Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 11’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 11’

அத்தியாயம் – 11

ந்தனாவின்  கண்ணீர்,  அணிந்திருந்த  சட்டையில் ஊடுருவி ப்ரித்வியின் மனதை சுட்டது.

உன் நெஞ்சிலே பாரம், உனக்காகவே நானும்

சுமைதாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின்  ஓரம், எதற்காகவோ ஈரம்

கண்ணீரை நான் மாற்றுவேன்

 

மனதிலிருந்ததைக் கொட்டிக் கவிழ்த்து விட்டதாலோ என்னவோ அரற்றுவது நின்று அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள் நந்தனா. மெல்லிய வெளிச்சத்தில் எதற்கோ பயந்ததைப் போல ப்ரித்வியின்  கைகளை இறுக்கப்  பற்றி அணைத்திருந்தாள். இலையும் மலரும் போல, அலையும் கரையும்போல, மண்ணும் விண்ணும்போல இயற்கையாக அவர்கள் இணைந்திருந்த சந்தர்ப்பங்கள் அவனையுமறியாமல் அவள் மேல் ஆழ்ந்த அன்பினை விதைத்திருந்தது.

“என்னை மயக்கிய மெல்லிசையே, இத்தனை நாளா பெரியகுளத்துல ஒளிஞ்சிருந்தியா? ஏஞ்சல்…  நம்ம  வாழ்கைக்கு அர்த்தம் தரவே கடவுள் என்னை நீ இருக்குற இடத்துக்கு அனுப்பி வைச்சாரா? இல்லைன்னா, சென்னைல இருந்தப்ப ஒரு தடவை கூட  ராஜேந்திரன் வீட்டுக்குப் போகத் தோணாத எனக்கு, திடீருன்னு ஏன் ராஜேந்திரன் போன் செய்து, திருவிழா பத்தி சொல்லி, வீட்டுக்கு வர அழைக்கணும், அதைக் கேட்டதும் எனக்கு ஏன் அம்மாவோட வேண்டுதல் நினைவுக்கு வரணும். சரியா நீ ஆத்துல விழப்போற சமயம் நான் ஏன் டீ  குடிச்சிட்டு நிக்கணும்” மெதுவாய் கேட்டான்.

 

‘முட்டாள் ரஞ்சன். குறையில்லா  மனுஷன் யாருடா? இதைப் புரிஞ்சிக்காம நல்லதோர் வீணையை  புழுதில எறிஞ்சிட்டியே. இந்த சின்னக் குறைகளை நீ நெனச்சா கலைஞ்சிருக்க முடியாதா? உன்னை மாதிரியே என்னையும் முட்டாள்ன்னு நெனச்சுட்டியா? நீ நந்தாகிட்ட குறைன்னு நெனைச்ச எதுவும் குறையில்லைன்னு ப்ரூவ் பண்ணுறேன்’ மெதுவாக அவளுக்கு வலிக்காமல் கன்னங்களை வருடினான்.

நீ கண்டதோ துன்பம், இனி வாழ்வெலாம் இன்பம்

சுகராகமே ஆரம்பம்.              

நதியிலே புதுப்புனல், கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று  இணைந்தது

இன்பம் பிறந்தது

‘நந்தா ஏதோ காய்ச்சல்ல ரஞ்சனைப்பத்தி உளறிட்டா. அவளோட காதல் பத்தி எனக்கு எல்லாமும் தெரியும்னு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா. என் கூட பழகுறதுக்குக்  கூட அவளுக்கு சங்கடமா இருக்கும். அதனால எதுவும் தெரியாத மாதிரியே மெயின்டன்  பண்ண வேண்டியதுதான்’ முடிவுக்கு வந்தவன் நந்தனாவை மடியில் சாய்த்தபடியே  ரயிலின் தடக் தடக் ஓசையில் சுகமான நித்திரையில்  ஆழ்ந்தான்.

 

காலை காபி, டீ  விற்கும் ஓசையில் கண்விழித்தவன் கிட்டத்தட்ட நந்தனாவைக் கட்டி அணைத்தவாறு அமர்ந்திருந்ததை உணர்ந்து மெதுவாய் அவளைப்  படுக்க வைத்தான். அவன் எழுந்ததும் தூக்கத்தில் அசைந்தவளை

“இப்ப இல்ல பேபி… இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு… அப்ப நீ வேண்டாம்னு  சொன்னாக்  கூட உன்னை விட்டு விலகமாட்டேன்” சிரித்தபடியே மெதுவாக அவளது நெற்றியில் முதல் முத்திரையைப் பதித்தான்.

 

சிறிது நேரத்தில் எழுந்த நந்தனா எங்கிருக்கிறோம் எனப் புரியாமல் விழித்தாள். தலையைப் பிடித்துக் கொண்டு முடிந்த அளவு நினைவுக்குக் கொண்டு வந்தவளுக்கு கொடைரோடு ஸ்டேஷனில்  டீ  பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு மாத்திரையை விழுங்கியது, ராஜேந்திரன் தந்த பணத்தைக் பையில் பத்திரமாக வைத்தது வரை ஓரளவு நினைவிருந்தது. அதன்பின் என்னனவோ கனவுகளாகத்தான் தோன்றிற்று.

‘ராஜேந்திரன் அண்ணாவின் நண்பனுடன் தானே வந்தேன். யாரவன்?  ஹாங்… ப்ரித்வி… எங்கே போனான்? ‘

எதிரே இருந்த இருக்கையில் பேப்பரால் முகத்தை மறைத்துக் கொண்டு அவளது செயல்களை கவனித்துக் கொண்டுதானிருந்தான்  ப்ரித்வி. கண்களால் துழவி ப்ரித்வியை அடையாளம் கண்டு கொண்டவள்

“மிஸ்டர். ப்ரித்வி” என மெதுவாக இரண்டு மூன்று முறை அழைத்தாள்.

“எஸ் மேடம்” என்றான்

“தாங்க்ஸ்” என்றாள்

“எதுக்கு?”

“எல்லாத்துக்கும்”

“இட்ஸ் ஆல்ரைட் மேடம்”

“நீங்க என்னை நந்தனான்னே  கூப்பிடுங்களேன். மேடம்ன்னா  வித்யாசமா இருக்கு”

“அப்ப நீயும் என்னை ப்ரித்வின்னுதான் கூப்பிடணும்”

சரியெனத்  தலையாட்டினாள்.

“ப்ரித்வி எனக்கு பேஸ்ட், ப்ரஷ் வேணுமே…. பல்லு விளக்கணும்”

“அட நேத்து இந்த அறிவு எங்க போயிருந்தது?”

“நேத்தா… சென்னை வந்துடுச்சா?”

“கிழிஞ்சது… சென்னைல ட்ரைன் மாறி இப்ப ஜலந்தருக்குப் போயிட்டு இருக்கோம்”

“நீங்க சென்னை இல்லையா? அண்ணனோட லயோலால படிச்சேன்னு சொன்னிங்க”

“ஏன் லயோலால மெட்ராஸ் பசங்களுக்கு மட்டும்தான் சீட்  தருவாங்களா?”

“ம்ம்….  ஜலந்தர் எங்க இருக்கு?”

“பஞ்சாப்ல. பஞ்சாப் எங்கன்னு கேள்வி கேட்கக் கூடாது”

 

“எனக்கே தெரியும்….. நீங்க தமிழ் இல்லையா”

“எங்கம்மா தமிழ். அப்பா பஞ்சாபி. அரிசி கோதுமை ரெண்டும் கலந்து செய்யப்பட்டவன் நான்”

“பஞ்சாபின்னா ஏன்  தலைப்பா கட்டல?”

“பஞ்சாப்னா  டர்பன்  கட்டிட்டு பலே பலேன்னு டான்ஸ் ஆடுவாங்கன்னு ஒரு முடிவோட இருக்க. அதுதான் ஏகப்பட்ட கேள்வி கேக்குற. முதல்ல பல்லு விளக்கிட்டு வா. காபி குடிச்சுட்டு உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்றேன்”

ப்ரித்வி அடிக்கடி  பிரயாணம் செல்வதால் பேஸ்ட், புது ப்ரஷ், சோப்பு ஆகியவற்றை ரெடியாக  வைத்திருப்பான். தனது புது ப்ரசில் ஒன்றை அவளுக்குத் தந்தவன், மெதுவாய் கேட்டான்

“சினிமா பாப்பியா நந்தா”

“ஓ…. ”

“ஹேமமாலினி, ஸ்ரீதேவி மாதிரி அழகான தமிழ் பொண்ணுங்கல்லாம் எங்க ஊர் மருமகளுங்கதான். எங்கம்மா கூட தேனிதான். அப்பா லவ் பண்ணி உங்க ஊர்லேருந்து தூக்கிட்டார்”

“அதனாலதான் தமிழ் நல்லா பேசுறிங்களா?” ப்ரித்வி எதிர்பார்த்தவாறே மிகச்சரியாக  தப்பாகப் புரிந்துக்  கொண்டவளை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்திருந்தான்.

 

இவன் என்ன கேட்டுட்டேன்னு என்னை லூசு மாதிரி பாக்குறான்? என்று நினைத்தவாறே பேஸ்ட்டை  எடுத்துச் சென்றாள்.

 

முகம் கழுவி வந்தவளுக்கு சூடான காப்பியைத் தந்தபடி

 

“உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே நந்தா” என்றான்.

கவனிப்பதற்கு வாகாக அவன் முகம் பார்த்து அமர்ந்தாள்.

“நந்தனா அழகான பெயர். அதுக்கு அர்த்தம் தெரியுமா?”

தெரியாதென தலையாட்டினாள்.

“நந்தனான்னா மகிழ்ச்சின்னு அர்த்தம். உன் வாழ்க்கைல எவ்வளவோ கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதையெல்லாம் மறந்துடு. என் வீட்டில் காலடி எடுத்து வைக்கிற நொடில இருந்து உன் பெயருக்கு ஏத்தமாதிரி  நீயும் சந்தோஷமா இருக்கணும்”

பதில் பேசாமலிருந்தாள்

“லுக் நந்தா…. மனக்காயத்தை மறக்கடிக்க, காலத்தை விட சிறந்த மருந்தில்லை. ஆனா நாம நடந்ததையே நினைச்சு, குணமாகுற ரணத்தை மேலும் குத்திவிடக் கூடாது. அது முடியுமான்னு கேட்கலாம். முடியும்னு அடிச்சு சொல்ல நானே சாட்சி. அன்பான அம்மா, அப்பா, நான்னு அழகான குடும்பம் எங்களிது. என்னோட பதினஞ்சாவது வயசுல என் அம்மா அப்பாவோட சுற்றுலா போனேன். படகுல போனப்ப படகு கவிழ்ந்திருச்சு. பக்கத்து படகுல இருந்தவங்க என்னைக் காப்பாத்திட்டாங்க. ஆனா என் கண்ணு முன்னாடியே என் அம்மா அப்பாவும் தண்ணீர்ல மூழ்குறதைப் பார்த்தேன். அம்மா அப்பான்னு கத்திக் கதறியும் அவங்களைக் காப்பாத்த முடியல. எல்லாரும் என்னைக் குதிக்க விடாம பிடிச்சுகிட்டாங்க. அந்த சம்பவத்துக்குப் பிறகு ரெண்டு வருஷம் கிட்டத்தட்ட பைத்தியம் பிடிச்சாப்ல இருந்தேன். அப்பறம் அவங்க உடல் அழிஞ்சா என்ன? ஆத்மா எப்பவும் என்கூடவே இருக்கும்னு என்னை நானே சமாதனப் படுத்திட்டேன். ஏன்னா எனக்கு ஆறுதல் சொல்லக் கூட ஆள் இல்லை. மனமாற்றதுக்காக மெட்ராஸ்க்கு வந்து படிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா நடந்ததை ஜீரணிச்சு வாழப் பழகிட்டேன்”

உணர்ச்சி துடைத்த குரலில் அவன் மனதில் இருந்ததைக் கொட்ட, அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் நந்தனா.

 

‘இவ்வளவு பெரிய சோகத்தை மனதில் பூட்டிவிட்டா சந்தோஷ முகமூடியுடன் உலவி வருகிறான்? இவனுக்கு என் அழுமூஞ்சித்தனத்தால் மேலும் தொந்தரவு தரக் கூடாது. முடிந்த அளவு மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும்’ எண்ணியபடியே கவனித்தாள்

“என்னோட சோகத்துக்கு, தண்ணியைப் பார்த்தாலே மயக்கம் வந்திருக்கணும். ஆனா நானோ வெறியோட நீச்சல் கத்துகிட்டேன். அன்னைக்கு உன்னை வெள்ளதில இருந்து காப்பாத்தினதும், இவ்வளவு நாள் என் அப்பா அம்மாவைக் காப்பாத்த முடியலையேன்னு மனசுல இருந்த வருத்தம் மறைஞ்சு ஒரு நிம்மதி வந்தது. அதுக்கு நான்தான் உனக்கு நன்றி சொல்லணும் நந்தா” கண்களை மூடிக் கொண்டான்.

தன்னம்பிக்கையூட்டும் வண்ணம் நந்தனாவின் கை பிடித்து சொன்னான்.

“நமக்கு பிடிச்சது, நம்ம எதிர்பார்கிறது மட்டுமே நடக்க, நம்ம வாழ்வு ஒரு கனவில்லை நிஜம், பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் இருக்கும் இந்த சிறிய பயணத்தில் நமக்கு வேண்டாததை மறந்துடலாமே

நடந்த துக்கமான நிகழ்வை  மறக்க என்னால முடியும்னா, கசப்பான நிகழ்வை மறக்க ஏன் உன்னால முடியாது.

வாழ்கை ஒரு சந்தர்ப்பம், உபயோகப்படுத்து

வாழ்க்கை ஒரு அழகான விஷயம், ஆராதி

வாழ்க்கை ஒரு கனவு, நினைவாக்கு

வாழ்க்கை ஒரு சவால், சந்தி

வாழ்க்கை ஒரு கடமை, நிறைவேற்று

வாழ்க்கை ஒரு விளையாட்டு, விளையாடிப் பார்

வாழ்க்கை ஒரு சத்தியம், நிறைவேற்று

வாழ்க்கை ஒரு கவலை, முறியடி

வாழ்க்கை ஒரு பாட்டு, இசைத்துப்பார்

வாழ்க்கை ஒரு போராட்டம், ஒத்துக்கொள்

வாழ்க்கை ஒரு சோகம், எதிர்கொள்

வாழ்க்கை ஒரு துணிகரமான செயல், துணிந்து செய்

வாழ்க்கை ஒரு அதிர்ஷ்டமான விஷயம், பயன்படுத்து

வாழ்க்கை  விலைமதிப்பில்லாதது, அழித்துவிடாதே

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே, போராடு

இதை சொன்னது யார் தெரியுமா மதர் தெரசா. இப்ப சொல்லு தகுதியில்லாதவங்களுக்காக உன்னை அழிச்சுக்குற முட்டாள்தனத்தை மறந்துட்டு, உனக்குப் பிடிக்காததை மறக்க முயற்சி செய்வியா?” கேள்வியால் சுட்டான். சம்மதமெனத் தலையாட்டினாள் நந்தனா.

“தட்ஸ் மை கேர்ள்” என அவளது கன்னத்தைத் தட்டி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தான். இருவரும் ஒரு இலகுவான மனநிலைக்கு முயன்று வந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 2 யூடியூப் ஆடியோமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 2 யூடியூப் ஆடியோ

வணக்கம் தோழமைகளே! அடுத்ததாக உங்களுக்காக நமது தமிழ் மதுரா சேனலில் ஆடியோ நாவலாக வருகிறது உங்கள் இதயம் கவர்ந்த மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய். கேளுங்க கேட்டுட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா