Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura,Uncategorized தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 10

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 10

மாமியார் வீட்டுக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி அம்மாவக் கும்பிட்டுக்கோ” பக்கத்து வீட்டு அவ்வா பார்வதியிடம் சொன்னார்.

சிவகாமியின் மறைவால் ஒரு வருடம் தள்ளிப் போயிருந்த திருமணம் அப்போதுதான் நடந்திருந்தது.

கண்ணீருடன் படமாயிருந்த தாயை வணங்கிக் கிளம்பினாள் பார்வதி. கிளம்பும்போது ஒரு கேவல் எழுந்தது அவளிடம். பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மி சரஸ்வதியிடமும் அது தொத்திக் கொண்டது. மகளுக்குத் துண்ணூரு பூசிவிட்ட நெல்லையப்பன் விருட்டென நடந்து வாசலில் நின்றுக் கொண்டார்.

‘சிவாமி இருந்திருந்தா இப்படியா வீடு அருளில்லாமலிருக்கும். சாவுறதுக்கு ரெண்டு நா முன்னாடி உச்சந் தலைல பள்ளி விழுந்ததுன்னு சொன்னா. நாந்தான் விவரங்கெட்டவன் அவ சொன்னத நம்பல… சரி பொலம்பி என்ன பயன்… நடந்தத மாத்தவா முடியும்…

இந்த லச்சுமி, சரஸ்வதி ரெண்டு பேத்துக்கும் கையோட மாப்பிள்ள பாத்துடனும். இந்த சின்ன குட்டிய நெனச்சாத்தான் கவலையாயிருக்கு. ரொம்ப கஷ்டமாயிருந்தா சரசு சொன்ன மாதிரி ப்ரைவேட்டா பன்னெண்டாவது வரப் படிக்க சொல்ல வேண்டியதுதான். அப்பறம் அவள யார் கைலயாவது பிடிச்சுக் கொடுத்துட்டு தருமராசன் தேடி வர நாளுக்காக காத்திருக்கலாம்’ விரக்திப் பெருமூச்சு கிளம்பியது அவரிடமிருந்து.

போட்டோவிலிருக்கும் தாயை ஒரு வெறுமைப் பார்வை பார்த்தபடி நின்றிருந்தாள் சரயு. அவள் கண்களில் கண்ணீர் ஒரு துளி திரண்டது. ‘நா இல்லாம ஒரு நாள் கஷ்டப்படுவன்னு சொல்லிட்டே இருந்தியே. சும்மா சொல்லுறேன்னு நெனச்சேன். நிஜம்மாவே நா கஷ்டப்படணும்னு நெனச்சியா. இப்படி சீக்கிரம் செத்துப் போயிருவன்னு தெரிஞ்சிருந்தா நீ சொன்ன பேச்சக் கேட்டு நடந்திருப்பேன்’

வலுக்கட்டாயமாய் கண்களை அசைத்துக் கண்ணீரை உள்ளிழுத்தாள். ‘நீ செத்த அன்னைக்கே நான் நிறைய அழுதுட்டேன். இனி நா அழமாட்டேன். நீதான் சொல்லிருக்கியே பொம்பளைங்க சிந்துற ஒவ்வொரு துளி கண்ணீரும் அதுக்குக் காரணமானவங்கள சுட்டுப் பொசுக்கிடும்னு. நீ மேல போயும் என்னால கஷ்டப்படக்கூடாது’ முகத்தை விருட்டென திருப்பிக் கொண்டு வாசலில் நெல்லையப்பனருகே நின்றுக் கொண்டாள்.

“பாருக்கா நாமெல்லாம் அழறோம். திமிர் பிடிச்சவ வாசல்ல நின்னுகிட்டா. இவளுக்காக அம்மா எவ்வளவு செஞ்சிருக்கும். நன்றியில்லாதவ. உனக்குக் கல்யாணமாயிட்டா நான் ஒண்ணும் இவளுக்கு வடிச்சுக் கொட்ட மாட்டேன். ப்ரைவேட்டா படிச்சுக்கட்டும். இப்ப நானெல்லாம் படிக்கல” சரசு சொன்னாள்.

லக்ஷ்மி முகம் சுழித்தாள். “நீ ஒவ்வொரு பரிச்சையா எழுதிப் பாசானதுக்கு ப்ரைவேட்டாத்தான் எழுத முடியும். சரயு முதல் அஞ்சு ரேங்க்குக்கு கம்மியா வாங்கியிருக்காளாடி. உனக்கு சமைக்க சோம்பலாயிருந்தா அவளை ஸ்கூல விட்டு நிறுத்தணும்னு பேசாதே. நீயும் நானும் சோகத்த அழுது ஆத்திக்கிறோம். ஒரே சமயத்துல தாயை இழந்து அணுகுண்டு வீட்டையும் பிரிஞ்சு அவ படுற பாடு, சின்ன சிறுக்கி மனசுல வச்சுப் புழுங்குறா.”

‘பொறாம பிடிச்சவ’ சரஸ்வதியை மனதுக்குள் வைதபடியே சரயுவை அழைத்தாள்.

தாய் இறந்ததிலிருந்து ஒரு நாள் கூட மற்றவர்கள் காலையில் எழுப்பும்படி நடந்து கொண்டதில்லை சரயு. அலாரம் கடிகாரம் ஒன்றை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். அலாரம் அடிக்கும் முன் விரைந்து அவளது கைகள் நிறுத்தும். தூங்குவாளா இல்லையா என்றே தெரியவில்லை. பழையபடி இவள் குறும்பு செய்ய மாட்டாளா என ஏங்கியது லக்ஷ்மியின் உள்ளம்.

“சரயு காப்பி குடிச்சுட்டு போடி” கருப்பட்டிக் காப்பி கொதித்துக் கொண்டிருந்தது.

“காப்பி வேண்டாம்”

கனிவுடன் பார்த்தாள் லக்ஷ்மி. தாயின் மறைவுக்குப் பின் காப்பி குடிப்பதையே விட்டுவிட்டிருந்தாள் சரயு.

“சரி ஹார்லிக்ஸ் போட்டுத் தாரேன். குடி”

பார்வதி புகுந்த வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள். சிவகாமியின் மறைவால் வீட்டில் நிலவிய மந்த நிலையைப் பயன்படுத்தி பார்வதியின் புகுந்த வீட்டில் கல்யாணத்துக்கு முன் மூன்று லட்சம் பணம் கேட்டனர். வேறு வழியின்றி கடன் வாங்கித் தந்திருந்தார் நெல்லையப்பன்.

இந்த சொத்தெல்லாம் காபத்து செய்து யாருக்குத் தரப்போறோம். நமக்குப் பின்னாடி தந்தா என்ன இப்ப தந்தா என்ன என்ற நிலைக்கு வந்திருந்தார் நெல்லையப்பன். கடையைப் பார்த்துக் கொள்வது கூட அவரிடம் எடுபிடியாய் சேர்ந்து தொழில் பழகிய செல்வம்தான். அவன் இல்லையென்றால் கை உடைந்தது போலிருக்கும். செல்வத்திடம் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி சொல்லிவிட்டு பார்வதியைப் புகுந்த வீட்டில் கொண்டுவிட சீருடன் நெல்லையப்பனும் கிளம்பினார்.

சரயுவும் பள்ளிச் சீருடையை அணிய குளியலறைக்கு சென்றாள். அறையில் அம்மா படம் மாட்டியிருப்பதால் மிகவும் தேவை என்றால்தான் அறைக்குப் போவாள். போட்டோவை நிமிர்ந்து கூட பார்க்காமல் குனிந்து கொண்டே சென்று வருவாள். உடை மாற்றுவதெல்லாம் இப்போது குளியலறையில்தான். லக்ஷ்மிக்குப் புரிந்தது. தாயின் படத்தை சாமிரூமில் மட்டும் மாட்ட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

ணுகுண்டில்லாத பள்ளி சரயுவுக்கு வெறுமை அளித்ததால் அப்பாவிடம் சொல்லி சற்று தொலைவிலிருந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து கொண்டாள். குறுக்கு வழியில் சென்றால் அணுக்குண்டின் வீட்டைப் பார்க்க வேண்டியிருக்குமென்பதால் இரண்டு கிலோமீட்டர் சுத்தி பள்ளிக்கு செல்வாள். பயணத்தின்போது ஜிஷ்ணுவின் சைக்கிள்தான் இப்போதைக்கு அவளது ஒரே துணை. புது சூழ்நிலை, புது வகுப்புத் தோழிகள் சற்று அவளது மனதில் மாற்றங்கள் கொண்டுவந்தது உண்மை. ஆனால் சின்னஞ் சிறு மனதில் ஒரு உறுதி மட்டும் பூண்டுக் கொண்டாள், ‘இனி யார் மேலயும் பாசம் வைக்கக் கூடாதுடா சாமி’

வழியில் கைகாட்டி நிறுத்தினான் வெங்கடேஷ்.

“சரயு”

சைக்கிளை நிறுத்தி வலதுகாலைத் தரையில் ஊன்றி நின்றாள்.

“வெங்கடேஷ் அண்ணா, எப்படி இருக்கிங்க?”

குற்றால அருவியாய் குறும்பில் கொந்தளிக்கும் சரயு சற்று நிதானப்பட்டு நதியாய் மாறியிருந்தாள். ‘இவ மேல நம்ம கண்ணே பட்டுடுச்சு போலிருக்கு’ மனதில் நினைத்தபடியே பார்த்தான் வெங்கடேஷ்.

“நல்லாயிருக்கேன்”

அவன் அவளின் நலம் விசாரிக்கவில்லை. முன்னிலும் இளைத்து களைத்திருக்கும் இவள் எப்படி இருக்கிறாள் என்று பார்த்தாலே தெரிகிறது. நலம் வேறு விசாரிக்க வேண்டுமா?

“விஷ்ணு…” மறக்காமல் கேட்டாள்.

“நல்லாயிருக்கான். அமெரிக்கால படிக்க பரிட்சைக்குத் தயார் பண்ணிட்டு இருக்கான். அதனால அய்யா ரொம்ப பிஸி. ஆனா எப்போதும் உன்னைக் கேட்பான்”

மெலிதாய் சிரிக்க முயன்றாள். “அப்ப விஷ்ணு உங்க காலேஜ்ல படிக்கலையா?”

“இப்ப எங்க காலேஜ்லதான் படிக்கிறான். மேல படிக்க அமெரிக்கா போறான். அதுக்குப் பரீட்சை எழுதிப் பாசாகணும்”

“ஓ… அப்படியா. விஷ்ணுவ நல்லா படிக்க சொல்லுங்கண்ணா”

சரயுவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் ஒன்றைக் கூட ஜிஷ்ணுவிடம் சொல்லவில்லை வெங்கடேஷ். ஏற்கனவே ஜிஷ்ணுவின் பணத்தையும் குணத்தையும் பார்த்து மயங்கிப் போன வெங்கடேஷ் குடும்பத்தினர் எப்படியாவது அவனைத் தங்களது மாப்பிள்ளையாக்க ஆசைப்பட்டனர்.

“தங்கமான பையன்டா. நம்ம இனம்தான. எப்படியாவது அவனை நம்ம வீட்டு மாப்பிள்ளையாக்கப் பாரு”

ஜிஷ்ணுவின் வளம் தெரிந்த வெங்கடேஷ் வீட்டாரின் ஆசையை வளர்க்க விரும்பவில்லை. ஜிஷ்ணு அடிக்கடி வந்து சென்றால் இந்த மாதிரி ஆசைகள் அவர்கள் வீட்டில் எழும். அதனால் அதன்பிறகு ஜிஷ்ணுவை மறந்துகூட வீட்டுக்கு அழைக்கவில்லை. மூன்றாம் வருடமாதலால் மினி ப்ராஜெக்ட், மேல் படிப்புக்கான கோச்சிங் கிளாஸ் என்று ஜிஷ்ணுவும் பிசியாகிவிட்டான். எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும் சரயுவின் தாய் மறைவைப் பற்றி சொன்னால் ஜிஷ்ணு அவளைப் பார்க்க கண்டிப்பாய் ஊருக்கு வருவான். அதனால் அதை அப்படியே மறைத்து விட்டான் வெங்கடேஷ்.

‘ஏதோ பொழுதைக் கழிக்க நம்ம வீட்டுக்கு வந்தான். சரயுவோட குறும்புத்தனம் பிடிச்சு கொஞ்ச நேரம் பேசினான். அவ வீட்டுல மருத்துவ செலவை செஞ்சதுக்கு பதிலுக்கு சைக்கிள் வாங்கித் தந்துட்டான். அவ்வளவுதான் ஜிஷ்ணுவுக்கும் சரயுவுக்குமுள்ள உறவு. தமிழ்நாட்டோட ஓரத்துல இருக்குற சரயுவும் அமெரிக்கா போகும் ஜிஷ்ணுவும் இனிமே பாத்துக்கிறது கூட சந்தேகம்தான்’ இப்படித்தானிருந்தது அவன் எண்ணம்.

காலம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்று சொல்வதைப் போல ஜிஷ்ணுவிடமிருந்து அழைப்பு வந்தது.

“டேய் வெங்கி எப்படி இருக்க. சரயு எப்படி இருக்கா?”

“நல்லாருக்கா” எதிரில் நின்ற சரயுவைப் பார்த்தபடியே சொன்னான்.

“இதை மட்டும் சொல்லுடா… அவ கூட பேசி ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. இந்த தடவையாவது அவளைப் பேசச் சொல்லுடா”

வெங்கடேஷுக்கு மனது உறுத்தியது.

“ஜிஷ்ணுதான். உன் கூட பேசணும்னு சொல்றான். பேசுறியா?”

காலை பார்வதி ஊருக்கு சென்றதால் பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்தாள் சரயு. மதியம் சென்றால் போதும். இருந்தாலும் வீட்டில் இருக்க மனமின்றி விரைவாகவே கிளம்பியிருந்தாள்.

“சரி”

“சரயுவ இப்பத்தான் ஸ்கூல் போற வழில பார்த்தேன். இங்கதான் நிக்குறா. சீக்கிரம் பேசிட்டு வச்சுடு” செல்லை சரயுவிடம் தந்தான்.

“விஷ்ணு எப்படி இருக்க?”

ஒரு வருடத்துக்குப் பின் அவளின் குரலைக் கேட்ட ஜிஷ்ணுவுக்கு சந்தோசம் பொங்கியது.

“சரவெடி… பாவாவ மறந்துட்ட பாரு”

“யாரு பாவம்”

“பாவான்னா மாமா. இந்த மாமாவ மறந்துட்ட பார்த்தியா?”

“இல்ல விஷ்ணு தினமும் உன்னை நெனச்சுப்பேன். உன் சைக்கிள்லதான் ஸ்கூல் போறேன்”

“அணுகுண்டு என்ன செய்றான்? அவனும் சைக்கிள்லதான் வர்றானா?”

சரயுவுக்கு ஜிஷ்ணுவுக்கு நடந்தது எதுவும் தெரியாதென்று புரிந்துவிட்டது.

“நல்லாருக்கான்” வருத்தத்தை அடக்கிக் கொண்டு சொன்னாள்.

“பொடிடப்பி வாத்தியார் என்ன சொல்றார்?”

“நான் இப்ப கேர்ள்ஸ் ஸ்கூல்ல படிக்கிறேன் விஷ்ணு” குரலில் சற்று மாற்றம் தெரிந்ததை உணர்ந்த ஜிஷ்ணுவுக்கு என்னவோ செய்தது.

“அப்படியா… நீ அணுகுண்டு ஸ்கூல்ல படிக்கலையா? எந்த ஸ்கூல்ல படிச்சாலும் நல்லா படிக்கணும். நிறைய மார்க் வாங்கி மெக்கானிகல் எஞ்சினியராகனும். சரியா”

“சரி. நீயும் நல்லா எக்ஸாம் எழுதி அமெரிக்கா போகணும்…”

“ஹா… ஹா… எங்க ஊர் பக்கம் குடும்பத்துல ஒருத்தர அமெரிக்கா அனுப்புறதா வெங்கடாசலபதிக்கு வேண்டுதல். அதனால கண்டிப்பா அனுப்பிடுவாங்க”

“சரயு உனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு பாரு” குறுக்கிட்டான் வெங்கி. அது ஜிஷ்ணுவின் காதிலும் விழுந்தது. அவனுக்கு அவளிடம் பேச எவ்வளவோ உருப்படியில்லாத விஷயங்கள் இருந்தன. இருந்தாலும் தன் பொருட்டு ஸ்கூலில் அவள் திட்டு வாங்கக் கூடாதென்ற எண்ணமும் இருந்தது.

“சரயு ஸ்கூல் போகனுமா? சீக்கிரம் கிளம்பு. வீட்ல அம்மா அப்பா எல்லாரையும் கேட்டதா சொல்லு. என்னோட நம்பர் சொல்றேன் எழுதிக்கோ. உனக்கு என்ன வேணும்னாலும் இந்த மாமாவக் கூப்பிடு”

“சரி விஷ்ணு உன் நம்பர் சொல்லு. மனசுல குறிச்சுக்கிறேன்”

ஜிஷ்ணு சொல்ல சொல்ல மனதிலேயே பதித்துக் கொண்டாள் சரயு.

வெங்கடேஷ் போனை அணைத்ததும் தலை குனிந்து கொண்டான்.

“அண்ணா எங்கம்மா செத்து போனத விஷ்ணுட்ட சொல்லலையா?”

இல்லை எனத் தலையாட்டினான்.

“நடந்தது எதையும் சொல்லாதிங்க. விஷ்ணுக்கு எங்கம்மாவை ரொம்பப் பிடிக்கும். தெரிஞ்சா ரொம்ப கவலைப்படுவான். அப்பறம் எக்ஸாம் சரியா எழுத முடியாது”

அவனை மேலும் கூனிக் குறுக வைத்துவிட்டு சரயு சைக்கிளில் ஏறி சென்றாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 18என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 18

அத்தியாயம் – 18 சுதாவை சமாதானப்படுத்தி விட்டு ஸ்ராவநியையும் சித்தாராவையும் பார்க்க சென்றான் அரவிந்த்.  இதற்குள் ஆதியின் அழுகை மறைந்திருக்க, “மாமா மாடிக்கா போறிங்க. நானும் விளையாட வரேன். ஆனா  அத்தை அடிக்காம நீங்கதான் பாத்துக்கணும்” என்று சொல்லியபடி ஓடிவந்தான்.  சுதா

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 27என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 27

அத்தியாயம் – 27 பன்னீருக்கு என்ன செய்வது என்று யோசிக்க சில வினாடிகள் தேவைப்பட்டது. கதிர் குடும்பத்தோடு திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்காக நின்றுக் கொண்டிருந்தார். சரியாக பேச முடியவில்லை.  குடும்ப விஷயத்தை தொழில் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. அன்பான மனைவி