Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Ongoing Stories,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 5

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 5

 

வெங்கடேஷிடம் சரயுவின் வீரதீர பிரதாபங்களைக்கேட்டுக் கேட்டு ரசித்தான் ஜிஷ்ணு. அதுவரை பெண்களை பணவெறி பிடித்தவர்களாகவும், பொழுது போக்காகவும் பார்த்த ஜிஷ்ணுவின் எண்ணத்தை முதல் முறையாக அந்த சிறுமலர் வேரோடு அசைத்திருந்தது.

“சொடக்கு போடுற நேரத்துல உன் பெயரையே விஷ்ணுன்னு மாத்திட்டா பாரேன்” அதிசயித்தான் வெங்கடேஷ்.

“விடுடா A rose by any other name would smell as sweet”

“ஜிஷ்ணு இந்தத் தற்புகழ்ச்சி உனக்கே ஓவரா தெரியல? இத மட்டும் சரவெடி கேட்டா உண்டிவில்லாலையே உன் தலையைப் பிளந்திருப்பா”

“இந்த சரவெடி பத்தி சொல்லேன். அவ தினமும் அந்த மாந்தோப்புலதான் விளையாட வருவாளா?”

ஒரு மாதிரியாக ஜிஷ்ணுவைப் பார்த்தவன்,

“அவ கிட்ட சகவாசம் வச்சுக்காத. கூடப் படிக்குற பொண்ணை எப்படி மிரட்டுறா பாரேன். அவளும் அவ பிரெண்ட்சும்தான் எங்க ஊர்ல குட்டி தாதாவா உருவாயிட்டு இருக்காங்க. மண்டையை உடைக்குறது, மாங்கா திருடுறது, ரேஷன் கடைல க்யூல நிக்குற ஆளுங்க தலைல காளிங்க நர்த்தனம் ஆடிட்டு சக்கர வாங்குறது. இப்படி இந்த ஊர்ல இவங்க பண்ணுற அலும்பு தாங்க முடியல”

“எவ்வளவு என்ஜாய் பண்ணுறாங்க பாரேண்டா. எனக்கு அவங்களைப் பாத்தா பொறாமையா இருக்கு”

“முடிச்சுக்குறேண்டா. பாம்புன்னா படையே நடுங்கும், எங்க ஊர் மந்திங்க தண்ணிப்பாம்பைப் பிடிச்சு முள்ளுச் செடிக்கு நடுவுல போட்டு விளையாடுதுங்கடா. இதைப் பார்த்ததுல இருந்து இவனுங்களைக் கண்டாலே நான் ஒரு மைலுக்கு அப்பால எகிறிக் குதிச்சு ஓடிப் போய்டுவேன். நீ தங்குற வீடு வேற இந்த மாந்தோப்புக்குப் பக்கத்துலையே இருக்கு. எதுக்கும் நீயும் ஜாக்கிரதையாவே இரு” கவலையாய் சொன்னான்.

நண்பனின் அக்கறையான பேச்சில் அமைதியானான் ஜிஷ்ணு. சில வினாடிகள் கழித்து கடுப்போடு சொன்னான் வெங்கடேஷ்.

“பட்டப் பேரப்பாரு அணுகுண்டு, சரவெடி, மத்தாப்பு மாரி, ஓலைப்பட்டாசு…”

“அதென்ன வெடி பேரா வச்சிருக்காங்க?” மறுபடி புலன் விசாரணையை ஆரம்பித்தான் ஜிஷ்ணு.

“ஊர்ல தீபாவளிக்கு யார் முதல்ல வெடி வக்கிறதுன்னு வாண்டுங்ககுள்ள கேங் வார் வரும். தலைவி அவங்க தலைமைல ராத்திரி 11.59க்கு ரெடி ஆயிடுவாங்க. பன்னண்டு மணிக்கு ஆயிரம் வாலா சரத்த தெருவுக்கு ஒண்ணா வெடிச்சு நம்ம காதைப் பதம் பாத்துருவாங்க. இந்த கோஷ்டிக்கு பயந்தே எங்க ஊர் கிழடு கட்டைங்க தீபாவளி சமயத்துல பக்கத்து ஊருக்குப் போய்டுவாங்க”

“அப்பறம்” சுவாரஸ்யமாய் இருந்தது ஜிஷ்ணுவுக்கு.

“ஒரு நாள் மந்திரி யாரோ தூத்துக்குடிக்கு வந்த சமயமா பார்த்து பயங்கர வெடி சத்தம். தொடர்ந்து வைக்கப்போர் எரியுது. தகராறுல யாரோ பெட்ரோல் வெடிகுண்டு வீசிட்டங்கலோன்னு போலிஸ் சந்தேகத்துல ஊருல இருக்குற காவாலிப் பசங்களை எல்லாம் ஸ்டேஷனுக்கு ஓட்டிட்டுப் போய் பெண்டை நிமிர்த்திட்டாங்க”

“காரணம் அணுகுண்டாக்கும். மாஸ்டர் ப்ளான் சரயுவா?”

“ஆமாண்டா”

கட கடவென சிரித்தான். “நான் எவ்வளவோ பெண்களைப் பார்த்திருக்கேண்டா. ஆனா இந்த அம்மாயி மாதிரி ஒருத்தி… ஹா… ஹா… சான்சே இல்லை. எனக்கு இவளோட குறும்புத்தனம் ரொம்ப பிடிச்சிருக்குடா. பிரெண்ட்டு பாசாக எவ்வளவு ரிஸ்க் எடுக்குறா பாரேன்” நினைத்து நினைத்து சிரித்தான்.

“நீ சொல்றதைப் பார்த்தா டெர்ரராத்தான் இருக்கு. இவளை வீட்டுல கண்டிக்க மாட்டாங்களா?” ஆர்வத்தை நண்பனுக்குக் காட்டாதவாறு கேட்டான். இந்தக் குறும்பியை யாராவது அடித்து விடுவார்களோ? என்ற பயமும் அடித்து விடக் கூடாதே என்ற கவலையும் அதில் இருந்தது.

“ம்ம்… அவ அப்பாவ ஏய்ச்சுடுவா. அம்மாவுக்குத் தெரிஞ்சது புளியம்விளாறு தான். முதுகு பழுத்துடும். அவ்வளவு அடி வாங்கிட்டும் துளி கண்ணீர் வரணுமே. ‘அடிச்சு முடிச்சிட்டியா. அப்ப சாப்பாடு போடு’ன்னு இவ தெனாவெட்டா கேட்டதைப் பார்த்து அவங்க அம்மாவே அசந்துட்டாங்க. இவளுக்கு நல்ல புத்தி தரச் சொல்லி எங்க ஊர் பெருமாளைப் படாதபாடு படுத்திட்டு இருக்காங்க”

அவளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆசையுடன், “சரவெடிக்கு கூடப் பிறந்த உதிரி வெடி யாருமில்லையா?”

“மூணு இருக்கு. மூணு பேரும் கல்யாண வயசுல நிக்கிறாங்க. இவ காலம் தப்பிப் பிறந்த கடைக்குட்டி. அவங்க மூத்த அக்காவுக்கு தூத்துக்குடில ஸ்டெர்லைட்ல வேலை செய்யுற மாப்பிள்ளையை முடிச்சிருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம்”

ப்போது சரயுவின் மேல் தொடர்ந்த ஆர்வம் ஜிஷ்ணுவுக்கு இப்போதும் கொஞ்சம் கூடக் குறையவில்லை. இன்றும், அவள் வீடு எப்படி இருக்கும்? அவளது மகன் எப்படி இருப்பான். அவளைப் போலவே அறுந்த வாலா? அல்லிராணி குடும்பத்தை எப்படி நடத்துகிறாள். காலையில் உப்புமா கிளறினாளாமே. அந்த அளவு அவளுக்குப் பொறுமை இருக்கிறதா? அவளது கணவன், அந்த ராம் எப்படி இருப்பான். அமைதியாய் அனுசரணையாய் இருப்பானா? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ராம் கண்டிப்பாக ராமனாகத்தான் இருப்பான். அர்ஜுனனாக இருக்க வாய்ப்பு இல்லை. பெருமூச்சு கிளம்பியது ஜிஷ்ணுவிடமிருந்து.

“ஜிஷ்ணு நீ இன்னமும் தூங்கலையா?” பாத்ரூம் சென்று வந்த வரலக்ஷ்மி வினவ,

“தூக்கம் வரல பின்னி”

மகன் ஏதோ சஞ்சலத்தில் இருக்கிறான் என்று உணர்ந்தது தாய்மனம்.

“சரயுவுக்கும் உன் தூக்கத்துக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா ஜிஷ்ணு?”

ஆமாம் என்று தலையசைத்தான். “அவளுக்கும் எனக்கும் நட்பு உருவான விதத்தை நெனச்சேன். பொழுது போனதே தெரியல”

“என்கிட்ட அவளைப் பத்தி நீ சொல்லவேயில்லையே”

“சொல்ல சந்தர்ப்பம் வரல. மூணு அக்காவுக்கும் கல்யாணம் குழந்தைப் பிறப்புன்னு பிஸியா இருந்த. உன்ட்ட பேசக் கூட… அப்பல்லாம் அப்பாய்ன்மென்ட் வாங்கணும். அந்த சமயம் சரயு அண்ட் பிரெண்ட்ஸ் தான் என் தனிமைக்கு மருந்து. அவங்களோட சேர்ந்து நானும் சின்ன வயசுக்கே போயிட்டேன்” சுருக்கமாக அவரிடம் அவர்களின் அறிமுகம் பற்றி சொன்னான். அறையில் ஜிஷ்ணுவின் சிரிப்புடன் வரலக்ஷ்மியின் சிரிப்பும் சேர்ந்து கொண்டது.

“அவ்வளவு வாலா சரயு! இப்ப இவ்வளவு பதவிசா இருக்கா. ஆமாம் உன்னை அடிக்குற அளவுக்கு கோவமா இருந்தவ எப்படி பிரெண்டானா?”

“அது இன்னொரு கதை”

“போதுண்டா மீதியை நாளைக்கு ராத்திரி கேக்குறேன். பத்து மணிக்கு யாரையோ சந்திக்கனும்னு சொன்னியே. இப்பயே நாலாகப் போகுது. தூங்கு நாணா! இல்லாட்டி காலைல வேலையெல்லாம் கெட்டுப் போய்டும்”

“நான் படுத்துக்குறேன். எனக்காக ஒரே ஒரு பாட்டுப் பாடுறியா?” குழந்தையாய் கேட்ட முப்பத்தைந்து வயது மகனைக் கனிவாகப் பார்த்தார்.

சிறு வயதிலிருந்து ஏகப்பட்ட வகுப்புக்களுக்கு ஜெயசுதா ஜிஷ்ணுவை அனுப்பியிருந்தாலும் ஜிஷ்ணுவுக்கு வாய்ப்பாட்டு என்றால் மிகவும் விருப்பம். பாட்டும் அவனுக்கு நன்றாக வந்தது. வழக்கம்போல் ஜெயசுதா அதனைப் பாதியில் நிறுத்தி வேறு வகுப்புக்கு அனுப்பினார். மனம் வாடிப் போன அக்கா மகனுக்குத் தானே தாயும் குருவுமாயிருந்து தனக்குத் தெரிந்த அளவுக்கு கர்நாடக சங்கீதத்தைப் போதித்தார் வரலக்ஷ்மி.

நீண்ட நாட்கள் கழித்து ஜிஷ்ணு பாட சொல்லவும் கண்கள் கலங்கியதை ஜிஷ்ணு அறியாமல் துடைத்துக் கொண்டார்.

“தூக்கம் வந்தா தூங்கு பின்னி. இன்னொரு நாள் பார்க்கலாம்” கண்கள் மூடிய வண்ணம் சொன்னான் ஜிஷ்ணு.

குரலைக் கனைத்து சரி செய்தவர். “என்ன பாடுறதுன்னு யோசிக்கிறேன். சாமா ராகத்துல் பாடட்டுமா? கேட்க சுகம்மா இருக்கும் உனக்கும் பிடிக்கும்”

“ம்ம்…”

மானச சஞ்சரரே… பிரம்மனி.. மானச சஞ்சரரே…

மதஸிக்கி பிஞ்ச்சாலங்க்ருத சிகுரே…

மஹனியஹ போலஜதமுகுரே…

ஸ்ரீரமணிகுச்ச துர்க்க விஹாரே

சேவஹ ஜன மந்திர மந்தாரே

பரமஹம்ச முக சந்திர சக்கோரே

பரிபூரித்த முரளி ரவஹாரே

மானச சஞ்சரரே…

மனதை வருடும் சாமா அவனை இனிமையான துயிலில் ஆழ்த்தியது. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அன்று நிம்மதியாய் உறங்கினான் ஜிஷ்ணு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 33தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 33

தாய் சிவகாமியின் படத்துக்கருகே புதிதாக இடம் பிடித்திருந்த தந்தை நெல்லையப்பனின் படத்தை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் சரயு. ‘தெனம் காலேல எந்திரிச்சதும்… அப்பாவுக்கு கஞ்சி தரணும், உடம்பு துடைக்கணும், துணி துவைக்கணும், மருந்து வாங்கணும்னு உன்னைப் பத்தியே நெனச்சுட்டு

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 19என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 19

அத்தியாயம் – 19 நடந்த  சம்பவங்கள் சிலருக்கு மகிழ்வையும், சிலருக்கு வருத்தத்தையும்  தந்தது. சத்யாவும் பன்னீரும் தங்களது மண  வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் கதை பேச ஆரம்பிக்க, சுமித்ரா சத்யாவுக்கு கல்யாணம் நிச்சயமானதைப் பற்றி மகிழ்வதா இல்லை கோவித்துக் கொண்டு போன முதல் மகள் சுதாவைப் பற்றிக்