Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 26

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 26

அத்தியாயம் 26

கமலி ரவி கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே ஸ்ப் கோர்ட்டிலிருந்து ஸம்மன் சர்மாவுக்கும் கமலிக்கும் வந்து சேர்ந்திருந்தது. கமலி போய்த் தரிசனம் செய்திருந்த சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கோவில்களின் தூய்மை கெட்டு விட்டதால் அவற்றுக்கு மறுபடி உடனே சம்ப்ரோட்சணம் செய்ய ஆகிற செலவு என்று ஒரு கணக்குப் போட்டுப் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கோரி வழக்குத் தொடுத்திருந்தார்கள். வழக்குத் தொடுப்பதற்கான செலவு, தூண்டுதல் எல்லாம் சீமாவையர், அகமத் அலிபாய் ஆகியோருடையது என்றாலும், ஒவ்வொரு கோவிலுக்கும் சம்ப்ரோட்சணம், யாகசாலை, கும்பாபிஷேகம், மண்டலாபிஷேகச் செலவுகளுக்கு நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தவர் பாதிக்கப்பட்ட உள்ளூர் ஆஸ்திகர் என ஒருவராகவோ சிலராகவோ முன் வந்திருந்தார்கள். கோவில் கமலி நுழைந்ததனால் தூய்மை கெட்டுப் போய் ஆஸ்திகர்களும் முறையான இந்துக்களும் தொழுவதற்குப் பயன்படாமற் போய் விட்டதென்றும், எவ்வளவு விரைவில் கும்பாபிஷேக ஏற்பாடு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் செய்தாக வேண்டுமென்றும் வழக்குத் தொடுத்தவர்கள் கோரியிருந்தார்கள். எனவே சர்மாவுக்கும், கமலிக்கும் வந்திருந்த கோர்ட் நோட்டீஸில் விரைவாக விசாரணைக்கு ஒரு தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. முன்பு செய்தது போலவே கோர்ட் நோட்டீஸுடன் வேணு மாமாவிடமே கலந்தாலோசித்தார் சர்மா. வேணு மாமா சிறிதும் கலங்காமல் யோசனை சொன்னார்.

“கலியாணத்துக்கு ஒரு வாரம் இருக்கறப்போ பார்த்து நீரும், கமலியும் கோர்ட்லே வந்து நிற்கிற மாதிரி நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கா, பரவாயில்லே, கவலைப்படாதேயும். ப்ராக்டீஸ் பண்ணாததாலே எனக்கு வக்கீலுக்குப் படிச்சதே மறந்து போச்சு, ஆனா இந்தக் கேஸுலே உமக்கும் கமலிக்கும் நானே வக்கீலா இருந்து கவனிச்சுக்கறேன். பைத்தியக்காரத்தனமா இந்தக் கேஸைப் போட்டவங்க மூஞ்சியிலே கரியைப் பூசிண்டு போறாப்ல பண்றேனா இல்லையா பாரும்!”

“இப்போ நீங்க எதுக்குச் சிரமப்படணும்? வேறு யாராவது வக்கீல்கிட்ட விட்டுடலாமே? இதுனாலே கல்யாண ஏற்பாடுகளை நீங்க கவனிச்சுண்டிருக்கிறது தடைப்படுமே?”

“ஒண்ணும் தடைப்படாது. இந்தக் கேஸுலே சில நுணுக்கமான ஆர்க்யுமெண்டுகள் இருக்கு. அதை எல்லாம் பத்தி நான் ஏற்கெனவே யோசிச்சு வச்சிருக்கேன். ஃபூன்னு உள்ளங்கையாலே ஊதி விடறாப்ல ஊதி விட்டுடலாம். கவலைப்படாதேயும் சர்மா…”

“என் தலையை உருட்டணும்கிறதுக்காகவோ என்னவோ எல்லாப் பேப்பர்லியும் கொட்டை எழுத்திலே பெரிய நியூசாப் போட்டுட்டா இதை. சாதாரணமா எத்தனையோ கேஸ் சப்கோர்ட்டிலே வரது. அதை எல்லாம் நியூஸாப் போடறதில்லே…”

“உம்ம தலையை உருட்டணும்னு பேப்பர்காராளுக்கு ஒண்ணும் இராது. ‘வெள்ளைக்காரி கோவிலுக்குள்ளே நுழைஞ்சிட்டாள்’ன்னு வழக்குன்னா அதுலே ஒரு ‘சென்சேஷன்’ இருக்கோல்லியோ. அதுனாலே பெரிய நியூஸாப் போட்டிருப்பா.”

“நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டிருக்கிற புள்ளிகளிலே ரெண்டொருத்தர் அந்தந்தக் கோவில்களோட தர்மகர்த்தாக் குழுவிலே கூட இருக்கா. அதுனாலே, அர்ச்சகாள், குருக்கள், எல்லாம் கூட வேணும்னே பயந்துண்டு நமக்கு எதிரா சாட்சி சொல்லலாம்.” –

“இந்த ரெண்டு கோயில்லேயும் கமலி தரிசனத்துக்குப் போனப்போ இருந்த அர்ச்சகாள் யார் யாருன்னு நினைவிருக்கோ சர்மா?”

“கமலி கோவிலுக்குப் போறப்போ எல்லாம் உங்க பொண் வசந்தியோ, ரவியோ, அல்லது பாருவோ கூடத் துணைக்குப் போயிருக்கா. அவாளைக் கேட்டா அந்த சமயத்திலே அர்ச்சகா யார் யார் இருந்தான்னும் தெரிஞ்சுண்டுடலாம். அது ஒண்ணும் பெரிய சிரமமில்லே-”

“உடனே தெரிஞ்சுண்டு வந்து சொன்னீர்னா அந்த அர்ச்சகாளைக் கொஞ்சம் வரவழைச்சுப் பேசலாம். கேஸ் நமக்குச் சாதகமா முடியறத்துக்கு ரொம்ப உபயோகப்படப் போற விஷயம் இது.”

“இன்னிக்கே விசாரிச்சுச் சொல்லிடறேன். வேற சாட்சி ஏதாவது வேணுமா?”

“உம்ம சிநேகிதன் அந்தப் பகுத்தறிவுப் படிப்பக ஆள் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லச் சம்மதிப்பாரா?”

“இதிலே அவரோட சாட்சிக்கு எந்த விதத்திலே இடம் இருக்கு? இது கோவில் குளம், பக்தி தரிசனம்னு வர்ற கேஸ், தேசிகாமணிக்கு அதிலே எல்லாம் நம்பிக்கை கிடையாது.”

“நம்பிக்கை இருக்கறதும் இல்லாததும் வேற விஷயம். அவரோட தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் அடங்கிய பகுத்தறிவுப் படிப்பகத்திலே போய்ப் பிரசங்கம் பண்றதுக்கு முந்திகூட ஏதோ கடவுள் வாழ்த்து மாதிரி ஒரு ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துட்டுத்தான் கமலி பிரசங்கம் பண்ணினாள்னு கேள்விப்பட்டேன். அப்படி அவள் செஞ்சதைத் தங்களுக்குப் பிடிக்காத விஷயமா இருந்தும் ஒரு நாகரிகம் கருதி அவர் யாரும் தடுக்கலேன்னும் கேள்விப்பட்டேன்.”

“இருக்கலாம், ஆனா அது இந்தக் கேஸுக்கு எப்படிப் பிரயோஜப்படும்?”

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சர்மா! நடந்ததைக் கோர்ட்ல வந்து அவர் சொல்லுவாரோ இல்லியோ?”

“தாராளமா வந்து சொல்லுவார். தேசிகாமணி நிஜத்தைச் சொல்றதுக்கு எங்கேயும் யார் முன்னாடியும் பயப்படறது இல்லே.”

“அது போதும் எனக்கு.”

“பாவம்! இந்தச் சீமாவையர் பண்ணுன அக்கிரமத்திலே வெட்டுக் காயம் பட்டு ஆஸ்பத்திரியிலே கெடந்துட்டு இப்பத்தான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருக்கார் அந்த மனுஷன்.”

“என்ன பண்றது சர்மா? விபூதிப் பூச்சு, தெய்வ நம்பிக்கைங்கிற வேஷம் எல்லாமாச் சேர்ந்து சீமாவையர் முதல் நம்பர் ஆசாரக்கள்ளனாயிருந்தும் அவரை நல்லவனா உலகத்துக்குக் காட்டிடறதே?”

“யாருக்கும் பயப்படாமே மனப்பூர்வமா உள்ளதைச் சொல்லணும்னாத் தேசிகாமணியை ஆஸ்திகனா ஒத்துக்கலாம். சீமாவையரைத்தான் உண்மையான நாஸ்தீகன்னு சொல்லணும். வேஷம் போடறவனை விட வெளிப்படையானவன் யோக்கியன். சீமாவையருக்குச் சாஸ்திரம், புராணம், சம்ப்ரதாயம், ஒரு மண்ணும் தெரியாது. தெரியறதாக வேஷம் போடறார். ஒண்ணைக் குறை சொல்லிப் பேசறதுன்னாக்கூட அதைப் பத்தி முழு விவரமும் தெரிஞ்சுக்காமப் பேசப்படாதுன்னு அத்தனையையும் முறையாக் கத்துண்டு ஒண்ணுமே தெரியாத பாமரன் மாதிரி நடந்துக்கற தேசிகாமணி எவ்வளவோ சிலாக்கியம்பேன்…”

“முடிஞ்சா சீமாவையரைக் கூட இதிலே சிக்க வைச்சுப் பாக்ஸ்லே ஏத்திக் குறுக்கு விசாரணை பண்ணணும்னு எனக்கு ஆசை.”

“அவர் தான் நேரே வரவே மாட்டார். மத்தவாளைத் தூண்டிவிட்டு ஆழம் பார்க்கறதே அவர் வழக்கம். மத்தவாளுக்குக் கெடுதல் பண்றதையே ஒரு ஆர்ட்டா டெவலப் பண்ணிண்டவர் அவர். அவரோட பக்தி விசுவாசம் எல்லாமே வெறும் பாசாங்கு.”

“கமலி கோயிலுக்கு வந்ததாலே கோயிலோட சுத்தம் கெட்டுப் போச்சுன்னு கேஸ் போட்டிருக்கிறதிலிருந்தே அது தெரியலியா?”

“சும்மா பேருக்குத்தான் கமலி மேலே கேஸ் போட்டிருக்காளே ஒழிய உண்மையிலேயே அவா கோபமெல்லாம் என் மேலேயும் தேசிகாமணி மேலேயும் தான். என்னைச் சிரமப்படுத்தணும், எனக்குத் தொந்தரவு குடுக்கணும்னு தான் எல்லாம் நடக்கிறது. சீமாவையர் பார்த்துண்டிருந்த ஸ்ரீ மடத்து முத்திராதிகாரி பதவியாலே பல வகையிலே அவர் நிறைய பணம் பண்ணிக்க வழி இருந்தது. அவராலே மடத்துப் பேரே கெட்டுடும்னு பயந்து பெரியவா எங்கிட்ட அதை மாத்தினா. அதனாலே ஒரு கோபம். ரெண்டாவது, அவர் சொல்றபடி நான் கேட்டுட்டாப் பரவாயில்லேன்னு முயற்சி பண்ணிப் பார்த்தார். நெலங்களைக் குத்தகைக்கு அடைக்கிறது, மடத்து மனையை வாடகைக்கு விடறதுலே எல்லாம் அவர் சொன்னதை நான் கேக்கல்லேன்னு வேறெ என் மேலே தாங்க முடியாத ஆத்திரம் அவருக்கு.”

“சீமாவையர் மட்டும் விட்னெஸ்ஸாவோ, வேறெப்படியோ பாக்ஸ்லே ஏறினார்னா இத்தனையையும் பகிரங்கமா எக்ஸ்போஸ் பண்ணிடலாம் சர்மா…”

“அவர் சிக்கறது கஷ்டம். தண்ணிப் பாம்பு மாதிரி சுபாவம் அவருக்கு. தலையை மட்டும் வெளியிலே நீட்டுவார். கையிலே நாம கல்லை எடுத்தமோ முக்குளிச்சு ஓடிப்போய் ஒளிஞ்சுண்டுடறதுதான் அவர் வழக்கம்.”

“உதாரணம் பிரமாதம் சர்மா!… இந்த மாதிரிக் கையாலாகாதவனை நல்ல பாம்போட கூட ஒப்பிட்டு நல்ல பாம்பை அநாவசியமா அவமானப்படுத்த நீர் தயாராயில்லேன்னு தெரியறது.”

“நல்ல பாம்புக்குக் கொஞ்சம் மானரோஷம் உண்டு. அதை அடிக்கக் கம்பை ஓங்கினா எதிர்த்துச் சீறும்; படமெடுக்கும். கடிக்கக் கூட வரும்…”

சர்மா சீமாவையரைச் சித்தரித்த விதத்தைக் கேட்டு வேணு மாமா இரசித்துச் சிரித்தார். அப்புறம் சர்மாவிடம் வினவினார்:

“கோயில் திருப்பணிக்குக் கமலி பேரிலே நன்கொடை கொடுத்து ரசீது வாங்கச் சொன்னேனே; அந்த ரசீதைப் பத்திரமா வச்சிருக்கேளா? அதுலே என்ன எழுதியிருக்குன்னு இப்போ நினைவிருக்கோ?”

“இந்து ஆஸ்தீகப் பெருமக்களே! இது உங்கள் திருப்பணி; உவகையோடு முன் வந்து உதவுங்கள்’ன்னு தலைப்பிலே அச்சிட்டிருக்கான்னு நினைப்பு. அப்புறம் தேதி, பணம் குடுத்தவங்களோட பேர், கீழே தர்மகர்த்தாக்களில் ஒருத்தரோட கையெழுத்து எல்லாம் அதிலே இருக்கு.”

“பலே! அதைப் பத்திரமா எடுத்துண்டு வந்து எங்கிட்டக் குடுத்துடும்.”

“கேஸ், விசாரணை, வாய்தான்னு ரொம்ப இழுபடுமோ? அப்படி இழுபட்டா நம்ம கல்யாணக் காரியங்களையே கவனிக்க முடியாம இதுக்குன்னே அலைய வேண்டியதான்னா போயிடும்?”

“இழுபடாதுன்னு தோன்றது. ‘பப்ளிக் இன்ட்ரஸ்ட் உள்ள அவசர விஷயம்’னு வற்புறுத்தி அவா கேஸ் போட்டிருக்கா. கமலி நுழைஞ்சதாலே கோவில் சாந்நித்யம் கெட்டு முறைப்படி தினசரி வழிபட வருகிற எல்லா இந்துக்களுக்கும் பயன்படாததாகி விட்டதுன்னும், உடனே சம்ப்ரோட்சணம் செய்தாகணும்ன்னும் தான் வழக்கு. அதனாலே கேஸை எடுத்துண்டாச்சுன்னா உடனே விசாரணை நடந்து முடிஞ்சுடறதுதான் வழக்கம். எப்பிடியும் ரெண்டுலே ஒண்ணு சீக்கிரமா முடிவாயிடும்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 18தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 18

அத்தியாயம் 18 வைக்கோற் படைப்பும், பசுமாடுகளும் எரிந்து போனது பற்றி அப்பாவும் உள்ளூற வருந்தியிருக்கலாம்! ஆனால் அது தண்ணீரில் அம்பெய்த மாதிரிச் சுவடு தெரியாமல் உடனே மறைந்து போயிருந்தது. அது பற்றிய ஊர் வம்பும் அவர் காதில் விழுந்தது. அவர் அதைப்

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 20தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 20

அத்தியாயம் 20 தன் பெயருக்குப் பதிவுத் தபாலில் வந்திருந்த கடிதத்தைப் பார்த்து சர்மா எதுவும் வியப்போ பதற்றமோ அடையவில்லை. அமைதியாகக் கடிதத்தை மடித்து மறுபடியும் உறையில் வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். இது அவர் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். இதற்கு நேர்மாறாகக் கமலி தன் பெயருக்கு

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 3தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 3

அத்தியாயம் 3   வேணு மாமா இதமான குரலில் விசுவேசுவர சர்மாவிடம் சொல்லலானார்:-   “ரவி ரொம்ப நாளைக்கு அப்புறம் தூர தேசத்திலிருந்து திரும்பி வரான். அவன் கிட்டவும் அவன் கூட வர்றவாகிட்டவும் முகம் கோணாமல் நீங்க நடந்துக்கணும். குடும்பம் என்னும்