சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 10

வேப்பம்பூவின் தேன்துளி – 10

 

கண்ணில் இருந்து நேர் கோடாய் விழிநீர் கசிய, தான் அழுகிறோம் என்பது கூட புத்தியில் உரைக்காமல் திகைத்த பார்வையுடனும், சோர்ந்து, வாடிய தோற்றத்துடனும் அமர்ந்திருந்தாள் அன்னபூரணி.

இளையவளையே ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதாவிற்கு பாவமாய் போய்விட்டது.

 

தான் அறிந்த விஷயத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல், அதேசமயம் இளையவளையும் தன்னிலையை உணர வைக்கும் பொருட்டு, “பார்த்தியா பூரணி இவங்க பேச்சை? நீதி மாமா கூட எனக்கு கல்யாணமாமா? அவரை கல்யாணம் பண்ணறதும், நம்ம ஸ்ட்ரிக்ட் சிங்காரம் ஹெட்ச்.எம் முன்னாடி உக்காந்து எக்ஸாம் எழுதறதும் ஒன்னுன்னு தெரியாம என்னைக் கோர்த்து விட பார்க்கிறாங்க…” என்று பெற்றோர்களுக்குக் காதில் விழாத அளவிலும், தங்கையின் செவிகளில் தெளிவாக விழும் படியாகவும் பேசியபடி ரஞ்சிதா அவளருகே வந்தாள்.

 

தமக்கை பேசியது பதியாவிட்டாலும், அவளும் அங்கு இருக்கிறாள் என்பதிலேயே கொஞ்சம் தெளிந்தவளுக்கு… கண்ணீர் உரைத்துவிட அவசரமாகத் துடைத்துக் கொண்டாள்.

 

என்னவாயிற்று? என்று தங்கையிடம் கேட்கவே அவசியமற்று காரணத்தைத் தாமாகவே கண்டு பிடித்திருந்தாள் ரஞ்சிதா. ஆனால், இது நடக்குமா என்றொரு அச்சமும், சந்தேகமும்.

பரிவுடன் அவளது கலைந்த தலைமுடியைச் சீர்படுத்தி ஒதுக்கி விட்டு, கன்னம் வருடினாள் தமக்கை.

 

ஆனால், அதற்கு மேலும் யோசிக்க முடியாமல் நீதிவாசன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான். தங்கை இன்னும் மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்திருக்க, ‘நான் சொன்னதை இவ காதுலயே வாங்கலை போலயே! அச்சோ இப்ப விளக்கம் சொல்லவும் முடியாது. சரி மாமா கிளம்பட்டும், நான் நீதி மாமாவை கட்டிக்கப் போறதில்லைன்னு… நல்லா குத்து விளக்கைப் புளி போட்டு விளக்கிற மாதிரி விளக்கிடறேன்’ என்று மனதிற்குள் சொன்னபடியே… வேறு வழியேயில்லாமல் முன்னறைக்கு வந்த ரஞ்சிதா நீதிவாசனை வரவேற்று நலம் விசாரித்தாள்.

 

நீதிவாசன் சிறிது நேரம் பொதுவாகப் பேசியவன், பிறகு மேற்பூச்சு எதுவும் இல்லாமல் வந்த விஷயத்தை நேரடியாகச் சொல்லி விட்டான்.

ரஞ்சிதாவிற்கு ஜாதகம் ஒன்று வந்திருப்பதாகவும், தெரிந்த குடும்பம் என்றும், மிகவும் நல்லமாதிரி என்றும் சொல்லி… அவர்கள் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால், உடனே கல்யாணம் முடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்ற விவரத்தைச் சொல்லி மாப்பிள்ளையின் ஜாதகத்தைத் தந்தான்.

 

இவர்கள் நினைப்பதற்கு நேர்மாறாக நீதிவாசன் சொல்லவும்… முத்துச்செல்வம், ஜோதிமணியின் முகம் சற்றே மலர்ச்சியைத் தொலைத்தது.

 

அதைக் கவனித்து விட்டவன், “என்ன விஷயம் அத்தை?” என்று விசாரித்தான்.

 

பெரியவர்கள் தங்கள் மனதை மறையாமல் சொன்னவர்களிடம், “இல்லை அத்தை இப்பதான் தீபாவுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு. அதுக்கு சரிகட்டவே எனக்குக் கொஞ்ச டைம் வேணும். ரஞ்சிதாவும் தீபாவுக்கு ஒரு வயசு தான சின்னவ? கல்யாண வயசுல காத்திட்டு இருக்கிறது சரிப்படாது. எனக்கு எப்படியும் இன்னும் ரெண்டு, மூணு வருஷம் ஆயிடும். அதுவரை அவ ஏன் காத்திருக்கணும்? அதுனால நம்ம ரஞ்சிதாவுக்கு வேற நல்ல இடமே பார்க்கலாம்” என்று விளக்கம் தந்தான் அவன்.

 

‘அப்பாடா…’ என்று ஆசுவாசமாய் மூச்சு வந்தது ரஞ்சிதாவிற்கு. ‘ஒரு பிரச்சனை முடிஞ்சது’ என்று மகிழ்ந்தாள். நம்ம சின்னகுட்டி இதை கவனிச்சிருந்தாலே… தெளிஞ்சிருப்பாளே என்று எண்ணியபடி அறையினுள் எட்டிப்பார்க்க… பூரணியோ அதே வெறித்த பார்வையுடன் வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். ‘சுத்தம்… இவளோட…’ என்று அலுப்பாக இருந்தது மூத்தவளுக்கு.

 

நீதியின் விளக்கத்தில் தம்பதியரும் தெளிந்தார்கள். அவன் தந்த ஜாதகத்தைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டனர்.

“நீ சொன்னா சரியா தான் இருக்கும்” என்று புகழாரம் வேறு!

“ரஞ்சி நீதிக்கு காஃபி வெச்சு கொடு” என்று ஜோதிமணி மகளிடம் சொல்லி உள்ளே அனுப்பியவர், “இரு சமையல் எல்லாம் முடிஞ்சது. கையோட சாப்பிட்டுத் தான் போகணும்” என்று மருமகனை வற்புறுத்தினார்.

“அச்சோ அதெல்லாம் இல்லை அத்தை…” என்று நீதிவாசன் மறுப்பாக ஆரம்பிக்கும் போதே, முடியவே முடியாது என்று பெரியவள் கறாராகச் சொல்லி விட்டாள்.

முத்துச்செல்வம் மனைவியிடம், “இன்னைக்கு காமாட்சி அம்மன் கோயில்ல சீட்டு படிக்கிறாங்களே, நீ போயிட்டு வந்துடு. எனக்கு இன்னும் வேலை முடியலை” என்று சொல்ல,

“சரி நீங்க சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வாங்க” என்று கணவரைக் கீழே விசைத்தறியைப் பார்க்க அனுப்பிய ஜோதிமணி,

நீதிவாசனிடம், “காஃபி குடிச்சுட்டு இரு நீதி. மாச சீட்டு… கண்டிப்பா ஒரு ஆள் இருக்கணும். நான் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன்” என்று சொல்லி அவன் ஆட்சேபிக்காதவுடன், மூத்த மகளிடம், “ரஞ்சி, மாமா சாப்பிடாம கிளம்பிட போறான் பார்த்துக்க. நான் போயிட்டு சீக்கிரம் வந்துடடேன்” என்று சொல்லிவிட்டு கோயிலுக்கு நடையைக் காட்டினார்.

‘இந்த அத்தையோட…’ என்று சலிப்பு வந்தாலும், அவரின் அன்பு அவனுக்குச் சுகமாக இருந்தது. பிள்ளைகள் எத்தனை வளர்ந்தாலும் குழந்தையாகப் பாவித்து அன்பு செலுத்தும் உறவுகள் பாக்கியமே!

ரஞ்சிதா காஃபி கொண்டு வரவும், நீதி அவளிடம் மறுத்தான். “ரஞ்சி காஃபி மட்டும் போதும். இப்பவே நான் சாப்பிட மாட்டேன். இன்னும் நேரம் ஆகும்”

“உங்க அத்தை கிட்டச் சொல்ல வேண்டியது தானே…” என்றாள் அவள் சன்ன சிரிப்புடன்.

“ஆமா… சொல்லறதை கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க. அது சரி, என்ன தனியா இருக்க போல…” என்றான் சுற்றிலும் நோட்டம் விட்டபடி.

ரஞ்சிதாவிற்கு விழிகள் தெறித்து விடும் போல இருந்தது. ‘அவ கொடுத்த ஷாக்கே இன்னும் குறையல. இதுல மாமா எனக்கு நெஞ்சு வலி வர வெச்சுடுவாரு போலயே…’ என்று அவனை அதிர்ச்சியாகப் பார்க்க,

“என்ன ஆச்சு?” என்றான் அவன்.

“உங்க முன்னாடி தான அம்மா, அப்பா போனாங்க…” என்று புத்திசாலித்தனமாய் பதில் சொன்னவளை வினோதமாகப் பார்த்தவன்,

“ஹ்ம்ம்… உன் தங்கச்சி எங்கன்னு கேட்டேன்” என்றான் நேரடியாகவே.

அதிர்ச்சியில் ரஞ்சிதாவிற்கு இதயம் ஸ்ருதி தப்பியது. ‘இவங்க ரெண்டு பேரும் எப்ப டிராக் ஓட்டுனாங்கனே தெரியலையே கடவுளே!’ என்று மனதோடு அரற்றியபடி, “உள்ள…” என்று சொல்லி இவள் கையை நீட்டி அறையைக் காட்டினாள்.

“ஏன்? எழுதறாளா? உள்ள என்ன பண்ணறா” என்றவனுக்கு எரிச்சல். ‘அதென்ன எப்பொழுது பார்த்தாலும் கண்ணிலே படாமல் விலகியே இருப்பது’ என்று.

ரஞ்சியோ, “அவளுக்குக் கொஞ்சம் அடி பட்டிருக்கு மாமா. ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா…” என்று தங்கையின் நிலையைச் சொல்லி விட்டாள்.

ரஞ்சிதா பதில் சொன்னது தான் தாமதம், “என்ன?” என்று அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டான் நீதிவாசன்.

அதோடு மேற்கொண்டு அவளிடம் எதுவும் பேசாமல், அறைக்குள்ளும் செல்ல… ‘என்ன நடக்குது இங்க?’ என்று ரஞ்சிதா மயங்காத குறை தான்.

பின்னே சென்று பார்க்கவும் தயக்கமாக இருக்க, தங்கையின் வெறித்த பார்வையும், உணர்வற்ற நிலையும் வேறு உள்ளே போகச் சொல்லி குச்சியை வைத்து விரட்ட… ஒருவழியாக முடிவெடுத்து இரண்டு மூன்று எட்டுக்கள் முன்னே வைத்து நின்று கொண்டாள். எதுவும் தேவை என்றால் போய்க் கொள்வோம் என்ற எண்ணத்தில்!

உள்ளே சென்றவன், “என்னாச்சு அன்னம்?” என்று அதட்டலாகக் கேட்க, மலங்க மலங்க விழித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ம்ப்ச்… கையில என்ன அடின்னு கேட்டேன்”

“அது… அவன் சரண்யாவை தள்ளி விட்டுட்டானா… குடிச்சு இருந்தான் போல… அதான் அஞ்சலியை எப்படி அவன்கிட்ட தனியா விட… அதுதான் அவன் கத்தியை ஓங்கவும் நான் தடுக்க…” என்று இருந்த மனநிலையில் எதையும் யோசிக்காமல் திக்கித்திணறி மனதில் இருப்பதை அப்படியே நீதிவாசனிடம் கொட்டத் தொடங்க,

கேட்டுக்கொண்டிருந்த ரஞ்சிதாவிற்கு நெஞ்சுவலியே வந்து விட்டது. ‘அடிப்பாவி…!’ என்று விரைந்து ஓடி… அவள் கையை பிடித்து உலுக்கியவள், “மாமா உனக்கு கை எப்படி அடி பட்டதுன்னு கேட்கிறாங்க பூரணி… ஸ்கூட்டர் இடிச்சுடுச்சுல்ல… அதை சொல்லு… நீ ஏன் சம்பந்தம் இல்லாத எதையோ பேசிட்டு இருக்க” என்று ஜாடை காட்டி அவளைத் திசை திருப்ப முயன்றாள்.

ரஞ்சியின் எண்ணம் புரியவும், “அவளை விடு ரஞ்சி” என்றான் நீதிவாசன் அதட்டலாக.

“மாமா…” என்று திக்கியவள், அவன் அதட்டலில் பூரணியின் கையை விட்டிருந்தாள்.

பூரணி இப்பொழுதும் மலங்க மலங்க விழிக்க, ‘கிறுக்கச்சி… உனக்கு என்னடி ஆச்சு? இந்த உலகத்துக்கு வாயேன்’ என்று தங்கையை மனதிற்குள் வறுத்தெடுத்தாள் மூத்தவள்.

“என்ன நடந்தது?” நீதிவாசன் அழுத்தமான குரலில் மீண்டுமொருமுறை பூரணியிடம் வினவினான்.

இப்பொழுது தெளிந்து விட்டது போலும். அவன் கோபம், அதட்டல் தெளிய வைத்திருந்தது போலும். இப்பொழுது மேலும் சம்பந்தமே இல்லாமல் வேறொன்று சொன்னாள் கண்ணீர் குரலில்.

“அது… பெரியம்மா சொல்லறாங்க… உங்களுக்கும், அக்காவுக்கும்…”

இப்பொழுது ரஞ்சிதா பாய்ந்து வந்து அவளது வாயை அடைத்து விட்டாள். “மாமா அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. நாம அப்பறம் பேசிக்குவோமே…” என்றாள் நீடிகிவாசனிடம் கெஞ்சலான குரலில்.

கூடவே தங்கையிடம், “நீதி மாமா… அவங்களுக்கு தெரிஞ்சவங்க ஜாதகத்தை எனக்கு பார்க்கலாம்ன்னு கொண்டு வந்திருக்காங்க பூரணி…” என்று அடிக்குரலில் அழுத்தம் திருத்தமாக கூறினாள்.

இப்பொழுது தெளிந்து இருந்ததால் அக்கா சொன்னது புரிந்துவிட்டது. இளையவளின் மனதில் பெரும் சுமையாய் அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலகவும், மனம் லேசாகியது.

நீதிவாசனோ, “ரஞ்சி… நீ முதல்ல அவளை விட்டு நகர்ந்து நில்லு” என்றான் மீண்டும் அதட்டலும், அதிகாரமுமாய்.

கூடவே, “நீ சொல்லு… என்ன சொல்ல வந்த?” என்று பூரணியையும் அதட்ட,

இப்பொழுது நன்றாகவே தெளிந்திருந்தாள். வேகவேகமாக ஒன்றும் இல்லை என்று மறுப்பாகத் தலையசைத்தபடி தலையைக் குனிந்து கொண்டாள்.

“அன்னம்…” என்றவன் பிடிவாதமாக அழைத்த தொனி ரஞ்சிதாவிற்கே சற்று உதறியது. ‘மாமாவோட கோபத்துக்கு முன்ன இவ எப்படித் தாக்குப் பிடிப்பாளோ’ என்று தங்கையின் வருங்காலம் குறித்து அச்சம் வேறு!

பூரணியோ பதில் சொல்லாமல் தலையை மேலும் குனிந்து கொண்டாள். “என்ன சொல்ல வந்தன்னு கேக்கிறேனல்ல”

“அது அக்கா நீங்க வருவீங்கன்னு சொன்னாங்க…”

“அதுக்கு எதுக்கு அழுத…”

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் பாவமாய் விழித்தாள். அவனுக்கும் கொஞ்சம் புரிந்து விட்டது போலும். அதுதான் ஜோதிமணி கூறிவிட்டாரே ரஞ்சிதாவிற்கும், இவனுக்கும் பார்க்கலாம் என்று நினைத்திருந்த அவர்கள் எண்ணத்தை! அது தெரிந்து அதிர்ந்திருப்பாள், கலங்கியிருப்பாள் என்று இவனுக்குப் புரிந்தது.

அதை எப்படி தன்னிடம் அவளால் நேரடியாகச் சொல்ல முடியும் என்று அவளது சங்கடத்தை புரிந்து கொண்டவன் ஒரு பெருமூச்சுடன் அந்த பேச்சை ஒதுக்கி, “கை எப்படி அடி பட்டுச்சு?” என்று விசாரித்தான்.

“ஸ்கூட்டர்….” என்று அவள் தொடங்கும் போதே கையுயர்த்தித் தடுத்தான்.

“உண்மையை மட்டும் சொல்லு…” என்று விழிகளை ஊடுருவி அவன் கேட்ட விதத்தில் அவளுக்குப் பயம் கவ்வியது.

இப்பொழுதும் பதில் சொல்லாமல் மிரண்டு விழிக்க, “நானா தெரிஞ்சுக்கிட்டா விளைவு பயங்கரமா இருக்கும்” என்றான் மிரட்டலாக.

அதற்கு மேல் மறுக்கத் தெரியாமல், மந்திரத்துக்கு கட்டுண்டவள் போல அனைத்தையும் ஒப்பிக்கத் தொடங்கினாள். ரஞ்சிதாவிற்கு கையை பிசைவதைத் தவிர வேறு வழி இல்லாத நிலை!

அன்னபூரணி சொன்னதைக் கேட்ட நீதிவாசனின் முகம் கோபத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்க, அதில் அவள் மிரண்டு தான் போனாள்.

“பிரச்சனை முடிஞ்சிடுச்சு… நீங்க எதுவும்…” என்று சொன்னவளின் குரல் அதற்கு மேல் அவளுள்ளேயே புதைந்து கொண்டது அவன் பார்த்த பார்வையில்!

“என்கிட்ட ஏன் சொல்லலை…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கேட்ட விதத்தில், அவளுக்கு சர்வமும் நடுங்கியது.

“பிளீஸ் எந்த பிரச்சனையும் வேணாம்…” என்றாள் மீண்டும் கெஞ்சுதலாக.

அவளுக்கு பதில் சொல்லாமல், “நான் கிளம்பறேன் ரஞ்சி. அத்தை வந்தா சொல்லிடு” என்று சொல்லி விடைபெறுபவனைத் தடுக்கும் வழி தெரியாமல் கண்ணீர் வடித்தாள்.

ஓய்ந்த பிரச்சனை மீண்டும் எழுவதா? என்று அழுகை வந்தது.

“அக்கா பாருங்கக்கா…” என்று ரஞ்சியின் தோளில் சாய்ந்து அழ,

 

‘நான் பார்த்து மிரண்டு போயி தான இருக்கேன்’ என்று மனதில் புலம்பிக் கொண்டாள் மூத்தவள்.

 

நீதிவாசன் வெளியே சென்ற வேகத்தில் மீண்டும் வீட்டினுள் வந்தான் முத்துச்செல்வத்துடன்.

 

“ரஞ்சி… உள்ள என்ன பண்ணற? நீதி சாப்பிடாம கிளம்பறான் பாரு…” என்றபடி முத்துச்செல்வம் வர, தங்கையை உள்ளேயே விட்டுவிட்டு வெளியே வந்த ரஞ்சிதா திருதிருவென விழித்தாள்.

 

“போ நீதி. உட்காரு. எப்பவாச்சும் வர சாப்பிடாம கிளம்புவியா? உங்க அத்தை அப்பறம் சாமி ஆடிடுவா. இன்னும் கொஞ்ச நேரம் தான் வேலை இருக்கு. கையோட முடிச்சுட்டு வந்துடறேன். இல்லாட்டி உங்க அத்தை வர வரைக்கும் நான் வேணா இருக்கட்டுமா?” என்று மருமகனிடம் கேட்டார்.

 

“பரவாயில்லை மாமா நீங்க முடிச்சிட்டு வாங்க” என்று முயன்றவரைச் சாதாரண குரலில் சொல்லி அனுப்பி வைத்தான்.

 

அப்பா கீழே சென்றதும், ரஞ்சிதா நீதிவாசனின் அருகில் வந்தவள், “ரொம்ப அழறா மாமா” என்றாள் தங்கைக்குப் பரிந்து.

 

அவனுக்கும் அவளது அழுகுரல் செவியில் விழுந்தது. அதனால் தான் முத்துச்செல்வம் அழைக்கவும், அதிகம் மறுக்காமல் மீண்டும் மேலே வந்திருந்தான்.

 

இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அதுக்கு நான் என்ன பண்ணட்டும் ரஞ்சி” என்று எரிச்சலாக மொழிந்தான்.

 

ரஞ்சிதாவோ விசித்திரமாகப் பார்த்தபடி, “என்னோவோ பண்ணுங்க… நான் தோசை ஊத்தறேன்” என்றாள் சமையலறைக்குள் நுழைந்தபடி.

 

“இரு ரஞ்சி இப்ப தான காஃபி தந்த… நான் அப்பறம் சாப்பிட்டுக்கறேன்” என்று அவளை தடுத்தவன், “இப்ப எதுவும் பிரச்சனை இல்லை தானே…” என்று மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டான்.

 

அவளும் நடந்ததை மொத்தமாகத் தெளிவாக விளக்கி, “இப்ப போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கான் மாமா. அவங்க அம்மா, அப்பாவும் ரொம்ப வருத்தப்படறாங்க. இதுக்கு மேல இந்த பிரச்சனையை வளர விட வேணாம். முடிச்சுக்கலாம் அப்டிங்கிறது தான் எல்லாரோட எண்ணமும். அந்த பையனும் பின்விளைவை யோசிக்காம ஆத்திரத்துல செஞ்சிருப்பான் போல… இப்ப படிப்பு போகவும், அம்மா, அப்பா ரொம்பவும் கலங்கி… அடுத்து என்ன செய்யன்னு புரியாம நிக்கவும் தன் தப்பை புரிஞ்சுட்டான்.

 

காலேஜ்லயும் டீ.சி., மட்டும் தான் தந்திருக்காங்க. வேற எங்கேயும் காலேஜ்ல சேர்ந்துக்கட்டுமேன்னு. இப்ப அவன் சூடுபட்ட பூனை மாமா. இனி அவனால கண்டிப்பா பிரச்சனை வராது.

 

‘அப்பறம் ஒரு மனுஷனோட முதல் தப்புக்கே அவன் எதிர்காலம் கேள்விக்குறியாகி… மொத்த வாழ்க்கையும் தலைகீழா மாறிட்டா அவனோட வாழ்க்கையில தொடர்ந்து நிறையத் தப்புகள் வருமாம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தை அமைச்சு கொடுக்கிறது ரொம்ப தப்பாம். அவனுக்குத் திருந்த ஒரு வாய்ப்பை கண்டிப்பா கொடுக்கணுமாம். முதல் தப்போட யாரோட வாழ்க்கையும் வீணா போயிடக் கூடாதாம்… அப்பறம் உலகத்துல தப்புகள் தான் அதிகமாகுமாம். ஆக, முதல் தப்புக்குக் கண்டிப்பா மன்னிப்பும், அவங்க தன்னோட மனசை மாத்திக்க அவகாசமும் தந்தே ஆகணுமாம்’ இந்த மாதிரி அரும்பெரும் தத்துவத்தை எல்லாம் நம்ம வீட்டு சின்னகுட்டி சொல்லி… மூணு பேரோட பெத்தவங்களுக்கும் இருந்த கொஞ்சநஞ்ச கோபத்தையும் போக வெச்சுடுச்சு” என்று ரஞ்சிதா முடித்த விதத்தில் நீதிவாசனுக்கே இறுக்கம் தளர்ந்து புன்னகை வந்து விட்டது.

 

தன்னை கேலி செய்வது பொறுக்காமல், “அக்கா…” என்றாள் பூரணி சிணுங்கலாக.

 

“பூரணி கவனியேன்… நீ சொன்னதைச் சொன்னதும் நீதி மாமாவோட கோபமே போயிடுச்சு புள்ள… மாமா சிரிக்கிறாரு” என்று ரஞ்சிதா ஆர்ப்பரித்தாள்.

 

இம்முறை உரக்கவே சிரித்தவன், “சரி சரி… நான் எந்த பிரச்சனையையும் வளர்க்க போறதில்லை. உங்க வீட்டு தத்துவ மேதையை முகத்தை கழுவிட்டு வர சொல்லு… அழுதழுது பார்க்க சகிக்கலை” என்று பரிகசித்தான்.

“பின்ன தத்துவ மேதை இல்லாம… அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அத்தனை பெருமை. என் புள்ள மாதிரி நல்ல மனசு யாருக்கும் இல்லைன்னு ஒரே அலப்பறை…” என்று ரஞ்சிதா கேலி செய்தாலும், அவள் முகத்திலும் தங்கையின் செயலில், எண்ணங்களின் அழகில் பெருமிதமே நிறைந்து வழிந்தது.

 

நீதிவாசன் பரிகசித்ததில் உதட்டை சுளித்தாலும், அன்னபூரணி சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள். ரஞ்சிதாவிற்கு இவர்கள் இருவருக்கும் பொருந்துமா என்கிற சந்தேகம் போய்… இவர்கள் இருவரைத் தவிர யாருக்கும் பொருந்தாது என்ற ஆழமான எண்ணம் வந்துவிட்டது.

 

கூடவே, ‘ரொம்ப நேரமா கரடி வேலை பார்க்கிறோம் போல!’ என்று எண்ணமும் வர, இஞ்சி தின்ற குரங்கு போல விழித்தாள். அவளுக்கென்ன தெரியப்போகிறது இவள் இங்கு இல்லாவிட்டாலும் இருவரின் நடவடிக்கையில் பெரிதாய் ஒரு முன்னேற்றம் இருக்காது என்று!

 

சற்று நேரத்தில் ஜோதிமணி, முத்துச்செல்வம் இருவரும் தத்தமது வேலையை முடித்துவிட்டு வந்துவிட, நீதிவாசன் உணவுண்ட பிறகே விடை பெற்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 13’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 13’

வேப்பம்பூவின் தேன்துளி – 13   மாலை மூன்று மணிக்கும் மேல் இருக்கும். “பழனியாண்டவர் ஸ்டோர்ஸ்” கடையின் வரவு செலவு கணக்குகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் நீதிவாசன். இது அன்றாட வழமை தான்!   அப்பொழுது அவனது அறையில் இருந்த தொலைப்பேசி சிணுங்கியது.

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 15’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 15’

வேப்பம்பூவின் தேன்துளி – 15 நீதிவாசன் வாயிலில் நின்றபடி கைப்பேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான். இவர்களுக்காகக் காத்திருந்தானா இல்லை பொதுவாக நின்றிருந்தானா தெரியவில்லை… ஆனால், அவனது பார்வை மட்டும் வாயிலில் ஆர்வமாகப் பதிந்து பதிந்து மீண்டு கொண்டிருந்தது. யாரையோ எதிர்பார்ப்பது போல!

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 18’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 18’

வேப்பம்பூவின் தேன்துளி – 18   முகூர்த்த நேரத்திற்கு முகம் கசங்க வந்தமர்ந்த அன்னபூரணியை, நீதிவாசன் சுட்டெரிக்கும் பார்வை பார்த்திருக்க அப்பொழுது அவளது தொண்டைக்குழியில் அமிழ்ந்து போனது தான் அவளது அழுகை. விழிகளும் அதற்கு மேலும் சுரப்பதற்கு மறந்து போனது.   ‘எதற்கிந்த திருமணம்?’