Tamil Madhura குழந்தைகள் கதைகள் ஸ்கங்க் கற்றுத் தந்த பாடம் – குழந்தைகள் கதை

ஸ்கங்க் கற்றுத் தந்த பாடம் – குழந்தைகள் கதை

அடுத்ததா நம்ம பார்க்கப்போறது  கனடாவின் நாட்டுப்புறக் கதை. இந்தக் கதையில் வரும் ஒரு சிறு பாலூட்டி விலங்கினைப் பத்தி நம்ம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். ஆங்கிலத்தில் அதை skunk என்று சொல்வாங்க. இது அணில் மாதிரி தோற்றம் அளிக்கும் ஒரு சிறிய உயிரினம்.

இந்த ஸ்கங்க்கை நம்ம தமிழில் முடைவளிமா ன்னு சொல்றாங்க. தமிழில் இப்படி பெயர்க்காரணம் வந்ததுக்குக் காரணம் அது பயப்படும்போது பாதுகாப்புக்காக வாலில் இருந்து பயங்கரமான நாத்தம் வரும் எண்ணைப் பசையான திரவத்தைப் பீய்ச்சி அடிக்கும். அந்த நாற்றத்திற்கு பயந்தே மிருகங்கள் அருகே போகாது.

சரி இனி கதைக்குள் குதிப்போமா… கனடாவில் இருந்த அழகான கிராமம் ஒன்றில் பண்ணையுடன் கூடிய வீட்டில் அடேலா என்ற பெண்மணி வாழ்ந்து வந்தார். அவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வந்தார். தினமும் காலை அடுப்பில் ரொட்டியினை தயார் செய்து வைத்துவிட்டு மாட்டுப்பண்ணைக்குச் சென்று தனது வேலைகளை கவனிப்பார். வேலைகளை முடித்துவிட்டு கடுமையான உடல் உழைப்பால் இழந்த சக்தியினை ஈடுகட்ட ரொட்டியையும், வீட்டில் தயாரித்த ஜாமையும் வெண்ணையையும் தடவி உண்ணுவார். அதன்பின் தனது வளர்ப்பு பிராணிகளான நாய் மற்றும் பூனையுடன் வெளியே உலாவ செல்வார். அவருடன் பக்கத்து பண்ணைத் தோழர்களும் இணைந்து கொள்வார்கள்.

அப்படி செல்லும்போது தான் உண்டது போக மிகுதியான வெண்ணை சீஸையும், ரொட்டியையும் அப்படியே தன் நண்பர்களிடம் தந்துவிடுவார். சிலநாட்கள் அடேல்லாவை சந்திக்க விருந்தினர் வருவார்கள். அவர்களுக்கு அளித்தது போக உணவு மீதி இருக்காது இருந்தாலும் நண்பர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்றெண்ணிக் கொண்டு புதிதாக சமைத்து எடுத்து செல்வார்.

இப்படி அமைதியாக சென்றுக் கொண்டிருந்த அடேல்லாவின் வாழ்க்கையில் ஒரு நாள் தடங்கல் ஏற்பட்டது. ஒரு நாள் காலை அவர் ரொட்டி செய்வதற்காக அடுப்பில் விறகினைப் போட முயன்றபோது அந்த அடுப்பில் ஒரு ஸ்கங்க் எனும் முடைவளிமா ஒன்று சென்று அமர்ந்து கொண்டதைக் கண்டார். பயந்து வெளியே சென்று பக்கத்து பண்ணைகளிலிருந்த நண்பரை உதவிக்கு அழைத்தார்.

“தாமஸ்… உடனே எனது வீட்டுக்கு வா.. வந்து அந்த மிருகத்தை விரட்டு”

“அடேல்லா… நன்றாகப் பார்த்தீர்களா… உங்களது பழைய கோட் ஏதாவது விழுந்திருக்கப் போகிறது”

“இல்லவே இல்லை. அதன் முதுகில் கோடுகள் இருந்தது”

“சரி நான் கோழிகளுக்குத் தீவனம் வைத்துவிட்டு வருகிறேன்” என்றார் தாமஸ்.

அடுத்த பண்ணையிலிருந்த ரோசை கண்டு உதவி கேட்டார் அடேல்லா.

“நான் பண்ணை வேலையை முடித்துவிட்டு வருகிறேன்” என்றார் ரோஸ். இப்படியான பதிலையே  வேறு சிலரும் கூட சொல்லிவிட்டார்கள்.

இறுதியில் தங்களது வேலைகளை முடித்துவிட்டு அனைவரும் வந்தனர். அடுப்பில் ஒளிந்திருந்தது ஸ்கங்க் என்று உறுதி செய்தனர்.

“ஒரு நாயை வைத்து விரட்டுவோம். அது பயந்து போய் வெளியே வந்துவிடும்”

“அது பயந்தால் என்னாகும் என்று யோசித்தாயா…. நாத்தம் மிக்க திரவத்தை பீய்ச்சி அடிக்கும். அதன்பின் அடேல்லா அந்த நாற்றம் போகும் வரை ஒரு மாதத்திற்கு அடுப்பில் எதுவும் சமைக்க முடியாது” என்றனர்.

“இன்று கூட காலையிலிருந்து நான் எதுவுமே உண்ணவில்லை. அதனால் வேறு ஏதாவது யோசனை சொல்லுங்கள்” என்றார்

“மாமிசத் துண்டுகளைக் காட்டினால் உணவு உண்ண வெளியே வரும். அப்போது விரட்டிவிடலாம்” என்றார் தாமஸ்

“என்னிடம் மாமிசத் துண்டுகள் இல்லை” என்றார் அடேல்லா.

அங்கிருந்தவர்கள் யாரும் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு துண்டு மாமிசம் கொண்டு வந்து தரத் தயாராக இல்லை. அதனால் அந்த யோசனையைப் பற்றி வேறு யாரும் பேசவில்லை.

“அடேல்லா உங்களது வேட்டை துப்பாக்கியைக் கொடுங்கள் நான் இந்த மிருகத்தை சுட்டு விடுகிறேன்” என்றார் ரோஸ்.

“அய்யோ வேண்டாம்” என்று தடுத்தார் அடேல்லா.

இப்படி பலரும் பல யோசனைகளை சொல்லியும் எதுவுமே சரிவரவில்லை. மாலை இருட்டிவிட்டது. வெளியே இருந்த குளிருக்கு இதமாக கதகதப்புடன் அடுப்பு இருந்ததால் ஸ்கங்க் வெளியே வர மறுத்தது. அவர்கள் நண்பர்களும் இருட்டி விட்டதால் வீட்டிற்கு ஒருவர் பின் ஒருவராகக் கிளம்பிவிட்டனர்.

அப்போது “ஆன்ட்டி அடேல்லா… நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்” என்று அழைத்தபடியே ஒரு வாலிபன் வந்தான். அவன் அவரது அக்கா மகன். அவன் பெயர் லூயிஸ். பக்கத்து ஊரிலிருந்து  சித்தியை சந்திக்க வந்திருந்தான்.

அவனிடம் நடந்ததை தெரிவித்தார் அடேல்லா. லூயிஸ் காடு மேடுகளில் திரிந்தவன். மிருகங்களிடம் பேசவும் செய்வான் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறார் அடேல்லா.

“லூயிஸ் காலையிலிருந்து ஒன்றும் உண்ணவில்லை. எப்படியாவது இந்த மிருகத்தை விரட்டிவிடு”

“அவ்வளவுதானே… ” என்று அந்த மிருகத்திடம் சென்று ரகசியமாக பேசினான் லூயிஸ். திரும்பி நின்று அவனது முகத்தைப் பார்த்த ஸ்கங்க் அடுத்தவிநாடி அந்த அடுப்பிலிருந்து வெளியேறி ஓட்டமாய் ஓடி புதர்களுக்கிடையே இருளில் மறைந்தது.

“லூயிஸ் அது மிரண்டு ஓடும்படி  அப்படி என்ன சொன்னாய்… ” என்று ஆச்சிரியத்துடன் கேட்டார் அடேல்லா.

“எனது ஆன்ட்டி அடேல்லாவுக்கு பசி அதிகமாகிவிட்டது. அவர் இப்போது ரொட்டி சுடப் போகிறார். இன்னும் சிறிது நேரம் இங்கே நீ இருந்தால் உன் மேல் வரும் முடை நாற்றம் நீங்கி ரொட்டியும், வெண்ணையுமாக வாசனை வரப் போகிறாய் பார். உன் வாசனையைக் கண்டு நாற்றம் பிடித்த மற்ற ஸ்கங்குகள் கிண்டல் செய்யப் போகின்றன என்று சொன்னேன்”

“வாசனை வந்தால் நல்லதுதானே லூயிஸ் அதன் மேலிருக்கும் நாற்றம் நீங்குமே. அனைவருக்கும் பிடித்தமான செல்லப் பிராணியாக மாறுமே” என்றார் அடேல்லா.

“உண்மைதான்… ஆனால் அதை யோசிக்கும் அளவுக்கு அதற்கு அறிவு இல்லையே… பலர் இந்த செயலை நாம் செய்தால் அடுத்தவர்கள் தன்னைப் பற்றி என்ன புறம் பேசுவார்களோ என்ற நினைப்பிலேயே எப்போதும் இருப்பதால், இதை செய்வதால் தனக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்”

“நல்லது செய்தாய்… இனி நாமிருவருக்கும் இரவு உணவு தயாரிக்கிறேன்” என்றார் நிம்மதியுடன்.

“நீங்கள் காலையிலிருந்து பட்டினியாக இருந்திருப்பீர்கள். ஊரிலிருந்து நான் வாங்கி வந்திருக்கும் பழங்களை உண்ணுங்கள். நாமிருவருக்கும் நானே இரவு உணவைத் தயாரிக்கிறேன்” என்று அடேல்லாவிடம் தான் வாங்கி வந்திருந்த பழக் கூடைகளைத் தந்த லூயிஸ் அவர்கள் இருவருக்கும் இரவு உணவு தயாரிக்க ஆரம்பித்தான்.

குழந்தைகளே… ஆகையால் நீங்கள் எந்த ஒரு அறிவார்ந்த செயலையும் அடுத்தவர்கள் கேலி செய்வார்கள் என்று பயந்து பாதியில் கைவிடக் கூடாது. அப்படி நினைத்திருந்தால் தாம்ஸ் ஆல்வா எடிசன் போன்ற மேதைகள் உலகில் இருந்திருக்கவே மாட்டார்கள். பள்ளியில் ஆசிரியரால் மூளைக் கோளாறு உள்ளவன் என்று முத்திரை குத்தப்பட்டு  அனுப்பப்பட எடிசன் எத்தனை கண்டுபிடிப்புகள் செய்துள்ளார் என்பதைப் பட்டியிலிட்டுப் பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும்.

 

Tags:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சூரப்புலி – 6சூரப்புலி – 6

இப்படி அது பல முறை ஊளையிட்டுப் புலம்பிற்று. அந்தப் புலம்பல் எப்படியோ அந்தப் பக்கமாகத் தற்செயலாக மூன்றாம் நாள் மாலையில் சென்ற ஒரு துறவியின் காதில் விழுந்துவிட்டது. அவர் சட்டென்று நின்று உற்றுக் கேட்டார். மறுபடியும் அந்த வேதனைக் குரல் கேட்டது.

சூரப்புலி – 3சூரப்புலி – 3

அக்குரல் அடங்கிய பிறகும் மலைச் சாரலிலே எதிரொலி வெகுநேரம் வரையிலும் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தக் குரலைக் கேட்டதும் கானகமே கொஞ்ச நேரம் பயந்து மெளனமாக இருந்தது போலத் தோன்றிற்று. அந்தக் குரலைக் கேட்டு எல்லாப் பிராணிகளும் திகைத்துப்போய் ஊமையாகி விட்டனவோ என்னவோ?

புத்திசாலி யூகி – குழந்தைகள் கதைபுத்திசாலி யூகி – குழந்தைகள் கதை

இன்னைக்கு நம்ம பார்க்கப் போறது ஒரு புத்திசாலி ஜப்பானிய சிறுவனைப் பற்றிய கதைதான். அந்த சிறுவனின் பெயர் யூகி. அதுக்கு முன்னாடி நம்ம சுனாமியைப் பத்தித் தெரிஞ்சுக்கணும். இதை தமிழில் ஆழிப் பேரலைன்னு சொல்லுவாங்க. நம்ம எல்லாருக்கும் கடற்கரை, பீச் ன்னு