Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 7’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 7’

அத்தியாயம் – 7

 

ஞ்சனுக்கு உறக்கமே பிடிக்கவில்லை. கனவு நினைவு இரண்டிலும் நந்தனாவே நிறைந்திருந்தாள். மாதம் இருமுறை பெரியகுளம் வந்தது மறைந்து,  வாரம் இரண்டு  நாட்களாயிற்று. புதிதாக ஆரம்பித்த தொழிலுக்கு அது உதவியாகக் கூட இருந்தது. அவன் தாய் அகிலாண்டத்துக்கும் மகன் பொறுப்போடு தொழிலை கவனிப்பதில் மிக்க மகிழ்ச்சியே.

மகனோ சில மாதங்களாக காலை மாலை நந்தனா வரும் வழியில் ஏதாவது ஒரு சாக்கிட்டு நிற்பான். ஒரு நாள் கார் ரிப்பேர், மற்றொரு நாள் இயற்கை அழகை ரசிக்க, லாப் அன்று அவள் சீக்கிரமாய் கிளம்பும் நாட்களில் ஜாகிங் போகிறார்போல் இப்படி வித விதமாய் சீன்  போட்டவன் ஒரு கட்டத்தில் நேரடியாய் சைட் அடிக்க ஆரம்பித்தான். மாந்தோப்பை ஒட்டி இருந்த பாதையில் நந்தனா வருவதால் ஆள் நடமாட்டம் குறைவு. அதுவும் ரஞ்சனுக்கு வசதியாய் போயிற்று.

நந்தனா முறைத்தால் ‘ஆமாம் உன்னை சைட் அடிக்கத்தான் நிக்கிறேன். உன்னால முடிஞ்சதப் பாத்துக்கோ’ என்பதைப் போல் தெனாவெட்டாய் பதில் பார்வை பார்த்தான்.

ஆரம்பத்தில் கோவப்பட்டாள் நந்தனா, பின்னர் அலுப்பு வந்தது ‘இவனுக்கு வேற வேல வெட்டியே இல்லையா? காலைலயும் சாயந்தரமும் வந்து அட்டெண்டென்ஸ் கொடுத்துடுறான்’ என நினைத்தாள்.

‘வீட்டுல அவுத்து விட்டுட்டாங்க போல’  என அலட்சியப்படுத்தினாள்.

‘சுத்து வழில காலேஜ் போகலாமா?  வேண்டாம்…  மூணு மாசமா கண்ணால மட்டும்தான் பாக்குறான்.  பேசக் கூட முயற்சி பண்ணல. இவனெல்லாம் பார்த்தா நான் என்ன சக்கரையாட்டம் கரஞ்சுடவாப் போறேன்’ மனதினுள் சொல்லியபடியே அவளறியாமலே கரைந்துக் கொண்டிருந்தாள்.

 

ஒரு நாள் அவளுடன்  வந்த தோழி வழியில் ரஞ்சனைப் பார்த்துவிட்டு ஆவலுடன் கேட்டாள் “நந்து யாருடி இவன்…  இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கான். அவன் காரையும், டிரஸ்சையும் பாரேன். பெரிய  பணக்காரனா இருப்பான் போலிருக்கு…. பேரென்னடி”

“தெரியல” ரஞ்சனைப் பற்றி தோழி  விசாரித்தது நந்தனாவுக்குப் பிடிக்கவில்லை. தனக்கென கிடைக்கும் ஸ்பெஷல் பார்வைகளால் அவளும் ஈர்க்கப்பட்டிருந்தாள்.

மூன்று நான்கு முறை அவனை வழியில் பார்த்த தோழி சொன்னாள் “உன்னைத் தாண்டி சைட் அடிக்கிறான். பேசாம இந்த ஹீரோவைக் கல்யாணம் கட்டிக்கிட்டு செட்டிலாயிடு” யோசனை சொன்னாள்.

“வாயை மூடிட்டு வாடி” குரலில் கண்டிப்பிருந்தாலும் கருவண்டுக் கண்கள்  திருட்டுத்தனமாக அவனைப் பார்த்தது ரஞ்சனின் பார்வைக்குத் தப்பவில்லை. ‘யாஹூ….. ‘ மனதில் சந்தோஷக் கூச்சலிட்டபடி நந்தனாவுடன் ஸ்விஸர்லாந்தில்  ஒரு டூயட் பாடிவிட்டு வந்தான்.

டுத்த ஒரு மாதம்  ரஞ்சன் ஆப்சென்ட். வழக்கமாக அவனைப் பார்த்துப் பழகிய நந்தனாவின் கண்கள் அவனது தரிசனமின்றி எதையோ இழந்தது போல் தோன்றியது.

கல்லூரி செல்லும்போது அவளது உடை நன்றாக இருந்தால் அவன் கண்களில் பாராட்டு தெரியும். சரியாக இல்லை என்றால் முகத்தை சுளித்துக் காட்டுவான்.

கடைசி வருட மாணவி என்பதால் கல்லூரி விழா போன்ற சமயங்களில் சேலை அணிந்து வந்தால் விசிலடித்து மயக்கம் வருவது போல் பாவனை செய்வான்.

நந்தனாவுக்கு உடம்பு சரியில்லையென்றால் போனில் யாரிடமோ பேசுவது போல் “இருமல் ஒரு வாரமா குறையல. உடம்பைப் பார்த்துக்க மாட்டியா? மாத்திரை ஏதாவது சாப்பிட்டு அடுத்த தடவை பாக்குறப்ப குணமாகி இருக்குற. இல்லைன்னா நானே என் கையால  மருந்து தர வேண்டியிருக்கும்” என்பான்.

 

பார்க்கும் ஒரு சில நிமிடங்களில் அந்த அளவு மனதில் ஆழமாய் பதிந்திருந்தான். அவனைக் காணாமல் அட்டாமிக் பிசிக்ஸ் கசந்தது, மெட்டீரியல்  சயன்ஸ்  மிரட்டியது. மொத்தத்தில் கல்லூரிக்குப் போகவே வெறுப்பாக இருந்தது.

எடைக் குறைந்ததே தூக்கம் தொலைந்ததே

ஐயோ பைத்தியமே பிடித்ததடா

அவளைத் தவிக்க விட்டபின் தான் வழக்கமாக நிற்கும் இடத்தில் புன்னகையோடு நின்றிருந்தான் ரஞ்சன். தூரத்தில் அவனைப் பார்த்ததும் வேகமாய் சைக்கிளை மிதித்தாள். அவனது காருக்கு சற்று அருகில் காலை ஊன்றி நிறுத்தியவள் மூச்சு வாங்க அவனை முறைத்தாள். முதல் முதலாக அவளது பக்கத்திலிருந்து அவனுக்கு சாதகமான அறிகுறிகள் தெரிந்ததும் ரஞ்சனால் தாங்க முடியவில்லை.

 

“சாரி, சாரி, சாரி வேலை விஷயமா வெளியூர் போயிட்டேன். பாரினுக்கு ஏற்றுமதி செய்ய ஆர்டர் கிடைச்சிருக்கு. சந்தோஷமான விஷயம் உன்கிட்ட பகிர்ந்துக்கனும்னு வந்தேன். ஆனா நீ அன்னைக்கு வரல. உனக்கு செமஸ்டர் லீவ்ன்னு நெட்ல பார்த்தேன். அதனால கிளம்பிப் போயிட்டேன். வேலை முடிஞ்சு இப்பத்தான் வரமுடிஞ்சது”.

ரஞ்சன் நினைத்திருந்தால் அவளிடம் ஊருக்குப் போவதை சொல்லியிருக்கலாம். இரண்டு முறை ஒளிந்திருந்து அவள் கண்கள் தன்னைத் தேடுவதைக் கண்டிருந்தான். சிறு பிரிவினால் ஏற்படும் தவிப்பு நந்தனாவுக்குத் தனது முக்கியத்துவத்தை உணர்த்தும் என நினைத்தான்.

 

“இந்தா ஸ்வீட்  எடுத்துக்கோ” காஜுகத்லியுடன் பக்கத்தில் நெருங்கியவனை வலது கையால் தள்ளி விட்டவள், சைக்கிளை வேகமாய் மிதித்தாள்.

 

சமாளித்து நிமிர்ந்த ரஞ்சன் ‘இத்துனூண்டு இருந்துட்டு என்னம்மா கோவப்படுறா’ என்றெண்ணி நகைத்தான்.

 

வேகமாய் ஓடி இரெண்டேட்டில் சீட்டைப் பற்றியவன் “நான் முடிவு பண்ணிட்டேன். வர்ற ஆகஸ்ட்ல நமக்குக் கல்யாணம். அம்மாகிட்ட உன் வீட்டுல பேச சொல்றேன். நீ சாயந்தரம் வரும்போது சம்மதம் சொல்லுற” என்றபடி விடுவித்தான். திரும்பிப் பார்க்காமல் கல்லூரி வந்து சேர்ந்தால் நந்தனா.

வகுப்பில்  நந்தனாவைப் பார்த்து நளினி “என்னடி இவ்வளவு சந்தோஷமா இருக்க? கல்யாணம் கில்யாணம்  நிச்சயமாயிருக்கா” என்றாள்.

 

மாலை நந்தனாவைத தடுத்து நிறுத்திய ரஞ்சன் உரிமையாக “இந்த ஸ்வீட் சாப்பிடாம உன்னால இங்கிருந்து நகர முடியாது” என்றான்.

காஜுகத்லியைக் கடித்த நந்தனா “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.

 

 

நந்தனா காலை மாலை கல்லூரி செல்லும் வழியில் இருவரும் சந்தித்தார்கள். கிடைத்த பத்து பதினைந்து நிமிடங்களில் பாதிப் பொழுது பார்வையாலேயே பேசினார்கள். பின்னர் பூ அழகாயிருக்கு, வானம் அழகாயிருக்கு, ஆனா எல்லாத்தையும்விட நீ அழகாயிருக்க என்று காதலர்கள் பேசும் உலகத்தின் மகா முக்கியமான விஷயங்கள் எல்லாம் அவர்களின் உரையாடலில் இடம்பெற்றது.

 

அதைத்தவிர நந்தனா சொன்ன அவள் குடும்ப எதுவும் ரஞ்சனின் மனதில் பதியவில்லை. ஆனால் அவளுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தான். ரஞ்சன் பேசிய வியாபார விஷயங்கள் நந்தனாவின் புத்தியை எட்டவில்லை. இருந்தாலும் மனதில் வீட்டுக்கு நேரமாகிவிட்டதே என நினைத்தவாறே அவன் பேசுவதர்க்கெல்லாம் உம் கொட்டினாள்.

ரஞ்சன் பெரிய செல்வந்தன். தாய் மிகவும் கண்டிப்பு என்பது மட்டும் புரிந்தது. தினமும் கௌமாரியம்மனிடம் “அம்மாவையே பார்க்காத எனக்கு நீதானே அம்மா. நல்லபடியா என் கல்யாணத்த நடத்திவைம்மா. என் வீட்டுக்காரரோட மனசு ஒற்றுமையா சந்தோஷமா சுமங்கலியா வாழனும்” என்று பிரார்த்தனை செய்வாள்.

பெரியம்மாவிடம் இரண்டு வருடமாய் கேட்ட கைப்பேசி அவளுக்கு வாங்கித் தரப்பட்டவுடன் மகிழ்ச்சியாக அந்த எண்ணிலிருந்து முதல் முதலில் ரஞ்சனுக்கு போன் செய்தாள். ஆனாலும் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அவர்களது சம்பாஷனை நீடிக்கவில்லை. அவளது அருகாமையை விரும்பிய  அவள் மனம் கவர்ந்தவணும் விரைவில் தாயைப் பெண் கேட்க அனுப்புவேன் என வாக்குறுதி அளித்திருந்தான்.

பெரியப்பா கண்டிப்பாய் தனது காதல் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார் என நினைத்தாள் நந்தனா. அப்படி ஏதாவது நடந்தால் இப்போது ஆக்கிரமித்திருக்கும் அவளது சொத்தை அதை சாக்கிட்டு அபகரித்துக் கொள்வார்கள்.
தனக்குத்தானே குழி வெட்டிக் கொள்வதை அறியாமல் ” நான் கட்டின சேலையோடதான் உங்க வீட்டுக்கு வரமுடியும்னு நினைக்கிறேன். அப்படி வந்தா என்னை ஏத்துப்பிங்களா”

“அசடு அதைப் பத்தி இப்ப என்ன பேச்சு. இன்னும் ரெண்டு நாள்ல என் க்ளோஸ் பிரெண்ட் வர்றான். காலேஜ் கட் அடிச்சுட்டு லஞ்ச் சாப்பிட வர்றியா? ”

 

மாட்டேனென்று மறுத்தாள். “லுக் நந்தனா…. இதுவரை உன்னை எங்கயாவது கூப்பிட்டிருக்கேனா. மத்யானம் லஞ்ச் டைம்ல உங்க காலேஜ் பக்கத்துல இருக்குற தெருவில நில்லு, நேரா ஹோட்டல் போறோம். அவன்கூட லஞ்ச சாப்பிட்ட உடனே நான் பத்திரமா திரும்பிக் கொண்டுவந்து விட்டுடுறேன். உனக்காக வாரத்துக்கு ரெண்டு தடவை மதுரைலயிருந்து பெரியகுளம் வந்துட்டிருக்கேன். என் பிரெண்ட் உன்னைப் பார்க்க மெட்ராஸ்லயிருந்து வரான். நீ ஒரு மணி நேரம் சாப்பிட வரமாட்டியா?” முதல் முறையாக அவனது கோவத்தைப் பார்த்தவள் சம்மதித்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 3’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 3’

அத்தியாயம் – 3 கைபேசி சரி செய்ய முடியாத அளவுக்கு பழுதாகிவிட்டதே… சரி செய்ய வேண்டுமென்றால் வெளியே செல்ல வேண்டும். இறுதித் தேர்வு முடிந்துவிட்டதால் வெளியே செல்ல பெரியம்மாவின்  ஆயிரம் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.   அப்படியே வெளியே சென்றாலும் இப்போதெல்லாம்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 2தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 2

அத்தியாயம் – 2 அன்று வேலை நெட்டி முறித்தது. சரயு ஜெர்மனியில் இருக்கும் மியூனிக்கின் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றில் டிசைனிங் பிரிவில் பணியாற்றினாள். அவர்கள் அணி வடிவமைத்த பகுதியைப் பற்றிய இறுதி அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் ஒப்புவிக்க வேண்டும், அதனால்