சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 12’

வேப்பம்பூவின் தேன்துளி – 12

 

ரஞ்சிதாவின் திருமணத்திற்குச் சென்று வந்ததில் இருந்து தீபலட்சுமிக்கு அப்படியொரு எரிச்சல்! அவள் மனம் உலைகலனாக கொதித்துக் கொண்டிருந்தது.

 

தன்னைப்பார்த்து ஊரே வாயைப் பிளக்க வேண்டும். வாழ்ந்தால் இவளைப்போல ஒரு ராஜவாழ்க்கை வாழ வேண்டும் என்று அனைவரும் ஏக்கப் பெருமூச்சு விட்டு, பொறாமை கொள்ள வேண்டும் என்றெல்லாம் எண்ணிதான் திருமணத்திற்குக் கிளம்பியிருந்தாள்.

 

அப்சரஸ் என்று அவளாக வரையறுத்துக் கொண்ட வரையறையின் படி… நல்ல விலை உயர்வான புடவை, வீட்டிலிருந்த மொத்த நகைகள், பார்லர் அலங்காரம் எனக் கிளம்பி நின்றவளை… அன்பரசனே ரசனையோடு நோக்கவில்லை.

 

கழுத்து கொள்ளா நகையைப் போட்டு நிற்பவளைச் சலிப்பாகப் பார்த்தபடி, “எதுக்கு இத்தனை நகை தீபா. ஒன்னு மேல ஒன்னு போட்டு? கொஞ்சம் கம்மியா போடு” என்றான் கணவன்.

 

அவனது பேச்சை ரசிக்காதவளோ சட்டென்று முகம் சுருங்க, “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாளுன்னு காட்டிட்டீங்கல்ல…” என்றாள் சுள்ளென்று!

 

தீபாவின் சமீபத்திய வாடிக்கைகள், புதுப் பரிமாணங்கள் எல்லாம் அன்பரசனை வெகுவாக யோசிக்க வைக்கிறது. ‘என்னவாயிற்று இவளுக்கு? இவள் இப்படிப்பட்டவள் இல்லையே?’ என்று ஆரம்பத்தில் யோசிக்கத் தொடங்கியவன்,

 

இப்பொழுதெல்லாம், ‘இவளைப் பத்தி நான்தான் சரியா புரிஞ்சுக்கலையோ? இதுதான் இவளோட உண்மையான குணமோ?’ என்று எண்ணத் தொடங்கியிருந்தான்.

 

அன்பரசன் பொதுவாகச் சண்டை, சச்சரவுகளை வளர்க்க விரும்பவே மாட்டான். அதற்கு முதல் காரணம் அவர்கள் இருப்பது பெரியப்பாவின் வீட்டில். வீட்டின் உரிமையாளர்களே சண்டை சச்சரவு என்றிருந்து அவன் பார்த்ததில்லை. அப்படியிருக்க அவன் எப்படி அதைச் செய்வான்?

 

அதோடு என்னதான் நெருங்கிய உறவு என்ற போதிலும், பெரியப்பாவின் பெரிய மனது, அனைவரையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து பார்க்கும் பாங்கால் மட்டுமே இங்கே இருக்க முடிகிறது என அவனுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை என்றாலும், அதற்காக அதிகமாக அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வதும் முறையில்லையே!

 

இப்பொழுதும்… மனைவியின் பேச்சு எரிச்சலைத் தந்த போதும் வார்த்தையாட விரும்பாமல், “உன்னிஷ்டம்” என்று தோள் குலுக்கலோடு நகர்ந்து விட்டான்.

 

அவளது சுய வரையறையின் படி, அப்சரஸாக கிளம்பி நின்றவளை, கணவன் மதியாமல் அலட்சியப்படுத்தியதே அன்றைய நாளின் முதல் அடி என்றால், மீதம் வாங்கியதெல்லாம் வரையறுக்க முடியாதளவு அடிகள்!

 

திருமண மண்டபத்தில் இவர்களை வாயிலில் பார்த்ததும், அங்கு நின்றிருந்த கோபி முகம் திருப்பி விட்டுச் செல்லவுமில்லை, கண்டுகொள்ளாமல் நகர்ந்து விடவும் இல்லை. மாறாகப் புன்னகை முகமாக அருகில் வந்து வரவேற்பான குரலில், “வா தீபா, வாங்க அண்ணா” என்று முறைப்படி பொறுப்பாக வரவேற்றான்.

 

ஒரு காலத்தில் அப்படி நம்மிடம் உருகி நின்றவன், இப்பொழுது எப்படி யாரோ போலப் பேசுகிறான் என்று தீபலட்சுமி ஆச்சரியப்பட்டுப் போனாள். சின்ன உறுத்தல், ஏக்கம், சோகம், இழப்பின் வலி இப்படி எதுவுமே காணோமே என்று அவனைத் தீர்க்கமாக ஆராய்ந்தாள்.

 

ஆராய்ச்சியின் பயனாய், ‘இவன் மனதிற்குள் வலியை வைத்துக் கொண்டு வெளியில் நடிக்கிறான்’ என்று அவளின் மனம் எக்காளமிட்ட நேரத்தில்,

“உங்க கல்யாணத்துக்கு வர முடியலைண்ணா. ஆபிஸ்’ல இருந்து வெளிநாடு போக வேண்டியதா போச்சு, நான் கிளம்பின ஒரு மாசத்துலயே உங்களுக்குக் கல்யாணம். அதுதான் என்னால வர முடியலை. இப்ப தான் லீவே கிடைச்சிருக்கு… உங்க திருமணத்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா” என்று அன்பரசனுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தான் கோபாலகிருஷ்ணன்.

 

ஏற்கனவே அவன் வெளிநாடெல்லாம் சென்றானே என்ற கடுப்பில் இருந்தவளுக்கு, இப்படி ஒன்றுமே நடவாதது போல அவன் வளைய வருவது, அத்தனை எரிச்சலை வாரி வழங்கியது. தன் மனநிலையை முகத்தில் காட்டாமல் இருப்பது தான் எத்தனை கொடுமை! புன்னகை எப்போதோ வாடியிருந்த போதும், முகத்தில் எரிச்சலைக் காட்டாமல்… இயன்ற மட்டும் வெகு இயல்பாக இருப்பது போல முகபாவனையை வைத்துக் கொண்டாள். ஆனால், அவள் விழிகளில் குரூரம் நிரம்பி வழிந்தது.

அது, தான் சுகமாய் வாழாத போது, தன்னால் நிராகரிக்கப் பட்டவன் செழிப்போடு வாழ்ந்து விடுவேனோ என்னும் குரூரம்!

“ஏன் முகமே மாறிடுச்சு” என்று அன்பரசன் கேட்டபிறகே, சுற்றம் உரைக்க… சிரமப்பட்டு முகத்தில் புன்னகையை ஒட்ட வைத்தபடி ஒன்றும் இல்லை என்னும் விதமாக தீபலட்சுமி தலையசைத்தாள்.

இவளை நேரில் பார்க்கும் போது கோபியின் முகம் எப்படி மாற வேண்டும் என்று நினைத்தாளோ, அதே போன்று இப்பொழுது இவள் மாறி நின்றிருந்தாள். வாழ்க்கையே பூமராங் தானே!

 

ஆனால், கோபியோ அவளுக்கு எதிர்ப்பதம்! முகத்தில் தவழவிட்ட மென்னகை! தங்கையின் கல்யாணம் என்கிற சுறுசுறுப்பு! வெளிநாட்டு வாழ்வின் பயனாய் முகத்தில் தோன்றிய மிடுக்கும், பொலிவும்! என்று வெகு வசீகர தோற்றத்துடன் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தான்.

ஜோதிமணி தீபாவின் வருகையை கவனித்து விட்டு அருகில் வந்து, “என்ன தீபா, நீ நேத்து ராத்திரியே வந்திருக்கணும் தானே… என்னவோ யாரோ வீட்டு விசேஷம் மாதிரி முகூர்த்தத்துக்கா வரது” என்று கடிந்து கொள்ள, வேறு வழியில்லாமல் எதையோ சமாளிப்பாகக் கூறி, இளித்து வைத்தாள்.

“சரி வா மாப்பிள்ளையோட உட்காரு… வாங்க வந்து உட்காருங்க…” என்று அன்பரசனையும் முறையாக வரவேற்க, “இருக்கட்டும் சித்தி” என்ற அன்பரசன், மனைவியிடம் குறிப்பு காட்டிவிட்டு நீதிவாசனோடு இணைந்து கொண்டான்.

“நீ போயி ரஞ்சியை பாருடா…” என்று ஜோதிமணி சொல்லிவிட்டு அங்கிருந்து நகர நினைக்க, அவரது கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவள், “ஏன் அத்தை பூரணிக்குத் தங்க நகையே போட்டு விட்டிருக்கலாம் இல்லை. இப்படி எதையோ போட்டுட்டு இருக்கா. ஜொலிப்பா இருக்குன்னு போட்டாலும், கவரிங் நகையில என்ன கௌரவம்? ஒருவேளை இருந்த நகையெல்லாம் போட்டுத் தான் ரஞ்சிதாவுக்கு கல்யாணம் பண்ணறீங்களோ?” என்று பூரணியை அளவிட்டபடியே கேட்டாள்.

ஜோதிமணியோ அவளின் வஞ்சக பேச்சின் உள்ளர்த்தம் புரியாமல் வெள்ளந்தியாக, “அட புள்ள… அது உனக்கு கவரிங் மாதிரி தெரியுதாக்கும். ரெண்டு தங்கச்சிங்களுக்கும் கோபி வைர நெக்லெஸ் வாங்கி தந்திருக்கான். ஏன்டான்னு கேட்டா, கை நிறைய சம்பாரிக்கறப்ப செலவைப் பத்தி எதுக்குமா யோசிக்கிறன்னு வியாக்கானம் பேசறான். ரஞ்சிதா கல்யாணத்துக்கு அவளுக்குப் போட்டு, பூரணி கல்யாண நேரத்துல அவளுக்கு எடுக்க முடியாம போயிட்டா… அதுதான் கையோட ரெண்டு பேருக்கும் எடுத்துட்டான்.

இந்த சின்ன கழுதைக்கு அண்ணன் வாங்கி தந்ததும் பெருமை பிடிபடலை. சின்ன ஆரம், பெரிய ஆரம் எதையும் போட்டுக்க மாட்டாளாம். அண்ணன் போட்ட ஒத்தை நகை எல்லாத்துக்கும் சமமாம். என்ன வாயடிக்குது பாரேன்?” என்று பூரித்துப் போய் சொன்னார். தன் குழந்தைகளின் பெருமையைப் பாட எந்த அன்னைக்குத் தான் கசக்கும். ஆனால், எதிரில் இருப்பவரின் எரிமலை மனது புரியாமல் பாடிக் கொண்டிருந்தார், பாவம்!

பேசிக் கொண்டிருக்கும் போதே, “பெரியம்மா… வாங்க உங்களைப் பெரியப்பா கூப்பிடறாங்க” என்று வந்து நின்றாள் அன்னபூரணி. அவளது கழுத்தை உறுத்து பார்த்து வைத்தாள் தீபலட்சுமி. சொந்த தொழில் செய்யும் அண்ணன், தானாய் தேடிப்பிடித்த கணவன் என்றெல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம் என்று மனம் வெதும்பினாள். இந்த அனாதைக்கு வந்த வாழ்வை பாரேன் என்று வெகுவாக எரிச்சல் பட்டாள். இந்த விஷயத்தை அவளால் அத்தனை இலகுவாகக் கடந்து விட முடியவில்லை!

அவள் பார்வையின் கோணல் புரியாமல், “வாங்க…” என்று வரவேற்பாகச் சொல்லி, அழகான சிரிப்பை உதிர்த்து விட்டு பெரியப்பா இருந்த இடத்திற்கு நகர்ந்து விட்டாள் இளையவள்.

தீபலட்சுமியும் சரி, அவள் அன்னை பரிமளமும் சரி அன்னபூரணியிடம் வெளிப்படையாகவே ஒதுக்கத்தையும், சுணக்கத்தையும் காட்டி விடுவார்கள். அதனால் தான் அவர்களை உறவு சொல்லி அழைக்க அவளுக்கு வரவே வராது! அதன் காரணம் தானோ என்னவோ நீதிவாசனிடமும் வர மறுத்திருந்தது.

ஜோதிமணி மருமகளிடம், “உங்க மாமா கூப்பிடறாராம் நான் போயி என்னன்னு கேட்கிறேன். ரஞ்சி அந்த ரூமுக்குள்ள தான் இருக்கா நீ போயி பார்த்துட்டு கூட இரு” என்று சொல்லிவிட்டு நகர்ந்திருந்தனர்.

உலைக்கலானான மனதோடு மணமகள் அறை நோக்கி நகர்ந்தவளின் காதுபட, சில பெருசுகள் அவளது தோற்றத்தை கேலி செய்து சிரித்தது அவளுக்கு எரியும் நெருப்பில் எண்ணை வார்த்தது போல ஆகிவிட்டது.

“மகேந்திரன் அண்ணன் புள்ள தான போறது? நம்ம நீதி அவ கல்யாணத்துக்கு எப்படியும் எழுபது, எண்பது சவரன் போட்டு இருப்பான் போல!” என்று இவள் கடக்கும் சமயம் ஒரு பெண்மணி கேட்க,

“ஆமாம் மதனி… தொழில் நடத்துற மகராசன், அத்தனை கடனோட தொழிலை ஸ்திரப்படுத்திக்க போராடிட்டு இருக்கிற போதும், இவளுக்கு இவ்வளவு செஞ்சு இருக்கான். யாருக்கு வரும் கடன்பட்டு தங்கைக்கு இவ்வளவு செய்யற நல்ல மனசு?” என்று பெருமையாக சொன்னார் மற்றொரு பெண்மணி.

“அதுக்குன்னு காணாததைக் கண்ட மாதிரி எல்லத்தையுமா வழிச்சு போட்டுட்டு வரது…” என்று முகம் சுளித்து முதலில் பேசிய பெண்மணி சொன்னபோது, அதைக் கேட்டுக்கொண்டே கடந்தவளுக்கு உள்ளூர எரிந்தது.

அதற்குத் தோதாக மற்றொரு பெண்மணியோ, “ஆமா பாரு கழுத்துல இடத்தையே காணோம். போட்டிருக்க நகைக்குக் கழுத்து என்ன கதி ஆக போகுதோ?” என்று கேலி பேசி சிரிக்க, இவளுக்கு இருந்த ஆத்திரத்தில் அவர்களை அறைந்து தள்ள வேண்டும் போல இருந்தது.

‘ஆமாம் இவங்க சம்பாரிச்சு தந்ததை, நான் அள்ளி போட்டுட்டு வந்துட்டேன்’ தீபலட்சுமியின் மனம் ஆங்காரமாக எண்ண… அதன் வெளிப்பாடாய் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மணமகள் அறைக்குள் பிரவேசித்தாள்.

“வாங்க தீபா மதனி… ஏன் நேத்து வரலை?” என்று வரவேற்பான புன்னகை செய்தபடி, பார்லர் பெண்களுக்கு ஒத்துழைப்பு தந்து கொண்டிருந்த ரஞ்சிதாவை பார்க்கும் போதும் எரிந்தது. இவர்களுக்கெல்லாம் வைரம் ஒரு கேடா? என்று மனதிற்குள் கருவினாள்.

திருமணத்தை முடித்து விட்டு வந்ததிலிருந்து அத்தனை எரிச்சல்களையும் ரீவைண்ட் செய்து பார்த்தபடி, மேலும் மேலும் எரிச்சலையும், குரூரத்தையும் வளர்த்துக் கொண்டு தீபலட்சுமி தங்கள் அறையில் அமர்ந்திருந்தாள். இவளது குரூரம் எத்தனை விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ? காலம் தன் மௌன கணக்குகளோடு கைவிரித்து காத்துக் கொண்டிருந்தது.

 

 

*** அசோகனின் கையால் மாங்கல்யம் பெற்று அவன் வாழ்வின் ஓர் அங்கமாகி போனாள் ரஞ்சிதா. திருமண சடங்குகள் முடிந்து, மாப்பிள்ளை இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட… புது இடம், புது சூழல் என்ற நினைவில் அவளுள் மெலிதாய் ஒரு நடுக்கம்! ஆதரவிற்காக மனம் அலைபாய்ந்தது.

 

அப்பொழுது தான் அவள் அந்த வித்தியாசத்தையே உணர்ந்து கொண்டாள். அவள் காலையிலிருந்து கணவனின் அனுசரணையை ஒரு நொடி கூட அனுபவிக்கவில்லை என்று!

 

பெண்ணிற்கு திருமணம் எனும்பொழுது, அவளுடைய ஆதாரம், ஆதரவு, பிடிப்பு, உரிமை, சொந்தம் எல்லாம் தொடங்கப்பட வேண்டியது கணவனிடத்தில் இருந்து தானே? இங்கு அதுவே ஏன் இடறுகிறது? மனதிற்குள் அச்சம் புகுந்து கொண்டு அவளை ஆட்டிப்படைத்தது.

 

மணமக்களை உள்ளே அழைத்துச் சென்று, பூஜையறையில் தீபம் ஏற்ற சொல்லி, வழிபாடு முடிந்ததும்… ஷோபாவில் அமர வைத்தனர். மனதில் கூடியிருந்த அச்சத்தின் விளைவாய், மெல்ல விழியுயர்த்தி கணவனைப் பார்த்தாள். நிச்சலானமான முகம்! சற்று நேரத்தில் மாற்றம் பெற்று, தீவிரமாகச் சிந்தனை குடி பெற்றது போலத் தோற்றம் கொண்டது. ஆனால், மனைவி என்றொருத்தி அருகில் இருக்கிறாள் என்கிற சிந்தனை மட்டும் அவனுள் இருக்குமென்று அவளுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

 

ஏன் இப்படி? ஆறுதல் எதிர்நோக்கி கணவனை ஏறிட்டுப் பார்த்தவள், மீண்டும் அச்சத்தின் பிடியில் சிக்கிக் கொண்டாள். அதன் விளைவாய் அவள் விரல்களில் லேசான நடுக்கம்!

 

பால்,பழம் தந்த போது கூட, பிறர் சொன்னதை அசோகன் செய்தானே அன்றி, ரஞ்சிதாவை கவனிக்கவில்லை.

 

குழப்பத்தின் பிடியில் இருந்தவளை ஓய்வெடுக்கச் சொல்லி அழைத்துச் சென்றனர். இரவு வரை நீண்ட குழப்பத்திற்கு, இரவின் தனிமையில் கணவனின் வாய்மொழியாகவே விளக்கம் கிடைத்தது.

 

எதிர்பார்ப்புகளோடு தான் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தாள் என்றபோதும், இப்பொழுது அவளிடம் துணி கொண்டு துடைத்தது போல அனைத்தும் விலகியிருந்தது. மனதில் பெரும் பாரமும், என்ன வருமோ என்ற அச்சமும் ஆட்கொண்டது.

 

“வா… உட்காரு…” என்றான் கணவன் உபசரிப்பாக. தீவிரமான அவனுடைய முகபாவமே பெரிதாக எதையோ சொல்லப்போகிறான் என்று கட்டியம் கூறியது. தன்போல தளிர் விரல்களில் மெல்லிய நடுக்கம்!

 

அதை அசோகனும் கவனித்து விட்டான் போலும்! அருகில் அமர்ந்தவளின் விரல்களை பார்த்தவாறே, “புது இடம், புது மனுஷங்க… பயமா இருக்கா?” என்றான் கரிசனையான குரலில்!

 

ரஞ்சிதா புரியாமல் விழியுர்த்தி பார்க்க, “இல்லை மதியமும் இப்படி தான் கை எல்லாம் நடுங்குச்சு. இப்பவும் நடுங்குதா அதுதான். கேட்டேன்” என்று திருத்தமாக மீண்டும் கேட்டான்.

 

‘ஹப்பாடா!’ என்று அவளின் பூ மனம் ஆசுவாசம் கொண்டது. மனதின் அலைப்புறுதல்கள் கொஞ்சம் மட்டு பட்டது போல உணர்ந்தாள். கணவன் தன்னை கவனித்திருக்கிறான் என்ற எண்ணத்தினால் இனம்புரியா உணர்வு அவளை இதமாக்கியது.

 

“நீ பதில் சொல்லாட்டி நான் மட்டும் தனியா பேச வேண்டியது தான்”

 

செல்ல சலிப்புடன், கோபமற்ற குரலில் கணவன் பேசியபோது, இதழ்கடையில் புன்னகை அரும்ப, “அப்.. அப்படியெல்லாம்… எதுவும் இல்லை” என்றாள் மென்குரலில்!

 

அவளது உளறல் குரலில், “பயமே தான்..!” என்று சொல்லிச் சிரித்தான் கணவன். ‘சிரித்து விட்டானா!’ என்று ஆச்சரியமாக மீண்டும் விழியுயர்த்தி பார்த்தாள். அவள் கவனிக்கும் அவனது முதல் சிரிப்பு!

 

அசோகன் தன் தொண்டையை செருமி, “ரஞ்சிதா நான் கொஞ்சம் பேசணும். நீ என்னைத் தப்பா எடுத்துக்கக் கூடாது” என்றான் பீடிகையோடு!

 

என்ன என்பதுபோல அவன் முகத்தையே தவிப்பாகப் பார்த்திருக்க, “கல்யாணத்தைப் பத்தி எல்லாம் நான் இன்னும் யோசிக்கவே இல்லை ரஞ்சிதா. அப்பா சிறுசா ஒரு தொழில் செஞ்சாரு. நான் படிப்பை முடிச்சு வேற இடத்துல வேலைக்கு போயிட்டு இருந்தேன். இப்ப தான் சமீபமா பிரண்ட்ஸ் கூட சேர்ந்து நாங்கெல்லாமுமா ஒரு தொழிலை தொடங்குனோம். திடீர்ன்னு அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போகவும்…. எல்லாம்… எல்லாமே மாறிப் போன மாதிரி இருக்கு” என்றான் பெருமூச்சுடன்.

 

அவள் முகத்தில் கலக்கம் சூழ அவனைப் பார்த்திருந்தாள். “திடீர்ன்னு நம்ம கல்யாணம், புதுசா தொடங்குன நம்ம தொழில், அப்பாவோட தொழில்… அப்பாவோட மருத்துவ கவனிப்பு…

 

அது… உனக்கு புரியுமான்னு தெரியலை… எனக்கு ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கு…

 

இன்னும் என்னை ஸ்திரப்படுத்திக்க, இந்த சூழலுக்குள்ள என்னை பொருத்திக்கவே கொஞ்சம் போராட்டமா இருக்கு. இந்த சூழல்ல எனக்குக் கல்யாணம் வேணாம்ன்னு தான் வீட்டுல எல்லார்கிட்டேயும் சொன்னேன். ஆனா, யாருமே புரிஞ்சுக்கலை.

 

அப்பாவோட கடைசி ஆசை! அப்பா போறதுக்குள்ள கல்யாணத்தைப் பார்த்திடட்டும்… அது இதுன்னு சொல்லி என்னை ஒரு வழியாக்கிட்டாங்க. எல்லாத்தையும் தாண்டி, அப்பாவும் எனக்குக் கல்யாணம் செய்யணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டாரு. என்னால மறுக்க முடியாத சூழல்! அது… உனக்கு என் நிலை புரியுது தான?” தொடர்ந்து சொன்ன நீண்ட விளக்கத்துக்குப் பிறகு, மனைவியிடம் கேட்டான்.

 

அவள் என்னவோ புரியாமல் விழித்துப் பார்க்க, “என்ன?” என்றான் குழப்பமாக!

 

“அது… அது…” என்று தயங்கியவள் வார்த்தைகளை முடிக்க முடியாமல் திணறினாள்.

 

“பரவாயில்லை சொல்லு…” என்று அசோகன் அவளையே பார்த்திருக்க,

 

“அது என்னை பிடிக்காம… இல்லாட்டி வேற யாரையும் பிடிச்சு… அப்படியெல்லாம் எதுவும் இல்லை தான?” தலையைக் குனிந்து கொண்டு, வெகு சிரமத்திற்கிடையில் வார்த்தைகளைக் கோர்த்து… மறைக்க முயன்றும் தோற்று வலி நிறைந்த குரலில் கணவனிடம் கேட்க, அவன் உடனடியாக மறுப்பு தெரிவித்தான்.

 

“என்னை கல்யாணம் செய்யத் தான் காட்டாயப்படுத்தினாங்கன்னு சொன்னேன்! உன்னைக் கல்யாணம் பண்ணிக்க கட்டாயப்படுத்தினதா நான் சொல்லவே இல்லையே?” என்று கணவன் பாவனையாக சொன்னபோது அவன் குரலில் நகையொலி தெரிந்தது.

 

‘இப்ப இந்த கேலி சிரிப்பு எதுக்காம்?’ மனம் சுணங்கினாலும், அவன் பேச்சு தந்த இதம் அவளுக்குள் எதையோ செய்தது.

 

மின்னலின் பிரகாசத்தை விழிகளில் தேக்கி, அவனை ஏறிட்டு பார்க்க, “ரஞ்சிதா என் சூழலை தான் உனக்குச் சொன்னேன். இப்ப என்னால, மனைவி குடும்பம்ன்னு கவனம் செலுத்த முடியாதுன்னு சொல்லறேன். மத்தபடி இந்த கல்யாணம் என் முழு விருப்பத்தின் பேரில் தான் நடந்தது! நீயும் என்னோட விருப்பத்தின் பேரில் தான் இந்த வீட்டுக்கு வந்திருக்க. அதுல உனக்கு எந்த குழப்பமும் வேண்டாம்!

 

என்னை பார்த்தா மத்தவங்க விருப்பத்துக்கு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறவன் மாதிரியா தெரியுது? ஒருவேளை எனக்கு வேற யாரையும் பிடிச்சிருந்தா அவங்களையே கல்யாணம் பண்ணிக்க யாராலும் என்னைத் தடுத்திருக்க முடியாது. புரியுது தானே?” என்று கணவன் கேட்க, வேகமாகத் தலையை உருட்டினாள்.

 

அவளது உடனடி பாவனையில் சிரித்தவன், “என்ன புரிஞ்சது?” என்றான் புருவத்தை உயர்த்தி.

 

மடியில் கோர்த்திருந்த மருதானியிட்ட விரல்களைப் பார்த்தபடி, “என் பயம் அவசியமில்லைன்னு” என்றாள் மென்குரலில்.

 

அழகோவியமாக தோன்றிய அந்த காட்சி அவன் மனக்கிடங்கில் சேர்ந்தது. அவளது கழுத்தில் நகைகளை விடப் பிரகாசமாக ஜொலிக்கும் மஞ்சள் கயிறும், தலை நிறைய சூட்டியிருந்த மல்லிகையின் மணமும், மெல்லிய படபடப்பும், செம்மை படிந்த முகமுமாய் தன்னருகே தயக்கத்தோடு அமர்ந்திருந்த தோற்றமும், கன்னச்சிவப்புக்கு ஈடுகொடுத்து சிவந்திருந்த மருதாணி விரல்களும், அவளைப் பாந்தமாய் தழுவியிருந்த அடர் நீல வண்ண புடவையும் அவனது ரசனைகளைக் கோட்பாடின்றி தூண்டிவிட, கைகள் இரண்டையும் மெத்தையின் பின்புறம் ஊன்றி, பாதி சாய்ந்த நிலையில் அவளை ரசனையாக தன் நிதான பார்வையால் வருடினான்.

 

மனதிற்குள் மல்லிகையின் மணமாய் வெகு இதமாக அவள் வாசம் நிறைய, “ஹ்ம்ம்.. சரி வேற என்ன புரிஞ்சுது?” அவன் கேலி சிரிப்புடன் கேட்டான்.

 

‘இப்ப எதுக்கு இந்த பார்வையும்? கேலியுமாம்?’ இதழ் கடித்து அவன் பார்வையின் வீரியத்தால் தோன்றும் படபடப்பைக் குறைக்க முயன்று தோற்றாள்.

 

தன்னை சீண்டிப் பார்க்கும் கேள்விக்குப் பதிலாக, “ஹ்ம்ம் இழுத்து போத்திட்டு தூங்க சொல்லறீங்கன்னு…” என்று பட்டென்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

 

அவளது பேச்சில் இந்தமுறை நன்றாகவே சிரித்து விட்டவன், “நீ அமைதின்னு நினைச்சேன்” என்று சொல்ல, இவள் பாவமாக அவனை ஏறிட்டாள்.

 

“அச்சோ ஏன் இப்படி முழிக்கிற? நீ அமைதியா இருந்தாலும், ஆர்ப்பாட்டமா பேசினாலும்… எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒவ்வொன்னையும் எனக்கு பிடிக்குமான்னு யோசிச்சு செய்யாத. உனக்கு விருப்பம் போல, உன்னோட இயல்போட நீ இரு” என்று நிதானமாகக் கணவன் சொல்ல, விழிகளில் காதலைத் தேக்கி கணவனை நிமிர்ந்து பார்த்தவள், மையமாகத் தலையசைத்தாள்.

 

அவளது தலை அசைவுக்கு ஏற்ப நாட்டியமாடும் ஜிமிக்கிகளில் பார்வை சிக்குற, “பேசினது போதும்… நீ சொன்ன மாதிரி இழுத்து போர்த்திட்டு தூங்கலாம்ன்னு நினைக்கிறேன்” என்று மெல்லிய பெருமூச்சுடன் அவன் சொன்ன தினுசில் கன்னங்கள் மேலும் செம்மையுற அமைதியாக சென்று படுத்துக் கொண்டாள்.

 

தாம்பத்தியம் நிகழாத போதும், அவள் மனதினில் சிறு குறை கூட இல்லை! கணவன் என்னும் மனிதனைப் பிடிக்க தொடங்கியிருந்தது. மனதிற்குள் இருந்த அச்சம் அவசியமில்லை என்பதை அவனது பார்வையும், பேச்சும் உணர்த்தி விட்டிருந்தது. வெகு நிம்மதியாக கண்ணயர்ந்திருந்தாள்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’

வேப்பம்பூவின் தேன்துளி – 11 நீதிவாசன் வந்துவிட்டு சென்றபிறகு, அன்னபூரணியிடம் நிறைய மாறுதல்கள்! இன்னதென்று வரையறுக்க முடியாத வகையில் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே சென்றது! இலகுத்தன்மை அவளிடம் நிரந்தர வாசஸ்தலம் கொண்டுவிட, பூரிப்பு அவளது முகத்தை பலமடங்கு பொலிவாக்கியது.

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 13’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 13’

வேப்பம்பூவின் தேன்துளி – 13   மாலை மூன்று மணிக்கும் மேல் இருக்கும். “பழனியாண்டவர் ஸ்டோர்ஸ்” கடையின் வரவு செலவு கணக்குகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் நீதிவாசன். இது அன்றாட வழமை தான்!   அப்பொழுது அவனது அறையில் இருந்த தொலைப்பேசி சிணுங்கியது.

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 06சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 06

வேப்பம்பூவின் தேன்துளி – 6   தீபலட்சுமி ஒரு தனிப்பிறவி! பணத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பாள். யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணும் நீதிவாசனின் நேரெதிர் துருவம் அவனது தங்கை!   எவரிடம் பணம் இருக்கிறதோ அவர்களிடம் மட்டும் இழைவாள்!