சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’

வேப்பம்பூவின் தேன்துளி – 11

நீதிவாசன் வந்துவிட்டு சென்றபிறகு, அன்னபூரணியிடம் நிறைய மாறுதல்கள்! இன்னதென்று வரையறுக்க முடியாத வகையில் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே சென்றது!

இலகுத்தன்மை அவளிடம் நிரந்தர வாசஸ்தலம் கொண்டுவிட, பூரிப்பு அவளது முகத்தை பலமடங்கு பொலிவாக்கியது. எதையோ நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள். பல சமயங்களில் அவள் இதழ்களும் தன்னையறியாமல் புன்முறுவல் பூக்கும்.

கண்டும் காணாமலும் பார்த்து வைத்த ரஞ்சிதாவிற்கு இளையவளின் செய்கை வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஆனால், அவளாகத் தங்கையிடம் எதையும் கேட்டுக்கொண்டதில்லை. பூனைக்குட்டி தானாக வெளியே வரட்டும் என்ற எண்ணம் அவளுக்கு.

மனம் லேசாகி விட்டதாலோ என்னவோ, அன்னபூரணிக்குச் சோம்பியிருக்க ஒரே சலிப்பாக இருந்தது. கல்லூரி செல்லும் நாளை வெகு ஆவலோடு எதிர்ப்பார்த்தாள்.

அஞ்சலியும், சரண்யாவும் வாட்டத்துடன் கல்லூரிக்கு வந்த முதல் நாள் இருந்திருக்க, புதுப் பொலிவோடு வந்த பூரணியை வகுப்பறையை ஆவென்று பார்த்தது.

“அடி பட்டது கையில தான பூரணி” என்றாள் உடன்படிக்கும் தோழி காவியா.

“ஏன்டி”

“இல்லை. சரண்யாவுக்கு பட்ட மாதிரி மண்டையில எதுவும் பட்டுடலையே?”

தோழியின் கேலியில், “சுத்தி வளைக்காம என்னன்னு சொல்லி தொலையேன்டி” என்று செல்லமாகச் சிடுசிடுத்தாள் பூரணி.

“பின்ன என்னடி என்னவோ அவார்ட் வாங்கின மாதிரி வர? ஒரு கலவரத்துல மாட்டி மீண்டு வந்த மாதிரி இருக்க வேணாமா? அஞ்சலி எல்லாம் இன்னும் அழுமூஞ்சி தான்” என்று கடைசி வார்த்தையை மட்டும் அவள் காதிற்குள் கிசுகிசுத்தாள்.

“விடு கொஞ்ச நாளுல சரியாகிடுவா… ஆனா உனக்கு வாய் கூடிடுச்சுடி” என்று எச்சரித்து விட்டுப் போனவளை, ‘போடி! போடி!’ என்பது போலப் பார்த்து வைத்தாள் தோழியவள்.

பூரணியிடம் வம்பு வைத்ததன் பலனை, மதிய இடைவேளையின் போது தான் காவியா உணர்ந்து கொண்டாள். உணவு இடைவேளை முடிந்து வந்து தன்னிடம் இருந்த சாக்லேட்டை சுவைக்கலாம் என்று பைக்குள் தேடியவளுக்கு எதுவும் அகப்படவில்லை.

வெகுநேரம் தேடிக்கொண்டிருந்தவளை யோசனையாகப் பார்த்தபடி அருகில் இருந்தவள் என்ன ஏதென்று விசாரிக்க, பூரணியோ தன்னுள் இருந்த கவிதாயினியையும், பாடலரசியையும் எழுப்பி விட்டு… தன் தேன்மதுரக் குரலில் பாட்டிசைக்கத் தொடங்கியிருந்தாள். ஒரே ஒரு மாறுதல் எப்பொழுதுமே உரத்து இனிக்கும் குரல், இன்று வெகுவாக சத்தத்தைக் குறைத்து இனித்து இசைத்தது.

“சற்று முன் கிடைத்த தகவல்படி

தொலைந்து போனது உன் சாக்லேட்’டடி…

உயிரே! தயிரே!! என் பயிரே!!!”

என்று ராகம் இழுக்க, அத்தனை நேரமும் உம்மென்று வலம் வந்து கொண்டிருந்த அஞ்சலியும், சரண்யாவும் இவள் பாடலில் உரக்கச் சிரித்து விட்டனர்.

பூரணியை மொத்த வந்த காவியா அவர்கள் சிரிப்பதை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கல்லூரிக்கு வந்த மூன்று, நான்கு நாட்களும் சோக கீதம் வாசித்தவர்களை இந்த பூரணி நொடியில் சிரிக்க வைத்து விட்டாளே என்று!

என்னதான் தோழிகள் சிரித்ததில் சந்தோசம் என்றாலும் சாக்லேட் திருடியை சும்மா விடலாமா? அதுவும் அவளே அவள் தங்கையிடமிருந்து களவாடி வந்ததை, இவள் களவு செய்திருக்கிறாள் அதை சும்மாவா விடுவது என்று… அடுத்த சில நிமிடங்கள் அவர்களுக்குள் பெரும் கலவரம்!

பூரணியும் பதிலுக்கு திருப்பி மொத்தியவள், எதிராளியின் பலம் அறிந்து ஓட்டம் எடுக்க, “மவளே! மரியாதையா எனக்கு புது சாக்லேட் வாங்கி தந்திடு. இல்லையா?” என்று காவியா துரத்த, பார்த்துக் கொண்டிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

இப்படி இலகுவாக மனம் விட்டுச் சிரித்துப் பல காலம் ஆனது போலத் தோன்றி விட்டது தோழிகள் இருவருக்கும். எத்தனை பிரச்சனைகள்? என்னென்ன கேள்விகள்? தற்போதைய பிரச்சனை விலகி விட்டதாக ஒப்புக் கொண்டபோதும், இனி இது மாதிரி வராது என்று என்ன நிச்சயம்? என்று கேட்டு கல்லூரிக்கே செல்ல வேண்டாம் என்று சொன்னதெல்லாம்… அப்பா! எப்படி தான் துயரங்களை எல்லாம் கடந்து வந்தோமோ என்று கண்கள் கலங்கி விட்டது அஞ்சலிக்கு.

 

“ஏய் என்னப்பா?” என்று சரண்யா கனிவும், அதட்டலுமாகக் கேட்டுத் தேற்ற… பூரணியும், காவியாவும், இதர தோழிகளும் கூட அஞ்சலியின் கண்ணீரில் பதறிக் கூடிவிட்டனர்.

 

“விடு அஞ்சலி இனி எதுவும் நடக்காது” என்று பூரணி சொல்லும்போதே அவளுக்கும் கண்ணீர் திரண்டுவிட்டது. என்னதான் சம்பத்தின் பிழையை மன்னிக்கும் அளவு பெருந்தன்மை இருந்த போதிலும், அவன் தோற்றுவித்த அச்சம் இன்னுமே அவளை மிரளச் செய்கிறது.

 

ஒருத்தியை கீழே தள்ளிவிட்டவன், கத்தி முனையில் மற்றொருவளை வெறியோடு இறுகப் பற்றியிருக்க… அந்த நேரத்தில் உடன் இருந்து பார்த்தவளுக்கு என்னவெல்லாம் தோன்றியிருக்கும்? அச்சத்தில் வெலவெலத்துப் போனாள். இன்னுமே அன்று மீண்டது தெய்வச் செயல் தான் அவளுக்கு!

 

“ம்ப்ச் நீயும் ஏன் பூரணி அழுது. வடியற. கண்ணைத் தொட” என்று அதட்டினாள் காவியா. கூடவே மற்ற இருவரையும், “காலையில சிரிச்ச முகமா வந்து உங்களையும் சிரிக்க வெச்சிருக்கா. நீங்க அவளை அழ வைக்காதீங்க. மூணு பேரும் இனி தான் தைரியமா இருக்கணும். இப்ப போயி அழுது வடியலாமா?” என்று கண்டித்தாள்.

 

மற்ற தோழிகளின் தேற்றலிலும்… அன்றாட வாழ்வின் ஓட்டத்திலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழையதை மறந்து தேறினார்கள்.

 

இந்த சமயத்தில் நீதிவாசன் ரஞ்சிதாவிற்கு கொண்டு வந்திருந்த அசோகனின் ஜாதகம் அவளுக்கு வெகுவாக பொருந்தி வந்தது. பேச்சுவார்த்தைகளும் ஒத்துவர, முதல் வரனே தகைந்து விட்டதில் முத்துச்செல்வம் தம்பதியருக்கு அளவற்ற மகிழ்ச்சி.

 

அசோகனுடைய அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவும் மகனுக்கு உடனே திருமணம் முடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கூடப்பிறந்தவள் ஒரே ஒரு அக்கா மட்டும். திருமணம் முடிந்து குழந்தையும் இருக்கிறது.

 

பெண் பார்க்கும் வைபவம் நல்லபடியாக முடிய, நிச்சயதார்த்தமும் முடிவானது. கோபி, நிச்சயத்திற்கு வர முடியாது என்றும், திருமணத்திற்கு பத்து நாட்கள் வருவதாகவும் பெற்றோர்களிடம் சொல்லி விட்டிருந்தான்.

 

அசோகனின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், நிச்சயத்தை எளிமையாகவும், திருமணத்தை வெகு விரைவில் வைக்கும் படியாகவும் ஏற்பாடானது.

 

என்ன, திருமண களை என்று தான் அசோகனின் முகத்தில் எதுவும் தெரியவில்லை. அப்பாவின் உடல் சுகவீனத்தால் அதிகம் பொறுப்பு சேர்ந்து விட்டது என்று அவனின் தாயார் வளர்மதி சொன்னார்.

 

அசோகனின் அக்கா வேணி ரஞ்சிதாவிடம், “தம்பி கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் தான். கொஞ்சம் பொறுத்துக்கம்மா” என்று சொல்லிச் சென்றாள்.

 

‘இதை இவர்கள் சொல்லாமலே இருந்திருக்கலாம்’ என்று தோன்றியது ரஞ்சிதாவிற்கு. பின்னே, ஏற்கனவே மாப்பிள்ளையின் ஆர்வமான பார்வைகள் கூட எதுவுமின்றி ஒருவித ஏக்க நிலையில் இருப்பவளுக்கு, இந்த வார்த்தைகள் மேலும் அச்சத்தை தான் தந்தது.

 

தமக்கையின் முக சுணக்கத்தைக் கண்டு கொண்ட பூரணி, “ஏன் ரஞ்சிக்கா ஒருமாதிரி இருக்கீங்க” என்று அவளை நோண்டியபடி கிசுகிசுப்பாகக் கேட்டாள்.

தன் முகம் தன் மனதை வெளிப்படுத்துவதை உணர்ந்து, தன்னையே நொந்து கொண்டவள் தங்கையிடம், “ஒன்னுமில்லை புள்ளை” என்று உடனடியாக புன்னகையோடு மறுப்பு சொன்னாள். அவளது அதிவேக பதிலில் தமக்கை மீது பரிதாபம் எழுந்தது இளையவளுக்கு.

 

குரலை வெகுவாக தணித்து, “அக்கா மாப்பிள்ளை எதுவும் பிடிக்கலையோ?” என்று தன் அனுமானத்தை ஒருவித அச்சத்துடன் மெல்லிய குரலில் கேட்க, “அச்சோ! அந்த மாதிரி எதுவும் இல்லை பூரணி. கொஞ்சம் பயமா இருக்கு. அவ்வளவு தான்… இதுக்கு போய் கண்டதையும் நினைச்சுட்டு” என்று சற்று அவசரமாகப் பதில் தந்தாள் மூத்தவள்.

 

சிரித்தபடியே, “உன் அவசரமான பதிலைப் பார்த்தா ரொம்ப பிடிச்சிருக்கு போலயே கா” என்றாள் பூரணி பரிகாசக் குரலில்.

 

“அச்சோ அமைதியா இரேன் பூரணி” என்று ரஞ்சிதா சொல்லுவது மெல்லிய கீதமாக காற்றுக்குள் கரைந்திருந்தாலும், கன்னங்கள் இரண்டும் செவ்வண்ணம் பூசி அவளது வெட்கத்தைப் பறைசாற்றியது.

 

“அச்சோ அக்கா எனக்கு தெரியாம ரூஜ் எதுவும் தடவிட்டியா? இப்படி ஜொலிக்கிறியே” என்ற இளையவளின் கேலியும் கிசுகிசுப்பாகத்தான் இருந்தது. ஜோதிமணியின் விழிகளில் இவர்கள் இருவரும் விழ, என்னவோ அந்த பெரியவளுக்கு கண்கள் சற்று கலங்கிக் கூடப் போயிற்று! பிள்ளைகளின் பிணைப்பிலும், பூரிப்பான தோற்றத்திலும்!

 

விருந்து உபச்சாரங்கள் முடிந்து மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பிய பிறகு, இவர்கள் பக்க உறவினர்களும் கிளம்பத் தொடங்கினார்கள்.

 

நீதிவாசன் தனித்திருந்த சமயம் பார்த்து, “நீங்க சொன்ன மாப்பிள்ளைன்னு தான் கல்யாணம் பண்ணி வைக்கிறோம். எங்க அக்கா அங்க சந்தோஷமா இருக்கணும் பார்த்துக்கங்க” என்று மிரட்டல் என்ற பெயரில் எதையோ சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் நகர்ந்திருந்தாள் அன்னபூரணி. அவனிடம் சென்று இந்தளவு சொல்லும் தைரியம் வந்ததே அவளுக்கு பெரியது!

 

‘பாருடா? என்கிட்டயே வாயடிக்கிற அளவு வளந்துட்டியா?’ என்று வியந்தவனும், அவளைத் தனியே பிடித்து, “என்ன சொன்ன?” என்று சற்று அதட்டலாக விசாரிக்க அவள் திருதிருத்தாள்.

 

“ஏதோ சொன்ன மாதிரி கேட்டுச்சே?” என்று தலையை ஒருபுறம் சரித்து வலது பக்க சுட்டுவிரலைக் காதினில் விட்டு ஆட்டியபடி கேட்க, விழிகளை அகல விரித்து பார்த்தாள். விசாரிக்கும் தொனிக்குப் பதில் வருமா என்ன?

 

எதற்கும் இளகாமல், விட்டுக்கொடுக்காமல், “ஹ்ம்ம்… சொல்லு” என்றான் மீண்டும் அதட்டலாக.

 

“அது… அது… மாமாவைப் பார்க்கக் கொஞ்சம் உம்முன்னு தெரிஞ்சாங்களா, அதான் அக்காவை நல்லா பார்த்துக்கணுமேன்னு…”

 

“உம்முன்னு இருந்தா என்ன?”

 

“நல்லபடியா, இணக்கமா பேசுவாங்களோ என்னவோன்னு…” என்றாள் தயங்கிய குரலில்.

 

“உம்முன்னு அப்படின்னா எப்படி? என்னை மாதிரியா?” என்று நீதிவாசன் பட்டென்று கேட்க, என்ன சொல்கிறான் என்று சரிவர யோசிக்காமல் ஆமாம் என்று தலையசைத்து விட்டாள்.

 

தலையசைத்த பிறகே கேள்வி விளங்க, உதடுகளை அழுந்த கடித்து, மலங்க மலங்க விழித்தவள் அங்கிருந்து ஓடியும் விட்டாள். அவளையே பார்த்திருந்த நீதிவாசனின் இளநகை புன்னகையாக வடிவம் பெற்றது!

ரஞ்சிதாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது தான் தெரியும். அனைவருக்கும் திருமண வேலைகள் வரிசைகட்டி நின்று நேரத்தை இழுத்துக் கொண்டது. அதுவும் அசோகனின் தந்தை மாணிக்கத்தின் உடல்நிலை காரணமாக, திருமணம் வேறு ஒரே மாதத்தில் வைப்பதாக ஏற்பாடு!

 

அசோகன் நிச்சயதார்த்தம் முடிந்த இரண்டு நாட்களில் ரஞ்சிதாவிற்கு அழைத்திருந்தவன், சிறிய அறிமுக படலத்தோடு, பொதுவாகப் பேசிவிட்டு வைத்திருந்தான். அடுத்தமுறை அழைத்த பொழுது, கல்யாண வேலைகள் அதிகம். ஆக, நான் அழைக்கும்போது பேசிக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தான். அதற்கேற்றாற்போல் எப்போதாவது அழைப்பான், சில நிமிட பேச்சுக்களிலேயே அவனுக்கு வேலை வந்துவிடும்.

 

அதிகம் பேசிப்பழகும் வாய்ப்பெல்லாம் இருவருக்கும் அமையவில்லை. இருவருமே அந்த வெற்றிடத்தை உணர்ந்தனர். ஆனால், வேறு வழியும் இருக்கவில்லை! உறவினர்கள் உதவி செய்ய வருவார்களே அன்றி, அனைத்து வேலைகளையும் செய்து விட முடியாதே! எனவே, கல்யாண மாப்பிள்ளை என்பதையும் தாண்டி அசோகனே அனைத்திற்கும் அலைந்தான்.

 

ரஞ்சிதாவிற்கும் புரிதல் வந்திருந்தது. அதிசயம் தான்! அவனைப்பற்றிச் சரிவர எதுவும் தெரியாமலேயே அவனது அலைச்சல்களைப் புரிந்து கொள்ள அவளால் முடிந்தது. அவனாக அழைக்கும் போது, தனக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்வாள். கூடவே கல்யாண கனவுகளும் அவளுடைய நாட்களை வண்ணமயமாக்கிக் கொண்டிருந்தது!

 

திருமண நாள் நெருங்கியது. கோபாலகிருஷ்ணன் பல மாத அயல்நாட்டு வாசம் முடித்து, ஒருவழியாகத் தாய்நாட்டை வந்தடைந்தான். தொலைத்த நிம்மதி மட்டும் இன்னமும் அவனுக்குக் கிட்டுவதாக இல்லை. அவன் பெற்ற துரோகங்களின் வலி அத்தனை எளிதில் குணமடைய மறுத்தது.

 

ஆனால், முன்புக்கு இப்பொழுது நல்ல மாற்றம்! அவனால் தீபாவைச் சலனங்களின்றி எதிர்கொள்ள முடியும். அவளை வெற்றுப் பார்வையுடன் கடந்து செல்ல முடியும். அந்தளவு மாறுதல்கள் போதும், இந்தியாவிற்கு வரும் தைரியத்தைத் தர!

 

இது எல்லாவற்றையும் மீறி தங்கள் வீட்டில் நடக்கும் முதல் விசேஷம். அதிலேயே கொஞ்சம் பொறுப்பு கூடியிருந்தது. வீட்டின் ஆண் மகனாய்!

 

ரஞ்சிதாவின் திருமணத்தை வெகுவாக எதிர்பார்த்தான். வீட்டில் நடக்கும் முதல் விசேஷம் என்பதால் தன் நெருங்கிய நண்பர்கள், அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் என பலருக்கும் அவன் சார்பாகவும் அழைப்பு விடுத்திருந்தான்.

 

அந்த அழைப்பில் அன்னபூரணியின் மீது ஆர்வமான பார்வைகள் செலுத்திய தீபனும் அடங்குவான். கோபி தான் தீபனின் பார்வையை இனம் கண்டதில்லையே! ஆகையால் அழைப்பு விடுத்து விட்டான்.

 

ஏற்கனவே பூரணி பற்றிய விவரங்கள் சேகரிக்க ஆர்வமாய் துடித்துக் கொண்டிருந்த தீபனுக்கு, இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவும்… தன் தாயார் வாசுகியிடம் குதூகலமாக தன் மகிழ்ச்சியை பறைசாற்றினான்.

 

வாசுகியும் மகனின் மகிழ்ச்சியில் மகிழ்ந்து, “போயிட்டு அவங்க அப்பா அம்மாவோட தகவலை கையோட வாங்கிட்டு வந்திடு. முடிஞ்ச வரை ரொம்ப நல்ல பையன்னு பேர் வாங்குடா. ஊர் பக்கம் இருக்கவங்க எல்லாம் நிறைய பார்ப்பாங்க” என்று மகனின் ஆசையே பிரதானமாகத் தெரிந்தால் அவனுக்கு ஒத்தே பேசினார்.

 

“சரிம்மா சரிம்மா…” என்று அன்னையிடம் சொன்னாலும், இந்தமுறை அவனுடைய திட்டங்கள் இன்னமும் அதிகம்.

பூரணியை இம்பிரஸ் செய்து, அவள் காதலைப் பெற்று விட வேண்டும் என்று தீபன் நினைத்தான். குறைந்தபட்சம் அவளது கைப்பேசி எண்ணைப் பெற்றுக்கொண்டால் கூட போதும், தொடர்ந்து காதலை வளர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் அவனுக்கு. அவள் தன்மீது காதல் கொண்டுவிட்டால், மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சமாகிவிடும் என்று தானாக கணித்துக் கொண்டான். அது சற்று அதிகப்படியும் தானோ? மொத்தத்தில் அவன் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தான்.

கோபி ஊருக்கு வந்ததும், அசோகனை ஒருமுறை சென்று நேரில் பார்த்து வந்தான். கோபிக்குப் பூரண திருப்தி! அவன் அங்கு தனியாக அல்லாடுவதைப் பார்த்து, நானே இதெல்லாம் கவனித்துக் கொள்கிறேன் என்று பல வேலைகளை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான்.

அசோகனுக்கும் தன் தந்தை தொடர்பாக மருத்துவமனை அலைவது, திருமண அலைச்சல் என்று வேலைகள் அதிகம். ஆக, அவனும் கோபியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டான்.

ஒருவழியாக திருமண நாளும் நெருங்கியது. முகூர்த்தத்திற்கு முந்தைய நாள், சென்னையிலிருந்து கோபியின் நண்பர்கள், தீபனோடுச் சேர்த்து மொத்தம் நான்கு பேர் வந்திருந்தனர். அவர்களைக் கோபி, தன் உள்ளூர் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துக் கவனித்துக் கொள்ளும்படி பொறுப்பை ஒப்படைத்திருந்தான்.

மண்டபத்தின் வெளியே அமர்ந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர். தீபன் அன்னபூரணியைப் பார்ப்பதை மட்டுமே முக்கிய வேலையாக வைத்திருந்தான். ஆனால், அவளுக்கு வரவேற்பில் நிற்பது, மாப்பிள்ளை அழைப்பு முடிந்து ஆரத்தி எடுப்பது, ரஞ்சிதாவிற்கு உதவிக்கு இருப்பது, விருந்தினர்களை உபசரிப்பது என்று ஏகப்பட்ட வேலைகள்! ஆகையால் பெரும்பாலும் அவன் கண்ணில் படவில்லை.

வேண்டுமென்றே அவள் வரவேற்பில் நின்ற போது அந்த வழியாக ஓரிரு முறை வளைய வந்தான். அவள் தன் முகத்தைப் பார்த்தால் அறிமுகமான தோற்றம் தெரியும். அதை சாக்கிட்டு எதையாவது பேசுவோம் என்று எண்ணியிருந்தான். ஆனால், அவள் இவனை கண்டு கொள்ளவே இல்லை.

ஆர்வமான ஒற்றை பார்வை போதும் என்று அவன் எதிர்பார்க்க, அவளோ ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தாள். தக்க சந்தர்ப்பத்திற்காக தீபன் காத்திருக்கத் தொடங்கினான்.

அதற்குத்தக்க, இரவில் ஓரளவு ஆரவாரங்கள் அனைத்தும் முடிந்த பிறகு, சற்றே ஓய்ந்து இருந்திருந்தவளிடம், “அக்கா ஐஸ்கிரீம் வாங்கி தாங்க…” என்று வந்து நின்றது மூன்று சின்ன வாண்டுகள்.

“பந்தி போடற இடத்துல வாங்கிக்கங்க டா…” என்று அவர்களை அனுப்பப் பார்த்தாள். கைப்பேசியில் யாருடனோ பேசுபவன் போன்ற பாவனையில் பூரணியின் பார்வை வட்டத்தினில் தான் தீபன் நின்றிருந்தான்.

“இந்த ஐஸ்கிரீம் போர் அக்கா. நல்லதா வாங்கி தாங்க” என அடம் செய்தனர் குழந்தைகள். பூரணி சமாளிக்க தெரியாமல் திணற, “என்ன குழந்தைகளா என்ன வேணும்?” என்றபடி தீபன் வந்து நின்றான். பூரணிக்கு அவனை அடையாளமே தெரியவில்லை. சென்னை சென்றிருந்தபோது அவனைக் கவனித்துப் பார்க்கவில்லை. அதோடு போய் வந்தும் சில மாதங்கள் ஆயிற்றே!

யாரோ திருமணத்திற்கு வந்தவர் போல என்று பூரணி நகர நினைக்க, “என்ன அன்னபூரணி, இவங்களுக்கு என்ன வேணுமாம்?” என்று முழு பெயர் சொல்லி அழைத்து, அவளிடம் பேச்சு வளர்த்தான்.

பிள்ளைகளுமே அவனை நோக்கி அறிமுகமற்ற பார்வையை வீச, பூரணியும் யார் என்ன என்று புரியாமல் குழம்பினாள். அதை புரிந்து கொண்டவன் போல அவன் தன்னை அறிமுகம் செய்யப் பார்க்க, அதற்குள் நீதிவாசன் அவர்களிடம் வந்திருந்தான்.

“உன்னை அத்தை கூப்பிடறாங்க போ…” என்றபடி நீதிவாசன் அருகே வர, தலையை அசைத்தவள், முன்னோக்கி நடந்திருந்தாள்.

“உங்களுக்கு என்னடா” என்று சிறுவர்களை அதட்ட, இந்த ஸ்ட்ரிக்ட் ஆபிசரை எதிர்பார்க்காதவர்கள், “அது… ஐஸ்கிரீம்…” என்று திணறலாகத் தொடங்கி விட்டு, “மாமா மாமா ஐஸ்கிரீம் வாங்கி தாங்களேன்” என்று ஒருசேரக் குதித்தனர்.

“மாடியில பந்தி பரிமாறும் இடத்துல இருக்கு. போயி எடுத்துக்க வேண்டியது தான?”

“அச்சோ அது நல்லா இல்லை மாமா. டம்மியா இருக்கு…”

“பின்ன வேற என்ன வேணும்” என்று அவன் அவர்களை யோசனையாகப் பார்த்த வண்ணம் நீதிவாசன் கேட்டான்.

“இதோ கேட்டுக்கு வெளிய கடை இருக்கு” என்று சிறுவர்கள் சொன்னதும், அவன் முறைக்க போச்சுடா என்றவர்கள் வேறு நல்ல ஆளைப் பிடிக்க ஓடி விட்டனர்.

பிள்ளைகள் சென்றதும், “நீங்க?” என்றான் தீபன் புறம் திரும்பி. அவன் பம்பவோ, பதறவோ இல்லை. வெகு இயல்பாகவே நீதிவாசனை எதிர்கொண்டான்.

“என் பேரு தீபன். கோபியோட கொலிக்” என்று கையை நீட்ட, நீதிவாசனும் சம்பிரதாயமாக கரம் குலுக்கியவன், “பொதுவா எங்க ஊர் பக்கம் வயசு பொண்ணுங்க கிட்ட மத்தவங்க பேசறதை விரும்ப மாட்டோம்” என்றான் மேற்பூச்சு இல்லாமல் நேரடியாக.

“ஓ யு ஆர் மிஸ்டேக்கன். நான் இவங்களை கோபியோட சென்னையில பார்த்திருக்கேன். சரி தெரிஞ்சவங்கன்னதும்… குழந்தைங்க வேற அவங்களை தொந்தரவு செய்யவும் என்னன்னு கேட்க வந்தேன்” என்றான் நிமிர்வாகவே. இதில் என்ன தவறு என்னும் ஃபாவம்.

நீதிவாசன் முகம் யோசனையானது. “சென்னையில பார்த்திருப்பீங்க. ஆனா, கோபி அறிமுகம் செஞ்சு வெச்சிருக்க மாட்டானே?” என்று தீபனிடம் கேட்டவனின் பார்வை சற்று கூர்மை பெற்றது.

இப்பொழுது தீபனிடம் சற்று நிமிர்வு குறைந்தது. “ஆ… ஆமாம்” என்றான் சற்று குரல் தடுமாற.

“அப்பறம் எப்படி தெரிஞ்சவங்க ஆவாங்க? ஒருத்தங்களோட பேரு, ஊரு தெரிஞ்சா மட்டும் தெரிஞ்சவங்க இல்லை. அதோட உங்களை தெரிஞ்ச மாதிரியும் அவ முகத்துல பாவனை இல்லை. உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்” என்று நீதிவாசன் சொல்லிக் கொண்டிருந்தபோது தீபனின் முகம் சுருங்கியது.

குரல் எழுப்பாமல் மற்றவர்களை அதட்ட முடியும் என்பது அவனது பேச்சில், பாவனையில் அன்றுதான் புரிந்தது. மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் மையமாய் தலையசைத்து விட்டு தீபன் நகர்ந்திருந்தான்.

செல்பவனின் முதுகையே சில நொடிகள் வெறித்துப் பார்த்தவன், அதன்பிறகு மறுநாள் திருமணம் முடியும் வரையும் அவன்மீது கொண்ட ஆராய்ச்சி பார்வையை விலக்கவே இல்லை. இதை உணர்ந்தோ என்னவோ தீபனாலும் அதிகம் தான் எண்ணி வந்ததன் படி செயல்பட முடியவில்லை. திருமணத்திற்கு வந்ததற்கு உருப்படியாக அவன் தெரிந்து கொண்டது, அன்னபூரணியின் பெற்றவர்கள் உயிருடன் இல்லை என்பதும், அவளை அவர்களது பெரியப்பா வீட்டில் தான் வளர்க்கிறார்கள் என்பதும் தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 04சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 04

வேப்பம்பூவின் தேன்துளி – 4 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் தானே! மனம் அலைபாயும் போது அது பட்டவர்த்தனமாக வெளிப்படும் நிலையை என்னவென்று சொல்வது? நீதிவாசனைச் சந்தித்து விட்டு வந்ததிலிருந்து அன்னபூரணிக்கு இதே யோசனை தான்!   காரணமே இல்லாமல் சமீபமாக அவளுக்கு

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 08சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 08

வேப்பம்பூவின் தேன்துளி – 8 அன்னபூரணி கல்லூரிக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். இது அவளுக்கு இரண்டாம் வருடம். சலனம் கொண்ட மனது மேலும் சலனம் கொண்டிருந்தது, நீதிவாசனின் பார்வை வித்தியாசத்தை மெலிதாக இனம் கண்டு கொண்டதால்!   தீபலட்சுமியின் திருமணம் முடிந்து

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 07சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 07

வேப்பம்பூவின் தேன்துளி – 7   ஒருவாரம் சென்னையைச் சுற்றிப்பார்த்த களிப்போடு முத்துச்செல்வம் குடும்பத்தினர் சொந்த ஊருக்குக் கிளம்ப, கோபியும் வருவதாக இணைந்து கொண்டான்.   இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே ரயிலில் முன்பதிவு செய்திருக்க, இவன் திடீரென்று கிளம்ப முடிவெடுத்ததால், நேற்று