15’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 15’

வேப்பம்பூவின் தேன்துளி – 15 நீதிவாசன் வாயிலில் நின்றபடி கைப்பேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான். இவர்களுக்காகக் காத்திருந்தானா இல்லை பொதுவாக நின்றிருந்தானா தெரியவில்லை… ஆனால், அவனது பார்வை மட்டும் வாயிலில் ஆர்வமாகப் பதிந்து பதிந்து மீண்டு கொண்டிருந்தது. யாரையோ எதிர்பார்ப்பது போல!