Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 17

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 17

அத்தியாயம் 17

கமலி தன் மனத்தின் உருக்கம் தெரியும் குரலில் வசந்தியிடம் சொன்னாள் –

“உங்களுடைய பழைய கோவில்கள் கலைச் சுரங்கங்களாக இருக்கின்றன. ஆனால் உங்கள் நாட்டு மக்கள் இப்போது சினிமாத் தியேட்டர்கள் என்னும் புதிய ‘கோவில்களின்’ வாசலில் போய் பயபக்தியோடு நிற்க ஆரம்பித்து விட்டார்கள். பக்தி இடம் மாறிவிட்டது. கோயில்களும் தெய்வங்களும் தியேட்டர்களில் சிகரெட் புகையின் நெடி குமட்டும் புதிய சூழலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறார்கள் இன்று.” –

“சரியாகச் சொல்கிறாய்! இங்கே கோயிலிலிருப்பதைவிட இதே நேரத்திற்கு இவ்வூர் ஆற்றங்கரையில் இருக்கும் டூரிங் தியேட்டரில் உள்ள கூட்டம் தான் அதிகம் கமலி.” –

“மாக்ஸ் முல்லர் கால முதல் கிழக்கு நாடுகளின் கலாசாரத்தில் மேற்கே ஒரு மயக்கமும் பிரியமும் தோன்றி விட்டது. ‘ஸேக்ரட் புக்ஸ் ஆஃப் தெ ஈஸ்ட்’ என்று வேதங்களையும் உபநிஷதங்களையும் மாக்ஸ் முல்லர் ஆக்ஸ்போர்டில் வால்யூம் வால்யூமாக மொழி பெயர்த்து அச்சிட ஆரம்பித்தது தொடங்கி மேற்கேயிருந்து கிழக்கே திரும்பிப் பார்த்தல் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அதே சமயம் கிழக்கே இருந்த நீங்கள் உங்களுடையவற்றை மறந்து ஆச்சரியத்தோடு மேற்கே திரும்பிப் பார்க்கவும் மேற்கின் லௌகீக வாழ்வை வியக்கவும் விரும்பவும் ஆரம்பித்து விட்டீர்கள்.”

“உண்மை தான் கமலீ! ஆனால் இன்றைய இந்தியா முன்னைவிட இன்னும் லௌகீகமாகிவிட்டது. சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய வறுமை கலாசார வறுமை தான்! வெறும் வயிற்றுப் பசியைவிடக் கலாச்சாரப் பசி மிகவும் பொல்லாதது.” –

“ஆமாம்! கலாசார வறுமையும், ஆன்மீக வறுமையும் பயங்கரமானவை. ஒரு நாட்டைப் படுகுழியில் வீழ்த்தக் கூடியவை.”

– இந்த உரையாடல் பூமிநாதபுரம் கோயிலிலிருந்து திரும்பும்போது அவர்களுக்குள்ளேயே நடந்தது. கமலி ஒரு முழுமையான இந்துவாக – இந்தியப் பெண்ணாக நடந்து கொள்ளுவதில் காட்டும் தாகத்தையும் தவிப்பையும் ஒவ்வொரு கணமும் கூர்ந்து கவனித்தாள் வசந்தி.

“பிறவியிலேயே இந்துக்களாகிய எங்களுக்கு இருப்பதை விடப் புதிதாக உங்கள் ஊரிலிருந்து வருகிற ஹரே கிருஷ்ணா இயக்கத்தினருக்கு அதிக இந்துமதப் பற்று இருப்பது ஆச்சரியமான விஷயம்.”

“சீர்திருத்தம் – மறுமலர்ச்சி என்ற பெயரில் ஒரு புனிதமான பழைய கலாச்சாரத்தின் கங்கைப் பெருக்கிலிருந்து அவசர அவசரமாகக் கரையேறிச் சுளீரென்று வெயில் காய விரும்புகிறீர்கள் நீங்கள், நாங்களோ ஆவலோடு ஓடி வந்து அந்தப் புனிதமான கங்கைப் பெருக்கில் நீராடக் காத்திருக்கிறோம். இந்துவாகப் பிறப்பவன் மட்டுமே முழு இந்துவாக இருப்பதில்லை. எவன் ஒருவன் முழு இந்துவாகக் கனிந்து வாழ்கிறானோ அவனே முழு இந்துவாக இருக்க முடியும். இந்து மதம் என்பது ஒரு மதம் மட்டுமில்லை. மிகவும் பண்பட்ட ஒரு வாழ்க்கை முறை.”

“கங்கையில் யார் தேடிப்போய் நீராடுகிறானோ அவனைத்தான் அது நனைக்க முடியும் கமலி!”

“கங்கை என்பது உங்கள் தேசத்தின் வடக்கே ஓடும் ஒரு நதி மட்டுமில்லை. அது இந்தியா முழுவதும் பரவியுள்ள ஒரு பவித்திரத் தன்மையின் பொதுப்பெயர் என்றே நான் நினைக்கிறேன். அதன் வியாபகமே உங்கள் நாட்டில் ஒரு கலாச்சார ஐக்கியமாக இருந்திருக்க வேண்டும். தேசத்தின் பல பகுதிகளில் முதலில் கங்கை நீரைக் கொணர்ந்து ஊற்றித்தான் புதிய ஏரிகள் குளங்கள் வெட்டியதாக உங்கள் வரலாறே சொல்கிறது. இமயமலை முதல் கன்னியாகுமரி வரை எந்த இந்து இறந்தாலும் கடைசியாக ஒரு துளி கங்கைத் தண்ணீரைப் பருகி விட்டு இறப்பது என்பது வேறு உங்களிடையே வழக்கமாயிருக்கிறது.”

இதைச் செவிமடுத்ததும் தனக்குச் சொந்தமான ஒரு புனித வரலாற்றை அந்நியர் ஒருவர் உணர்ந்து சொல்லக் கேட்கும் சிலிர்ப்பை வசந்தி அப்போது அடைந்தாள்.

அடுத்த வாரம் அவள் பம்பாய் போகிறவரை கமலியோடு இப்படிப் பல மாலை வேலைகளைச் செலவிட்டாள். மனம் விட்டு அவளோடு உரையாடி மகிழ்ந்தாள்.

அவள் பம்பாய் போன இரண்டாம் வாரமோ மூன்றாம் வாரமோ எதிர்பாராத விதமாய் ஸ்ரீ மடத்திலிருந்து அவசரமாக ஒரு தந்தி வந்து காமாட்சியம்மாளுடன் சர்மா – அங்கே புறப்பட்டுப் போயிருந்தார். அவர் திரும்ப ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்று தெரிந்தது. கமலியும், ரவியும், குமாரும், பார்வதியும் தான் சங்கரமங்கலத்திலிருந்தார்கள். காமாட்சியம்மாள் வீட்டுப் பொறுப்பைப் பார்வதியிடம் விட்டிருந்தாள். மடிக் குறைவாகச் சமையலறையை உபயோகப் படுத்தாமல் கூடத்து மேடையிலேயே எல்லாம் செய்து முடித்துக் கொள்ள வேண்டும் என்று பாருவிடம் புறப்படுவதற்குமுன் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தாள் காமாட்சியம்மாள்.

சர்மாவும், காமாட்சியம்மாளும் புறப்பட்டுப் போன மூன்றாம் நாளோ, நான்காம் நாளோ – யாரும் எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று அந்த வீட்டில் நடந்து பொருள் சேதமும் மிகுந்த மனக் கஷ்டமும் உண்டாக்கியது. திட்டமிட்டு உண்டாக்கிய நஷ்டம்தான் – யார் அதைச் செய்திருக்கலாம் என்பதும்கூடப் புரிந்தது. ஆனால் நேரடியாக அந்த ஆள் மட்டும் அகப்படவேயில்லை. வீட்டுப் பின்புறம் தோட்டத்திற்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் நடுவே ஒரு பெரிய வைக்கோற் படைப்பு இருந்தது. அதிகாலை மூன்று மணி சுமாருக்கு யாரோ அதற்கு நெருப்பு வைத்து விட்டு ஓடியிருந்தார்கள். நெருப்புப் பற்றும் போதும் யாரும் அதைப் பார்க்க நேரவில்லை.

எல்லாரும் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம். பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி கொல்லைப் பக்கம் எழுந்திருந்து போனவள் தான் முதலில் தீ எரிவதைப் பார்த்து விட்டுக் கூப்பாடு போட்டாள்; பாட்டி பார்த்ததே சிறிது தாமதமாகத்தான். அதற்குள் காற்று வாக்கில் அது மாட்டுத் தொழுவத்திற்கும் பரவி விட்டது. மாடியிலிருந்த ரவியும், கமலியும், கீழ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பார்வதியும் குமாரும் எழுந்து போவதற்குள் அக்கம் பக்கத்தார் ஓடிவந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துத் தீயை அணைக்கத் தொடங்கியிருந்தார்கள். காற்று வேறு இருந்ததால் தீ சுலபத்தில் அணைவதாக இல்லை. மாட்டுத் தொழுவம் மேற்கூரை இடிந்து விழுந்து அப்படியே அமுக்கி விட்டதன் காரணமாகக் கட்டாமல் விடப்பட்டிருந்த இரண்டொரு கன்றுக் குட்டிகளைத் தவிர மற்றவை உள்ளேயே தீயிலிருந்து வெளியேற முடியாமல் தீனமாகக் கதறிக் கொண்டிருந்தன. பெரிய வைகோற் படைப் பாகையினால் அனல் வீட்டு முற்றம் வரை தகித்தது. வீட்டுக் கொல்லைப்புற நிலைப் படிக்கும் முற்றத்துக்கும் நடுவிலிருந்த துளசிச் செடியின் ஒரு பகுதி வாடிக் கருகி விட்டது. மாட்டுத் தொழுவம் மட்டும் அப்படியே அமுங்காமல் பக்க வாட்டில் சரிந்திருந்தால் துளசி மாடத்தின் மேலேயே அது சாய்ந்திருக்கும்.

பத்துப் பன்னிரண்டு பேர் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கவும், வாளியில் வாங்கி எரியும் தீப்பிழம்புகளில் வாரி இறைக்கவுமாக இடை விடாமல் ஓடியாடி முயன்றும் மேல் காற்றின் காரணமாகத் தீயும் முழு மூச்சுடன் மனிதர்களை எதிர்த்துப் போராடியது. மாட்டுக் கொட்டத் தீயை அணைத்து எரிந்து கொண்டிருந்த போதே விழுந்து விட்ட கனமான கூரையை அகற்றி மாடுகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று ரவியும் அக்கம் பக்கத்தாரும் ஆனமட்டும் முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இறுதியில் மாட்டுக் கொட்டத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சி பயனளிக்காமல் வைக்கோற் படைப்புத் தீயோ, மாட்டுத் தொழுவத் தீயோ அக்கம் பக்கத்து வீட்டுக்குப் பரவி விடாமல் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அடுத்தடுத்து எல்லா வீட்டுக் கொல்லைப் புறங்களிலும் வைக்கோற் படைப்புகளும், கூரைச் சார்ப்பு இறக்கிய மாட்டுக் கொட்டகைகளும் இருந்தன. பயத்துக்கு அதுதான் காரணம்.

அதிகாலை ஐந்து மணிக்கு அக்ரகாரத்திலிருந்து போனவர்கள் யாரோ தகவல் சொல்லி இறைமுடிமணி பத்து பன்னிரண்டு ஆட்களுடன் ஓடிவந்தார். தீயை அணைக்கும் முயற்சியில் அவரும் அவரோடு வந்தவர்களும் சேர்ந்து கொண்டனர்.

பலபலவென்று விடிகிற நேரத்துக்குத்தான் தீ கொஞ்சம் அடங்கி கட்டுப்பட்டது. தரையோடு ஒட்டியிருந்த கீழ்ப்பகுதியைத் தவிர வைக்கோற் படைப்புப் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகி விட்டது. காமாட்சியம்மாள் கோபூஜை செய்து வந்த பசுமாடு உள்பட மூன்று மாடுகள் தீயில் சிக்கி இறந்து விட்டன. அதில் ஒன்று சினைமாடு.

அப்பாவும், அம்மாவும் ஊரில் இல்லாத போது இப்படி நடந்து விட்டதில் ரவிக்கு வருத்தம் தான். ஆனால் இது தானாக நேர்ந்ததில்லை. திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு ஒரு சிறிதும் சந்தேகமில்லை. வந்திருந்தவர்களில் வேணு மாமா உள்பட அத்தனை பேரும், “ஏதோ நம்ம போறாத காலம். எந்தத் தெய்வத்துக்கு எது பொறுக்கலையோ” – என்றுதான் சொன்னார்கள்.

இறைமுடிமணி மட்டும், “மனுசன் கொழுப்பெடுத்துப் போயிச் செய்யிற கெடுதல்களுக்கு எங்கேயோ எதையோ உண்டாக்கி ஏன் செய்யாத குத்தத்தை இல்லாதது மேலே போடறிங்க. திராணி இருந்தாத் தீ வச்சது யாருன்னு கண்டு பிடியுங்க. இல்லாட்டித் தலையிலே முட்டாக்குப் போட்டுக் கிட்டுப் போங்க” – என்று கோபமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ரவியும், இறைமுடிமணியும் சீமாவையர் மேல் சந்தேகப்பட்டார்கள். எல்லாரையும் போல் சீமாவையரும் நன்றாக விடிந்தபின் ரவியிடம் வந்து துக்கம் கேட்டு விட்டு, “என்ன தெய்வக் குத்தமோ தெரியலே – இல்லேன்னா பிராம்மணன் வீட்டிலே பசுமாடும் துளசிச் செடியும் தீப்பிடிச்சு எரியுமோ?” – என்று உருகிப் புலம்பினார். சீமாவையரின் இந்த வார்த்தைகளில் இருந்த குறும்பும் – இந்த நிகழ்ச்சியைப் பற்றி இனிமேல் அவரும் அவருடைய கையாட்களும் எப்படிப் பிரச்சாரம் செய்வார்கள் என்பதும் சேர்ந்தே தெரிந்தன. ரவி அவரிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அவராக வந்தார் – பேசினார், போனார். தாம் வந்து கேட்கவில்லை என்று ஆகிவிடக்கூடாதே என்பதற்காகவே வந்து தலையைக் காட்டி விட்டுப் போன ‘அலிபி’ மாதிரி இருந்தது அவரது வரவு.

ரவி சந்தேகப்பட்டது போலத்தான் நடந்தது. அடுத்த இரண்டு மூன்று தினங்களில் “மடத்துச் சொத்தை நாஸ்திகனுக்கு வாடகைக்கு விட்டார். வீட்டிலே ஆசாரக் குறைவான மனுஷாளைச் சேர்த்துண்டார், தெய்வத்துக்கே பொறுக்கலே தீப்பிடிச்சுது” என்கிற பாணியில் சீமாவையர் அக்கிரகாரம் முழுவதும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார். சிலரிடம் அந்தப் பிரச்சாரம் நன்கு எடுபடவும் செய்தது.

காமாட்சியம்மாள் கிளம்பிப் போன பின் ஒருநாள் கூட விட்டுப் போகாமல் அதிகாலையில் நீராடிச் சிரமப்பட்டுப் பதினெட்டு முழம் புடவையை மடிசார் வைத்துக் கட்டிக் கொண்டு கோபூஜையும், துளசி பூஜையும் செய்து வந்த கமலி தீப்பிடித்த தினத்தன்று பூஜை செய்வதற்குப் பசு இல்லாமல் திக்பிரமை பிடித்தது போல் இருந்தாள். நல்ல வேளையாகத் துளசி ஒரு பக்கம் பட்டுப் போயிருந்தாலும் மறுபகுதியிலும் அடிப்பக்கமும் தளிர்த்து விடும் என்பதற்கு அடையாளமான பசுமை இருந்தது. தீப்பிடித்த தினத்தன்றும் அவள் துளசி பூஜையை நிறுத்த வில்லை.

இந்த அசம்பாவிதம் நடந்த இரண்டு நாட்களில் சர்மாவும், காமாட்சியம்மாளும் ஊர் திரும்பியிருந்தனர். இது தெரிந்ததும் சர்மா ஓரிரு கணங்கள் ஒன்றும் பேசாமல் இருந்தார். அப்புறம் அப்படி ஒன்று நடந்ததை மறந்தது போல் சகஜமாக இருக்கத் தொடங்கி விட்டார் அவர். அப்பாவின் இந்த இயல்பை ரவி ஒரு பழைய இதிகாச நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு நினைத்தான்.

ஒரு சமயம் ராஜரிஷி ஜனகரும், அவரை ஒத்த பெரிய அறிஞர்கள் சிலரும் மிதிலை நகருக்கு வெளியே ஓர் அழகான அமைதியான தனியான சோலை சூழ் இருக்கையில் அமர்ந்து வேதாந்த தத்துவ விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு இவ்வுலக நினைவே இல்லை. ஈடு இணையற்ற அறிவுத் திளைப்பு.

அப்போது யாரோ ஓர் ஆள் பரபரப்பாக ஓடிவந்து “மிதிலை நகரம் தீப்பற்றி எரிகிறது”… என்று ஜனகரிடம் கூறினானாம். அறிவு மயமான உரையாடலில் திளைத்திருந்த ஜனகர் சிறிதும் பரபரப்படையாமல் பதறாமல், “எரிந்தால் இழக்கும் படியான மீட்க முடியாத எந்த உயர்ந்த பொருளையும் நான் மிதிலையில் விட்டு விட்டு வரவில்லையே?” – என்று பதிலிறுத்தாராம். ‘மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் ஜனகன் மதி’ – என்று மகாகவி பாரதியார் இந்த எல்லையற்ற அறிவுத் திளைப்பின் உச்ச நிலையை விவரித்து வியந்திருக்கிறார். ராஜ பதவியில் ஜனகருக்கு இருந்த பற்றற்ற நிலையையும் அதே சமயம் ஞானத்தில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாட்டையும் இந் நிகழ்ச்சியால் தெரிந்து கொள்ள முடிந்தது.

வீட்டில் வைக்கோற் படைப்பு எரிந்து ஏற்பட்ட இழப்புகளைக் கேட்ட போது அப்பா ஜனகர் மாதிரி இருந்ததைக் கண்டான் ரவி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 24தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 24

அத்தியாயம் 24 ஊருக்குத் திரும்பும் போது கமலிக்கும், ரவிக்கும் மனம் நிறைவாக இருந்தது. ‘சொல்லாமற் செய்வர் பெரியோர்’ – என்பது போல் தர்ம சங்கடமான எதைப் பற்றியும் சொல்லாமல், கேட்காமல் அநுக்கிரகம் செய்து அனுப்பியிருந்தார் பெரியவர். அவரது அந்தப் பரந்த கருணையையும்

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 15தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 15

அத்தியாயம் 15 ஒரு புராதனமான வைதீகக் கலாசாரம் நிறைந்த தென்னிந்திய வீடும் அதன் அசௌகரியங்களும், முரண்டுகளும் மிக்க குடும்பத் தலைவியும் பழைய தழும்பேறிய பழக்க வழக்கங்களும், கமலியைப் போன்ற ஓர் ஐரோப்பியப் பெண்ணுக்குப் பெரிய இடையூறுகளாக இருக்கும் என்று சர்மா எதிர்பார்த்ததற்கு

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 7தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 7

அத்தியாயம் 7   மறுபடியும் இரண்டாவது தடவையாக ரவி குரல் கொடுத்தபோது, “எல்லாம் தெரியறதுடா? சித்தே இரு… குளிக்காமேக் கொள்ளாமே உள்ளே வந்துடாதே… தோ வரேன்” என்று சமையலறைக்குள் இருந்து பதில் வந்தது.   உள்ளே அம்மா தயிர்ப்பானையில் மத்தால் வெண்ணெய்