Tamil Madhura சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே',தொடர்கள் சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 14 (Final episode)

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 14 (Final episode)

இதயம் தழுவும் உறவே – 14

 

நாட்கள் மிகவும் வண்ணமயமாக கழிந்தது யசோதாவிற்கு. பிறந்த வீட்டினைப்பற்றி எந்த கவலையும் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்னும் நிலையே அவளுக்கு நிறைய பலத்தையும், நிறைவையும் தந்தது. கணவனின் அன்பைப்பற்றி சொல்லவே வேண்டாம், அனைத்திற்கும் அவனுக்கு அவள் தான் வேண்டும். இப்பொழுதெல்லாம் அவளுக்கும் அவ்வாறே!

முன்பு இடைவெளி விட்டதுக்கெல்லாம் சேர்த்து வைத்து இருவரும் காதலித்துக் கொண்டிருந்தார்கள். அதோடு யசோதாவிற்கு கடைசி செமெஸ்டர் என்பதால், பிராஜெக்ட் செய்ய வேண்டியதாய் இருக்க, பாதி நாட்களுக்கு மேல் அவள் கல்லூரிக்கே செல்ல வேண்டியது இல்லை.

வீட்டில் இருக்கும் பொழுது வித்யாவின் வார்த்தைகள் சற்று அதிகம் தான் என்றாலும், “மனோ அத்தான் கிட்ட சொல்ல வேண்டி வரும் வித்திக்கா” என அவளது வாயை அடைத்தாள். வித்யா அதற்காகவெல்லாம் முழுதாக அடங்கிப்போகும் ரகம் இல்லையென்றாலும், அவளுடைய பேச்சுக்கள் சற்று குறைந்திருந்தது. மீதி பேச்சுக்களை யசோதா இயன்றவரை புறக்கணிக்க முயற்சி செய்தாள்.

மனோகரன் அரசாங்க தேர்வுக்கு தயாராகிறான் என்று தெரிந்து கொண்டதும், அவனோடு அவளும் இணைந்து கொண்டாள். கல்லூரி பாடங்கள் படிக்கும்போது கவியரசனிடம் கூட அத்தனை சந்தேகங்கள் கேட்க மாட்டாள். ஆனால், இந்த தேர்வுக்கு மனோகரனை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

“அத்தான் இந்த டாபிக் இன்னும் ஈஸியா சொல்லி கொடுங்களேன்” என ஏற்கனவே சொல்லி தந்ததிலேயே சந்தேகம் கேட்டு நிற்பாள்.

பொறுமையாக பலமுறை சொல்லி தந்தவன் ஒரு கட்டத்தில் பொறுமை பறக்க, “என்ன யசோ எல்லாத்தையும் நானே படிச்சு சொல்லணுமா? நீ மேத்ஸ் கிராஜுவேட் தானே, நீ மேத்ஸ் பாரு. நான் சயின்ஸ் பார்க்கிறேன்” என கறாராக பாகம் பிரித்தான் மனோகரன்.

“என்ன அத்தான்…” என ஆரம்பத்தில் மறுத்தவள், “இதென்ன பிரமாதம் இந்த டாபிக் நானே பாத்து உங்களுக்கும் சொல்லறேன் பாருங்க” என்ற வீம்பாக முடிவெடுத்து சிறப்பாக செயல்படவும் தொடங்கினாள்..

அன்றும் அப்படித்தான் இரவு வெகுநேரம் வரை அவளுக்கு ஒதுக்கப்பட்ட தலைப்பினை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவளிடம், “இன்னும் எவ்வளவு நேரம் யசோ?” என நேரம் ஆவதை உணர்ந்து கவியரசன் கேட்டான்.

“ஏங்க?”

“போதும் வா தூங்கலாம். ரொம்ப நேரமாயிடுச்சு”

“உங்களுக்கு தூக்கம் வந்தா தூங்குங்க. நான் படிச்சுட்டு வந்துடறேன்” தலை நிமிர்த்தாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இந்த வருஷமே எக்ஸாம் எழுதப் போறியா என்ன?” கவியரசன் கேட்க,

“அட இது கூட நல்லா இருக்கே எழுதிடவா?” என்று குரலில் சிறு துள்ளலுடன் மனைவி கேட்டாள். கவியரசன் பதிலேதும் சொல்லாமல் மெளனமாக இருந்தான்.

யசோதா கேள்வியாக தலையை உயர்த்தி பார்க்கவும், அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் கணவன். ‘உண்மையிலேயே உனது தேர்விற்காகத்தான் நீ படிக்கிறாயா?’ என்று அவனது கூர்ப்பார்வை அவளிடம் கேட்டது.

அவனது பார்வையின் வித்தியாசம் விசாரிக்கும் தொனியில் இருக்க, பேசாமல் எழுந்து நின்று கொண்டாள். “உங்க டீச்சர் வேலையை என்கிட்ட காட்ட கூடாதுன்னு சொல்லி இருக்கேன் தானே?” அப்பாவியாய் கணவனை கேள்வி கேட்டாள்.

“ஆமா ஆமா ரொம்ப பயந்த சுபாவம் தான்” என்று போலியாய் பரிதாபம் காட்டினான் கணவன்.

“நான் என்னங்க செஞ்சேன்?”

“அதை நீ தான் சொல்லணும்” அப்படி விட்டு விடுபவனா அவன்.

“இப்ப எல்லாம் வித்திக்கா அதிகம் பேசறது இல்லைங்க. மனோ அத்தான் கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லி வெச்சிருக்கேன்” அவன் கோபம் எதுவாக இருக்கும் என புரிந்து ஓரளவு ஊகித்து பதில் தந்தாள்.

“ஆனா, இன்னும் நீ மனோ கிட்ட சொல்லலையே!” என தன் பிடியிலேயே நின்றான் அவன்.

“அதான் இப்ப எல்லாம் பேச்சை குறைச்சிட்டாங்களே? இனி எதுக்கு சொல்லி, வீணா பிரச்சனை?” என பரிதாபமாக யசோதா கேட்க, “ஆனா இன்னும் நிறுத்தலை” என்றான் அழுத்தமாக. அதிலேயே புரிந்து விட்டது அவன் வித்யா பேசிய எதையோ கேட்டு விட்டான் என்று.

எப்படி சமாளிக்க என புரியாமல் விழித்து நின்றவளிடம், நெருங்கி வந்தவன், “நீ வக்கில்லாதவளா? இந்த கவியரசன் பொண்டாட்டி வக்கில்லாதவளா?” என அவளது தோள்களை பற்றி உலுக்கினான்.

அவள் கண்கள் நீரினை சுரந்திருந்தது. “அவங்க என்ன பேசினாலும் பொறுத்து போகணும்ன்னு உனக்கு என்ன அவசியம்? என்கிட்ட எதையும் சொல்ல கூட மாட்டீங்கிற? நானும் பொம்பளைங்க பேச்சுக்கு நடுவுல வர வேண்டாம்ன்னு ஒதுங்கி ஒதுங்கி இருந்தா, நீயும் தடுக்க மாட்டீங்கிற. அவங்களும் நிறுத்த மாட்டீங்கறாங்க” தனது ஆதங்கத்தில் வெடித்தான்.

“பிள்ளை பெத்துக்க வக்கில்லை. நகைங்க இல்லை. அன்னக்காவடி குடும்பம். படிக்க வைக்க துப்பில்லை… இன்னும் எவ்வளவு பேச்சு வாங்கறதா இருக்க?” என மீண்டும் கவியரசன் உறுமினான்.

“அந்த பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாதுங்க. அவங்க குணம் அப்படி, நாம பேச பேச அவங்க கோபம் அதிகம் தான் ஆகுது” என்றாள் மென்குரலில். கூடவே, அவன் கரங்களுக்கு தரும் அழுத்தத்தில் வலி தாங்கமாட்டாமல் அவள் நெளியவும், அவளது கரங்களை விடுவித்தான்.

அவனது விழிகள் இன்னமும் அவளையே துளைக்க, “அவங்க குணம் அப்படி. அவங்க பேச்சுக்களை நாம உதாசீனப்படுத்தறது தான் சரியான பதிலா இருக்கும். நாமளும் அவங்களை மாதிரி நடந்துக்கிட்டா நமக்கும், அவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருந்திட போகுது” என மென்குரலில் மீண்டும் பதில் தந்தாள்.

“லூசா டி நீ” என்று சினந்தான் கணவன்.

“அதையெல்லாம் கூட பொறுத்துப்பேன்டி. ஆனா, எங்க அண்ணன் எக்ஸாமுக்கு நீயும் படிக்கிற மாதிரி ஸீன் போடற பாத்தியா?” என கவியரசன் இழுக்க, ‘எப்படி கண்டுபிடித்தான்?’ என யசோதா திருதிருத்தாள்.

“அண்ணி நம்மை ரெண்டு பேரையும் அப்படி கேவலமா பேசறாங்க. நீ ஒரு வார்த்தை எதிர்த்து பேசறது இல்லை. அவங்க பேசறதுக்கு எதிர்வினை எதுவும் கிடையாது. இதுல அவங்களுக்கு நல்லது செய்யணும்ன்னு என்ன அவசியம்?” என கணவன் சூடாக கேட்டான்.

அவள் தலை குனியவும், “மனோகரனுக்கு கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சுட்டா மட்டும் அவங்க மாறிடப் போறாங்களா? இல்லை உன்னை கொண்டாடப் போறாங்களா?”

“நான் எதையும் எதிர்பார்த்து இதை செய்யலைங்க” என்றாள் மென்குரலில்.

“ஆனா, அவங்களுக்கு என்ன குறைன்னு யோசிச்சு, அதை சரி பண்ணறதுக்காகத்தானே இதெல்லாம் செய்யற?” அவளை சரியாக கணித்து அவன் கேட்க, அவளால் அவனது நுண்ணியமான கணிப்புகளை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

“அதுல என்ன தப்பு?” என்றாள் அவள்.

“பாரு நீ என்னதான் தங்கமா தாங்கினாலும் அவங்க குணம் மாறாது. நீ ஏன் இத்தனை சிரமப்படற? இந்த விஷயத்தை சரி செஞ்சா மறுபடியும் வேறொரு விஷயத்துல ஒப்பிட்டு பார்த்து வயிறு எரியத்தான் போறாங்க. அவங்களை எல்லாம் திருத்தவே முடியாது. தன் வாழ்க்கையை பார்க்காம அடுத்தவங்க வாழ்க்கையை பார்த்து நிம்மதியை கெடுத்துக்கறவங்களை நாம என்ன பண்ண முடியும்?”

“இருந்துட்டு போகட்டும். அவங்க குணம் எப்படியோ? இது நம்ம குணமா இருக்கட்டும். நான் அத்தானுக்கு தான் உதவி செய்யறேன். அது வித்யக்காவுக்காகவும் சேர்த்து தான். இல்லைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா, அவங்களுக்காக என்னை மாத்திக்க நான் தயாரா இல்லை” என்றாள் உறுதியுடன்.

“யசோ…” என்றழைத்தவன் சிறு பெருமூச்சை வெளியிட்டு விட்டு, “சரி வா காலையில பாத்துப்பியாம்” என கையோடு அவளை அழைத்து வந்தான்.

தன் கைவளைவில் அவளை படுக்க வைத்தவன், “எதுக்கு இவ்வளவு வீம்பு பண்ணற?” என்றான் சலிப்பாக.

“நல்ல விஷயத்துக்கு செய்யலாம்” என்றவள், “தப்பில்லை தானே?” என தன் முகம் மட்டும் உயர்த்தி அவனிடம் கேட்க,

அவளது நெற்றியில் இதழ் பதித்தவன், “உன் விருப்பம் போல செய்டா. ஆனா, என்கிட்டேயும் சொல்லிட்டு செய். நானும் வீணா பதற மாட்டேன்” என்றான்.

“சரி இதென்ன உன்கிட்ட திடீர்ன்னு இத்தனை மாற்றம்? உன்னை தினமும் திட்டறவங்களுக்கு போய் நல்லது செய்யணும்ன்னு நினைக்கிற?” அவளின் அடாவடியை உணர்ந்தவனாய் கேட்டான்.

“ஏன் நீங்க அப்படி நினைக்கலையா?” என்றாள் கேள்வியாக.

அவளையே அவன் ஆழ்ந்து பார்க்கவும், “மனைவியா ஒரு நாளும் நடந்துக்காத போதும், கணவனா, மருமகனா உங்க பொறுப்பை எவ்வளவு நல்லா செஞ்சீங்க. எதையும் எதிர்பார்க்காம” என்ன முயன்றும் அவனிடம் நன்றியுணர்வு தலைதூக்காமல் இருப்பதே இல்லை.

“சின்ன குழந்தை மாதிரி பேசாத யசோ. எப்படி இருந்தாலும் நீ தான் என் மனைவி. அதிலும் உன்னை விரும்பி மணந்தவன். உன்னை எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஆனா, அண்ணி விஷயம் அப்படி இல்லை. அவங்க மாற மாட்டாங்க மா”

“இருந்துட்டு போகட்டுமே!”

“குரைக்கிற நாய் கடிக்காதுன்னு நினைச்சுட்டியோ?”

“அச்சோ சந்தடி சாக்குல அக்காவை நாய்ன்னு சொல்லிட்டீங்களே”

“ஹே நான் பொருத்தமான பழமொழி தானே சொன்னேன்”

“ஏன் பொருத்தமா குறள் இருக்கே, அதை சொல்லி இருக்க வேண்டியது தானே!”

“குறளா? ஓஹோ!

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

வெகு பொருத்தம் தான்” என்று சிரித்தான் கவியரசன்.

கூடவே, “சரி சரி உன் விருப்பம் போலவே செய்வியாம். இப்போ தூங்கு. நேரம் ஆச்சு” என்று அவளது தலையை வருடி விட்டான். எப்படியும் அவளிடம் வாதிட்டு வெல்ல முடியாது அவனால். அதிலும் அவளிடம் தவறு இல்லை என்னும் நிலையில் அது சாத்தியமே இல்லை அவனுக்கு.

அவள் விட்டுக்கொடுக்கவே போவதில்லை என்று உணர்ந்தவன், அவளை அவள் போக்கிலேயே விட்டுவிட தீர்மானித்தான். வித்யா போன்றவர்களுக்கு நல்லது நினைக்கவும் தனி மனம் வேண்டும். அது தன் மனையாளிடம் இருப்பதில் அவனுக்கு கர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் கூட இருந்தது. தன்னை மட்டும் நேசியாது, தன் குடும்பத்தில் இருப்போரின் குறையையும் பொறுத்துக் கொண்டு நன்மை செய்யும் அவள் குணத்தில் அகமகிழ்ந்தான்.

ஏற்கனவே, மனைவி வந்த பிறகு, தாயின் மாற்றம் அத்தனை நிறைவென்றால், இப்பொழுது அவளுக்கு தீமை செய்யும், அவளிடம் வரைமுறைகளற்று பேசும் அண்ணியிடமும் எந்த கோபமும் காட்டாமல், நல்லது செய்கிறாள் என்று நினைக்கவே அவனுக்கு ஆச்சர்யமாகவும், நிறைவாகவும் இருந்தது.

தீமை செய்பவருக்கும் நல்லது நினைக்கும் மனைவியால் இந்த குடும்பத்தின் நிம்மதி பெருகும் என்பதில் மனம் நிறைந்தான். இப்பொழுது இவனுக்குமே வித்யா திருந்துவதும், திருந்த மறுப்பதும் இரண்டாம் பட்சமாகவே பட்டது. அவள் என்ன விதைத்தாலும், அதை அனுபவிக்க போவது அவள் தானே! தீது நினைப்பவருக்கும் நாம் நல்லதே நினைப்போம் என்னும் மனைவியின் வழியை அவனும் பின்தொடர முடிவு செய்தான்.

இவர்களின் நற்குணங்களால் இவர்களது இல்லறம் பலமடங்கு சிறக்கும் என்ற நம்பிக்கையோடு நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.

** சுபம் **

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 20யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 20

கனவு – 20   நேரம் இரவு பதினொரு மணி. கைத்தொலைபேசி விடாமல் அதிர்ந்து கொண்டிருக்கவும் யாரென்று பார்த்தான் சஞ்சயன். காலையிலிருந்து அன்ன ஆகாரமின்றி வைஷாலியின் டயரிகளிலேயே மூழ்கிப் போயிருந்தான். இந்த சாம நேரத்தில் யார் அழைப்பது என்று சிந்தித்தவாறே தொலைபேசியைக்

நிலவு ஒரு பெண்ணாகி – final partநிலவு ஒரு பெண்ணாகி – final part

வணக்கம் பிரெண்ட்ஸ், ‘நிலவு ஒரு பெண்ணாகி’ எனது பத்தாவது கதை. இதை ஆன்மீகம் கலந்து எழுத வேண்டும் என்ற ஆசை இருந்த அதே நேரத்தில் அதை எப்படி கதையாய்த் தருவது என்ற சந்தேகம் பலமாய் இருந்தது. கடவுளின் அருளால் என்  முயற்சி

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 24மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 24

24 அப்பாடி இனிமேல் தொல்லை தரமாட்டான் என்று சுஜி நினைத்தது பொய் என்பதை நிரூபிக்குமாறு கல்லூரிக்கே இவளைத் தேடி வந்து நின்றான் மாதவன். என்ன வேணும் என்று கேட்டால், என் ஐத்த மகதான் வேணும் என்று வம்பிழுத்தான். “சுஜி உன்கிட்ட முக்கியமா