Tamil Madhura Uncategorized தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 2’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 2’

அத்தியாயம் – 2

 

ந்தக் கௌமாரியம்மன் தான் எங்க ஊர் காவல் தெய்வம். சுயம்பா வந்தவடா இவ. எங்க ஊர்ல இருநூறு வருஷத்துக்கு முன்னே மக்கள் கம்மாய்ல வெள்ளம் வந்து கஷ்டப்பட்டாங்களாம். அப்பறம் அங்கேருந்து இந்தக் காட்டுமாரியோட எல்லைக்கு வந்தவுடனே எல்லாப் பிரச்சனையும் சரியாயிடுச்சாம். இவ அருளால இன்னமும் விவசாயத்துலயும் மாம்பழ விளைச்சலயும் எங்க ஊர அடிச்சுக்க முடியாது தெரியுமுல்ல”

 

“அப்ப சேலம்”

 

“மாம்பழ விஷயத்துல மட்டும் மயிரிழைல சேலத்துக்காரய்ங்கட்ட வெற்றி வாய்ப்பைத் தவற விட்டுடோம். இருந்தாலும் நாங்கதான் மாம்பழ விளைச்சல்ல ரெண்டாவது. சுத்துப்பட்டு ஏரியாவுக்கெல்லாம் எங்கூரு மாம்பழம்தான்”

 

வேஷ்டிக்கு மாறிய ப்ரித்வி வராக நதியில் குளித்துவிட்டு அம்பாளை மனமுருகி வணங்கினான்.

 

“என்ன பிரார்த்தனைடா”

 

“சின்ன வயசில எனக்கு அம்மை போட்டிருந்ததுடா. அப்ப அம்மா இந்த கோவிலுக்கு வர்றதா வேண்டிருந்தாங்க. அவங்கதான் இப்ப உயிரோட இல்லையே. அதனால அவங்களுக்கு பதிலா நான் வந்தேன்”

 

ப்ரித்வியின் அம்மா தேனியைச் சேர்ந்தவர். அதனால் இக்கோவிலைப் பற்றித் தெரிந்திருக்கும்

 

தலையசைத்துக் கேட்டுக் கொண்டான் “அம்மை போட்டாலும், தோல் சம்மந்தமான நோய் வந்தாலும் வராஹ நதில குளிச்சுட்டு கோவில் பிரசாதத்த வாங்கிட்டுப் போவாங்க”

 

“காலைல நந்தனா விஷயமா என்கிட்டே சொல்லனும்னு சொன்னியே”

 

“ஆமாண்டா நல்லவேளை நினைவு படுத்துன. அவளோட மொபைல் வேலை செய்ய மாட்டேங்குது. சர்வீஸ் கொடுத்தும்  ப்ரோஜனமில்லை. உன்னால ஏதாவது செய்ய முடியுமான்னு பாரு”

 

“கம்பெனி சர்விஸ் சென்டர்லதானே தந்தாங்க”

 

“அங்க போகணும்னா வாங்கினதுக்கு பில் கேட்பான், வாரண்ட்டி இல்லைன்னா தீட்டிடுவான். அதனால லோகல்ல சில கடைகள்லதான் ட்ரை பண்ணாளாம்”

 

தன்னாலான முயற்சிகளை செய்துவிட்டு உதட்டினைப் பிதுக்கினான் ப்ரித்வி.

 

“ஒவ்வொரு கடைலயும் ஒவ்வொரு பார்ட்டா மாறி இப்ப வெளில இருக்குற ஷெல்லத் தவிர மத்தது எல்லாமே போலி. பேசாம புதுசு வாங்கச்  சொல்லு”

 

“அவ பெரியம்மா இதை வாங்கித் தந்ததே அதிசயம்.  புதுசெல்லாம் அவ இப்போதைக்கு நெனச்சுப் பாக்க முடியாது”

 

“பக்கத்து வீடு அவளோட சொந்த வீடு. வீட்டுக்கு ஒரே பொண்ணுன்னு உங்கப்பா சொன்னாரே”

 

“உண்மைதான்….. ஆனா பாவம் மாடிவீட்டு ஏழை. தாயோடு அறுசுவை உணவு போம், தந்தையோடு கல்வி போம் இதெல்லாம் உண்மைன்னு சொல்லவே சாட்சியாய் இருக்கிறா”

 

 

பெரியகுளத்தின்  பெரியகுணக்காரர் காளியப்பன். குணத்துக்கு தக்க பணமுமிருந்தது. வயல், தென்னதோப்பு, மாந்தோப்பு, தோட்டம் எல்லாம் வராக நதியின் வளத்திலும் மஞ்சளாற்றின் மகிமையிலும் செழித்திருந்தது. ஆசிரியை வேலை பார்த்த மங்கையர்கரசியை மணந்துகொண்டார். நந்தனா அவர்களின்   அன்பு மகள், பிறந்தவுடன் தாய் மங்கையர்கரசியை பறிகொடுத்த அபாக்கியவதி நந்தனா. தாயில்லாத பெண்ணை அன்புக் கடலில் குளிப்பாட்டினார் தந்தை.

காளியப்பனின் ஒன்று விட்ட அண்ணன் தான் செந்தூரநாதன். அவரது மனைவி ஆரியமாலா. அவர்கள் பெண் ராதா, நந்தனாவை விட நான்கு வயது பெரியவள். மனைவி இறந்தவுடன்,வறுமையில் வாடிய செந்தூரநாதனை அழைத்து வந்து, தனது வீட்டிலேயே தங்க இடம் கொடுத்து, உதவிக்கு வைத்துக் கொண்டார் காளியப்பன். அவர் உயிரோடிருந்தவரை செந்தூரநாதன்  வாயிலிருந்து   நிமிடத்துக்கு ஒருமுறை

“தம்பிட்ட கேட்டியா?”

“தம்பி பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது” இப்படித்தான் வார்த்தைகள் வரும்.

நந்தனாவை சிங்காரிப்பதென்ன, கொஞ்சுவதென்ன என சொந்தத் தாய் போலவே பார்த்துக் கொள்வார் ஆரியமாலா. சிறிய தப்பு செய்யதாலும்  ராதாவுக்கு அடி விழும் ஆனால் நந்தனாவோ கண்ணு தங்கம் தவிர வேறு வார்த்தைகளை பெரியம்மாவின் வாயிலிருந்து கேட்டறியாள்

அழும் தமக்கையை சமாதானப் படுத்தி “ஏன் பெரியம்மா அக்காவ அடிக்கிறிங்க” ராதாவைத் தடவிக் கொடுப்பாள்

“உங்கக்கா தகுதிக்கு மீறி ஆசைப்பட்டா அடிதான் விழும்”

“உனக்கு என்னக்கா வேணும் என்கிட்டே கேளு”

“உன்னோட காசுமாலையைத் தாரியா… கல்யாணத்துக்குப் போட்டுட்டு தந்துடுறேன்” ஆசையுடன் கேட்கும் மகளைக் கண்டிக்காமல் நந்தனாவின் பதிலைக் கூர்ந்து கவனிப்பாள் ஆரியமாலா.

 

மறுநிமிடம் அப்பாவின் அனுமதியுடன் ராதாவுக்கு  அந்த மாலையைத் தருவாள் நந்தனா. இப்படி நந்தனாவின் தயவால் நல்ல படிப்பு  வாய்த்தது ராதாவுக்கு. சுமாரான மதிப்பெண் பெற்ற ராதாவை,  நந்தனா  சொன்னாள்  என்ற காரணத்திற்காக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டார் காளியப்பன்.

 

 

அன்று “தம்பி உன்னை மறக்கவே மாட்டேண்டா. என் குடும்பத்தையே தூக்கி நிறுத்திட்ட” எனக் கண்கலங்கினார் செந்தூரம்.

நடந்தது எல்லாம் கனவு போலிருக்க, நந்தனா ஒன்பதாம்  வகுப்பு படிக்கும்போது ஒரு பஸ் விபத்தில் அவளுடைய சந்தோஷத்தையும் பறித்து கொண்டு  மறைந்தார் காளியப்பன்.

 

முதலில் அழுது புரண்டனர் செந்தூரநாதன்-ஆரியமாலா தம்பதியினர். பின் மெதுவாக நீண்ட அவர்களது ஆக்டோபஸ் கரங்கள், சொத்துக்கள் ஒவ்வொன்றாய் தங்கள் ஆளுகைக்குக்  கொண்டுவந்தது.

முதலில் நகைகளை பத்திரமாய் லாக்கரில் வைக்கிறோம் என்று  எடுத்து சென்றனர். அவை உருமாறி பெரியம்மாவின் கழுத்தில் மாதத்துக்கு ஒன்றாய் ஏறியதை அறியாத சிறுபெண் “புது நகை உங்களுக்கு அழகாயிருக்கு பெரியம்மா” என சிரித்தாள்.

நந்தனாவின் கழுத்துக்கும் காதுக்கும் உடைக்குப் பொருத்தம் என கலர் கலரான பாசிமணிகள்  குடியேறின .

வயல் மற்றும் தோட்டத்து வருமானம் செந்தூரநாதனின் கணக்கில் ஏறி அவர் தொப்பையைப் போலவே பெருக்க, பெண்ணுக்கு வீட்டு வேலைகள் தெரிய வேண்டும் என ஆரியமாலா ட்ரில்  வாங்கியதில் நந்தனா தேய்ந்தாள். தொழுவத்தில் கட்டிய மாடுகளை, வீட்டு மகாலக்ஷ்மி தன் கையால் கவனிக்க வேண்டும் என்று மாட்டைப் போல வேலை செய்ய வைத்தார்கள்.

“வேலைக்காரி ஏழு மணிக்கு வாசல் தெளிச்சா மூதேவிதான் வாசம் செய்வா. காலைல குளிச்சுட்டு மங்களகரமா நீ கோலம் போட்டா வீடே நிறைஞ்சிருக்கு. அதனால அவளை வேலையை விட்டு நிறுத்திட்டேன்” ஒன்பதாம் வகுப்பிலிருந்து ஆறு மணிக்கு எழுந்து குளித்து வாசல் தெளிக்க ஆரம்பித்தாள்.

“இது உன் வீடு நந்தனா. பசுமாடு வீட்டு லக்ஷ்மி மாதிரி. என்னை மாதிரி அடுத்த வீட்டுக்காரங்க அந்த லக்ஷ்மியை தொடக்கூடாதுன்னு உங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அதனால மாடுகளோட பொறுப்பை நீதான் கவனிக்கணும்”  பத்தாம் வகுப்புத் தொடக்கத்தில் ஐந்து மணிக்கு எழுந்து மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து மாடுகளுக்குத் தீவனம் காட்டி பள்ளிக்கு செல்வதற்குள் களைத்துப் போனாள்.

“இன்னைலருந்து நந்தனாவே சமைக்கட்டும். வயசுக்கு வந்த பொண்ணு நாளைக்கு அம்மா இருந்திருந்தா வீட்டு வேலைகளைக் கத்துத் தந்து நல்லபடியா வளர்திருப்பாங்கன்னு ஒரு சொல் வந்தா நான் உயிரோட இருக்கமாட்டேன்” பதினொண்ணாம் வகுப்பில் நந்தனா முழு நேர சமையல்காரியானாள்

மதுரையிலிருந்து வரும்போது பளபளவென ராதா வர, மாட்டு வேலையும் வீட்டு வேலையும் செய்து கால்களில் பிடித்த சேற்றுப் புண்ணுக்கு தேங்காய் எண்ணையும்  மஞ்சளும் தடவிக் கொண்டிருப்பாள்   நந்தனா.

பன்னிரெண்டாவதில் ஓரளவு மதிப்பெண் வாங்கியும் அவளை நல்ல கல்லூரியில் சேர்க்க மனம் வரவில்லை அவர்களுக்கு.

 

“அக்கா காலேஜ்ல கேட்டுப் பார்த்தோம் தங்கம். உனக்கு மார்க் பத்தாதுன்னு சொல்லிட்டாங்க”

 

‘எழுநூறு மதிப்பெண் வாங்கிய ராதாவுக்கு இடம் கொடுத்த நிர்வாகம், தொள்ளாயிரத்து தொண்ணூறு மதிப்பெண் பத்தவில்லை என சொல்கிறதா?’ மனதில் எழும் கேள்வியை அடக்கிக் கொண்டாள்  நந்தனா. ஓரளவு அவர்களைப் பற்றிப் புரிந்திருந்தாள். ஆனாலும் இவர்களுடன் இருந்தால்தான் தனது மானத்துக்குப் பாதுகாப்பு என்பது அந்த சிறு பெண்ணுக்குப் புரிந்ததால் பணிந்து போனாள்.

எஞ்சினியர் சேர்க்கப் போகிறேன் என்று ஆசைகாட்டி வேறு எந்தக் கல்லூரியிலும் பெரியன்னை விண்ணப்பிக்க  வேறு விடவில்லை. பக்கத்து வீட்டு பரமசிவத்தின் உதவியால் இளங்கலை இயற்பியல் சேர்ந்தாள். வீட்டு வேலை, காட்டு வேலை, மாட்டு வேலை  இவற்றிருக்கு நடுவே இளங்கலை முடித்துவிட்டாள். ஆசிரியையாக வேண்டும் எனத் தணியாத ஆசை. பிஎட் படிக்க விருப்பம். ஆனால் அரியமாலாவுக்கோ தனது குடிகார அண்ணன் மகனுக்கு மணமுடித்து நந்தனாவை நிரந்தர வேலைக்காரியாக்க எண்ணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 8ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 8

சுஜியின் இரண்டு தமக்கைகளும், அண்ணனும் மறுநாள் மாலையில் தான் வருகிறார்கள். பனிக்கட்டிகளை வைத்து உடலைக் கிடத்தியிருக்கிறார்கள். எறும்பு மொய்க்கிறது. வந்ததும் வராததுமாக அவர்கள் கூடிக் கூடி, அந்த வீட்டை விலையாக்குவது பற்றித்தான் பேசுகிறார்கள். அந்த வீடும் சேர்ந்தாற் போலிருந்த இன்னொரு வீடும்,

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 31மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 31

31 சற்று நேரத்தில் சித்தி அழைக்கும் சத்தம் கேட்கவே, கீழே சென்றாள் சுஜி. கூடத்தில் பட்டுப் புடவை அணிந்த பெண்கள் அனைவரும் பாயில் உட்கார்ந்து இருக்க, பக்கத்திலே இருந்த சேரில் ஆண்கள் அமர்ந்து இருந்தனர். நடந்து வரும் வழியை ஒருவர் மறைத்துக்