சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 04

வேப்பம்பூவின் தேன்துளி – 4

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் தானே! மனம் அலைபாயும் போது அது பட்டவர்த்தனமாக வெளிப்படும் நிலையை என்னவென்று சொல்வது? நீதிவாசனைச் சந்தித்து விட்டு வந்ததிலிருந்து அன்னபூரணிக்கு இதே யோசனை தான்!

 

காரணமே இல்லாமல் சமீபமாக அவளுக்கு அவன் நினைவு அதிகம் வந்தது. அந்த நினைவு தவறு என்று மனமும், புத்தியும் ஒருபுறம் போர்க்கொடி தூக்கவும் செய்தது தான்! அதை ஏற்று, அவனை நினைப்பதில்லை என்று அவளும் முயன்று கடைப்பிடித்து வரும் சமயத்தில் தான் அவன் எதிரே வந்து நின்றது!

 

ஏதோ சீட்டுக்கட்டு மாளிகை சரிந்து விழுமே அப்படியொரு சூழலாகி விட்டது! அவளுடைய தீர்மானம் மொத்தமும் சரிந்து விழுந்திருந்தது. போதாக்குறைக்கு அவனுக்குப் பதில் சொல்ல வாயிலிருந்து ஒரு வார்த்தை வெளியே வருவேனா என்று சத்தியாகிரகம் செய்தது. கடவுளே என்ன சோதனை இது என்று நொந்து போனாள் மங்கை.

 

பின்னே, அவன் குரல் கேட்டதும் கற்சிலையாய் மாறியதும், அவன் முகத்தைக் கூட ஏறிட முடியாமல் எழுந்த தவிப்பும், தயக்கமும்! அவனிடம் தந்தியடித்த சொற்களும்! அவளுக்கு அவளுடைய மனதை உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகக் காட்டிவிட்டது. அந்த தெளிவில் அவள் சற்று விதிர்த்துத் தான் போனாள்!

 

அன்றையதினம் அந்த கடையிலிருந்து வெளியே வந்தால் போதும் என்றாகிவிட்டது. இனி இவன் திசைக்கே வரக்கூடாது. மனதைச் சற்று கட்டுப்படுத்த வேண்டும் என்றெல்லாம்… மீண்டுமொருமுறை உறுதியாகத் தீர்மானம் செய்து கொண்டாள். தொடர்ந்து வந்த நாட்களில் அதைக் கடைப்பிடிக்கவும் செய்தாள்.

 

இப்பொழுதெல்லாம் காஃபி பருகுவதில்லை என்பதில் அத்தனை பிடிவாதம்! தேநீர் வேண்டுமாம்! அதற்குள்ளும் சர்க்கரை போடுகிறார்களே! கடுப்பாகிப் போனது! பிறகு, சர்க்கரை போடாமல் பால் குடிக்கிறேன் என்று வந்து நின்றாள்.

 

‘என்ன ஆச்சு இவளுக்கு?’ என்று தான் வீட்டில் அனைவரும் பார்த்தனர்.

 

ஆனால், முகத்தைப் பாவம் போல் வைத்துக் கேட்பவளிடம் மறுக்கவும், மேற்கொண்டு கேள்வி எழுப்பவும் முடியவில்லை. போதாக்குறைக்குக் கல்லூரி விட்டு வந்ததும் தியானம் செய்கிறேன் அது இதென்று யூடூப் பார்த்து வெகு அலப்பறை செய்தாள்.

 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ரஞ்சிதா ஒரு நாள் அவளிடம், “என்ன ஆச்சு பூரணி, அக்காகிட்டச் சொல்லக் கூடாதா?” எனத் தன்மையாகக் கேட்டாள்.

 

ஏற்கனவே யோசித்து வைத்திருப்பாள் போலும். “எக்ஸாம் வருதல்ல ரஞ்சிக்கா. நல்லா கான்சென்ட்ரேட் பண்ணி படிக்கணும்” என்று கோர்வையாகச் சொல்லி வைத்தாள்.

 

மனதை வென்றவர்கள் யாருமில்லை தான்! ஆனால் இது ஆரம்பநிலை என்பதாலும், அன்னபூரணியின் மனக்கட்டுப்பாட்டின் பயனாலும் அவளால் நீதிவாசனின் நினைவுகளை ஓரளவு வெல்ல முடிந்தது.

 

அவனை நினைக்கக் கூடாது என்பதில் மட்டும் அத்தனை உறுதி! நல்லவேளையாக அவளுக்குத் தேர்வுகளும் தொடங்கிவிடவும், அதில் கவனம் செலுத்துவதில் நல்ல பலனும் கிட்டியது. உபரி நல்ல விஷயம் நீதிவாசனைப் பார்க்க அவளுக்குச் சந்தர்ப்பம் அமையாதது! நல்லபடியாக முதலாம் ஆண்டு தேர்வுகளை எல்லாம் முடித்தாள்.

இந்த விடுமுறைக்குச் சென்னையை சுத்திப்பார்க்க அழைத்துச் செல்வதாக கோபாலகிருஷ்ணன் தங்கைகளுக்கு வாக்கு தந்திருந்தான். ஆகையால் இரண்டு மாதம் முன்பிருந்தே அவனுக்கு நினைவுப் படுத்தி ரயிலில் முன்பதிவு செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து விட்டனர்.

 

கோபி சென்னையில் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து ஒரு இரட்டை படுக்கை அறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறான். சமையலுக்கும், மேல் வேலைக்கும் ஒரு நடுத்தர வயது அம்மா வருகிறார்.

 

குடும்பத்தினர் வந்து தங்கும் ஒரு வாரக் காலமும் அவனுடைய நண்பர்கள் வேறு நண்பர்களோடு தங்கிக் கொள்வதாய் சொல்லி விட்டனர். வயதுப்பெண்களும் வருவதால் ஹோட்டல் எல்லாம் வேண்டாம் என்று ஜோதிமணி தயக்கம் காட்டவே இந்த ஏற்பாடு. ஆரம்பத்தில் சென்னை பயணத்திற்கே முழுவதும் மறுப்பு தெரிவித்தவர், பிள்ளைகளின் பிடிவாதத்திற்காகத் தான் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

 

இளையவர்களின் திட்டமிடல் படி நால்வரும் சென்னை நோக்கிப் பயணப்பட்டனர். ரயில் நிலையத்திலேயே காத்திருந்து நண்பனிடம் வாங்கிய காரின் உதவியோடு, கோபி அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

 

பழக்கமில்லாத நீண்ட நேரப் பிரயாணம் அனைவரையும் அன்று நன்கு ஓய்வெடுக்க வைத்தது. மாலையில் சோம்பல் தீர்ந்து சுறுசுறுப்புடன் இருந்தவர்களைக் கோபி திருவான்மியூர் பீச்சிற்கு அழைத்துச் சென்றான்.

 

பொங்கி வரும் கடல் அலைகளைப் பார்த்ததும் சகோதரிகளுக்கு மிகவும் பரவசம் ஆகிவிட்டது! கால் நனைத்து, ஓடி விளையாடி, விழுந்து எழுந்து, முழு உடையும் நனைத்து என்று அட்டகாசம் செய்து விட்டனர்.

 

“காணாததைக் கண்ட மாதிரி ஆடாதீங்க புள்ளைங்களா…” என்ற ஜோதிமணியின் அதட்டலைக் கவனித்தால் தானே!

“ரஞ்சிக்கா நம்ம எந்த கடலை கண்டோம்? என்னமோ தினமும் பார்க்கிற மாதிரி அம்மா சொல்லறாங்க…” என்று பூரணி பெரியன்னையைப் பற்றி அவர் காதில் விழாத வண்ணம் கேலி செய்து கொண்டிருந்தாள்.

 

விளையாடி முடிந்து, மணலில் கால் நீட்டி அமர்ந்து உடையை உலர விடும்போது, “தம்பி எந்தெந்த கோயில் எல்லாம் காட்டப் போற?” என ஜோதிமணி தனக்கு வேண்டியவற்றைக் கேட்க, பிள்ளைகள் மூவரும் சிரித்து விட்டனர்.

 

“பெரிம்மா கூட்டிட்டு போவாங்க. இன்னைக்குத் தானே சென்னை வந்திருக்கோம். அவசரப்படாதீங்க” என்று சொல்லி பூரணி சிரித்தாள்.

 

“என்னை பார்த்தா கிண்டலா இருக்கு உங்களுக்கெல்லாம். மொத்தறேன் இருங்க” என்று ஜோதிமணி சொன்னாலும் சொல்லில் இருந்த கோபம் உச்சரிப்பிலும், முகபாவனையிலும் சுத்தமாக இல்லை.

 

அனைவரும் திரும்பி நடந்தபோது பூரணி அண்ணனிடம் தனியாக, ”ஆமா நாங்க உனக்கு பைக் தரதுக்கே இன்னும் ஆலோசனை பண்ணிட்டு இருக்கோம். நீ காருலயே புகுந்து கட்டறியே! எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு…” என்று பீடிகையோடு அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள். காலையிலிருந்து யாருக்கும் தெரியாமல் கேட்க என்று வேண்டும் யோசித்துக் கொண்டே இருந்ததை ஒரு வழியாக நினைவுக்குக் கொண்டு வந்து கேட்டு விட்டாள்.

 

அவளது கேள்வியில் துளியும் அலட்டல் இல்லாமல், “என்ன சந்தேகம்?” என்றான் கோபி கேலிப் புன்னகையோடு.

 

“ஏதாவது பொண்ணு எதுவும் உஷார் பண்ணிட்டியா? அவளுக்கு ஊரை சுத்திக்காட்டி சென்னை உனக்குப் பழக்கமா?”

 

“வாண்டு… கூகிள் மேப் இருக்கும்போது என்ன கவலை? அதோட இந்த ஏரியால தான இருக்கேன். பசங்களோட அடிக்கடி வெளிய போயி பழக்கம்” என்றான் சிரித்த முகமாய்.

 

“பொண்ணு எதுவும் உஷார் பண்ணி இருக்கியான்னு சொல்லவே இல்லை” என்றாள் அப்பொழுதும் விடாமல். அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ரஞ்சிதா வந்துவிட்டாள்.

 

“என்ன ரெண்டு பேரும் தனியா மாநாடு?” இடுப்பில் கைவைத்து முறைத்தபடி மூத்தவள் கேட்க, “அக்கா நீ சின்ன புள்ளை. போ… போ…” என்று சொல்லி, தமக்கையிடம் மொத்து வாங்கினாள் பூரணி.

 

“பேசாம வாங்க ரெண்டு பேரும்!” என்று ஜோதிமணி தான் இருவரையும் அதட்டினார்.

 

நடந்தபடியே மணல் பரப்பை விட்டு வந்திருக்க அங்கிருக்கும் தின்பண்டங்களில் எதை வாங்க என்று தேர்ந்தெடுக்கத் திண்டாடினர்.

 

அதிலும் பூரணி, “பஜ்ஜி… சப்பாத்தி ரோல்… சோளம்…” என எல்லா பக்கமும் கை காட்டினாள்.

 

“உண்மையிலேயே சாப்பிடறவங்க கூட இந்தளவு ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டாங்க” என்று ரஞ்சிதா கோபியிடம் முணுமுணுத்தாள்.

 

அதை கவனித்துவிட்ட சின்னவள், “என்ன ரஞ்சிக்கா சொன்ன? இன்னைக்கு உன் பங்கையும் சேர்த்துச் சாப்பிட்டு நான் ஸ்ட்ரென்த் ஆகிக் காட்டலை…” என்று வீராப்பாய் பேசினாள். கூடவே கையை மடக்கி முழங்கையின் மேல் பகுதியைத் தட்டிக் காட்ட அனைவருக்கும் அவளது செய்கையில் சிரிப்பு வந்து விட்டது.

அவளின் சத்தத்தில் ரஞ்சிதா, “ஸ்ஸ்ஸ் கத்தாதடி… எல்லாரும் கவனிக்கப் போறாங்க” என்று தங்கையை அதட்டி விட்டு, “சும்மா ஸ்னேக்ஸ் சாப்பிட்டா எல்லாம் ஸ்ட்ரென்த் வந்துடாது. நல்லா சாப்பிடணும்” என்று வாரினாள்.

 

கேலியும், கிண்டலுமாகப் பேசியபடியே பஜ்ஜி, போண்டா சாப்பிட முடிவெடுத்து ஆளுக்கு இரண்டு சாப்பிட்டு விட்டுக் கிளம்பும் நேரம், “ஹாய் கோபி…” என்றொரு ஆணின் குரல் கேட்டது.

 

ஐவரும் சத்தம் வந்த திசையைப் பார்க்க, கோபி வயது இளைஞன் ஒருவன் அவர்கள் அருகே வந்தான். அவனைக் கண்டதும், “ஹலோ தீபன்…” என்று கோபியும் கைகுலுக்கிப் பேசத் தொடங்கினான்.

 

கோபியின் நண்பன் வந்ததும், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சற்று தள்ளி ஓரமாய் நின்று கொண்டார் ஜோதிமணி. சற்றே கிராமத்து வழக்கம் அவ்வளவாக மாற முடிவதில்லை. அதிலும் ஒன்றுக்கு இரண்டாய் வயதுப் பெண்களை வைத்திருப்பவர் என்பதால் சிறு சிறு விஷயத்திலும் அவரிடம் கூடுதல் கவனம் இருக்கும்.

 

பிள்ளைகளும் அதற்குத்தக்கத் தான் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். இல்லாவிடில் நீதிவாசன் விஷயத்தில் பூரணியின் சுயக்கட்டுப்பாடு இந்தளவு வெற்றி காண்பது எப்படி?

 

அம்மாவோடு ஓரமாக வந்துவிட்ட சகோதரிகள் இருவருக்கும் பீச்சின் அழகைச் சிலாகித்துப் பேசவே நேரம் சரியாக இருந்தது. “கொஞ்சம் பிசு பிசுன்னு இருக்குக்கா”

 

“போனதும் குளிச்சுட்டு தூங்கிடுவோம். விடுடி” இப்படியாக இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, அங்கே தீபனுக்கோ அன்னபூரணியின் மீதே பார்வை!

 

தவறாக என்று சொல்வதற்கில்லை. ஆனால், ரசனையுடன்! ஆர்வத்துடன்!

 

“என்ன கோபி பேமிலியோட வந்திருக்கீங்க போல!” என்ற  தீபனின் பார்வை பழனிச்சாமியையும், பெண்கள் மூவரையும் தொட்டு மீண்டது.

 

“ஆமாம் தீபன். ஊருல இருந்து வந்திருக்காங்க”

 

“ஓ… அதான் இந்த வாரம் முழுக்க லீவு போட்டிருக்கீங்களா? உங்க பேரண்ட்ஸ் தான? ஒரு ஹாய் சொல்லலாமா? டின்னர் எப்போ? வாங்களே ஒன்னா போகலாம்” என்றான் சாதாரணமாகக் கேட்பது போல்.

 

கோபியோ உடனடியாக மறுத்து விட்டான். “அவ்வளவு தான் எங்க அம்மா என்னை ரெண்டாக்கிடுவாங்க. அவங்க கொஞ்சம் பழைய காலத்து மனுஷி” என்று சொல்லி, அருகில் நின்றிருந்த தந்தையை மட்டும் அறிமுகம் செய்து வைத்து அவனிடமிருந்து விடை பெற்றான்.

 

தீபனின் மனம் அன்னபூரணியை நிரப்பிக் கொண்டது. யார் பார்வையிலும், கருத்திலும் விழாமலும் தான்!

அடுத்த வந்த நாட்களில் கோபி தன் குடும்பத்தினரை வண்டலூர் பூங்காவிற்கு அழைத்துப் போனான். அனைவரும் நன்றாக ரசித்தார்கள்.

 

ஜோதிமணிக்கு தான் அதிக தூரம் நடக்க முடியவில்லை என்று சொல்லி விட்டார். முத்துச்செல்வமும் பிள்ளைகளை முன்னே அனுப்பிவிட்டு மனைவியோடு அங்கேயே அமர்ந்து கதை பேசத் தொடங்கி விட்டார்.

 

“இவங்க சிறுசா இருக்கும்போது நாம ஊரைச் சுத்தி காட்டினோம். இப்ப இவங்க நமக்கு காட்டறாங்க பாரு” என்று பெருமை பொங்கப் பேசினார்.

 

“நாம எங்க சுத்தி காட்டினோம்?” கணவர் சொன்ன புது செய்தியில் கேலியாக ஜோதிமணி வினவினார்.

 

“ஏன் திருச்சிக்கு, கன்னியாகுமரிக்கு எல்லாம் ஊருல டூர் கூட்டிட்டுப் போகும்போது கூட்டிட்டுப் போகலையாக்கும்”

 

“நல்லவேளை சொன்னீங்க… நான் போன ஜென்மமோன்னு நினைச்சுட்டு இருக்கேன். எப்பப் பார்த்தாலும் தறியை கட்டிட்டு அழ வேண்டியது” என்றார் மனைவி நொடித்தபடி. வைதபடியும் தானோ?

 

“பாரேன் ஜோதி அப்படி இருந்தே நமக்கு ரெண்டு புள்ளைங்க. இதுல அப்படி இல்லாம இருந்திருந்தேன்னா… இந்நேரம் வீடு முழுக்க புள்ளை குட்டியா தான இருந்திருக்கும்” நரை மீசையிலும் இளமை எட்டிப்பார்க்க மனைவியை வஞ்சனையே இல்லாமல் கேலி செய்தார் முத்துச்செல்வம்.

 

“எங்க உக்கார்ந்துட்டு இருக்கோம். என்ன பேச்சு பேசிட்டு இருக்கீங்க?” என்று தன் தலையிலேயே தட்டிக் கொண்டாலும் ஜோதிமணிக்கும் சிரிப்பு வந்து விட்டது.

 

பேச்சை மாற்றும் விதமாக, “நான் கொஞ்சம் உக்கார்ந்துட்டு உங்களோட சேர்த்துக்கப் போறேன். நீங்க போயி புள்ளைங்களோட சுத்திப் பார்க்க வேண்டியது தானே” என்றார் ஜோதிமணி .

 

“ஆமா, உன்னைத் தனியா விட்டுட்டு அங்க போயி கரடி, புலியைப் பார்த்து நான் என்ன செய்யப் போறேன்” என்பதை ஆசையாகத் தான் சொன்னார். ஆனால், வேண்டுமென்றே முணுமுணுப்பாக, “யானை, காண்டாமிருகம் பார்க்கிறதெல்லாம் பத்தாதா?” என்றார் சிரித்தபடி.

 

கணவரை மேலிருந்து கீழாகப் பார்த்தபடி, “வாயெல்லாம் நல்லா வக்கனையா தான் பேசுது. வடிச்சு கொட்டறேன் இல்லை” என்றார் நொடித்தபடி. அதை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் முதுமையிலும் இளமை கொண்டாடும் கணவர்.

 

மனைவியின் சேதாரம் இல்லாத புன்னகையும், முகத்தளவிலும், வார்த்தையளவிலும் மட்டும் வெளிப்படும் கோபமும் அவருக்கு வெகு இஷ்டமானது. அந்தத்தருணங்களில் எல்லாம் அவரது நரை மீசையினுள் ஓர் குட்டிக் காதல் எட்டிப்பார்க்கும்!

 

மறுநாள் பீனிக்ஸ் ஷாப்பிங் மால் செல்வதாகத் திட்டம்! காலையில் சிற்றுண்டி தயாரான பிறகும் உறக்கத்தின் பிடியில் இருந்த அண்ணனை எழுப்புவதற்கு அறைக்குள் போனாள் பூரணி.

 

அவனது தலையைக் களையோ களையோவென்று களைத்து,

 

“எந்திரிரா எந்திரிரா… எந்திரி எந்திரி எந்திரிரா…”

 

என்று உச்சஸ்ததியில் பாட, அடித்துப் பிடித்துக் கொண்டு தமையன் எழுந்தமர்ந்தபடி, “பூரணி, இப்படித்தான் கத்துவியா?” என்று காதைக் குடைந்தபடி முறைப்பாகக் கேட்டான்.

 

“என்னது கத்துனேனா? எந்திரன் படத்துப் பாட்டு… ஏ.ஆர்.ரகுமான் மியூசிக்… உனக்கு கத்தற மாதிரி இருக்கா?”

 

“எந்திரா பாட்டை எந்திரிரான்னு மாத்த உன்னால மட்டும் தான் முடியும்” என்றான் தமையன் சிரித்தபடி.

 

“பின்ன நீங்க தூங்கிட்டே இருக்கீங்க…”

 

“மணி என்னாச்சு? என்ன பூரணி எட்டு மணிக்கு எதுக்கு எழுப்பி விட்ட?” என்றான் அவன் பெரிதாக அதிர்ந்தபடி.

 

“இன்னைக்கு மால் போலம்ன்னு சொன்னீங்கண்ணா?”

 

“பூரணி மால் திறக்க பதினோரு மணி ஆயிடும்”

 

“அச்சச்சோ… நேத்தே சொல்லி இருக்கக் கூடாது… சரி எழுந்து குளிச்சுட்டு சாப்பிட வாங்க. அதான் எழுந்துட்டீங்களே” என மறுபடியும் உறங்கச் செல்லும் திட்டத்தை வைத்திருந்த அண்ணனைத் தடுத்து நிறுத்தி அவனிடம் முறைப்பை வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

 

‘இவளோட ஒரே ரோதனை…’ எனச் சலித்தாலும் அவன் மறுபடியும் உறங்கவில்லை.

 

உண்டு முடித்துக் கிளம்பி மாலுக்கு பதினோரு மணிக்கே சென்றுவிட்டனர். பார்க்கிங் கிடைக்காமல் அவர்களது வாகனம் வெகுவாக சுத்தியது.

 

“மால் இப்ப தான் திறப்பாங்கன்னு பொய் தானே சொன்னீங்க? பாருங்க எத்தனை வண்டி நிக்குதுன்னு” பூரணி அண்ணனை முறைத்தாள்.

 

“அச்சோ பூரணி பார்க்கிங் தேட விடு. இவனுங்களே ப்ளோர் ப்ளோரா சுத்த விடறாங்க” என்றவன் காலி இடம் தேடி நிறுத்துவதற்குள் ஒரு வழியாகி விட்டான். வாகனத்தை எங்கு நிறுத்தியிருக்கோம் என்று குறித்துக் கொண்டவன் தங்கையிடம், “காலையில தியேட்டர் மட்டும் தான் திறப்பாங்க பூரணி. இவங்க எல்லாம் படம் பார்க்க வந்தவங்க. மால் இப்ப தான் ஓபனிங் சரியா?” என்று காரணத்தை விளக்கி மாலினுள் அழைத்துச் சென்றான்.

 

“என்ன அண்ணே சமாளிக்க முடியலையா?” ரஞ்சிதா கோபியின் காதை கடிக்க, “ஸ்ஸ்ஸ் அவளுக்குக் கேட்டது நம்மளை ஒரு வழி பண்ணிடுவா. அமைதியா வா” என்றான் அண்ணன் மெதுவான குரலில்.

 

ரஞ்சிதாவுக்குப் பூரணி குறித்துப் பலத்த ஆராய்ச்சி! சில நாட்கள் வெகு அமைதியாகக் கழித்தாள். இப்பொழுது அதற்கும் சேர்த்து வைத்து ஆர்ப்பாட்டம் செய்கிறாள். தனக்குள் எதற்காகவோ போராடுகிறாளோ என்று தோன்றியது.

 

தன்னை பிறர் கண்டுபிடித்து விடக்கூடாது. தன் மாற்றங்களை யாரும் கவனித்து விடக்கூடாது என்று எண்ணுபவர்களிடம் சற்று அதிகப்படியான செய்கைகள் இருக்குமே! அப்படித்தான் பூரணியுடையதும் சமீபமாக இருப்பதாய் மூத்தவள் அனுமானித்தாள். ‘இந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனை? கேட்டாலும் சொல்ல வேற மாட்டா’ என்று சலிப்பாக நினைத்துக் கொண்டாலும் எதையாவது தெரிந்து கொள்ள முடியுமா என்னும் ஆராய்ச்சியை மட்டும் அவள் விடவில்லை.

 

மாலினுள் சிறிது நேரம் தான் சுற்றி இருப்பார்கள். அதற்குள் இன்றும் தன் தாயுடன் எதிர்கொண்டான் கோபியின் நண்பன் தீபன்.

 

“ஹலோ கோபி என்ன இந்தப்பக்கம்?” என்ற தீபனின் குரலில் அவனை அங்கு எதிர்பாராத ஆச்சரியம் கோபியிடம்.

 

“சும்மா ஷாப்பிங். நேத்தே நீங்க கால் பண்ணும்போது சொல்லி இருந்தேனே!” என்றான் தீபனை ஆராய்ந்தபடி! நேற்று சொன்னதை அதற்குள் மறந்திருப்பானா என்ன?

 

“ஓ சாரி சுத்தமா ஞாபகம் இல்லை. எங்கே எங்க அம்மா திடீர்ன்னு மாலுக்கு கூட்டிட்டு போ, ஷாப்பிங் இருக்குன்னு காலையில கேட்டுட்டாங்க. லீவை போட்டுட்டு கிளம்பி வந்துட்டேன். இவங்க தான் என் அம்மா” என்று நேற்று பேசியதை மறந்தவன் போலவே பேசி அன்னை வாசுகியை அறிமுகம் செய்து வைத்தான்.

 

அன்று பீச்சில் மறுத்தது போல இப்பொழுது தீபனின் அம்மாவிடம் தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைக்க மறுக்க முடியாதே!

 

ஆகக் கோபியும் தன் பெற்றோர், தங்கைகளை பொதுவாக அறிமுகம் செய்து வைத்தான்.

 

வாசுகியின் அதிகப்படியான முகஸ்துதி கோபிக்கே பிடிக்கவில்லை. ஏதோ செயற்கைத்தனமாக இருந்தது போல உணர்ந்தான். ஆனாலும், வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாதே! முயன்று அமைதி காத்தான்.

 

“இந்த காலத்துல இப்படி ஒரு பையனா? வெளியூருல வேலைக்கு போற பசங்க எல்லாம் வீட்டுக்கு தெரியாம எத்தனை பண்ணறானுங்க. நீ உங்க குடும்பத்தையே கூட்டிட்டு வந்து சுத்திக் காட்டறேனா தங்கமான பையனா தான் இருக்கணும்” என்றார். அவரின் பேச்சு யாருக்குமே ரசிக்கவில்லை தான்!

 

முத்துச்செல்வமோ நேரடியாகவே, “இந்த காலத்துல அப்படி எல்லாம் இல்லைங்க. பசங்க எங்க இருந்தாலும் நல்லபடியா இருப்பாங்கன்னு நம்பி தான் பெத்தவங்க வெளியூருக்கு விடறாங்க. எல்லாருக்கும் பெத்தவங்களை அவங்க இருக்க ஊருக்கு கூட்டிட்டு வர சூழல் அமையறதில்லை. அதுக்கு அவங்களைத் தப்பு சொல்ல முடியுமா? என் பையனும் சென்னை வந்து நாலஞ்சு வருஷம் ஆச்சு” என்று பட்டென்று சொல்லி விட்டார்.

 

வாசுகியோ உடனே அவசரமாக, “இல்லை இல்லை நானும் தப்பா எதுவும் சொல்லலை. நல்ல விஷயம்ன்னு தான் சொன்னேன்” என்றவர், “என்ன படிக்கறீங்க மா?” என்று பிள்ளைகளை கேட்டார்.

 

இருவருக்கும் பொதுவாக ஜோதிமணி பதில் சொல்லிவிட, “வாங்களே இங்க ஒரு கடையில துணி எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். பார்ப்பீங்களாமா?” என்று வாசுகி கேட்டார்.

 

“இல்லைங்க பரவாயில்லை இருக்கட்டும். எந்த கடைன்னு கோபி கிட்ட சொல்லிடுங்க நாங்க போயிக்கறோம். உங்களுக்கு எதுக்குச் சிரமம்?” என்று ஜோதிமணி பிடிகொடுக்காமல் பேசினார்.

 

“அட இதுல என்னங்க இருக்கு. நம்ம ஊருக்கு வந்திருக்கீங்க. ஒரு மணி நேர தாமதத்துல எதுவும் ஆகிடாது. வாங்க” என்று விடாமல் வற்புறுத்த, அதற்கு மேலும் எப்படி முகத்தில் அடித்தாற்போல மறுக்க என்று தெரியவில்லை.

 

வேறு வழியின்றி வாசுகியோடும், தீபனோடும் அனைவரும் செல்ல, ரஞ்சிதாவும், அன்னபூரணியும் என்னவோ செய்து கொள்ளுங்கள் என்கிற பாவனையில் கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு விவாதித்துக் கொண்டு நடந்தனர். தீபன் கண்டும் காணாமலும் அன்னபூரணியைப் பார்த்து வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

 

தீபன் அம்மா செல்லம். இன்று கோபி இங்கு வருவது தெரிந்து தன் அம்மாவிடம் பேசி கையோடு அழைத்தும் வந்திருந்தான். மகன் திருமணம் என்றளவில் இதுவரை எந்த பெண்ணைக் குறித்தும் பேசியிராததால் அன்னையும் உடனேயே கிளம்பி வந்து விட்டார்.

 

வாசுகி முகஸ்துதியை மட்டும் நிறுத்தவே இல்லை. அது கொஞ்சம் சலிப்பாகவும், பல ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருந்தது. ஆனாலும் அனைத்திற்கும் ஏதோ எதிராளிக்குத் தருவது போலப் பதிலடி தருவதற்கும் சங்கடமாக இருந்தது.

 

அன்னபூரணி ஜோதிமணியைப் பெரியம்மா என்றழைப்பதைக் கவனித்துவிட்டு, “நான் உங்க பொண்ணுன்னு நினைச்சேன். உங்க தங்கச்சி பொண்ணா? என்ன தான் சொல்லுங்க கோபி மாதிரி பசங்களைப் பார்க்கிறதே அபூர்வம்! சொந்த குடும்பத்துக்கு ஒரு வாரம் கூட இருந்து சுத்தி காட்டறான் சரி. ஒன்னு விட்ட தங்கச்சிக்குக் கூடவா? பெரிய ஆளுப்பா நீ” என்று சொல்லிவிட, பூரணியின் முகம் ‘ஒன்று விட்ட தங்கை’ என்ற பிரிவினை சொல்லில் உடனேயே மாறி விட்டது.

 

“பூரணி நீ வா அங்க இருக்க துணிங்க பார்ப்போம்” என்று ரஞ்சிதா அவளை அழைத்து சென்றுவிட, அனைவரிடமும் குடும்ப விஷயத்தை கடைப்பரப்ப பிடிக்காத ஜோதிமணியும், “ஆமாங்க…” என்பதோடு முடித்துக் கொண்டார்.

 

பூரணியின் பெற்றோர் இறந்தபோது அவளுக்கு எட்டு வயது! நன்கு விவரம் தெரியும் வயது. அதன்பிறகு இவர்கள் பொறுப்பில் வந்ததால் அவளுக்கு வழமையை மாற்ற முடியவில்லை. பெரியம்மா, பெரியப்பா என்றே வரும்!

 

இப்படி அழைப்பதால் அது அவளது குடும்பம் என்று ஆகாதா? அல்லது அவளும்தான் குடும்பத்தில் ஒருத்தி என்பதில்லையா? இது அவர்களின் மனம் சம்பந்தப்பட்டது. மூன்றாம் மனிதர்களின் கருத்து திணிக்கப்படுவதை என்னவென்று சொல்வது? புறந்தள்ளும் பக்குவம் இன்னும் சின்னவளுக்கு வந்திருக்கவில்லை பாவம்! அதற்காக முகம் திரும்புவாள் என்றில்லை. ஆனால், மனம் வாடி விடுவாள்.

 

எல்லோரின் முகவாட்டமும் எதுவோ சரியில்லையோ என்று தீபனுக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனால் அவனுக்கும் எதுவும் பிடிபடவில்லை. அதோடு இத்தனை ஹேண்ட்ஸம் லுக்கில் இருக்கும் தன்னை அன்னபூரணி ஒருமுறை கூட திரும்பிப் பார்க்கவில்லையே என்று அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

 

முத்துச்செல்வம் மனைவிக்குக் கண் ஜாடை காட்டியிருக்க, வேகமாக சில ஆடைகளைத் தேர்ந்தெடுத்தவர், “பில் போடலாம் கோபி” என்று சொல்லிவிட அனைவரும் அந்த கடையிலிருந்து கிளம்பினர்.

 

வாசுகி பூரணிக்கும், ரஞ்சிதாவிற்கும் ஒரு சுடிதார் செட் எடுத்து பிடித்திருக்கிறதா? என்னோட பரிசா வெச்சுக்கங்க என்று சொல்ல, “அதெல்லாம் வேணாமுங்க. நீங்க இவ்வளவு தூரம் இருந்ததே போதும்” என்று ஜோதிமணி உறுதியாக மறுத்து விட்டார்.

 

“என் பரிசா இருக்கட்டுங்களே”

 

“தப்பா எடுத்துக்காதீங்க. வேணாம்”

 

“சரி எங்க வீடு பக்கம் தான்! வாங்களே ஒரு எட்டு போயிட்டுப் போகலாம்”

 

“இல்லைங்க. வந்ததுல இருந்து நல்ல அலைச்சல். கொஞ்சம் ஓய்வெடுக்கணும். கோபி நேரம் இருக்கும்போது நீ வேணா போயிட்டு வந்துடேன். உன் பிரண்ட் வீட்டுக்கு நீ போறது தான் முறை” என்று அழுத்தமாகச் சொன்ன விதத்தில், வாசுகிக்கு அவரின் எல்லை புரிந்திருந்தது!

 

‘ஏதோ பையனுக்கு பிடிச்சிருக்கேன்னு சுமூகமா இருக்க வந்தா குடும்பமே ரொம்பத் தான் பண்ணுது. ஊருல இல்லாத பாரம்பரியம். அப்படியே தூக்கி நிறுத்தப் போறாங்களாக்கும்!’ என தனக்குள் நொடித்துக் கொண்டாலும், மகனுக்காக வெளியில் சிரித்த முகமாக வைத்துக் கொண்டார்.

 

பில் போட்டதும், “கோபி கிளம்பலாமா? சுத்திட்டே இருந்ததுல காலு கை எல்லாம் சோர்ந்து போச்சு” என்று ஜோதிமணி கேட்க, சரியென்று விட்டான்.

ஆசையாக கிளம்பி வந்த செல்லத் தங்கையே இவர்கள் பேசியதில் மனம் சங்கடப்பட்டு முயன்று வெளியில் இலகுவாகக் காட்டிக் கொண்டிருக்கிறாள். இந்த நிலையில் அவளுக்கு வேறெதிலும் கவனம் போகாது என்று புரிய தீபனிடமும், அவன் அன்னை வாசுகியிடமும் விடைபெற்றுக் கிளம்பி விட்டார்கள்.

 

செல்பவர்களையே பார்த்த வண்ணம், “என்னடா பிடி கொடுக்கவே மாட்டீறாங்க” என்றார் வாசுகி மகனிடம்.

 

“கிராமத்து மனுஷங்க மா. விடுங்க பார்த்துப்போம். பொண்ணு இன்னும் படிச்சுட்டு தான இருக்கா”

 

“ஆமாம் டா அதுவும் இல்லாம பொண்ணோட பெத்தவங்கள நாம கரெக்ட் பண்ணுனா போதாதா? இவங்களுக்கும் நமக்கும் என்ன?” என்று அலட்சியமாகச் சொன்னார் வாசுகி.

 

இந்த பெண்மணிக்கு உறவுகளின் முக்கியத்துவமும் தெரியவில்லை! முதன்முதலில் பார்ப்பவர்களிடம் எந்த எல்லையில் நிற்க வேண்டும் என்றும் தெரியவில்லை! இப்படியும் சிலர்!

தீபனுக்கு அன்னபூரணியின் மேல் அபிப்பிராயம் இருப்பது பூரணிக்கும், அவளுடைய குடும்பத்தினருக்கும் தெரியாமலேயே போனது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 19’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 19’

வேப்பம்பூவின் தேன்துளி – 19 நீதிவாசன், அன்னபூரணியின் திருமண வரவேற்பு அனைத்து உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து சீரும் சிறப்புமாக நடந்து முடிந்திருந்தது.   பூரணி அந்த வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருந்திப் போனாள். மாமனார் மகேந்திரனும், வீட்டு வேலைகளைக் கவனிக்கக் காலையிலும்,

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 10சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 10

வேப்பம்பூவின் தேன்துளி – 10   கண்ணில் இருந்து நேர் கோடாய் விழிநீர் கசிய, தான் அழுகிறோம் என்பது கூட புத்தியில் உரைக்காமல் திகைத்த பார்வையுடனும், சோர்ந்து, வாடிய தோற்றத்துடனும் அமர்ந்திருந்தாள் அன்னபூரணி. இளையவளையே ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதாவிற்கு பாவமாய்

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’

வேப்பம்பூவின் தேன்துளி – 11 நீதிவாசன் வந்துவிட்டு சென்றபிறகு, அன்னபூரணியிடம் நிறைய மாறுதல்கள்! இன்னதென்று வரையறுக்க முடியாத வகையில் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே சென்றது! இலகுத்தன்மை அவளிடம் நிரந்தர வாசஸ்தலம் கொண்டுவிட, பூரிப்பு அவளது முகத்தை பலமடங்கு பொலிவாக்கியது.