Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 19

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 19

அத்தியாயம் 19

“நீ அந்நிய நாட்டுக்காரி. ஏதோ வேடிக்கையாக இதெல்லாம் செய்து கொள்கிறாய் என்று தான் ஜனங்கள் ஆச்சரியத்தோடு உன்னைப் பார்க்கிறார்கள். உண்மையில் எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணமானவர்கள்தான் இப்படி மடிசார் வைத்து புடவைக் கட்டிக் கொள்ள வேண்டும்” – என்று ரவி விளக்கியபோது தான் கமலி தன் அந்தரங்கத்திலிருந்த அந்த ஆசையை அவனிடம் வெளியிட்டாள்.

“தயவுசெய்து இன்னொரு முறை அப்படிச் சொல்லாதீர்கள். உங்கள் சமயம், உங்கள் மதம், உங்கள் பழக்கவழக்கங்கள், உங்கள் கலாசாரம் எதையும் நான் வேடிக்கையாக அணுகவில்லை. மனப்பூர்வமாகவே அணுகுகிறேன். என்னுடைய அணுகுதலில் தவறு இருந்தால் உடனே என்னைத் திருத்துங்கள். மற்றவர்கள் கேலி செய்ய விட்டு விடாதீர்கள். உங்கள் காதலி என்ற நிலையிலிருந்து சாஸ்திர சம்மதத்தோடு உங்களை மணந்து கொண்டவள் என்ற பெருமையை எனக்கு அளியுங்கள். முறையாக ஒரு சிறு சடங்குகூட விட்டுப் போகாமல் நம் திருமணம் நான்கு நாட்கள் பழைய வழக்கப்படி நடக்க வேண்டும்.” –

“நீ இப்படி ஆசைப்படுவாய் என்பது எனக்குத் தெரியும் கமலீ! எனக்கும் இதில் தயக்கமோ ஆட்சேபணையோ இல்லை. நீ வாய் திறந்து இப்படி என்னைக் கேட்கிறதுக்கு முன்னேயே இதை அப்பாவிடம் பிரஸ்தாபித்திருக்கிறேன் நான். ஆனால் இந்தியர்களாகிய எங்களிடம் உள்ள ஒரு குறையை உன்னிடம் சொல்றதிலே தப்பில்லேன்னு நினைக்கிறேன். வைக்கோற் படைப்பின் மேல் படுத்துறங்கும் நாய் போல இந்தப் பூர்விகமான கலாசாரத்தை நாங்களும் தொடர்ந்து அநுசரிக்காமல் இதற்கு ஆசைப்பட்டுத் தவித்து வருகிற பிறரும் அநுசரிக்க விடாமல் தடுக்கும் மனப்பான்மை இங்கு இருக்கிறது. நூறு வருஷங்களுக்கு முன் ஃப்ரெடரிக் மாக்ஸ் முல்லர் ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து வேதங்களையும் உபநிஷதங்களைய்ம் அச்சிட்டுப் பதிப்பிக்கத் தொடங்கிய போது, தாங்கள் அழிய விட்டுக் கொண்டிருக்கிற ஒன்றை அக்கறையோடு பதிப்பிக்கிற அந்த அந்நியனைப் பாராட்டாமல், ‘ஒரு நீசன் வேதங்களைப் பதிப்பிப்பதாவது’ என்று இங்கே ஆத்திரமாக எதிர்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தியர்களில் சுவாமி விவேகானந்தரும், மகரிஷி தேவேந்திரநாத தாகூரும் தான் மாக்ஸ் முல்லரைத் துணிந்து அவரது பணிக்காக மனமாரப் பாராட்டினார்கள் அன்றைக்கு.”

“இருக்கலாம். ஆனால் இன்றைய நிலைமை மாறியிருக்கக்கூடும். முன்னைப் போல அவ்வளவு மோசமாக இராதென்று நினைக்கிறேன்.” –

சிறிது காலம் பொறுத்துத் தன் தந்தையின் மனம் அதை ஏற்கிற பக்குவம் பார்த்து மீண்டும் இதை அவரிடம் தெரிவிப்பதாக ரவி அப்போது அவளுக்கு வாக்களித்தான். அவனது பதில் கமலிக்குத் திருப்தியளித்தது.

வசந்தி பம்பாய்க்குப் புறப்பட்டுச் சென்ற பின் கமலிக்கு மனம் விட்டுப் பழகுகிற சிநேகிதி என்று வேறு யாரும் சங்கரமங்கலத்தில் கிடைக்கவில்லை. காமாட்சியம்மாளின் வெறுப்புக்கும் சம்மதமின்மைக்கும் எதிர்ப்புக்கும் இடையே அவளிடமிருந்தே – அவளை மானஸீக குருவாகக் கொண்டே பலவற்றைக் கற்றுக் கொண்டாள் கமலி. நடுநடுவே அந்த வீட்டில் சில வேதனைக்குரிய சம்பவங்கள் நடந்தாலும் அது கமலி வரையில் தெரிந்து அவள் மனம் வருந்தாமல் சர்மாவும் ரவியும் பார்த்துக் கொண்டார்கள்.

இதற்கிடையில் காமாட்சியம்மாளின் பிறந்தகம் இருந்த கிராமத்திலிருந்து அவளுக்குப் பெரியம்மா முறை ஆகவேண்டிய ஒரு வயதான விதவைப் பாட்டி கோவில் திருவிழாவுக்காகச் சங்கரமங்கலம் வந்து சேர்ந்திருந்தாள். சிவன் கோயில் திருவிழாவுக்காக ஒரு வாரமோ, பத்து நாளோ தங்கி விட்டுப் போவது பாட்டியின் உத்தேசமாக இருந்தது. பாட்டி பரம வைதீகம். துணி மணிகள் ஜெபமாலை அடங்கிய கம்பளி மடிசஞ்சியோடு தன் கையாலேயே கிணற்றில் தண்ணீர் தூக்கிக் கொள்வதற்குத் தேங்காய்க் கமண்டலமும் கயிறும் கூடக் கையோடு கொண்டு வந்திருந்தாள் அந்தப் பாட்டி.

ஓர் இளம் வயசு வெள்ளைக்காரியை அந்த வீட்டில் பார்த்ததும் பாட்டி ஒரு சிறு கலகத்தையே மூட்டிவிட முயன்றாள்.

“இதென்னடீ காமு! யாரோ வெள்ளைக்காரியை வீட்டிலே தங்க வச்சிண்டிருக்கே? இதெல்லாம் நம்ம குலம் கோத்திரத்துக்கு அடுக்குமோடீ? நான் எப்படி மனசு துணிஞ்சு இனிமே இங்கே தங்கறது அம்மா?” – என்று பாட்டி காமாட்சியம்மாளைக் கேட்டாள்.

“என்ன பண்றது பெரியம்மா? எனக்கும் சுத்தமாப் பூண்டோடு இதெல்லாம் பிடிக்கலே. நீங்களே இந்தப் பிராமணரைக் கேளுங்கோளேன்… அப்பவாவது இவருக்கு உறைக்கறதான்னு பார்க்கலாம்” – என்று காமாட்சியம்மாளிடமிருந்து பாட்டிக்குப் பதில் கிடைத்தது. காமாட்சியம்மாள் புரிந்து கொண்டிருந்தபடி, அந்த வீட்டில் சர்மா, ரவி, பார்வதி, குமார் எல்லாருமே கமலியின் கட்சி. காமாட்சியம்மாள் மட்டும் இதிலே தனியாகக் கமலியை எதிர்த்து வந்தாள் என்றாலும் தன் எதிர்ப்பை அவளால் வெளிகாட்ட முடியாமலிருந்தது. இப்போது இந்தப் பெரியம்மாவுன் வரவு அந்த எதிர்ப்பை வெளிகாட்டப் பயன்பட்டது. பாட்டிகளுக்கே உரிய நச்சரிப்புக் குணத்தோடு ரவியிடம், குமாரிடம், பார்வதியிடம் என்று ஒவ்வொருவரிடமாக இதைக் கிளப்பிப் பார்த்தாள் அந்தப் பாட்டி. அந்த வீட்டில் காமாட்சியம்மாளைத் தவிர வேறு யாரும் கமலி விஷயமாகப் பாட்டியிடம் பிடி கொடுத்துப் பேசவே இல்லை. கடைசியாக சர்மாவிடமே கேட்டாள் பாட்டி. அதையும் வீட்டில் வைத்துக் கேட்காமல் சிவன் கோவில் ரிஷப வாகனப் புறப்பாட்டின் போது கோவில் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் சர்மாவிடம் இதைக் கேட்டாள் பாட்டி.

“எல்லா சாஸ்திரமும் தெரிஞ்சவாளே இப்பிடிப் பண்ணினா என்ன செய்யறது? இந்தக் கட்டைலே போற வயசுலே எனக்கு இப்படியெல்லாம் தீட்டுப் படணுமோ?” –

“அவளாலே உங்களுக்கு ஒரு தீட்டும் வந்துடாது. இந்த ஆசார அனுஷ்டானங்களைப் பொறுத்தவரை அவ நம்மை எல்லாம் விடப் படுசுத்தம்! கவலைப்படாம நீங்க பாட்டுக்கு இருங்கோ…” என்றார் சர்மா.

“அதெப்படி முடியும்? நம்ம மனசறிஞ்சே…” என்று விடாமல் மேலும் ஏதோ தொண தொணத்தாள் பாட்டி.

“சௌகரியப் படாட்டா வேறே எங்கே தங்கணுமோ தாராளமா அங்கே போய்த் தங்கிக்கலாம் நீங்க…” – என்று தன் வாயால் முந்திக் கொண்டு சொல்லி விடாமல் பாட்டியே அவள் வாயால் அதை சொல்லட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தார் சர்மா.

“நான் சங்கர் சுப்பன் ஆத்துலே போய்த் தங்கிக்கலாம்னு பார்க்கிறேன்.”

“நீங்களே இப்படிச் சொல்றப்போ நான் உங்களைப் போக விடமாட்டேன்னா தடுக்க முடியும்? அப்புறம் உங்க இஷ்டம்” – என்று அந்த உரையாடலை முடிக்க வேண்டிய இடத்தில் கச்சிதமாக முடித்தார் சர்மா. பாட்டி புறப்பட்டுப் போய் விட்டாள். ஆனால் காமாட்சியம்மாளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

“இருபது வருஷமா ப்ரம்மோத்ஸ்வத்துக்கு வந்து இந்தாத்துலே தங்கிண்டிருந்த பெரியம்மாவை ஒரு நிமிஷத்திலே எடுத்தெறிஞ்சு பேசித் துரத்தி விட்டுட்டேளே? எங்காத்து மனுஷாள்னா உங்களுக்கு அத்தனை எளக்காரமோ? புதுசு புதுசா யார் யாரோ இங்கே வந்து மினுக்கறாங்கறதுக்காகப் பழைய பந்துக்களைத் துரத்தணுமா இப்பிடி?” –

“நான் ஒண்ணும் யாரையும் துரத்தலை! அவளா வந்து ‘என் ஆசாரத்துக்கு இனிமே இங்கே ஒத்துக்காது. நான் சங்கர சுப்பனாத்துக்குப் போலாம்னு பார்க்கறேன்’னாள். அப்புறம் நான் என்ன பண்ண முடியும்? ‘இல்லே! நீங்க கண்டிப்பாய்ப் போகக்கூடாது. இங்கே தான் தங்கணும்’னு அவ கால்லே விழுந்து என்னைக் கெஞ்சச் சொல்றியா? அவளே ‘நான் போகணும்’னா; சரி! உங்க இஷடம்னேன்.” –

“ஊரெல்லாம் போய் என் தலையை உருட்டப் போறா? ஏற்கெனவே ஊர்லே உங்க தலை உருண்டுண்டிருக்கிறது போறாதுன்னு இதை வேற பண்ணியிருக்கேன்…”

சர்மா இதற்குப் பதில் பேசவில்லை. பெண்களுடன் பேசும்போது ஓர் எல்லையில் ஆண்கள் மௌனத்தைக் கடைப்பிடிப்பது அந்தப் பூசலை ஒரு கலகமாக நீடிக்க விடாமல் தடுக்க உதவும் என்பது சர்மாவின் நம்பிக்கை.

ஆனால் கமலியின் பொருட்டு அவளை மையமாக வைத்து இப்படி ஒரு குடும்பக் கலகம் நடந்தது என்பதை அவளை அறிய விடாமல் பார்த்துக் கொண்டார் சர்மா.

“நீ பண்ற கூத்தாலேதான் இப்பிடியெல்லாம் நடக்கறது. இப்பிடி எங்க பெரியம்மா வயித்தெரிச்சலை நீ ஏண்டா கொட்டிக்கணும்?” – என்று ரவியைச் சண்டைக்கு இழுத்துப் பார்த்தாள் காமாட்சியம்மாள்.

“நான் யார் வயித்தெரிச்சலையும் கொட்டிக்கலே அம்மா! உங்க பெரியம்மா அவளாப் புறப்பட்டுப் போனா அதுக்கு யார் என்ன பண்ண முடியும்? கமலி உன்னைத் தெய்வமா மதிச்சுப் பேசறா… நீதான் அநாவசியமா இப்போ அவ வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறே” என்றான் ரவி.

“ஆமாண்டா! இவ ஒருத்தி வந்து என்னைத் தெய்வமா மதிக்கலேன்னு தான் நான் ராப்பகலாத் தவிச்சுண்டிருந்தேன். போடா போக்கத்தவனே…”

“எங்கேம்மா போகச் சொல்றே. மறுபடியும் பாரிஸுக்கு உடனே புறப்பட்டுடட்டுமா?”

காமாட்சியம்மாள் ஏதோ காரியமிருப்பது போல் பேசாமல் உள்ளே போய்விட்டாள்.

கமலியின் படிப்பு மட்டும் தடங்கள் இல்லாமல் சர்மாவிடம் தொடர்ந்தது. அன்று ஆனந்தவர்த்தனரின் தொனியோலோகம் பற்றியும், தொனிக்கும், வக்ரோக்திக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றியும், கமலி சர்மாவிடம் கேட்டுக் குறிப்பு எழுதிக் கொண்டிருந்தாள். அவள் நுணுக்கமாக ஒவ்வொன்றாய்க் கேட்பது பற்றி மகிழ்ந்த சர்மா,

“சொல்லிக் கொடுக்க ஆளில்லாமே இதெல்லாம் எனக்கே கொஞ்சம் கொஞ்சமா மறந்து போக ஆரம்பிச்சாச்சு. நல்ல வேளையா, நீ வந்து கேக்கறதாலே நானும் இதெல்லாம் ஞாபகப்படுத்திக்கறேன். அறிவுக் களஞ்சியமாகவும் கலாச்சாரச் சுரங்கமாகவும் இருக்கிற சமஸ்கிருத மொழிக்கு இப்படி ஒரு நிலை இந்தத் தேசத்திலே ஏற்படும்னு மகான்கள் கூட நினைச்சுப் பார்த்திருக்க மாட்டா அம்மா…”

“பல ஐரோப்பிய மொழிகளின் தாயான லத்தீனுக்கு ஐரோப்பாவில் இன்று என்ன கதி ஏற்பட்டிருக்கிறதோ அது தான் இந்தியாவில் இன்று உங்கள் சமஸ்கிருதத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. புராதனமான லத்தீன் மொழி சர்ச்சுக்கள், மத ஸ்தாபனங்கள், வைதீகச் சடங்குகளுக்கான மொழியாக மட்டும் இன்று எஞ்சி நிற்பது போல் தான் சமஸ்கிருதமும் உங்கள் நாட்டில் எஞ்சி நிற்கிறது. ஆனால் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மிகமிகப் பழைமையான சமஸ்கிருதம், கிரீக், லத்தீன் மூன்றிலும் சமஸ்கிருதமே மூத்தது என்று பல உலகறிந்த மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.”

லத்தீன் மொழியையும் சமஸ்கிருத மொழியையும் அவள் ஒப்பிட்டு விளக்கிய விதம் சர்மாவுக்குப் பிடித்திருந்தது. எட்டு, ஒன்பது, பத்து என்னும் மூன்று எண்களுக்கான பதங்களும் முதல் பத்து எண்களுக்கான மற்றப் பதங்களும் லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் மூன்றிலும் ஒரே விதமாக இருப்பதையும் சர்மாவுக்கு எழுதிக் காட்டி விளக்கினாள் அவள். அஷ்ட, நவ, தச என்ற மூன்று பதங்களையும் போலவே ஒலிக்கக்கூடிய பதங்கள், எட்டு, ஒன்பது, பத்து எண்களுக்கு அந்த மூன்று மொழிகளிலும் ஒரே விதமாக அமைந்திருப்பதைக் கண்டு சர்மா விவரிக்க முடியாத மகிழ்ச்சியை அடைந்தார். ஒன் என்ற ஆங்கிலப் பதத்தையும் ஒன்று என்ற தமிழ்ப் பதத்தையும் கூட ஒப்பிட்டு விளக்கினாள் அவள். அங்கே தங்கியிருக்கிற அந்த ஓராண்டுக்குப் பயன்படட்டும் என்று ரவி சென்னையிலுள்ள பிரிட்டிஷ் கவுன்ஸில் லைப்ரரியிலும், அமெரிக்கன் சென்டர் லைப்ரரியிலும், போஸ்டல் மெம்பர்ஷிப் எடுத்திருந்தான். புத்தகங்களைத் தபாலில் பெற்றுக் கொள்ள வசதியாயிருந்தது. ஓரிரு மாதங்களுக்கு இடையே ரவியும், கமலியும் அவ்வப்போது மேற்கொண்ட சில பிரயாணங்கள் ஐந்து நாட்கள் பத்து நாட்கள் என்று ஆயின.

அப்படி ஐந்து நாட்கள் பத்து நாட்கள் ரவியும் கமலியும் ஊரிலில்லாமல் போகும்போது வீடே வெறிச்சோடிப் போனாற் போலாகிவிடும் சர்மாவுக்கு. கமலியும் ரவியும் ஊரிலிருந்த நாட்களில் ஒன்றில் இறைமுடிமணி தம்முடைய பகுத்தறிவுப் படிப்பகத்தில் கமலி தமிழில் பேசும் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்திற்கு நல்ல விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாலும், ஒரு பிரெஞ்சுக்காரி தமிழில் பேசப் போகிறாள் என்பதாலும் நிறையப்பேர் திரளாக வந்திருந்தார்கள்.

இறைமுடிமணி கமலியை அறிமுகம் செய்து வைத்தும் பேசும்போது ஒளிவு மறைவின்றி அவள் விரைவில் விசுவேசுவர சர்மாவின் மருமகள் ஆகப் போகிறாள் என்னும் பொருள் தொனிக்கப் பேசியிருந்தார். அந்தக் கலப்புத் திருமணத்திற்கு அட்வான்சாகப் படிப்பகத்தின் சார்பில் வாழ்த்துக் கூறுவதாகவும் சொல்லியிருந்தார்.

‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற தலைப்பில் தமிழ் மொழியைப் பற்றிய அறிவுப்பூர்வமான மொழியியல் கணிப்பை விவரித்தாள் கமலி. அவள் பதினைந்து நிமிஷங்களுக்கும் மேலாகத் தமிழிலே பேசியது கூட்டத்துக்குப் பெரிதும் வியப்பை அளித்தது. கூட்டத்தில் கமலிக்கு மாலையணிவிக்க விரும்பிய இறைமுடிமணி அங்கு வந்திருந்த பெண்கள் பகுதியிலிருந்து ஒருவரைத் தேடி அவர்கள் எழுந்திருந்து வரத் தயங்கிக் கூசியதால், ஒருவிநாடி யோசித்து விட்டு, ‘வெண்ணெய் பக்கத்திலே இருக்கறப்ப நெய்க்கு ஏன் தவிக்கணும்? இந்தாங்க! நீங்களே அவளுக்கு இந்த மாலையைப் போடுங்க தம்பி….?’ என்று ரவியிடமே மாலையை நீட்டினார். அவனும் சிரித்துக் கொண்டே மாலையை அவர் கையிலிருந்து வாங்கிக் கமலிக்குச் சூட்டினான். இந்த நிகழ்ச்சி அக்ரகாரம் முழுவதும் பரவியபோது சீமாவையரின் பழைய துஷ்பிரசாரம் சூடு பிடிக்க இதுவும் உதவியது. அவரும் தயாராகக் காத்திருந்தவர் போல இதைப் பயன்படுத்திக் கொண்டார். இறைமுடிமணி, விசுவேசுவர சர்மா இருவர் மேலும் சீமாவையருக்கு இருந்த கோபத்தை ஒரே சமயத்தில் காட்டுவதற்கு இது பயன்பட்டது. சங்கர மங்கலத்தில் மட்டுமின்றி அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் பரவுகிறாற்போல் வதந்திகளைக் கிளப்பி விட்டார் சீமாவையர்.

“ஏண்டா நான் கேள்விப்பட்டது நிஜந்தானா? அந்தத் தேசிகாமணி நாடார் நடத்தின கூட்டத்திலே அத்தனை பேருக்கும் முன்னே கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமில்லாமே அவளோட நீ மாலை மாத்திண்டயாமே?” –

ரவிக்கு இதைக் கேட்டுச் சிரிப்பு வந்தது. சிரித்தால் அம்மாவின் கோபம் அதிகமாகி விடப் போகிறதே என்று அடக்கிக் கொண்டு,

“வேறே யாரும் பொம்மனாட்டிகள் முன்வரத் தயங்கினதாலே அவர் என்னைக் கூப்பிட்டுக் கமலிக்கு மாலை போடச் சொன்னார். போட்டேன்.” –

“தடி மாடா வளர்ந்திருக்கிற, அத்தனை பெரிய வயசு வந்த பொண்ணுக்கு நாலுபேர் முன்னாடி மாலை போடுன்னு ஒருத்தன் சொன்னா நீ போடலாமோ?”

“போட்டா என்ன தப்பு அம்மா?’

“போடா… உங்கிட்ட பேசிப் பிரயோஜனமில்லை. விதண்டாவாதம் பேசியே பழக்கமாப் போச்சுடா நோக்கு.”

அது தான் சமயமென்று ரவி அம்மாவிடமிருந்து நழுவினான்.

இது நடந்து இரண்டு மூன்று நாட்கள் கழித்துப் பகல் பன்னிரண்டு மணிக்குத் தபாலில் அந்த வீட்டுக்கு இரண்டு ரிஜிஸ்தர் கடிதங்கள் வந்தன. அவற்றில் ஒன்று சர்மாவின் பெயருக்கும் மற்றொன்று கமலியின் பெயருக்கும் இருந்தன. சர்மாவும், கமலியும் கையெழுத்துப் போட்டுத் தங்கள் தங்கள் பெயருக்கு வந்திருந்த பதிவுத் தபால்களை வாங்கினார்கள். சர்மாவுக்குத் தன் பெயரில் பதிவுத் தபால் வந்தது ஆச்சிரியமில்லை. கமலிக்கு யார் ரிஜிஸ்தர் கடிதம் அனுப்பியிருக்கக்கூடும் என்பது தான் மிகப் பெரிய புதிராக இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 23தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 23

அத்தியாயம் 23 வேணு மாமா ரவியைக் கேட்டார். “எக்ஸ்பிரஸ் டெலகிராமாக் குடுத்தியோ? ஆர்டினரியாக் குடுத்தியோ? இங்கே அவ சீக்கிரம் வந்தாகணும்.” “எக்ஸ்பிரஸ்தான் மாமா. எப்படியும் நாளைக் காலம்பரத்துக்குள்ளே வசந்திக்குக் கிடைச்சு அவ பம்பாயிலிருந்து இங்கே புறப்பட்டுடலாம்?” சர்மா கையோடு பஞ்சாங்கம் கொண்டு

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4

அத்தியாயம் 4   மூச்சு இரைக்க இரைக்க ஓடி வந்த வேகத்திலிருந்து நின்று நிதானித்துக் கொண்டு சர்மாவின் பெண் பார்வதி அப்போது வசந்தியிடம் பேசுவதற்குச் சில விநாடிகள் ஆயின.   “வசந்தி அக்கா…! அப்பா ரவி அண்ணாவுக்கு எழுதிக் குடுத்த ‘ஏரோகிராமை’

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 8தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 8

  அத்தியாயம் 8   வசந்தி மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே வந்த போது காமாட்சியம்மாள் மணைப் பலகையைத் தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு புடவைத் தலைப்பையே விரித்துச் சமையல்கட்டு முகப்பில் ஒருக்களித்தாற்போலப் படுத்துக் கொண்டிருந்தாள். மாமி தூங்கிக் கொண்டிருக்கிறாளோ என்று முதலில்