சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 09

வேப்பம்பூவின் தேன்துளி – 9

தீபலட்சுமியின் திருமணம் முடிந்த பிறகு, அவள் தெளிவாக உணர்ந்து கொண்ட விஷயம், அன்பரசுவின் குடும்ப சொத்துக்கள் என்பது சொற்பமே! அவர்கள் கூட்டுக் குடும்பத்தினில் இருக்கிறார்கள் என்பதை முன்னமே தெரிந்து தான் இருந்தாள். ஆனால், சொத்துக்களும் சரிசமம் போல என்றுதான் நினைத்திருந்தாள்.

ஆனால், மனைவி என்ற உரிமையுடன் குடும்பத்தில் நுழைந்து, அங்குப் பொருந்திய பிறகு உணர்ந்த விஷயமே, அன்பரசுவின் பெரியப்பா, அத்தை குடும்பங்கள் தான் மிகவும் வசதியானவர்கள். அவர்களுடைய தம்பி அதாவது அன்பரசனின் அப்பா, மூத்தவர்கள் தயவில் இருக்கிறார் என்பதை!

அதற்காக அன்பரசன் குடும்பத்திற்கு சொத்துபத்து இல்லை என்றில்லை. என்ன இவள் எதிர்பார்த்த அளவு இல்லை. பெரியப்பா வீட்டில் தான் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் தொழிலில் தான் வேலை செய்கிறார்கள். ஆம், வேலையே! பங்கு எல்லாம் இல்லை. இந்த விவரங்கள் எல்லாம் அவளுக்குப் பலத்த ஏமாற்றம்.

முன்பு பரம்பரை சொத்து, குடும்ப தொழில் என்று நினைத்திருந்தாள். ஆக அனைவருக்கும் சரி சமமான பங்கு என்பது அவளது எண்ணம். ஆனால், அப்படியல்ல! அனைத்தும் அவரவர் சுய சம்பாத்தியம் என்று தெரிந்ததும் அவளுக்கு அத்தனை கடுப்பு!

நாம் நினைத்தது என்ன? இங்கு இருப்பது என்ன? என்று அங்கலாய்த்தாள். போதாக்குறைக்குக் கூட்டு குடும்பம் என்பதால் பிரைவசி என்பதே சுத்தமாக இல்லை. எந்நேரமும் ஜே ஜே வென்று… அது போதாதென்று ஏதாவது வேலைகள் வேறு… தனியாக ஹாஸ்டல் வாசஸ்தலம் கொண்டிருந்தவளுக்கு இது ஒத்துப்போகவே இல்லை. அதிலும் வீட்டில் மூத்த தலைமுறைகள் பூஜை, புனஸ்காரம், கோயில், குளம் என்று அவளுக்கு ஒவ்வாத விஷயத்தில் படுத்தி எடுத்தனர்.

‘ஹனி மூன் கூட கூட்டிட்டு போகலை. ஆனா, இப்படி கோயில் குளம்ன்னு கூட்டிட்டு சுத்தறாங்க’ என்று மனதிற்குள் கடுகடுத்தாள். வெளியில் துளி கூட சுணக்கத்தைக் காட்டிட முடியாத நல்லவள் வேஷம் வேறு! முன்பு அவ்வப்பொழுது நடித்து அன்பரசுவின் அபிமானத்தை சம்பாதித்தது இலகுவாக இருந்தது. ஆனால், இப்பொழுது நாள் முழுக்க இந்த முகமூடி அவளுக்கு மூச்சு முட்டியது.

என்னதான் தன் மாமியாரும் குடும்பத்தில் மற்றவர்களுக்கு இணையாக ஆடை அணிந்தாலும், நகை எல்லாம் அவர்களிடம் அத்தனை இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர்கள் ஒவ்வொருவிதமான நகைகள் போட்டுக் கொண்டனர். இவளின் மாமியாரோ போட்டதையே திரும்பத் திரும்ப போட்டார். தீபலட்சுமியின் நிலையும் கிட்டத்தட்ட அதுவே! ஒரு மூன்று செட் வைத்திருக்கிறாள் அவ்வளவே! ஆனால், அவர்களோ வைரம் எல்லாம் சர்வ சாதாரணமாக அணியும்போது என்னவோ மிகவும் தன்னிரக்கமாக உணர்ந்தாள்.

நீதிவாசன் தன் சேமிப்பையெல்லாம் கரைத்து போட்டனுப்பிய எழுபத்தைந்து சவரன் நகைகள் அவளுக்கு போதவில்லை. துளியும் போதவில்லை என்பது தான் வருந்தத்தக்க விஷயம்! உடை ஒரு பொருட்டல்ல, அண்ணனிடம் சென்று பேசும் விதத்தில் பேசி, விலை உயர்ந்த புடவைகளை எடுத்துக் கொண்டு வந்து விடலாம். ஆனால், நகைகள்? பெருமூச்சு எழுந்தது.

அந்த வீட்டின் மூத்த மருமகள்கள் வைர நகைகளை அணிந்து ஜொலித்தபடி ஒரு திருமண விசேஷத்திற்குச் சென்ற தினம் முதல்முறை அன்பரசுவிடம் வேறு முகத்தைக் காட்டினாள்.

“எனக்குப் பிறந்தநாள் வருதே!” என்றாள் கணவனிடம்.

“மறப்பேனா?” என்றான் புதுக்கணவன் ஆசையாக.

“என்ன வேணும்ன்னு நீங்க கேட்கவே இல்லையே!” என்றாள் சிணுங்கலாக.

“பரிசெல்லாம் சர்ப்ரைஸா தந்தா தான டா ஸ்பெஷல்…”

“ம்ப்ச்… அது மத்தவங்களுக்கு. நம்ம தான் கணவன், மனைவி ஆச்சே நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு..” என்றவளை இடை நிறுத்தி, “ஆமாம், ஆமாம் நமக்குள்ள எங்க ஒளிவு மறைவு இருக்கு” என்று விஷமமாகச் சொல்லி, அவளிடம் தன் கரங்களால் அத்துமீறினான்.

“விடுங்க பேசப்பேச…”

“நீ பேசு… உன்னை யாரு பேச வேணாம்ன்னு சொன்னா…” என்றவன் தன் காரியத்தில் கண்ணாய் இருந்தான்.

“அச்சோ விடுங்களேன்…” என்று கணவனின் கையை தட்டி விட்டவளை அன்பரசன் வினோதமாகப் பார்த்தான்.

“இன்னும் நீங்க என்ன வேணும்ன்னு கேட்கலை. அதுக்குள்ள என்னை டைவர்ட் செஞ்சா எப்படி” என்றாள் தலையைச் சாய்த்து கண்ணைச் சிமிட்டியபடி.

ஒரு பெருமூச்சுடன், “எதுவோ வேணும்ன்னு முடிவு எடுத்திட்ட… அதை நேரடியா எங்கிட்ட கேட்க என்ன தயக்கம்? அதுக்கு எதுக்கு இப்படி சுத்தி வளைக்கிற?” என்று சிறு சலிப்புடன் கேட்டான் கணவன்.

சட்டென சுதாரித்தவள், “ம்ப்ச்… அப்படியில்லை… சரி வேணாம் விடுங்க. உங்க விருப்பம் போலவே வாங்கி தாங்க… நான் தான் ஏதோ ஆசையில…” என்று முகத்தைச் சுருக்கி வைத்து அவள் சொன்ன பாவனையில் கணவனின் மனம் இளகியது.

“என்ன வேணும்ன்னு சொல்லு டா…” என்றான் வாஞ்சையான குரலில்.

“கேட்டா கொஞ்சம் அதிகப்படியா தெரியும்” என்று தலையைக் குனிந்து கொண்டாள்.

“கேளு… அப்பறம் அதை டிசைட் பண்ணிக்கலாம்”

“வைரம் போடணும் போல ஆசையா இருக்குங்க. என்கிட்ட வைரத்துல எதுவுமே இல்லை தெரியுமா?” என்று அவள் ஏக்கமான குரலில் கேட்டபோது அவனுக்கு மறுக்க தோன்றவில்லை.

“சரி பார்க்கலாம்” என்று பேச்சை முடித்தான். இப்பொழுது தான் திருமண செலவு முடிந்திருக்கிறது. அதற்குள் அடுத்த செலவா என்றிருந்தது. வைரம் ஒன்றும் அத்தனை சுலபம் இல்லையே! அவன் சம்பளக்காரன். மனைவியின் பிறந்தநாளுக்கு முப்பது, நாப்பதாயிரம் செலவு செய்து வைர மோதிரம் வாங்கும் அளவு அவனுக்குக் கட்டாது. மனைவி கேட்பது லட்சங்களில் இருக்கும் வைர கழுத்தணி என்பது அவனுக்கு இன்னமும் தெரியவில்லை.

அதோடு மனைவிக்கு அத்தனை விலை உயர்வாய் பரிசு வாங்கி தந்தால், அன்னையின் முகம் கடுத்துவிடும். அவனுடைய அன்னை எப்பொழுதுமே அவருக்கு முக்கியத்துவம் நிறைய தர வேண்டும் என்று எண்ணும் ரகம்!

இத்தனை இடையூரோடு அவன் சரி சொன்னதே பெரியது. ஆனால், அவள் முகம் பொலிவிழந்தது. “அச்சோ… சாரி… உங்களுக்கு சிரமம்ன்னா வேணாம்” என்றாள் எழும்பாத குரலில்!

“அதுதான் பார்க்கலாம்ன்னு சொல்லறேனே! விடு… பார்த்துக்கலாம்” என்றான் பொறுமை குறைந்த குரலில்.

சொன்னபடி மனைவியின் பிறந்தநாளன்று வைர மோதிரமும் வாங்கி வந்து பரிசளித்து அவளை மகிழ்விக்க நினைக்க, “என்னங்க இது?” என்று முகம் சுளித்த மனைவியின் முகம் அவனுக்கு ஜென்மத்திற்கும் மறக்காது.

“ஏன் என்னாச்சு? டிசைன் பிடிக்கலையா?”

“அதில்லைங்க… இதுல வைரம் எங்கிருக்கு?”

“ஏன் இதைப் பார்க்க உனக்கு வைரமா தெரியலையா?”

“ஆமாம்… ஆமாம்… வைரம் கண்ணைப் பறிக்குதே!” என்று இகழ்ச்சியாகப் பதில் சொன்ன தீபலட்சுமி அவனுக்கு மிகவும் புதியவள்.

கணவன் பதில் கூறாதிருக்கவும், அவனை நிமிர்ந்து பார்த்தவள், “சரி… கொடுங்க… ரொம்ப தேங்க்ஸ்…” என்றாள். கூடவே, “எனக்கு அமைஞ்சது இவ்வளவு தான்…” என முணுமுணுக்க,

“இப்ப தான் நம்ம கல்யாணத்துக்கு லட்ச கணக்குல செலவு பண்ணி இருக்கேன்” என்றான் எரிச்சலான குரலில்.

“பின்ன கல்யாணத்துத்துக்கு செலவாகாம இருக்குமா?” என்று அதுவொரு விஷயமா என்பது போல பேசிய மனைவியைப் பார்க்க, முதல்முறை அவனுக்கு ஆத்திரம் வந்தது.

எதுவும் பதில் சொல்லாமல் அறையை விட்டு கோபமாக வெளியேறியவனை அவள் பொருட்டாகவே நினைக்கவில்லை. அவளுக்கு அவளுடைய ஏமாற்றம். குட்டி குட்டியாய் ஐந்தாறு வரை கற்கள் பதித்திருந்தால் அது வைர நகையா? என்று மனம் பொறுமியது.

‘இதுவொரு பரிசென்று இதை வாங்கிட்டு வந்துட்டு…’ என்று அலட்சியமாக நினைத்தாள். அதிலும் சென்ற வாரம், இவர்களுடைய சொந்த வீடு என்று கூட்டிச் சென்று காட்டியது வேறு அவளுக்கு அப்படியான எரிச்சல்! இவர்கள் பிறந்த வீட்டை விடவும் சிறிய வீடு! அது சொந்த சம்பாத்தியம் என்று மாமனாருக்குப் பெருமை வேறு! அண்ணன் ஒன்றாக இருப்பதையே விரும்புவதால் அண்ணனோடு இருக்கிறோம். இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறோம் என்று பெருமையாகப் பறைசாற்ற, ‘எதற்கெல்லாம் பெருமை பேசுவது என்றில்லையா? இதெல்லாம் ஒரு வீடா?’ என்பது தான் அவளது எண்ணம்.

தீபலட்சுமியின் மனம் போல அவளுக்கு எதிலும் திருப்தி ஏற்படாதவாறு ஒரு வாழ்க்கை! அவளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட இந்த வாழ்க்கையிலும் அவள் குணத்தால் எதையும் இழுத்துக் கொள்ளாமல் இருந்தால் சரி! ஆனால், அந்த சூட்சமத்தை அவள் அறிவாளா?

 

*** சுயநினைவை முழுவதும் இழந்திருந்த சரண்யாவை ஒரு தோழியோடு வேறொரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டு, கையில் வழியும் குருதியின் பயனாக அரை மயக்க நிலையில் இருந்த பூரணியை ஏற்றிக்கொண்டு மற்றொரு ஆட்டோவில் அஞ்சலி மருத்துவமனையை நோக்கிப் பயணித்தாள்.

 

பூரணியின் கையில் ஒரு இடத்தில் கைக்குட்டையால் கட்ட முடிந்திருந்தது. இன்னொரு இடத்தில் காயம் பெரிது என்பதால் துப்பட்டாவால் அஞ்சலி கட்டுப் போட்டிருக்க, அவ்விடத்தில் துப்பட்டாவையும் மீறிய ரத்தத்துளிகள். அஞ்சலி வெகுவாக பயந்து போனாள். அவளுக்குப் பதற்றத்தில் என்ன செய்வதென்று கூட தெரியவில்லை.

 

‘கடவுளே! எனக்காக உதவிக்கு வந்து இவங்க ரெண்டு பேரும் சிரமப்படறாங்களே… இவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது’ என்று மனதிற்குள் அரற்றியபடியே பயணித்தவள், சுயமாக எதையும் சிந்திக்கும் நிலையில் இல்லை. நல்லவேளையாக இவர்கள் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் உதவிக்கு வந்திருந்தபடியால்… மருத்துவமனையில் சேர்ப்பது, கல்லூரிக்குத் தகவல் தெரிவிப்பது, வீட்டிற்குத் தகவல் தருவது போன்றவற்றை அவர்கள் கவனித்துக் கொண்டனர்.

கல்லூரிக்கு தகவல் சென்றதும், கல்லூரி சார்பாக உதவிக்கு ஆட்கள் வந்துவிட்டார்கள். இவர்கள் படிக்கும் டிப்பார்ட்மெண்ட் தலைவரும், ஒரு பேராசிரியரும் விஷயம் தெரிந்தவுடனேயே மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.

 

அடுத்த சில மணி நேரங்களில் மூவரின் வீட்டிலிருந்தும் ஆட்கள் வந்துவிட்டனர். கவலையும், தவிப்புமான பெற்றவர்கள் முகத்தைப் பார்க்கையில் யாருக்குமே உருகிப் போகும். பெண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டு அவர்கள் படும் பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.

 

“அய்யோ என்ன இத்தனை ரத்தம்! பூரணிம்மா என்ன ஆச்சுடா” என்று கதறும் ஜோதிமணியைத் தேற்றக் கூட முடியாமல், முத்துச்செல்வமும் வெகுவாக உடைந்து போயிருந்தார். மகளின் வாடிய சோர்ந்த தோற்றத்தில் இருவருமே உடைந்து போயிருந்தனர்.

 

சரண்யாவும், பூரணியும் மயக்கத்தில் இருக்க அஞ்சலி யார் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் அழுது கொண்டிருந்தாள். ‘என்னால் தான் இவர்களுக்கு இப்படி ஆனது’ என்று எப்படி அவளால் சொல்ல முடியும்? குற்றவுணர்வும், வேதனையும், எதிர்காலம் குறித்த அச்சமும் அவளை வெகுவாக நிலைகுலையச் செய்து விட்டது.

உடன் வந்திருந்த மாணவர்கள் சிலர் நடந்ததை விளக்க, “ஏன்பா எத்தனை பேரு இருந்திருப்பீங்க? யாராலையும் தடுக்க முடியலையா?” என்று சரண்யாவின் அம்மா விம்மினார்.

“எங்ககிட்ட இதைப்பத்தி ஏன் நீ சொன்னதில்லை” என்று அழும் அஞ்சலியை அவளின் தந்தை அதட்டினார்.

 

மிகவும் கனமான சூழல்! எப்படிக் கடந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. மருத்துவமனை செலவுகளைக் கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள, சம்பத்தைக் கல்லூரியிலிருந்து நீக்குவதாகவும் நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

 

சம்பத்துடைய பெற்றோர்கள் வந்து பெண்கள் இருவரையும் பார்த்துவிட்டு மிகவும் வருத்தம் தெரிவித்து விட்டுப் போனார்கள். அவர்களும் உடைந்து போய் பரிதாபகரமான தோற்றத்தோடு வந்திருக்க, அவர்களையும் யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை.

“நாங்களே ஹாஸ்ப்பிட்டல் செலவு ஏத்துக்கறோம்” என்றபடி சம்பத்தின் அப்பா பணத்தைத் தர, அவர்கள் வசதியானவர்கள் போலத் தெரியவில்லை. நடுத்தர வர்க்கத்தினர். நிச்சயம் அரும்பாடுபட்டே இந்த பணத்தைப் புரட்டி இருப்பார்கள் என்று பார்த்த அனைவருக்கும் புரிந்தது.

“இல்லைங்க காலேஜ் சார்பாவே பணத்தை கட்டிட்டாங்க. மறுபடியும் உங்க மகன் வஞ்சம் வெச்சு, எங்க புள்ளைங்களை எதுவும் செய்யாம இருந்தாலே போதும்” என்றார் சரண்யாவின் அப்பா.

“இல்லைங்க… அப்படி எதுவும் நடக்காது. போலீஸ் ஸ்டேஷன்ல தான் வெச்சிருக்காங்க. அங்கேயே புத்தி வந்தா சரி. இல்லை சீரழியணும்ன்னு தலையெழுத்து இருந்தா… என்ன பண்ண முடியும்? ஒரே ஒரு நாள் குடியும், வஞ்சமுமே அவன் படிப்பை, எதிர்காலத்தை கெடுத்துடுச்சு. இனியும் அதை தொடராம இருக்க கடவுள் புத்தி தரட்டும். அவன் வெளிய வந்ததும், வேற ஊருக்கு கூட்டிட்டு போலாம்ன்னு இருக்கோம். இனி அவனால எந்த பிரச்சனையும் வராது” என்று சம்பத்தின் அப்பா மன வருத்தத்துடன் சொன்னார்.

“இவனாவது படிச்சு நல்லா இருக்கணும்ன்னு நினைச்சோம். படிக்க வழியில்லாம எத்தனையோ பேரு இருக்க, படிப்பை தொலைச்சுட்டு இவன் இருக்கானே….” என்று சம்பத்தின் அம்மா அழுகையோடு சொன்னார்.

இவர்களும் பாவம் என்ன செய்வார்கள்? மகனின் செயலை கேள்விப்பட்டுப் பலத்த அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் இருந்திருக்கும். இவர்களிடம் தங்கள் ஆதங்கத்தைக் காட்டுவது செத்த பாம்பை அடிப்பது போல என்று நினைத்துத் தானோ என்னவோ யாரும் அவர்களை எடுத்தெறிந்து பேசவில்லை.

கல்லூரி சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், பத்திரிக்கையில் வராமல் கல்லூரி நிர்வாகம் பார்த்துக் கொண்டது. அது அவர்களின் கல்லூரி பெயருக்கு தானே களங்கம்.

 

ஒருவழியாக, மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தாள் பூரணி. கையில் ஒரு இடத்தில் வெகு ஆழமாக கிழித்திருந்ததால் அவளுக்கு இன்னும் கை முழுமையாகக் குணமாகவில்லை. சரண்யாவிற்கு லேசான அடி என்பதால் அவள் விரைவிலேயே குணமாகி கல்லூரி செல்ல தொடங்கியிருந்தாள்.

 

சரண்யா ஒரு வார இடைவெளியின் பிறகு முதல் நாள் கல்லூரிக்குச் சென்று வந்ததும், “அஞ்சலி இன்னும் காலேஜுக்கு வரலையாம்” என்ற பதற்றமான செய்தியோடு பூரணியை அழைத்தாள்.

 

“என்னடி சொல்லற? அவளுக்கு கூப்பிட்டியா?”

 

“இல்லை. இன்னும் பேசலை”

 

“சரி கான்பிரன்ஸ் போடு”

 

அஞ்சலி அழைப்பை ஏற்றதும் ஒரே அழுகைதான். “என்னால தான் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு…” என்று சொல்லிச் சொல்லி கதறினாள்.

 

“அச்சோ அது ஏதோ போதாத காலம்… ஒரு விபத்து… அதுக்கு நீ என்ன செய்வ? முதல்ல அழறதை நிறுத்து” என்றாள் சரண்யா கடித்தபடி.

 

“எனக்கு மனசே கேக்கலைடி”

 

“விடு அஞ்சு… நீ என்ன பண்ணுவ? சரி காலேஜுக்கு ஏன் வரலை” என்று பூரணி விசாரித்தாள்.

 

“இல்லை வீட்டுல வேணாம் சொல்லிட்டாங்க. கரஸ்’ல கோர்ஸ் முடிச்சுக்க சொல்லறாங்க” என்றாள் தேம்பியபடி.

 

“நீ பேசு அஞ்சலி. கன்வீன்ஸ் பண்ணு”

 

“இல்லை சரண் எனக்குப் பயமா இருக்கு”

 

“உன் தப்பு இதுல எதுவும் இல்லை அஞ்சலி. இந்த மாதிரி நாம ஒவ்வொருத்தரும் ஒடுங்க ஆரம்பிச்சா… பழைய காலம் மாதிரி பொண்ணுங்களை வீட்டுக்குள்ள தான் பூட்டி வைக்கணும்”

 

“பிளீஸ் பூரணி. இதைப்பத்தி இனி பேச வேண்டாம்” என்றவளிடம் பேசி கரைத்து, தங்கள் பெற்றோர்கள் மூலம் அவர்கள் பெற்றோர்களிடம் சமாதானம் பேச வைத்து… என்று இரண்டு மூன்று நாட்கள் போராடி அஞ்சலியை மீண்டும் கல்லூரிக்கு வரவைத்தனர் தோழியர்கள்.

 

பூரணிக்கு குணமாகிக் கொண்டு வந்தது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ஓரளவு தேறிவிடுவாள் என்பதால் வரும் வாரத்திலிருந்து கல்லூரி செல்லலாம் என்றிருந்தாள்.

 

ஒரு நாள் மாலையில் முத்துச்செல்வம், “நீதி ஏதோ வீட்டுக்கு வரேன்னு போன் பண்ணியிருந்தான்” என்றபடி கீழிருந்து மேலே வந்து தகவல் சொன்னார். பூரணியின் காயம் பற்றி அக்கம் பக்கம், உறவினர்கள் யாருக்கும் எதுவும் சொல்லவில்லை. கையில் கட்டை கவனித்து என்ன, ஏதென்று விசாரித்தவர்களிடமும் “டூ-வீலர் காரன் இடிச்சுட்டான்” என்பதுபோல சொல்லி வைத்திருக்கிறார்கள்.

 

இப்பொழுது நீதி வந்து கவனித்து விட்டுக் கேட்டாலும் அதையே சொல்லும்படி அனைவரிடமும் ஜோதிமணி கூறி வைத்தார்.

 

“சரி அவன்தான் வரானே ஜாதகம் பார்க்கலாமான்னு கேக்கலாமா? தீபாக்கு தான் முடிஞ்சதே. நம்ம ரஞ்சிக்கும் அவனுக்கும் பார்க்கலாமான்னு சொல்லிட்டு இருந்த…” என்று முத்துச்செல்வம் அலுங்காமல் குண்டை தூக்கிப் போட,

 

“என்ன நீதி மாமா கூடவா… அச்சோ…” என்று ஒருவித அச்சத்தோடு முகத்தைத் திரும்பிய ரஞ்சிதாவின் பார்வையில் அதிர்ந்து விழி விரித்து அமர்ந்திருந்த பூரணி விழவும், அவளது பாவனையில் இவள் திகைத்துப் போனாள்.

 

பூரணியின் விழிகள் தன்னை மீறிக் கசியத் தொடங்கியதை அதிர்ச்சியாக உள்வாங்கினாள் தமக்கை. அவளால் தான் யூகித்ததை நம்பவே முடியவில்லை. ‘இது எப்படி சாத்தியம்?’ என்று குழம்பிப் போனாள்.

 

இளையவளின் நிலையோ மிகவும் மோசம். இடி விழுந்தது என்பார்களே அதுபோன்றதொரு நிலை! நீதிவாசனை மறக்கவே முடியாது என்னும் போராட்டம் ஒருபுறம் என்றால், அவனை அக்கா கணவனாகப் பார்க்க முடியுமா என்ற எண்ணமே அவளைத் திணறடித்தது. ஓ வென்று கத்தி அழ வேண்டும் போல எண்ணத்தை அடக்கும் வழி தெரியாமல், கண்ணில் நீர் வழிவதைக் கூட உணராமல் திகைத்த தோற்றத்துடன் அமர்ந்திருந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 06சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 06

வேப்பம்பூவின் தேன்துளி – 6   தீபலட்சுமி ஒரு தனிப்பிறவி! பணத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பாள். யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணும் நீதிவாசனின் நேரெதிர் துருவம் அவனது தங்கை!   எவரிடம் பணம் இருக்கிறதோ அவர்களிடம் மட்டும் இழைவாள்!

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 14’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 14’

வேப்பம்பூவின் தேன்துளி – 14   ரஞ்சிதா தன் புகுந்த வீட்டில் இயல்பாகப் பொருந்திப் போனாள். மாமனார், மாமியார், கணவன் என்ற அளவான குடும்பம் தானே! இவளும் வெகு சீக்கிரமே ஐக்கியமாகிப் போனாள்.   “ஏன்மா நீ அவன்கிட்ட சொல்லக் கூடாதா?”

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’

வேப்பம்பூவின் தேன்துளி – 11 நீதிவாசன் வந்துவிட்டு சென்றபிறகு, அன்னபூரணியிடம் நிறைய மாறுதல்கள்! இன்னதென்று வரையறுக்க முடியாத வகையில் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே சென்றது! இலகுத்தன்மை அவளிடம் நிரந்தர வாசஸ்தலம் கொண்டுவிட, பூரிப்பு அவளது முகத்தை பலமடங்கு பொலிவாக்கியது.