Tamil Madhura சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே',தொடர்கள் சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 13

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 13

இதயம் தழுவும் உறவே – 13

 

மௌனம் இருவரின் வாய்மொழியாக, மேற்கொண்டு யார் பேசுவது என்னும் நிலை. ‘நீதானே தொடங்கினாய், நீயே சொல்லி முடி’ என்று கவியரசன் பார்த்திருக்க,

“தேங்க்ஸ்…” என்றாள் மனமார. அவளது நன்றியுணர்ச்சிக்கு காரணம் கணவன் தன் குடும்பத்திற்கு செய்திருந்த உதவிகளை இந்தமுறை வீட்டிற்கு சென்றிருந்தபொழுது முழுமையாக தெரிந்து கொண்டிருந்தாள்.

தம்பி, தங்கையின் கல்விக்காக வங்கியில் ஜாமீன் கையெழுத்து போட்டு கல்விக்கடன் வாங்கி தந்ததோடு, வீட்டிற்கு அரசாங்க உதவித்தொகை கிடைக்குமாறும் ஏற்பாடு செய்திருந்தான். அந்த ஊரிலும், அருகே இருக்கும் ஊரிலும் வசிக்கும் அவனது நண்பர்கள் வீட்டிலிருந்து காய்கறி லிஸ்ட்டுகள் வந்துவிட, அசோக் அதனை அவர்கள் வீட்டில் சேர்த்து விட்டு பணம் பெற்று கொள்ளுமாறு ஏற்பாடு செய்திருந்தான். தன் பிறந்த வீட்டினரின் சுயகௌரவம் பாதிக்காத வண்ணம் செய்திருந்த உதவிகள், அவர்களது குடும்பத்திற்கு மிகவும் தேவையாகவும், உபயோகமாகவும் இருந்தது.

இதையெல்லாம் சொல்லி சொல்லி சுந்தரி பெருமை கொள்ள, யசோதாவிற்கு மனம் குளிர்ந்து போனது. அதன் தாக்கமே கணவனிடம் அவள் காட்டிக் கொண்டிருக்கும் இணக்கம்.

யசோதாவின் நன்றி எதற்கென்று கவியரசனுக்கும் புரிந்தது. ஆனால், இந்த நன்றியுணர்ச்சி ஏனோ அவனுக்கு உவப்பாக இல்லை. “ஹ்ம்ம்” என்றதோடு முடித்துக் கொண்டான்.

அவளுக்கும் அவனது சுணக்கம் புரிய, “அது… தேங்க்ஸ் எல்லாம் சொல்ல கூடாது தான்… இருந்தாலும், அம்மாவோட சந்தோஷம், நம்பிக்கை, பிடிப்பு… இதெல்லாம் பாக்கும்போது… ஒரு வருஷமா படிப்பை எல்லாம் பாதியிலே நிறுத்தி, நான் சாதிக்க முடியாததை… நீங்க கொஞ்ச மாசத்துல சாதிச்சதை நினைச்சா…” என்று சொல்லும் பொழுதே அவளுக்கு தொண்டையை அடைத்தது. பெருமையும், மனநிறைவுமாய் உணர்ந்தாள்.

நீரில் மூழ்கும் கப்பலில் இருந்து அவள் ஓடியது உதவியை அல்லவா பெற்று தந்திருக்கிறது. அவளுடைய குற்றவுணர்வு மறைந்து நன்றியுணர்வு மேலுழுந்தது. அவள் குற்றவுணர்வு குறைந்ததற்கு மகிழவா? இல்லை புதிதாய் முளைத்திருந்த நன்றியுணர்வுக்கு கோபம் கொள்ளவா? என புரியாமல் கவியரசனுக்கு சற்றே செயலற்ற நிலை என்றாலும்,

“நான் பெருசா எதுவும் செய்யலை” என்றான் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல். அவளது கண்ணீரைக் காண இயலவில்லை அவனால்.

அவள் நம்பாத பார்வை பார்த்து, “ஒருத்தங்ககிட்ட உதவி வேணும்ன்னு கேக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கும் தெரியும். நீங்க எங்களுக்காக தான உங்க பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் கடையை பத்தி சொன்னீங்க” என்று கேட்டாள்.

அதை உறுதியாக மறுத்தவனோ, “அவங்க வீட்டுல எல்லாம் கணவன், மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க. நான் தான், காய்கறி வேணும்ன்னா என் மச்சானுக்கு லிஸ்ட்டும், வீட்டு விலாசமும் அனுப்பிடுங்க. வீட்டுக்கே கொண்டு வந்து தந்துடுவான்னு சொன்னேன். அவங்களுக்கும் அது சுலபமா இருந்ததோடு, காய்கறிகளும் ஏனோ தானோன்னு கொடுக்காம தரமா தந்ததால நம்மகிட்டேயே வாங்கிட்டு, மத்தவங்களுக்கும் சொல்லறாங்க. இதுல நான் பெரிசா எதுவும் செய்யலை” என்றான் தோள்களை குலுக்கிய படி.

“அதோட ஒன்னு, ரெண்டு பிரெண்ட்ஸ் கிட்டதான் நான் சொன்னேன். மீதியெல்லாம் நம்ம தரம் பிடிச்சுப்போய் சிபாரிசுல வந்தது” என்றும் கூறினான்.

மீண்டும், “தேங்க்ஸ்” என முணுமுணுத்தாள். அவன் புருவம் சுருக்கி, முகத்தில் கடினத்தை காட்டவும், “இனி சொல்ல மாட்டேன்” என்றாள் கெஞ்சுதல் பார்வை பார்த்து.

‘இந்த பட்டாசுக்கு இப்படி எல்லாம் பேச வருமா?’ என அதிதீவிர சந்தேகம் எழுந்தது கவியரசனுக்கு. கூடவே, “தேங்க்ஸ் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லலை. வேற மாதிரி சொல்லு” என்றபடியே அவன் எழுந்து கொள்ள, அவனது உள்ளர்த்தம் புரிந்து கொண்டவளோ ம்ம் ஹ்ம்ம் என வேகவேகமாக மறுப்பாய் தலையசைத்தாள்.

“என்ன மாட்டியா?” என அவளை வியந்து நோக்கவும், அவனது பார்வையில், அதன் பாவனையில், அளவற்ற உரிமையில் சற்றே திணறிதான் போனாள் அவள்.

அவளது மௌனம் கண்டு, “அப்ப எனக்கு தியாகி பட்டம் மட்டும் தான் போல” என வண்டி நிறுத்தியிருந்த இடத்தின் அருகே கவியரசன் செல்ல,

“ம்ப்ச்… நான் முதல் மாசமே நாள் தள்ளி போகவும் பயந்துட்டேன். தலைக்கு குளிக்கிற வரை எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?” என அவள் சொல்லும்போதே அவன் முகம் மாறியது.

அதை உடனே கண்டுகொண்டவளோ, “அச்சோ உடனே கோபம் வந்துடுமே உங்களுக்கு. பிளீஸ் பிளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க. உங்க பணத்துல தான் படிக்க வெக்கறீங்க. குழந்தை உருவாயிட்டா படிப்பு மறுபடியும் தடைபடும். அதான் தயங்குனேன்.

இதே படிப்பை மறுபடியும் தொடங்கலாம் தான். ஆனா, படிப்பை பணம் இல்லைங்கிற காரணத்துக்காக மனசு வலிக்க வலிக்க நிறுத்துன எனக்கு பணத்தோட அருமையும், படிப்போட அருமையும் ரொம்ப நல்லா தெரியும். அதுதான் மறுபடியும் எனக்கு கிடைச்சது தொலைஞ்சுடுமோன்னு…” என அவள் விளக்கம் கொடுக்க அவள் இழந்தவற்றை நினைத்து அவனுக்கு மனம் இளகித்தான் போனது.

மேலும் அவளே தொடர்ந்து, “இப்பவே ஒரு வருஷம் கழிச்சு படிக்க போயிருக்கேன். கொஞ்சம் யரோடையும் ஒட்ட முடியாதபடி இருக்கு. இன்னும் தள்ளி போனா…” என தயங்கி தயங்கி விளக்கம் கூற,

“அது மட்டும் தான் தடையா?” என குழந்தை உருவாகி விடும் என்பது மட்டும் தான் உன் கவலையா என கவியரசன் கேட்க, யசோதா குழப்பமாக ஏறிட்டாள். அவளது விழிகளில் தனது விழிகளை கலக்க விட்டவாறே, “நான் இனி கவனமா இருந்துப்பேன்” என்றான் தியாகி பட்டத்தை தியாகம் செய்ய நினைக்கும் கள்வன்.

கள்ள சிரிப்போடு, கண்சிமிட்டி சொல்பவனை முறைக்க நினைத்தாலும், அது முடியாமல் அவளது கண்ணக்கதுப்புகள் கதகதப்பை உணர்ந்தது. அதை ரசித்தவனின் மனம் மிகவும் இலகுவானது.

செல்லும் வழியெங்கும் மௌனமே ஆட்சி செய்ய, அவளை வெகுவாக சீண்ட வேண்டாம் என அவன் விட்டுவிட்டான். வீட்டிற்கு வந்ததும் இயன்றவரை அவன் கண்பார்வையில் விழாமல் அவள் கண்ணாமூச்சி ஆட, அதை அதிக நேரம் நீடிக்க விடாமல் இரவு வந்திருந்தது.

அறையினுள் இல்லாத வேலைகளை இழுத்துப்போட்டுக் கொண்டு யசோதா செய்து கொண்டிருக்க, “அந்த துணியெல்லாம் ஏற்கனவே அடுக்கி தான் இருக்கு” என்றான் அவளருகே நெருங்கி நின்றிருந்த கவியரசன்.

அவன் அருகினில் வந்ததையே கவனிக்காதவள், பதறி விலக நினைக்க அங்கிருந்த கஃபோர்டில் இடித்து நின்றாள். “ஸ்ஸ்ஸ் பாத்து…” என அவளை கொஞ்சம் முன்னே இழுத்து நிறுத்தி வைத்தான்.

திருதிருவென விழித்தவளை பார்த்து சிரித்தவன், “சரி வா…” என கைப்பிடித்து அழைத்து சென்றான். அவளை கட்டிலில் அமர வைத்து, “என்ன குடையுது இங்க?” என அவளது மூளையை சுட்டிக்காட்டி கவியரசன் கேட்க,

‘எப்படி இவருக்கு புரிந்தது?’ என ஆச்சர்யமாக கணவனை நோக்கினாள். “அப்பறமா சைட் அடிக்கலாம். முதல்ல சொல்லு” என கணவன் கேட்க அவளுக்குமே மெலிதாக புன்னகை பூத்தது.

“இல்லை உங்களுக்கு கோபம் இல்லையே? நான்… இத்தனை… நாளா… அது… வந்து…” என வார்த்தைகளை கோர்க்க முடியாமல் அவள் திணற, அவளது கரங்களை ஆதரவாக பற்றினான்.

“அது… என் சுயநலத்துக்காக, என் குடும்பம்ன்னு யோசிச்சு… உங்களுக்கு…” திணறி திணறி குற்றவுணர்வுடன் அவள் பேச,

அவள் திணறுவதைப் பார்த்தவன், “ஸ்ஸ்ஸ் யசோ. எதுக்கு இவ்வளவு அலட்டிக்கிற? ரிலாக்ஸ்” என்றான். ஆனால், அவளால் அவ்வளவு எளிதினில் இயல்பாக முடியவில்லை. மிகவும் திண்டாடினாள்.

“யசோ, அன்னைக்கு என்னை தடுக்கணும்ன்னு கூட தோணாமா எனக்கு அனுமதி தந்தியே, அது இந்த மஞ்சள் கயிறு தந்த மேஜிக் மட்டுமா இருக்காதுன்னு கூடவா எனக்கு புரியாது” என கவியரசன் கேட்க, விழி விரித்தாள் பெண்.

அவள் பார்வை புன்னகையைத் தர, “கோபமே இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆரம்பத்துல ரொம்ப கோபம் வந்தது. அதுவும் நீ அம்மாகிட்ட அந்த மாதிரி எல்லாம் சொல்லிடவும், எங்கே உன்னை அடிச்சுடுவேனோன்னு கூட பயந்தேன்” அவனது ஆதங்கத்தில் அவள் மிரள,

மெலிதாக சிரித்துவிட்டு, “ஸ்ஸ்ஸ் சும்மா பேச்சுக்கு சொல்லறது. அடிக்க எல்லாம் செய்வேனா” என அவளது கன்னம் வருடினான்.

மேலும் தொடர்ந்து, “அப்பறம் எதுக்கும் என்கிட்ட வந்து நிக்க மாட்ட. எதையும் என்கிட்ட சொல்ல மாட்ட” என குற்றப்பத்திரிகை வாசிக்க,

அவள் இடையிட்டாள், “நீங்க மட்டும் என்னவாம்? என்கிட்ட சொல்லிட்டா செஞ்சீங்க. எலெக்ஷன் ட்யூட்டிக்கு சொல்லாம போயிட்டீங்களே? உங்களை காணாம எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?” என அவளும் கூறினாள்.

“ஓ அதான் மேடம் அன்னைக்கு அப்படி இருந்தீங்களா? நான் கூட உங்க அம்மா வீட்டு நியாபகம்ன்னு நினைச்சேன். உனக்கு எழுத வேண்டியது இருந்தது, எக்ஸாம்ஸ் வந்தது அதுனால உங்க அம்மா வீட்டுக்கு ரொம்ப நாளா போய் பார்க்கவேயில்லை. அதான் அப்படி இருந்தியோன்னு நினைச்சேன். அப்பறம் அடுத்த நாள் உங்க வீட்டுல அகிலா கிட்ட பேசும்போது, அவ உன்னைப்பத்தி என்கிட்ட சொல்லிட்டு இருந்தா. ஏற்கனவே தெரியும் இருந்தாலும் அவ்வளவு விவரமா தெரியாது.

உனக்கு உன் குடும்பத்து மேல இருக்க பாசம் புரிஞ்சது. அவங்க நல்லா இருக்காங்கன்னு நீயா புரிஞ்சுக்கிற வரை, என்னோட நிம்மதியா உன்னால வாழ முடியாதுன்னு தோணுச்சு. அதான் உன் போக்குல உன்னை விட்டுட்டேன்” என்றான் விவரமாக.

“உங்களுக்கு கோபம் இல்லையா? அவங்களுக்கு முன்னுரிமை கொடுக்காததை நினைச்சு” அவளுக்கு சங்கடமாக இருந்தது. முன்பு தவறாக படாத அவளது செய்கை இப்பொழுது அவளுக்கு தவறென தோன்றியது.

“கோபப்பட அவசியமே இல்லையே! உனக்கும் என்னை பிடிக்கும்ன்னு தெரியும். பிறகு நான் ஏன் கோபப்படணும்?” என புருவங்களை ஏற்றி இறக்கி அவன் கேட்க, எதுவும் புரியாது திருதிருத்தாள்.

“அடிக்கடி… ஹ்ம்ம் சரியா சொல்லணும்ன்னா என் வேலை முடிச்சு களைச்சு வரும்போதெல்லாம் இதமா தோளெல்லாம் பிடிச்சு விடுவியே? எவ்வளவு நாள் தூங்குன பின்ன செஞ்சியோ தெரியாது. எல்லா நாளும் நான் கண்டுபிடிச்சதில்லை. ஆனால், ஒவ்வொரு நாள் அரைகுறை தூக்கத்துல நல்லா புரியும். அப்ப எல்லாம் எனக்கு அப்படியே வானத்துல பறக்கிற பீல் தான்” என சொல்ல அவள் முகம் சிவந்திருந்தது.

“இப்ப உனக்கு உன் குடும்பத்தை நினைச்சு, உனக்கு எந்த உறுத்தலும் இல்லையே?” என கணவன் கேட்க, மறுப்பாக தலையசைத்தாள். அவனது மறைமுக சம்மதம் கேட்கும் முறை அவளுக்கு விளங்காமல் இல்லை. அவளது சம்மதம் கிடைத்தபிறகு இருவரும் உரையாடியதெல்லாம் வேறு விதமாக!

அடுத்த இரு தினங்கள் கழித்து, கவியரசன் மாலை வீடு திரும்பும்போது மனோகரனும், யசோதாவும் நடு கூடத்தில் புத்தக கூட்டத்திற்கு நடுவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு போட்டியாக குட்டி வாண்டு ஆதித்யாவும் ஒரு பென்சில், நோட்டுபுத்தகம் சகிதம் அமர்ந்திருந்தான்.

ஆராய்ச்சி பார்வையோடு இவர்களை கடந்து சென்றவன், முகம் கழுவி வெளிவர, அப்பொழுதும் அங்கு எந்த மாற்றமும் இல்லை. கடந்த இரண்டு தினங்களாக மனைவியின் இதழ்கள் பருகிய காஃபி கிடைத்திருந்தது. இன்று இவனை கண்டுகொள்ளாமல் இன்னமும் அமர்ந்திருந்தவளை பார்த்து கடுப்பானது.

இது வேலைக்கு ஆகாது என புரிய, “யசோ காஃபி…” என கவியரசன் உள்ளிருந்தே சப்தமிட, அவளுக்கு பதற்றமானது. கணவன் தாமதிப்பானே, அதிலும் அனைவரும் கூடத்தில் இருக்கும் இந்த நேரத்தில் உள்ளே செல்வது அவளுக்கு ஒருமாதிரி இருந்தது.

அவள் யோசித்துக் கொண்டே இருக்க, “அம்மா அவன் காஃபி கேக்கறான் பாருங்க” என மனோகரன் இலகுவாக கூறிவிட்டு படிக்கும் வேலையை தொடர்ந்தான்.

உள்ளறையில் இருந்தவனுக்கும் இது கேட்க, “யசோ நேத்து தந்த கவர் எங்க வெச்ச?” என்றான் மீண்டும்.

‘எந்த கவர்?’ என யோசித்தவளுக்கு உள்ளே செல்லாமல் கணவன் விட மாட்டான் என்பது புரிய, “இருங்க அத்தான் வந்துடறேன்” என மனோகரிடம் சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்றவள், கணவனுக்கு காஃபி எடுத்துக் கொண்டு அவர்கள் அறையினுள் சென்றாள்.

அவள் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தும்படி சைகை செய்தான் கவியரசன். “ம்ம் ஹ்ம்ம். எல்லாரும் இங்க தான் இருக்காங்க. நான் போறேன்பா” என்று மென்குரலில் சொல்லியவள் நகரப்பார்க்க, அவளை தடுத்து நிறுத்தியிருந்தான்.

“ஹே இரு இரு. அது சரி, என்ன நடந்துகிட்டு இருக்கு? தினம் அண்ணிக்கு பயந்துட்டு உங்க வீட்டுல ஓடி ஒழிய முடியாதுன்னு, எங்க அண்ணனை துணைக்கு வெச்சுட்டியா? நல்ல ஐடியா தான், மனோ முன்னாடி அண்ணி வாயே திறக்க மாட்டாங்க” வஞ்சமே இல்லாமல் வஞ்சப்புகழ்ச்சி அணியில் மனைவியை கேலி செய்தான்.

அதில் சிலிர்த்தெழுந்தவளோ, “யாரு யாரு பயந்தாங்க? நானும் அத்தானும் படிச்சுட்டு இருக்கோம். நானும் கவர்ன்மென்ட் எக்ஸாம் எழுத போறேனாக்கும்” என யசோதா மிடுக்காக பதில் தந்தாள்.

அவளது பதிலில் சிரித்தவன், “அதுக்கு முதல்ல டிகிரி முடிக்கணும்” என்றான் நக்கலாக.

“அதெல்லாம் எங்களுக்கு தெரியும். அடுத்த வருஷம் தான் எழுதுவேன்” என்று தோரணையாக கூறிவிட்டு அவள் நகரப்பார்க்க,

“இந்த காஃபியை கொஞ்சம் குடிச்சுட்டு கொடு யசோ. இப்படி படுத்திறியே” என கணவன் சரசமாக கேட்டு தடுத்துக் கொண்டிருந்தான்.

“எல்லாரையும் வெளியில வெச்சுட்டு நீங்க தான் படுத்துறீங்க” என முனங்கினாலும், அவனது தேவையை தீர்த்தே அவளால் அறையை விட்டு வெளியேற முடிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 42ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 42

42 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் திவியை பார்க்க சென்றான். கதவை திறந்தவள் விழிவிரித்து பார்க்க அது, ஆச்சரியம், அதிர்ச்சி என அனைத்தும் கலந்து இருந்தது. அவள் அப்டியே நிற்க அவளை நகர்த்திக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்தான். இவளுக்கு ச்சா. வீட்டுக்கு

KSM by Rosei Kajan – 3KSM by Rosei Kajan – 3

அன்பு வாசகர்களே ! இதோ அடுத்த அத்தியாயம். எனது சைட்டில் எழுதும் துஜிசஜீ யின் ‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே!’ கதை நிறைவடைந்து விட்டது. லிங்க் இங்கே நூலகத்தில் கொடுத்துள்ளேன் .    [googleapps domain=”drive” dir=”file/d/1aFGNdWUh8RoWn-pXp57ag9b28Sooll7O/preview” query=”” width=”640″ height=”480″

கடவுள் அமைத்த மேடை – 16கடவுள் அமைத்த மேடை – 16

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிகள். இன்றைக்கு சிவபாலனின் பிளாஷ்பேக் முடிகிறது. இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். சைலென்ட் ரீடர்ஸ் இப்போதாவது மௌனத்தை கலைக்கலாமே? கடவுள் அமைத்த மேடை -16 கதையில் வந்த பாடல்