Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 20

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 20

ண்ணே எம்பேரு ரத்தினசாமி. எங்க அப்பாரு உடன்குடில கருப்பட்டி கம்பனி வச்சுருக்காரு. கிருஷ்ணசாமி கருப்பட்டின்னா தூத்துக்குடி பூர பேமஸ்”

லூசா இவன். இதையெல்லாம் என்கிட்டே ஏன் சொல்றான் என்றபடி ஒல்லியாய், கருப்பாய், உயரமாய் தன் முன் நின்ற ரத்தினசாமியைப் பார்த்தான் ஜிஷ்ணு.

“நீங்க சரயு புள்ளயோட மாமாதானே?” கேட்டு உறுதி படுத்திக் கொண்டான்.

ஆமாம் என தலையாட்டினான் ஜிஷ்ணு.

“சரயுவுக்கு நீங்கன்ன ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன்”

ஆமோதிப்பாய் தலையசைத்தான் ஜிஷ்ணு.

“எங்களையெல்லாம் மதிக்கவே மாட்டா. திமிராவே பாப்பா… கூடப் படிக்கிற எல்லாரயும் ‘போல வால’னுதான் சொல்லுவா. ஆனா பாருங்க… நேத்து உங்களுக்கு இந்த சாப்பாடு ஒத்துக்காதுன்னு அண்ணாநகருக்கு ஆட்டோல போய் சாப்பாடு வாங்கியார சொன்னா. அதுவும் சாப்பிட்டு முடிஞ்சதும் ஸ்வீட் சாப்பிடுவிங்களாமே… அதை மறந்துபுட்டேன்… அதனால நீங்க போன பொறவு ஏசிப்புட்டா…” அவள் திட்டியதை ஏதோ கடவுளிடம் வரம் வாங்கியதைப் போல சந்தோஷமாய் சொன்னான்.

ஜிஷ்ணுவுக்குப் பெருமையாக இருந்தது. அந்த வயதிலேயே தன் உணவுப் பழக்கம் முதற்கொண்டு சரயு தன்னை இவ்வளவு கவனித்து வைத்திருக்கிறாளே என்று ஆச்சரியமாகவுமிருந்தது.

‘நேத்து ஏன் சாப்பிட்ட உடன் ஸ்வீட் தேடல. சரயு கைல சாப்பிட்டதால சாப்பாடு கூட அவளை மாதிரியே ஸ்வீட்டா ஆயிடுச்சா?’ என்றெண்ணியவன்,

“அவளுக்காக நான் சாரி கேட்டுக்கிறேன். ரொம்ப திட்டிட்டாளா?” என்றான் ரத்தினசாமியிடம்.

“அதெல்லாம் இல்லண்ணே. சும்மா கோச்சுக்கிட்டா… அத்தனை பசங்க இருந்தாலும் அவ என்னைத்தானே உரிமையோடு கூப்பிட்டுக் கடைக்கு போயிட்டு வர சொன்னா… அதுவே எனக்கு சந்தோஷம்” என்றான். அவளிடம் திட்டு வாங்கியதில் இவனுக்கு இவ்வளவு சந்தோஷமா?

“சரயுன்னா எனக்கு உசுரு. அவள எனக்குக் கட்டி குடுப்பிங்களா?” பார்த்த மறுநிமிடம் தன்னிடம் சரயுவைக் கேட்ட அந்த இளங்கன்றைக் கண்டு வியந்தான் ஜிஷ்ணு.

“நான் பத்தாவது ஒரு வருசம் பெயிலு. பன்னன்டாவதுல ரெண்டு வருஷம் பெயிலு. ஆனா காலேஜுக்குப் போகணும்னு ரொம்ப ஆசை. அதேன் பாலிடெக்னிக் சேர்ந்தேன். நான் சரயுவோட ஆறு வருசம் பெரியவன். இப்பவே வியாபாரத்த நாந்தேன் கவனிக்கேன். நல்லா சம்பாதிக்கேன். அதனால தை பொறந்ததும் பொண்ணு பார்க்கணும்னு வீட்டுல சொல்லறாங்க” சிறுபிள்ளை என்று நினைத்து அலட்சியப் படுத்தி விடக்கூடாதென்று மேலும் வலியுறுத்தினான்.

இவனுடன் சரயுவா? நினைக்கவே குமட்டியது ஜிஷ்ணுவுக்கு. சரயு வானத்து நட்சத்திரம். அவளை இவன் நினைக்கலாமா? கோவமாய் வந்தது ஜிஷ்ணுவுக்கு.

“அவ மேல எனக்குக் கொள்ள ஆச. அவள கட்டிக்கிட்டு ராணி மாதிரி பாத்துக்குறேன். எப்படியாவது இந்தக் கல்யாணத்த முடிச்சு வைங்கண்ணே” என்று கெஞ்சுகிறவனிடம் என்ன பதில் சொன்னால் சரியாக இருக்கும் என்று யோசித்தான் ஜிஷ்ணு.

டீமில் ஆட்கள் மைதானத்திற்கு வர ஆரம்பித்தனர். மைதானம் திருவிழாக் கூட்டமாய் களைகட்ட ஆரம்பித்தது. பூஜா வந்ததும் ஒரே ஆர்ப்பரிப்பு ஆண்கள் பக்கமிருந்து. ‘ஹாய்’ என்று தாராளமாய் முத்தங்களைப் பறக்கவிட்டாள் பூஜா. சிலருக்கு ஓடிச் சென்று கை கொடுத்தாள். அவளது சீனத்துப் பட்டு மேனியைத் தொட்டுப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள் புல்லரித்துப் போனார்கள். பாதிப் பேர் அவளைப் பார்க்கத்தான் வந்திருந்தார்கள் என்று தெரிந்தது.

சரயு அணிக்கு பெண்கள் பகுதியில் வரவேற்பிருந்தாலும் ஆண்கள் அணியில் அவளது கல்லூரி ஆட்களும், ஜிஷ்ணுவும் மட்டுமே கைத் தட்டினர். பூஜா ஏளனமாய் சரயுவைப் பார்த்து சிரித்தபடியே அவளுக்குக் கை தட்டிய ஜிஷ்ணுவை முறைத்தாள்.

ஜிஷ்ணுவுக்குக் கடுப்பாய் இருந்தது. ‘சரயுவை சியர் அப் பண்ண ரெட் ஹில்ஸ் பக்கமிருந்து ஒரு லாரி ஆளுங்களை இறக்கிருக்கணும். தப்பு பண்ணிட்டோம்’ தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.

இது எதையும் கவனிக்கும் மனநிலையில் சரயு இல்லை.

‘இன்னைக்கு மங்களூர் டீமை எப்படியாவது ஜெயிக்கணும்’ என்பதுதான் அவளது தாரக மந்திரமாய் இருந்தது.

எதிர் அணியும் திறமை வாய்ந்ததுதான். ஆனால் அது மட்டுமின்றி குள்ளநரித்தனமும் நன்றாக வந்தது. காலிறுதியில் அந்த அணியுடன் மோதி இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எப்படி விளையாடுவார்கள், நாம் எப்படி அதனை முறியடிக்க வேண்டும் என்று முதல் நாள் ஒரு கூட்டம் போட்டுத் தெளிவாகத் திட்டம் வகுத்திருந்தனர்.

பாஸ்கட்பால் மைதானம். நடுவிலிருந்த வட்டத்தில் சூரியனாய் ஜொலித்த ஆரஞ்சு நிறப் பந்தினை மேலே தூக்கி எறிந்து ஆட்டம் ஆரம்பித்து வைக்கப் பட்டது. தனது உயரத்தின் உதவியால் சுலபமாய் அதனைத் தன்னகத்தே கொண்டுவந்தாள் சரயு. தவற விட்ட கோவத்தில் ‘ஹூம்ம்’ என்று உறுமினாள் பூஜா.

தூத்துக்குடித் துறைமுகத்துக் கொற்கை முத்துக்களும், மங்களபுரம் எனப்படும் மலபார் துறைமுகத்து சொத்துக்களும் வெறிகொண்ட பார்வையோடு மோதிக் கொண்டன. கொல்லன் பட்டறையில் இரும்பு அடிக்கும்போது அனல் பறக்குமே அப்படி நெருப்புப் பறந்தது இரு அணியினரும் மோதும் போது. இரு அணிகளிலும் ஷூட்டர்ஸ் கூடையில் பந்தினைப் போட்டு இரண்டும் மூன்றுமாய் பாய்ண்ட்ஸ் எடுத்தனர்.

ஆரம்பத்தில் அமைதியாக இருந்த பூஜா சற்று நேரத்தில் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்தாள். பந்தினை அடியில் பிடிப்பது, பாலைக் கீழே தட்டிக்கொண்டே ஓட வேண்டும். அப்போதுதான் எதிரணியைச் சேர்ந்த கார்டுகள் ஊடே புகுந்து அந்த பந்தினை அவர்கள் அணிக்குத் தட்டிச் செல்ல முயல்வார்கள். ஆனால் இவளோ கார்டுகள் தட்டிப் பறிக்கும் வாய்ப்புகள் இருக்குமிடங்களில் பந்தினைத் தரையில் தட்டாமல் கையில் எடுத்துக் கொண்டு ஓடுவது, தெரியாமல் பட்டுவிட்டதைப் போல் எதிரணியினர் கைவசமிருக்கும் பந்தினைக் காலினால் லேசா தட்டிவிட்டுத் தனது அணிக்குத் திசை திருப்புவது என்று விளையாட்டில் விதிமீறல்களைச் செய்தாள்.

எந்த ஒரு வீரரும் ஐந்து வினாடிகளுக்கு மேல் பந்தினைத் தன் வசம் வைத்திருக்கக் கூடாது. அதை எதிரணியினர் கடைபிடித்ததைப் போலவே தெரியவில்லை. ஒரே நாள் கிராஷ் கோர்ஸ் படித்து வந்த ஜிஷ்ணுவுக்கே இதெல்லாம் தப்பென்று தெரிந்தது. பௌல் தந்திருக்கணுமே என்று யோசித்தான். அதே எண்ணம்தான் மற்றவர்களுக்கும். அதனாலேயே பூஜாவால் புல்லரித்த ஆண்கள் கூட்டம், நமது முத்துக்களின் திறமையாலும், தப்பாட்டம் ஆடிய ஆட்களிடமும், விதிமுறைப்படி விளையாடித் தாக்குப் பிடித்த நேர்மையாலும் கவரப்பட்டனர். முதலில் கையளவு ஆதரவாளர்களின் கைதட்டலால் விளையாட ஆரம்பித்த தூத்துக்குடி அணி முதல் பகுதி முடிவதற்குள் பாதி ஆட்களின் அன்பை சம்பாதித்திருந்தது. பூஜா அணியினரின் அராஜகத்தால் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்றுணர்ந்து மீதி ஆட்களும் சரயுவின் அணிக்கு மாறத் துவங்கினர்.

தூத்துக்குடி அணி நன்றாக விளையாட விளையாட அவர்களுக்கான கெடுபிடிகள் கூடியது. இப்படி விளையாட்டிருந்தால் சரயு ஜெயிப்பது கஷ்டம் என்று தெரிந்தது. ஜிஷ்ணு தனது நண்பன் ஒருவனுக்கு போன் செய்து விரைவாக ஏதாவது வீடியோகிராபர் டீமை அனுப்பச் சொன்னான். மறக்காமல் அவர்களிடம் பிரஸ் என்ற அடையாள அட்டையும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினான்.

முதல் பாதி முடியப்போகிறது. சரயு அணியோ கிடைத்த கேப்பில் பாயிண்ட் எடுத்தவாறே வந்தது. கிட்டத்தட்ட மங்களூர் அணியினை விட சிறிதே பின் தங்கியிருந்தனர். அப்போதுதான் சன் செய்திகளில் தங்களது மேட்சைப் படம் பிடிக்க வருவதாய் தகவல் கிடைக்க திடீரென மைதானத்தில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. பெரிய பெரிய காமிராவைத் தூக்கிக் கொண்டு பிரஸ் என்ற பாட்ச் அணிந்த டீம் ஒன்று வர, கோணலாக சென்றுக் கொண்டிருந்த மேட்ச் நேரான பாதையில் செல்ல ஆரம்பித்தது.

பூஜா அணி செய்த தவறுகள் உடனே கண்டிக்கப்பட்டு சரயுவின் அணிக்கு ப்ரீ த்ரோ கொடுக்கப் பட்டது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட தெக்கத்திக் கில்லாடிகளும் பாய்ந்து தங்களது விளையாட்டுத் திறமையை நிரூபித்தனர். சரயு-பூஜா அணி 47-41 என்ற புள்ளிகள் பெற்றிருந்தனர். இதற்குள் பூஜா நான்கு பௌல் வாங்கியிருந்தாள். இன்னும் ஒன்றினை வாங்கிவிட்டால் அவ்வளவுதான் ஆட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவாள்.

சரயுவின் அபார விளையாட்டுக்கு விசில் கிளம்ப, சேர்மக்கனியின் ஷூட்டிங் ஸ்டைலுக்கு ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியது. ஜெயிப்பது கடினம் என்று உணர்ந்தாள் பூஜா. இன்னும் பத்து நிமிடங்களில் மேட்ச் முடிந்துவிடும். ஆனால் தன்னை அவமானப் படுத்திய சரயுவை சும்மாவா விடுவது? இன்னொரு முறை தப்பாட்டம் ஆடினால் விலக்கி விடுவார்கள்… அவ்வளவுதானே… ‘சரயு இந்த முறை உன்னிடமே ஆடுறேன்டி’ பல்லைக் கடித்தவள், கூடையை நோக்கி முன்னேறிய சரயுவின் மேல் எதிர்பாராத விதமாகப் பாய்ந்தாள். தடுமாறிய சரயு நிலைகுலைந்து கீழே விழுந்தாள். கீழே விழுந்த சரயுவின் கால்களில் ஷூவினால் நன்றாக மிதித்தாள்.

கோக் குடித்தபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜிஷ்ணுவுக்கு தனது இதயத்திலேயே யாரோ மிதிப்பதைப் போலிருந்தது. “சர…யூ…” கத்திக் கொண்டே பாட்டிலைக் கீழே எறிந்துவிட்டு தாண்டிக் குதித்து மைதானத்தில் சரயு கீழே விழுந்திருந்த இடத்திற்கு ஓடினான்.

“You cunning snake… You have to pay for this…”

பூஜாவிடம் கத்திவிட்டு சரயுவைத் தூக்கியவனை மருத்துவ உதவி அறைக்கு அனுப்பினர்.

“கனி எப்படியாவது ஜெய்ச்சுடுங்கடி” வேதனையைப் பொறுத்துக்கொண்டு சொல்லியவளை,

“சுப்… நோரு மூய்” (வாயை மூடு) அதட்டினான் ஜிஷ்ணு.

மெயின் பில்டிங்கை விட்டு சற்று தள்ளியே அந்த முதலுதவி அறை இருந்தது. தூசு படிந்த உபகரணங்களுடன் அந்த அறையைப் பார்க்கவே பேய் பங்களா மாதிரி தெரிந்தது ஜிஷ்ணுவுக்கு. சில முதலுதவிகள் செய்துவிட்டு எலும்பு முறிவு எதுவுமில்லை என்று சொன்னார்கள். இசகு பிசகாக விழுந்ததால் பாதத்தில் நன்றாக சுளுக்கியிருந்தது. இருந்தாலும் எக்ஸ்ரே ஒன்று எடுத்தால் திருப்தியாக இருக்கும் என்று தோன்றியது ஜிஷ்ணுவுக்கு. சவரிமுத்துவிடம் அனுமதி கேட்டு வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.

ரத்தினசாமியிடம் சரயுவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு சவரிமுத்தை சந்திக்க விரைந்தான். அங்கிருப்பவர்கள் ஒரு சிலரைத் தவிர அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க சென்றிருந்தனர். சரயு அணியினரோ இன்னும் விளையாட்டை முடித்திருக்கவில்லை. அத்துடன் பூஜாவின் செயல் தனிப்பட்ட தாக்குதல் என்று தகராறு வேறு நடந்தது. அதனால் சற்று இடைவெளிக்குப் பின் மேட்ச் தொடர்ந்தது. உதவிக்கு ஆளில்லாமல் சவரிமுத்து திண்டாடிப் போய்விட்டார். ஜிஷ்ணு இருந்ததால் சரயுவை சரியான நேரத்துக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடிந்தது.

“தம்பி எதுத்த கடைல போயி இந்த மருந்து வாங்கிட்டு வா” என்று துணைக்கிருந்த ரத்தினசாமியையும் அனுப்பிவிட்டு முதலுதவி அறைக்குள் நுழைந்தான் கந்தசாமி. ஐம்பதைத் தொடும் வயது. எப்போதும் சிவந்த கண்கள். அந்த இடத்தில் தான் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் எடுபிடியா, உதவியா யாருக்கும் தெரியாது. கதவினை மெதுவாக சாத்தியவன், வேதனையில் முகம் சுருக்கிப் படுத்திருக்கும் சரயுவை நெருங்கினான். அவளது தந்தக் கால்கள் வெய்யிலில் பளபளக்க, அதைக் கண்ட கந்தசாமியின் கண்கள் வெறியில் மின்னியது.

வரிமுத்திடம் அவசர அவசரமாக அனுமதி பெற்றுக் கொண்டு அவரையும் கையோடு அழைத்துக் கொண்டு விரைந்து நடை போட்டான் ஜிஷ்ணு. நடந்துக் கொண்டே சேர்மக்கனியை அழைத்தவன், “கனி லேடீஸ் ஹாஸ்டல்ல இன்னைக்கு நைட் கரண்ட் ஒரு மணிநேரம் கட். அப்ப யாரோ ஹாக்கி பாட்டால மங்களூர் டீம் பூஜாவை அடிச்சு, அவ காலை உடைக்க ப்ளான் பண்ணுறாங்க போலிருக்கு. ஒரு முக்கியமான விஷயம் என்னான்னா இந்த அடிதடி கேஸை போலிஸ் கூடக் கண்டுக்கமாட்டாங்க போலத் தெரியுது” என்றான்.

“சரிண்ணே, புரிஞ்சது. கேம்ஸ் ரூம்ல பழைய ஹாக்கி பேட் இருக்கு. எடுத்துக்குறோம். எத்தனை மணிக்குக் கரென்ட் கட்டாகுது?” என்றாள் சுருக்கமாக.

“குட். இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு. வேலை முடிஞ்சதும் எனக்கு போன் பண்ணு” சொல்லிவிட்டு சரயுவைப் பார்க்க விரைந்தான். ரத்தினசாமியும் மருந்துகளை வாங்கிக் கொண்டு தூரத்தில் நடந்து வந்துக் கொண்டிருந்தான்.

“இவனை அங்க சரயுவுக்குத் துணையாத்தானே இருக்க சொன்னேன். something fishy…” மனதுக்குப் பட்டதும் வேக வேகமாய் முதலுதவி அறையை நோக்கி ஓடினான்.

ரயுவுக்கு அந்த வயதான கம்பௌண்டர் பாதங்களைப் பரிட்சித்துப் பார்த்ததிலேயே வலி உயிர் போயிற்று.

“கொஞ்சம் மெதுவா செய்யுங்க சார். வலிக்கு” என்றவளிடம் இளித்தான் கந்தசாமி.

“என்னம்மா பொம்பளப் புள்ளையாப் பொறந்துட்டு இதுக்கே அழுதா எப்படி? இன்னும் நீ எவ்வளவு பார்க்க வேண்டியிருக்கு” என்ற பேசினாலும் கைகள் மெதுவே பாதத்திலிருந்து அவளது முட்டிக்கு வந்திருந்தது.

அசௌகரியமாய் உணர்ந்தாள் சரயு. “அங்கெல்லாம் அடி படல”

எரிச்சலாய் பார்த்தான் கந்தசாமி. “அதை நீ சொல்லக் கூடாது. நான்தான் பார்த்துட்டு இருக்கேன்ல” என்றான். பின்னர் ஆவலாய் அவனது கண்கள் அவளது கால்களை மேய்ந்தது.

“இங்க தொடைல கூட ஏதோ அடி பட்டிருக்கும் போலிருக்கே” அவனது கைகள் மேலும் முன்னேற,

“அது ரெண்டு நா முன்னாடி கீழ விழுந்தது. நீங்க பாதத்தை மட்டும் பாருங்க” கால் வலி தாங்க முடியாத வேதனையில் முனகினாள் சரயு.

“அப்படில்லாம் விட முடியாது. இதுக்கும் மருந்து தடவி விடணும். உடம்புல வேற எங்கல்லாம் ஊமைக்காயம் பட்டிருக்குன்னு பாக்கணும்” என்றவாறு கால் முட்டியின் மேலிருந்த காயத்தில் கை வைத்தான் கந்தசாமி. மற்றொரு கை அவளது வலித்த பாதத்தை அசைக்க, வேதனை தாங்காமல்,

“வேகமா அசைக்காதிங்க சார். உயிர் போற மாதிரி வலிக்கு…” முனகினாள் சரயு. கந்தசாமி எதிர்பார்த்த மாதிரியே சரயு வலியில் அவனது கைகள் சாவகாசமாய் மேலே முன்னேறியதை கவனிக்க மறந்தாள்.

“டேய்…” என்ற சத்தத்தைக் கேட்டு சரயுவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. கந்தசாமியும் பதறி எழுந்தான்.

ஜிஷ்ணு கொத்தாய் கந்தசாமியின் சட்டையைப் பற்றினான். பளார் பளார் என்று அவனடித்த அடியில் கந்தசாமியின் மூக்கு உடைந்து ரத்தம் வந்தது.

“கெழட்டு நாயே… அடிபட்ட வேதனைல இருக்குறவள சீரழிக்கப் பாக்குறியே? நீயெல்லாம் மனுஷனா இல்லப் பொணம் தின்னிக் கழுகா?”

ருத்திர மூர்த்தியாய் மாறி அடி நொறுக்கி விட்டான். குற்றுயிரும் குலை உயிருமாய்த் தரையில் கிடந்தான் கந்தசாமி. அதற்குள் அறைக்கு வந்திருந்த சவரிமுத்தும், ரத்தினசாமியும் சேர்ந்து விலக்கிட முயன்றனர்.

“சம்பேஸ்தானு… நா செய்தோ வான்னி சம்பேஸ்தா… நாக்கு வாடு காவாலி” (கொன்னுடுவேன்… என் கையால் அவனை கொல்லனும்… எனக்கு அவன் வேணும்.) என்று வெறிப் பிடித்தவனைப் போல் கத்தியவனை அடக்குவதே பெரும்பாடாய் இருந்தது.

 “விஷ்ணு” என்ற சரயுவின் மெல்லிய குரலில் அடங்கி நின்றான்.

“சார் அந்தாளத் தூக்கிட்டு எல்லாரும் ஆஸ்பத்திரிக்குப் போங்க. என் கால் வலிக்கு காமிக்க விஷ்ணு கூட டாக்டர்ட்ட போறேன்” சொல்லி ஜிஷ்ணுவைப் பார்த்தாள். அவனோ அதன்பின் யாரிடமும் அனுமதி கேட்கவில்லை. அவளைத் தூக்கிச் சென்று காரின் பின்சீட்டில் வசதியாக அமர வைத்தான். காரில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பேசினால் சரயுவைத் திட்டிவிடுவோமோ என்று பயந்தான்.

கார் போகும் புயல் வேகத்தைப் பார்த்த சரயு, “நீ சரியில்ல விஷ்ணு. ஒரு ஓரமா பார்க் பண்ணு” என்றாள். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தினான்.

சரயு வற்புறுத்தியதால் பின் சீட்டில் அவளுக்கருகே அமர்ந்தான். அவள் முகத்தையே ஏறிட்டுப் பார்க்காமல் அத்தனை வேலையையும் செய்ய, சரயுவுக்கு அவன் கோவத்தை சமாதனப் படுத்துவதே முக்கிய வேலையாகத் தோன்றியது.

“அந்தாளு மருந்துதானே போட்டாரு. அதுக்கு ஏன் விஷ்ணு இப்படி டென்சனாகுற. அமைதியா இரு” சொல்லி முடித்ததும் பளாரென்று அவள் கன்னத்தில் பதிந்தது ஜிஷ்ணுவின் கைகள்.

“மருந்து போட்டானா? அறிவில்லை உனக்கு? ஒரு ஆம்பள சாதாரணமா தொடுறானா இல்லை உள்நோக்கத்தோட தொடுறானான்னு தெரியாம நீ என்னடி பெருசா படிச்சுக் கிழிக்குற? ‘குட் டச்’ எது, ‘பேட் டச்’ எதுன்னு உன்னாலப் பிரிச்சுப் பார்க்க முடியல?”

“உளறாதே விஷ்ணு… நீயும் கூடத்தான் என்னை மெடிக்கல் ரூமுக்குத் தூக்கிட்டுப் போன. அதைப் போய் தப்புன்னு சொல்ல முடியுமா? தப்பு செய்ய அவரென்ன இளந்தாரியா? அந்த வயசானவருக்கு நான் பொண்ணு மாதிரி. அவர் எப்படி உள்நோக்கத்தோடு என்னைத் தொட்டிருக்க முடியும்?” என்று லாஜிக் பேசினாள் சரயு.

“முடியும்டி… இப்பப் பாரு” என்றவன் அவள் உணரும்முன் ஆவேசமாய் தன் உதடுகளை அவளது உதடுகளில் பொருத்தினான். அவனுக்காகவே செய்ததைப் போன்றிருந்த அவளது செப்பு இதழ்கள் அவனது இதழ்களுக்குள் அடங்கிப் போயின. சரயுவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. ஜிஷ்ணுவின் கண்கள் எதையோ அவளுக்கு உணர்த்த முயன்றது.

மூச்சு வாங்க அவளது இதழ்களை விடுவித்தான். அதைக் கூட உணர முடியாதவாறு முதல் முத்தம் தந்த அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் சரயு. ஒரு நிமிடம் கழித்து நடந்ததை உணர்ந்த ஜிஷ்ணு,

“இதுதான் ‘பேட் டச்’… ஏன்ரா இப்படி மக்கா இருக்க. ஆம்பளைங்கள்ல நல்லவங்களும் இருக்காங்க பசுத்தோல் போத்தின புலியும் இருக்கு. அதை நீதான் கண்டுபிடிச்சுப் பழகணும். ஒருத்தனோட உண்மையான குணம் தெரியுற வரைக்கும் ஜாக்கிரதையாவே இருக்கணும்”

“உன்கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தெரியலரா… கோவில்ல உன்னைப் பாத்தப்ப நீ சரயுன்னே தெரியாது. உன் அழகுல சொக்கிப் போனேன். அந்த பிச்சைக்காரப் பொண்ணு மானத்தை மறைக்க நீ துணி தந்தது என் மனசைத் தொட்டது, கட்டினா உன்னைத்தான் கல்யாணம் கட்டணும்னு நெனச்சுத்தான் உன் பின்னாடியே வந்தேன். நீ சரயுன்னு தெரிஞ்சதும் சந்தோஷம் ஒரு பக்கம். உன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வருத்தம் இன்னொரு பக்கம். இதை உன்கிட்ட சொன்னதுக்கு என்ன காரணம் தெரியுமா? உன் மேல உயிரையே வச்சிருக்குற உன் விஷ்ணுவுக்குக் கூட முதல்ல கண்ல பட்டது உன் அழகுதான். எனக்கே அப்படின்னா மத்தவங்களுக்கு… யோசிச்சுப்பாரு… காம வசப்பட்ட மனிதனும் ஒரு மிருகம்தான். அந்த மாதிரி மிருகத்தை இனம் கண்டுக்கோ… ஒவ்வொரு தடவையும் நான் உன்னைக் காப்பாத்துறது சாத்தியமா? நீயே உன்னைப் பாதுகாத்துக்கணும்”

அவளது அதிர்ச்சி இன்னமும் கலையாததைப் பார்த்தவன், மிகவும் சங்கடப்பட்டுப் போனான். அவர்களது முதல் முத்தம் இப்படியா அதிர்ச்சியில் தொடங்கவேண்டும். தன் மேலேயே கோவம் கோவமாய் வந்தது ஜிஷ்ணுவுக்கு.

“சாரிரா… சாரிரா… உனக்கு எப்படியாவது உணர்த்தணும்னுற வேகத்துல வரம்பு மீறிட்டேன். என்னை அடிச்சுடு…” அவள் கைகளை எடுத்துத் தன் கன்னங்களில் அறைந்துக் கொண்டான்.

“இப்படி ஒரு அரைவேக்காடா வளர்த்து வச்சிருக்காங்களே உங்கம்மா அவங்களை சொல்லணும். இப்பவே அவங்களட்ட போய் கேக்குறேன்” என்று சொன்ன ஜிஷ்ணுவின் வாயைத் தனது கைகளால் பொத்தினாள் சரயு.

“எனக்குத்தான் அம்மா இல்லையே. செத்துப் போயிட்டாங்களே… வேண்டாம் விஷ்ணு. நீ எங்கம்மாட்ட போக வேண்டாம்… நீ ரொம்ப நாள் சந்தோஷமா இருக்கணும்” என்றவளைத் திகைப்புடன் பார்த்தான்.

“எங்கம்மா குட் டச், பேட் டச் எதையும் எனக்கு சொல்லித் தராம நான் பெரிய பொண்ணாகுறதுக்கு முன்னாடியே சாமிகிட்ட போயிட்டாங்க. மூணு அக்காங்களும் கல்யாணம் பண்ணிட்டு என்னையும் அப்பாவையும் தனியா விட்டுட்டுப் போயிட்டாங்க. நான் ஆம்பளைத்தனமா சுத்துறதால பொண்ணுங்க என்கிட்டே பழகாதுங்க. மரியாதையில்லாம பேசுறதால கிளாஸ் பசங்க என்னைப் பார்த்தாலே பயந்தடிச்சு ஓடுவானுங்க. எங்க கிளாஸ் சாரெல்லாம் எங்களப் பொண்ணு மாதிரி பாத்துப்பாங்க. அதுனாலதான் ஜிஷ்ணு எனக்கு எதுவும் தெரியாம போயிடுச்சு. அது தப்பா…” என்றாள் வருத்தத்துடன்.

 “இல்லரா… உன் தப்பு எதுவுமில்ல… இப்படி ஒரு தேவதையைப் படைச்சு, அதுக்கு பாதுகாப்பைப் பறிச்சது அந்தக் கடவுளோட தப்பு…” உடல்நிலை சரியில்லாமிருந்த போது தன்னை அன்பாக கவனித்த சரயுவின் தாய் சிவகாமியின் நினைவில் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

“யாருமில்லாம ரொம்பக் கஷ்டப்பட்டியா பங்காரம்” என்றான்.

அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டவள், “அழாத விஷ்ணு… அம்மா எங்க போயிட்டாங்க. சாமியா மாறி என் கூடவேதான் இருக்காங்க. நீ அழுதா எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கும். ஊருக்குப் போனதும் நீ அழுததையே நினைச்சுட்டிருப்பேன்”

கண்களைத் துடைத்துக் கொண்டவன், “ஏன்ரா… என்கிட்டே முன்னாடியே சொல்லல?”

“உனக்கு அமெரிக்கா போகப் பரிட்சை இருந்ததுல்ல. இதைத் தெரிஞ்சா உன் மனசு கஷ்டப்படுமே. நீ என்னைப் பாக்க வந்தா உன் படிப்பு வீணாயிடுமே” என்று தான் சொல்லாததிற்கான காரணத்தை சொன்னாள்.

வேதனை தாளாமல் அவளை அணைத்துக் கொண்டான். அவனது மார்பில் சாய்ந்ததும் இதுவரை உணராத ஒரு பாதுகாப்பை உணர்ந்தாள் சரயு. தனக்குரிய இடத்தைக் கண்டுகொண்டோம் என்ற நிம்மதியில் கால்வலி கூட மறைந்தது. அவளது கண்கள் தானாக மூடிக் கொண்டன. அவளது மனதைப் படிக்கும் வல்லமை படைத்த ஜிஷ்ணுவுக்கும் நிம்மதியாய் இருந்தது.

‘வந்துவிட்டாள்… என்னவள் என்னிடம் வந்துவிட்டாள்’ அவனது கண்களும் நிம்மதியில் மூடின.

‘ஆன்ட்டி… உடம்பு சரியில்லாதபோது ஒரு அம்மா மாதிரி என்னை பார்த்துக்கிட்டிங்க. அதே மாதிரி நானும் காலம் முழுசும் சரயுவைக் கண்ணுக்குள்ள வச்சுப் பாத்துக்குறேன். அவளை ஒரு கஷ்டமும் நெருங்க விடமாட்டேன். அவளை எனக்கே எனக்குன்னு தந்துடுங்களேன் ப்ளீஸ்’ சரயுவின் தாயிடம் மனதில் இறைஞ்சினான்.

‘என்னடா ஜிஷ்ணு சொல்லுற உனக்கே உனக்குன்னு சரயு வேணுமா?’ திகைத்துப் போய் புத்தி கேட்க,

‘ஆமாம், ஐ லவ் சரயு… நான் சரயுவை என் உயிருக்கு மேலா லவ் பண்ணுறேன்… பெல்லியும் செஞ்சுக்கப் போறேன்’ என்று அவனது மனம் உரக்கக் கத்தியது. அவன் இதழ்கள் புன்னகையில் விரிய, கைகள் சரயுவின் இடையை வளைத்தன. அவளது நெற்றியில் காதலுடன் தனது இதழ்களைப் பதித்தான்.

Oh baby I am in Love
O girl I am shining like a star above
Right now I’m feeling like u making me
crazy
person fallen in love

Baby
you’re always mine
forever together we will always shine
I love U more than you never know
I can
never ever let you go

என் கனவுகள் நிஜம்தானா? இந்த நிகழ்வுகள் நிஜம்தானா?

என் கனவும் நினைவும் அன்பே நீதானா?

எது வரை இந்த உலகமும் வாழும்

அதுவரை நம் காதலும் வாழும்

உலகத்தில் நம் காதலைப் போலே

உயரத்தில் எந்தக் காதலும் இல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 7’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 7’

அத்தியாயம் – 7   ரஞ்சனுக்கு உறக்கமே பிடிக்கவில்லை. கனவு நினைவு இரண்டிலும் நந்தனாவே நிறைந்திருந்தாள். மாதம் இருமுறை பெரியகுளம் வந்தது மறைந்து,  வாரம் இரண்டு  நாட்களாயிற்று. புதிதாக ஆரம்பித்த தொழிலுக்கு அது உதவியாகக் கூட இருந்தது. அவன் தாய் அகிலாண்டத்துக்கும்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 20என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 20

அத்தியாயம் -20 ஜன்னலில் இருந்து வந்த நிலவொளியில்  தங்கப் பதுமையாய் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்  அரவிந்த். சித்தாராவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் அவன் மனம் தவித்தது. அவளிடம் என்னனவோ சொல்ல ஏங்கியது.  என் வாழ்கைக்கு வந்த உயிர்ப்பு நீதான் மனதளவில்