Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 12’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 12’

அத்தியாயம் – 12

 

ரவு ஏழரை மணிக்கு ஜலந்தரை அடைந்தது சென்னை-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ். சாய், காப்பி என குரல்கள் காதில் விழ ஆரம்பிக்க, “நந்தா எந்திரி…. ஊர் வந்துடுச்சு. அஞ்சு நிமிஷம்தான் இந்த ட்ரைன் ஸ்டேஷன்ல நிக்கும். அதுக்குள்ளே இறங்கல, அமிர்தசரஸ் போற கும்பல் நம்மை உள்ள தள்ளிட்டு ஏற ஆரம்பிச்சுடுவாங்க. கம்ஆன் க்விக்” என்று ப்ரித்வி வலதுகையை நீட்ட, இறுக்கப் பற்றிக் கொண்டாள் நந்தனா. இருவரும் இறங்குவதற்கு வசதியாக வாயிலருகே நின்றுக் கொண்டனர். பிளாட்பாரத்தில்  தென்பட்ட மனிதர்களை ஆர்வமாகப் பார்த்தாள் நந்தனா.

 

“நிறைய பேர் டர்பன் கட்டல. ஆனா எல்லா பொண்ணுங்களும் சல்வார்தான் போட்டிருக்காங்க” தனது முதல் கண்டுபிடிப்பை ஆர்வமாய் பகிர்ந்து கொண்டாள். ஆமோதித்தபடி இறங்கினான் ப்ரித்வி. தோளில் அவனது பையை மாட்டிக் கொண்டு, வலது கையில் அவளது சிறு பையினை எடுத்தவன், இடக்கையால் நந்தனாவை அணைத்தபடி ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினான்.

 

“டின்னர் முடிச்சுட்டு போயிடலாம். ஆலூ பரோட்டா சாப்பிடலாமா?” ஆர்வத்துடன் கேட்டவனிடம் வேகமாய் தலையாட்டினாள். காய்ச்சல் வந்த நாக்குக்கு காரமாய் உணவிருந்தால் தேவலாம் போலிருந்தது.

 

“ஆலூன்னா உருளைக்கிழங்கு. காரசாரமா உருளைகிழங்கு மசாலா செஞ்சு, அதை கோதுமை பரோட்டா நடுவுல வச்சுத் தேய்ச்சுடுவாங்க. இதுக்கு தயிர்ல புதினா அரைச்சு கலந்து தருவாங்க பாரு…. ” என்று செய்முறையை விளக்கி சொல்லியபடி அவளை தான் வழக்கமாக சாப்பிடும் உணவகத்திற்கு அழைத்து சென்றான்.

 

ரஞ்சனுடன் உணவகத்துக்கு சென்றபோது நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளை முயன்று பின் தள்ளினாள். அவளது முயற்சி புரிந்த ப்ரித்வியும் கவனத்தைத் திருப்ப ஜலந்தரைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தான்.

“ஜலந்த்ரான்னு ஒரு ராஜாவோட பேர்தான் எங்க ஊருக்கு. ‘ஜல்’ன்னா தண்ணி, ‘அந்தர்’ன்னா உள்ளே. அவன் தண்ணிக்கு உள்ள வாழ்ந்தானாம். அதனாலதான் அந்தப் பேரு”

 

ஆலூ பரோட்டா, மசாலா பால் என ஆர்டர் செய்தான். காய்ச்சல் சுத்தமாக விட்டு, அசதி மட்டுமிருந்தது நந்தனாவுக்கு. லேசான குளிர ஆரம்பித்த வானிலையில், அந்த சூடான பரோட்டா சுகமாக  இறங்கியது அவள் வயிற்றில். அடுக்கடுக்காய், சுவர் கடிகாரத்தின் அளவில், சுண்டுவிரல் தடிமனிலிருந்த ஒரு பரோட்டாவை கஷ்டப்பட்டு உண்டாள். “ப்ரித்வி இது ரொம்ப பெருசா இருக்கு. என்னால சாப்பிட முடியல. இன்னொன்னை வேணும்னா பார்சல் கட்டித் தர சொல்றிங்களா. வீணாக்காம நாளைக்கு சாப்பிட்டுடுறேன்” வீணாக்கினால் என்ன சொல்வானோ என பயந்தபடி சொன்னாள்.

 

“நான் ஒருத்தன் இங்கிருக்கப்ப ஏன் வீணாகுது?” என்றபடியே அவள் மிச்சம் வைத்ததைத் தட்டோடு எடுத்து ப்ரித்வி சாப்பிட ஆரம்பிக்க, திருதிருவென விழித்தாள்.

 

“முட்டைக் கண்ணை விரிச்சு முழிக்காம மசாலா பாலைக் குடி” பெ…ரிய டம்ளரில் காலிட்டருக்கு குறையாமலிருக்கும் பாலைக் காண்பிக்க,  மலைத்தாள் நந்தனா.

 

“இனிமே எனக்கு என்ன ஆர்டர் செய்தாலும் பாதி அளவு மட்டும் செய்யுறிங்களா?” தீவிரமாய் சொன்ன நந்தனாவைப் பார்த்து சத்தமாய் சிரித்தான்.

 

“நீ மிச்சம் வைக்கிறதை சாப்பிட நானிருக்கப்ப நீயேன் பேபி கவலைப்படுற?”

 

“நான் ஒண்ணும் பேபி கிடையாது”

 

மாலை மங்கிய நேரம், எலுமிச்சை நிற சல்வாரில் தன் கண்ணுக்கு தேவதைப் பெண்ணாய்  ஜொலித்தவளின் முகவாயை தனது ஆள்காட்டி விரலால் தூக்கியவன் சொன்னான்

 

“சரி ஜானு”

 

“அதென்ன ஜானு?” எதிர் கேள்வி கேட்டாள்.

 

“இங்கயிருக்கவங்களுக்கு நீ என் பிரெண்ட்டோட தங்கை. உன் பெயர் ஜானுன்னு சொல்லலாமான்னு யோசிக்கிறேன்” சீரியஸாய் பேசி சமாளித்தான்.

 

“அப்ப என் பெயர் ஜானகின்னு சொல்லப் போறிங்களா?”

 

“பேசாம… நந்தனா உன் செர்டிபிகேட் பெயர். வீட்டுல செல்லமா ஜானுன்னு சொல்லிடலாமா” அவளிடமே யோசனை கேட்டான். அவள் அதை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்ளப்போவதை அறியாமல்.

 

 

மது புது மாளிகைக்கு வருகை தந்திருக்கும் தென்னகத்து தேவதையை வரவேற்கிறேன்” இடுப்பு வரை குனிந்து மேல்நாட்டுப் பாணியில் வரவேற்று, அவளை ஆதர்ஷ் நகரிலிருக்கும் தனது அடுக்குமாடி ரெட்டை படுக்கையறை  வீட்டுக்குள் கை பிடித்து அழைத்து சென்றான்.

 

உள்ளே நுழைந்த நந்தனா திகைத்துப் போனாள்.

 

இறைந்து கிடக்கும் பொருட்களில் ஒரு மாதிரி இடம் பண்ணி பாலே டான்ஸ் ஆடுபவளைப் போல் நுனிக் காலில் நின்றவளை, விழாமலிருக்கும் பொருட்டு தனது கைகளால் அவளது தோள்களைப் பிடித்துக் கொண்டான்.

 

இதென்ன வீடா… இல்லை வேண்டாத பொருட்களைப் போட்டு வைக்கும் குடோனா… என்ற அர்த்தத்தில்  ப்ரித்வியை முறைத்தாள் நந்தனா. அவனது பார்வை அறையில் மாட்டியிருக்கும் சுவரொட்டியை சுட்டிக்  காட்டியது

 

‘நல்ல இல்லத்தின் அடையாளம், பிசுக்கான தரை, போர்க்களமான சமையலறை, துவைக்காத துணிகள், அழுக்கான அடுப்பு மற்றும் சந்தோஷமான குழந்தைகள்’ என்றது

 

“எங்க குழந்தையைக் காணோம்” நக்கலாய் கேட்டாள்

 

“எங்கம்மாவுக்கு நான்தானே குழந்தை. இப்ப சொல்லு, இந்தக் குழந்தையை பத்திரமா பாத்துக்கிறியா?”

 

“ஏதோ வீட்டு கிளீனிங், சமையல் மட்டும் செய்தா போதும்ன்னு சொன்னிங்களே. ஈசியா இருக்கும்னு நம்பி ஏமாந்துட்டேன்”

 

“இப்படில்லாம் சொல்லப்பிடாது நந்தா. இது உன் திறமைக்கு ஒரு சவால். நடந்தவை கடந்து போகட்டும், நேற்றைய பற்றிய நினைவுகளை இந்த குப்பைகளோடு தூக்கிப் போட்டுட்டு நாளையை நமதாக்க பாடுபடுவோம். இந்த யுத்தத்தில் குப்பை கூளமென அணிவகுத்து நிற்கும் நம் எதிரிகளை டரியலாக்குவோம். முழங்கட்டும் சங்கு, வெற்றிவேல், வீரவேல்” என உணர்ச்சிமிகு உரையாற்ற, மலைத்து நின்றாள் நந்தனா.

 

“போன மாசம் கூட சுத்தம் பண்ணேன் நந்தா. பாரு வெளிக்கதவுலேருந்து பெட்ரூம் வரை நடக்குறதுக்குப் பாதை இருக்கு. அப்பறம் அங்கேருந்து பாத்ரூமுக்கு” சாமான்களுக்கு நடுவே ஒரே ஒரு ஆள் நடப்பதற்கு வாகாக பொருட்களை ஒழித்து ஏற்படுத்திருந்த  ஒற்றையடிப் பாதையைக் காட்டினான்.

 

“ப்ரித்வி…. “ அடக்க முடியாமல் கலகலவென சிரித்தவளின் கண்களில் நீரே வந்துவிட்டது.

 

“எப்படி இதுல தூங்குவிங்க” என்றவளின் கேள்விக்கு கழைக்கூத்தாடி வித்தை காண்பிப்பது போல அந்த சிறு பாதையில் கவனமாக நடந்து சென்று படுக்கையில் படுத்துக் காட்டினான்.

 

“உனக்கு படுக்க இடமில்லயே? என்ன செய்யலாம்?” என ரொம்ப யோசிக்க

 

“ப்ரித்வி… ரொம்ப நாளா சத்தத்தையே காணோம். எப்ப மெட்ராஸ்லேருந்து வந்த? எப்படி இருக்க?” என்று பஞ்சாபியில் மூச்சுவிடாமல் கேள்வி கேட்டவாறு பக்கத்து வீட்டுக்காரர் நுழைந்தார். அங்கு குப்பைக்கு நடுவே தேவதையாய் நின்று கொண்டிருந்த நந்தனாவைப் பார்த்தவர் விசிலடித்தபடியே

 

“அட… யாருடா இந்த ஸ்ரீதேவி” என வியக்க

 

“என் பிரெண்ட்டோட தங்கை அங்கிள். மேற்படிப்பு படிக்க இங்க வந்திருக்கா” அவசர அவசரமாய் சொன்னான்.

 

“நீ மெட்ராஸ்லதான் படிப்பு சூப்பர்ன்னு சொல்லிட்டு அங்க போய் படிச்ச…  இவ ஜலந்தர்ல படிக்க வந்தாளா?” நம்பாத பார்வை பார்த்தார்.

 

“அங்கிள் நாங்க படுத்துத் தூங்க இடமில்ல. முதல்ல அதுக்கு என்ன செய்யலாம்னு சொல்லுங்க”

 

“உன்னோட சிங்கள் பெட் என்னாச்சு” என்றவர் அவனது முறைப்பைக் கண்டு

 

“இந்த வாரம் எனக்கு நைட் ஷிப்ட்தான். அதனால இந்த ஸ்ரீதேவியை என் வீட்ல படுக்க வைக்கலாம். பதிலுக்கு எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே”

 

“என்னது”

 

“என் முதல் பொண்ணை கல்யாணம் செய்துக்கோ. அவளுக்கு பாக்கெட்மணி கொடுத்து கட்டுப்படியாகல. என்ன… ரிங்கி  இவளை விட ஒரு அம்பது கிலோதான் அதிகம். நீ அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்ட…”

 

“நீங்க கிளம்புங்க… நாங்க ஹோட்டல்லயே  தங்கிக்கிறோம்”

 

“முறைக்காதடா….. எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போறேன். அப்பன் மகன் ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு மட்டும் ஒடிசல் தேகம், நீள முடி, பெரிய கண்ணு இருக்குற தமிழ்நாட்டுப் பொண்ணைக் கடத்திட்டு வாங்க. உங்களை நம்பி வீட்டுக்கு நாலு பொண்ணு பெத்து வச்சிருக்குற ஜலந்தர் அப்பன்காரனுங்கல்லாம் உங்களுக்கு கேணையனுங்களா தெரியுறாங்களா? உனக்கும் இவளுக்கும் அஞ்சு பொண்ணு பிறக்கணும். அப்பத்தான் என் கஷ்டம் புரியும்”

 

அவர்கள் பேசுவதைப் பார்த்து புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவளிடம் ஆங்கிலத்தில்  “பேட்டி ஐ ஆம் கர்ஜீவன் சிங். யுவர் நெய்பர்.” என கையைப் பிடித்து வலிக்கும்படி குலுக்கினார். கஷ்டப்பட்டு அவரிடமிருந்து கையை விடுவித்துக் கொண்டாள்.

 

“யுவர் நேம் பேபி” எனக் கேட்க, இந்த ஊர்க்காரங்களுக்கு என்னைப் பார்த்தா பேபி மாதிரி தெரியுதா என்ற குறையுடன்

 

“ஐ ஆம் நந்தனா. நிக் நேம் ஜானு” சொல்லிவிட்டு ப்ரித்வியிடம் திரும்பி நீ சொன்னதை சரியா சொன்னேனா என்று கண்களால் வினவினாள். ப்ரித்வி ‘கரெக்டா சொதப்புனாடா’ என்றவாறு தலையிலடித்தபடியே வழிந்தான்.

 

ஒரு வினாடி திகைத்து இருவரின் கண்களும் பேசிய நாடகத்தைப் பார்த்த கர்ஜீவன் பின் அட்டகாசமாய் சிரித்தார் “ப்ரித்விக்கு வேணும்னா நீ ஜானுவா இரு. எங்களுக்கு நந்தனா. அதை மட்டும் மத்தவங்களுக்கு சொன்னா போதும்” என்றவாறு வீட்டுக்கு அழைத்தார்

 

“உனக்கு வேற தனியா சொல்லணுமா. நீயும் கதவைப் பூட்டிட்டு வாடா… ஆன்ட்டிகிட்ட உன் ஜானுவை அறிமுகப் படுத்திட்டு, உன் குப்பை மேட்டுல வந்து புரளு” என இழுத்து சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9

அத்தியாயம் – 9  கடற்கரையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய அரவிந்தின் மனதில் இன்னமும் அதிகக் குழப்பமே நீடித்தது. யாரும் இல்லாத தீவிற்கு ஸ்ராவநியுடன் சென்று விடலாமா என்ற விரக்தி தோன்றியது. யோசனையுடன் ஆட்டோவில் அமர்ந்திருந்த அரவிந்தை தொந்தரவு செய்யாமல் வந்தார் கதிர்.

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 19என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 19

அத்தியாயம் – 19 நடந்த  சம்பவங்கள் சிலருக்கு மகிழ்வையும், சிலருக்கு வருத்தத்தையும்  தந்தது. சத்யாவும் பன்னீரும் தங்களது மண  வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் கதை பேச ஆரம்பிக்க, சுமித்ரா சத்யாவுக்கு கல்யாணம் நிச்சயமானதைப் பற்றி மகிழ்வதா இல்லை கோவித்துக் கொண்டு போன முதல் மகள் சுதாவைப் பற்றிக்