Tamil Madhura Uncategorized தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 1’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 1’

அத்தியாயம் – 1

 

 

‘தாயே கருமாரி, எங்கள் தாயே கருமாரி 

தேவி கருமாரி துணை நீயே மகமாயி’ 

 

எல்ஆர் ஈஸ்வரி அதிகாலை ஐந்து மணிக்கும்   தனது தொய்வில்லா வெங்கலக் குரலால் அனைவரையும் எழுப்பி விட்டார்.

 

ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பது சொலவடை. ஆனி மாதத்திலேயே முன்னோட்டம் ஆரம்பித்தற்போல் அதிகாலை நேரத்தில் வீசுவீசென்று காற்றடித்தது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் இருந்த குழந்தை மாநகரத்து மக்கள் சில்லென்று வீசிய காற்றில் சோம்பலாய் தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

அழகாக நேர் வகிடெடுத்து தலை சீவினாற்போல், பெரியகுளத்தை சரிபாதியாக வடகரை, தென்கரை எனப் பிரிக்கும் வற்றாத வராகநதி. அந்த வராக தீர்த்தத்தில்தான் நீராடுவேன் என்று இருநூறு வருடங்களுக்கும் மேலாக அடம் பிடித்து தென்கரையில் அமர்ந்திருக்கும் கௌமாரியம்மன். அவள் ஆங்கில ஜூலை மாதத்தில் நடக்கும் ஆனித் திருவிழாவுக்காக தயாராகிக் கொண்டிருந்தாள்.

 

திருவிழா முடியும் வரை கௌமாரிக்கு  ஒரு வினாடி கூட ஓயவில்லை. கம்பம்  சாற்றுதல், அபிஷேகம் முடித்து தினமும் ஒரு அலங்காரம். இரவானால் அன்ன வாகனமோ, குதிரை வாகனமோ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஊர்வலம், களைத்திருக்கும் வேளையில் பொய்க்கால் குதிரை, மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று கலைநிகழ்ச்சிகளைப் பார்த்து களிப்படைவாள். ஒவ்வொரு வருடமும் நேர்த்திக்கடனாக  பால்குடமும், தீச்சட்டியும் சுமந்து  பக்தர்களுக்கு அருள் பொழிந்து அவர்கள் கஷ்டங்களைத் தீர்த்து, ஊரை பரிபாலனம் செய்து வரும் மாரி வருடம் ஒருமுறை அனைவர் வீடுகளிலும் தனக்கென விரதமிருந்து வீட்டுப் பெண்கள் செய்யும் மாவிளக்கை சுவை பார்ப்பாள். அதனால் மாவிளக்கு சரியாக வரும்வரை பெண்களுக்குப் பதைபதைப்பு நீங்காது. இதில் முக்கியமானது என்று கருதப்படுவது பூமிதி இறங்கும் விழா. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதை ஹிந்து சகோதரர்களுக்காக நடத்துவது இஸ்லாமிய சகோதரர்கள்.

 

 

சோம்பலாய் தோன்றிய அந்த அதிகாலை வேளையிலும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, காலை நான்கு மணிக்கே வராஹநதியில் முழுக்குப் போட்டுவிட்டு, மாரியம்மன் கோவில் விபூதி நெற்றியில்  துலங்க காரியத்தை கவனித்துக் கொண்டிருந்தான் திருமலை. அவனைப் போலவே அவனது டீ  பாய்லரும் மடியாகக்  குளித்து, சந்தனம் குங்குமம் மணக்க நின்றது.

 

“என்னண்ணே  நேத்து மதனியோட  அலும்பு பண்ணிட்டிருந்திங்க போலிருக்கு”

 

“ராத்திரி சரக்கு கொஞ்சம் ஓவராயிடுச்சுடா. அதுக்கு கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளி விட்டுட்டா உன் மதனி.  அதுதான் வெளியே நின்னு சலம்பல் பண்ணேன்” திருமலையின் சந்தேகத்துக்கு பீடி வலித்தவாறே சிவனாண்டி பதிலளித்தான்.

 

“காலைல நீங்க பேசினதுக்கெல்லாம்  மதனி விளக்கம் கேட்டுச்சுன்னா என்ன பண்ணுவிங்க”

 

“போதைல பேசினது மறந்துட்ட மாதிரி நடிக்க வேண்டியதுதான். எவ்வளவு காலமா செஞ்சுட்டு வரோம்”

 

“ஏண்ணே இந்தக் கருமத்தை குடிச்சு வயத்தை கெடுத்துக்கிறிங்க” திருமலை அக்கறைப்பட்டான்

 

“ஏனா…  இந்தக் கருமம் இருக்குறதால உன் மதனி பண்ணுற கொடுமையெல்லாம் மறக்க  முடியுது. இல்லைன்னா எப்பவோ ஊர  விட்டு ஓடிப் போயிருப்பேன்” அசால்ட்டாய் சொன்னான் சிவனாண்டி.

 

“குடிக்குறதுக்கு இது ஒரு சாக்கு. இதோ அடுத்த வாரம் திருவிழா வந்துடுச்சு. இனிமே எப்படி தண்ணி போடுறிங்கன்னு பாக்குறேன்.”

 

“ஆமாம்டா அதுவேற ரெண்டு வாரம் விரதம். வீட்டுல வேற விருந்தாளிங்க குவிஞ்சுடுவாய்ங்க. அம்மா வீட்டு சொந்தத்தைப்  பாத்தா ஏன் பொண்டாட்டி வேற நீச்சத் தண்ணியக்  கூட கண்ணுல காட்ட மாட்டா”

 

கைகளைக் குவித்து வானத்தைப் பார்த்தபடி சொன்னார் ஒருவர் “ஆனி மாசம் மாதிரியா இருக்கு. ஒரே ஊதக் காத்தும் மழை மேகமுமா ஐப்பசியாட்டமிருக்கு”

 

“கலியுகம்டா….. அப்படித்தான் பருவம் தப்பி மழை பெய்யும்.” மற்றொருவர் மருமொழியளித்தார்

 

“என்ன மழன்னாலும் கொடிக்கம்பம் நட்டவுடனே பாரு… போட்டி போட்டுட்டு இந்தப்  பசங்க விடியால தண்ணி ஊத்தக் கிளம்பிருவாய்ங்க”

 

அவர்கள் பேச்சு சத்தத்தையும் மீறி, விடியலின் அமைதியைக் கிழித்துக் கொண்டு

 

“பா….ம்” அலறியபடி நின்ற தமிழக அரசு விரைவுப் பேருந்திலிருந்து இறங்கினான் ப்ரித்வி. பேருக்கேற்ற சுந்தரன். எந்த சம்யுக்தையை தூக்கக் காத்திருக்கிறானோ தெரியவில்லை.

 

 

களைப்பை  சிறிதும் காட்டாத கண்கள். தைமாத அறுவடைக்கு முன் காற்றிடம் ரகசியம் பேசும் நெல் சூரிய  ஒளியில் தகதகவென மின்னுமே… அந்த  நிறம். அடர்த்தியான முடி முரட்டுக் காளை   போல் படியாமல் நிற்கும். அதற்கு ஹேர் கிரீம் போட்டு படிய வைத்திருந்தான். எதிராளியை துளைக்கும் கூர்மையான கண்கள். அவன் அம்மா  சொல்வார் “கழுகுக் கண்ணுடா உனக்கு”. பறவைகளிலே கழுகுக்குத்தான் மனிதனின் அளவுக்கு பெரிய கண். ஆனால் மனிதனைவிட நான்கு  மடங்கு கூர்மையான பார்வை உண்டாம். ஆறு ரெண்டு உயரம் இருப்பான். நீல நிற டெனிம் ஜீனும், வெள்ளையில் கருப்பு கோடுகள் போட்ட டீ ஷர்ட்டும் அணிந்திருந்தான். முகத்தில்  படித்த களை. ஊருக்குப் பொருந்தாத தோற்றத்துடன் பாக் பேக் ஒன்றுடன் டீ கடையில் ஸ்வாதீனமாய் உட்கார்ந்தான்.

 

 

“அண்ணே ஒரு டீ போடுங்க” என்றபடி பெஞ்சில் அமர்ந்தவன், அத்தனை காலையில் வந்திருந்த பத்திரிக்கையை புரட்டி சிந்துபாத் ராட்சஷனின் வயிற்றைக் கிழித்து வந்ததை மறுபடியுமொரு முறை சுவாரஸ்யமாகப் படித்தான். ஆண்டியப்பன் படும் பாடல்களைப் படித்து முடிப்பதற்குள் நுரை ததும்பும் டீ  வந்தது.

 

 

“தம்பி ஊருக்குப் புதுசு போலிருக்கே” என்று டீயைத் தந்தபடி விஷயத்தைக் கறக்க முயன்றான் திருமலை. ப்ரித்வி சிக்கனமாய் புன்னகைத்தான்.

 

 

“பாக்க பட்டனமாட்டம் தெரியுது. திருவிழாவுக்கு வந்தீகளா? இங்கிட்டு உங்க சோட்டு  பசங்க நாலு பேர்தான். அதுல ரெண்டு பேர் திருவிழவுக்கே வரல. அப்ப நீங்க ராஜேந்திரன் இல்ல குலசேகரன் வீட்டுக்குத்தான் வந்திருக்கணும். தம்பி யார் வீட்டுக்கு வந்துருக்காப்ல ”

 

 

அவனது யூகத்தை ஆமோத்தித்தபடி “ராஜேந்திரன் வீட்டுக்குத் தான் வந்திருக்கேன்”

 

‘ஏன் கிட்டயா ‘ தனது புத்திசாலித்தனத்தை மெச்சியபடி ” குறுக்கு சந்துல புகுந்து சோத்தாங்கை பக்கம் திரும்புனிங்கன்னா மூணாவது வீடு. பக்கத்துல மாட்டுக் கொட்டகையோட ஒரு பெரிய பச்சை கலர் வீடிருக்கும்”.

 

சில்லறை இல்லாமல் ஐந்நூறு  ரூபாய் நோட்டை எடுத்துத் தந்தவனிடம் “சில்லறை இல்ல தம்பி. ராஜேந்திரன் வீடுதானே…. அப்பறம் தாங்க” பதிலில் ஆச்சிரியப்படுத்தினான்.

 

 

நகரத்தில்  பக்கத்து பிளாட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாது. கொஞ்சம் மாறி இப்போது பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூட கவனிக்கும் ஆர்வமில்லாது கணிப்பொறியிலும் கைபேசியிலும் மூழ்கிக் கிடக்குது உலகம். இங்கு இருக்கும் அன்னியோன்யத்தை எவ்வளவு தவற விட்டிருக்கிறோம் என்று நினைத்தான் ப்ரித்வி.

 

டீ கடைக்காரன் சொன்ன சந்தில் திரும்பியவன் கண்கள் பளிச்சென பெரிதாகின. “வாவ், ஏஞ்சல்தான்.. ” ரீபோக் காலணியின் உதவியால் சிறிதும் சத்தமிடாமல் அருகில் இருந்த வேப்பமரத்து இருளில் ஒளிந்தவன் அந்தப்  பைங்கிளியை நோட்டம் விடத் தொடங்கினான்.

 

 

 

அவனைப் பற்றி அறியாத அவள் சாணி தெளித்த தரையில் கோலமாவை எடுத்துக்  கோலமிட ஆரம்பித்திருந்தாள். அந்த அதிகாலைக் குளிர் அவளை பாதிக்கவில்லை. இத்தனைக்கும் தலைக்குக் குளித்து, தண்ணீர் ஜடை போட்டு நுனியில் முடிந்திருந்தாள். அதில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. இளம் ரோஜா நிறத்தில் பாவாடை, அதே துணியில் தைத்த ரவிக்கை, இங்க் ப்ளூ நிற தாவணி. சிறிய வட்ட முகம். ரின் சோப் வெண்மை என சொல்ல முடியாது இருந்தாலும் மாநிறத்துக்கு மேல், அதற்கு ஈடு செய்தாற்போல் அமைந்த வெகு திருத்தமான முகம். அகல் விளக்காய் சுடர் விட்ட பெரிய கரிய கண்கள். அந்த சிறிய மூக்கில் வைரமாய் ஜொலித்த மூக்குத்தி. சற்றே பிளந்த ஆரஞ்சு வண்ண இதழ்கள். கொடைக்கானல் அடிவாரத்தில் இருப்பதினாலோ என்னவோ கன்னம் சற்று ரூஜ் போட்டது போல் சிவந்திருந்தது.

 

 

‘இவள பிரம்மன் குஷியான மூடுல இருக்கும்போது படைச்சுட்டான் போலிருக்கு’ மனதினுள் சொல்லிக்கொண்டான்.

 

 

ஏதோ புரியாத புதிரை விடுவிப்பது போல அந்த சிக்கு கோலத்தில் லயித்திருந்தவளைப்  பார்வையாலேயே விழுங்கினான். பிளஸ் வடிவ கோலத்தில் நான்கு புறமும் குத்துவிளக்குகள் எரிவதைப் போல அம்சமாய் அமைந்த கோலத்தினால் திருப்தியுற்றவள் அதனை ஒரு நிமிடம் ரசித்தாள்.

 

“அம்மா!” என்ற பசுவின் குரலால் ரசனை தடைபட “வந்துட்டேன் லக்ஷ்மி” என்றபடி வாளியையும் பெருக்குமாறையும் கைகளால் அள்ளியபடி ஓட்டமும் நடையுமாய் பின் கட்டுக்கு ஓடினாள்.

 

 

‘யெப்பா…. ஆளு மட்டுமில்ல குரலும் கூட கிளிதான். ப்ரித்வி, உனக்கு ஊர்ல காலெடுத்து வச்சதும் தேவதை தரிசனம். ஜமாய்டா ராஜா’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.வேப்பமரத்தின் பின்னிருந்து வெளிவந்தவன் அவள் போட்ட கோலத்தை நின்று நிதானமாக ரசித்ததோடு தனது கைப்பேசியில் படமெடுத்து விட்டு ராஜேந்திரன் வீட்டை நெருங்கினான்.

 

திண்ணையிலிருக்கும் கயிற்றுக் கட்டிலில் படுத்து கொண்டு இப்போது எந்திருக்கலாமா இல்லை அரைமணி ஆகட்டுமா என எண்ணியவாறு சோம்பலாய் படுத்திருந்தான் ராஜேந்திரன். கதவு திறக்கும் சத்தம் கேட்டு போர்வையிலிருந்து எட்டிப் பாத்தான். ப்ரித்வியை எதிர்பாராமல் அங்கு கண்டவன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்

 

“டேய் ப்ரித்வி…. என்னடா இப்படி சொல்லாம கொள்ளாம திடீருன்னு வந்து நிக்குற…. ஏன் போன் பண்ணல?”

 

“சரி நான் போயிட்டு போன் செய்துட்டு வரேன்” திரும்பினான் ப்ரித்வி

 

“என்னடா இதுக்குப் போய் கோச்சுக்குற.. சொல்லிருந்தா உன்னைக் கூப்பிட பஸ்ஸ்டான்ட் வந்திருப்பேன்ல”

 

“நான் பெரிய லார்ட் லபக்குதாஸ்…. என்னை வரவேற்க நீ வரணுமா? திடீருன்னு அம்மாவோட வேண்டுதல் நினைவுக்கு வந்தது. ரெண்டு நாள் முன்னாடி பேசும்போது நீ உங்க ஊர் திருவிழா பத்தி வேற சொன்னியா. ரெண்டு வேலையையும் முடிச்சுட்டு போலாம்னு வந்துட்டேன்”

 

உள்ளே தூங்கிக் கொண்டிருந்த தந்தையை எழுப்பினான்.

“வாப்பா” அழைத்த பரமசிவம். சடுதியில் படுக்கையை சுருட்டினார். ப்ரித்வியிடம் நலம் விசாரித்தார்.

 

“கொல்லைல பாத்ரூம் இருக்கு, முகம் கழுவிட்டு வந்துடுங்க. காப்பி போடுறேன்” என்றார். மனைவி தவறியதிலிருந்து அந்த வீட்டில் அவர்தான் நளபாகம். நளன் அளவுக்கு சுவையாக சமைக்க முடியாவிட்டாலும் ஓரளவு சாப்பிடக் கூடிய அளவில் சமைப்பார்.

 

 

“கஷ்டப்படாதிங்க அங்கிள். ஓசி டீ குடிச்சிட்டுத் தான் வந்தேன்”

 

“நீ குடிச்சிட்ட… நாங்க குடிக்க வேணாமா” சிரித்துக் கொண்டே பதிலிறுத்தவர்.

 

“குளிக்குறதுன்னா சுடுதண்ணில குளிப்பா. இந்த வருஷம் வாடைக் காத்து அதிகமாவே இருக்கு. தடுமம் பிடிச்சுக்கும்”

 

“சரி அங்கிள்” வழக்கமாக வீட்டில் அணியும் லூசான பைஜாமாவுக்கு மாறியவன், பேஸ்ட் பிரஷ்ஷை பெட்டியிலிருந்து எடுத்தான்.

 

“ஏண்டா எங்க வீட்டுல பேஸ்ட், சோப்பு இதெல்லாம் தரமாட்டோமா? ஊருலேருந்து தூக்கிட்டு வந்திருக்க”

 

“ச்சே…. “ தலையில் அடித்துக் கொண்டவன்

 

“நீ மட்டும்தான் வீட்டுல இருப்பேன்னு நெனச்சு எடுத்துட்டு வந்துட்டேன்டா. உங்கப்பாவுக்கு பல்லு விளக்குற, குளிக்குற பழக்கம் இருக்குன்னு மறந்தே போயிட்டேன்”

 

களுக்கென்ற சிரிக்கும் ஓசை கேட்டு தாமதித்தவன் அந்த திசை நோக்கித் திரும்ப, காலையில் அவன் பார்த்த தாவணிக் குயில் நின்றிருந்தாள்.

மின்னல் கீற்றாய் தெரிந்த வரிசைப் பற்களில் திகைத்து நின்றான்.

ரவிவர்மாவின் ஓவியம் ஒன்றில் தட்டில் பழங்களை ஏந்தியபடி சிவப்பு சேலையணிந்த பெண் ஒருத்தி ஒருத்தி குவளைக் கண்களை விரித்துப் பார்ப்பாளே அதைப் போலிருந்தது ப்ரித்விக்கு

 

“மாமா இந்தாங்க” பால் தூக்கினை கைகளில் ஏந்தியவாறு சமையலறையில் நுழைந்தாள்.

 

“புதுசா வாங்கின நரசூஸ் காப்பி அலமாரில இருக்கு. அப்படியே எங்களுக்கு பில்டர் காப்பியும் போட்டுடு நந்து” என கெஞ்சலாய் ராஜேந்திரன் கேட்க

 

“சரிண்ணா” உள்ளிருந்தபடி குரல் கொடுத்தாள்

 

“ப்ரித்வி இவ …” திரும்பினான் ராஜேந்திரன். ப்ரித்வி ஏவுகணையைப் போல பின்கட்டுக்கு விரைந்திருந்தான்.

 

சாவகாசமாய் வீட்டில் ப்ரித்வி நுழைந்தபோது டபரா டம்ளரில் நுரை ததும்ப காப்பி ஆற்றிக் கொண்டிருந்தான் ராஜேந்திரன்

 

“கவலைப்படாதே நான் சரி பண்ண முயற்சி பண்ணுறேன். என் பிரெண்ட் ஊருலேருந்து வந்திருக்கான். காலேஜ்ல படிக்கும்போது அவனோட பட்டப்பேரு எடிசன். அதுக்குன்னு புத்திசாலின்னு தப்புக்கணக்கு போடாதே. அந்த அளவு எல்லா பொருளையும் நோண்டி உடைச்சு வைப்பான். அவன்ட்டையும் கேட்டுப் பாக்குறேன்” என்று சொல்லி தன்னைக் கிண்டல் செய்த ப்ரித்வியைப் பழி வாங்கிக் கொண்டிருந்தான்.

 

“இதோ அவனே வந்துட்டானே. ப்ரித்வி இங்க வாயேன் இவ நந்தனா பக்கத்து வீட்டுப் பொண்ணு…. நந்து இவன்”

 

“நானே சொல்லிக்கிறேன் மச்சான்” அவனைக் கத்தரித்தவன்

 

“ஹாய் நந்தா, நான் ப்ரித்வி. இவனோட லயோலால எம்பிஏ படிச்சேன். இப்ப பிசினஸ் செய்துட்டு இருக்கேன்” வலது கையை கைகுலுக்க நீட்டினான்

 

நந்தனாவுக்கு சற்று திகைப்பு “அ…” என்று சொல்ல வாயெடுத்தாள்

 

“கால் மீ ப்ரித்வி. இல்லைன்னா ராஜா உங்களுக்கு ஏதோ உதவி வேணும்னு சொன்னானே. அதை செய்ய மாட்டேன்”

 

“இல்ல நீங்க பெரியவர் உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிட்டா மரியாதை கிடையாதே” திணறியபடி நீளமாகப் பேசி முடித்தாள்

 

“என் மரியாதையைப் பத்திக் கவலைப்பட இப்படி ஒரு ஆளா? பரவல்ல உன் மரியாதை எனக்கு வேணாம். என்னைப்  பேர் சொல்லியே கூப்பிடு” அழுத்தி சொன்னான்.

 

மரியாதை வேணாமா? இவன் பேசுறது ஏன் இவ்வளவு வித்யாசமா இருக்கு என்றவாறே தலையாட்டினாள்.

 

“குட். இப்ப கூப்பிடு பார்க்கலாம் ஹலோ ப்ரி…த்…வி ப்ரித்வி”

 

“ஹலோ ப்ரித்வி” திக்கித் திணறி பேசி முடித்தாள்.

 

“ப்ரித்வி…. வந்ததும் வராததுவுமா ஏண்டா அவகிட்ட வம்பு வளக்குற. பயப்படாதே நந்தனா அவன் எப்போவுமே இப்படித்தான்”

 

“நான் வரேண்ணா… வீட்டுல வேலையிருக்கு. காலை பலகாரத்துக்கு இடியாப்பம் தேங்காய் பால் இனிப்புக்கும், காரத்துக்கு தோசை சட்னியும் செய்யணும். உங்களுக்கும் சேர்த்துத்தான் சமைக்கப் போறேன். மாமாவ டிபன் செய்ய வேண்டாம்னு சொல்லிடுங்க”

 

பேர் சொல்லத் தயங்கி ப்ரித்வியிடம் கண்களாலேயே விடை பெற்று சென்றாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நூலகம்நூலகம்

வணக்கம் தோழமைகளே, ஒரு முறை வாசகர் ஒருவர் பேசும்போது ஒவ்வோரு சைட்டிலும் கதைகள் முடிந்ததை பாலோ செய்ய கஷ்டமாக இருப்பதாகவும். கதை முடிந்தது தெரிந்தால் படிக்க வசதியாக இருக்கும் என்றும் சொன்னார். நாங்கள் கதை எழுத ஆரம்பித்தபோது அமுதாஸ் ப்ளாக்கில் தகவல்களை