Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 10’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 10’

அத்தியாயம் – 10

ம்மா நீங்க செஞ்சது நல்லாயிருக்கா? நந்தனாவைக் கல்யாணத்துக்குப் பேசிட்டு வாங்கன்னு சொன்னா அவ அக்காவைப் பேசிட்டு வந்து நிக்கிறிங்க”

“நான் சொலுறதைக் கேளு. அந்த நந்தனா நமக்கு சரிவரமாட்டா. அவ அழகுதான் ஒத்துக்கிறேன். ஆனா அழகு, மனைவிக்கு இருக்குற தகுதில ஒண்ணுதான். மத்தபடி வஞ்சமில்லா மனம் வேணும். அது நந்தனாவுக்கில்ல. ராதாவுக்கு இருக்கு.”

“இப்படி நீங்க செய்யக்கூடாதும்மா”

“நான் வேணும்னே செய்யலடா. அனாதையான நந்தனாவை அவங்க பெரியம்மா பெரியப்பா எடுத்து வளக்குறாங்க. இவ பணக்கார வாழ்க்கை வேணும்னு உன்னை மயக்கிக் காதலிச்சிருக்கா. இந்த வயசிலையே என்னமா ப்ளான் பண்ணுறா பாரு”

கட்டின புடைவையோடதான் உங்க வீட்டுக்கு வருவேன் என நந்தனா சொன்னது ரஞ்சனின் நினைவுக்கு வந்தது. சொத்து இவளுடையதாயிருந்தால் ஏன் அப்படி சொல்ல வேண்டும். இருந்தாலும் அவளை விட்டுக் கொடுக்காமல் சொன்னான்

“இருந்தாலும் யாரோ ஒருத்தவங்க சொன்னதை நம்பி இந்த முடிவுக்கு வராதிங்கம்மா”

“யாரோ இல்லடா. நானும் நம்ம டிரைவர்கிட்ட அக்கம்பக்கத்தில விசாரிக்க சொன்னேன். அவங்க பெரியம்மா சொன்னதுதான் சத்தியம்” அவர்களது டிரைவர் ஆரியமாலாவிடம் பத்தாயிரத்துக்கு விலை போனதை அறியாமல் சொன்னார்.

“எனக்குத் தலை வலிக்குது. கொஞ்ச நாள் என் கல்யாணப் பேச்சை எடுக்காதிங்க”

“அவளைக் கல்யாணம் செய்துகிட்டா, உன்தொழிலைக் கட்டிக் காக்குற துப்பு அவளிக்கிருக்கும்னு நினைக்கிறியா?”

அடுத்த இரண்டுமணிநேரம் தொடர்ந்த தாயின் போதனைகளை கேட்டுத் தலைவலி வந்தது ரஞ்சனுக்கு.

“இன்னைக்கு லோன் விஷயமா பேச வங்கில இருந்து சில அதிகாரிகள் வராங்க. நான் பெரியகுளம் கிளம்புறேன்” கிளம்பினான் ரஞ்சன்.

காலை தேனிக்கு கிளம்பிய ராஜேந்திரனிடம் தனக்கு ஒன்றும் தேவையில்லை என மறுத்துவிட்டு வீட்டுக்கு வந்த நந்தனா, செல்லில் சிம் கார்டை போட்டுவிட்டு ரகசியமாய் ரஞ்சனுக்கு போன் செய்ய முயன்றாள். அவனோ கைப்பேசியை எடுக்கவேயில்லை.

ஊருக்குக் கிளம்பிய ராதா சமயலறையில் ஓரமாய் மறைந்து போன் செய்துக் கொண்டிருந்த நந்தனாவைப் பார்த்தாள்.  நந்தனாவும் ரஞ்சனும் காதலிப்பது தெரிந்ததிலிருந்து கொதித்து போயிருந்தாள் ராதா.

“யாருக்குடி போன் செய்யுற?” கைபேசியைப் பறித்தவள்

“ரஞ்சனுக்கா? என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவரு கூட உனக்கென்னடி பேச்சு வேண்டியிருக்கு” ஓங்கி எறிந்ததில் கைப்பேசி சில்லு சில்லாய் உடைந்தது.

“அன்னைக்கு ஒரு அம்மா வந்ததே. அதுதான் ரஞ்சனோட அம்மா. உன்னைப் பிடிக்காம எனக்குப் பூ வச்சு கல்யாணம் நிச்சயம் செய்திட்டுப் போயிருக்கு” மமதையுடன் சொன்னாள்.

“உன்னை வீட்டுக்குள்ளயே வச்சிருந்தா…. புளியங்கொம்பா பிடிச்சுக் காதலிக்கிறியா? அம்மா….  ஊமை மாதிரி இருத்துட்டு இவ எவ்வளவு வேலை பண்ணிருக்கா பாரேன்” கத்தினாள் ராதா.

“நீ கவலைப்படாதே கண்ணு. இவளுக்கும் நம்ம ப்ரதாப்புக்கும் நாளைக்குக் காலைல  கல்யாணம் ஏற்பாடு செய்தாச்சு. நீ பத்திரமா ஊருக்குப் போயிட்டு ரஞ்சனுக்கும் உனக்கும் நடக்குற கல்யாணத்துக்கு ரெடியாகி வா”

சிறுபெண்ணின் மனதை முறித்துவிட்டு தாயும் மகளும் கிளம்பினார்கள்.

ழைத் தூறியதையோ, உடையை நனைத்ததையோ, செருப்பில்லாமல் நடந்து கால்களில் கண்ணாடிச்சில் கீறியதையோ அவள் உணர்ந்தாளில்லை. அவளது கால்கள் ரஞ்சனின் பாக்டரிக்குத் தானாக சென்றது. காவலன் ஏற்கனவே ஒருமுறை ரஞ்சனுடன் அவளைப் பார்த்திருந்ததால் தடுக்காமல் உள்ளே அனுப்பினான். மறக்காமல் மேனேஜரிடமும் தெரிவித்தான்.

“இதுல என்ன பிரச்சனை இருக்குன்னு சொல்லுறிங்க” ரஞ்சன் அதிகாரிகளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தபோது

“சார் நந்தனான்னு ஒருத்தங்க உங்களைப் பார்க்க வந்திருக்காங்க” காதில் முணுமுணுத்தார் மேனேஜர்.

“உட்கார சொல்லுங்க வர்றேன்” அழுத்தமாக சொன்னான்.

“இது நட்பின் அடிப்படைல வந்த கேள்விதான்.நீங்க சொன்ன இடங்களில் ஏற்கனவே கிருஷ்ணகிரி பக்கதுலயிருந்து ஒரு இடத்துல பல்ப் வாங்குறாங்கன்னு கேள்விப் பட்டோம். எந்த அடிப்படைல உங்களுக்கு லோன் தர்றது?”

“அவ்வளவுதானா சார். இந்தியாதான் உலகத்துலையே அதிகமா மாங்கோ பல்ப் ஏற்றுமதி செய்யுது. அதுவும் தமிழ்நாட்டு வகைகளோட சுவை வேறெங்கும் பார்க்க முடியாது. அதனால ஜாம், ஜூஸ் போன்றவைகளை செய்ய நிறைய தேவைகள் இருந்துட்டேதானிருக்கு. அதனால இந்த ஒரு வியாபாரத்தை மட்டும் நம்பி எங்க நிறுவனமில்லைன்னு நீங்க புரிஞ்சுகிட்டா போதும்” அவர்களுக்கு மற்ற ஆடர்களுக்காக பெற்ற ஒப்பந்தத்தின் நகல்களைக் காட்டுமாறு அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடம் சொன்னான்.

மூன்று மணிக்கூறுகள்  காத்திருந்து பொறுமையிழந்த நந்தனா ரஞ்சனின் மீட்டிங் ரூமின் கதவைத் தட்டினாள் “ரஞ்சன் எனக்காக ஐந்து நிமிடம் ஒதுக்க முடியுமா?”

தொப்பலாய் நனைந்து, சிவப்புப் பாவாடை, பச்சை தாவணி  என இந்த அலுவலகத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் உடையணிந்த பெண் முதலாளியை உரிமையுடன் பேர் சொல்லி அழைக்கிறாள். இள வயது தொழிலதிபன் அல்லவா, ஏதாவது விஷயமிருக்கும். தங்களுக்குள் அர்த்தத்தோடு பார்த்து சிரித்துக் கொண்டனர் அறையிலிருந்தவர்கள். ரஞ்சனின் முகம் அவமானத்தால் சிறுத்தது.

புயலாய் வெளியே வந்தவன், அவளது கைகளைப் பற்றி தரதரவென இழுத்து சென்று அவனது அறைக்கதவை படாரென அறைந்து சாத்தினான்.

“என்னை அவமானப்படுதன்னே இங்க வந்தியா? ” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

எவ்வளவு முக்கியமான ஆதிகாரிகள்…. அவர்களுக்கு முன்னே வந்து…. ச்சே…. அவ்வளவு நேரம் அவனது அறிவை வியந்து பார்த்தவர்கள் கண்முன்னே அதலபாதாளத்தில் வீழ்ந்ததைப் போலுணர்ந்தான். அபி சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியமாய் தோன்றின ரஞ்சனுக்கு.

“நான் வர்றதே உங்களுக்கு அவமானமா இருக்கா ரஞ்சன்?”

பேசவில்லை அவன். அந்த மௌனமே அவளை ஒரு அவமானமாகத்தான் நினைக்கிறான் என்று சொல்லிற்று. அவனுக்கும் ராதாவுக்கும் திருமணம் என்ற விஷயத்தைக் கேள்விப் பட்டபோதே உடைந்த இதயம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்க ஆரம்பித்தது.

“மன்னிச்சிடுங்க. உங்களுக்கும் ராதாக்காவுக்கும் உங்கம்மா கல்யாணம் நிச்சயம் செய்திருக்கிறதா பெரியம்மாவும் அக்காவும் காலைல சொன்னாங்க. அந்தப் பதட்டத்துல என்னால எதையும் யோசிக்க முடியல. உங்களைப் பார்க்க கிளம்பி வந்துட்டேன்”

இன்னமும் அசையவில்லை ரஞ்சன். இது ஒரு சாக்கு இவளுக்கு அவ்வளவுதான். அபி வந்தபோதே அத்தனை தடவை உடைக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று சொல்லியாகிவிட்டது. மட்டிதனமாய் தலையாட்டிவிட்டு இப்போது சாக்கு சொல்கிறாள். அதுவும் அவனது அம்மா நிச்சயம் செய்த திருமணத்தால் மனம் பதட்டப்பட்டதாம். அந்த விஷயம் இப்போதுதான் இவளுக்குத் தெரிந்ததா?

“உண்மையா” கேள்வி கேட்டாள் நந்தனா

எரிச்சலாய் கேட்டான் “எது உண்மையா”

“அக்காவுக்கும் உங்களுக்கும் கல்யாணம்… ”

“உண்மைதான். அம்மா சொல்றாங்க”

கண்கள் கலங்கின நந்தனாவுக்கு “அப்ப நம்ம காதல்”

“அதுக்கென்ன இப்ப”

“என்னை வழிமறிச்சு காதல் சொன்னது…”

“அதை நினைவு படுத்தாதே”

“ஏன்… நீங்க மறந்ததைத்தானே நினைவு படுத்தினேன்”

“அதை மறக்க முடிஞ்சா சந்தோஷப்படுவேன்”

“ரஞ்சன் உங்களைப் பத்தின என்னோட கண்ணோட்டம் தவறாயிடுச்சா”

“என்னைப் பத்தி உனக்கென்ன தெரியும்? ரஞ்சனோட தகுதி தெரியுமா? சொத்து மதிப்புத் தெரியுமா? சமுதாயத்தில எனக்கிருக்குற பெயர் தெரியுமா? உன்னை சொல்லி தப்பில்ல, நானே எல்லாத்தையும் மறந்தாலதான் சில்லுண்டித்தனமா உன் பின்னாடியே சுத்தினேன். இப்ப அதை நெனச்சு வருத்தப்படாத நேரமில்லை”

“அப்ப…. என்னோட தகுதிதான்  உங்களுக்கு ஏமாற்றம் தந்ததா? அக்காவோட  தகுதிய வச்சுத்தான் கல்யாணம் செய்துக்க உங்கம்மா கேட்டாங்களா? நீங்களும் சம்மதம் சொன்னிங்களா….  உங்கம்மாவோட வார்த்தைகள்தான் முக்கியம்னு நெனச்சிருந்தா அவங்க  சொன்ன பொண்ணுக்குத் தாலி கட்டிருக்கலாமே. என்னை ஏன் குழப்புனிங்க. உங்களோட காதல்தான் முக்கியம்னு நெனச்சா, உங்கம்மா ஏன் என்னைப் பார்க்க வந்துட்டு அக்காவை நிச்சயம் செய்தாங்க ”

அவளிடம் தனது தாயை விட்டுக் கொடுக்க மனமின்றி வாதிட்டான்.
“இங்க பாரு நீ எதோ ஒரு டிகிரி, உங்கக்கா பிஈ, எம்பிஏ., படிப்பு மட்டுமில்ல என் தொழில் பத்தின விவரங்களை எங்கம்மாட்ட தினமும் பேசி ஆலோசனை சொல்லிருக்கா. அந்த அளவு ஈடுபாடும், பேச்சுத் திறமையும் உன்கிட்ட இருக்கா? இன்னைக்கு என் தொழிலைப் பார்க்கணும்னா அவளால முடியும். உன்னால முடியுமா?” சலனமில்லாமல் அவள் முகம் இருக்கவும் பேசிக் கொண்டே போனான்.

“இந்த விஷயங்களை வச்சுத்தான் அம்மா அவளைக் கல்யாணம் செய்துக்க சொல்றாங்க. ஆனா நீ இருக்கும்போது நான் என்ன பதில் சொல்றது”

எழுந்துக் கொண்டாள் நந்தனா “நன்றி மிஸ்டர்.ரஞ்சன் நீங்க தந்த ஐந்து நிமிடம் முடிஞ்சுடுச்சு”

“நந்தனா…”  காதில் விழாதது போல் எழுந்து வெளியே சென்றாள்.

“சார் அதிகாரிங்க உங்களுக்காக காத்திருக்காங்க”

“வரேன்னு சொல்லுங்க” உள்ளே சென்ற ரஞ்சனுக்கு தலைக்கு மேல் வேலையிருந்தது.

வெளியே வந்த நந்தனா வழியில் நிறுத்தப்பட்டிருந்த ரஞ்சனின் காரைப் பார்த்தாள். எத்தனை முறை என் வரவிற்காக தவமிருந்திருப்பாய். இப்போது கறிவேப்பிலையாய் தூக்கியெறிய உனக்கெப்படி மனம் வந்தது? தகுதியில்லாதவனுக்கு சிந்தப்பட்ட அவளது கண்ணீர் மழை நீரில் கலந்தது.

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்

வீட்டுக்கு சென்ற நந்தனா அவளது அவசரக் கல்யாணத்துக்கு பெரியம்மா வேலைகளை செய்வதைப் பார்த்தாள். ஊருக்கு போய் சேர்ந்துவிட்ட ராதாவிடம் போனில் நந்தனாவின் காதில் விழுமாறு “ராதா நீ மாப்பிளையோட சந்தோஷமா இருக்குறப்ப இவ வேற பாத்து வயிறெரிவா. மாப்பிள்ளைக்கும் இவ வீட்டுல இருந்தா உறுத்தலா இருக்கும்னு வேற யாருக்காவது உடனே கல்யாணம் செய்து வைக்க சொல்லிட்டாரு. அதுனாலதான் இந்தக் கல்யாணம். ப்ரதாப் இனிமே மத்த பொம்பளைங்களோட சகவாசத்தை விட்டொழிச்சுட்டு இவ கூட சந்தோஷமா இருக்கேன்னு வாக்கு கொடுத்திருக்கான். இதையெல்லாம் புரிஞ்சுக்காம இவ தற்கொலை அது இதுன்னு போகாம இருக்கணும். வீட்டுல காஸ் இருக்கு. பாலிடால் இருக்கு, பூச்சி மருந்திருக்கு, தூக்கு மாட்டிக்க சேலை இருக்கு. வராஹா நதில வெள்ளம் வந்திருக்கு. இவளை வச்சுட்டு எப்ப என்ன செய்வாளோன்னு பயப்பட வேண்டியிருக்கு.

“என்ன சொல்ற… அதெல்லாம் செய்ய மாட்டாளாமா? உண்மைலயே மனசால காதலிக்கிறவங்கதான் தற்கொலை செய்துப்பாங்களா. இவ பிரதாப்பைக் கல்யாணம் செய்துட்டு அடுத்த வருஷமே வயித்தைத் தள்ளிட்டு பிரசவத்துக்கு வந்து நிற்பாளா… நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்டி…….”

மாறி மாறி காதில் விழுந்த வார்த்தைகளால் சித்தம் கலங்கியவள், தற்கொலை செய்ய எண்ணிக் கடிதம் எழுத அமர்ந்தாள். ரஞ்சனின் முகம் தோன்றி ‘ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே எனக் கண்ணீர் வழிய எழுதியவள், காகிதத்தைத் தூக்கி வீசிவிட்டு கரைபுரண்ட வராஹ நதி வெள்ளத்தில் ‘என் மேல் அன்பு செலுத்த ஒரு உயிரையாவது நீ படைச்சிருக்கக்கூடாதா’ என கௌமாரியிடம் கேள்வி கேட்டபடி மயங்கினாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 34தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 34

சரயுவைப் பெண் பார்க்கும் வைபவத்தன்று, செல்வத்தின் குடும்பத்துடன் நடந்த கைகலப்பில் சம்முவத்துக்கு கையில் அரிவாள் வெட்டு பரிசாகக் கிடைத்தது. சம்முவத்தை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, லச்சுமி எங்கு சென்றாலும் சரயுவையும் கையோடு அழைத்துச் சென்றாள். சரயுவுக்கு திருமணமானாலும் செல்வம் விட்டு வைப்பானா என்ற

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 8’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 8’

“ஒரு குட்டிப்பையன் ஒரு கப் குடிக்க யாராவது ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்குவாங்களா? பேசாம அவருக்குக் காப்பிக்கு பதில் சாயந்தரம் இதைக் கலந்து தாம்மா. அப்படியே வச்சிருந்தா கட்டி விழுந்திடும்” தாயிடம் சலித்துக் கொண்டாள் வைஷாலி. சிவா அங்குதான் அமர்ந்திருந்தான்.