சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 06

வேப்பம்பூவின் தேன்துளி – 6

 

தீபலட்சுமி ஒரு தனிப்பிறவி! பணத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பாள். யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணும் நீதிவாசனின் நேரெதிர் துருவம் அவனது தங்கை!

 

எவரிடம் பணம் இருக்கிறதோ அவர்களிடம் மட்டும் இழைவாள்! இணக்கம் காட்டுவாள்! நட்பு பாராட்டுவாள்! இதற்கும் நீதிவாசன் வேண்டிய மட்டும் சம்பாரிக்கின்றான். தங்கை மீது கொள்ளை பாசம் கொண்ட அவனுக்கு, அவளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எந்தவித சுணக்கமும் இல்லை. இருந்தும் அவளுக்கு அது போதாது! சொந்த அத்தை குடும்பத்தில் கூட அவள் வேறுபாடு காட்டுவாள்.

 

முத்துச்செல்வம் தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் என்பதால், வீட்டை நல்லபடியாகக் கட்டி, அதற்கான கடனை கட்டுவதற்கும், பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்குமே வருமானம் சரியாக இருந்தது. ஆதலால், கஷ்ட ஜீவனம் என்று சொல்லாவிட்டாலும் நடுத்தர வர்க்கம் என்ற வகையினுள் தான் அடங்குவர்!

 

கோபி படிக்கும் சமயம், அவனது பள்ளிப்படிப்பின் இறுதியில் நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்தான். இன்ஜினியரிங் கவுன்சிலிங் சென்றபோது அவர்கள் ஊரில் இருக்கும் நல்ல கல்லூரியிலேயே இடம் கிடைத்தது. அவர்கள் சக்திக்குத் தக்க இருக்கவே, அதிலேயே அவனைச் சேர்த்து விட்டனர்.

 

ரஞ்சிதா ஆஹா ஓஹோ என்று படிக்கும் பெண் எல்லாம் இல்லை. அறுபது, எழுபது என்று சராசரியாக மதிப்பெண்கள் எடுப்பாள். அவள் பள்ளியின் மேல்படிப்பிற்கே அக்கவுண்ட்ஸ் குரூப் தான் எடுத்திருந்தாள். ஆக இன்ஜினியரிங் பற்றி யோசிக்கக் கூட முடியாமல், நேரடியாக பி.காம் சேர்ந்திருந்தாள்.

 

கடைக்குட்டி பூரணியின் தருணம் வந்தபோது அவளுக்குக் கோபி போலப் படிப்பு நன்றாக வந்தது தான்! மேத்ஸ் பயாலஜி எடுத்துத் தான் படித்தும் இருந்தாள். நல்ல கட் ஆப் மதிப்பெண்கள் இருந்தும், இன்ஜினியரிங் வேண்டாம், அக்கா படித்த காலேஜிலேயே பி.எஸ்.சி. சேர்ந்து கொள்கிறேன் என்று கறாராகச் சொல்லிவிட்டாள். யார் வற்புறுத்தியும் எந்த பலன் இல்லை.

 

தங்கை மறுப்பதற்கான முழு காரணமும் ரஞ்சிதாவிற்கு நன்றாகவே தெரியும். தனக்கு எதற்காகவும் தாழ்வுமனப்பான்மை வந்துவிடக்கூடாது. மற்ற இருவரையும் பார்த்து, நான் நன்றாக படிக்காமல் போனேனே என்று எப்பொழுதும் ஏங்கி விடக்கூடாது என்பதற்காகத் தங்கை இதைச் செய்கிறாள் என்று அவள் புரிந்து கொண்டாள்.

 

ஆனால், இதை அவளிடம் நேரடியாகக் கேட்டால் இல்லவே இல்லை என்று சாதிப்பாள். இருந்தும் தங்கையிடம் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் அப்படியெல்லாம் எப்பொழுதும் நினைக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லியும் பார்த்தாள் தான். ஆனால், பலன் பூஜ்ஜியம்.

 

“சும்மா உளராத ரஞ்சிக்கா. நீ மட்டுமே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்ன்னு ஜாலியா ஆர்ட்ஸ் காலேஜ்ல படிப்ப. நான் போயி இன்ஜினியரிங் படிக்கணுமா? அதுவும் நாலு வருஷத்துக்கு… கண்டிப்பா மாட்டேன்” என்று நீட்டி முழக்கிச் சலிப்பாக அவள் சொன்ன பாவனையில், யாருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள் அவள் தமக்கைக்காக தன் வாய்ப்பை மறுக்கிறாள் என்று!

 

இப்படி சிரமங்களையும் அன்பாலேயே கடந்து பழகிக் கொண்டவர்களுக்கு வசதி வாய்ப்பின்மை ஒரு பெரிய குறையாகவே தெரிந்ததில்லை.

 

அவர்கள் உறவு வட்டத்திலும் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தினர் என்பதால், இவர்களுக்குப் பெரிதாக எந்த வித்தியாசங்களும் தெரிந்ததில்லை.

 

ஆனால், தீபலட்சுமி வெகுவாக வேறுபாடு காட்டுவாள்! இவர்களிடம் மட்டுமல்ல. பொதுவாக பலரிடமும்! அவர்கள் வீட்டில் சற்று வசதி வாய்ப்பில் முன்னோக்கி நிற்கவும் இதுபோல வெளிப்படையாகவே செய்வாள்!

 

இந்நிலை போகப்போக மாறியது. கோபியின் மூலம் முத்துச்செல்வம் குடும்பத்தின் வசதி வாய்ப்பு சற்று அதிகரிக்கத் தொடங்கியது. ஆம்! அவனுக்குப் படிப்பை முடித்தவுடன் கேம்பஸில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் கை நிறையச் சம்பளத்துடன் வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்ததும், தங்கைகளின் திருமணத்திற்கு அத்தனை பொறுப்பாய் சேர்க்கத் தொடங்கிவிட்டான்.

 

இளையவர்கள் இருவருக்கும் திருமணத்திற்குத் தேவையான நகைகளை எடுக்கத் தொடங்க, அடுத்த வந்த குடும்ப விசேஷங்களில் எல்லாம், முத்துச்செல்வம் வீட்டுப் பெண்கள், புது நகைகள் அணிந்து தனி பொலிவோடு வலம் வந்தது தீபாவின் கண்களை எட்டியது. அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான காரணத்தைக் கண்டறியப் பெரிய ஆராய்ச்சி தேவையில்லையே!

 

கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்தவைகள் இதெல்லாம்! அப்பொழுது நீதிவாசன் முட்டி மோதி தங்கள் தொழிலை மேம்படுத்திக் கொண்டிருந்த சமயம். கோபியின் நிதிநிலைமை தீபலட்சுமிக்கு பூரண திருப்தியாய் இருந்தது.

 

கோபி சென்னைக்கு வேலைக்குச் சென்றதிலிருந்து, பொதுவாக இங்கு நடக்கும் விசேஷங்களில் தலையைக் காட்டுவது இல்லை.

 

அது நன்றாகத் தெரிந்திருந்தும் அவனுக்கு அழைப்பு விடுத்து, “இந்த விசேஷத்துக்கு நீ ஏன் வரலை? நீ வருவேன்னு நினைச்சேன்” என்றாள் தீபலட்சுமி.

 

முறைப்பெண் தானே! சிறு வயதிலிருந்தே பரிச்சயம் என்பதால் ஓரளவு சகஜ பேச்சுக்கள் இருக்கும். ஆனால், அது நேரில் பார்க்கும்போதே அன்றி, கைப்பேசி அழைப்பு என்றளவில் இதுவரை சென்றதில்லை.

 

ஆக தீபாவின் அழைப்பில் கோபிக்கு ஆச்சரியம் தான்! “நானா? நான் எதுக்கு? வீட்டுல எல்லாரும் வந்து இருப்பாங்களே? சும்மா சும்மா சென்னையில இருந்து வர முடியுமா? பயங்கர அலைச்சல்” என்றான் அவன்.

 

கோபியின் நீண்ட விளக்கத்திற்கு, “ஓஹ்…” என்றாள் சுரத்தே இல்லாமல்.

 

“என்ன திடீர்ன்னு கேட்கிற?”

 

“வழக்கமா சைட் அடிக்கிற பையன் மிஸ் ஆன தேட மாட்டாங்களா?” என்றாள் அவள்.

 

“பாருடா? யாருகிட்ட சுத்தற? உங்க ரேஞ்சுக்கு எங்களை எல்லாம் சைட் அடிப்பியாக்கும்” என்றான் விளையாட்டு குரலில்!

 

“ஹ்ம்ம்… பார்க்கிறவங்களுக்கு அப்படி தான் தெரியும். அம்மா இல்லாம ஹாஸ்டல்ல வளர்ந்த பொண்ணு இல்லையா? அதுனால யாருக்கிட்ட எப்படி பேசணும்ன்னு தெரியாம ஒதுங்கி தான் நிற்பேன்! அதோடு எல்லாரும் குடும்பமா இருக்கும் போது நான் மட்டும் தனியா இருக்கிற மாதிரி தோணும். அதுக்காவும் தள்ளி நிற்பேன். அது மத்தவங்க பார்வைக்குத் தப்பா தான் தெரியும்” என்றாள் உண்மையாகவே வருந்தும் பாவனையில்!

 

ஆனால், பரிமளம் இறந்தது தீபலட்சுமி பதினொன்றாம் வகுப்பின் இறுதியில் இருந்த சமயம். நன்கு வளர்ந்த பெண் தான் என்றாலும், அவளது பள்ளிப்படிப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பிற்கு மட்டும் விடுதியில் விட்டார்கள். கல்லூரிக்கும் விடுதியே சரியெனப் பட, டிகிரியையும் விடுதியில் இருந்து படிக்கத் தொடங்கினாள். அது அவளுடைய இரண்டாம் வருட படிப்பு! பொதுவாக பெரும்பாலான பெண்கள் கல்லூரி படிக்கும் சமயம் விடுதியில் தங்குவது தானே!

 

வெறும் கடந்த  மூன்று ஆண்டுகள்… அதுவும் விவரம் தெரிந்தபிறகு… விடுதியில் தங்கிவிட்டு, என்னவோ சிறுவயதிலிருந்தே தாயை இழந்து ஆதரவில்லாமல் விடுதியிலேயே வளர்ந்தவள் போலக் கோபியிடம் பேசினாள்.

 

ஆனால், அதை யோசிக்கும் மனநிலையில் எல்லாம் கோபி இல்லை! அன்னை இல்லை என்பது எந்த வயதிலுமே ஏற்கக்கூடியது அல்லவே! பாவம் இவள்! என்று தான் தோன்றியது.

 

அவள் சொல்லியதை அப்படியே நம்பியவன், “நம்ம வீட்டாளுங்க உன்னைத் தப்பா நினைப்பாங்களா?” என்று சமாதான குரலில் பேச்சை வளர்த்தான்.

 

அப்படித் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் தான் எந்த புள்ளியில் காதலாக முடிந்தது என்று தெரியவில்லை.

 

பேசத்தொடங்கிய இருபது நாட்களிலேயே “உன்னைப் பார்க்காம இருக்க முடியலைடா” என்று உரிமையாகச் செல்லம் கொஞ்சினாள்.

 

அவளது அதிகப்படியான ஆர்வம், ஈடுபாடு எல்லாம்… கோபியை மொத்தமாகக் கரைத்திருந்தது. அதற்கெல்லாம் மூல விதை, ‘அம்மா இல்லாத பிள்ளை!’ என்னும் அனுதாபத்தை அவன் மனதில் வாட விடாமல் செய்தது தான்!

 

கோபாலகிருஷ்ணன், தீபலட்சுமியின் காதல் பயணம் அழகாகத் தொடங்கிப் பயணிக்கத் தொடங்கியது! கடந்த மூன்றாண்டுகளில் அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. ஆனால், அது எந்த புள்ளியில் சறுக்கியது என்றுதான் இப்பொழுது கோபிக்குத் தெரியவில்லை.

 

அன்னை சொன்ன கல்யாண விஷயத்தில் மிகவும் குழப்பமாக இருந்தான். தீபலட்சுமியிடம் பேசலாம் என்றால், “கூப்பிடறேன்…” என்ற ஒற்றை வார்த்தையில் துண்டித்தவள், மீண்டும் அழைக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ இல்லை. கோபியின் உறக்கம் தொலைந்தது தான் மிச்சம்!

 

கோபி அறியாத விஷயம்… தீபலட்சுமியுடைய காதல், தொடங்கிய முதல் ஒன்பது மாதங்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் வளர்ந்தது தான்! ஆனால், அதன்பிறகு அவளுக்கு வந்த சறுக்கல் அன்பரசன்.

 

அவள் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் சமயம், ஒருமுறை தங்கள் கடைக்கு உடை வாங்கச் சென்றிருந்த சமயம், கடைக்கு மெட்டீரியல்ஸ் சப்ளை செய்யும் நிறுவனத்தினரின் பங்குதாரரான அன்பரசனை பார்த்திருந்தாள்.

 

எப்பொழுதும் ஆடைகளை எடுத்துவிட்டு, நான் முதலாளி என்னும் ஹோதாவை எல்லா தளங்களுக்கும் விசிட் அடித்துக் காட்டுவாள். அண்ணன் இருக்கும் அலுவலக அறைக்குச் சென்று வெட்டியாகப் பொழுதைக் கழிப்பாள். அன்றும் அன்பரசன் அண்ணனோடு பேசிக்கொண்டிருப்பது தெரியாமல், அறையின் கதவை பெயருக்கு மெலிதாக இரண்டு தட்டு தட்டி உள்ளே நுழைந்திருந்தாள்.

 

நீதிவாசனும் அலுவலக அறைக்கே வந்துவிட்ட தங்கைக்கு, அன்பரசனை பார்மலாக அறிமுகமும் செய்து வைத்திருந்தான்.

 

அன்பரசனின் பணச்செழுமை அவனைப் பார்த்ததுமே தெரிந்தது. அவன்மீது ஈர்ப்பு தோன்றியபோதும், அதோடு அவனை மறந்திருந்தாள். எட்டாக்கனி என்ற நினைவில்!

 

அதன்பிறகு, அதிர்ஷ்டம் அவள் புறமோ என்னவோ? எதேச்சையாக அன்பரசனை மீண்டும் ஒருமுறை பொது இடத்தில் பார்க்க, மனதிற்குள் உதித்த திட்டத்துடன் அவனருகே நெருங்கியவள், அவனைக் கவனிக்காமல் வேறு எதையோ செய்வதைப் போலப் பாவனை காட்டினாள்.

 

தீபாவை அடையாளம் கண்டுகொண்டு பொதுவாகப் பேசிய அன்புவிடம், இயல்பாகப் பேச முடியாதவள் போலத் திணறி, தவித்து… முகம் செம்மையுற விலகி வந்திருந்தாள்.

 

விலகல் ஈர்க்கும் என்று அவள் அறிந்த கோட்பாடு நன்றாகவே வேலை செய்தது. அன்பரசன் எப்படியோ தீபாவின் கைப்பேசி எண்ணைக் கண்டறிந்து, அழைப்பு விடுத்து, “நான் என்ன புலியா? சிங்கமா? என்னைப்பார்த்து அப்படி ஓடற?” என்று சீண்டலாகக் கேட்க,

 

அவன் அழைப்பான் என்று எதிர்பார்த்திருந்தவள் தான்! ஆனாலும் வேண்டுமென்றே, “அச்சோ! நீங்களா?” என்று பதறிய குரலில் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

 

அன்பரசனின் ஆர்வத்தை வெகுவாக கிளறிவிட்டு, தயங்கித் தயங்கி பேசுபவள் போலப் பேசத் தொடங்கி… இதோ அவனிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலை வளர்த்து வருகிறாள்!

 

அன்பரசனின் வசதி வாய்ப்பு அவளை ஈர்த்தது! அவனும் இவள் வழிக்கு வந்திருந்தான்! அவன் மட்டும் போதும் என்றெண்ணி, கோபியிடமாவது அப்பொழுதே விலகியிருக்கலாம். அதை செய்யவும் அவள் தயாராக இல்லை!

 

கோபி சென்னையில் தானே இருக்கிறான் சமாளித்துக் கொள்ளலாம் என்னும் எண்ணம் அவளுக்கு!

 

ஒருவேளை அன்பரசன் திருமணம் என்னும்போது ஜகா வாங்கி விட்டால், கோபி தேவை என்று நினைத்தாளோ என்னவோ?

 

இரு ஆண்களிடமும் பொய்யான முகமூடியுடன் இவள் காதலை வளர்த்தது அந்த இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை பாவம்! இப்பொழுது ஒருவனுடன் திருமணம் ஏற்பாடாகியிருக்க, இன்னொருவன் காரணம் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.

 

உறக்கம் என்பதே மறந்தவன் போலக் கோபி படுத்திருக்க, பதினொன்றை மணியளவில் தீபலட்சுமி அழைத்திருந்தாள்.

 

“என்ன இவ்வளவு நேரம்?”

 

“ம்ப்ச்… நேரம் இருக்கும்போது பண்ண மாட்டேனா? இந்தளவு கூட உன்னால புரிஞ்சுக்கிட்டு விட்டுத் தர முடியாதா?” என்று எடுத்தவுடனேயே சண்டையை வளர்த்தாள்.

 

சமீபமாக இப்படித்தான் செய்கிறாள்! ‘நீ இது கூட புரிஞ்சுக்க மாட்டியா?’ என்பதும், ‘நீ என்னை நல்லா பார்த்துப்பேன்னு நம்புனேன்’ என்று அழுவதும், ‘என்னை ரொம்பவுமே ஏங்க வைக்கிற’ எனக் குற்றம் சாட்டுவதும், ‘நான் உனக்கு முக்கியமில்லையா?’ என்று புலம்புவதும் வெகுவாக வாடிக்கையாகி இருந்தது.

 

‘அப்படி என்ன நான் செய்து விட்டேன்!’ எனப் புலம்பும் நிலை தான் கோபிக்கு. சமாதானம் செய்வதும், தேற்றுவதும், கொஞ்சி குலாவுவதும், மன்னிப்பு கேட்பதும் மட்டுமே அவனுக்கு சமீபத்திய வாடிக்கை!

 

‘இன்றும் சண்டையா?’ என்னும் சலிப்பு வந்தது. முயன்று அவள் பேசியதை ஒதுக்கி, “நீதி மாமா போன் பண்ணி இருந்தாங்க…” என்றான் விசாரிக்கும் தொனியில்.

 

“அது… அது…” என்று திணறியவளிடம், “உனக்கு வரன் வந்திருக்காமே?” என்று கேட்டான்.

 

“அது… நானே சொல்லலாம்ன்னு நினைச்சேன்”

 

“ஆனா, நீ தான் சொல்லலையே!” என்று அவளது பேச்சைக் கோபமாக இடை வெட்டினான்.

 

“அண்ணன் இப்படி திடீர்ன்னு ஏற்பாடு செய்வாருன்னு எனக்கென்ன தெரியும்? அம்மா இருந்திருந்தா உன் விருப்பம் என்னன்னு என்கிட்ட கேட்டிருப்பாங்க? என்னதான் இருந்தாலும் அம்மா இல்லாத பொண்ணு தானே” என்று நீலிக்கண்ணீர் வடித்தாள்.

 

பாவம்! பார்த்துப் பார்த்து செய்யும் நீதிவாசன், இவள் பேசியதை அறிந்திருந்தால், மனம் விட்டிருப்பான். அவன்மீது போய் இப்படியொரு பழி சொல்கிறாள்.

 

ஆனால், பட்டறிவு கோபியை ஏமாற விடாமல் சுதாரிக்க வைத்தது. “சரி நீதி மாமா உன்கிட்ட கேட்கலை. இப்ப நீ சொல்லிட வேண்டியது தான? எனக்கு விருப்பம் இல்லைன்னு…”

 

அழுத்தம், திருத்தமாகக் கோபி கேட்க, “அது… அண்ணனுக்கு ரொம்ப தெரிஞ்சவங்க போல! தொழில் முறையில… இப்ப போயி நான் வேணாம்ன்னு சொன்னா அண்ணன் மரியாதை என்னாகும்? பாவம் குடும்பத்துக்காக எத்தனை உழைச்சவரு!” ஏற்கனவே இதுபோன்ற கேள்விகளுக்கு தயாராகியிருந்ததால் அவனிடம் தெள்ளத்தெளிவாகப் பதில் சொன்னாள்.

 

“அதுக்கு நாம என்ன செய்ய முடியும்?” பொறுமையற்ற குரலில் கோபி கேட்டான்.

 

“விடு கோபி பொண்ணு பார்க்கத் தானே வராங்க”

 

“ஓ… நீ அப்படி வர… இனி பொண்ணு பார்த்துட்டு போனதும், என்னால நிறுத்தவே முடியலைன்னு கைய விரிப்ப. அப்படித்தான…” என்றான் அவன் நக்கலாக!

 

“என் மேல உனக்கு நம்பிக்கையே இல்லை” என்று மீண்டும் அழுதாள்.

 

என்னவோ அவளது அழுகைக்குரல் அவனுக்கு வெறுப்பாக இருந்தது. “நீ உங்க அண்ணன் கிட்ட பேசிட்டு சொல்லு. சும்மா என்கிட்ட கதை விடாத… நீ என்னவோ, நம்ம கல்யாணத்துக்கு தீவிரம் காட்டற மாதிரி எனக்குத் தெரியலை” என்று கோபி பொரிந்தான்.

உப்பைத் தின்றவள் தண்ணீர் குடிக்கலாம்! ஆனால், இங்கு அவன் வாயிலும் சேர்த்தல்லவா உப்பைக் கொட்டியிருக்கிறாள். அவன் வாயில் இப்பொழுது தண்ணீரை எப்படி ஊற்றுவது என்று புரியாமல் திண்டாடினாள்.

 

கோபியிடம் பேசிக்கொண்டிருந்த போதே தீபாவிற்கு அன்பரசன் சரியாக அழைப்பு விடுக்க, செகண்ட் கால் காட்டியது. இத்தனை நேரம் அவனிடம் பேசிவிட்டு இப்போது தானே வைத்தோம் என்று பதற்றமானாள்.

 

கோபியையும் வேறு சமயத்திற்கு சமாளிக்க முடியாமல் போகவே சற்றே டென்க்ஷன் ஆனாள். டென்ஷனில் முகமூடியை இழுத்துப் பிடிப்பது சிரமமாயிற்றே!

 

“என்னால அண்ணா கிட்ட எல்லாம் பேச முடியாது…” என்றாள் அழுகை சுத்தமாக நின்ற கறார் குரலில்.

 

“சரி மாமா கிட்ட நான் பேசறேன்” என்று கோபி சொன்னதும் இன்னும் பதற்றம் ஆனாள்.

 

“லூசு மாதிரி எதுவும் செய்யாத” என்று பற்களை நறநறவென்று கடித்தாள்.

 

குரலின் பேதம் புரியச் சரி அண்ணன் என்றதும் மரியாதை, பயம் போல என்று நினைத்தவன், “சரி மாமாகிட்ட நம்ம விஷயத்தை நிதானமா பேசுவோம். நீ அந்த மாப்பிள்ளை நம்பர் எப்படியாவது உன் அண்ணன் போன் ல இருந்து எடுத்து தா. நான் அவரை விலகிக்க சொல்லறேன்” என்றான்.

 

“பைத்தியமாடா நீ…” நள்ளிரவு என்பதையும் மறந்து சற்றே குரல் உயர்த்தினாள்.

“என்ன தீபு இப்ப எதுக்கு கோபப்படற? எத்தனை நாளா சொல்லிட்டு இருக்கேன். எங்க அம்மா கிட்ட சொல்லறேன். அவங்க நீதி மாமா கிட்ட பேசிப்பாங்க. கல்யாணம் செஞ்சுப்போம். இல்லை வீட்டுல முன்கூட்டியே சொல்லியாச்சும் வைப்போம்ன்னு… நீ என் பேச்சைக் காது கொடுத்து கேட்காம இப்ப நம்ம நிலைமை எங்க வந்து நிக்குது பாரு… முதல்ல வீட்டுல சொல்லுவோம். இப்பவே சொல்லிட்டா நல்லது. யாருக்கும் எந்த சங்கடமும் இல்லை. அப்படி உனக்கு வீட்டுல சொல்லத் தயக்கம் இருந்தா, அந்த மாப்பிள்ளை கிட்ட ஆச்சும் சொல்லி பொண்ணு பார்க்க வராம தடுக்கலாம்” என்றான் முயன்று வருவித்த பொறுமையான குரலில்.

 

ஆத்திரத்தை அடக்க முடியாமல், “உன்னை கட்டிக்க இங்க யாரும் தவம் கிடக்கலை. ஆளும், அவனும்… உன்னை கட்டிக்க எனக்கு விருப்பமேயில்லை. இன்னொருமுறை எனக்குக் கூப்பிடாத… எனக்கு உன்கிட்ட பேசக் கூட பிடிக்கலை… ச்சீ…” என்று பொரிந்தவள், அழைப்பை துண்டிக்க… உண்மையில் பேசியது அவள் தானா? என்று பித்துப் பிடிப்பது போல உணர்ந்தான் கோபி.

 

சொன்னவள், இவனது கைப்பேசி எண்ணை வேறு பிளாக் செய்ய, அதன்பிறகு இவனால் அழைப்பு விடுக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ கூட முடியவில்லை.

 

அவனுக்கு சுத்தமாக எதுவும் விளங்கவில்லை. இப்பொழுது என்ன சொன்னோம்? எதற்கு இப்படி பேசி விட்டாள்? என்று குழம்பினான். ஒருவேளை, நாம் சந்தேகம் கொள்கிறோம் என்று நினைத்து விட்டாளோ என்று சங்கடப்பட்டான்.

 

இப்பொழுதும் அவனால் அவள் தன்னை ஏமாற்றுகிறாள் என்று நினைக்க முடியவில்லை. எதுவோ அவளுக்குப் பிரச்சனை, சமாளிக்க முடியாமல் திணறும்போது… நாம் வேறு அதிகமாக கோபப்படுத்தி விட்டோம் என்று தான் நினைத்தானே தவிர, ஏமாற்று வேலை என்று அவனால் யோசிக்கக் கூட முடியவில்லை.

 

நேரில் சென்று பார்த்தால் அவளால் இத்தனை வீம்பாக இருக்க முடியாது. உடனே சென்று பார்த்தாக வேண்டும் என்று எண்ணிய பிறகே அவனால் நிம்மதியாக உறங்க முடிந்தது. நேரில் சென்று அவமானப்படப் போவது தெரியாமல்!

 

அங்கோ… அன்பரசனுக்குத் தீபா வெகுவாக விளக்கம் தந்து கொண்டிருந்தாள். “உங்ககிட்ட பேசிட்டு இருக்கும்போதே என் குளோஸ் பிரண்ட் ‘கால் மீ’ன்னு மெசேஜ் அனுப்பியிருந்தா… நீங்க போன் வெச்சதும் தான் கவனிச்சு கூப்பிட்டேன். அதுக்கே என்னை வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு இருக்கா… அப்பப் பார்த்து நீங்க மறுபடி கூப்பிடணுமா?” என்று செல்லமாகச் சிணுங்கினாள்.

 

“பேசணும்ன்னு தோணிச்சு கூப்பிட்டேன்”

 

“பின்ன இத்தனை நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்களாமா?”

 

“என்னவோ எல்லாம் சுபமா நடக்கவும் ரொம்ப சந்தோஷம். அதான் இன்னைக்கு ஓவர் டைம் பேசலாம்ன்னு ஆசை வந்துடுச்சு. நான் இனி முழு உரிமைப்பட்டவன். நான் நினைக்கும்போதெல்லாம் பேசுவேன்”

 

“இப்படிப் பேசிப்பேசியே என்னை கவுத்து வெச்சிருக்கீங்க. அவ என்னைப் பத்தி என்ன நினைப்பா?”

 

சத்தமிட்டுச் சிரித்தான் அன்பரசன். “பேசியா கவுத்தேன்? யாரோ என்னைப் பார்த்ததுமே தலைகுப்புற விழுந்தாங்களே அது யாரு?”

 

“அச்சோ மானத்தை வங்காதீங்க”

 

“சரி சரி உன் பிரெண்ட் கிட்ட என்ன சொல்லி சமாளிச்ச?”

 

“இல்லைடி போன் கவனிக்கலைன்னு சொன்னேன். நீங்க செகண்ட கால் வரவும்… சாரிடி நேரம் ஆயிடுச்சு நாளைக்கு பேசுவோம்ன்னு சொல்லி வெச்சுட்டேன். கண்டிப்பா நம்பி இருக்க மாட்டா…” என்றாள் குழைந்த குரலில்.

 

“உன் பிரண்ட்ஸ் கிட்டச் சொல்ல வேண்டியது தானே?” என்றான் அவளைக் கேலி செய்து சிரித்தபடி.

“அதுவா… கல்யாண பத்திரிகை தந்து சொன்னா தான், உங்களோட பொசிஷனுக்கு மரியாதை. சும்மா காதல் அது இதுன்னு சொன்னா, நான் தீந்தேன் பா” என்றாள் பயந்தவள் போல!

ரசித்த சிரித்த அன்பரசனிடம் இவள் முகமூடி இப்போதைக்குக் கிழிவது போலத் தெரியவில்லை. கிழிவதற்கு அனுமதிக்கும் எண்ணமும் அவளுக்கில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 08சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 08

வேப்பம்பூவின் தேன்துளி – 8 அன்னபூரணி கல்லூரிக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். இது அவளுக்கு இரண்டாம் வருடம். சலனம் கொண்ட மனது மேலும் சலனம் கொண்டிருந்தது, நீதிவாசனின் பார்வை வித்தியாசத்தை மெலிதாக இனம் கண்டு கொண்டதால்!   தீபலட்சுமியின் திருமணம் முடிந்து

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 10சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 10

வேப்பம்பூவின் தேன்துளி – 10   கண்ணில் இருந்து நேர் கோடாய் விழிநீர் கசிய, தான் அழுகிறோம் என்பது கூட புத்தியில் உரைக்காமல் திகைத்த பார்வையுடனும், சோர்ந்து, வாடிய தோற்றத்துடனும் அமர்ந்திருந்தாள் அன்னபூரணி. இளையவளையே ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதாவிற்கு பாவமாய்

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 17’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 17’

வேப்பம்பூவின் தேன்துளி – 17   திருமண இரவுகள் தான் எத்தனை கோலாகலம்! அந்த மிகப்பெரிய மண்டபம் முழுவதும் மின்விளக்குகளால் பிரகாசிக்க, அது கோபாலகிருஷ்ணன், லாவண்யாவின் திருமண வைபவம். திருமண ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பணத்தின் செழுமை தெரிந்தது.   லாவண்யா