சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 07

வேப்பம்பூவின் தேன்துளி – 7

 

ஒருவாரம் சென்னையைச் சுற்றிப்பார்த்த களிப்போடு முத்துச்செல்வம் குடும்பத்தினர் சொந்த ஊருக்குக் கிளம்ப, கோபியும் வருவதாக இணைந்து கொண்டான்.

 

இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே ரயிலில் முன்பதிவு செய்திருக்க, இவன் திடீரென்று கிளம்ப முடிவெடுத்ததால், நேற்று தான் தட்கலில் முன்பதிவு செய்தான். முன்பதிவு செய்த பிறகே வீட்டினரிடம் சொல்ல,

 

“ஏற்கனவே ஒரு வாரம் லீவு போட்டிருந்தியே பா? எதுவும் சொல்ல மாட்டாங்களா?” என்று முத்துச்செல்வம் கேட்டார்.

 

“இல்லைப்பா. இன்னும் ரெண்டு நாள் லீவு சொல்லியிருக்கேன். கிடைச்சிடுச்சு”

 

திடீரென வருகிறேன் என்கிறானே என்று குழப்பம் மூத்தவருக்கு. அதோடு மகனின் முகமும் இரண்டு, மூன்று தினங்களாகத் தெளிவில்லாதது போல இருப்பதும் உறுத்தவே, தனியாக இருக்கும்பொழுது, “என்னப்பா எதுவும் பிரச்சனையில்லையே” என்று விசாரித்தார்.

 

எதுவும் கண்டுகொண்டாரோ என்று அதிர்ந்தவன், “அதெல்லாம் எதுவும் இல்லைப்பா” என்று சமாளிப்பாகக் கூறி வைத்தான்.

 

மகனின் பதிலை நம்ப முடியாத போதும் தோளுக்கு மேல் வளர்ந்தவனிடம் வற்புறுத்தவா முடியும்? முத்துச்செல்வம் இன்னும் கொஞ்சம் ஊன்றி கவனித்திருந்தால் தீபாவின் கல்யாண செய்தி வந்ததிலிருந்து தான் மகன் இப்படி இருக்கிறான் என புரிந்திருக்கும். ஆனால், கோபி ஊரில் இருந்தவரை தீபாவும், கோபியும் சிறிது நேரம் சேர்ந்தாற்போல பேசியே யாரும் கண்டிராததால், அவரால் அப்படியொரு முடிச்சைப் போட முடியவில்லை. தீபாவின் காதல் பிம்பம்… கோபியின் வேலை, சம்பளத்தினால் வந்தது தானே!

 

இரவில் அனைவரும் ரயில் நிலையம் செல்ல, கோபி மற்ற நால்வரையும் வண்டி ஏற்றிவிட்டு, தனது கம்பார்ட்மென்டில் ஏறிக்கொண்டான். தனித்தனியே பதிவு செய்ததால் வேறு வேறு கம்பார்ட்மென்ட் தான் கிடைத்திருந்தது.

 

மறுநாள் ஊருக்கு வந்து சேர்ந்ததும், பெயருக்கு ஓய்வெடுத்தவன், சிறிது நேரத்தில் அம்மாவின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்று, தீபாவிற்கு அழைத்திருந்தான். அவனது எண்ணைத் தான் பிளாக் செய்திருந்தாளே! அதுவும் இத்தனை நாட்களாக! இதுவரை அவள் இப்படி செய்ததேயில்லை. அதிக கோபம் போல என்று நினைத்தான். அதற்காகவே அவளை நேரில் பார்த்து சமாதானம் செய்வதற்காகக் கிளம்பி வந்திருந்தான்.

 

ஜோதிமணியின் எண் என்றதும், “சொல்லுங்க அத்தை” என்று சொல்லியவாறு தீபா அழைப்பை ஏற்க, “தீபு…” என்றான் கோபி ஆழ்ந்த குரலில்.

 

எதிர்புறம் தீபா சற்றே அதிர்ந்து போனாள். ‘இவன் வேறு இன்னும் விலகாமல் படுத்தறானே! ஒருமுறை சொன்னா இவனுக்குப் புரியாது’ என்று கடுப்பாக வேறு நினைத்தாள்.

 

சரி திருமண தருணத்தில் இவனால் எதுவும் பிரச்சனை எழுந்து விடப்போகிறது. இவன் உறவை மொத்தமாக இப்பொழுதே துண்டித்து விடலாம். இது எதற்கு இழுவையாய் என்று முடிவுக்கு வந்தவள், “என்ன விஷயம் சொல்லு…” என்றாள் எடுப்பாக!

 

“என்ன தீபும்மா பயங்கர கோபமா?” அவள் இப்படி மொத்தமாகத் தவிர்க்கவும், தான் தான் ஏதோ அவளை வெகுவாக கஷ்டப்படுத்தி விட்டோமோ என்று நினைத்தான். தீபா காதலில் நிலையாக இல்லாமல் இருந்தபோதிலும், கோபியின் காதல் நூறு சதவீதம் உண்மை தானே!

 

“கோபி… பிளீஸ் புரிஞ்சுக்க நமக்குள்ள சரிப்பட்டு வராது. அன்னைக்கு நான் கோபத்துல பேசலை. அது நான் மனசார சொன்னது தான்” என்றாள் பொறுமையை இழுத்துப் பிடித்த எரிச்சலான குரலில்.

 

அவளின் குரலின் வேறுபாட்டில் கோபி கொஞ்சம் சுதாரித்தான். எத்தனை எரிச்சலோடு பேசுகிறாள் இவள் என்று கசப்பாக உணர்ந்தபடியே, “எனக்குப் புரியலை” என்றான் யோசனையான குரலில்.

 

“நமக்குள்ள இனி சரி வராதுன்னு சொன்னேன்”

 

‘என்ன பேசுகிறோம் என்று புரிந்து தான் பேசுகிறாளா?’ என்று அவனுக்குத் தலை கிறுகிறுத்தது. “என்ன சரி வராது?” என்றான் புருவங்கள் முடிச்சிட.

 

“ஓ காட்! இத்தனை தெளிவா சொல்லறேன். இன்னும் சுத்தி சுத்தி கேட்டுட்டு, எனக்கு உன்னை பிடிக்கலை. நீ வேணாம். நாம பிரிஞ்சிடுவோம். ஓகே?” என்றாள் அவள் அழுத்தம் திருத்தமாக!

 

கோபியின் உள்ளத்தில் யாரோ உலைகலனை வைத்தது போலத் துடித்துப் போனான்.

 

தன் மனதின் ஏமாற்றத்தையும், வலியையும் வெளிக்காட்டாமல், “யூ மீன் பிரேக் அஃப்” என்றான் அவளை விடவும் அழுத்தம் திருத்தமான குரலில்.

 

“எக்ஸாக்ட்லி…”

 

“என்ன காரணம்?” வெகுவாக தெளிந்திருந்தது அவன் குரல்.

 

“உனக்கே தெரியும்”

 

“இல்லை நீ லிஸ்ட் போடு… அதான் முறையா இருக்கும்” என்றவன் மாடியின் சுற்றுச்சுவரில் வாக்காகச் சாய்ந்து நின்றான். பலத்த ஏமாற்றம் தான். மனம் முழுவதும் வலியும், வேதனையும் தான்… ஆனால், அதை தன்னிடம் பேசிக்கொண்டு இருப்பவளிடம் வெளிக்காட்டி விடக்கூடாது என்னும் வைராக்கியம் வந்திருந்தது அவனுக்கு!

 

“நீ என் நம்பிக்கையை உடைச்சிட்ட” என்றாள் அவள்.

 

“அப்படின்னா உன்னை விட்டு வேற எவகிட்டேயும் காதல், கீதல்ன்னு சுத்திட்டு இருக்கேனா என்ன? எந்த வகையில உங்க நம்பிக்கை போச்சு…” என்றான் எள்ளலான குரலில்.

 

கோபியின் சுய குற்றச்சாட்டில் குற்றம் செய்த தீபாவின் நெஞ்சம் துணுக்குற்றது. அதைச் செய்தது அவள் ஆயிற்றே! ஒரு நிமிடம் கோபி தன்னைப் பற்றி அதற்குள் தெரிந்து கொண்டானோ என்று ஆடிப் போனாள். இருந்தும் சுதாரிப்பாகவே, “ம்ப்ச்.. நீ என்னை நல்லா பார்த்துப்பேங்குற நம்பிக்கை எனக்கு இல்லை. மூணு வருஷம் முன்ன என்கிட்ட பேசத் தொடங்கின உனக்கும், இப்பத்துக்கும் நிறைய டிப்ரன்ஸ்” என்றாள்.

 

‘அடிக்கடி இதைச் சொல்லி இவள் சண்டை போடுவது தானே!’ என்று எண்ணியபடியே, “ஓ…” என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்லவில்லை அவன். சமீபமாக இவள் வீணாக எதற்கெடுத்தாலும் சண்டை இழுப்பது நினைவில் வந்தது.

 

இப்படி ஒரேயடியாக உறவை முடித்துக்கொள்ளலாம் என்கிறாளே என்ற வேதனை, ஆதங்கம், கோபம் எல்லாம் ஒருபுறம் இருந்த போதிலும், இறுதி முயற்சியாக, “உன்னை நான் நல்லா பார்த்துப்பேன். அதை உனக்குப் புரிய வைக்க தவறிட்டேன் போல! உன்னை ஒருமுறை நேரில் சந்திக்க முடியுமா?” என்று கேட்டுப் பார்த்தான்.

 

முகத்தில் அடித்தாற்போல, “உன்னை பார்க்கக் கூட பிடிக்கலை. இனி சும்மா சும்மா பழைய குப்பையைக் கிளராத… என்னை நிம்மதியா விடு” என்றாள் எரிச்சல் நிறைந்த குரலில்!

 

“உன்னை பார்க்காம இருக்க முடியலை கோபி…” என்று கொஞ்சல் மொழி பேசியவள் தேர்ந்த நடிகை என்பதைக் கோபி வலியோடு உணர்ந்து கொண்டான். என்ன அதற்குக் கொடுத்த விலை தான் அதிகமாக இருந்தது.

 

இன்னுமே தீபா என்னும் பிம்பம் பொய்த்துப் போனதை அவனால் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. தன்னுள் மொத்தமாக எதுவோ சரிந்து விழுந்த உணர்வு. இடிபாடுகளின் இடையே சிக்கிக்கொண்டு உயிர் வாழப் போராடும் மனிதனின் நிலையில் அவன் இருந்தான். காதல் தோல்வியில் சிக்குண்டு மீள முடியாமல் திணறினான். தன் வலியைக் காட்டிலும் அதை மறைப்பதே அவனுக்கு மிகவும் கொடூரமாக இருந்தது.

 

முயன்று தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல், “நான் வேண்டாம்ன்னு உறுதியா இருக்க?” என்று மீண்டும் கேட்டான்.

 

“இன்னும் எத்தனை முறை உனக்கு சொல்லணும்?”

 

“அப்ப உனக்கு நடக்கிற கல்யாண ஏற்பாடு? அதுக்கு நீ ஒத்துக்க போறியா?”

 

“நான் என் அண்ணனுக்கு நல்ல தங்கை. யாரும் என் மனசைக் கலைக்க முடியாது” என்றாள் திமிரான தோரணையில்.

 

‘யார் மனதை யார் கலைத்தது’ என்று கோபி பல்லைக் கடித்தான். ‘ச்சே! இவளும் ஒரு பெண்ணா?’ என்று தோன்றியது.

 

ஒரே நாளில் மூன்று வருடக் காதலை வேண்டாம் என்று விட்டாள். வேறு ஒருவனுடன் திருமணத்திற்குத் தயாராகி விட்டாள். ச்சீ ச்சீ என்றது கோபியின் மனம்.

 

இன்னமும் அவள் ஒரே நேரத்தில் இருவரைக் காதலித்த விஷயம் அவனுக்குத் தெரியாது! ஏற்கனவே தெரிந்து கொண்ட விஷங்களாலேயே மனம் நொந்து இருக்கிறான்.

 

மனதின் வருத்தத்தைத் துளியும் வெளிக்காட்டாது, “ஒகே. ஆல் தி வெரி பெஸ்ட். குட் பை!” என்றதோடு அழைப்பைத் துண்டித்தவனின் மனம் எரிமலையாகக் கொதித்தது.

 

எப்படி இத்தனை சாதாரணமாக விலகச் சொல்கிறாள். மனைவி என்று மூன்று வருடமும் அவளைத்தானே நினைத்திருந்தேன். ஒரே நாளில் ஒன்றும் இல்லாமல் செய்ய அவளால் முடியுமா? இத்தனை உறுதியாக மறுத்து விட்டாளே! அதுவும் தெளிவான ஒரு காரணமும் இல்லாமல்!

 

எண்ணங்களின் அணிவகுப்பில் வெகுவாக சோர்ந்து போனான். அவளைப்போல அத்தனை எளிதாக இவனால் தூக்கி எறிய முடியவில்லை. மனம் வலியால் துடித்தது.

 

‘ஏன் என்னை மொத்தமாக மறுத்தாள்?’ என்னும் கேள்வி அவனை எதிலுமே ஈடுபட விடவில்லை. அவன் மனதை அவனால் சமாதானம் செய்ய முடியாமல் போக, மூன்று நாளில் வெகுவாக சோர்ந்து போனவன், சென்னைக்கு கிளம்பியிருந்தான். அவனது குடும்பத்தினர் தான் அவனது தோற்றத்தில் என்னவோ ஏதோவென்று பதறி மாற்றி மாற்றி விசாரித்தனர்.

 

அவர்களை சமாளிப்பதற்காகக் கூட அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. காதல் தோல்வி, காதலியின் நிராகரிப்பு அனைத்தும்… அவனுக்கு அதீத மன வலியையும், வேதனையையும் தந்தது.

 

‘என்னை நேரில் பார்த்தால், அவளது கோபம் தவிடு பொடியாகி விடும்’ என்று கர்வத்தோடு கிளம்பி வந்தவனை, ‘உன்னை நேரில் பார்ப்பதையே நான் விரும்பவில்லை!’ என்று மூக்குடைக்கும் வண்ணம் பதிலளித்து வார்த்தையாலேயே விரட்டி விட்டிருந்தாள்.

 

‘எப்படி அவளால் இப்படிச் சொல்ல முடிந்தது’ என்று புலம்பித் தவித்தவனுக்கு, தன்மேல் அப்படி என்ன தவறு என்று கடைசிவரை என்ன யோசித்தும் புரியவே இல்லை.

 

தீபலட்சுமி செய்யவிருப்பது காதல் திருமணம் என்னும் விவரம் அடுத்த சில தினங்களில் ரஞ்சிதா மூலம் கிடைக்கவும், அவன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

 

‘எப்படி இது சாத்தியம்? என்னைத் தானே காதலித்தாள். அப்பொழுது அவள் காதலித்ததையும், அதை உடைத்ததையும் வேண்டுமென்றே செய்திருக்கிறாளா? இத்தனை பெரிய துரோகத்தை ஒரு பெண்ணால் செய்ய இயலுமா என்ன? அதையும் கண்டுபிடிக்கக் கூட முடியாமல் முட்டாளாகவா நான் இருந்தேன்’ என்று கோபியின் மனம் கொண்ட வேதனை அவனை வெகுவாக முடக்கியிருந்தது.

 

கெட்டதிலும் ஒரு நல்லதாக… தீபலட்சுமி துரோகி என்று தெரிந்து கொண்டதால், அவன் தன் மன வேதனையிலிருந்து சிறிதே மீளத் தொடங்கினான். இத்தனை தூரம் ஏமாற்றியவளுக்காக நாம் கவலைப் படுவது பைத்தியக்காரத்தனம் என புரிய, கொஞ்சம் கொஞ்சமாக அவளை, அவள் நினைவுகளை மறக்க முயற்சித்தான்.

 

ஆனால், அவள் தந்த காதல் வலியும், வேதனையும் மிகவும் கொடியதாக இருந்தது. அத்தனை எளிதில் அவனை மீள விடவில்லை. ஒரு எல்லையில், இந்த நாட்டையே வெறுக்கும் அளவு அவனைத் தள்ளியது.

 

கோபி ஊருக்குச் சென்ற சில தினங்களிலேயே தீபலட்சுமிக்கு பெண் பார்க்கும் வைபவம் ஏற்பாடாகியிருந்தது. ரஞ்சிதா மற்றும் அன்னபூரணி வீட்டில் இருக்க, முத்துச்செல்வமும், ஜோதிமணியும் சென்று வந்தனர்.

 

பெண்பார்க்கப் போய்விட்டு வந்து ஜோதிமணி இளையவர்களிடம் சொன்ன கதை தான்… இரண்டு வருடமாக அன்பரசனும், தீபலட்சுமியும் காதலிப்பது. மாப்பிள்ளையின் உறவினர் பக்கம் சற்று லொடலொடா வகையறா பெண்மணி ஒருவர் வந்திருக்க, அவர் ஜோதிமணியிடம் இதையெல்லாம் பிட்டு பிட்டு வைத்துச் சென்றிருந்தார்.

 

இரவில் கோபியிடம் பேசும்போது ரஞ்சிதா எல்லாவற்றையும் ஒலிபரப்பு செய்திருக்க, அந்த செய்தி அவனுக்குத் தந்த வலியையும், ஏமாற்றத்தையும் இவர்கள் அறிய வாய்ப்பில்லையே!

 

நிச்சயதார்த்தம் அந்த மாத இறுதியிலும், திருமணம் அடுத்த இரண்டு மாதங்களிலும் முடிவாகியிருக்க, கண்டிப்பாகத் திருமணத்தைப் பார்க்குமளவு பக்குவம் எல்லாம் தனக்கில்லை என்று உணர்ந்த கோபி, அவர்கள் டீமிற்கு வந்த வெளிநாட்டு வாய்ப்பில் தன் பெயரையும் இணைத்துக் கொண்டான்.

 

அதற்கு சில தேர்வுகள், இன்டெர்வியூக்கள் எல்லாம் இருக்க, கண்டிப்பாகச் செல்ல வேண்டும், இங்கு இருக்கக்கூடாது என்னும் தீவிரத்தால் அனைத்திலும் தேர்வாகியிருந்தான். அவன் எண்ணப்படியே தீபலட்சுமியின் திருமணத்திற்கு முன்பே ஸ்வீடன் செல்லும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்திருந்தது.

 

விஷயத்தை வீட்டில் சொன்னதும், “ரொம்ப சந்தோஷம் பா. ஆனா, தீபா கல்யாணம் வருதே, அதுக்கு இருக்க முடியாதா?” என்று ஜோதிமணி தான் சற்று கவலைப் பட்டார். சமாளிப்பாக அவரிடம் எதையோ சொல்வதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

 

ஸ்வீடன் செல்ல, பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொல்லி, ஊருக்குக் கூட அவன் வரவில்லை. தீபாவின் திருமணத்திற்கு ஒன்றரை மாதங்கள் இருக்கும்பொழுதே அவன் இந்தியாவை விட்டுக் கிளம்பியிருந்தான். இன்னும் தன் வேதனைகளை விட்டு இல்லை!

 

தீபாவின் திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. நெருங்கிய உறவினர்களை ஒவ்வொரு குடும்பமாக தங்கள் கடைக்கு வரவழைத்து, உடை எடுத்துக் கொள்ள நீதிவாசன் சொல்லியிருந்தான்.

 

அன்று முத்துச்செல்வம் குடும்பத்தினரின் வருகை! புடவை எடுக்கும் இடத்தில் அனைவரும் குழுமியிருக்க, “நீதி மாமா கிட்ட எனக்கு ரெண்டு புடவைன்னு சொல்லிடுங்க மா” என்று ரஞ்சிதா அம்மாவின் காதை கடித்தாள்.

 

“ஆமாம்டி எல்லாத்தையும் உங்களுக்கு தந்துட்டு என் அண்ணன் மகன் கடை நடத்த வேணாமா? ஒரு துணி தான்” என்று கறார் குரலில் ஜோதிமணி முடித்து விட்டார்.

 

சிறிது நேரத்தில் அங்கு வந்த நீதிவாசனோ, “என்ன அத்தை பார்த்தீங்களா?” என்றான்.

 

“இதோ ப்பா..” என்று சொல்லியபடி பார்த்துக் கொண்டிருக்க, ரஞ்சிதாவும், அன்னபூரணியும் மற்றொரு புறம் புடவையைத் தேடிக் கொண்டிருந்தனர்.

நீதிவாசனின் பார்வையோ அவன் கட்டுப்பாட்டையும் மீறி பூரணியின் இடைப் பகுதியை ஆராய்ந்து, ‘இவளுக்கு இடுப்பு எங்க இருக்கு? புடவை கட்டினா எப்படி நிக்கும்?’ என்ற சந்தேகத்தை மனதிற்குள் எழுப்பியது.

 

தன் எண்ணப்போக்கில் தலையை உலுக்கிக் கொண்டவன், “சரி பார்த்துட்டு இருங்க அத்தை. வந்துடறேன்” என்று சொல்லி அவ்விடத்தை விட்டு வேகமாக நகர்ந்து விட்டான்.

 

ஆனால், புடவைகள் தேர்ந்தெடுக்கப் பட்டதோ ஜோதிமணிக்கும், ரஞ்சிதாவிற்கும் மட்டும் தான்! நீதி சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தபோது இரண்டையும் எடுத்து பெரியவள் காட்ட,

 

“ஆளுக்கு ரெண்டு ரெண்டு எடுத்துக்கங்க அத்தை” என்றவன் பணிப்பெண்களிடம், குறிப்பிட்ட விலையைச் சொல்லி அதற்கு மேல் காட்டும்படி பணித்தான்.

 

கூடவே, “உங்க சின்ன பொண்ணுக்கு எடுக்கலையா?” என்று நீதிவாசன் கேட்க, ‘இளையமகள்’ என்ற குறிப்பின் மூலம் அவனது பிரிவினை காட்டாத பாங்கில் அன்னபூரணியின் மனம் குளிர்ந்தது.

 

ஜோதிமணியோ, பூரணியின் மனதைப் பதற வைக்கும் விதத்தில், “இவளுக்குப் புடவையா? நீ வேற ஏன் நீதி? பெரியம்மா அங்க விலகிடுச்சு… பெரியம்மா இங்க நிக்க மாட்டீது… பெரியம்மா இது விழப்போகுதுன்னு… என் உயிரை எடுத்திடுவா” என்று… பூரணி அவரின் பின் வந்து நின்று பாவமாய் தோளைச் சுரண்டுவதைக் கூட பொருட்படுத்தாமல் அடுக்கிக் கொண்டே சென்றார்.

 

அத்தை சொன்னதைச் சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்த்தவன், இதழ் பிரியாமல் சிரித்துக் கொண்டிருந்தான். அதிலும் கற்பனையில் பூரணியின் புடவை கட்டிய உருவமும், அதை அங்கங்கே தூக்கிப் பிடித்தபடி பெரியவளை அவள் நச்சரிக்கும் தோற்றமும் விரிய, சிரிப்பை அடக்க பெரும் பாடாய் போனது.

 

அவன் முதலாளி என்னும் பிம்பத்தோடு இருந்த காரணத்தால், வெகுவாக சிரமப்பட்டு தன் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

 

பொறுக்க மாட்டாமல், “பெரியம்மா…” எனச் சிறு பிள்ளையாய் பூரணி சிணுங்க, அவளின் பாவனை, குரல் அனைத்திலும் வசியம் இருப்பதுபோல ஒரு பிரமை நீதிவாசனுள். அவளைப் பார்க்கவில்லை என்று காட்டிக்கொள்வது அவனுக்கு மிகுந்த சிரமமாய் இருந்தது.

 

கூடவே கற்பனையில் கண்டுகளித்த புடவை அணிந்த உருவத்தை நேரிலும் தரிசிக்க, அவனின் மனம் பேராசை கொண்டு அவனைப் பாடாய்ப் படுத்தியது.

 

மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னால், புடவையளவு கூட இல்லாமல், அதை உடுத்திக் கொண்டு மலங்க மலங்க விழித்தபடி அவன் கட்டிய பச்சை ஓலையில் அமர்ந்திருந்த முகம் வேறு மின்னி மறைந்து அவனை இம்சித்தது.

 

அவன் எண்ணத்தின் நச்சரிப்பு தாங்காமல் அதற்குத் தோதாக ஜோதிமணியிடம், “இப்படியே விட்டீங்கன்னா எப்ப பழகுவா அத்தை? கட்டி விடுங்க. வரவேற்புல உங்க புள்ளைங்க தானே நிக்கணும்” என்று இலகுவான குரலில் சொன்னான்.

 

“சரிப்பா. அப்ப அவளுக்கும் பார்க்கிறேன்” என்று புடவை எடுப்பதில் பெரியவள் கவனம் வைத்துவிட, பூரணிக்கு மெலிதாய் கோபம் எட்டிப் பார்த்தது.

 

தேர்வில் கள்ளத்தனம் செய்து பிடிபட்ட பள்ளி மாணவனின் தோற்றத்தில் முகத்தை வைத்திருந்தாலும், அவன் கவனிக்க மாட்டான் என்ற நினைவில், தைரியத்தில் மெலிதாக அவனைப் பார்த்து தன் திருப்திக்கு முறைத்தாள்.

 

அவளைக் கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டிருப்பவனின் விழிகளில் இது தப்புமா என்ன?

 

ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி ஒய்யாரமாய் என்னவென்று அவன் கேட்க, அவ்வளவு தான் அவசரமாக அவனுக்கு முதுகுகாட்டி நின்று கொண்டாள் புடவை பார்க்கும் பாவனையில்!

 

சிறியவளாகவும் நினைக்க முடியாமல், பெரியவளாகவும் ஏற்க முடியாமல்… பூரணி நீதிவாசனை வெகுவாக படுத்திக் கொண்டிருப்பதை அவள் அறிவாளா என்ன? அறியும் நாள் வெகு வெகு தொலைவில் தானோ?!?

 

நீதிவாசன் இம்முறை முத்துச்செல்வத்தோடு விலகிச் சென்றான். “உங்களுக்கு எடுக்கலாம் வாங்க மாமா” என்றவாறு. பின்னே, அவனும் என்ன செய்வான் என்ன முயன்றும் கால் நிற்காமல் சுற்றிச் சுற்றி இங்கேயே வந்து விடுகிறது. ஆக, இம்முறை மாமாவை துணைக்கு வைத்துக் கொண்டு விலகி வந்தான்.

 

அடுத்த சிறிது நேரத்தில் மாமாவுக்கு எடுத்து முடித்துவிட்டு அவரை கீழே அழைத்து வந்தவனுக்கு, இன்ப அதிர்ச்சியாய் தேர்ந்தெடுத்த புடவைகளை இளையவர்கள் இருவருக்கும் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

கேசரி ஆரஞ்சு வண்ண நிறத்தில், கரும்பச்சை வண்ண பார்டர் கொண்ட பட்டுப்புடவையை, பூரணிக்கு அழகாகக் கட்டிக் காட்டிக் கொண்டிருந்தனர் பணிப்பெண்கள்.

 

‘சோதிக்கிறாளே!’ என்றுதான் தோன்றியது நீதிவாசனுக்கு. அந்த புடவை அவளுக்கு வெகு பாந்தமாய் இருந்தது. ரசித்துப் பார்க்க முடியாமல் சூழலும் சேர்ந்து அவனைச் சோதித்தது.

 

இத்தனை மிருதுவான முகபாவனையோடு அவன் கடையினுள் வளைய வந்ததே இல்லை! அதற்கும் முத்தாய்ப்பாய் அத்தை மகள்களைக் கொண்டு கேலி வேறு செய்து, அங்கிருந்த பணிப்பெண்களை பேரதிர்ச்சியடையச் செய்தான்.

 

ஆம், அவர்களை நெருங்கும்போதே வேண்டுமென்றே, “என்னம்மா இது கஷ்டமர்ஸ் வர பீக் ஹவர்ஸ் ல இப்படித்தான் பொம்மைக்கு துணி மாத்தி விட்டுட்டு இருப்பீங்களா? சரி சரி பொம்மையை நடுக்கடையில வைக்காம டிஸ்பிளே ல வையுங்க” என்று சிரியாமல் சொல்ல, சுற்றி உள்ள அனைவரும் கொள்ளென்று சிரித்தனர்.

 

கூடவே, ‘முதலாளி இப்படியும் பேசுவாரா?’ என்பது போல அனைவரிடமும் ஆச்சரிய பார்வை! உறவினர்கள் வந்ததால் இப்படி இருக்கிறானோ என்று எண்ண முடியாமல், இதுவரை மற்ற உறவினர்கள் வந்தபோது பெயருக்கு ஒருமுறை எட்டிப் பார்த்தான் அவ்வளவே என்று புரிந்தது. ஆனால், இப்பொழுதோ குட்டி போட்ட பூனை போல இங்கேயே சுற்றி திரிகிறானே என்று அனைவருக்கும் பலத்த ஆராய்ச்சி!

 

ஆனால், நீதிவாசனின் நல்ல நேரம் அவன் பிடிபடவில்லை. சுதாரிப்பாக அத்தையிடம் மட்டும் தானே பேச்சுவார்த்தை. ஆக, அத்தை மீது பாசம் போல என்று அனைவரும் நினைத்துக் கொண்டனர். கூடவே அத்தை வளர்த்த ரத்தினத்தின் மீதும் என்பது அவன் மட்டும் அறிந்த விஷயமாயிற்றே!

 

அவனது கேலியில் ரஞ்சிதாவும் துணிந்து, “என்ன மாமா கடைக்குப் பொம்மை வாங்கற செலவை மிச்சம் பண்ண யோசிக்கிறீங்களா?” என்று பதிலுக்கு வம்பு செய்ய, பூரணியோ, “போதும் கழட்டி விடுங்க” என்று பணிப்பெண்களைப் படுத்திக் கொண்டிருந்தாள்.

 

அவள் பேசுவது காதில் விழ, ‘கல்யாணத்துக்கு இந்த புடவையில தான சுத்தி ஆகணும்’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டான் நீதிவாசன்.

ஆக, கோபி என்ற ஜீவனைத் தவிர மற்ற அனைவருமே இந்த திருமணத்தை வெகுவாக எதிர்பார்த்தனர்! வரவேற்றனர்! அவன் நிலை யாருக்கும் தெரிய வரவேயில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 15’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 15’

வேப்பம்பூவின் தேன்துளி – 15 நீதிவாசன் வாயிலில் நின்றபடி கைப்பேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான். இவர்களுக்காகக் காத்திருந்தானா இல்லை பொதுவாக நின்றிருந்தானா தெரியவில்லை… ஆனால், அவனது பார்வை மட்டும் வாயிலில் ஆர்வமாகப் பதிந்து பதிந்து மீண்டு கொண்டிருந்தது. யாரையோ எதிர்பார்ப்பது போல!

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 18’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 18’

வேப்பம்பூவின் தேன்துளி – 18   முகூர்த்த நேரத்திற்கு முகம் கசங்க வந்தமர்ந்த அன்னபூரணியை, நீதிவாசன் சுட்டெரிக்கும் பார்வை பார்த்திருக்க அப்பொழுது அவளது தொண்டைக்குழியில் அமிழ்ந்து போனது தான் அவளது அழுகை. விழிகளும் அதற்கு மேலும் சுரப்பதற்கு மறந்து போனது.   ‘எதற்கிந்த திருமணம்?’

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 10சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 10

வேப்பம்பூவின் தேன்துளி – 10   கண்ணில் இருந்து நேர் கோடாய் விழிநீர் கசிய, தான் அழுகிறோம் என்பது கூட புத்தியில் உரைக்காமல் திகைத்த பார்வையுடனும், சோர்ந்து, வாடிய தோற்றத்துடனும் அமர்ந்திருந்தாள் அன்னபூரணி. இளையவளையே ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதாவிற்கு பாவமாய்