Tamil Madhura சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே',தொடர்கள் சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 11

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 11

இதயம் தழுவும் உறவே – 11

 

அழகாக தொடர்ந்த நாட்கள், மாதங்களை கடக்க… இப்பொழுதெல்லாம், மாமியார், மருமகளின் உறவு மேலும் இணக்கமானது. ஒரு திருமண விசேஷம் வர, மீனாட்சியோடு யசோதாவே நேரில் சென்று, மற்ற கணவனை இழந்த தாய்மார்களின் தோற்றத்தை சுட்டிக்காட்டினாள். அதோடு யாரும் விசேஷங்களுக்கு வராமல் இருப்பதில்லை, வருபவர்களையும் யாரும் தவறாக கருதுவதில்லை என்பதையும் நேரடியாகவே புரிய வைத்திருந்தாள்.

“நீங்க உங்களுக்கு மருமக எடுத்தாச்சு. அதனால நீங்க போகாம, அவங்களை விஷேச வீடுங்களுக்கு அனுப்புவீங்க சரி. என் அம்மாவுக்கு எதுவும் அழைப்பு வந்தா என்ன செய்யணும் அத்தை? அசோக், அகிலாவை அனுப்பினா மரியதையாவா இருக்கும்?” என மருமகள் கேட்கும் போது, மாமியாருக்கு அவள் போக்கில் தலையாட்டுவதைத் தவிர வேறு வழி இருக்காது.

வீட்டிற்குள் முடங்கி இருக்கவோ, துர்குணங்கள் கொண்டோரின் பேச்சிற்கு மதிப்பு தருவதோ அவசியமே இல்லை என்பதை யசோதா ஆணித்தரமாக கூறிவிட்டாள். மீறி முடங்குவதாக இருந்தால், இந்த பஞ்சாயத்தை உங்கள் மகன்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்றும் மறைமுகமாக மிரட்டி வேறு வைத்தாள். இதன்பிறகும் மீனாட்சி அம்மா ஒதுங்குவாரா? கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பத் தொடங்கினார்.

இந்த மாற்றங்களினால் ஏற்கனவே முட்டிக்கொண்டு இருந்த ஓரகத்தி உறவு மேலும் சிக்கலானது. ஆனால், யசோதா எப்பொழுதும் வித்யாவை எல்லாம் ஒரு பொருட்டாக கண்டு கொள்வதே இல்லை.

அவளது கொடுநாக்கு சுழலாமல் இருந்தால் தான் அதிசயம். அதற்கு மூலகாரணமாக வஞ்சம், சண்டை எல்லாம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. அப்படிப்பட்டவளுக்கு இப்பொழுது முத்தாய்ப்பாய் இவள் மீதான கோபமும் சேர்ந்து கொள்ள, அவள் பேசும் அளவை சொல்லவா வேண்டும்? ஆகவே, வழக்கம்போல அவள் வாயிற்கு வந்ததைப் பேச, இவள் புறக்கணித்து விடுவாள்.

இவளோடு சண்டை போட்டிருப்பதால் அதிகம் பேச்சுவார்த்தைகள் எல்லாம் இல்லை. ஆனாலும், வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சுருக்கென எதையாவது பேசி விடுவதில் வித்யாவிற்கு நிகர் அவளே!

என்னதான் புறக்கணிப்பது போல யசோதா காட்டிக் கொண்டாலும் சில நேரங்களில் வித்யாவின் வார்த்தைகள் அவள் மனதை மிகவும் சங்கடப்படுத்தி விடும். முடிந்தவரை மட்டம் தட்டி, ஒதுக்கி வைத்து, தாழ்வு மனப்பான்மையை மனதில் விதைத்து யசோதாவின் மனநிம்மதியை மொத்தமாக குழைத்துக் கொண்டிருந்தாள் வித்யா.

சமீபமாய் வித்யாவின் பேச்சு, கவியரசன் யசோதாவை படிக்க வைப்பது குறித்து இருந்தது. “பரவாயில்லை படிக்க வசதி இல்லைன்னதும்… அதுக்கு தோதா ஒருத்தனை கட்டிக்கிறாளுங்க. புருஷன்காரனும் பொண்டாட்டியை படிக்க வைக்கிறேன், புரட்சி செய்யறேன், புதுமை செய்யறேன்னு கிளம்பிட வேண்டியது. அதுவும் சரி தான் அரசாங்க வேலை… நோகாம பணம் வருது. அதுக்கெல்லாம் செலவு வேணாமா?” என வித்யா பேச, வழக்கம்போல யசோதாவிற்கு ‘ச்சீ ச்சீ’ என்றானது.

இத்தனை தினங்களும் தன்னைப்பற்றி பேசுவாள், இப்பொழுது கணவனையும் இதில் இழுப்பாள் என யசோதா எதிர்பார்க்கவில்லை. அதிலும், அவன் வேலையைப்பற்றி என்றதும் மனம் மிகவும் வருந்தியது. சூடாக திருப்பி தரலாம் தான், ஆனால் இதுவரை அமைதியாக கடந்து போனவள், இப்பொழுது மட்டும் பதில் பேசினால் அதுவே வித்யாவிற்கு அவளது பலவீனத்தை பறை சாற்றிவிடுமே! அவளை வருத்த மேலும் மேலும் இதே பேச்சுக்களை பேச துணிவாள் என்பதால் வழக்கம்போலவே அமைதி காத்தாள். ஆனாலும் மனம் கனன்றது.

அதிலும் கணவனின் வேலையில் இருக்கும் கடினம்? அதைப்போய் நோகாமல் என்றுவிட்டாளே! வெளியில் இருந்து பேசுபவர்களுக்கு என்ன? எத்தனை நாட்கள் விடுமுறை தினங்களில் கூட, பள்ளிக்கு சென்று டாக்குமெண்ட் வேலைகளைப் பார்க்கிறான். அவன் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு கணித பாடம் எடுப்பதால், குறைவான மதிப்பெண் பெரும் மாணவர்களை மேம்படுத்த எத்தனை மெனக்கெடுகிறான். பல நாட்களில் அவர்களுக்கெல்லாம் சொல்லி தந்துவிட்டு மாலை தாமதமாகத்தான் வீட்டிற்கே வருவான்.

இதிலும் எதாவது தேர்தல் வந்துவிட்டால், கணக்கெடுப்பது, பட்டியல் தயார் செய்வது என்று தொடங்கி, தேர்தல் நாளில் நேரமாகவே சென்று ஏதோ ஓர் ஊரில் இவர்களுக்கென ஒத்துக்கப்பட்டிருக்கும் வாக்கு சாவடியில் அமர்வது என்று எத்தனை அலைச்சல்? அதிலும் தேர்தல் முடிந்து அந்த பெட்டிகளை பத்திரமாக ஒப்படைக்கும் வரை அங்கேயே இருந்து பாதுகாக்க வேண்டும்.

அப்படி ஓயாது உழைப்பவனைப் பார்த்து, இப்படி ஒரு வார்த்தை? அவளுக்கு தாளவே இல்லை. வெறும் வாயை மெல்பவளுக்கு அவல் தர விருப்பம் இல்லாமல் பொறுமை காத்தாள். ஆனால், நாளாக நாளாக பேச்சு இதை சுற்றியே இருந்தது. இவள் படிப்பது குறித்தும், கவியரசன் வேலை குறித்தும். எப்பொழுதும் காட்டும் அலட்சியம் காட்ட இயலாமல் முகம் வாடி போவாள் யசோதா. வித்யாவின் தேவையும் அதுதான் என்பதால், அந்த பேச்சுக்களையே தொடர்ந்தாள்.

அதுபோன்ற சமயத்தில் தான், யசோதாவின் செமஸ்டர் தேர்வுகள் வந்தது. இங்கிருந்தால், வித்யா ஏதேனும் பேசி மனசஞ்சலம் தந்து கொண்டே இருப்பாள், நிம்மதியாக படிக்க கூட இயலாது என்பதால், அம்மா வீடு சென்று விடலாம் என்று தீர்மானித்து மாமியாரிடமும், கணவனிடமும் கூறினாள். இதுவரை கவியரசன் அழைத்து செல்லும் போது மட்டும் தான் செல்வாள். அப்படியிருக்க இப்பொழுது திடீரென இப்படி கேட்கவும், அம்மாவும், மகனும் மறுக்காமல் ஒப்புக் கொண்டனர்.

சில நாட்கள் வித்யாவின் பேச்சிலிருந்து தப்பி, அன்னையின் வீட்டில் தங்கி இருந்தாள். அங்கிருந்தபடியே தேர்வுகளை எல்லாம் அவள் எழுத, அவள் சென்று சில தினங்களிலேயே கவியரசன் அவளைப்பார்க்க அவள் அம்மா வீட்டிற்கு வந்து விட்டான்.

அவனை சற்றும் எதிர்பாராதவள் அவனை மெல்லிய ஆச்சர்யத்தோடு வரவேற்க, “நீ படிக்கிறியா? இல்லை உன் தங்கை கூட அரட்டை அடிக்கறியான்னு எனக்கு எப்படி தெரியும்?” என அவள் ஆச்சர்யம் உணர்ந்து கவியரசன் கேட்டான். அவளுக்கு அவனது பதிலில் புன்னகை தான் வந்தது. பாம்பின் கால் பாம்பறியாதா?

அக்காவின் பின்னோடே வந்துவிட்ட மாமாவை பார்த்த அகிலா, “உங்க பொண்டாட்டியை நாங்க பத்திரமா பார்த்துப்போம் மாமா” என அவனை கேலி செய்ய,

“இருந்தாலும் கன்பார்ம் பண்ணிக்கணுமே!” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

“புரியுது… புரியுது…” என அவள் மேலும் கேலி செய்ய,

“அட நீ வேற அகிலா, எங்க நீங்க சரியா கவனிக்கலைன்னு அவ திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து போய் செக் பண்ணி பாக்க வந்தா…?” என கவியரசன் கூறினான்.

“நம்பிட்டேன். நம்பிட்டேன். உங்க பொண்டாட்டியை விட்டுட்டு இருக்க முடியலைன்னு சொல்லுங்க”

அசடு வழிந்தவன், “ஏதோ இந்த வழியா போனோமே, அப்படியே இங்க வந்துட்டு போலாம்ன்னு பாத்தா…” என வடிவேலு பாணியில் அவன் இழுக்க,

“உங்க ஸ்கூல் எங்க இருக்கு? வீடு எங்க இருக்கு? நீங்க இந்த வழியா போனீங்களா?” என்றாள் அவளும் விடாது.

“நீ மச்சினிச்சியா இல்லை  மாமியாரா அகிலா? என்னை விட்டுடேன்” என வேண்டுமென்றே பயந்தது போல பாசாங்கு செய்தான் கவியரசன்.

“சரி பாவம் மாமா, நீங்களும் கெஞ்சறீங்க, அழறீங்க, கண்ணுல தண்ணியா கொட்டுது… அதைவிட என் உடன்பிறப்பு வேற என்னை முறைக்கிறா? அதுனால விடறேன்” என பெரிய மனித தோரணையில் அகிலா பதில் கூற, அனைவரும் சிரித்திருந்தனர்.

தேர்வு எல்லாம் முடிந்த கையோடு, இதற்கு மேல் தாங்காது என்பது போல கையோடு வீட்டிற்கு திரும்பி இருந்தாள் யசோதா.

திரும்பி வந்தவளிடம் வித்யா முன்னிலும் அதிகமாய் ஜாடை பேசத் தொடங்கினாள். அன்றைய தினமும் கல்லூரி முடிந்து வந்தவளிடம், கவியரசனின் வேலை குறித்த இளக்கார பேச்சுக்களோடு, அவள் மனதை வருத்த வேண்டுமென்றே, “எல்லாரும் கல்யாணம் முடிஞ்சு மசக்கைக்கு தான் அம்மா வீடு போவாங்க. இங்க தான் படிக்க போறேன், எழுத போறேன்னு கிளம்பறாங்க. அதுவும் சரிதான் எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணுமே!” என நீட்டி முழக்கி வித்யா பேச, கேட்டவளுக்கு மனம் சோர்ந்தது. இது போன்ற பேச்சுக்கள் என்று முடியும் என்று விளங்காமல், இதற்கு என்ன தீர்வு எனவும் புரியாமல் தலைவலியே வந்திருந்தது. இவளது சோர்வை பார்த்துவிட்டு, மீனாட்சி விசாரித்தபொழுதும் “எதுவும் இல்லைங்க அத்தை தலைவலி. நான் படுத்துக்கறேன்” என சமாளித்து அவளறைக்கு சென்று விட்டாள்.

கவியரசன் வீடு திரும்பும்போது சோர்ந்து போய் யசோதா படுத்திருக்க, கை, கால் கழுவி, உடை மாற்றி விட்டு நேராக அம்மாவிடம் வந்துவிட்டான். “ஏன்மா இந்நேரத்துல படுத்திட்டு இருக்கா?” என்று கேட்ட மகனை அன்னை வினோதமாக நோக்கவும்,

“என்ன மா?” என்றான் புரியாமல். “உன் பொண்டாட்டி, அவளுக்கு என்னன்னு நீ தான் சொல்லணும். அதை விட்டு என்கிட்ட கேக்கிற?” என மீனாட்சி சந்தேகமாகவும், கேள்வியாகவும் பார்க்க,

திகைத்து விழித்தாலும், சமாளிப்பாக, “என்னம்மா நீங்க? துங்கறவளை எழுப்பி கேக்க சொல்லுவீங்க போல! அசந்து துங்கறா மா. அதான் உங்ககிட்ட கேட்டேன்” என்றான் மகன். மனம் வேறு ஒருபுறம் திக் திக்கென்றது அன்னையின் கேள்வியில்.

“என்னமோ பா… சாயந்திரம் வரும்போது நல்லா தான் இருந்தா. திடீர்ன்னு முகம் எல்லாம் சோந்து போச்சு. தலைவலிக்குதுன்னு சொல்லி படுத்துட்டா. கொஞ்ச நாளாவே இப்படித்தான்” என்றவரின் முகம் திடீரென மின்ன,

“இந்த மாசம் அவ எப்போ குளிக்கணும்?” என ஆவலோடும், எதிர்பார்ப்போடும் கவியரசனிடம் கேட்டார்.

‘அதெப்படிம்மா எனக்கு தெரியும்?’ என்று அவன் மனதிற்குள் நினைத்ததை அவனால் வெளியே சொல்லவா முடியும்? எதுவும் பேசாமல் விழித்தபடி நின்றான்.

“என்னடா நீ? கல்யாணம் முடிஞ்சு நாலஞ்சு மாசம் ஆச்சு. இன்னும் விவரம் பத்தலை. எப்படித்தான் யசோ சாமாளிக்கிறாளே!” என்று அவனை சலித்தபடியே அவனுடைய அறைக்கு சென்றார். புதிதாய் மணமாகி வீட்டிற்கு வந்த மருமகளிடம் இருக்கும் சாதாரண எதிர்பார்ப்பு தான் அந்த அன்னைக்கும். அந்த ஆர்வம், ஆசை அவருடைய விருப்பம் போல, தற்பொழுது அமைந்த சூழலை சித்தரித்துக் கொண்டது.

“என்னம்மா நீங்க.. தலைவலிக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? அவ மயக்கம் எல்லாம் போடலை. வாந்தி எடுக்கலை” என கவியரசன் சொன்னதை கண்டு கொள்ளாமல் அறைக்குள் நுழைந்தவர்,

“ஆமா இவனுக்கு ரொம்ப தெரியும். எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காதுடா” என சொல்லியபடி யசோதாவின் தலைமாட்டில் அமர்ந்தார். “யசோ… யசோ… இப்போ பரவாயில்லையா?” என அவளின் தலையை வருடி கேட்க,

“இல்லை அத்தை இன்னும் தலைவலிதான்” என சோர்வாக யசோதா கூறினாள். “தம்பி வந்துட்டான் டாக்டர் கிட்ட பாத்துட்டு வந்துடறீங்களா?” என மீனாட்சி கேட்டார்.

“அத்தை தூங்கி எழுந்தா போதும் அத்தை. இதுக்கெதுக்கு டாக்டர்” என புரியாமல் விழித்தாள் இளையவள்.

“இல்லம்மா இப்பவெல்லாம் ரொம்ப சோர்ந்து தெரியுற. உண்டாகியிருக்கியான்னு பாத்துட்டு வந்துட்டா கவனமா இருந்துக்கலாம் இல்ல” என மீனாட்சி கேட்டது தான் தாமதம், “என்ன?” என அதிர்ந்தவளின் தூக்கம் தூரப்போனது. வெடுக்கென எழுந்து வேற அமர,

“கவனம் கவனம்…” என மீனாட்சி பதறியபடி மேற்கொண்டு எதுவோ சொல்ல வர, கவியரசன் இடையில் புகுந்து, “அம்மாக்கு நீ எப்போ குளிச்சேன்னு சொல்லிடு. அவங்களுக்கு புரிஞ்சுடும்” என்று கூறியபடி அவளருகே அமர்ந்து அவளது கைக்கு அழுத்தம் தந்தான்.

அவளுக்கு உதவ முன்வந்து தான் அவன் அவ்வாறு சொன்னான். ஆனால், அரைதூக்கத்தில் திடீரென விழித்தவளுக்கு எதுவுமே புரியவில்லை. திருதிருத்தபடி அவள் அமர்ந்திருக்க,

இப்பொழுது மீனாட்சி கேட்டார். “கடைசியா எப்போ குளிச்ச மா?” என்று. அத்தையும் அதையே கேட்டதும் தான் அவளுக்கு புரிந்தது. கணவனின் முன்பு இதைப்பற்றி பேச கூச்சமாக வேறு இருந்தது. அதோடு கணவன் கேட்ட கேள்வியும் இப்பொழுது விளங்கியது.

தயங்கி தயங்கி, “செமஸ்டர் எக்ஸாம்க்கு படிக்க ஊருக்கு போயிருந்தப்ப குளிச்சுட்டேன் அத்தை. ரெண்டு வாரம் தான் ஆச்சு. மன்னிச்சிடுங்க அத்தை. உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்” என சங்கடமாக இளையவள் கூற,

மீனாட்சிக்கு சப்பென்றானது. இருந்தாலும் ஏமாற்றத்தை மறைத்து, “பரவாயில்லை மா. நான் தான் புரியாம அவசர பட்டுட்டேன். நீ தூங்கு மா” என்று கூறியவர், “ரெஸ்ட் எடு. சாப்பிட எழுப்பறேன்” என கிளம்பி விட்டார்.

கணவனோ இன்னும் அருகில் தான் அமர்ந்திருந்தான். அவளை பார்வையால் அலசி ஆராய்ந்தபடி.

‘ஏன் இப்படி பார்க்கிறார்?’ என அவனது கூர்பார்வையின் வீச்சும், குற்றம் சாட்டும் தொனியும் தாளாமல் அவளின் மனம் பதறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 09ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 09

9 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   குழந்தைகளுக்கு தேர்வு விடுமுறை, பிரியாவும் இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கப்போவதால் அவளே பார்த்துக்கொள்வதாக கூற வாசுவும் இங்கேயே சில நாள் தங்கிவிட்டு செல்வதாக கூறினான்.   ஆபீஸ் வந்ததும் சிறிது நேரத்தில்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 09யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 09

அத்தியாயம் – 09   தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயம் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு மக்கள் கூட்டத்தில் அமிழ்ந்து போயிருந்தது. அக்கம் பக்கமிருந்த இந்துக்கள் எல்லாம் தைப் பூச நன்னாளில் முருகன் அருளைப் பெறவெனக் கூடியிருந்தனர். ஊரைச் சுற்றி ஐந்து தேர்கள் வேறு

உள்ளம் குழையுதடி கிளியே – 17உள்ளம் குழையுதடி கிளியே – 17

ஹாய் பிரெண்ட்ஸ், உங்க அன்பான கமெண்ட்ஸ் பார்த்தேன். நன்றி நன்றி நன்றி. சின்னையன் – விபிஆர் கமெண்ட்ஸ்கு முன்… பின்…. நன்றி விபிஆர்…. வால்டரை ரொம்பவே ரசிச்சோம் :-). இனி சிரிப்புடன் அடுத்த பதிவுக்கு செல்லலாம். உள்ளம் குழையுதடி கிளியே –