சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 05

வேப்பம்பூவின் தேன்துளி – 5 

 

மரத்தின் கிளைகளை வெட்டி சாய்த்த பின்னும் கிளைகள் துளிர் விடும் தானே! ஆனால், மீண்டும் மீண்டும் துளிரத் தொடங்கும் சமயமெல்லாம் வெட்டிக்கொண்டே இருந்தால்?

 

அன்னபூரணியும் நீதிவாசனின் நினைவில் சுருங்கி, பிறகு வெகுவாக முயன்று அதை ஒதுக்கி வைத்து கொஞ்சம் புத்துணர்வோடு இருக்கும் சமயம்… அடுத்த பிரச்சனையாக, ‘இது உன் குடும்பம் இல்லையா?’ என்று யாரோ ஒருவர் கேட்டுவிட்டுச் செல்கிறார்.

 

ECG அறிக்கை ஏற்ற இறக்கங்களுடன் இருக்குமே! அதுபோன்று இவள் இறக்கத்தில் இருந்து மேலெழும் நேரம் மீண்டும் ஒரு மன சறுக்கல்!

 

அந்த வாசுகி அம்மா, அத்தனை வயதான பெண்மணி. பூரணி மற்ற நால்வருடன் எத்தனை இணக்கம் என்பதைக் கூடவா கவனிக்க மறந்திருப்பார்? இவர்கள் வீட்டுப் பெண் என்பதால் தானே இந்தளவு இணக்கமும், உரிமையும் இருக்கிறது என்பது கூடவா புரியாது! பெரியம்மா, பிள்ளைகளுக்கான உடை வாங்குவதில் தொடங்கி, தேவைகளை கவனித்தது வரை, எதிலும் ஒரு சிறு குறையும் வைக்கவில்லை, வேறுபாடும் காட்டவில்லை! இரு பெண் பிள்ளைகளையும் ஒன்றுபோல தானே பாவித்தார்.

 

பூரணி பெரியம்மா என்றழைத்தது ஒரு பிழையா? அதற்கு அப்படித்தான் கேட்க வேண்டுமா?

 

மற்றவர்களை புகழ்ந்து பேசியே தீர வேண்டும் என்று தான் என்ன கட்டாயம்? முகஸ்துதியில் அனைவரும் தலை குப்புற விழுந்து விட மாட்டார்கள்! பலருக்கும் அது எரிச்சலை தான் வாரி வழங்கும் என்று அந்த பெண்மணிக்குப் புரிய வைப்பது தான் யார்?

 

கோபியைப் புகழ்கிறேன் பேர்வழி என்று, பூரணியின் மனம் நோகப் பேசியதில் அவள் மீண்டும் சோர்ந்து போனாள்.

 

இதையும் விடவும் அதிக பேச்சுகளைக் கேட்டு வளர்ந்தாள் தான். “எங்கேயாவது ஆசிரமத்திலோ, விடுதியிலோ சேர்த்து விட்டுடுங்க. நீங்களே வளர்த்தணும்ன்னு என்ன? பொம்பளை பிள்ளை வேற…” என்று அவள் காது படவே பேசிப் போனார்கள் தான்! கேட்டுக் கேட்டு பழகிப் போன ஏளனங்களும், இழி சொற்களும் அதிகம் தான்!

 

அதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது ஒன்றுமே இல்லை! யாரோ முன்பின் தெரியாத ஒருவர், சற்று அதிகமாகவே மூக்கை நுழைத்துப் பேசி விட்டார். அவ்வளவே தான்! ஆனால், ஏற்கனவே பெரிய சோர்விலிருந்து மீண்டவளுக்கு இது அதிகம் வலித்தது.

 

ஆனாலும் தன் துயர் தெரிந்தால் தன் குடும்பத்தினரும் வருந்துவார்கள் என்று புரிய, மீண்டும் ‘நான் இயல்பாகத் தான் இருக்கிறேன்’ என்பது போலக் காட்டிக் கொண்டாள்.

 

ஆனால், அவளது தற்போதைய முயற்சி முழு தோல்வி தான்! அவளை அனைவரும் கண்டு கொண்டனர். இன்னும் சொல்லப் போனால், அவள் அப்படி தனியாக எதுவும் உணர்ந்து விடக் கூடாது என்று நால்வரும் போட்டிப் போட்டுக் கொண்டு அவளிடம் சற்று அதிக அக்கறை காட்டினார்கள்.

 

உறங்கும்போது ஜோதிமணி மெல்ல இளையவளிடம், “யாரும் பேசறதை பெருசா எடுத்துக்க கூடாது புள்ளை… நானும் உனக்கு அதைச் சொல்லிக் கொடுத்துத் தானே வளர்த்திருக்கேன்” என்று தலையை வருடியபடி கேட்டார்.

 

“இல்லை பெரியம்மா. நான் எதுவும் சங்கடப் படலை” என்று சொல்லும் போதே கண்டதையும் யோசித்து அவள் குரல் கமறியது.

 

“ஸ்ஸ்ஸ்… பூரணி என்ன இது? இதுக்கு போயி சின்ன புள்ளையாட்டம்?” என்று பதறியபடி கண்களைத் துடைத்து விட்டாலும், வளர்த்தவளுக்கும் மகளின் அழுகை கலக்கம் தந்தது.

 

ரஞ்சிதாவும் பதறியபடி அவளருகே வேகமாக வந்து, “அவங்க ஏதோ தெரியாமப் பேசி இருப்பாங்க பூரணி” என்று ஆறுதலாக அவளது தலையையும், முதுகையும் வருடி விட்டாள்.

 

“இல்லை பெரியம்மா… எனக்கு எப்பவும் இதுதான் குடும்பம்… ‘உங்க தம்பி பொண்ணா? கொழுந்தன் பொண்ணா? ஒன்னுவிட்ட தங்கச்சியா?’ இப்படியே கேட்டுக் கேட்டு என்னை எதுக்கு விலக்கி வெக்கறாங்க. நாளைப்பின்ன பிறந்த வீடுன்னு உரிமையா என்னால இருக்க முடியாதா? இனி அண்ணனுக்குச் சம்சாரம் எல்லாம் வந்துட்டா… ஒருவேளை… அவங்களும் இப்படி, ’ஒன்னுவிட்ட தங்கச்சி தான விடுங்க பார்த்துக்கலாம்’ன்னு சொல்லிட்டா… அப்ப எல்லாரும் சொல்லற மாதிரி நான் அனாதை தானா பெரியம்மா” என்று மனதின் அழுத்தத்தை எல்லாம் சொல்லிக் கதறிவிட, அடுத்த அறையிலிருந்த முத்துச்செல்வமும், கோபியும் கூட அன்னபூரணியின் அழுகையில் வந்து விட்டனர்.

 

பொதுவாகப் பூரணி இப்படி கஷ்டத்தை, மன சஞ்சலத்தை எல்லாம் சொல்லி எல்லாம் அழும் பிள்ளை இல்லை! அழகாக தன்னைத்தானே தேற்றிக் கொள்வாள். ஆனால், பல மாதங்களாய் மனதைக் கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என்று அதீத மன அழுத்தம் அடைந்து விட்டதாலோ என்னவோ… ஒரு சிறு சொல் கூட தாங்க முடியாதவளாய் இப்படி மனதில் அச்சம் கொள்வதையெல்லாம் கொட்டி தீர்த்து விட்டாள்.

 

அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ரஞ்சிதா தங்கையின் செய்கையில் மேலும் குழம்பினாள்! இவள் எப்போதிருந்து இத்தனை பலவீனம் ஆனாள்? என்பதாக!

 

“கண்ட பேச்சையும் பேசக்கூடாது. யாரு சொல்லிக் கொடுத்தா இதெல்லாம்? அனாதை அது இதுன்னு பேசிட்டு. நான் உன்னை அப்படி தான் பார்க்கிறேனா? நம்ம வீடு, நம்ம குடும்பங்கற நினைப்பு உனக்கு எப்பவும் மாறக் கூடாது. அதை மறந்து கண்டதையும் பேசினா எங்களோட வளர்ப்புக்கே அர்த்தம் இல்லை” கண்டிப்பும், அதட்டலுமாக ஜோதிமணி, தனது அன்னை கடமையை செவ்வனே செய்ய, சிறியவளும், “இல்லை இல்லை அப்படிப் பேச மாட்டேன் பெரியம்மா. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது அதான்…” எனத் தேம்பலுடன் உடனேயே சரண் அடைந்தாள்.

 

அவளைத் அப்போதைக்குத் தேற்றி விட்டாலும் மீண்டும் அந்த நினைவை நினைத்து ஏங்காமல், கலங்காமல் இருக்கச் செய்ய மேலும் இரண்டு தினங்கள் ஆயிற்று!

 

இன்னும் இரண்டு நாட்களில் ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்ற நிலையில் நீதிவாசன் தன் மாமாவிற்கு அழைத்தான்.

 

மாமாவிடம் நலம் விசாரித்து விட்டு அத்தையிடம் கைமாறியதும், சிறிதுநேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தவனிடம், ஜோதிமணி சென்னை வந்திருக்கும் விஷயத்தை கூறினார்.

 

“என்ன அத்தை அங்க எப்ப போனீங்க?”

 

“நாலஞ்சு நாளாச்சுப்பா”

 

“அங்க எதுக்கு அத்தை? எங்க தங்கி இருக்கீங்க? முன்னாடியே சொல்லியிருந்தா நான் நல்ல இடமா விசாரிச்சு அனுப்பி இருப்பேன் இல்லை” என்றான் ஆதங்கமாக!

 

“இல்லை நீதி. நம்ம கோபி ரூமுலேயே தங்கிட்டோம்”

 

“என்னது?” என்று அதற்கும் பெரிதாக அதிர்ந்தான்.

 

‘ஏன் இவ்வளவு கேள்வி கேட்கிறான்?’ என்று எண்ணியபடி ஜோதிமணி இருக்க, “பசங்க ரூமுல?” என்று மேலும் ஆத்திரப் பட்டான்.

 

“அவங்க எல்லாம் வேற பிரண்ட்ஸ் கூட தங்கிட்டாங்கப்பா”

 

“என்ன அத்தை பசங்க தங்கிட்டு இருந்த ரூம். அங்க போயி… சரி கவனம். உங்க பொண்ணுங்க வேற இடத்துக்குத் தக்க இருக்காங்களோ என்னவோ… கத்தி பேசிட்டு, சண்டையை வளர்த்துட்டு இருக்கப் போறாங்க. கொஞ்சம் கவனமா பார்த்துக்கங்க” என்று சொல்ல ‘இவனுக்கு என்ன ஆச்சு?’ என முழுதாய் குழம்பினாள் பெரியவள். பொதுவாக இந்தளவு எடுத்துச் சொல்ல மாட்டான் என்பதால் வந்த குழப்பம்.

 

நீதிவாசன் பேச்சில் இருந்த, ‘உங்க பொண்ணுங்க’ என்னும் சொல் அவன் மனதில் இருப்பது தான்! அவன் எப்பொழுதும் அன்னபூரணியை தன் அத்தை மகள் என்றுதான் எண்ணுவது! அவனுடைய தந்தை போல குணம்! என்ன இதுவரை அந்த எண்ணம் வெளிப்பட்டதில்லை. இன்று சற்று அவன் கட்டுப்பாடு மீறி விழுந்திருந்த வார்த்தைகள் இதெல்லாம்!

 

“சரிப்பா பார்த்துக்கறேன்” என்று சொன்ன ஜோதிமணியிடம், தீபலட்சுமிக்கு திருமணம் கைக்கூடி வரும் போலத் தெரிகிறது என்று சொன்னான். தீபலட்சுமி, நீதிவாசனின் தங்கை!

 

“என்னப்பா திடீர்ன்னு சொல்லற?”

 

“ஜாதகம் ஒன்னு வந்தது அத்தை. தொழில்முறையில் தெரிஞ்ச பையன். பொருத்தமும் இருக்கவும், பொண்ணு பார்க்க வர சொல்லலாம்ன்னு இருக்கோம். அதான் உங்ககிட்ட கேட்டுட்டு ஏற்பாடு பண்ணலாம்ன்னு நினைச்சேன். அவங்க வீட்டுலேயும் எப்ப வரதுன்னு கேட்டுட்டே இருக்காங்க” என்றான் அவன்.

 

உண்மையில் ஜாதகம் எல்லாம் வரவில்லை. தீபலட்சுமியும், இவனுக்குத் தொழில் முறையில் பரிட்சயமான அன்பரசனும் ஒருவரை ஒருவர் நேசிப்பதாகத் தெரிய வந்தது. விஷயம் வெளியில் தெரியும் முன்னரே திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று நினைத்தவன், இருவரிடமும் தனித்தனியே பேசி அவர்கள் காதலை உறுதிப் படுத்திக் கொண்டு, அடுத்த கட்ட வேலைகளில் இறங்கி விட்டான்.

 

நீதிவாசனின் அம்மா பரிமளம் இப்பொழுது உயிருடன் இல்லை. தந்தை மகேந்திரனும் ஒரு விபத்தின் பிறகு வீட்டில் தான் இருக்கிறார். அவரால் அதிக நேரம் நிற்கவோ, நடக்கவோ உடல் ஒத்துழைக்காது! விபத்தில் ஏற்பட்ட சுகவீனம்!

 

நீதிவாசன் சொன்னதைக் கேட்டதும், “சரிப்பா நீ அடுத்த வாரத்துல நல்ல நாளா பாரு. நாங்க தான் இந்த வாரக் கடைசியில வந்துடுவோமே!” என்று ஜோதிமணியும் சொல்லி வைத்திருந்தார்.

 

அப்போது அனைவரும் கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்ததால், அனைவரிடமும் கோயிலிலிருந்து திரும்பி வந்ததும் தீபலட்சுமியின் திருமண விஷயத்தைச் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தார். அதோடு பெண் பார்க்கத் தானே வருகிறார்கள் இன்னும் எதுவும் உறுதி இல்லை தானே என்று எண்ணியதால் அதை அவர் உடனடியாக சொல்லியே ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை.

 

சென்னை பெசண்ட் நகர் அறுபடை முருகன் கோயில்! கடலின் கரையில்… நன்கு விசாலமான இடத்தினில்… திருத்தணி, பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் என்ற அறுபடை முருக அவதாரங்களுக்கும் தனித்தனி சிறு ஆலயங்களை எழுப்பி… அதை அனைத்தையும் ஒரே சுற்றுச்சுவருக்குள் வரும்படி எழுப்பியிருக்கும் பேரழகான திருஸ்தலம்.

 

முத்துச்செல்வம், ஜோதிமணி குடும்பத்தினர் தம் மக்கள் மூவருடனும் அங்கு தான் விஜயம் செய்திருந்தனர்.

 

“கோயில் நல்லா இருக்குப்பா…” ஜோதிமணி ஆசையாக மகனிடம் சொன்னார். என்னவோ, ஒரு குறிப்பிட்ட வயதிற்கும் மேல் கோயில், குளம் என்பதில் நம் மக்கள் பலருக்கும் ஒரு ஈடுபாடு வந்துவிடுகிறது! ஜோதிமணியும் அதற்கு விதிவிலக்கில்லாத பெண்மணி தான்!

 

கோயில் அத்தனை நேர்த்தியாக, அழகாக இருந்தது. விசாலமான இடம், அதற்குத்தக்க அளவான கூட்டம் என்று வெகு ரம்மியமான சூழல்! அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகத் தரிசித்ததில் மன நிறைவுடன் ஐவரும் அங்கிருந்த ஒரு மண்டபத்தில் அமர்ந்தனர். ஆறு சிறு சிறு ஸ்தலங்கள் என்பதால்… கருவறை, அதையொட்டி திறந்தவெளியில் நிறையத் தூண்கள் வைத்து நீண்ட மண்டபங்கள் அமைந்திருக்கும்.

 

அன்னபூரணி, இந்த சூழலில் வெகுவாக தளர்ந்து, மனம் அமைதி கொண்டு இயல்புக்கு மீண்டு விட்டவள் போலத் தோன்றினாள். மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச சங்கடங்களும் விலகி… சற்றே இலகுவானாள்! அது அவள் முகத்தின் பொலிவிலேயே தெரிந்தது.

 

உற்சாகமான குரலிலேயே, “அண்ணா பின்னாடி இருக்க பீச் கூட்டிட்டு போவீங்க தானே!” என்று கோபியிடம் ஆர்ப்பரித்தாள்.

 

“இங்க வேணாம் பூரணி. பெசண்ட் நகர் பீச்சுக்கே போயிடுவோம்!”

 

“எல்லாம் ஒன்னு தானே ண்ணா”

 

“கடலும், கரையும் இருந்தா பீச் ஆயிடாது பூரணி…” என்று அவளைக் கேலி செய்து சிரித்தவன் அவளிடம் அடிகளைக் கூட வாங்கி கட்டிக் கொண்டான்.

 

‘அப்பாடா!’ என்று ஆசுவாசமாக இருந்தது தம்பதியருக்கு! இளையவள் அத்தனை சங்கடப்பட்டு, கவலைப்பட்டுப் பேசியதால் மீண்டும் எப்பொழுது இயல்புக்குத் திரும்புவாளோ என்று தவிப்போடு இருந்தவர்கள் தானே! இரண்டு நாட்கள் தவிக்க விட்டாலும் இன்று இலகுவாகி விட்டாளே என்று ஆசுவாசமாக உணர்ந்தார்கள்.

 

ஆனால், பூரணிக்கு அதெல்லாம் நினைவில் கூட இல்லை என்பது போல ஆர்ப்பாட்டம்! சற்றே அதிகப்படியாகவும் கூடவோ? நான் இயல்பாக இருக்கிறேன் என்று பறைசாற்றுகிறாளோ?

 

ஆலயத்தில் அமர்ந்திருந்ததால் மணியோசைக்கு என்ன பஞ்சம்? மணியோசையைக் கேட்டதும், பூரணி தன் வேலையைத் தொடங்கி விட்டாள்! அதுதான் பாடல்களை மாற்றி அமைக்கும் வேலையை!

 

டிங் டாங் கோயில் மணி, கோயில் மணி நான் கேட்டேன்!

பொங்கல் மணமும், நெய் மணமும் சேர்ந்தது போல் வாசம் நுகர்ந்தேன்…

நான் கேட்டது ஒரு தட்டு பொங்கல் தான்!!!

ஆஆ ஆ….… 

நீ தந்ததோ கொஞ்சுண்டு பொங்கல் தான்!”

 

பொது இடத்தில் உச்சஸ்தாதியில் பாட முடியாததால், மூத்தவர்களுக்குக் கேட்கும் வண்ணம் பாடி வைக்க, மற்ற மூவரும் இவள் பாடலில் சிரிக்க, இவளைத் துல்லியமாக கணிக்கும் ரஞ்சிதா இந்த மாற்றத்தையும் கவனிக்கத் தவறவில்லை. இளையவளின் செய்கையில் அவளுக்கு யோசனை ஓடியது.

 

ரஞ்சிதாவிற்கு நன்கு தெரியும், இன்று அன்னபூரணி அவள் கவலைகள் மறந்து சற்றே நிம்மதியுற்றிருக்கிறாள் என்று! ஆனால், அதற்காக எல்லாவற்றையும் மறந்து மொத்தமாக இயல்புக்குத் திரும்பி விட்டாள் என்று சொல்வதற்கில்லை! இரண்டு நாள் வருத்தம் சற்று மட்டுப்பட்டிருக்கிறது, அவ்வளவே!

 

ஆனால், இந்த சூழலில்… இந்த பாடல், அண்ணனிடம் வம்பளப்பது எல்லாம்… பூரணி, வழக்கம்போல எதையோ தனக்குள் புதைக்க, மறைக்கச் செய்யும் ஆர்ப்பாட்டமோ என்று தோன்றியது!

 

ஆனால், அப்படியென்ன இவளுக்குப் பிரச்சனை? என்று புரியாமல் மனம் சோர்ந்தாள் மூத்தவள்!

 

ரஞ்சிதாவின் கணிப்பு முற்றிலும் சரிதான்! இன்று அன்னபூரணி சற்று இயல்புக்குத் திரும்பினாள். அதாவது அந்த வாசுகி அம்மாவின் பேச்சை ஒதுக்கி, தன் மன சஞ்சலங்களைக் களைந்து இலகுவாகி இருந்தாள்.

 

அந்த நேரத்தில் சரியாய் விழுந்தது நீதிவாசன் என்ற மனிதனின் நினைவுகள்! அதற்கு மூல காரணம் அவனது கைப்பேசி அழைப்பே! அவனது நினைவுகளை முயன்று ஒதுக்கி வைத்தது தான்! அவன் கைப்பேசி அழைப்பு வந்ததும், எப்படியோ மீண்டும் அவனது நினைவுகள் மொத்தமும் வாரிச் சுருட்டிக்கொண்டு மேலெழுந்து வந்துவிட்டது. அவளது இத்தகைய பலவீனம், அவளை உள்ளூர நடுங்கச் செய்தது!

 

முளையிலேயே கிள்ளி விட வேண்டும் என்று எண்ணி… பூரணியும் தன் கவனத்தை வேறு விஷயத்தில் அழுத்தம், திருத்தமாகப் பதிக்க… அது சற்று அதிகப்படியாகப் போய் ரஞ்சிதாவை கவனிக்க வைத்து விட்டது.

 

ரஞ்சிதாவின் குழம்பிய மனதிற்குப் பதில்தான் கிடைத்த பாடில்லை! அவளது சந்தேகம் உறுதி தான்! ஆனால், தீர்த்து வைக்கும் ஆட்கள் தான் இல்லை!

 

கோயில், பீச், உணவகம் என்று சுற்றித் திரிந்துவிட்டு வீடு வரவே இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது. வீட்டிற்கு வந்ததுமே தீபலட்சுமியின் திருமணம் குறித்துப் பேச வேண்டும் என்று நினைத்ததாலோ என்னவோ, ஜோதிமணியும் அனைவரிடமும் பொதுவாக விஷயத்தைச் சொன்னார்.

 

“அதுக்கு தான் சாயங்காலம் நீதி மாமா கூப்பிட்டிருந்தாங்களா மா” என்று ரஞ்சிதா அம்மாவின் அருகில் அமர்ந்து பேச்சை வளர்த்துக் கொண்டிருக்க, கோபி அன்னை சொன்ன செய்தியின் அதிர்விலிருந்து இன்னமும் மீளவில்லை.

 

ஏனென்றால் கோபாலகிருஷ்ணனும், தீபலட்சுமியும் கடந்த மூன்று வருடங்களாக காதலிக்கிறார்கள்! இப்பொழுது போய் அவளை வேறு யாரோ பெண் பார்க்க வருவதாய் அம்மா சொன்னால்? ஒருவேளை தீபாவிற்கே தெரியாமல் இந்த ஏற்பாடோ? ஆனால், நீதி மாமா, நல்லதாய் ஒரு வரன் வந்ததும் தீபாவிடம் கலந்தாலோசிக்காமல் பெண் பார்க்கும் வைபவம் வரை போவாரா என்ன? அதிலும் அன்னை இல்லாத பெண் என்பதால் அண்ணனிடம் மிகவும் செல்லம் ஆயிற்றே! அனைத்தையும் யோசிக்கையில் அவனுக்கு மண்டை வெடிக்கும் உணர்வு!

 

‘தீபு ஏன் என்னிடம் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை! ஒருவேளை அவளே சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டாளோ? அப்படியே இருந்தாலும் அவளுக்கு வரன் வருகின்ற விஷயத்தை என்னிடம் சொன்னால் தானே நான் வீட்டில் பேசி மேற்கொண்டு நடக்க வேண்டியதைக் கவனிக்க முடியும்?’ குழம்பிய மனதின் வெளிப்பாடாய் அவனது முகம் வெளிறிக் காணப்பட்டது.

 

முயன்று தன் உணர்வுகளை மறைத்து, அங்கு நடக்கும் பேச்சு வார்த்தைகளில் கவனம் பதித்தான்.

 

“ஆமா, நீதிக்கு தொழில்முறையில தெரிஞ்ச பையனாம்! ஜாதகம் பொருந்தியிருக்கு போல! பொண்ணு பார்க்க எப்ப வரதுன்னு கேட்கிறாங்களாம். அதான் அடுத்த வாரம் பார்க்க சொல்லியிருக்கேன்”

 

“அம்மா கல்யாணத்துக்கு எனக்கு ரெண்டு புடவை வேணும். நீதி மாமா கிட்ட சொல்லிடுங்க” ரஞ்சிதா திருமணம் வரைக்கும் இலகுவாகத் திட்டமிட, கோபியின் மன திடம் விரிசல் விழுந்த படகாய் ஆட்டம் கண்டது. அசர்பந்தமாய் தீபா தன்னிடம் முன்பு இருந்தது போல இப்போதெல்லாம் இருப்பதில்லை என்ற நினைவு வந்தது.

 

“ஏன் நீயே கேட்க வேண்டியது தான?” மகளிடம் ஜோதிமணி கேட்டார்.

 

“நானா? ஏன் மா ஏன் இந்த கொலைவெறி. மாமா கிட்டப் பேச்செல்லாம் வராது. வேணும்ன்னா அவரு விரைப்பா திரியறதுக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்” என்று ரஞ்சிதா சீண்ட, பூரணியின் உடல் குறுகுறுத்தது.

 

ஆம்! அவன் சற்றே கஞ்சி போட்ட சட்டை போல விரைப்பானவன் தான்! யாரும் அவனிடம் சென்று பேசவே தயங்குவார்கள். ஒரே ஒரு வயதிற்கு இளையவனான கோபி அண்ணன் கூட நலம் விசாரிப்போடு விலகிக்கொள்வான்! அவனா தன்னை நெருங்கி கைகளில் ஏந்தியது? அன்றைய நினைவில் மீண்டும் உடல் சிலிர்க்க, மயிர்க்கால்கள் சிலிர்த்தெழுந்து நின்றது!

 

கைகளை பரபரவென தேய்த்தவளைப் பார்த்த ஜோதிமணி, “போய் குளிச்சுட்டு நைட்டி போடுங்க புள்ளைங்களா. உப்பு தண்ணியில ஆடாதீங்கன்னு சொன்னா கேட்டா தானே ஆகும்” என்று அதட்டி அனுப்பி வைத்தார்.

 

“பீச்சுல நல்ல தண்ணியவா விட சொல்ல முடியும்!” என்று முனங்கலோடு ரஞ்சிதா உடன் வர, அவள் கூறியதை கவனிக்கும் மனநிலையில் அன்னபூரணி இருந்திருக்கவில்லை.

 

கோபியிடமும், “உனக்கு வேற தனியா சொல்லணுமா டா. போயி குளிச்சுட்டு தூங்கு” என்று சொல்ல அவனுக்கு இருந்த மனநிலையில் விட்டால் போதும் என்று நகர்ந்து விட்டான்.

 

அதன்பிறகு, ஜோதிமணி சமையலறைக்குச் சென்று பெரிய பாத்திரத்தில் வெந்நீர் வைக்க, “அட இந்த ஊருல அடிக்கிற வெயிலுக்கு வெந்நீர் எதுக்கு? நான் பச்சைத் தண்ணியிலயே குளிச்சுக்குவேன்” என்று பின்னாடியே முத்துச்செல்வம் வந்தார்.

 

“எதுக்கு அன்னைக்கு பீச்சுக்கு போயிட்டு வந்து பச்சைத் தண்ணியில குளிச்சதுக்கு லொக்கு லொக்குன்னு இருமுனீங்களே அதுக்கா?” என்று கறாராகக் கேள்வி கேட்டார் மனையாள்.

 

“அது சும்மா இந்த தண்ணி ஒத்துக்காம இருக்கும்”

 

“ஆமா ஆமா நீங்க பார்த்தீங்க” என்று முணுமுணுத்த மனைவியிடம் மேற்கொண்டு பேசினாள் வம்பு வளரும் அபாயம் இருப்பதால் திரும்பிப் பார்க்காமல் சோபாவில் சென்று அமர்ந்து விட்டார்.

 

தண்ணீர் காய்ந்ததும், பெண்கள் குளிக்கும் அறையை விடுத்துக் கோபி சென்ற அறையை எட்டிப் பார்க்க அவன் கைப்பேசியை வெறித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தான்.

 

“நீ குளிக்காம என்ன செய்யற கோபி?”

 

அம்மாவின் குரலில் தன்னுணர்வு பெற்றவன், “ஆபிஸ்ல இருந்து போன் பண்ணறேன்னு சொன்னாங்க மா. அப்பாவை முதல்ல குளிக்க சொல்லிடுங்க” என்பதை அன்னையின் முகம் பார்க்காமல் சோர்வான குரலில் சொன்னான்.

 

மகனுக்கு அலைச்சல் போல என்று நினைத்த ஜோதிமணி காய்ச்சிய தண்ணீரைக் குளிக்கும் பதத்திற்கு விளாவி கணவரைக் குளிக்க அழைக்க, முத்துச்செல்வமோ மனைவியை விடவும் புத்திசாலி ஆயிற்றே! பாதி பக்கெட் தண்ணீரைத் தான் காலி செய்தார்.

 

“ஜோதி! ஜோதி! தண்ணி மிச்சமாயிடுச்சு பாரு! கோபியும் பச்சைத் தண்ணியில குளிக்க மாட்டான். சூடு ஆறிப்போகிறதுக்கு முன்னாடி நீ குளிச்சுடு” என அவசர அவசரமாக மனைவியிடம் சொன்னார்.

 

“மிச்சம் ஆகலை! மிச்சம் வெச்சேன்னு சொல்லுங்க” என்று முணுமுணுத்தாலும், மறக்காமல் அந்த தண்ணீர் கொண்டு தான் ஜோதிமணி குளித்துக் கொண்டிருந்தார்.

 

அவர் குளித்து வரும் வரையிலும் கோபியின் தோற்றத்தில் எதுவும் மாற்றமில்லை. அதே வெறித்த பார்வை! சோர்ந்த தோற்றம்!

 

“என்ன தம்பி எதுவும் பிரச்சனையா?”

 

“ஹான்…” என்றவன் தூக்கத்தில் விழித்த குழந்தையின் தோற்றத்தில் இருந்தான்.

 

“லீவு தான சொல்லியிருக்க?”

 

“எ… எ… என்னமா?”

 

“ஆபிஸ்ல இருந்து போன் வரும்ன்னு சொன்ன? ஆபீஸுக்கு லீவு தான சொல்லியிருக்க?”

 

“அது நான் செஞ்ச வேலை ஒன்னு மா… அதைப்பத்தி கேட்க கூப்பிடறேனாங்க…” கொஞ்சம் தெளிந்திருந்ததால், இப்பொழுது அவனால் சற்று கோர்வையாகப் பேச முடிந்தது.

 

“அவங்க கூப்பிடாட்டி நீ கூப்பிடுப்பா. வேலையில எதுவும் தப்பு விட்டுட்டியா? எதுக்கு இப்படி இருக்க?”

 

தன் தோற்றம் கவனிக்கப் படுவதை உணர்ந்து கொண்டவன், “அச்சோ அதெல்லாம் இல்லை மா. அவனுங்களே பார்த்துட்டு கூப்பிடுவாங்க. வேற ஏதோ யோசனை. நான் போயி குளிக்கிறேன். நீங்க படுத்துக்கங்க” என்று அன்னையை அனுப்பியவன் துவாலையுடன் குளியலறைக்குள் சென்றான்.

 

பச்சைத் தண்ணீரின் அடியில் நின்ற கோபியின் மனம் எதை எதையோ எண்ணிக் குழம்பித் தவித்துக் கொண்டிருந்தது.

 

நீதிவாசன் என்றால் உறவில் எந்தளவு மதிப்பும், மரியாதையுமோ… அதற்கு எதிர்ப்பதமான எண்ணம் தான் தீபலட்சுமியின் மீது அனைவருக்கும்! அவளது பகட்டும், அலட்டலும், ஆடம்பரமும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தால்… அவளது அலட்சியமும், திமிரும், மரியாதையற்ற பாங்கும் அனைவரையும் ஒதுங்கியிருக்க வைக்கும்.

 

யாரும் அவளிடம் ஒட்டுதல் காட்டமாட்டார்கள். அதை அவள் விரும்புவதும் இல்லை. கோபியும் அதற்கு விதிவிலக்கல்ல! தீபா என்ற பெண்ணைப் பற்றி அவன் பெரிதாக அலட்டிக் கொண்டதேயில்லை! இன்ஜினியரிங் கல்வியை முடித்து கை நிறைய சம்பளத்துடன் அவன் சென்னைக்கு வேலைக்கு வந்த வரையுமே அப்படித்தான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 13’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 13’

வேப்பம்பூவின் தேன்துளி – 13   மாலை மூன்று மணிக்கும் மேல் இருக்கும். “பழனியாண்டவர் ஸ்டோர்ஸ்” கடையின் வரவு செலவு கணக்குகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் நீதிவாசன். இது அன்றாட வழமை தான்!   அப்பொழுது அவனது அறையில் இருந்த தொலைப்பேசி சிணுங்கியது.

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 09சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 09

வேப்பம்பூவின் தேன்துளி – 9 தீபலட்சுமியின் திருமணம் முடிந்த பிறகு, அவள் தெளிவாக உணர்ந்து கொண்ட விஷயம், அன்பரசுவின் குடும்ப சொத்துக்கள் என்பது சொற்பமே! அவர்கள் கூட்டுக் குடும்பத்தினில் இருக்கிறார்கள் என்பதை முன்னமே தெரிந்து தான் இருந்தாள். ஆனால், சொத்துக்களும் சரிசமம்

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 04சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 04

வேப்பம்பூவின் தேன்துளி – 4 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் தானே! மனம் அலைபாயும் போது அது பட்டவர்த்தனமாக வெளிப்படும் நிலையை என்னவென்று சொல்வது? நீதிவாசனைச் சந்தித்து விட்டு வந்ததிலிருந்து அன்னபூரணிக்கு இதே யோசனை தான்!   காரணமே இல்லாமல் சமீபமாக அவளுக்கு