சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 08

வேப்பம்பூவின் தேன்துளி – 8

அன்னபூரணி கல்லூரிக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். இது அவளுக்கு இரண்டாம் வருடம். சலனம் கொண்ட மனது மேலும் சலனம் கொண்டிருந்தது, நீதிவாசனின் பார்வை வித்தியாசத்தை மெலிதாக இனம் கண்டு கொண்டதால்!

 

தீபலட்சுமியின் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. திருமணத்தில் வெகுவாக சிரமப்பட்ட போதும் அன்னபூரணி புடவையில் தான் வலம் வந்தாள். அசைய மறுத்து நின்றதும், தத்தி தத்தி நடை பழகியதும் கிளைக்கதை.

 

அவளையே அனைவரும் குறுகுறுவென பார்ப்பது போல பிரமை வேறு! முதல்முறை விசேஷத்திற்கு புடவையில் நின்றதால், ‘வளர்ந்துட்டா போல!’, ‘புடவை கட்டற அளவு பெரிய பொண்ணா?’, ‘காலேஜும் சேர்த்து விட்டுட்டீங்களா?’, ‘அவங்க அம்மா பக்க சொந்தம் யாரும் வந்து போயிட்டு இருக்காங்களா?’ என்றெல்லாம் ஜோதிமணியிடம் இவள் காது படவே விசாரித்தார்கள்.

 

அவர்கள் கேட்டதற்கான உள்ளர்த்தம் என்னவென்று சத்தியமாக அவளுக்குப் புரியவில்லை. பொதுவாகவே ஜோதிமணியின் பக்க உறவுகள் இவள் விஷயத்தில் பொடி வைத்துத் தான் பேசுவார்கள். அது பழக்கம் தான் என்பதால், இவள் அதிகம் ஆராயவில்லை. ஆராய்ந்து தெரிந்து கொள்வது நிச்சயம் உவப்பாக இருக்காது என்பதால் ஒதுக்கி வைத்து விடுவாள்.

 

உறவினர்களின் ஆராய்ச்சி பார்வையைத் தவிர, திருமணத்தில் எல்லாம் இயல்பாக இருப்பது போல் தான் இருந்தது. அவர்களுடைய ‘கப்பிள் சாங்’ அவளது செவியில் விழும் வரை!

முகூர்த்தத்திற்கு முந்தைய நாள் இரவில், ரிஷப்ஷன், நிச்சயம் அனைத்தும் முடிந்ததும், மண்டபத்திற்கு வெளியே காற்றாட… அவள் வயதை ஒத்த குழுவினரோடு ஓய்ந்து அமர்ந்திருந்த போது ஒலித்தது,

 

“சர்க்கரை இனிக்கிற சர்க்கரை

அதில் எறும்புக்கு என்ன அக்கறை!”

 

என்ற பாடல்! அது என்னவோ பாடல்களோடு பாடல்களாகத் தான் வந்தது! ஆனாலும் அவளுக்கு மிகவும் உறுத்தியது. அத்தனை நேரமும் புதுப் படப் பாடல்கள் ஓடிக் கொண்டிருக்க, சம்பந்தமே இல்லாமல் இந்த பாடல் வந்து அவளை நெளிய வைத்தது.

 

வெகு சிரமத்திற்கிடையில், இயல்பாக இருப்பது போலக் காட்டிக் கொண்டவள், அடுத்த சில பாடல்களின் பின்னே மீண்டும் அதே பாடல் ஒலிக்கப் படபடத்துப் போனாள். சுழல முயன்ற விழிகளை அடக்கியவாறு பெரியம்மா சொன்ன இடத்தில் உறங்கச் செல்வதற்காக அக்காவை நச்சரிக்கத் தொடங்கினாள்.

 

“என்ன பூரணி? எல்லாரும் பேசிட்டு இருக்காங்க தானே?” என்று ரஞ்சிதா கடிந்து கொள்ள,

 

“நான் தூங்கினதும் வந்து பேசிக்கங்களேன். யாரு வேண்டான்னா. புது இடம். தனியா தூங்க மாட்டேன். நீ வா ரஞ்சிக்கா” என்று படுத்தினாள்.

 

“அட்டகாசம் செய்யாத பூரணி. எல்லாரும் உன்னைக் கிண்டல் செய்வாங்க” என்று மூத்தவள் கடியவும் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

 

சுழன்றே ஆக வேண்டும் என்று அடம்பிடித்த விழிகளைத் தடுக்கும் வழி தெரியாமல் சுழல விட்டாள். ஆனால், சுழன்று வந்த பகுதியில் பார்வை வட்டத்திற்குள் அவன் பிம்பம் தெரியவில்லை.

 

ஆசுவாசமாக எண்ண முடியாமல் அவனுக்காக மனம் பரிதாபம் கொண்டது. அவனுடைய அம்மா இப்பொழுது இல்லை. அப்பா விபத்தில் உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். ஆக எல்லா திருமண வேலைகளையும் அவன் தான் பார்த்தாக வேண்டும்! ஒற்றை ஆளாய் அப்படி அலைகிறான். அவள் வந்ததிலிருந்து அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு வேலை தான்! ஓய்வென்பதே இல்லாதது போன்றதொரு தோற்றம்!

 

‘இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறானோ? பாவம்!’ என்று மனம் இரக்கம் கொண்டது.

 

இங்கு கூடியிருந்தவர்கள் பேசும் பேச்சில் மனம் லயிக்க முடியாமல் மண்டபத்தினுள்ளே பார்வையைப் பதித்தாள். தூரத்தில் தெரியும் ஏதோ ஒரு புள்ளியை வெறித்துப் பார்த்தபடி, மனம் தன் சிந்தனையில் உழலுமே… அது போன்றதொரு தோற்றம்!

மண்டபத்தினுள்ளே சில விளக்குகள் அணைக்கப்பட்டு, எங்கெல்லாம் ஆட்கள் இருக்கின்றனரோ அங்கு மட்டும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது.

 

தன்னைச் சுற்றியிருந்தவர்களது பேச்சைக் காதில் வாங்கினாலும் அது மனதில் துளிகூட பதியாமல் பார்வை மட்டும் மண்டபத்தினுள்ளேயே! பூரணி பார்த்துக் கொண்டிருக்கும் போதே இருளாக இருந்த ஓரிடத்தில் வெளிச்சம் படர, இவளின் விழிகள் இரண்டும் ஆச்சரியத்தில் பெரிதாக விரிந்தது. மீன்குஞ்சு போல வாயையும் மெலிதாக பிளக்க… வெளிச்சம் படர்ந்த இடத்திலோ இவளையே பார்த்துக்கொண்டு நீதிவாசன் நின்றிருந்தான். யாருடனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பான் போலும்!

 

தான் இருந்த இடத்தில் யாரோ விளக்கை போட்டது கூட அவனுக்குத் தெரியவில்லை. சுவாரஸ்யமான பேச்சா? அல்லது சுவாரஸ்யமான காட்சியா? என்பதை அவன் மனம் மட்டுமே அறியும்!

அன்னபூரணியின் முக மாறுதல்கள் புரியுமளவு தூரம் என்பதால், அவளது மீன்குஞ்சு வாயினை பார்த்த பிறகே தன்னை சுற்றி பார்வையை ஓட்டினான்.

 

வெளிச்சம் இருப்பதை ஒரு புன்னகையோடு கவனித்துக்கொண்டு மீண்டும் அவளைக் காண, கூட்டத்தினுள் அவன் பார்வையில் விழாத வண்ணம் மறைந்து அமர்ந்து கொண்டாள்.

 

அவள் சங்கடமும், அதன் விளைவாய் மேற்கொள்ளும் கண்ணாமூச்சி ஆட்டமும் நீதிவானுக்குச் சுவாரஸ்யமாக இருந்தது. அவளது பதற்றத்திற்கு மதிப்பு தந்து கைப்பேசி அழைப்பினை பேசி முடித்ததும், அவளை மேலும் சங்கடப்படுத்தாமல் உள்ளே நகர்ந்திருந்தான். அவனுக்கான வேலைகளும் அணிவகுத்து நிற்கிறதே!

 

பூரணிக்கு அதற்கு மேலும் அங்கே நிலைகொள்ளவில்லை. அவன் பார்வை, முகத்தில் இருந்த ரசனை பாவனை, மெல்லிய முறுவல் பூத்த உதடுகள்… அவளை மெலிதாக நடுங்க வைத்தது.

 

அவளே அனுதினமும் அவன் நினைவுகளோடு போராடி சிரமப்பட்டு அதிலிருந்து மீள முயன்று கொண்டிருக்க, இன்றைய நிகழ்வு இனி வரும் காலங்களில், அவன் நினைவுகளிலிருந்து தப்பும் போராட்டத்திற்கு, அவளுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்ற கவலையைத் தந்தது.

 

அதற்கு மேலும் அங்கு அமர்ந்திருக்க முடியாதென்று தோன்றவே, ரஞ்சிதாவிடம் சொல்லிவிட்டு அவள் மறுக்க மறுக்கக் கேட்காமல் வம்படியாக உள்ளே வந்தவளுக்கு அடுத்தகட்ட சோதனை தயாராகக் காத்திருந்தது.

 

அவள் உள்ளே வருவதை கவனித்த ஜோதிமணி, “பூரணி இங்க வா…” என்று சத்தமிட்டார். அங்கே பெண்களோடு அமர்ந்து பூ கட்டிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்.

 

அவரிடம் சென்றவளிடம், “பாரு நீதி ரொம்ப நேரமா வேலை செஞ்சுட்டே இருக்கான். சமையல் செய்யிற இடத்துல காஃபி வாங்கிட்டு போயி அவனுக்கு ஒன்னு கொடு. அப்பறம், வேலையை யாரு பொறுப்புலேயும் விட்டுட்டு, போயி கொஞ்ச நேரம் தூங்க சொல்லு. ரொம்பவும் சோர்ந்து தெரியறான். காலையிலேயும் நேரமே எழணும்… பாவம்” என்றார் அண்ணன் மகனின் ஓயாத ஓட்டத்தில் கரிசனம் எழுந்தவராய்.

 

அவர் என்னவோ இலகுவாகச் சொல்லி விட்டார். கேட்டவளுக்குத் தான், தொண்டைக்குழியில் எதுவோ சிக்கிக் கொண்டது. “பெரியம்மா நானா?” என்று மெலிதாக அதிர்ந்தவள், விருப்பமில்லை என்பதைச் சங்கடமான முகபாவத்தில் வெளிப்படுத்தினாள்.

 

“ஒருவாய் காஃபி தண்ணி கொடுக்க என்ன புள்ளை உனக்கு?” என்று அவளை வினோதமாக ஜோதிமணி பார்க்க,

 

மறுத்தால் அது சிறுபிள்ளைத்தனமாக இருக்கும் என்பதால் சுணக்கத்தோடே சமையல் செய்யும் இடத்திற்குச் சென்றாள். அங்கு ஏற்கனவே காஃபியை தயாராகத் தான் வைத்திருந்தார்கள். வேண்டுபவர்கள் எடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஒரு கேனில்.

 

யாரிடமாவது காஃபியை கொடுத்து விடலாம் என்பதற்கு வழியில்லாமல், பெரியம்மா சொன்னதையும் சொல்லியாக வேண்டுமே!

 

ட்ரேயில் காஃபியை வைத்து எடுத்துக்கொண்டு அவனைத் தேடிச் சென்றாள். மணமேடை அலங்காரங்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான். இவள் சென்றதைக் கவனிக்கவில்லை. இவள் புறம் திரும்பவும் காணோம்!

 

என்ன சொல்லி அழைக்க என்று தெரியாததால், “கா… கா… காஃபி…” என்றாள் திணறலாக!

 

அவள் குரலில் புருவம் உயர்த்தியபடி திரும்பியவன், ஆச்சரியத்தை முகத்தில் காட்டி, “என்ன?” என்றான் மீண்டும்.

 

“அது… காஃபி… பெரியம்மா த…தர… சொன்னாங்க” என்று மீண்டும் தந்தியடித்தாள்.

 

“ஒரு டம்ளர் காஃபிக்கு இவ்வளவு பெரிய ட்ரே’யா?” என்று கேட்டு மேலும் அவன் புருவம் உயர்த்த, இதற்கென்ன சொல்வது என்று தெரியாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.

 

அவன் ‘காஃபி’ என்ற சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தபோது தான், மின்னல் வெட்டாய் நினைவு வந்தது இது ‘கப்பிள் ட்ரிங்க்’ என்று! ‘அச்சோ!’ என்றானது அவளுக்கு! அவளும் பாவம், எத்தனை சோதனைகளைத் தான் கடப்பது!

 

அவஸ்தையுடன் அவள் நின்று கொண்டிருக்க, “நிச்சயமா நீ போட்டதில்லைங்கிறதால எடுத்துக்கிறேன்” என்று கேலியுடன் எடுத்துக் கொண்டான்.

 

அவன் கேலி புரிய, “அது சும்மா அன்னைக்கு ஒரு புளோ’ல பாடினது. எனக்கு காஃபி எல்லாம் போடத் தெரியும்” என்றாள் ரோசமாக, அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்து.

 

“காஃபி போட்டு கொடுத்தா தானே ஒத்துக்க முடியும்” என்று மீண்டும் அவன் புருவம் உயர்த்த, அவனது இலகுவான நேரடி கேலிப் பேச்சில் விழி விரித்து பதில் சொல்லும் திராணியற்று நின்றிருந்தாள்.

 

“காஃபி கூட தர மாட்டியா என்ன?” என்று அவளது அமைதியை அவன் சீண்ட,

 

‘அதென்ன ‘கூட’? வேறென்ன தர மாட்டேன்னு சொல்லிட்டனாம்? இவரு ஏன் இப்படி குழப்புற மாதிரி எல்லாம் பேசறாரு?’ என்று உள்ளுக்குள் கரித்துக் கொட்டினாள். அவள் முகமும் சுணக்கத்தைப் பிரதிபலித்தது.

அதைத் தெளிவாக உணர்ந்தபோதும், துளியும் கண்டுகொள்ளாமல், “என்ன ரியாக்ஷன் இது…” என்றான் மெலிதாக பூத்த முறுவலுடன்.

சோர்வை மீறிய ஒரு புன்னகை. கொஞ்சம் சோபையாக இருந்தாலும் அவளை வெகுவாக வசீகரித்தது. இமை கொட்ட மறந்து அவனையே பார்க்க, “எனக்கு மட்டும் காஃபி தந்தா… இங்க இவங்க எல்லாம் இருக்காங்களே” என்று வேலை செய்பவர்களை சுட்டிக் காட்டி கேட்டான்.

என்ன சொல்வதென்று தெரியாமல், மலங்க மலங்க அவள் விழிக்க, “கேள்வி கேட்டா, பதில் சொல்லற பழக்கம் மட்டும் இல்லை போல” என்றான் மீண்டும் சிரிப்புடன்.

“அது பெரியம்மா உங்களுக்குத் தர சொன்னாங்களா… அதான்… நான் போய் இவங்களுக்கும் கொண்டு வந்துடறேன்” என்று சங்கடத்துடன் கூறி நகர எத்தனித்தவளை,

“இல்லை… இல்லை… வேணாம். வேற யாரையும் கொண்டு வர சொல்லிக்கிறேன். நீ போ…” என்று சொல்லித் தடுத்தான்.

ம்ம் எனத் தலையசைத்தவள், போகாமல் தேங்கி நின்றாள். எதுவோ சொல்ல நிற்கிறாள் என்று புரிய, “என்ன? சொல்லு…” என்று அவளைச் சுவாரஸ்யமாகப் பார்த்தான் என்ன சொல்லவருகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள!

 

அன்னபூரணியோ வெகுவாக தயங்கித் தயங்கி, “நீங்க ரொம்ப சோர்ந்து இருக்கீங்களாம். வேலையை வேற யாரையும் பார்க்க சொல்லிட்டு போயி ஓய்வெடுப்பீங்களாம். காலையிலேயும் நேரமா எழணும்ன்னு பெரியம்மா சொல்லி விட்டாங்க” என்றாள்.

இதழ்கள் மலர, “ஓ, சரி நான் பார்த்துக்கிறேன்” என்று சிரித்த முகமாகவே பதில் சொன்னான்.

மலர்ந்து சிரிக்கும் போது அவனது வசீகரம் அதிகரிப்பதை உணர்ந்தவள், அதே ரசனையான மனநிலையில், சட்டென்று எதையும் யோசிக்காமல், “மறக்காம போயி படுத்துக்கங்க. கண்ணெல்லாம் சிவந்து, முகமெல்லாம் ரொம்ப சோர்ந்து தெரியுது…” என்றாள் அக்கறையாக. சொல்லி முடித்ததும் அவன் பதிலுக்காகக் காத்திருக்காமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்திருந்தாள்.

செல்லும் அவளையே இமை சிமிட்டாமல் பார்த்திருந்தவனுக்கு மனதினோரம் இதம் பரவியது. புன்னகை அகல விரிய, உதவியாளை அழைத்து என்ன கவனிக்க வேண்டும் என்பதை விளக்கி விட்டு, உடனேயே ஓய்வெடுக்கச் சென்றான்.

‘தூங்குன்னு சொல்லறதுக்கு காஃபி எதுக்குன்னு தெரியலையே! காஃபி குடிச்சுட்டு யாராவது தூங்குவங்களா என்ன?’ என மனதிற்குள் முணுமுணுத்தபடி படுத்துக் கொண்டவனுக்கு இருந்த சோர்வில் உறக்கம் எளிதாகத் தழுவியது.

மறுநாள் முழுவதும் அன்னபூரணி நீதிவாசனிடம் வழக்கம்போல கண்ணாமூச்சி ஆட்டம் தான். அவள் அவன் பார்வையில் விழவே இல்லை! தேடிப்பார்க்கவும் அவனுக்கு நேரம் இருக்கவில்லை!

இவ்வாறாகக் கோலாகல திருமணத்தினூடே நீதிவாசனின் பார்வை மற்றும் பேச்சின் வித்தியாசத்தையும் இனம் கண்டுகொண்டு வந்திருந்தபடியால், பூரணிக்கு மீண்டும் ஒரு சோதனை காலம்!

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலானது இந்தமுறை அவளுக்குள்ளேயே ஒரு தீர்மானம் எடுத்துச் செயல்படுத்துவதற்குள்!

பெரிதாக என்ன தீர்மானத்தை அவளால் எடுத்துவிட முடியும்? பிடித்திருக்கிறதோ, பிடிக்கவில்லையோ இனி இந்த ஆராய்ச்சி, குழப்பம் எதுவும் வேண்டாம். எதைப்பற்றியும் நினைக்காமலேயே இருந்து கொள்வோம் என்பது தான் அவளது தீர்மானம்.

இந்த சூழலில் அஞ்சலியை ஒருதலையாக நேசிக்கும் சம்பத் அடுத்த கட்ட வேளைகளில் இறங்கி தோழிகளுக்குக் கலக்கத்தைத் தந்தான். ஆரம்பத்தில் அஞ்சலிக்கு ஏதாவது குறுஞ்செய்தி அனுப்பி வைத்துக் கொண்டிருந்தவனின் கைப்பேசி எண்ணை அவள் பிளாக் செய்ததும்… அதற்கு எந்தவித எதிர்வினையும் காட்டாமல் இருந்தவன், போகப்போக அவனது பார்வையின் தீவிரத்தை அதிகப்படுத்தினான்.

அஞ்சலி கண்டு கொள்ளாமல் புறக்கணித்து வந்தாள். நாளாக நாளாக வகுப்பறையில் அனைவருக்கும் விஷயம் பரவ தொடங்கியது. தோழிகள் எல்லாரும் கேலி பேச அஞ்சலி முகத்தை கடுகடுவென்று வைக்கத் தொடங்கினாள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் தான் பேச்சு அடங்கியது.

இப்பொழுதோ, சம்பத் அவளது வீட்டைக் கண்டுபிடித்து அந்த ஏரியாவில் சுற்றித் திரிகிறான். இதனால் அஞ்சலி வெகுவாக பயந்து, தோழிகளிடம் புலம்பித் தள்ளினாள்.

“விடுடி பார்த்துப்போம். என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கலாம்” என்று சரண்யா தேற்ற, பூரணியும், “கவலைப் படாத அவன்கிட்ட வேணும்ன்னா பேசிப் பார்க்கலாம்” என்று சொன்னாள்.

“அவன்கிட்ட பேசணும்ன்னு என்னடி? இவ்வளவு தூரம் ஒதுங்கி போறாளேன்னு கூடவா அவனுக்கு புரியாது. இவங்களுக்கு எல்லாம் இவங்க அக்கா, தங்கை எல்லாம் எந்த பையன் கிட்டயும் பேசக் கூடாது. யாருகிட்டேயும் ஏமாந்திடக் கூடாது. இதே, இவனுங்க பார்க்கிற பொண்ணுங்க மட்டும், இவனுங்க பார்த்த உடனேயே, இவனுங்களுக்கு பிடிச்சிருக்குன்னு காட்டின உடனேயே… மயங்கி காலடியில விழுந்துடணும்” என்றாள் அழுதபடியே!

“கவலைப் படாதடி” என்று தேற்றியவர்களுக்கும் இந்த பிரச்சனையிலிருந்து மீள எந்த யோசனையும் தோன்றவில்லை.

“தெருவுல புதுசா ஒருத்தன் சுத்தறான்னா மத்த வீட்டுல கவனிக்க மாட்டாங்களா? எங்க வீட்டுக்கு மட்டும் இவன் எனக்காகத் தான் சுத்திட்டு இருக்கான்னு தெரிஞ்சது, படிப்பும் வேணாம் ஒன்னும் வேணாம்ன்னு சொல்லிடுவாங்க” என்று சொல்லி கண்ணீர் வடிக்க, தோழிகளுக்கு வேதனையாக இருந்தது.

“காலேஜ்’ல கம்ப்ளைண்ட் செய்யலாம்ன்னா… இந்த பசங்க மார்பிங், ஆசிட்ன்னு எதுவும் இறங்கிடுவானுங்களோன்னு பயப்பட வேண்டியதா இருக்கு” என்றாள் சரண்யா கவலையுடன்.

அவளது கையை முழங்கையால் இடித்த பூரணி, “அவளே பயந்து புலம்பிட்டு இருக்கா நீ ஏன்டி இன்னும் பயப்படுத்தற” என்று மெலிதாக கடிந்து கொண்டாள்.

சம்பத் வேண்டுமென்றே பேச நெருங்கி வருவதும், அஞ்சலி சிரமப்பட்டுக் கண்டுகொள்ளாமல் செல்வது போலச் செல்வதும் தொடர் வாடிக்கையாக, பூரணியும் சரண்யாவும் இதற்கு மேலும் முடியாது என்பது போல, அஞ்சலிக்குத் தெரியாமல் சம்பத்திடம் பேச சென்றனர்.

“அவளுக்கு இஷ்டம் இல்லை போல சம்பத். விலகி இருக்கலாமே” என்று கோரிக்கை வைத்தவர்களை அவன் எரிச்சலோடு பார்த்தான். இவர்கள் இருவரின் போதனைகளாலும் தான் அஞ்சலி விலகி இருக்கிறாள் என்னும் எண்ணம் அவனுக்கு!

“உங்களுக்கு என்ன வந்தது? இது எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற பிரச்சனை. சும்மா அவளுக்கு நல்லது செய்யறேன்னு, கண்டதையும் ஓதி என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்காதீங்க. அப்பறம் நான் பொறுமையா இருக்க மாட்டேன்” என்று எரிந்து விழுந்தான்.

“உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தமே இல்லாத உங்களை எப்படி நாங்க பிரிக்க முடியும்? அவளை நீ ரொம்பவும் கஷ்டப்படுத்தற… அது ஏன் உனக்குப் புரிய மாட்டேங்குது” என்று ஆதங்கம் தாங்காமல் பூரணி பொரிய,

“உன் வேலையை பார்த்துட்டு போறியா…” என்றான் அவன் அலட்சியமாக.

தன்னுள் மூண்ட ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தி, “சம்பத், அவளுக்கு விருப்பம் இல்லைன்னு இன்னும் உனக்குப் புரியலையா? பாவம் ரொம்பவும் கவலை படறா. அவ வீட்டுல தெரிஞ்சா உடனே படிப்பை நிறுத்திடுவாங்க. பிளீஸ் புரிஞ்சுக்கோ” என்று சொல்லும்போதே சரண்யா அவளை இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள். சம்பத்தின் முக மாறுதல் ஒன்றும் சரியாகப் படவில்லை அவளுக்கு. ஆகையால் பேச்சு வளர்வதைத் தடுக்க தன் தோழியை இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.

அவளது செய்கையில், “அவன்கிட்ட பேச பேச ஏன்டி இழுத்துட்டு வர?” என்று பூரணி சரண்யாவைக் கடிந்து கொண்டாள்.

“அவன் நமக்கு நல்ல விதமா ரெஸ்பான்ஸ் பண்ணலை பூரணி. இந்த மாதிரி ஆளுங்க கிட்ட பேசியும் பிரயோஜனம் இல்லை. அவன் முகமே சரியில்லை. நாம பேசவே வந்திருக்க கூடாது போல. நம்ம வழக்கம்போல ஒதுங்கியே இருப்போம்” என்றாள் சரண்யா கவலையான குரலில். அஞ்சலியின் பிரச்சனையைத் தீர்க்க முடியாத கவலை அவளுக்கு!

“இப்ப என்னடி பண்ணறது?”

“யோசிப்போம் பூரணி” என்றவர்களுக்கு இந்த பிரச்சனையிலிருந்து விலகும் வழி தெரியவில்லை.

அன்று மாலை தோழிகள் மூவரும் கல்லூரி முடிந்து பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்க, சம்பத் சட்டென்று வழிமறித்தான்.

இதை எதிர்பாராமல் அதிர்ந்தவர்கள், விழி விரித்து நிற்க, அவன் விழிகளோ சிவந்திருந்தது. சில நொடிகளில் சுதாரித்து அவனைக் கடந்து செல்ல முயன்றவர்களை நன்றாக வழிமறித்து நின்றவன், “என்னடி சொன்ன இவளுங்க கிட்ட?” என்று அஞ்சலியை அதட்டலாகக் கேட்டான்.

பூரணியும், சரண்யாவும் பேசியதே அவளுக்குத் தெரியாது. அதோடு இவனது மரியாதையற்ற பேச்சில் முகம் சுளித்தவள், விலகப் பார்க்க, அவளது கரங்களைப் பற்றியவன், “என்னடி என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு பேச, அப்பொழுதே தோழிகளுக்கு தெரிந்தது அவன் குடித்து விட்டு வந்திருக்கிறான் என்று.

பயம் கவ்வ, “எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். இப்ப எங்களுக்கு நேரமாச்சு விடு சம்பத்” என்று சரண்யா அவனிடம் நயமாகப் பேச்சு தந்தாள்.

ஆத்திரத்துடன், “ச்சீ போடி…” என்று அவளைக் கீழே தட்டிவிட, அதற்குள் அங்குக் கூட்டம் கூடி விட்டது.

“என்ன பிரச்சனை?” என்று ஓரிருவர் முன்னே வர, கீழே விழுந்தவளைத் தூக்கி விடக் கூட தோன்றாமல் அவன் பிடியிலிருந்து அஞ்சலியை மீட்க வேண்டும் என்று பூரணியின் மனம் அடித்துக் கொள்ள, பயத்துடன் அஞ்சலியின் கரங்களை அவனிடமிருந்து விடுவிக்க முயன்று கொண்டிருந்தாள்.

ஆட்கள் நெருங்கவும், தன்னிடமிருந்த கத்தியை எடுத்துக் காட்டியவன், “எல்லாரும் பின்னாடி போங்க…” எனக் கத்தினான். அவன் ஆயுதத்திற்குப் பயந்தும், அவன் முன்னே நிற்கும் பெண்களின் பாதுகாப்பு கருதியும் அனைவரும் பின்வாங்கினார்கள்.

கத்தியைப் பார்த்ததும் தோழிகள் இருவரும் நன்றாக மிரண்டு விட்டனர்.

சம்பத் அஞ்சலியைப் பார்த்து, “உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தணுமாடி. அப்படி என்ன ஊருல இல்லாத அழகி நீ?” என்று கத்தியை ஓங்கியபடி வர, பூரணி சட்டென சுதாரித்தவள் அவளது கைக்கொண்டு அவனைத் தடுக்க பார்க்க,

இந்த கலவரத்தில், சுற்றி இருந்தவர்கள் அவனை நெருங்கிப் பிடித்திருந்தனர். எந்த இடைவெளியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, பூரணியின் கரங்களில் இரண்டு இடங்களில் கத்தியால் கிழிக்கப் பட்டிருக்க, ரத்தம் பீறிட்டது.

கீழே விழுந்த சரண்யாவும் தலையில் அடிபட்டு மயங்கிக் கிடக்க, பூரணி நிற்க வலுவில்லாமல் தொய்ந்து விழ, சிறிது நேரத்தில் அந்த இடமே கலவரமானது.

காவல் நிலையத்துக்கு முன்னமே யாரோ அழைத்துச் சொல்லியிருப்பார்கள் போலும், தற்பொழுது ஆம்புலன்சுக்கும் சொல்ல… அதற்குள் அங்குக் கூடிய மாணவர்கள் ஆட்டோ பிடித்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் செல்ல, அஞ்சலி அழுதபடியே தோழிகளோடு மருத்துவமனைக்குச் சென்றாள்.

என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்பே ஏதேதோ நடந்திருந்தது. பிரச்சனைகள் வேண்டாம் என்று ஒதுங்கிப் போனாலும் பிரச்சனைகள் விடுவதில்லையே!

1 thought on “சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 08”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 17’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 17’

வேப்பம்பூவின் தேன்துளி – 17   திருமண இரவுகள் தான் எத்தனை கோலாகலம்! அந்த மிகப்பெரிய மண்டபம் முழுவதும் மின்விளக்குகளால் பிரகாசிக்க, அது கோபாலகிருஷ்ணன், லாவண்யாவின் திருமண வைபவம். திருமண ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பணத்தின் செழுமை தெரிந்தது.   லாவண்யா

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 14’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 14’

வேப்பம்பூவின் தேன்துளி – 14   ரஞ்சிதா தன் புகுந்த வீட்டில் இயல்பாகப் பொருந்திப் போனாள். மாமனார், மாமியார், கணவன் என்ற அளவான குடும்பம் தானே! இவளும் வெகு சீக்கிரமே ஐக்கியமாகிப் போனாள்.   “ஏன்மா நீ அவன்கிட்ட சொல்லக் கூடாதா?”

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 04சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 04

வேப்பம்பூவின் தேன்துளி – 4 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் தானே! மனம் அலைபாயும் போது அது பட்டவர்த்தனமாக வெளிப்படும் நிலையை என்னவென்று சொல்வது? நீதிவாசனைச் சந்தித்து விட்டு வந்ததிலிருந்து அன்னபூரணிக்கு இதே யோசனை தான்!   காரணமே இல்லாமல் சமீபமாக அவளுக்கு