Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 9’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 9’

அத்தியாயம் – 9

ஞ்சன் அகிலாண்டத்தை வற்புறுத்தினான்.

 

“சொல்லு” என்றார் அகிலாண்டம்

 

“என்னத்த சொல்ல. எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கு. நல்ல பொண்ணு. அழகானவ. அம்மா அப்பா கிடையாது. பெரியப்பாதான் கார்டியன். அவளோட வீட்டையும் நிலத்தையும் கவனிச்சுக்கிறார் போல. அவங்ககிட்டத்தான் நாம கல்யாண விஷயம்  பேச வேண்டியிருக்கும்”

‘அம்மா அப்பா இல்லாதவ, பெரியப்பா எங்காவது தள்ளி விட்டா போதும்னு நெனச்சிருப்பார். இப்படி ஒரு பொண்ண எங்கிருந்துதான் பிடிச்சானோ?’ மனதில் நொந்தவர்

“நான் அவ வீட்டுல போய் பார்த்துட்டு என் முடிவை சொல்றேன்”

“அம்மா உங்களுக்கு பிடிக்காம இருக்க சான்ஸே  இல்ல. மஹாலக்ஷ்மி மாதிரி இருப்பாம்மா”

“மகாலக்ஷ்மியை நேர்ல பாத்தவன் மாதிரி அந்தப் பொண்ணுக்கு மார்கெட்டிங் பண்ணாதே. அவங்க வீட்டு விலாசம் தா”

நந்தனாவிடம் ஏற்கனவே வாங்கியிருந்த விலாசத்தை சொன்னான். அகிலாண்டமும்  தெரிந்தவர்கள் மூலமாக சென்தூரனாதனிடம் நந்தனாவின் ஜாதகத்தைக் கேட்டு அனுப்பினார்.

ஆரியமாலாவுக்கு வயிறெரிந்தது  “எவ்வளவு நெஞ்சழுத்தமிருந்தா, நம்ம பொண்ணு ஜாதகத்தைக் கேக்காம, இவ ஜாதகத்தைக் கேட்டிருப்பாங்க”.

ரஞ்சன் நந்தனா காதலைப் பற்றி அறியாததால் கொதித்தாள்.

“அதுக்கு நாம என்னடி செய்யுறது. என் தம்பிக்கு தெரிஞ்சவங்களா இருக்கும்” அவருக்கு எதிலுமே அதிக ஈடுபாடில்லை.

“இருக்கும் இருக்கும்” யோசனை செய்தவள். ரஞ்சனது பிறந்த தேதியை வைத்து அவனது ஜாதகத்தைக் கணித்து அதற்குப் பொருத்தமாக ராதாவின் ஜாதகத்தை மாற்றினாள். அந்தப் போலி ஜாதகத்தை  ரஞ்சனின் வீட்டுக்குக் கொடுத்தாள். கவனமாக அதில் பெண்ணின் பெயர் என்றிருக்குமிடத்தில் மை கொட்டி, சரியாய் தெரியாதவாறு திரிசமம் செய்திருந்தாள்.

“ஜாதகம் அமோகமா பொருந்திருக்கு. உங்க பையனுக்குன்னே பொறந்தாப்புல இருக்கு இந்தப் பொண்ணோட ஜாதகம். இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டாங்க.. ஓஹோன்னு இருப்பாங்க” ஜோசியர் பச்சைக்கொடி காட்டியதும்

பெண் பார்க்க வருவதாய் சொல்லி அனுப்பினார் அகிலாண்டேஸ்வரி.

 

கிலாண்டம் பெண் பார்க்க வருவதாயிருந்த அன்று காலை, வழக்கம் போல எழுந்து வேலை செய்தாள் நந்தனா. இரண்டு நாட்களாக வீட்டை தூசு தும்பு இல்லாமல் துடைத்ததில் இடுப்பு விட்டுப் போயிற்று. ஒட்டடை அடித்தபோது பல்லியின் எச்சம் முகத்தில் பட்டு சிவப்பாய் தடித்திருந்தது. ராதாக்காவைப் பெண் பார்க்க வருகிறார்கள் போலிருக்கிறது. காலையிலிருந்து ஒப்பனை நிலையத்துப் பெண்கள் கைங்கரியத்தால் அலங்காரம் நடந்து கொண்டிருக்கிறது.

“என்ன நந்து கண்ணா தலையெல்லாம் எண்ணையில்லாம காய்ஞ்சு போயிருக்கு. வா எண்ணை வச்சுவிடுறேன்” என்று அன்பு ஒழுக தலை முழுவதும் எண்ணை பாட்டிலைக் கவிழ்த்து கொண்டை போட்டு, ஒத்தை ரூபாய் நாணயத்தின் அளவுக்குப் பெரிய பொட்டு வைத்து விட்டாள் ஆரியமாலா.

“தலைல நிறையா எண்ணை கொட்டிடுச்சு, டிரஸ் பாழாயிடும். இந்த பழைய பாவடையக் கட்டிக்கோ. தலை குளிச்சுட்டு நல்ல பாவாடை கட்டிக்கலாம்” பெரியம்மா எடுத்துப் போட்ட தாவணி நைந்து, சாயம் போய் கிழிந்திருந்தது. எதற்கு இவரிடம் வாயைக் கொடுக்க வேண்டும் என மறுக்காமல் கட்டிக் கொண்டாள்.

சரியாக அகிலாண்டம் வரும் நேரம் “பாப்பம்மா இன்னைக்கு வரல, அவளுக்காக காத்திருந்தா சாணி எல்லாம் காஞ்சு போயிடும். வரட்டியா தட்டிடு” கட்டளையிட்டாள்  ஆரியமாலா.

 

கிலாண்டத்துக்கு பெண் வீடு மோசமில்லை எனத் தோன்றியது. ‘நல்ல விசாலமான வீடு. வீட்டுப் பெரியவர்கள்  பணிவாய் தெரிகின்றனர். நாம் கையால் இட்ட வேலையைத் தலையால் செய்வார்கள் போலிருக்கிறது. பெண்தான்….. ரஞ்சனின் அழகுக்கும் கம்பீரத்துக்கும் இன்னும் கொஞ்சம் அழகான பெண் அமைந்திருக்கலாம். இவளைவிட அழகான ஆளுமையான பெண்கள் ரஞ்சனை மணக்கப் போட்டி போடுகிறார்கள். எதை வைத்து இந்தப் பெண்ணை  மஹாலக்ஷ்மி என்று சொன்னான் எனத் தெரியவில்லை. காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மைதான் போலும்’.

“மரியாதை மனசிலிருந்தா போதும்மா. உட்கார். என்ன படிச்சிருக்குற” காலில் விழுந்து வணங்கிய ராதாவை அமரவைத்தவாறு சொன்னார்.

“பி.ஈ முடிச்சுட்டு ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். பிசினஸ்க்கு உதவியா இருக்கணும்னு இப்ப தபால் மூலமா எம்.பி.ஏ படிச்சுட்டிருக்கேன் ஆன்ட்டி ”

“குட். அப்படித்தானிருக்கணும். கணவனோட தொழிலில் ஈடு கொடுத்து மனைவியும் பாடுபடணும் ”

“நல்லா சொன்னிங்க சம்பந்தி. ஒழுங்கா ஏரோட்டணும்னா மாடுங்க ரெண்டும் ஒரே மட்டமாயிருக்கணும். குடும்பம் நல்லா நடக்கணும்னா பையனுக்கேத்த தகுதி பொண்ணுக்கும் இருக்கனுமில்ல”

தொடர்ந்த சில நிமிடங்களில் அகிலாண்டம் கிளீன் போல்ட். தனது கையிலிருந்த பூவை ராதாவின் தலையில் சூடி விட்டார்.

 

“சரியா சொன்னிங்க. நந்தனா இந்த அளவு சூட்டிகையா இருப்பான்னு நான் எதிர்பார்க்கல”

அப்போதுதான் தெரிந்தார்போல் அதிர்ச்சியைக் காண்பித்த ஆரியமாலா “என்ன நந்தனாவா, நீங்க என் பொண்ணு ராதாவைப் பொண்ணு பார்க்க வரலையா? தரகர் என் மகள்ன்னில்லா சொன்னார்”

மிகவும் வருந்தினார் அகிலாண்டம். “இல்லையேம்மா நந்தனாவும் என் மகனும் விரும்புறாங்கன்னுதான் அவளைப் பொண்ணு பாக்க வந்தேன்”

வெடித்து அழுதபடி உள்ளே ஓடினாள்  ராதா. அவளுக்கு ரஞ்சனை மிகவும் பிடித்திருந்தது. கூடவே உள்ளே விரைந்த ஆரியமாலா

“ராதா கவலைப்படாதே. உனக்கு மாப்பிள்ளை பையனைப் பிடிசிருக்கில்ல”

ஆமாம் எனத் தலையாட்டினாள் ராதா.

ரஞ்சன் ராதாவைக் கட்ட வேண்டும். அப்படிக் கட்டாவிட்டாலும் நந்தனாவைக் கண்டிப்பாகக் கட்டக் கூடாது. அவளது மூளை கணக்குப் போட்டது. “அம்மா  இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். ஆனா நீ நான் சொல்லறது எல்லாத்தையும் கேக்கணும்”

கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவர் “மன்னிச்சுக்கோங்க சம்பந்தி. நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். நந்தனாவும் என் பொண்ணு முறைதான். ஆனா என் மனசு கொஞ்சம் குறுகினதா இருந்ததால என் பொண்ணுன்னு சொன்னதும் ராதான்னு நெனச்சுட்டேன். நந்தனா பின் கட்டுல இருப்பா. நான் கூப்பிட்டு வரேன்”

“பரவல்ல சம்பந்தி நானே போய் பாத்துக்குறேன்” வீட்டை சுற்றிக் கொண்டு பின்புறம் சென்ற அகிலாண்டத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டாள் ஆரியமாலா.

ந்தனா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள் நந்தனா. அவளைப் பார்த்து அதிர்ந்தார் அகிலாண்டம்.

 

தலை முழுவதுமிருந்த எண்ணை  முகத்தில் வழிய, கிழிந்த பாவாடை, நைந்து போன தாவணியுடன் குத்துக்காலிட்டு அருவருப்பில்லாமல் மாட்டுச் சாணத்தில் வரட்டி தட்டிக் கொண்டிருக்கும் இவளா என் மருமகள்?

முகத்தில் சிவந்த தழும்புகள் விழுந்த இவளை எப்படி என் மகன் மஹாலக்ஷ்மி என்றான். நாகரீகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பாள் போலிருக்கிறதே. ஒரு வேலைக்காரியா என் வீட்டு விளக்கேற்ற வேண்டும். அதிர்ச்சி விலகாமல் நின்றார்.

“நந்து… அக்காகிட்ட கேட்டு நல்ல பாவாடையா கட்டிட்டு வா. கண்டிப்பா குளிச்சுடு. குளிக்காட்டி அம்மாவுக்குக் கோவம் வரும்” அன்பொழுக சொன்ன பெரியம்மாவிடம் தலையாட்டி சென்றாள்.

 

“நந்தனா எங்க சொந்தக்காரப் பெண். என் வீட்டுக்காரர் செய்த பல தொழில்களில் ஒன்னுல இவங்க அப்பாவும் பங்குதாரர். எங்க நாணயத்து மேலிருந்த  நம்பிக்கைல நந்தனாவோட அப்பா  இந்த வீட்டை எங்களுக்கு வித்துட்டு சாகப் போறதுக்கு முன்னே அவளைப் பாத்துக்கும்படி கெஞ்சிக் கேட்டுக்கிட்டார். நாங்களும் அவருக்குக் கொடுத்த வாக்குக்காக இந்த ஊருக்கே குடி வந்துட்டோம். அவளை வீட்டுல தங்க வச்சு படிக்க வைக்கிறோம். நந்தனாவுக்குப் படிப்பு சரியா வரல, இருந்தாலும் ராதாவோட எதுக்கெடுத்தாலும் போட்டி போடுவா. ஊரு பூர நாங்க இவ வீட்டுல உட்கார்ந்துட்டு இருக்கிறதா புரணி பேசிட்டு வருவா. எங்களுக்கு ஆகாதவங்களும் அதுக்கு ஆமாம் சாமி போடுவாங்க. கொஞ்சம் வசதியான பையனாயிருந்தா வீட்டுக்கு பொண்ணு கேட்டு வர சொல்லிடுவா. அவனுங்களும் அம்மா அப்பாவை எதுத்துட்டு இவளைக் கட்டிக்கிறேன்னு எங்க வீட்டு முன்னாடி மறியல் பண்ணுவானுங்க. நாங்க ஒவ்வொருத்தனுக்கும் நல்ல புத்தி சொல்லி அனுப்பி வைப்போம். ஆனா பாருங்க பெரியவங்க நீங்களே இவ சொன்னதை  நம்பி பொண்ணு பாக்குற வரைக்கும் நிலமை வந்துடுச்சு” இட்டுக் கட்டி அழகாய் ஒரு கதை புனைந்தாள்.

அகிலாண்டத்தின் மனத்தராசில் நந்தனாவை விட ஆரியமாலாவின் சொல்லும் ராதாவின் அழுகையும் இருந்த தட்டுத் தாழ்ந்தது. குளித்து நல்ல உடை உடுத்தி சிலையாய் நடந்து வந்து கை கூப்பிய நந்தனாவைக் கண்ட அவரது கண்கள் வெறுப்பை உமிழ்ந்தன.

‘பிச்சக்காரியாட்டமிருந்தவ என்னை மயக்கவே மோகினியாட்டம் இளிக்கிறா பாரு. உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைக்கிற இந்தப் பாவி வேறென்னதான்  செய்ய மாட்டா’

‘யார் இந்தம்மா? பெரியம்மா சொன்னாங்கன்னு அவசர அவசரமா குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வந்து வணக்கம் சொன்னா இப்படி முறைக்குது’ குழப்பமாய் பார்த்தாள் நந்தனா.

 

கார் ஏறும் முன்பு உறுதியாக ஆரியமாலாவிடம் சொன்னார் “நான் ராதா தலைல பூ வச்சது வச்சதுதான். என் மகன்கிட்ட பேசிட்டு கூடிய சீக்கிரம் உங்களுக்கு நல்ல பதிலா சொல்லுறேன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29

அத்தியாயம் -29   கல்லாய் இறுகிய முகத்துடன் வீட்டிற்கு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் சித்தாரா. அவளின் நிலை கண்டு சந்திரிகாவின் கண்களில் நீர். “சித்து மனசைத் தளர விடாதே. இந்த சைலஜாவப் பார்த்தாலே எனக்கு நல்ல அபிப்பிராயம் வரல. இவ்வளவு நேரம்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45

கண்கள் கலங்க ஜிஷ்ணு சொன்னதை இதயம் கலங்கக் கேட்டிருந்தாள் சரயு. “விஷ்ணு… குண்டூர்ல என்னைப் பாக்குறப்ப இதெல்லாம் ஏண்டா சொல்லல” “நானே அவ்வளவு நாள் கல்யாணம் ஆனதை உன்கிட்ட மறைச்சு நடிச்சுட்டு இருந்தேன். எப்படி இதை சொல்லுவேன்? ஆனா அப்பல்லாம் என்