Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 23

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 23

அத்தியாயம் 23

வேணு மாமா ரவியைக் கேட்டார்.

“எக்ஸ்பிரஸ் டெலகிராமாக் குடுத்தியோ? ஆர்டினரியாக் குடுத்தியோ? இங்கே அவ சீக்கிரம் வந்தாகணும்.”

“எக்ஸ்பிரஸ்தான் மாமா. எப்படியும் நாளைக் காலம்பரத்துக்குள்ளே வசந்திக்குக் கிடைச்சு அவ பம்பாயிலிருந்து இங்கே புறப்பட்டுடலாம்?”

சர்மா கையோடு பஞ்சாங்கம் கொண்டு வந்திருந்ததைப் பார்த்து முகூர்த்தக் கால் நடுவதற்கும் லக்கினப் பத்திரிகை வைப்பதற்கும் உடனே நாள் பார்த்துச் சொல்லும்படி அப்போதே அவரை வேண்டினார் வேணு மாமா. சர்மாவும் உடனே பொறுமையாகவும், நிதானமாகவும் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்து விவரங்களைத் தெரிவித்தார்.

அன்று தமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் ரவியையும் சர்மாவையும் வடை பாயசத்தோடு அங்கே தம் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டுமென்று மன்றாடினார் வேணு மாமா.

“அதெல்லாம் இன்னிக்கி வேண்டாம். லக்கினப் பத்திரிகை எழுதற அன்னிக்கி வச்சிக்கலாம். உங்க வீட்டுச் சாப்பாடு எங்கே ஓடிப் போறது?” என்று சொல்லிக் கொண்டு வேணு மாமாவிடம் விடை பெற்றுத் தன் மகன் ரவியுடன் வீடு திரும்பினார் சர்மா.

திரும்பி வீட்டுக்கு நடக்கிற போது அவர்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. என்றாலும், “தங்கமான மனுஷன், உபகாரி. உபகார குணமும் மனோ தைரியமும் மனுஷா கிட்டச் சேர்ந்து அமையறது ரொம்பவும் அபூர்வம். சில பேர் இது மாதிரி நல்ல காரியத்துக்கு முன் வந்து உபகாரம் பண்ணணும்னு நினைப்பன். ஆனால் துணிஞ்சு முன் வந்து உபகாரம் பண்றதுக்கு வேண்டிய மனோ தைரியம் இராது” – என்று வேணு மாமாவைப் புகழ்ந்து சொல்லிக் கொண்டு வந்தார் சர்மா.

ரவி, அப்பா சொல்லியதை ஆமோதிப்பது போல் மௌனமாக இருந்தான். ஏற்பாடுகள் நிறைவெய்துகிறவரை இது பற்றிப் பிறரிடம் எதுவும் பேசுவதில்லை என்று இருவரும் பரஸ்பரம் தங்களுக்குள் எச்சரிக்கை உணர்வோடு கூறிக் கொண்டார்கள். காமாட்சியம்மாளிடம் இது பற்றிப் பேசுகிற பொறுப்பைக் கூட வேணு மாமா சொல்லியது போல் வசந்தியின் வசம் விட்டுவிடலாம் என்று தந்தை, மகன் இருவருமே கருதினார்கள். அன்றிரவு கமலியிடம் மட்டும் குறிப்பாக இந்த விஷயத்தைப் புலப்படுத்தினான் ரவி.

மறுநாள் காலை முதல் தபாலில் கிடைத்த ஒரு கடிதம் அவர்கள் ஏற்பாட்டில் சிறு மாறுதல் ஒன்றை உண்டாக்கியது. சர்மாவுக்கும் கமலிக்கும் வக்கீல் நோட்டீஸ்கள் அனுப்பியிருந்தவர்கள் அதன் நகல்களை ஸ்ரீ மடம் ஹெட் ஆபீஸ் மானேஜருக்கு அனுப்பியிருந்ததுடன், சர்மாவையும் ரவியையும் இல்லாததும் பொல்லாததுமாகக் குறை சொல்லி சில மொட்டைக் கடிதங்களும் கூடப் போட்டிருந்தார்கள் போலிருக்கிறது.

ஸ்ரீ மடம் மானேஜர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை, என்றாலும் ரவியையும், அவனோடு வந்திருக்கும் பிரெஞ்சுப் பெண்மணியையும் ஸ்ரீ மடத்துக்கு வரச் சொல்லி, பெரியவர்களைத் தரிசனம் செய்து விட்டுப் போகுமாறு யோசனை கூறியிருந்தார். எழுதியிருந்த பாணியிலிருந்து அந்தத் தரிசனமே இவர்களுக்கு ஒரு சோதனையாகவோ பரீட்சையாகவோ அமையும் போலிருந்தது. பெரியவர்களின் குறிப்பறிந்து அந்த மகா ஞானியின் சமிக்ஞையோ ஆக்ஞையோ பெற்றுத்தான் அந்தக் கடிதமே மானேஜரால் எழுதப்பட்டிருக்குமென்று சர்மாவால் சுலபமாக அனுமானிக்க முடிந்தது.

கடிதத்தை ரவியிடம் படிக்க கொடுத்து, “அவளைக் கூட்டிக் கொண்டு ஒரு நடை போய்விட்டு வா! பெரியவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்” – என்றார் சர்மா. ரவி அதற்கு உடனே ஒப்புக் கொண்டான். ஆனால் சிறிது தயக்கத்தோடு தந்தையைக் கேட்டான்.

“இந்த ஊர்க்காரா ஒரு வண்டி குத்தம் சுமத்திக் கோள் சொல்லி எழுதின கடிதாசையும், வக்கீல் நோட்டிஸையும் பார்த்துட்டு மடத்திலேருந்து இதை எழுதியிருக்கா. என்ன நடக்குமோ? வரச் சொல்றது அவா. போகச் சொல்றது நீங்க. மகாஞானியும் பூர்ண திருஷ்டியும் உள்ள ஒருத்தரைத் தரிசிக்கப் போறதை எங்க பாக்கியம்னு நெனைச்சு நானும் கமலியும் போறோம். இதிலே வேற ஒண்ணும் சிரமமோ கஷ்டமோ வராதே?”

“ஒரு கொறையும் வராதுடா! போய் அவா அநுக்கிரகத்தையும் வாங்கிண்டு வந்து சேருங்கோ…”

யோசிக்கவோ, பிரயாணத்துக்குத் திட்டமிட்டுத் தயாராகவோ கூட அவர்களுக்கு நேரமில்லை. உடனே கிடைத்த பகல் நேர ரயிலைப் பிடித்து விரைந்தார்கள் அவர்கள். மறுநாள் அதிகாலை ஐந்து ஐந்தரை மணிக்குத்தான் அங்கே போய்ச் சேர முடிந்தது.

ஸ்ரீ மடத்தையும், பழம் பெருமை வாய்ந்த ஆலயங்களையும் தரிசிக்க வரும் பக்தர்களுக்காகவும், யாத்திரீகர்களுக்காகவும் அந்த ஊரில் தங்குவதற்கு சில நல்ல லாட்ஜுகளும் ஹோட்டல்களும் ஏற்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் தங்கி நீராடி உடைமாற்றிக் கொண்டு ரவியும் கமலியும் தயாரானார்கள். ஊருக்கு வெளியே இரண்டு மூன்று மைல் தொலைவில் ஒரு மாந்தோப்பில் ஆசார்ய சுவாமிகள் தங்கியிருப்பதாகவும் அப்போது சாதுர் மாஸ்ய விரதம் இருப்பதால் அவர் யாரோடும் பேசுவதில்லை என்றும் எல்லாம் சமிக்ஞைதான் என்றும் ஹோட்டல் மானேஜர் கூறினார். கூட்டம் சேருவதற்கு முன் சீக்கிரமே போய் விட்டால் சுலபமாக தரிசனம் ஆகும் என்று சொல்லி அவரே ரவியும் கமலியும் அந்த மாந்தோப்புக்குப் போவதற்கு ஒரு டாக்ஸியும் பேசி விட்டார்.

பழைய நாள் சுங்குடிப் புடவை போலத் தோன்றிய ஓர் எளிய கைத்தறிப் புடவை அணிந்து குங்குமத் திலகமிட்டு, நீராடிய ஈரம் புலராத கூந்தலை நுனிமுடிச்சிட்டுக் கொண்டு அதிகாலையின் புனித உணர்வுகள் நிறைந்த மனத்துடன் புறப்பட்டிருந்தாள் கமலி. நிறமும் கண்களும், கூந்தலும் வித்தியாசமாகத் தோன்றின என்பது தவிர மற்ற விதங்களில் அவள் ஓர் இந்தியப் பெண்ணாகவே காட்சியளித்தாள். சில நோட்டுப் புத்தகங்களும் டைரியும் அவள் கையில் இருந்தன.

அரையில் சரிகைக் கரையிட்ட பட்டாடையும், மேல் உத்தரியமும், பொன் நிற மார்பில் வெளேரென்று மின்னல் இழையாகத் துலங்கிய யக்ஞோபவீதமுமாகப் புறப்பட்டிருந்தான் ரவி. நடுவழியில் பழக்கடை, பூக்கடை இருந்த பகுதியில் நிறுத்தி ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சைப் பழங்களும், ஒரு பச்சைத் துளசி மாலையும் வாங்கிக் கொண்டார்கள் அவர்கள்.

அதிகாலையில் கிழக்கு வெளுத்துக் கொண்டிருக்கும் போது அப்படி ஒரு தரிசனத்துக்காகப் போவது மனத்துக்கு ரம்மியமாக இருந்தது. ரவி கமலி இருவருடைய மனங்களும், சரீரங்களும் அப்போதுதான் பூத்த பூக்களைப் போல் சிலிர்ப்புடனும் நறுமணத்துடன் தண்ணென்றும் களங்கமற்றும் இருந்தன. மனங்களும் உடல்களும், உஷ்ணமின்றிக் குளிர்ந்திருந்தன.

அந்த அதிகாலையிலும் கூடப் பெரியவர்கள் தங்கியிருந்த மாந்தோப்புக்கு வெளியே நாலைந்து டூரிஸ்ட் கோச்கள், பத்துப் பன்னிரண்டு கார்கள், சில குதிரை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. அவர் தங்கியிருப்பதை ஒட்டி அந்த இடம் ஒரு க்ஷேத்திரமாகி இருந்தது. அந்தப் பெரிய மாந்தோப்பில் நடுவாக இருந்த ஒரு தாமரைப் பொய்கையின் கரையில் சிறு குடிசை போன்ற பர்ணசாலை ஒன்றில் அவர் தங்கியிருந்தார். கோயில் கர்ப்பக்கிருஹத்தில் இருப்பது போல் அந்த இடத்தைச் சுற்றித் துளசியும், கர்ப்பூரமும் சந்தனமும் – நெய்யும் கலந்த வாசனை நிலவியது. ஆணும் பெண்ணுமாக நிறைய பக்தர்கள் கையில் பழத் தட்டுக்களுடன் தரிசனத்துக்குக் காத்திருந்தனர். ரவி கமலியோடு ஸ்ரீ மடத்து நிர்வாகியைப் போய் பார்த்தான். அவர் பிரியமாக வரவேற்றுப் பேசினார். எங்கே தங்கியிருக்கிறார்கள், எப்போது வந்தார்கள் என்ற விவரங்களை எல்லாம் விசாரித்துக் கொண்டார். தங்கியிருக்கிற இடத்தில் எல்லாம் சௌகரியமாயிருக்கிறதா என்றும் கேட்டார். “நீங்கள் சமஸ்கிருதத்திலும், சாஸ்திரங்களிலும் இந்தியக் கலாசாரங்களிலும் நிரம்ப ஈடுபாடுள்ளவராயிருப்பதை அறிந்து பெரியவர்களுக்கு வெகு திருப்தி” என்று நடுவே கமலியைப் பார்த்துத் திடீரென்று ஒரு வாக்கியம் சொன்னார் அவர். தங்களைப் பற்றித் தாங்கள் அங்கே வருவதற்கு முன்பே நிறையப் பேச்சு நடந்திருப்பதை ரவியும் கமலியும் அதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. பெரியவர்கள் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பதால் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுப் புரிந்து கொள்வார்கள் என்பதையும் அவர்கள் எதுவும் பேச மாட்டார்கள் என்பதையும் கமலிக்கு விளக்கினார் அவர். மொட்டைக் கடிதாசுகள், வக்கீல் நோட்டீஸ்கள் பற்றி அவரும் எதுவும் பேசவில்லை. அவர்களும் பேசவில்லை.

அங்கே தரிசனத்துக்குக் காத்திருந்தவர்களோடு அவர்களும் போய் நின்று கொண்டார்கள். ஓர் ஐரோப்பிய யுவதி புடைவை குங்குமத் திலகத்தோடு தரிசனத்துக்கு வந்திருப்பது காத்திருந்த மற்றவர்களிடம் சிறிது வியப்பை உண்டாக்கியது. சிலர் ரவியிடம் வியந்து விசாரித்தார்கள். சிலர் கமலியிடமே ஆங்கிலத்தில் விசாரிக்க ஆரம்பித்து அவள் தமிழிலேயே பதில் சொல்லியது கண்டு ஆச்சரியப்பட்டார்கள். கமலியைச் சுற்றி இளம் பெண்கள், மாமிகளின் கூட்டம் கூடிவிட்டது.

பெரியவர்கள் பொய்கையில் நீராடிவிட்டுப் படித்துறையிலேயே ஈர ஆடையுடன் ஜபம் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். படித்துறையிலிருந்து அவர் குடிலுக்கு வந்ததும் தரிசனம் கிடைக்கலாம் என்று காத்திருந்தவர்களிடையே பேச்சு நிலவியது.

கிழக்கு நன்றாக வெளுத்து மாந்தோப்பில் பறவைகளின் குரல்கள் வீச்சுக் குறையத் தொடங்கியிருந்தன. ஸ்ரீ மடம் நிர்வாகி அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்தார்.

“நீங்க ரெண்டு பேரும் படித்துறைக்கே போயிடுங்கோ. பெரியவா உட்கார்ந்திருக்கிற படிக்கு ஒரு படியோ, ரெண்டு படியோ கீழே இறங்கிண்டா அங்கேயிருந்தே அவாளோட பேசச் சௌகரியமாயிருக்கும்.”

அவர் கூறியபடி அவர்கள் இருவரும் படித்துறைக்கு விரைந்தனர். பொய்கையில் பூத்திருந்த பல செந்தாமரைப் பூக்களில் ஒன்று கரையேறிப் படிக்கட்டில் அமர்ந்திருப்பது போல் கிழக்கு நோக்கித் தேஜோ மயமாக அமர்ந்திருந்தார் அவர். கிழக்கே உதித்துக் கொண்டிருந்த இளஞ்சூரியனின் வரவு படித்துறையில் வீற்றிருந்த இந்த மூத்த ஞான சூரியனைக் காண வந்தது போலிருந்தது. அவர் பாதங்களின் அருகே பழத் தாம்பாளத்தை வைத்துவிட்டுக் கீழே சற்று அகலமாக இருந்த மற்றொரு படியின் அசௌகரியமான குறுகிய இடத்துக்குள்ளேயே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்கள் ரவியும், கமலியும்.

மலர்ந்த முகத்தோடு, ஆசி கூறுகிற பாவனையில் அவரது வலது கரம் உயர்ந்து தணிந்ததை அவர்கள் காண முடிந்தது. வெளிநாடுகளில் சுற்றிய பழக்கத்தாலும் அந்த மகானுக்குத் தான் யாரென்று நினைவிருக்குமோ, இராதோ என்ற தயக்கத்தாலும் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன், “சங்கரமங்கலம் விசுவேசுவர சர்மாவின் ஜ்யேஷ்ட குமாரன்…” என்று தொடங்கிய அவனைப் புன்முறுவலுடன் “போதும், தெரிகிறது” – என்கிற பாவனையில் கையமர்த்திவிட்டு உட்காரும்படி இருவருக்குமே ஜாடை காட்டினார் அவர். கமலி நோட்டுப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைப் புரட்டி வைத்துக் கொண்டு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவரோ அதே மலர்ந்த முகத்தோடு ‘சரி தொடங்கு’ – என்பது போலக் கையை அசைத்தார். தயக்கங்கள் இல்லாமல் தடைகள் இல்லாமல் சொல்லி வைத்தது போல் எல்லாம் நடந்தது.

“ஏதோ எனக்கு இருக்கும் குறைந்த ஞானத்தைக் கொண்டு கனகதாரா ஸ்தோத்திரம், ஸௌந்தர்யலஹரி இரண்டையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறேன் பெரியவர்கள் கேட்டருள வேண்டும்!” – கமலி வேண்டினாள்.

புன்முறுவலோடு அவளை நோக்கி அவர் கையை அசைத்தார். ஒளி நிறைந்த அந்த விழிகளில் ஞானத்தின் நிறைவும் கனிவும் தெரிந்தன. முதலில் சமஸ்கிருத ஸ்லோகத்தையும் அப்புறம் பிரெஞ்சு மொழி பெயர்ப்பையும் அவள் படித்தாள். அவர்களுக்கிடையே ஒரு பவ்யமான சாட்சியைப் போல் அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் ரவி.

அங்கே படித்துறைக்கு மேலே பக்தர்களின் கூட்டம் கூடி விட்டது. ஓர் ஐரோப்பியப் பெண்மணி ஸ்பஷ்டமான – குறையில்லாத உச்சரிப்போடு ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தைச் சொல்லி, அதன் பிரெஞ்சு மொழி பெயர்ப்பையும் கூறுவதைக் கூட்டத்தினர் நிசப்தமாகக் கட்டுண்டு கேட்டுக் கொண்டிருந்தனர். கூட்டத்துக்கு அது ஒரு புதிய மெய் சிலிர்க்கச் செய்யும் அனுபவமாயிருந்தது.

சிற்சில இடங்களில் சைகையாலேயே ‘மறுமுறையும் படி’ – என்று தெரிவித்துக் கமலியைத் திரும்பக் கூறச் செய்து கேட்டார் அவர். எப்போது நிறுத்தச் சொல்லி ஜாடை காட்டுகிறாரோ அப்போது நிறுத்திவிடலாம் என்று படித்துக் கொண்டிருந்தவளை – அவர் நிறுத்தச் சொல்லாமலே சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நேரம் போவதை யாருமே உணரவில்லை. ஸௌந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம் முடிந்து அவள் தாள்களை மூடியதும், “வேறு ஏதாவது மொழி பெயர்ப்பு வேலை நடக்கிறதா?”… என்று எண்ணி அதையும் சைகை மூலமே அவர் கேட்டபோது, கமலி அதைப் புரிந்து கொண்டு “பஜ கோவிந்தம் பண்ண முயன்று கொண்டிருக்கிறேன்” என்றாள். வாயருகே வலது கையை அடக்கமாகப் பொத்தி அவள் பதில் கூறிய பாணியின் இந்தியத் தன்மையை அனைவரும் வியந்து கொண்டிருக்கும் போதே, “பஜ கோவிந்தத்தைப் பிரெஞ்சு மொழியில் பண்ணத் தொடங்கியிருந்தால் அதிலிருந்தும் ஒன்று சொல்லேன்” – என்பது போல் சைகை செய்தார் அவர்.

“புனரபி ஜனனம், புனரபி மரணம்… புனரபி ஜனனி ஜடரே சயனம்…” – என்ற பகுதியைச் சொல்லிவிட்டு அதன் பிரெஞ்சு மொழி பெயர்ப்பைக் கூறினாள் கமலி.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் நினைத்தது – அந்த நினைப்பின் சைகையிலேயே அவளுக்குத் தவறாமல் புரிந்ததுதான். ‘மகான்கள் பேசாமலே தங்களுடைய நினைப்பைப் பிறருடைய இதயத்தில் தெளிவாக்கி விடுவார்கள். வாயும் செவியும் பாமரர்களுக்குத் தான். அப்படிக் கேட்கவும் பேசவும் செய்யும் கருவிகள் இல்லாமலே கேட்பிக்கவும், பேசுவிக்கவும் செய்ய மகான்களால் முடியும்’ என்பதை அவருடைய அந்த நிலைமை அவர்களுக்கு உணர்த்தியது.

நீண்ட நேரத்திற்குப் பின் அவருடைய பார்வை ரவியின் பக்கம் திரும்பியது. அவன் பவ்யமாகத் தன்னைப் பற்றிய விவரங்களையும், கமலியைப் பற்றிய சில தகவல்களையும் கூறினான். பிரான்சில் இந்திய மொழிகளைக் கற்கும் மாணவர்கள் பற்றிச் சொன்னான். அவர்களில் முதன்மையாகத் தேறிப் பக்குவம் பெற்றவள் கமலிதான் என்பதையும் கூறினான்.

பழத் தட்டிலிருந்து ஒரு மாதுளையையும், ஆப்பிளையும் துளசி மாலையையும் வலது கையால் தொட்டு ஆசீர்வாதம் செய்து அவர்களிடம் தனித்தனியே அளித்தார் அவர். அவனுக்கு ஆப்பிளும், அவள் கையில் மாதுளையும் வந்திருந்தன. இருவரையும் முகமலர்ந்து ஆசீர்வதித்தார் அவர். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்த பின் புறப்பட இருந்த போது கமலி திடீரென்று ரவியே எதிர்பாராத விதமாக ஓர் ஆட்டோகிராப் நோட்டையும் பேனாவையும் எடுத்துப் பெரியவர்களிடம் நீட்டவே – அது சம்பிரதாயமில்லையே என்று ரவி தயங்கி நின்றான். பெரியவர்களோ முகமலர்ச்சியோடு புன்முறுவல் பூத்தபடி ஆட்டோகிராப் நோட்டின் அந்தப் பக்கத்தில் கொஞ்சம் அட்சதையையும் குங்குமத்தையும் தூவிக் கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார். ‘மறுபடி வாருங்கள்’ என்று சைகையும் காண்பித்தார்.

படியேறி மேலே வந்ததும் ரவி கடிகாரத்தைப் பார்த்தான். காலை பத்தே முக்கால் மணி ஆகியிருந்தது. மாந்தோப்பில் வெயில் இன்னும் உறைக்கவில்லை. மடத்துப் பிரசாதங்கள், பிரசுரங்கள் அடங்கிய உறைகளோடு வந்த மானேஜர், “பெரியவா பேனாவைத் தொட்டு எழுதி ஆட்டோகிராப் போடறதுங்கறது எந்த நாளிலேயும் வழக்கமில்லை. ஆனாலும் இவா மேலே இருந்த பிரியத்தாலே அந்த ஆட்டோகிராப் தாளிலே அட்சதை குங்குமத்தை எடுத்துத் தூவினதே பெரிய அநுக்கிரகம்னு தான் சொல்லணும். இதுக்கு முன்னாடியும் இப்பிடி எத்தனையோ பேர் விவரம் தெரியாமல் ஆட்டோ கிராப்பை எடுத்து நீட்டியிருக்கா – ஆனால் அப்போ எல்லாம் பெரியவா மறுத்தாப் போலக் கையைத் தடுத்து நீட்டிப் போகச் சொல்லிடுவார். முதமுதலா இன்னிக்குத்தான் இப்படிச் சிரிச்சிண்டே சுமுகமா அட்சதை குங்குமத்தை எடுத்துத் தாளிலே இட்டதை நானே பார்க்கறேன். நீங்க ரொம்பக் குடுத்து வச்சிருக்கணும்” – என்றார்.

அவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொண்டார்கள் அவர்கள். “ஸௌந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், பஜகோவிந்தம்லாம் பிரெஞ்சிலே அச்சானதும் மறந்துடாமே நீங்க மடத்து லைப்ரரிக்கு அனுப்பி வைக்கணும்” என்று கமலியிடம் கூறினார் அவர்.

ஹோட்டலுக்குத் திரும்பி ரவியும் கமலியும் சிற்றுண்டு காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஸ்ரீ மடத்து நிர்வாகி அனுப்பியதாகப் பித்தளை டவாலி அணிந்த மடத்து ஊழியன் ஒருவன் ஏதோ ஒரு கடிதத்தோடு அவர்களைத் தேடி வந்திருந்தான். கடிதம் உறையிட்டு ஒட்டி அவன் தந்தை பெயருக்கு எழுதப்பட்டிருந்தது.

ரவி ஊர் திரும்பியதும் தந்தையிடம் சேர்த்து விடுவதாகச் சொல்லி அதை வாங்கிக் கொண்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 24தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 24

அத்தியாயம் 24 ஊருக்குத் திரும்பும் போது கமலிக்கும், ரவிக்கும் மனம் நிறைவாக இருந்தது. ‘சொல்லாமற் செய்வர் பெரியோர்’ – என்பது போல் தர்ம சங்கடமான எதைப் பற்றியும் சொல்லாமல், கேட்காமல் அநுக்கிரகம் செய்து அனுப்பியிருந்தார் பெரியவர். அவரது அந்தப் பரந்த கருணையையும்

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 10தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 10

  அத்தியாயம் 10   ரவிக்கும் கமலிக்கும் வேணுமாமா வீட்டில் நிகழ்ந்த விருந்து முடியும்போது இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். எஸ்டேட் உரிமையாளர் சாரங்கபாணி நாயுடுவிடம் சொல்லி ரவியையும் கமலியையும் மலை மேலுள்ள அவரது பங்களாவில் தங்க அழைக்கும் படி

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 20தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 20

அத்தியாயம் 20 தன் பெயருக்குப் பதிவுத் தபாலில் வந்திருந்த கடிதத்தைப் பார்த்து சர்மா எதுவும் வியப்போ பதற்றமோ அடையவில்லை. அமைதியாகக் கடிதத்தை மடித்து மறுபடியும் உறையில் வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். இது அவர் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். இதற்கு நேர்மாறாகக் கமலி தன் பெயருக்கு