Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 6’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 6’

அத்தியாயம் – 6

த்தங்கரைக் காற்று சிலிசிலுக்க, பாதையின் இருமருங்கும் நந்தவனமாய் மாற்றியிருந்த பூக்காட்டை ரசித்தபடி தனது புது ஸ்கோடாவை செலுத்திக் கொண்டிருந்தான் ரஞ்சன். இளம் தொழிலதிபன். மதுரையிலிருக்கும் பணக்காரக் குடும்பத்தில் ஒருவன். அவனது சொந்தக் கம்பனியின் மூலம் மாம்பழக் கூழ் தயாரிப்பில் இறங்கியிருக்கிறான். பெரியகுளத்தில் சிறிய அளவில் பேக்டரி தொடக்கி ஆறுமாதமாகப் போகிறது. ‘ரஞ்சன் ப்ராண்ட்’ என்றால் உலகம் முழுவதும் தெரிய வேண்டும் என்ற தணியாத ஆவல் கொண்டவன். ஆறடி உயரம், சற்றே கருப்பு என்றாலும்  பணத்தின் செழுமை தெரியும் மேனி, அவனது சிரிப்பால் மயங்கும் பெண்கள் ஆறிலிருந்து அறுவது வயது வரை பெரிய பட்டியல் உண்டு.  ஆனால் எப்போதும் தனது தாயாரின் கண்காணிப்பிலே இருந்ததால் காதல் என்ற உணர்வு அவனை வந்து தாக்கவேயில்லை. எந்தப் பெண்ணையும் பார்த்து மணக்கவேண்டும் என இதுவரை நினைத்ததில்லை. விரைவில் நினைப்பான் என மனதில் பட்சி சொல்லுகிறது.

 

அவனது பயம், பலம் மற்றும் பலவீனம் அவனது தாயார்  அகிலாண்டேஸ்வரிதான். சிறு வயதிலே கணவனை இழந்தாலும் அயராது பாடுபட்டு தொழிலைக் கட்டிக் காத்து, அப்படியே மகனிடம் ஒப்படைத்திருப்பவர். இதனால் அவர் ஒரு அறிவாளி, பார்த்த உடனேயே எடை போட்டுவிடும் புத்திசாலி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அகிலாண்டேஸ்வரிக்கு பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் நல்ல புரிதல் உண்டு. தந்து  அண்ணன் உதவியோடு தொழிலை கவனிக்க சரியான ஆட்களைத் தேர்வு செய்துவிடுவார். இவர் மேம்போக்காக மேர்ப்பார்வையிட்டால் போதும். ஊரில் பெரியதலையாய் இருக்கும் இவரது புகுந்த வீட்டின் மற்ற உறுப்பினர்களுக்கு பயந்து அகிலத்திடம் தகிடுதத்தம் செய்பவர்களும் குறைவு. அதனால் அவர் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் சிறிய அளவில்தான். தாய் மகன் இருவருக்கும் இருக்கும் மிகப்பெரிய கெட்ட  குணம் கோவம். ஆத்திரத்தால் அறிவிழப்பவர்கள்.  அடுத்த கெட்ட குணம் நாவடக்கமின்மை. நாவினால் சுட்டு ஆறாத வடு ஏற்படுத்திவிடுவார்கள்.

 

அவனது புது பேக்டரிக்கு சென்றவன் திருப்பத்தில்  காரினை ஒடித்துத் திருப்ப, சைக்கிளால் காரினை மோதி கீழே விழுந்தாள் ஒரு இளம் பெண்

“இடியட், கண்ணில்லை… இப்படித்தான் பாய்பிரெண்டை நினைச்சு கனவு கண்டுகிட்டே அடுத்தவன் வண்டில விழுறதா” திட்டியபடி இறங்கினான்.

திருப்பத்தில் இடப்புறம்  பெரிய பள்ளமிருக்க, அந்த வழியில் வர முடியாததால் வலதுபுறம் வந்திருக்கிறாள்,. பெல் அடித்திருக்கிறாள் ஆனால் கதவை மூடி ஏஸி  போட்டு,  சத்தமாய் பாட்டும் போட்டிருந்ததால் மணிசத்தமும் கேட்கவில்லை. தான்தான் இயற்கையை ரசித்ததில் அவளை கவனிக்கவுமிவில்லை என உணர்ந்தான். இத்தனை காலையில் யார் வரப்போகிறார்கள் என்றெண்ணி கவனக் குறைவாக வண்டியை ஓட்டியது  தனது தப்பு என உணர்ந்தான்.

 

தரையில் புத்தகங்கள் இறைந்து கிடக்க, சைக்கிள் ஹாண்டல் வளைந்திருக்க, டிபன் பாக்ஸிலிருந்த மூன்று இட்டிலிகளும் மண்ணில் கொட்டியிருக்க, அந்தப் பெண் கைகளில் சிறிய கல் கிழித்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

“சாரிம்மா ரத்தம் வந்துருக்கே. வா பிளாஸ்டர் போட்டுவிடுறேன்” பதட்டத்துடன் சொன்னான்

“பரவால்ல சார்” என்று குயில் ஒன்று கூவும் சத்தம் கேட்க, டக்கென நிமிர்ந்தான்.

 

வீசிப்போன புயலில் என் வேர்கள் சாயவில்லை

ஓர் பட்டாம்பூச்சி மோத அது பட்டென சாய்ந்ததடி

பௌர்ணமி நிலவாய் முகம், அமாவசை வானத்தின் நிறத்தில் நீளமான முடி, செதுக்கி வைத்த மூக்கு, அந்த வானத்தில் மினுக்கும் நட்சத்திரப் பொட்டாய் மின்னும் சிறு மூக்குத்தி,  கிள்ளி  வைத்த ஆப்பிள் துண்டாய் செவ்விதழ்கள், கவிதை பேசும்  விழிகள்.

 

‘வாவ் யாரிந்த மயில்? இவளையா பாய்ப்ரெண்ட நினைச்சு கனவு காணாதேன்னு சொன்னேன். கடவுளே இவளோட பாய்பிரெண்டா நானிருக்க வழி செய்யேன்’ அவசரமாய் வேண்டுதல் வைத்தான்.

கனவுப்பூவே வருக, உன் கையால் இதயம் தொடுக

எந்தன் இதயம் கொண்டு, உந்தன் இதயம் தருக

வேண்டாம் என மறுத்தவளை வலுக்கட்டாயமாக அவளை இழுத்துச் சென்று முழங்கை காயத்திற்கு மருந்து போட்டுவிட்டான். ‘யெப்பா…  என்ன  இவ கை வாழைத்தண்டு மாதிரி இருக்கு’ என மனதினுள் ரசித்தான்.

“என்ன இவ்வளவு சீக்கிரம் காலேஜுக்குக் கிளம்பிட்ட”, ஏதாவது விஷயமிருக்குமோவென சந்தேகத்தோடு வினவினான்.

“இன்னைக்கு கெமிஸ்ட்ரி லாப். மேம் சீக்கிரம் வர சொல்லிருக்காங்க”

“அதுதான் டிபன் கூட சாப்பிடாம கிளம்பினயா”

‘இவனுக்கு எப்படித் தெரியும்’ விழித்தாள்

 

அலட்சியமாய் சொன்னான் “இட்லி கீழ கொட்டிடுச்சே. அதுதான் கேட்டேன்”

“அது மத்தியானம் சாப்பிட எடுத்துட்டு வந்தது”

“அப்ப காலைல சாப்பாடு”

“நேரமில்ல” முணுமுணுத்தாள்

“உன் பெயர் என்ன?”

பதில் சொல்லாமல் கிளம்பினாள். கையிலிருந்த புத்தகத்தைப் பிடிங்கிப் படித்தான்.

“நந்தனா, பி.எஸ்.சி பிஸிக்ஸ்” அவன் கையிலிருந்த புத்தகத்தை கோவத்தோடு பிடிங்கினாள்.

“அய்யோயோ பயம்மா இருக்கே” என நடுங்குவதைப் போல நகைத்துக் கொண்டே சொன்னான் ரஞ்சன்.

நந்தனா தந்தையின் மறைவுக்குப் பின்… அவளது பெரியப்பா, பக்கத்து வீட்டு ராஜேந்திரன், அவனது அப்பா பரமசிவம் போன்ற வெகு சில ஆண்களுடன் மட்டுமே பேசியிருக்கிறாள். இவனுடன் இவ்வளவு பேசியது சரியா தப்பாவெனத் தெரியவில்லை. பேச்சு முடிந்தது என்பதுபோல் கிளம்பினாள்.

“நில்லு நந்து. சைக்கிள்தான் உடைஞ்சுடுச்சே  எப்படி காலேஜ் போகப்போற?” சைக்கிள் உடைத்தவனிடம் வேறு சைக்கிள் வாங்கித் தா இல்லை ரிப்பேர் செய்ய பணமாவது தா எனக் கேட்பாள் என்று எதிர்பார்த்தான். இவள் எதுவுமே கேட்கவில்லையே.

“என் ப்ரெண்ட் வீட்டுல வச்சுட்டு பஸ்ல போய்டுவேன். சாயந்தரம் பெரியப்பாட்ட சொல்லி ரிப்பேர் செய்ய சொல்லணும்”

“ஓகே என்னாலதான உன் சைக்கிள் உடைஞ்சது. அதனால நானே சரி செய்துத் தந்துடுறேன். இப்ப உன்னக்  காலேஜ்ல டிராப் செய்யுறேன் வண்டில ஏறி உட்கார்”

“இல்ல வேண்டாம். நான் பாத்துக்கிறேன்”

“சரி நீ போ. அப்பறம் உங்க வீட்டை விசாரிச்சு உங்க அப்பாகிட்டயே  சைக்கிள் ரிப்பேருக்கு ஆன பணத்தைக் கொடுத்துடுறேன்”

ஷாக்காகி நின்றாள். இவன் போய்  வீட்டுல சொன்னா படிப்பு அவ்வளவுதான்

“இல்ல நீங்க பணம் தர வேண்டாம்”

 

“அப்ப சைக்கிளைக் கொடுத்துட்டுப் போ சரி செஞ்சு சாயந்தரம் தரேன்”

“நீங்க உங்க வேலையைப் பார்த்துட்டு போனா போதும்” எரிச்சலுடன் சொன்னாள்

கைகளைப் பிடித்து நிறுத்தியவன் “இதுதான் இப்ப என் வேலை நந்தனா. உன் சைக்கிளை உடைச்சுட்டு கவலையில்லாம என்னால போக முடியாது. சோ நீ இதை வச்சுட்டுப் போற” பிடிவாதமாய்  சொன்னான்.

சைக்கிளை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தாள்

“நில்லு உன்னை காலேஜ்ல விட்டுடுறேன்”

“சைக்கிளை சரி செய்து சாயந்தரம் இங்கேயே வந்து தாங்க போதும். என் காலேஜ் போக எனக்கு வழி தெரியும்” கோவமாக சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

‘யப்பா இந்தாளுக்கு என்ன ஒரு பிடிவாத குணம்? எங்கிருந்து வந்தானோ’ மனதிற்குள் நினைத்தபடி பஸ்ஸில் ஏறினாள். அடித்துப் பிடித்து கல்லூரி வந்தவள் கல்லூரி வாசலில் அவனைப் பார்த்துத் திகைத்துப் போனாள்.

அவளது கையில் டிபன் பார்சலை வைத்தவன் “இது பிரேக்பாஸ்ட். நான் கீழ கொட்டினதுக்கு பதிலுக்கு வாங்கித் தந்துட்டேன். மத்தியானம் சாப்பாடு கொண்டு வருவேன். வெளியே வந்து வாங்கிக்கிற இல்லை பிரின்சிபால் கிட்ட நடந்ததை சொல்லிட்டு கிளாசுக்கு வந்துத் தருவேன். ஒகே”

டிபனைப் பெற்றுக் கொண்டவள் பதில் பேச முடியாமல் ஊமையாய்  நின்றாள்.

சொன்னதைப் போலவே மதியம் உணவைத் தர வந்தான். மாலை சைக்கிளை ரிப்பேர் செய்துத் தந்தான்.

இரண்டு நாள் கழித்து அவள் கல்லூரி வரும்போது வழிமறித்து சைக்கிள் நன்றாக ஓடுகிறதா என விசாரணை செய்தான்.

“நான் ரஞ்சன்” புன்னகையுடன் சொன்னான்.

“என் பெயர் உனக்குப் பிடிச்சிருக்கா. சைக்கிள் எப்படி ஓடுது?” ஏதாவது பேச வேண்டும் என்றே கேட்கிறான் என நந்தனாவுக்கும் தெரிந்தது.

“நீ பதில் சொல்லுற வரை இங்கிருந்து நகர முடியாது” சவாலாய் சொன்னான்

“முன்ன விட ரொம்ப நல்லாவே ஓடுது. இது நிஜமாவே என் பழைய சைக்கிள்தானா….. நம்பிட்டேன்” சொல்லிவிட்டு சைக்கிளில் பறந்து சென்றவளைப் பார்த்து சிரித்துக் கொண்டான். நந்தனா அவனது மனதில் நிச்சயமாக சலனத்தை ஏற்படுத்தியிருந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 17தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 17

அன்று ஸ்ரீவைகுண்டம் செல்வம் மாமனார் வீட்டிற்கு அலப்பறயாய் தனது புது பைக்கில் சென்றான். அவனது விஜயத்தின் முக்கியமானக் குறிக்கோள் ஒன்றுதான் ‘புது வண்டியை சரயுவிடம் காண்பிக்க வேண்டும்’. ‘சரயு தனியாத்தான் வீட்டிலிருப்பா… தனியா என்னத் தனியா… பக்கத்து வீட்டுக் கிழவி டிவி

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 20என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 20

அத்தியாயம் -20 ஜன்னலில் இருந்து வந்த நிலவொளியில்  தங்கப் பதுமையாய் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்  அரவிந்த். சித்தாராவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் அவன் மனம் தவித்தது. அவளிடம் என்னனவோ சொல்ல ஏங்கியது.  என் வாழ்கைக்கு வந்த உயிர்ப்பு நீதான் மனதளவில்