Tamil Madhura குழந்தைகள் கதைகள் புத்திசாலி யூகி – குழந்தைகள் கதை

புத்திசாலி யூகி – குழந்தைகள் கதை

இன்னைக்கு நம்ம பார்க்கப் போறது ஒரு புத்திசாலி ஜப்பானிய சிறுவனைப் பற்றிய கதைதான். அந்த சிறுவனின் பெயர் யூகி. அதுக்கு முன்னாடி நம்ம சுனாமியைப் பத்தித் தெரிஞ்சுக்கணும். இதை தமிழில் ஆழிப் பேரலைன்னு சொல்லுவாங்க.

நம்ம எல்லாருக்கும் கடற்கரை, பீச் ன்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும் இல்லையா. அந்த பீச்சில் அலைகளுடன் ஓடி விளையாடுவது இன்னமும் பிடிக்கும் இல்லையா. அந்த அலைகள் பத்து மாடி கட்டிடம் அளவுக்கு உயரமா வந்தால் என்னாகும். ஊரே மூழ்கிடும் இல்லையா. அந்த மாதிரி அலைகள்தான் ஆழிப் பேரலை அல்லது சுனாமின்னு சொல்லுவாங்க. லெமூரியா என்னும் குமரிக் கண்டம் இந்த மாதிரியான கடல் நீரால்தான் தண்ணீரில் மூழ்கிருச்சு.

இப்ப கதைக்கு வருவோம். ஜப்பானில் சுனாமிகள் ஏற்படுவது உண்டு. அதனால அதைப் பற்றிய விவரமும் எப்படி பாதுகாப்பா இருக்கணும்னும் தாத்தா பாட்டி எல்லாரும் மக்களுக்கு கத்துக் கொடுத்துடுவாங்க. நம்ம யூகி கூட இந்த மாதிரி கடற்கரை ஒட்டி இருக்குற கிராமத்தில்தான் வாசிச்சான். யூகியின் தாத்தாதான் அந்த கிராமத்தின் தலைவர். அந்த கிராமத்தில் நூறு குடும்பங்கள் வாழ்ந்தார்களாம். அவங்க எல்லாரோட முக்கிய தொழில் விவசாயம்தானாம்.

ஜப்பானிலும் மற்ற ஆசிய நாடுகள் மாதிரி அரிசிதான் முக்கிய உணவு. அவங்க சாப்பிடும் நூடில்ஸில் கூட முக்கியமானது ரைஸ் நூடில்ஸ்தான். வீட்டில் உங்கம்மா செய்யும் ரைஸ் நூடில்ஸ் பேரென்னன்னு சொல்லுங்க பார்க்கலாம் (ஆமாம் சத்து மிக்க இடியாப்பம்தான் அது).

யூகியின் கிராமத்தினர் பக்கத்திலிருந்த மலையடிவாரத்தில் நிலம் வச்சிருந்தாங்களாம். நல்ல வளமான அந்த நிலத்தில் நெல்லை விளைவிப்பாங்களாம். அறுவடை காலங்களில் நம்ம பொங்கல் கொண்டாடுறமாதிரி அவங்களும் அறுவடை விழா கொண்டாடுவாங்களாம்.

அதே மாதிரி ஒரு நாள் அறுவடை செய்து நெல்லை எல்லாம் கட்டி வச்சுட்டு மறுநாள் விழாவிற்காக கடற்கரை பக்கமிருந்த வீடுகளில் அலங்காரம் செஞ்சுட்டு இருந்தாங்களாம் கிராமத்து மக்கள். யூகியும் சில சிறுவர்களும் விளையாடிக்கிட்டே மலை உச்சிக்குப் போயிட்டாங்கலாம். யூகி அங்கிருந்து பார்த்தப்ப சுற்றிலும் இயற்கை அழகோடா அவங்க கிராமமும் கடலும் தெரிஞ்சதாம். ஆனால் அப்பதான் வித்யாசமான ஒரு விஷயத்தை யூகி பார்த்தானாம். கடல் கரையை விட்டு அப்படியே உள்வாங்கியிருந்ததாம். அப்படியே உள்ள போனதால பல மைல் தொலைவில் அந்த நாள் வரை கடலில் மூழ்கியிருந்த விஷயங்கள் எல்லாம் வெளிய தெரிஞ்சதாம். இதனைப் பார்த்த கிராம மக்கள் எல்லாரும் அதிசயப்பட்டுட்டு அப்படியே கூட்டம் கூட்டமா கடற்கரைக்குப் போனாங்களாம்.

இத்தனையும் பார்த்த யூகிக்கு தன் தாத்தா இந்தமாதிரி கடல் உள்வாங்கினால் அதுக்கப்பறம் அதைவிட வேகமா சுனாமி வரும்னு சொன்னது நினைவுக்கு வந்ததாம். மலையிலிருந்து பார்க்கும்போதே மக்கள் எல்லாரும் கடலில் தெரிந்த மணல் பரப்பில் நடப்பதைப் பார்த்து யூகிக்கு பயமாயிடுச்சாம். “ஆபத்து ஆபத்து…. கடலுக்குள்ள போகாதிங்க”ன்னு மலைமேலிருந்து கத்துனான்  யூகி. அது கடற்கரையில் கூட்டமா கூடின மக்கள் காதிலேயே விழலையாம். அவங்க ஊரில் சுனாமி வந்து பல வருடங்களாகிட்டதால எதனால் கடல் உள்வாங்கிச்சுன்னு மக்கள் எல்லாரும் மறந்துட்டாங்களாம்.

மலைமேலே இருந்து பார்த்த யூகிக்கு வெகு தூரத்தில் கடல் அலை உயரமா வருவது தெரிஞ்சதாம். ஒரு நிமிடம் யோசிச்ச யூகி நேரா நெற்பயிரை அறுவடை செஞ்சு வச்சிருந்த களத்துக்கு போனானாம். அது மலையின் மேலேயே இருந்ததால் அவனால் சில நிமிடங்களில் அந்த இடத்திற்கு போக முடிஞ்சதாம். அந்த பயிரை எல்லாம் தீயிட்டு கொளுத்தினானாம். தீ சில நிமிஷத்தில் விறுவிறுன்னு பரவி உயரமா எரிஞ்சதாம். கீழேயிருந்து நெல் எரியிறதை பார்த்த மக்கள் எல்லாரும் வேகமா அந்த இடதிற்கு ஓடி வந்தாங்களாம். அங்க தீபந்தத்தோட நின்னுட்டு இருந்த யூகியைப் பார்த்து எல்லாரும் ஆத்திரப்பட்டாங்களாம்.

யூகியின் பெற்றோர் மட்டும் கண்ணீரோட “யூகி எதனால இந்த காரியத்தை செஞ்ச. உன்னால எங்க எல்லாரோட உழைப்பும் கெட்டுப் போயிடுச்சே” என்று கேட்டாங்களாம்.

அவங்க எல்லாருக்கும் பதிலா கடலை சுட்டிக் காட்டினானாம் யூகி. பத்து ஆள் உயரத்துக்கு பெருசா எழுந்த அலை அப்படியே அவங்க கிராமத்தை மூழ்கடிச்சதைக் கண்ணால பார்த்துட்டு அனைவரும் வாயடைச்சு போயிட்டாங்களாம். தாங்கள் எல்லாரும் மலை மேல ஏறியதால் மட்டுமே பாதுகாப்பா இருக்கோம்னு உணர்ந்தாங்களாம். அப்படியே அந்த இடத்திலேயே அனைவரும் பீதியில் அமர்ந்து கடலைப் பார்க்க. இரவு முழுக்க நாலைஞ்சுதடவை பொங்கின கடல் காலையில் அமைதியா தன்னோட வழக்கமான எல்லைக்கு போச்சாம். அதுக்குள்ள யூகியின் மொத்த கிராமமும் அழிஞ்சிருந்ததாம்.

மறுநாள் காலையில் “என்னை மன்னிச்சிடுங்க. என்னால நம்ம அறுவடை விழாவே கெட்டுப் போச்சு” என்று யூகி கண்ணீரோட மக்கள்கிட்ட மன்னிப்பு கேட்டானாம்.

“யூகி… எங்களை மன்னிச்சுடு… நாங்கதான் உன்னைத் தப்பா புரிஞ்சுட்டு திட்டிட்டோம். எங்க எல்லாரோட உயிரையும் காப்பாத்திருக்க.  இந்த நாளை நம்ம எல்லாரோட உயிரும் காப்பாற்றப் பட்டதை நினைச்சு மகிழ்ச்சியோட கொண்டாடுவோம். ” என்று சொன்னாங்களாம்.

 

Tags:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சூரப்புலி – 3சூரப்புலி – 3

அக்குரல் அடங்கிய பிறகும் மலைச் சாரலிலே எதிரொலி வெகுநேரம் வரையிலும் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தக் குரலைக் கேட்டதும் கானகமே கொஞ்ச நேரம் பயந்து மெளனமாக இருந்தது போலத் தோன்றிற்று. அந்தக் குரலைக் கேட்டு எல்லாப் பிராணிகளும் திகைத்துப்போய் ஊமையாகி விட்டனவோ என்னவோ?

முருகன் எப்படி தப்பித்தான்- குழந்தைகள் கதைமுருகன் எப்படி தப்பித்தான்- குழந்தைகள் கதை

முன்னொரு காலத்தில் களியனூர் எனும் ஊரில் முருகன் என்ற கொல்லன் வாழ்ந்து வந்தான். கொல்லன் என்பவன் இரும்புப் பொருட்களில் வேலை செய்பவன். அந்த சமயங்களில் கார், பஸ் போன்ற வாகனங்கள் இல்லாததால் குதிரை வண்டி, மாட்டு வண்டி ஆகியவற்றையே மக்கள் பயணம்

சூரப்புலி – 7சூரப்புலி – 7

சில இரவுகளில் அது குகைக்குள்ளே தனியாகப் படுத்துத் தூக்கம் வரும் வரையில் பகலிலே நடந்த சம்பவங்களைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கும். அன்றைய சம்பவங்களிலிருந்து மெது வாகப் பழைய வாழ்க்கையைப் பற்றிய நினைப்பும் வரும். பவானி ஆற்றில் வந்த வெள்ளத்தைப்பற்றியும், பாக்கு வியாபாரியின் மாளிகை யிலே