சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 13’

வேப்பம்பூவின் தேன்துளி – 13

 

மாலை மூன்று மணிக்கும் மேல் இருக்கும். “பழனியாண்டவர் ஸ்டோர்ஸ்” கடையின் வரவு செலவு கணக்குகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் நீதிவாசன். இது அன்றாட வழமை தான்!

 

அப்பொழுது அவனது அறையில் இருந்த தொலைப்பேசி சிணுங்கியது. வரவேற்பில் அமர்ந்திருந்த மேனேஜர் அழைத்திருந்தார்.

 

“ம்ம்… சொல்லுங்க”

 

“சார், ஒரு பொண்ணு போன் பண்ணி உங்களுக்கு லைன் தர சொல்லறாங்க. உங்க சொந்தமாம். ஏதோ அவசரமாம். யாருக்கோ அடி பட்டிருக்கு, அதை உங்ககிட்ட சொல்லணும்ன்னு சொல்லறாங்க. பேரு அன்னபூரணியாம்” என்று அழைப்பின் காரணத்தை விளக்கினார் அவர்.

 

நீதிவாசனுக்கு விஷயத்தைக் கேள்விப்பட்டதும் என்னவாயிற்று என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. “சரி லைன் கொடுங்க. சொந்தக்கார பொண்ணு தான்” என்றான் மெலிதாக பதற்றத்தை வெளிக்காட்டிய குரலில்!

 

அழைப்பு மாற்றி விடப்பட்டதும், “ஹலோ…” என்றான் பரபரப்பாக.

 

அவன் குரல் கேட்டது தான் தாமதம், “ஹலோ… அது… அது…” என்று பூரணி தேம்பத் தொடங்கி விட்டாள்.

 

“ஸ்ஸ்ஸ்… என்னாச்சு?” என்றவனின் குரலில் மெல்லிய பதற்றம். உடனே கடையின் அழைப்பில் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் சுதாரித்து, “சரி என் நம்பர் குறிச்சுக்க. என் செல் போனுக்கு கூப்பிடு” என்று சொல்லி, அவனுடைய கைப்பேசி எண்ணைப் பகிர்ந்து கொண்டான்.

 

இந்த அணைப்பைத் துண்டித்துவிட்டு அவனுடைய தனிப்பட்ட எண்ணிற்கு அழைத்தாள். “அழாம சொல்லு… என்னாச்சுன்னு?” என்று அழைப்பை ஏற்றதுமே நிதான குரலில் கேட்டான் அவன்.

 

“அது… அது… கோபி அண்ணாக்கு ஏதோ விபத்தாயிடுச்சாம்” என்று மீண்டும் தேம்பினாள்.

 

“ஸ்ஸ்ஸ் அழக்கூடாதுன்னு சொன்னேனில்லை. யாரு சொன்னாங்க உனக்கு? நீ காலேஜ் போகலையா? இப்ப எங்க இருந்து பேசற?” என்று ஒரே அடுக்கில் விசாரித்தான்.

“காலேஜ்ல தான் இருக்கேன். அண்ணா பிரண்ட் கிட்ட இருந்து எனக்கு போன் வந்தது. அதோட அவங்க பேசற முறை கூட… என்னவோ கொஞ்சம் பொருந்திப் போகலை… எனக்கு பயமா இருக்கு” என்று தன் குழப்பத்தைத் தெளிவே இல்லாமல் அவனிடம் கொட்டினாள்.

 

“முதல்ல அழறதை நிறுத்துடி. எனக்கு என்னவோ மாதிரி இருக்கு. எதுக்கு இப்படி அழற நீ?” என்று அவள் அழுவது தாங்க மாட்டாமல் கடிந்து கொண்டான்.

அவனும் எத்தனை முறை தான் அழாதே அழாதே என்று சொல்வது. அவள் அழுவதால் வேறு, இவனுக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை!

 

அவள் தேம்பல் விசும்பலாக, “எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அண்ணாவுக்கு ஒன்னும் இல்லை தானே” என்று அதைப்பற்றி துகளளவு கூட அறியாதவனிடம் தவிப்பாகக் கேட்க, ஒன்றுமே தெரியாமல் அவன் என்ன சொல்லி சமாதானம் செய்வான்?

அதோடு அவள் குறிப்பிட்ட அண்ணா பிரண்ட்.., அவள் வெகுவாக தயங்கியும், பெரும் அச்சத்துடனும் உரைத்த அவன் பேசும் முறை.., இதெல்லாம் இவனுக்குச் சரியாகப் படவில்லை. மனதிற்குள் ஒருவித சந்தேகத்தைத் தோற்றுவித்தது.

அவளுக்கு இப்பொழுது அவனின் அருகாமை அவசியம், எதற்கோ சமாளிக்கத் தெரியாமல் பயப்படுகிறாள் என்று புரிய, “காலேஜ்ல பர்மிஷன் வாங்கிட்டு வெயிட் பண்ணு. இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன். அதுவரை அவங்ககிட்ட இருந்து எதுவும் போன் வந்தா எடுக்காத… நான் என்ன எதுன்னு விசாரிச்சுக்கிறேன். அந்த நம்பர் மட்டும் எனக்கு அனுப்பிவிடு” என்று கண்டிப்பான குரலில் கூறியவன், சொன்னபடி அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூரிக்கு வந்திருந்தான்.

இடையில் வரும் வழியிலேயே கோபியின் உள்ளூர் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து, அன்று சென்னையிலிருந்து வந்திருந்த கோபியின் நண்பர்கள் யாருடைய நம்பரும் கிடைக்குமா என்று விசாரித்து வாங்கியிருந்தான்.

ரஞ்சிதா திருமணத்தின் சமயம் கோபி தன் அலுவலக நண்பர்களை உள்ளூர் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, கவனிக்கச் சொல்லியிருந்தால்… இவர்களிடம் கோபியின் சென்னை நண்பர்களின் எண்கள் இருந்தது.

கிடைத்த எண்களில், ஒன்றுக்குத் தொடர்பு கொண்டு… என்ன, ஏதென்று நீதிவாசன் விசாரித்துத் தெரிந்து கொண்டான். கூடவே, கோபியின் கைப்பேசி எங்கே? அதற்கு ஏன் அழைப்பு போகவில்லை என்றும் தெரிந்து கொள்ள… தெரிந்து கொண்ட விஷயங்கள் அவனுடைய கோபத்தைத் தாறுமாறாக அதிகரிப்பதாக இருந்தது.

கல்லூரி வாயிலில் வண்டியை நிறுத்தியவன், தனது வண்டியைப் பார்த்து விட்டும் கண்டு கொள்ளாமல் நிற்பவளுக்குக் கைப்பேசியில் அழைப்பு விடுத்து, “வா வந்து கார்ல ஏறு” என்றான் மெலிதாக கடிந்தபடி.

 

“ம்ம் ஹ்ம்ம்… நான் எப்படி? நீங்க வாங்க” எனத் தலையை மறுப்பாக ஆட்டியவளிடம், எதுவும் பேசாமல் கைப்பேசி அழைப்பைத் துண்டித்திருந்தான்.

 

அவன் இறங்கி வருவான் என்று பொறுத்துப் பொறுத்து பார்த்தவள், அவன் வர மாட்டான் என்று தெளிவுற அறிந்து, அவளாகவே சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவள் புறம் கூட திரும்பாமல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு காரை இயக்கினான்.

 

கூடவே, அவள் முன்பே கைப்பேசியை எடுத்து முத்துச்செல்வத்திற்கு அழைத்து, “ஒரு வேலை விஷயமா வெளிய வந்தேன். இங்க உங்க பொண்ணு வீட்டுக்குப் போக நின்னுட்டு இருந்தா. அவளை நானே அழைச்சிட்டு வந்து வீட்டுல விட்டுடறேன். நானே இந்த வாரம் உங்களைப் பார்க்க வரதா தான் இருந்தேன். அதான் இப்பவே வந்துடலாம்ன்னு. உங்க பொண்ணை கூப்பிட்டு வரலாமில்லை?” என்று விவரம் கூறி அனுமதி கேட்டான். இவள் அச்சோ என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

‘அப்பா கிட்ட எல்லாம் ஏன் சொல்லணும்?’ என்னும் பதற்றம் அவளுக்கு! ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்று சங்கடப்பட்டுக் கொண்டாள். கூடவே, ‘அங்கே அண்ணாவுக்கு என்ன ஆச்சோ  தெரியலையே!’ என்று பயமும், பதற்றமுமாகத் தெளிவற்ற நிலையில் அமர்ந்திருந்தாள்.

அவனோ வாகனத்தை நெரிசல் இல்லாத சாலையில் மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, ஸ்டியரிங் வீலில் தாளம் தட்டிக் கொண்டிருந்தான்.

 

இவளாக என்ன ஏதென்று விவரம் சொல்ல வேண்டுமாம்! ‘ஐயோ ரொம்பத்தான்’ எனக் கடுப்பாக வந்தது அவளுக்கு!

 

“அண்ணாக்கு ஆக்சிடெண்ட்ன்னு போன் வந்ததுன்னு சொல்லறேன். நீங்க என்னடான்னா…” என்று அன்னபூரணி மென்குரலில் மனத்தாங்கலோடு சொல்லிவிட்டு அவன் முகம் பார்த்தாள்.

 

“கோபி எப்ப ஸ்வீடன் போகணும்?”

 

“இன்னும் நாலு நாளுல”

 

“உனக்கு போன் யார் செஞ்சா”

 

“யாரோ தீபனாம். அண்ணாவோட பிரண்டாம். ஆனா, அவங்க பேசற தோரணையே ஒரு மாதிரி…” என்றவள், அவன் பார்வையின் மாற்றத்தை உணர்ந்து, “அது அது ரொம்ப உரிமையா… அது” என முடிக்க முடியாமல் திணறியபடி எதிர்புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

“உன் நம்பருக்கு ஏன் போன் செஞ்சானாம்?” என்றபோது அவனது குரல் இறுகியிருந்தது. ‘புரிஞ்சிடுச்சோ…’ என்றபடி அவனது முகத்தைத் திரும்பிப் பார்த்தவள், அவனது கடுமையில் அவனுக்குப் புரிந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டாள்.

 

மென்குரலில், “அது கோபி அண்ணன் வீட்டுல யாருக்கும் சொல்ல வேணாம்ன்னு சொல்லிட்டானாம். அதான் அவனுக்கு தெரியாம இவரு கூப்பிட்டாராம்” என்று தீபன் இவளிடம் சொன்ன காரணத்தை ஒப்புவித்தாள்.

“எவரு?”

“ம்பச் அதுதான் அந்த போன் செஞ்சவங்க…” என்றாள் சலிப்பாக!

 

“சரி ஏன் உனக்கு போன் பண்ணினான்? மாமாவுக்கு தான பண்ணியிருக்கணும்?”

 

“அப்பாவுக்கு எதுவும் ஹெல்த் இஸ்யூ இருக்குமோன்னு யோசிச்சு எனக்கு பண்ணுனதா சொன்னாங்க..”

 

“வேற என்ன சொன்னான்?”

 

“நான் கோபியை பார்த்துக்கிறேன். நீ ஏன் கவலைப்படற… உனக்காக இதைக்கூடச் செய்ய மாட்டேனா… அப்படியெல்லாம்…” அவன் பார்வையில் தெரிந்த உஷ்ணத்தில் அவளது பேச்சு தடைப்பட்டது.

“சொல்லு…” என்றான் இறுகிய குரலில்.

“அவங்க பேசற விதம் எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு. என்னவோ சரியில்லைன்னு தோணுச்சு” என்றாள் பதற்றமான குரலில். சம்பத்திடம் இருந்து மீண்ட பிறகு, எல்லாவற்றிலும் அதீத கவனம் தானே! அதனாலேயே தீபனின் நோக்கம் வெகு சீக்கிரமே அவளுக்குப் புரிந்து விட்டிருந்தது.

 

தெளிவாகச் சொல்லாமல் இழுத்தடித்தவளிடம், “எதுக்கு அழுத? எனக்கு எதுக்கு போன் பண்ணுன?” என்று கிட்டத்தட்ட நீதிவாசன் எரிந்து விழ, அவள் கண்கள் கலங்கி விட்டது. கார் கதவின் புறம் முகத்தைத் திருப்பி அழுகையை மறைத்துக் கொண்டாள்.

 

அதைக் கண்டு கொள்ளாமல், “என்னை எதுக்கு கூப்பிட்டன்னு கேட்டேன்?” என்று கேட்டவனின் குரலில் அழுத்தம் கூடியிருக்க,

 

“அம்மா, அப்பாவுக்கு எப்படி சொல்ல? அண்ணாவுக்கு என்ன ஆச்சோன்னு பயமா இருக்கு? அண்ணாவுக்கு போனும் போக மாட்டீங்குது. போன் செஞ்சவன் பேசற தோரணை வேற சரியா படலை… அவன் உண்மையைத் தான் சொன்னானான்னும் தெரியலை. மொத்தத்துல இப்ப என்ன செய்யணும்ன்னு எனக்குப் புரியலை. போதுமா?” என்று படபடவென பொரிந்தவள்,

 

“நான் பஸ்ஸை பிடிச்சே வீட்டுக்கு போயிக்கறேன். அங்க போயி அப்பா கிட்ட சொல்லிக்கிறேன்” என்று காரை விட்டு இறங்க எத்தனிக்க, கார் சென்டர் லாக்கில் இருந்ததால் அவளால் திறக்க முடியவில்லை.

 

அவனை முறைத்தபடி, “கார் கதவை திறந்து விடுங்க” என்று சொல்ல, கரங்களை மார்பின் குறுக்கே கட்டியபடி தோரணையாக அமர்ந்திருந்தானே தவிரப் பதில் சொல்லவில்லை.

 

அதற்குள் பூரணியின் கைப்பேசி சிணுங்க, தீபன் தான் அழைத்திருந்தான். எடுத்து பார்த்ததுமே அவள் முகம் சுருங்கி விட்டது. அவன் பேசும் தோரணையே இவளுக்கு பிடிக்கவில்லை. அதேசமயம் அண்ணனுக்கு என்னவோ என்று மனது வேறு அடித்துக் கொண்டது.

அவளது மனதின் அலைப்புறுதல் விழிகளின் நாட்டியத்தில் தெரிந்தது. கைப்பேசியின் அழைப்பை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் பெரும் தவிப்போடு அமர்ந்திருக்க,

 

வெகு நிதானமாக அவளது கரங்களில் இருந்த கைப்பேசியை வாங்கியவன், அழைப்பை ஏற்று லவுட் ஸ்பீக்கரில் போட்டான்.

 

“ஹாய் பேபி, கோபிக்கு ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்குடா. பயப்பட எதுவும் இல்லை சரியா? நீ பயந்துட்டு இருப்பியேன்னு தான் கூப்பிட்டேன்” என்று குழைந்த குரலில் பேசியது தீபனே!

 

‘பேச்சு சரியில்லைன்னா இதுவா?’ என்றவனுக்கு கைமுஷ்டி இறுகியது.

 

தீபனுக்கு பதில் கூற பிடிக்காமல் அன்னபூரணி அமைதியாக அமர்ந்து கொண்டாள். ‘நீதானே போன் அட்டண்ட் செஞ்ச, நீயே பேசு…’ என்னும் தோரணை அவளிடம்!

 

அதை புரிந்து கொண்டவன் போல நீதிவாசனே பதிலும் கூறினான். “ஹலோ தீபன். சொல்லுங்க என்ன விஷயம்? நான் நீதிவாசன் பேசறேன்” என்று கணீர் குரலில் அவன் பேச, அவனை எதிர்பாராமல் தீபன் விழி விரித்தான்.

 

தீபனின் மௌனத்தை எதிர்பார்த்து, “சொல்லுங்க கோபிக்கு என்ன ஆச்சு?” என்று மீண்டும் கேட்டான் இவன்.

 

“அது ஒரு ஆக்ஸிடெண்ட்”

 

“இஞ்சூரி எப்படி மைனர் ஆர் மேஜர்?”

 

“மைனர் தான்” அதிர்ச்சியில், வாத்தியாருக்குக் கட்டுப்பட்ட மாணவன் போல எதிர்புறத்திலிருந்து பதில் வந்தது.

 

“ஹாஸ்பிட்டல்ல இருக்கீங்களா?”

 

“ஆமாம்”

 

“அட்மிட் பண்ண சொன்னாங்களா?”

 

“இல்லை. தேவையில்லை சொல்லிட்டாங்க” இப்பொழுது கொஞ்சம் தெளிவு வந்திருந்தால் அவன் குரலில் அலட்சியம் தெரிந்தது.

 

“அப்ப ரொம்ப மைனர் தான் போலயே. என்னாச்சு? எப்படி அடி பட்டுச்சு?” என்று மேலும் கேள்விகளை எழுப்பினான் நீதிவாசன்.

 

“என்னங்க துருவித் துருவி விசாரணை செய்யறீங்க” என்று தீபனின் குரலில் அப்பட்டமான எரிச்சல்.

 

“நீங்க தானே போன் பண்ணியிருக்கீங்க. அதான் உங்ககிட்ட விவரம் கேட்கிறேன்” என்ற நீதியின் பதிலில் நக்கல் நிரம்பி வழிந்தது. தீபன் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை!

 

“சொல்லுங்க விவரம் சொல்ல தானே கூப்பிட்டீங்க” தீபனின் அமைதியை நீதிவாசன் சீண்ட,

 

“கண்டிப்பா. விவரம் தான் சொல்லணும். அதை உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை”

 

“அதென்னங்க விவரம்? எங்க வீட்டு பொண்ணுங்க கிட்ட மட்டும் சொல்லற விவரம்?”

 

“என்ன சும்மா உங்க வீட்டு பொண்ணு, அது இதுன்னு ரொம்ப தான் பேசறீங்க. அவ மேஜர், அவகிட்ட அப்ரோச் செய்ய விட மாட்டீங்களா? என் நோக்கம் உங்களுக்கு புரிஞ்சிருக்கும். எனக்கு அன்னபூரணியை ரொம்ப பிடிச்சிருக்கு. பிளீஸ் டோன்ட் இன்டர்பியர்… நான் அவகிட்ட பேசிக்கிறேன்” என்று கத்தினான்.

 

“உங்க அப்ரோச் முறையில்லையே தீபன். உங்ககிட்ட அவ நம்பர் எப்படி வந்தது? அவ கொடுத்தாளா? இல்லை கோபிக்கிட்ட சொல்லிட்டு தான் அவன் போன்ல இருந்து நம்பர் எடுத்தீங்களா?” என்றான் சுள்ளென்று.

 

தீபனுக்கு ஆத்திரம் எல்லையை கடந்தது. “நான் யாருகிட்ட கேட்கணும். அந்த பொண்ணு யாரும் இல்லாத அனாதை தானே! பிறகு வேற யாருகிட்ட கேட்கணும்? சென்னையில சொந்த வீடு, கை நிறைய சம்பளம், வெல் செட்டில்ட் பேமலி… இதைவிட யாரு அவளுக்கு வந்துடுவாங்க. அனாதை பொண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கைத் தர முன்வர என்னை நீங்க எப்படி ரெஸ்பெக்ட் பண்ணனும்?” என்றவனின் பேச்சு,

 

“ஸ்டாப் யுவர் நான்சென்ஸ்” என்ற நீதிவாசனின் குரலில் அடங்கியது.

 

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர் தீபன். இன்னும் ஒரு வார்த்தை இப்படி பேசுனீங்க, சென்னை வந்து துவம்சம் பண்ணிடுவேன்” வாயைப் பொத்தி கண்ணீர் வடிப்பவளின் வேதனையைத் தங்கமாட்டாமல் உச்சஸ்தாதியில் கத்தினான்.

 

அப்பொழுதும் அலட்சியமாக, “என்ன மிராட்டறியா?” என்று தீபன் எகிற, “ச்சீ நாயே உனக்கு ஒருமுறை சொன்னா புரியாது. இனியொரு முறை பூரணிகிட்ட பேச முயற்சி செஞ்சா, உனக்கு நடக்கிற சேதத்துக்கு நான் பொறுப்பில்லை” என்றவனின் குரலே நான் சொல்வதைச் செய்வேன் என்று தொனியில் ஒலித்தது.

 

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ்….” நாய் என்று சொல்லியதால், அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் தீபன் கத்தினான். இவன் அனாதை என்று வரையறுத்தது மட்டும் எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

 

“வெண்ணை நீ மைண்ட் செஞ்சியா டா… பரதேசி… போனை வெச்சுட்டு போயிடு… சும்மா வந்துட்டான், வழுக்கி விழுந்ததுக்கெல்லாம்… ஆக்ஸிடெண்ட்ன்னு சொல்லி பொண்ணுங்களை ஏமாத்த? இன்னொருமுறை இப்படி எதுவும் டிரை செஞ்ச…” என்று மிரட்ட,

 

“என்ன நீங்க, ஒரு அனாதை பொண்ணுக்கு இதைவிட என்ன நல்ல வாழ்க்கை அமைஞ்சிடும்…”

 

“டேய் விளங்காதவனே… அவ பக்கத்துல இருக்காளேன்னு பார்க்கிறேன், இல்லை வண்டி வண்டியா திட்டிடுவேன். நீ வாழ்க்கை தரும் அளவு எங்கவீட்டு மகாராணி ஒன்னும் இல்லை. நீ ஒழுங்கு மரியாதையா உன் அழுக்கு, மன வக்கிர பேச்சை எல்லாம் மூட்டை கட்டிட்டு கிளம்பிடு. இல்லை உன் ஆபிஸ் ல செக்ஸுவல் ஹாரஸ்மெண்ட்டுன்னு ரிப்போர்ட் பைல் பண்ண வேண்டி வந்துடும். அப்பறம் பெருமை பீத்திக்கிறியே நல்ல வேலை, கை நிறைய சம்பளம்ன்னு அது கானல் நீராயிடும்” என்று சீரியவனின் கோபத்தில், தீபன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

 

‘ஏதோ அடக்கமா, அழகா இருக்காளேன்னு… அனாதையா இருந்தாலும் பரவாயில்லைன்னு யோசிச்சா… சரியான லோ கிளாஸ் குடும்பம்’ என்று எண்ணிக் கொண்டவன், பூரணியின் கைப்பேசி எண்ணை தன் கைப்பேசியிலிருந்து நீக்கியிருந்தான்.

 

காரினுள் அமர்ந்திருந்த நீதிவாசன் செய்வதறியாது திகைத்தான். பூரணி அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள். அனாதை.., அனாதை.., அனாதை.., இந்த பேச்சு அவளைத் துரத்துவதை நிறுத்தவே நிறுத்தாதா? எத்தனை முறை தான் எழுந்து நிற்பது! அதிலும் போனால் போகிறதென்று வாழ்க்கைத் தர முன் வந்தவன் போல என்ன ஒரு பேச்சு? இவளுக்கு வாழ்க்கை இல்லை என்று எப்பொழுது அவனிடம் கேட்டாள்?

 

தனக்கு இப்படி ஒரு நிலை வர வேண்டுமா? உரிமையாய், உறவாய் தன்னை அரவணைக்க ஒரு அழகிய குடும்பம் இருக்கும்போதே இவர்களுக்கெல்லாம் பேச எங்கிருந்து தைரியம் வருகிறது என்று தெரியவில்லை! மண்புழுவிடம் வீரம் காட்டும் இவர்களை எல்லாம் எந்த வகையில் சேர்ப்பது?

அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தவளிடம், “கோபிக்கு எதுவும் இல்லை. ஜஸ்ட் கால் ஸ்லிப் ஆகி ஆபிஸ் கேம்பஸ்ல விழுந்துட்டானாம். அவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காங்க. டூ டேஸ் ரெஸ்ட் எடுத்தா போதுமாம். போன் அவன் டெஸ்க்லயே மறந்து வெச்சுட்டு போயிட்டான் போல, அதை எடுத்துத் தான் இந்த பரதேசி இப்படி மிஸ் யூஸ் பண்ணியிருக்கான்” என்று நீதிவாசன் விளக்கம் தந்தான்.

“ம்ம்ம்…” என்று தலையசைத்துக் கொண்டு, மறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அழுவியா நீ?” என்று நீதிவாசன் அதட்ட, பதில் கூறவில்லை அவள்.

“ம்ப்ச்… எதுக்கு அழுவ அன்னம்? இதெல்லாம் ஒரு பிரச்சனையா? பிரச்சனை வந்தா பேஸ் பண்ணாம அழுதா சரியாயிடுமா?” என்று எரிச்சலோடு கேட்டவன், காரை இயக்கி அவள் வீட்டு நோக்கிப் பயணித்திருந்தான்.

அவளைச் சமாதானம் செய்யும் வழி தெரியவில்லை என்றில்லை! சமாதானம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவே இவனுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் எல்லாம் ஒரு ஆள் அவன் பேசியதற்கு இவள் அழுவாளா என்னும் எரிச்சல் தான் நிறைந்திருந்தது!

அந்த எரிச்சல் அவளது அழுகையின் முன்பு, சிறிது நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியாததால், மீண்டும் காரை ஓரமாக நிறுத்தினான். என்னவென்று பார்த்தவளிடம், “அன்னம் நீ அழுது இன்னைக்குத் தான் முதல்முறை பார்க்கிறேன். இனி இப்படிப் பார்க்கக் கூடாது…” என்று அவளை ஏறிட, அவனது முகத்தில் தெரிந்த வேதனையில் இவள் தன் கண்ணீரை நிறுத்தியிருந்தாள். தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் நீட்ட, அவள் வாங்கி அருந்திக் கொண்டவள், முகத்தையும் கழுவிவிட்டு வந்து கண்மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டாள். மனம், உடல் இரண்டும் வெகுவாக சோர்ந்திருந்தது.

காயம்பட்டது போல வலித்த மனதினை மயிலிறகு போல ஏதோ ஒரு உணர்வு வருடித் தந்தது அவளுக்கு வெகுவாக ஆறுதலாக இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 17’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 17’

வேப்பம்பூவின் தேன்துளி – 17   திருமண இரவுகள் தான் எத்தனை கோலாகலம்! அந்த மிகப்பெரிய மண்டபம் முழுவதும் மின்விளக்குகளால் பிரகாசிக்க, அது கோபாலகிருஷ்ணன், லாவண்யாவின் திருமண வைபவம். திருமண ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பணத்தின் செழுமை தெரிந்தது.   லாவண்யா

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’

வேப்பம்பூவின் தேன்துளி – 11 நீதிவாசன் வந்துவிட்டு சென்றபிறகு, அன்னபூரணியிடம் நிறைய மாறுதல்கள்! இன்னதென்று வரையறுக்க முடியாத வகையில் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே சென்றது! இலகுத்தன்மை அவளிடம் நிரந்தர வாசஸ்தலம் கொண்டுவிட, பூரிப்பு அவளது முகத்தை பலமடங்கு பொலிவாக்கியது.

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 19’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 19’

வேப்பம்பூவின் தேன்துளி – 19 நீதிவாசன், அன்னபூரணியின் திருமண வரவேற்பு அனைத்து உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து சீரும் சிறப்புமாக நடந்து முடிந்திருந்தது.   பூரணி அந்த வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருந்திப் போனாள். மாமனார் மகேந்திரனும், வீட்டு வேலைகளைக் கவனிக்கக் காலையிலும்,