Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 17′(Final)

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 17′(Final)

அத்தியாயம் – 17

ஞ்சன் சற்று இளைத்திருந்தான், கறுத்திருந்தான். கண்களை சுற்றிலும் கருவளையம் தூக்கமின்மையைக் காட்டியது. மொத்தத்தில் பழைய கலகலப்பில்லை. ப்ரித்வியின் வீட்டில் இருக்கும் ஒரு நாற்காலியைப் போல் நடப்பதை ஒரு பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இனிமேல் பார்க்கவே முடியாதோ என்றெண்ணி வருந்திக் கொண்டிருந்த நந்தனாவை மீண்டும் பார்த்த வினாடிகள் அவன் வாயைத் திறக்க விடாது செய்திருந்தது.

ராக நதி வெள்ளத்தில் ஒதுங்கிய ஒரு இளம்பெண்ணின் உடலை நந்தனாவோ எனக் காவல்துறை சந்தேகப்பட, அங்கே மரத்தில் சிக்கியிருந்த தாவணியை வைத்து நந்தனாதான் என வழக்கை முடித்தார்கள். அது நந்தனாவின் தாவணிதான் என்று ஆரியமாலாவும் சாட்சி சொன்னாள். ஊரில் பிரதாப்புடன் ஆரியமாலா நடத்தி வைக்க முயன்ற கல்யாணம்தான் அவளது தற்கொலைக்குக் காரணம் என்று பேச்சாக இருந்தது.

 

நந்தனாவுடனான அந்த சந்திப்பிற்குப் பின் லோன், லைசென்ஸ் என்று அழைந்துக் கொண்டிருந்த ரஞ்சன் ஒரு மாதத்திக்குப் பின் தான் பெரியகுளம் வந்தான். அதனால் நந்தனாவின் மறைவை சற்றுத் தாமதமாகவே அறிந்த ரஞ்சனின் குடும்பத்துக்கு மிகவும் அதிர்ச்சி.

“துக்கம் நடந்த வீட்ல உடனடியா நல்லது நடக்கணும்னு சொல்லுவாங்க. அதனால அடுத்த முஹுர்த்தத்துல கல்யாணத்தை வச்சுக்கலாமா?” இளித்துக் கொண்டு வந்து நின்றார் செந்தூரநாதன்.

அப்போதுதான் லேசாக  சந்தேகம் தட்டியது அகிலாண்டதுக்கு. “இருக்கட்டும் ரஞ்சன் ஊர்ல இல்ல. வந்ததும் பேசலாம்” என அனுப்பி வைத்தார்.

 

ஆரியமாலா வீட்டைப் பற்றி விசாரித்து சொன்ன புது டிரைவர் கை சுத்தமில்லை எனத் தகவல் வரவும், தெரிந்த ஆட்களைக் கொண்டு நந்தனாவின் குடும்பத்தைப் பற்றி விசாரித்து வரச் சொன்னார். விஷயம் தெரிந்ததும் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் அவரை ஒரு வழி செய்தார்கள்

“உனக்கு வெளி விவரம் பத்தாதுன்னு தானே உன் பின்னாடியிருந்து நாங்களே உன் தொழில்களை எல்லாம் கவனிச்சுட்டு இருக்கோம். உன் மவனுக்கு ஆர்டர் வாங்கித் தந்தது, லோன் வாங்கித் தந்ததுன்னு எங்க செல்வாக்கை பயன்படுத்தி அவனை முன்னேத்திட்டு இருக்கோம். நீ என்னடான்னா அவன் வாழ்க்கை விஷயத்தில் இப்படி ஒரு கோக்குமாக்கான குடும்பத்துல தலையைக் கொடுத்துட்டு நிக்கிற. கேட்டா தொழில்ல உதவியா இருப்பாளாம். அந்தக் குடும்பம் காலடி எடுத்து வச்சிருந்தா நீ சுடுகாட்டுக்கு டிக்கெட் போட்டிருக்கணும். பச்சப்புள்ள சொத்தை பறிச்சிட்டு கொலை பண்ணின துரோகிங்க” அகிலாண்டத்தின் அண்ணன் எகிறினார்.

ரஞ்சனோ  வேதனையில் கரைந்தான். அவளை தினமும் சந்தித்த பாதையை மணிக்கணக்காக வெறித்தபடி நிற்பான்.

“என்னைத் தானே அன்று பார்க்க வந்தாள். என்னோட பேச்சுத்தான் அவளைக் கொன்று விட்டதோ”

“தானுண்டு தன் வேலையுண்டுன்னு தானே இருந்தா… நான்தானே சொக்கிப் போய் அவளை மணக்கக் கேட்டேன். என் பார்வை படாம இருந்தா இப்ப உயிரோடயாவது இருந்திருப்பாளோ”

நந்தனா தற்கொலை செய்துக் கொண்டதையறிந்து குற்ற உணர்ச்சி அவனைக் கரையானாய் அரித்துக் கொண்டிருந்தது.

அவன் சுமத்திய குற்றச்சாட்டு ஒவ்வொன்றிற்கும் தானாகவே பதில் கிடைத்தது. ஒரு நாளும் தான் வசதியானவள் என்று சொன்னது கிடையாது. அவனை முதலில் ஏறிட்டுப் பார்த்தது கூட கிடையாது. தானுண்டு தன்  வேலையுண்டு என்று இருந்தவளைத் தன் விடாமுயற்சியால்தான் விரும்பச் செய்தான்.

 

அவளுக்கு நல்ல ஆடை கூட வாங்கித்தராமல் சதி செய்திருக்கின்றனர். அது தெரியாமல் அவளின் உடை சரியில்லை என்று எத்தனை முறை சொல்லியிருப்பேன். திருமணம் முடிந்ததும் தனக்குப் பிடித்த உடைகளை அணியாமலா போய்விடுவாள்?

 

சொத்து சுகமெல்லாமிருந்தும் மிஞ்சிப் போன இட்லியை மதிய உணவுக்கு எடுத்து வரும் நந்தனாவுக்கு எப்படி மேல்தட்டு நாகரீகமெல்லாம் பழக்கமிருக்கும்?இது தெரியாமல் நான் வேறு அபியின் முன்னே கடிந்து கொண்டேனே. அபியின் இளக்காரப் பேச்சைக் கூட இனம் கண்டு கொள்ளாமல் பதில் சொன்னாளே. அவளை மதியம் கல்லூரியில் கொண்டு போய் விடுகிறேன் என்ற வாக்கை காற்றில் பறக்கவிட்டு தனியே செல்ல விட்டேனே.

 

ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்று அபி குற்றம் சொன்னானே.  அவளென்ன எழுதப் படிக்கத் தெரியாத தற்குறியா? அவன் பேசிய மேல்நாட்டு ஆங்கிலம் எப்படி அவளுக்குப் புரியும். தன்னால் ஆங்கிலமும் மேல்தட்டுப் பழக்க வழக்கங்களும் சொல்லித் தரமுடியாதா? எல்லாம் கற்றுக் கொள்ள ஒரு இரண்டு வருடம் பிடிக்குமா. இருந்துவிட்டுப் போகிறது.

 

 

படிப்பு. ஓரளவு நன்றாகப் படிப்பவள்தான். பிசினெஸ் சம்மந்தமாக ஏதாவது மேற்ப்படிப்பு படிக்க வைத்து தானும் உடனிருந்து கற்றுத் தந்திருந்தால் நான்கைந்து வருடங்களில் பிடித்துக் கொள்வாள். ப்ளஸ்டூ  படித்த என் அம்மாவே தொழிலை திறன்பட கவனிக்கும்போது இவளால் முடியாதா என்ன? அக்காவுடன் ஒப்பிட்டுப் பேசியது அவளுக்கு எவ்வளவு வருத்தம் தரும்.

 

வருத்தத்துடன் அவளை வழக்கமாகப் பார்க்கும் பாதையில் காரை நிறுத்திவிட்டு பழைய நினைவுகளை அசை போட்டான். அப்பொழுதுதான் அந்த உதவி கிடைத்தது

“நானும் நிதமும் பாக்குறேன், இந்த ரோட்டில நின்னு எத்தையோ தேடிட்டு இருக்க? என்னான்னு சொன்னா நானும் உதவி செய்வேன்”, சிவனாண்டி தள்ளாடியபடி வந்து நின்றான்.

மற்ற சமயமாயிருந்தால் ரஞ்சன் எழுந்து போயிருப்பான். இப்போது பதில் சொன்னான் “என் சந்தோஷத்தைத் தொலைச்சுட்டேன். இங்க மறுபடியும் கிடைக்குமான்னு தேடுறேன்”

 

“இங்க தேடினா எப்படி கிடைக்கும்? அது இந்நேரம் எங்க இருக்கோ?” பதில் சொன்னவாறே நடந்தான்

 

“நீ அந்த நந்தனாவைத் தானே சொல்லுற. அந்தப் புள்ள போக வர நின்னு சைட் அடிப்பியே…. நானும் கவனிச்சிருக்கேன்…… அவ செத்தது உனக்கு அம்புட்டு வருத்தமா? வருத்தப்படாதே சார். அது இங்கயிருந்திருந்தா பிரதாப்பக் கண்ணாலம் கட்டிட்டு செத்திருக்கும். இப்ப தப்பிச்சிடுச்சுல்ல இனிமே நல்லாயிருக்கும்” தள்ளாட்டத்துடன் குரல் வெளிவந்தது

 

அவன் சொன்ன உண்மை தாக்க, சிவனாண்டியின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான் ரஞ்சன் “நந்தனா எங்கடா?”

 

சில வினாடிகளில் ரஞ்சனின் கண் முன்னே சிவனாண்டியும், டீக்கடை திருமலையும் கைகட்டி நிற்க, அனைவரும் ராஜேந்திரனின் இல்லத்தில்  நின்றிருந்தனர்.

 

“அன்னைக்கு டீ குடிச்சுட்டு ராஜேந்திரனோட கூட்டாளி கிளம்புனானா…. நானும் கடையை சாத்திட்டுக் கிளம்பினேன். அப்பத்தான் சிவனாண்டி அண்ணன் வந்து நந்தனா பொண்ணு தண்ணீல விழுந்ததுன்னும் அதை அவ பெரியம்மா பாத்துட்டு போகுதுன்னும் சொன்னாரு. நாங்க கிளம்பி வாரப்ப, ராஜேந்திரனோட பிரெண்ட் அந்தப் பொன்னைக் காப்பாத்தி வீட்டுக்குத் தூக்கிட்டுப் போனான். எங்களுக்கு மனசே கேக்கல. மறுபடியும் வீட்டுல கொண்டி விட்டா அவ பெரியம்மா கொன்னே போட்டுடுவாளேன்னு பேசிட்டிருந்தோம். கொஞ்ச நேரத்துல பையோட ராஜேந்திரனும் அந்த வெளியூர் தம்பியும் நந்தனாவைக் கூட்டிடுக் கிளம்பினாங்க. நாங்க எங்க வண்டியை எடுத்துட்டு நூல் பிடிச்சாப்பில தொடர்ந்தோம். அவங்க ரெண்டு பேத்தையும் வண்டில ஏத்தி அனுப்பிட்டு ராஜேந்திரன் வீட்டுக்கு வந்துட்டான். ராஜேந்திரனுக்கு நந்தனா உடன்பொறப்பு மாதிரி. அவன் தைரியமா அனுப்பிருக்கான்னா அந்தத் தம்பி கண்டிப்பா நல்லவனாத்தேன் இருக்கணும்னு ஒரு எண்ணம். மறுநா நந்தனா தற்கொலைன்னு ஊரெல்லாம் பேச்சு. ராஜேந்திரன் கமுக்கமா வீட்டுல உட்கார்ந்திருக்கான். நாங்களும் அந்தப் பொண்ணு எங்கிருந்தாலும் நல்லாயிருக்கும்னு நம்பிக்கைல வாய்க்கு பூட்டு போட்டுட்டோம். மன்னிச்சுக்கோ ராஜேந்திரா சிவனாண்டி தண்ணியப் போட்டுட்டு உளறிப்புட்டான்” மன்னிப்புக் கேட்டான் திருமலை.

 

 

“நெதமும் இந்தத் தம்பி விசனப்பட்டுடே இருந்தது. அதுதான் சொன்னேன்” சிவனாண்டி அவன் தரப்பு நியாயத்தை சொன்னான்.

 

“இப்ப உங்க முறை ராஜேந்திரன். நந்தனா எங்க?” ரஞ்சனின் கேள்விக்கு பதிலாக ப்ரித்வியின் இல்லத்தில் நின்றனர்.

“நீ சொவமா இருக்கிறது சந்தோஷமாத்தா. உன் பெரியாத்தா நல்லாவா இருப்பா?” சாபமிட்டார் பெரியவர்.

சக்கரைப் பொங்கலையும் புளியோதரையும் ஆளுக்குக் கொஞ்சம் ருசி பார்த்தார்கள்.

“சொத்தெல்லாம் உன் பேருலதாம்மா இருக்கு. அவளுக்கு பயந்துட்டு ஏன் ஊரு விட்டு ஊரு வந்து பதுங்கியிருக்க. இந்த ஊர் பாச எளவு வேற ஒண்ணும் புரியல. பேசாம நம்மூருக்கு வந்துடு தாயி” புதிதாகக் கரிசனம் பிறந்தது அவளது ஊர் ஆட்களுக்கு.

“நந்தனா இங்க படிச்சிட்டு இருக்கா?” ராஜேந்திரன் பதிலளித்தான்

“படிப்பைக் கெடுக்கப்பிடாது. படிச்சு முடிச்சுட்டு வா தாயி” என்றான் திருமலை.

இரண்டு முறை புக் வேணும், நோட் வேணும், கணக்கு சொல்லித்தா என கர்ஜீவனின் வீட்டிலிருந்து அனோக்கும் அனூப்பும் வந்துவிட்டார்கள். அவர்களுக்குப் ஆங்கிலத்தில் பதிலளித்தபடி வீட்டினரையும் கவனித்தாள் நந்தனா.

“கல்யாணத்துக்குப் பிறகு மதுரைலதானே நந்தனா இருக்கப் போறா. இப்ப இங்க  கொஞ்ச நாள் ஜாலியா இருந்துட்டு வரட்டும்” தனது உள்ளக் கிடக்கை வெளிப்படுத்தினார்  அகிலாண்டம்

காலையில் கடுப்படித்ததை சமாதனப் படுத்தும் விதமாக “நந்தனா தீதி கோவமா இருக்கியா” என்றவாறு வீட்டினுள் எட்டிப் பார்த்த ரிங்கு, சர்க்கரைப் பொங்கல் ருசியில் மயங்கி நந்தனாவுக்கு ஒரு முத்தமிட்டாள்.

நிமிர்ந்த நந்தனாவின் கண்களில் அவளையே விழுங்கி விடுகிறார்போல் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனும், கண்களில் வலியோடு  தெரிந்த ப்ரித்வியும்  பட்டனர். நந்தனாவுக்கும் ப்ரித்வியின் வலி வேதனையை ஏற்படுத்தியது. தான் ரஞ்சனைக் காதலித்தது தெரிந்து ப்ரித்வியின் மனம் எவ்வளவு வலித்திருக்கும். கலங்கினாள். எதோ அவளிடம் சரியில்லாததை உணர்ந்த ரிங்கு, நந்தனா கண்கள் போகும் திசையெங்கும் பார்த்தாள். அப்போதுதான் நந்தனாவை விட்டு கண்களை கொஞ்சம் கூட திருப்பாமலிருக்கும் ரஞ்சன் கண்ணில் பட்டான்.

வீட்டுக்குக் கிளம்புமுன் “ப்ரித்வி நான் மட்டும் ஆம்பிளையா இருந்தேன்னா இந்த சக்கரைப் பொங்கலுக்காகவே  நந்தனாவுக்குத் தாலி கட்டிருப்பேன். உனக்கு டப் காம்பட்டிஷனில்ல” என்று சொல்லிச் சென்றாள். ரஞ்சனுக்கு ஏதோ நெருடியது.

வனது அறையினுள் சென்றான் ப்ரித்வி. திடுதிப்பென வீட்டிற்கு வந்து ரஞ்சன் நிற்பான் என்று நினைக்கவில்லை. அவன் வந்திருப்பதைப் பார்த்தால் நந்தனாவின் கை காலில் விழுந்தாவது கூட்டிட்டுப் போயிடுவான் போலிருக்கு. அவன் எப்படி நந்தாவை விழுங்கிவிடுவதைப் போல பார்க்கிறான். கண்ணைத் தோண்டி கையில் கொடுத்துடலாம் போல எரிச்சலா இருக்கு. ரஞ்சன் அவளைப் பார்வையை தாங்குற அளவுக்கு எனக்கு பெரிய மனசெல்லாம் இல்லை. ஆனா நந்தா என்ன நினைக்கிறா? அவள் ரஞ்சன் கூட போக விரும்பினா….. யோசித்தபடியே ஜன்னல் வழியே பார்வையைப் பதித்து நின்றான்.

அவளது அறையினுள் சென்று பொதுவான பால்கனி வழியே ப்ரித்வியின் அறைக்கு சென்றாள் நந்தனா..

“சொல்லு நந்தா” ப்ரித்வி வலியை அடக்கிக் கொண்டு புன்னகைத்தான்

“நான்…. நான்….. படிச்சிட்டிருக்கப்ப  ரஞ்சனை….” வார்த்தைகள் திக்கின

“தெரியும். ரஞ்சன் உன்னை காதலிச்சது, நீ சம்மதம் சொன்னது, ரஞ்சனுக்கும் உனக்கும் கருத்து வேறுபாடு வந்ததுக்கான காரணம்…. உன் பெரியம்மா செஞ்ச திருட்டு வேலை… எல்லாம் தெரியும்”

“எப்படி…” திகைத்து கேட்டாள் நந்தனா

“உன்னை ட்ரைன்ல கூட்டிட்டி வரும்போது காய்ச்சல்ல எல்லாத்தையும் சொல்லிட்ட. உன்னை இந்த நிலைக்கு வர வச்சவனைப் பத்தித் தெரிஞ்சுக்க வேண்டாமா…. அதனால நானும் ரஞ்சனைப் பத்தி விசாரிச்சேன். நல்லவன்தான் ஏதோ அன்னைக்கு அப்படி நடந்துட்டான். அவன் உன்னைப் பத்தி குறைன்னு நெனச்சதெல்லாம் என்னால முடிஞ்சா அளவுக்கு மாத்திட்டேன்….. இங்கே படிச்சது, வெளி உலக பழக்கம் இதெல்லாம் மதுரைலயும் உனக்கு உதவி செய்யும். உனக்கு வேற ஏதாவது உதவி வேணும்னா கேளு” என்றான் ஜன்னல் கம்பியைப் பார்த்துக் கொண்டு.

“நான் உங்க வீட்டுல இருக்குறது உங்களுக்குக் கஷ்டமாயிருக்கா ப்ரித்வி”

‘அறைஞ்சுடுவேன்…. என் வீடாம்… ‘ நினைத்தவன் “இது நம்ம வீடுன்னு நினை” என்று திருத்தினான்.

“அப்ப ஏன் மதுரைக்குப் போறதைப் பத்தி பேசுறிங்க”

“நீ உனக்குப் பிடிச்ச இடத்துக்குப் போகலாம்னு தெளிவு படுத்தினேன்” இரண்டு நிமிடங்கள் அங்கு மௌனம் நிலவியது.

ப்ரித்வி எதையுமே உண்ணாதிருப்பதைக் கண்டு “சர்க்கரைப் பொங்கல் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு செஞ்சேன் ப்ரித்வி. ஒண்ணுமே சாப்பிடலையே” என்றாள்.

“பசிக்கல நந்தா….” என்றான். “எனக்குக் கொஞ்சம் வெளியில வேலையிருக்கு போயிட்டு அப்பறமா வர்றேன்”  எழுந்தான்.

“வெளி வேலையை நாளைக்கு கவனிக்கலாம். வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்காங்க சமைக்க வேண்டாமா? என் ஒருத்தியால எல்லாருக்கும் சமைக்க முடியுமா” என்றாள் அதிகாரத்துடன்.

எழுந்தவன் “சரி” என சமையலறைக்கு வந்தான்.

“ப்ரித்வி வெங்காயத்தை வெட்டித் தாங்க”,

“ராஜேந்திரன் அண்ணா…  அனோக்கை தக்காளியும் தயிரும் வாங்கிட்டு வர சொல்லுங்க”,

“ப்ரித்வி சின்க்கில் போட்டிருக்க பாத்திரத்தைக் கழுவ இத்தனை நேரமா”

“நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க ஆன்ட்டி… ப்ரித்வி மிக்சில அரைச்சுடுவார்” சமையலறையில் நந்தனாவின் குரல்தான் கேட்டது. அவளது ஆளுமையான குரல், அத்தனை பேருக்கும் சமைக்கும் வேலையை சிறிது சிறிதாக உதவியை வாங்கி முடித்த விதம், இவை எல்லாவற்றையும் கண்டு ரஞ்சனும் அவனது தாயும் அசந்து போயிருந்தார்கள். சமையல் முடிந்ததும் ப்ரித்வி தான் களைத்திருந்தான்.

“ப்ரித்வி, சோப், டவல், டிரஸ் எடுத்து வச்சிருக்கேன். குளிச்சிட்டு சாப்பிட வாங்க” உட்கார விடாமல் அரட்டினாள்.

அனைவரையும் அமரவைத்து ப்ரித்வியும் நந்தனாவும் உணவு பரிமாறினர். உணவின் சுவையில் மயங்கி அனைவரும் சாப்பிட்டனர். நந்தனா சைவ உணவு வகைகளை சமைத்திருக்க அசைவ உணவுப் பிரியர்களுக்கென கர்ஜீவனின் வீட்டிலிருந்து சிக்கன் சாக், சிக்கன் தில்ருபா என சமைத்துத் தந்திருந்தனர்.

ரஞ்சனின் தட்டிலிருக்கும் உணவு அப்படியே தொடப்படாமலிருந்தது. “சாப்பிடுங்க ரஞ்சன்” ப்ரித்வி சொல்லியும் ரஞ்சன் தொடவில்லை. வந்ததிலிருந்து நந்தனா ஒரு வார்த்தை கூட அவனிடம் தனியாகப் பேசவில்லை. எல்லாருக்கும் பொதுவான வாங்க மட்டும் ரஞ்சனுக்குப் போதுமா? அவன் அவளுக்கு ஸ்பெஷல் இல்லையா? தனியாக அவனை இழுத்துச் சென்று அவள் ரெண்டு அடி அடித்தால்  கூட மனது ஆறிவிடும். இவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா…. குழம்பி விட்டான் ரஞ்சன். இவளிடம் பேச ஒரு நிமிடம் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தான்.

அவனது தவிப்பைப் பார்த்த ப்ரித்விக்கே பரிதாபமாகிவிட்டது “எல்லாரையும் சாப்பிட வை நந்தா…” என நந்தனாவைக் கூப்பிட்டு ரஞ்சனின் புறம் கண்ணைக் காட்டிச் சொன்னான். பரமசிவத்தை கவனித்துக் கொண்டிருந்தவள், அப்போதுதான் ரஞ்சனைப் பார்த்தாள். “சாப்பிடுங்க ரஞ்சன்” மெதுவாய் சொன்னாள் நந்தனா. விலுக்கென நிமிர்ந்தவன் “கண்டிப்பா நந்து” என்றான் கண்களில் மகிழ்வோடு.

 

கடைசியாக சாப்பிட அமர்ந்தார்கள் ப்ரித்வியும் நந்தனாவும். சைவ உணவைப் பரிமாறிக் கொண்டாள் நந்தனா. சிக்கன் வைக்க வந்த அகிலாண்டேஸ்வரியைத் தடுத்தவள் “நான் சைவம் ஆன்ட்டி” என்றாள். அவள் சாப்பிடும் அழகை ரசித்தவாறு இருந்த ரஞ்சனுக்கு இதுவரை அதுகூடத் தனக்குத் தெரியாதது உரைத்தது. “எனக்கும் வேண்டாம் ஆன்ட்டி” என்று மறுத்த ப்ரித்வியிடம்

 

“டேய் ப்ரித்வி சிக்கன் வேண்டாமா? எப்படி இருந்த நீ  இப்படி மாறிட்ட” என்றான் ராஜேந்திரன்

“அவர் சைவம்னுதான் அண்ணா சொன்னார். ஏன் இப்படி கேக்குறிங்க” கேள்வி கேட்டவளிடம்

“ ‘நான் சாப்பிடுற ஆடு சைவம்னா.. நானும் சைவம்தானே’ இப்படின்னெல்லாம் காலேஜ்ல பிட்டைப் போடுற ப்ரித்விங்கிற என் நண்பன் எங்க போனான்னு தேடும்மா”

றுநாள் அனைவரும் ஊருக்குக் கிளம்பினர். ரஞ்சனின் புண்ணியத்தால் அவர்களுக்கு விமானப் பயணம். அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு அனைவரும் வந்திருந்தனர்.

தாங்கள் நந்தனா உயிரோடு இருப்பதைக் கண்டதாகவும், ஊரில் அவள் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்பதால் வரவில்லை என்றும் சொல்வதாக வாக்களித்தனர் ஊரார் . “உங்க பெரியம்மாளுக்கிருக்கு கடா வெட்டு” என்றபடி கிளம்பினான் திருமலை.

“திருமல இங்க வரதுக்கு முன்னாலேயே அவங்களை வளைக்க ரஞ்சன் தம்பி ஆள் ஏற்பாடு செய்துட்டுத்தான் வந்தது. இந்நேரம் பாதி வேலை  முடிஞ்சிருக்கும்”

‘அப்ப சீக்கிரம் வாய்க்கால்பாறைக்கு மூணு டிக்கெட் போடணும்னு சொல்லு” திருமலையும் சிவனாண்டியும் பேசிக் கொண்டனர்.

“கவலைப் படாதேம்மா எங்க வீட்டு ஆளுங்க மூலமா உன்னோட சொத்தை பெரியப்பா குடும்பத்துகிட்டேயிருந்து  திரும்ப வாங்கிடலாம்” தைரியம் சொன்னார் அகிலாண்டம்.

“வாங்கினதும் வீட்டைத் தவிர மத்ததை வித்து பிசினெஸ்ல போடப்போறேன்” என்றாள்.

ஏன் என்ற கேள்வியோடு பார்த்தவரிடம் “என்னால நிலத்தையெல்லாம் கவனிக்க முடியாது ஆன்ட்டி. அதனாலதான். அப்பறம் பெரியம்மாவ  வீட்டைக் காலி பண்ண வச்சுட்டுப் பெரியகுளம் வீட்டைக்  வாடகைக்கு விட்டுட்டுலாம்னு நினைக்கிறேன். அவங்க இதுவரை என்னை கவனிச்சுட்டதுக்கு சமமா சொத்தை சுரண்டிட்டாங்க. அவங்களோட பேராசைக்கு இனிமே என்னால தீனி போட முடியாது. சோ அவங்க வழியப் பார்த்துட்டு கிளம்ப வேண்டியதுதான்”

“சொத்தை அவங்க அவ்வளவு சுலபமா கொடுத்துடுவாங்களா?”

“ஒரு நல்ல லாயரா பாத்து அவங்கமேல சட்டப்படி கேஸ் ஒண்ணு போடணும். எனக்கு சொந்தமான தோட்டத்தை என் அனுமதியில்லாம திருட்டுக் கையெழுத்து போட்டு வித்திருக்காங்க. வித்த சொத்து நம்ம கைக்கு வரலைன்னாலும் நாம போடப் போற வழக்கு அவங்க என்னோட மத்த சொத்துக்களை விக்க விடாம தடுக்கும். அப்பறம் மெதுவா அவங்ககிட்ட சிக்கிருக்க பணத்தை விடுவிக்க வேண்டியதுதான்”

“நந்தனா ஜான்சி ராணியா மாறிட்ட” என்றபடி விசிலடித்தான் ராஜேந்திரன்.

“பக்காவா ஒரு வக்கீலை ஏற்பாடு செய்ங்கண்ணா. பரிட்சை முடிஞ்சதும் நான் ஊருக்கு ஒரு எட்டு வரோம்” என வேண்டுகோள் விடுத்தாள்

ரஞ்சனுக்கு நந்தனாவைத் தனியே சந்தித்து ஒரு வார்த்தை கூடப் பேச முடியாத அளவு ஆட்கள் நிறைந்திருந்தது எரிச்சலைத் தந்தது. அனைவரும் கிளம்ப, வேறு வழியில்லாமல் தாய், ப்ரித்வி, ராஜேந்திரன் மூவரின் முன்பே மன்னிப்பை வேண்டினான்

“நந்து என்னை மன்னிச்சுடு. அன்னைக்கு உன்கிட்ட பேசின வார்த்தைகள் ரொம்பத் தப்பு”

புன்னகைத்த நந்தனா “உங்க மேல எனக்கு கோவமில்லை ரஞ்சன். சொல்லப் போனா எனக்கு வந்த தைரியம், இந்த வாழ்க்கை எல்லாமும் தந்ததே உங்களோட அந்த வார்த்தைகள்தான். சோ… ஒரு வகைல நான் உங்களுக்கு நன்றி சொல்லணும்”

“உனக்கும் ரஞ்சனுக்குமிடைல இருக்கிற கருத்து வேறுபாட்டை மறந்துடும்மா. ரஞ்சனைக் கல்யாணம் செய்துட்டு எங்க வீட்டுக்கு சீக்கிரம் வா”

அகிலாண்டம் வேண்டுகோள் விடுத்த அந்த நிமிடம் அனைவரும்  அமைதியானார்கள். ரஞ்சன் அவள் முகத்தை துடிக்கும் மனதை அடக்கியபடி பார்க்க, ப்ரித்வி தனது கைகளை இறுக்கி உணர்வுகளைக் கட்டுபடுத்தினான். நந்தனா மௌனத்தைக் கலைத்தாள்

“மன்னிச்சுக்கோங்க ஆன்ட்டி. நீங்க போன வருஷம் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தா அந்த நந்தனா பெரிய பாக்கியம் கிடைச்சதா சந்தோஷமா சம்மதிச்சிருப்பா”

இப்ப என்ன வந்தது என்ற கேள்வியோடு  பார்த்தான்.

“ரஞ்சன், இப்ப என் மேல உங்களிக்கிருக்குறதுக்கு பெயர் காதலில்லை. குற்ற உணர்ச்சி. என்னைக் கல்யாணம் செய்துட்டா அது மறையும்னு நினைக்கிறிங்க. ஆனால் அதுக்கு அவசியமில்லைன்னு நான் சொல்றேன்”

“நம்ம காதல்”

“அது காதலான்னு தெரியல ரஞ்சன். உங்களோட ஆர்வம் எனக்கு ஒருவிதமான ஈர்ப்பைத் தந்தது. உங்களுக்கும் அப்படித்தான். ஆனா என்னோட குறைகளை உங்களால பொறுத்துக்க முடியாதது போல உங்களது கடுமையான சொற்களை என்னால ஜீரணிக்க முடியாம போச்சு. உண்மையான காதலில் அடுத்தவரோட குறைகள் ஒரு பொருட்டாவே தெரியாது. அதே மாதிரி கோவமும் அங்க நிற்காது. இது எதுவுமே நம்மகிட்ட இல்ல. உங்களைப் பத்தி எனக்குத் தெரியாது. அதுமாதிரி என்னைப் பற்றி உங்களுக்கு சுத்தமா தெரியாது. தினமும் பார்க்கும் பத்து நிமிஷங்களில் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறதா நினைச்சு, உங்களை ஆபிஸ்ல பாக்க வந்து, எல்லாருக்கும் முன்னாடி உங்களுக்கு  தர்மசங்கடமான நிலையை உருவாக்கி. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ரஞ்சன்” என்றாள்

“இன்னமும் உனக்கு என் மேல் இருக்கும் கோவம் போகலையா நந்து. ஆயிரம் முறை சாரி கேட்டுக்கிறேன். அப்பறமாவது நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்குவியா” என்றான்  ரஞ்சன்

“ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கிறது இருக்கட்டும் மிஸ்டர். ரஞ்சன்,  நீங்க இப்ப மணக்கக் கேக்குறது மிசர்ஸ் நந்தனா ப்ரித்விராஜ்கிட்ட. அது எப்படி சரி வரும்” அதன்பின் ரஞ்சனின் முகம் இறுகியது. ப்ரித்வியின் முகம் அதிர்ந்து பின் இயல்புக்குத் திரும்பியது.

 

பிளைட் கிளம்பியது. ரஞ்சனின் முகம் பாறையாயிருந்தது.

“ஒரு தீப்பெட்டி பிளாட், ஓட்டை பைக், நடுத்தர குடும்ப வாழ்க்கை. என்னை விட மேன்மையா அவன்கிட்ட அப்படி என்னம்மா கண்டா? தூக்கி எறிஞ்சுட்டாளே” குமுறினான்.

“அவ எறியல ரஞ்சன் நாமதான் அவளைப் புரிஞ்சுக்காம அவமானப்படுத்தினோம். நம்ம அவளைப் புரிஞ்சிக்கிட்டப்ப காலம் கடந்துடுச்சு” அகிலாண்டம் திருத்தினார்.

“தாமதமாய் கேட்கப்பட்ட மன்னிப்பு, அதனால்தான் பயனில்லாம வீணாயிடுச்சு. ஆனா நந்தனா உயிரோட இருக்குறதே சந்தோஷம்மா….. இல்லைன்னா…. நான் குற்றவுனர்ச்சிலயே செத்திருப்பேன்….. ரொம்ப பேசிட்டேன்மா. அவளைக் காதலிச்சதே தப்புன்னு சொன்னேன். இப்ப அந்த நிமிடங்களை மாற்ற முடிஞ்சா எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்”

“ரஞ்சன், நான் வேணும்னா நந்தனாகிட்ட மறுபடியும் பேசிப்பார்க்கிறேன்” தாங்க முடியாமல் சொன்னார்.

“வேண்டாம்மா அவ இப்ப என் நந்தனா இல்லை. என் நந்து என் வார்த்தைகளைக் கேட்ட அன்னைக்கே செத்துட்டா. இப்ப நான் பார்த்தது நந்தனா ப்ரித்விராஜ். இவ நீயும் நானும் எதிர்பார்த்த மாதிரி நாகரீகமா இருக்கா, நாசுக்கா இருக்கா, அறிவா இருக்கா, ஆனா என் நந்துகிட்ட இருக்குற அந்த இன்னசென்ஸ் இவ கிட்ட இல்ல. என் நந்துவுக்கு என்னைப் பார்த்தவுடனே ஒரு பயம், ஒரு குறுகுறுப்பு வரும். அவகிட்ட எனக்கான ஸ்பெஷல் பார்வை இருக்கும். என் அறிவைப் பார்த்து ஒரு மயக்கமிருக்கும்.

ஒரு மாசம் அவளைப் பாக்காம இருந்தேன்மா…. அப்ப அவ கண்ணு என்னைத் தேடுச்சு. தூரத்துல பார்த்ததும் வேகமாய் சைக்கிளை ஓட்டிட்டு வந்தா…. அது என் நெஞ்சில இன்னமும் நிக்கிது.

ஆனா… ஆனா….  இத்தனை நாள் கழிச்சு பாக்கிறேன், இவ என்னை சாதாரணமா பாக்குறாம்மா. என்கிட்டே பேசக் கூட முயற்சி செய்யல. என்னை கவனிக்க சொல்லி அந்த ப்ரித்வி சொன்னதும்தான் நான் சாப்பிடாததை கவனிச்சா.

என் மேல கோவமில்லைன்னு சொல்லிட்டா. உரிமை இருக்குற இடத்துலதானே கோவமும் வரும். உரிமையுள்ளவனா  நெனைச்சிருந்தா, என் சட்டையைப் பிடிச்சு எப்படி நீ இப்படி சொல்லலாம்னு கேட்டிருப்பா. அவ வாயைத் திறந்து என்னைத் திட்டல ஆனா அவ செஞ்ச செயல்கள் ஒவ்வொண்ணும் என்னைக் குத்திக் கிழிச்சது.

அவகிட்ட இருந்த இன்னசென்ஸ், என் மேல அவளிக்கிருந்த நம்பிக்கை, காதல் எல்லாத்தையும் நானே கொன்னுட்டேன். இவ வேற யாரோ ஒருத்தி. என் நந்தனா நிஜமாவே செத்துப் போயிட்டா.”

விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்

விழி வந்த பின்னாலே சிறகொடித்தாய்

நெஞ்சு பிளக்க சீட்டில் சாய்ந்து கண்மூடும் மகனைக் காணும்போது அகிலாண்டேஸ்வரியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

னைவரையும் பிளைட் ஏற்றியபின் ப்ரித்வியும் நந்தனாவும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

வீட்டினுள் நுழைந்ததும் “ரஞ்சனை பார்த்தா கொஞ்சம் கஷ்டமா இருக்கு நந்தா. நீ இப்படி வெடுக்குன்னு சொல்லிருக்க வேண்டாம்” என்றான்

“ப்ரித்வி வீண் நம்பிக்கை தர்றது, அப்பறம் அம்மா சொன்னாங்க… அபி சொன்னான்னு ஜகா வாங்குறது இதெல்லாம் ரஞ்சனோட பழக்கம். என்னைப் பொறுத்தவரை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு”

“நான் உன் மனசைக் கலைக்காம இருந்திருந்தா ரஞ்சனுக்கு சான்ஸ் அடிச்சிருக்குமில்ல” வருத்ததோடு கேட்டான்.

“கண்டிப்பா இல்லை ப்ரித்வி” உறுதியோடு சொன்னாள்.

“ஒரு வாதத்துக்காக கேக்குறேன். ரஞ்சனை நீ கல்யாணம் செய்த பிறகு இப்படி அவன் நடந்திருந்தான்னா மன்னிச்சுருப்பல்ல. ஒரு தாலிதான் அவன் மன்னிப்பை முடிவு செய்யுதா?”

“நந்தனா… அப்படின்னா ரெண்டு கை, ரெண்டு கால், ரெண்டு கண்ணு இதுவா? பெரியம்மாவை எதிர்த்துப் பேசமுடியாத என் அடிமைத்தனம், காதல்ன்னு நினைச்சு ஏமாந்த அசட்டுத்தனம், தற்கொலைக்கு முயற்சி செய்த கோழைத்தனம் இப்படி எல்லா குறைகளும் கலந்தவதான் நந்தனா. என்னோட கணவர் என்னோட நிறைகளை மட்டுமில்லாம குறைகளையும் சேர்த்து ஏத்துக்கணும்னு நினைக்கிறது தப்பா ப்ரித்வி.

ரஞ்சனைப் பத்தி என்ன சொல்ல, ஒருத்தியை கல்யாணம் வரைக்கும் இழுத்துட்டுப் போக முடிஞ்சவருக்கு, பிரெண்ட் சொன்னதும் அவளோட குறைகள் கண்ணில படுது. கல்யாணத்துக்கு பிறகு அந்த அபி ஏதாவது சொல்லிருந்தா என்னை விரட்டி விட்டிருப்பாரா? இல்லை ஊருக்கு பயந்து மனசுக்குள்ள வச்சு தினமும் தேள் மாதிரி கொட்டிகிட்டே இருந்திருப்பாரா? என்னோட காதலியை எனக்குப் பிடிச்சா போதும், அவளைப் பத்திக் குறை சொல்ல நீ யாருன்னு அவரால நண்பர்கிட்ட கேக்க முடியல. அங்கேயே எங்க காதல் பொய்த்துப் போயிடுச்சு.

எங்க ஊர் ஆளுங்களுக்கு நான் உங்ககூட இருக்குறது தெரிஞ்சுடுச்சு. இப்ப ஊருக்குப் போனதும் கொஞ்சநாள் கழிச்சு யாரவது ‘யாரோ ஒருத்தன்கூட ஒரு வருஷம் தங்கிட்டு வந்திருக்கா’ன்னு பழி சொன்னா… அப்ப அவர் நடவடிக்கை எப்படி இருக்கும். எனக்குத் தெரியல. ஆனா எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். ப்ரித்வியை நான் லவ் பண்ணுறேன். மஞ்சள் கயிறு மேஜிக் போடாமலேயே அவரோட மனைவியாவே என்னை உணர ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு”

“ஜானு… “ என்று ஆசையோடு கூப்பிட்ட ப்ரித்வியின் வாயில் பட்டென அடி போட்டாள்.

“ராட்சஸி…”

“பேசாதே….. என்னை கூட்டிட்டு வரதுக்கு முன்ன ராஜேந்திரன் அண்ணன் கிட்ட என்ன சொன்ன”

“வயசுக்கு வந்த பெண்ணை இந்த தடிப்பய ப்ரித்வி கூட எப்படி அனுப்புறதுன்னு தயங்கினான். நான்தான் டேய் மச்சான் இவ உன் தங்கச்சி மட்டுமில்லடா இனிமே என் பொண்டாட்டி…. கவலைப்படாதே நான் நல்லபடியா பாத்துக்கிறேன்னு தைரியம் சொன்னேன். அவனும் அந்த பிரதாப்க்கு நான் தேவலாம்னு நெனச்சு மனசைத் தேத்திகிட்டான்”

“இதைப்பத்தி இதுவரை உங்க வாயிலேருந்து ஒரு வார்த்தை வந்ததில்ல. அண்ணன்தான்  நேத்து என்கிட்டே சொன்னாங்க. பொண்டாட்டிய கூப்பிடுற மாதிரி ஜானுன்னு கூப்பிட வேண்டியது, பட்டு பட்டுன்னு முத்தம் தர வேண்டியது அப்பறம் ஒருத்தன் வந்து சாரின்னு சொன்னா அவன்கூட என்னை அனுப்பிடலாம்னு நெனச்சியா? எப்படி ‘உனக்குப் பிடிச்ச இடத்துக்குப் போகலாம்னு தெளிவு படுத்தினேன்’” அவன் சொன்னதைப் போல சொல்லிக் காண்பித்தாள்

“என்னை இந்த வீட்டை விட்டு, உன்னை விட்டு அனுப்பனும்னு நெனச்ச மவனே குடலை உருவி மாலையா போட்டுக்குவேன். அதையும் மீறி நான் வெளியே போகணும்னு நெனச்சேன்னா…..”

அவனது முகத்தை ஏந்தியவள் சொன்னாள் “பொணமா போக இருந்தவளைத் தானே காப்பாத்திக் கூட்டிட்டு வந்த, உன்னை விட்டு பிரியணும்னா மறுபடியும் பொணமாக்கி அனுப்பு”

ப்ரித்வியின் கைகள் அவளது வாயை மூடின “நந்தா… பேவகூவ்…. தப்பா பேசாதே. என் வாழ்வு உன்னோடதான்னு நான் முடிவு பண்ணி ரொம்ப நாளாச்சு. அந்த அளவுக்கு உன்னைப் பார்த்ததிலிருந்து உன்கிட்ட மயங்கி போயிருக்கேன். இந்த ரஞ்சன் உன் மனசில் எந்த அளவு இருக்கான்னு எனக்குத் தெரியும். ஆனா உனக்கும் தெரியனுமில்லையா அதுக்காகத்தான் இந்த அதிர்ச்சி வைத்தியம். நம்ம படுக்கைகளுக்கு வேணும்னா இடைவெளி இருக்கலாம் ஆனால் நம்ம மனசுக்கு எப்போதும் இடைவெளி இருந்ததில்லை. நான் உன்னை எப்போதும் என் மனைவியாத்தான் நெனச்சிருக்கேன், நடத்திருக்கேன். நீயும் என்னிடம் எடுத்துக்குற உரிமையை வேற யார்கிட்டயும் எடுத்துகிட்டதில்ல. இல்லைன்னா ரிங்கி கிஸ் தந்தப்ப உனக்கு ஏன் அவ்வளவு கோவம் வரணும். யோசிச்சுப் பாரு உனக்கே புரியும்”

“ஆமாம் ப்ரித்வி. ரஞ்சன் ராதா கல்யாணம் நிச்சியமானப்ப கூட என்னை ஏமாத்திட்டாங்க நம்ப வச்சுக் கழுத்தறுத்துட்டாங்க அப்படின்னு ஒரு எண்ணம்தான் அதிகமா இருந்தது. ஆனா உங்களை அப்படி சந்தேகப் படவேயில்லை. ஆனா ரிங்கி உனக்கு முத்தம் தந்தா என் உயிரையே பிரிச்சு எடுத்த மாதிரி இருந்தது”

“மக்கு…. அவ உன்கிட்ட ஜானுன்னா என்ன அர்த்தம்னு சொல்லிடுவேன்னு மிரட்டி, நான் உன்னைப் பார்த்து ஜொள்ளு விட்டதையெல்லாம் வீடியோ எடுத்து மிரட்டி  பணம் வாங்கிட்டு போறா…. நீ அவளைப் போய் சந்தேகப்படுறியே”

“நான் செஞ்சது ரொம்பத் தப்பு ப்ரித்வி. கல்மிஷமில்லாத குழந்தை மாதிரி அவ. சாயந்தரமே வந்து சமாதனம் செய்துட்டுப் போனா பாரேன். என் காதுல வேற ‘தீதி நான் காலைல விளையாட்டுக்குத் தான் ப்ரித்விக்கு முத்தம் தந்தேன். உன் வீட்ல இருக்குற புது வில்லன் உன்னை முறைச்சிட்டே இருக்கான். அவனோட பார்வையைப் பார்த்து எங்க ப்ரித்விக்கு முகமே செத்து போயிடுச்சு. காலைல நடந்ததை வச்சு எங்க ப்ரித்வியைப் பழி வாங்கிடாதே. அவன் உன் மேல உயிரையே வச்சிருக்கான்னு சொல்லிட்டு போனா’”

“அந்த ப்ளாக்மெயிலர், எனக்காக சப்போர்ட் பண்ணாளா?” ஆச்சிரியப்பட்டான் ப்ரித்வி

“இருந்தாலும் எல்லா ஆண்களிடமும் இப்படி உரிமை எடுத்துப் பழகுறது தப்புன்னு அவகிட்ட நாமதான் சொல்லணும் ப்ரித்வி. பெரியவளாயிட்டால்ல” பொறுப்போடு சொன்னாள் நந்தனா.

அவளையே விழுங்கி விடுவதைப் போல பார்த்த ப்ரித்வி “ஜானு இன்னைக்கே இப்பவே தேவி தாலப் மந்திர்ல கல்யாணம் செய்துக்கலாம். இனிமே உன்னை விட்டு ஒரு செகண்ட் கூட விலக முடியாது”

வெட்கத்தோடு சம்மதமெனத் தலையாட்டியவள் “ஜானுன்னா உண்மைலயே என்ன அர்த்தம்  ப்ரித்வி. நான் கவனிச்ச வரைக்கும் கணவன் மனைவிதான்  கூப்பிடுறாங்க”

“ஒரு வார்த்தைல சொல்ல முடியுறதா அது…  ஜானு, மை ஸ்வீட் ஹார்ட், மை டார்லிங், மை லைப், என் அன்பே, என் உயிரே, நா ஹ்ருதயம், நா செல்லி, எண்டே பொன்னே, எண்டே முத்தே ……. “ என  ஜானுவிற்கு உலகிலிருக்கும் எல்லா மொழிகளிலும் அர்த்தம்  சொல்ல ஆரம்பித்தான்.

 

நிறைந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 40தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 40

மாலையே லில்லியின் அறையில் சரயுவுக்கு இடம் கிடைத்துவிட, அன்றே விடுதிக்கு செல்வதாக சொல்லிவிட்டாள். கையாலாகாதவனாய் தலையாட்டினான் ஜிஷ்ணு. கிளம்பும் முன் அவனிடம் ஒரு சிறிய வெல்வெட் பையைத் தந்தாள். “ஜிஷ்ணு… இது எல்லாம் எங்க அம்மா நகை. ஊருல இருந்து வரும்போது

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 20என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 20

அத்தியாயம் -20 ஜன்னலில் இருந்து வந்த நிலவொளியில்  தங்கப் பதுமையாய் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்  அரவிந்த். சித்தாராவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் அவன் மனம் தவித்தது. அவளிடம் என்னனவோ சொல்ல ஏங்கியது.  என் வாழ்கைக்கு வந்த உயிர்ப்பு நீதான் மனதளவில்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29

அத்தியாயம் -29   கல்லாய் இறுகிய முகத்துடன் வீட்டிற்கு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் சித்தாரா. அவளின் நிலை கண்டு சந்திரிகாவின் கண்களில் நீர். “சித்து மனசைத் தளர விடாதே. இந்த சைலஜாவப் பார்த்தாலே எனக்கு நல்ல அபிப்பிராயம் வரல. இவ்வளவு நேரம்