Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 14

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 14

அத்தியாயம் 14

சர்மா சிறிது தயக்கத்திற்குப் பின் மீண்டும் ரவியைக் கேட்டார்:

“நீ சொல்றே. அதை நான் கூட ஒத்துண்டுடறேன்னே வச்சுக்கோ. உங்கம்மா ஒத்துக்கணுமேடா? அவளுக்கு இன்னம் முழுவிவரமும் தானாவும் தெரியலே. தெரிவிக்கப்படவும் இல்லே. அதுக்குள்ளேயே ஆயிரம் சந்தேகப்படறா… உங்கம்மாவுக்குப் பயந்து முதல்லே உன் லெட்டர் கிடைச்சதும் நானும் வேணுமாமாவுமாகக் கலந்து பேசி உன்னையும் கமலியையும் அவர் வீட்டு மாடியிலேயே தங்க வச்சுடலாம்ன்னு கூட ஆரம்பத்திலே யோசிச்சோம்.” –

“இப்போ புரியறது அப்பா! நாங்க ரெண்டு பேருமாத் தொடர்ந்து இங்கேயே தங்கியிருக்கிறது சாத்தியமான்னுதானே நீங்க கேக்கறேள்?”

“நீ இங்கே தங்கிக்கிறதைப் பத்திப் பேச்சே இல்லே; இது உன் வீடு. உன் அப்பா உன் அம்மா உன் மனுஷா உனக்கும் அம்மாவுக்கும் பெரிசாச் சண்டை எதுவும் வந்துடப் போறதில்லே. கமலி தங்கிக்கிறதைப் பத்தி தான் இப்போ பிரச்சனை. உனக்கு ஆட்சேபணை இல்லேன்னாக் கமலியை மட்டும் வேணு மாமா வீட்டு மாடியிலே தங்க வச்சுடலாம். அவாளே காஸ்மாபாலிடன். ரொம்ப நாகரிகம்கிறதாலே அவா வீட்டிலே இவளாலே அவாளுக்கு எந்தச் சிரமமும் வராது.”

“அப்படிப் போறதா இருந்தாக் கமலியை மட்டும் தனியா அவா வீட்டுக்குப் போகச் சொல்ல முடியாதுப்பா, இட் வோண்ட் லுக் நைஸ். நானும் கூடவே போயிட வேண்டியதுதான்.”

“அவ போறதைப்பத்தி ஒண்ணுமில்லே. ஆனா நீயும் அவளோட சேர்ந்து போயிட்டாத்தான் அதுக்குக் கண்ணு மூக்குக் காது வச்சு ஊர்ல வீண் வம்பு வதந்தியெல்லாம் கிளம்பும்…”

“என் அபிப்பிராயம் கமலியும் இங்கேயே நம்கூட இருக்கலாம்கிறதுதான். அம்மாவாலே சிரமங்கள் ஏற்பட்டாலும் கமலியாலே அதைச் சமாளிச்சுக்க முடியும்…”

“நீ சொல்றே…. ஆனாக் கமலியும் என்ன நினைக்கிறாள்னு எனக்குத் தெரிய வேண்டாமா?”

“இதுலே ஒளிவு மறைவு எதுக்கு? என்னோட வாங்கோ! இப்ப அவளையே கேட்டுடலாம்…”

“நான் எதுக்குடா? நீயே கேட்டுச் சொல்லு… போறும்…”

“இல்லே! காரணமாத்தான் சொல்றேன். நீங்களும் வாங்கோ… அப்பத்தான் சந்தேகத்துக்கு இடமில்லாமே அவளை நீங்க புரிஞ்சுக்க முடியும்.”

சர்மா தயங்கினார்.

“யோசனை ஒண்ணும் வேண்டாம்! இப்ப என்னோட வாங்கோ சொல்றேன்”-

என்று கூறியபடியே ரவி எழுந்திருந்து நடந்தான். சர்மா வேறு வழியில்லாமல் பின் தொடர்கிறவரைப் போல் தயங்கித் தயங்கி அவனைப் பின் தொடர்ந்தார்.

சர்மாவும் ரவியும் மாடிக்குப் போனபோது கூடக் கமலியும் பார்வதியும் தொடர்ந்து துர்க்கா சப்த ஸ்துதி ஸ்தோத்திரத்தைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

“பாரு! நீ கொஞ்சம் கீழே போய் இரும்மா… நாங்க கொஞ்சம் பேசிட்டு அப்புறமா உன்னைக் கூப்பிடறோம்” – என்று சொல்லிப் பாருவைக் கீழே அனுப்பினார் சர்மா.

ரவிக்கு அப்பா அவளை அனுப்பியது பிடிக்க வில்லை.

“ஏன்? அவ இருந்தா என்ன? அவபாட்டுக்கு இருந்துட்டுப் போறா. அவளை ஏன் கீழே போகச் சொல்றேள் இப்போ?”

“இல்லே… அவ அப்புறம் வந்துக்கட்டும். நீ பேசாம இரு…”

ரவி இதற்கு மேல் தன் கோரிக்கையைத் தந்தையிடம் வற்புறுத்தவில்லை.

கமலி அவர்கள் உள்ளே வரக்கண்டதும் எழுந்து நின்றவள் இன்னும் நின்று கொண்டேதான் இருந்தாள்.

“இவளை நான் கேட்டா எனக்காகப் பதில் சொல்றதா நீங்க நினைச்சுப்பேள். உங்க சந்தேகத்தை நீங்கள் நேரே கேட்டுடுங்கோ” என்று சர்மாவிடம் சொன்னான் ரவி.

சர்மாவும் ரவியும் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர். கமலியையும் உட்காரச் சொல்லி ரவியே வேண்டினான். ஆனால் அவள் உட்காரவில்லை.

“உட்காரேம்மா… உங்கிட்டக் கொஞ்சம் பேசலாம்னு வந்திருக்கோம். எவ்வளவு நாழிதான் நின்னுண்டேயிருப்பே? உன் மரியாதை எனக்கும் புரியறதும்மா. இப்போ நானே சொல்றேன். நீ கொஞ்சம் உட்கார்ந்துக்கோ…”

“பரவாயில்லே. சொல்லுங்கள், நிற்பது எனக்கு ஒன்றும் சிரமமாகப் படவில்லை…”

“உனக்கு எதுவும் சிரமமா இருக்கோ இல்லையோ. நீ நிக்கறது எங்களுக்குக் கஷ்டமாயிருக்கும்மா…”

“கஷ்டம் ஒன்றுமில்லை, சொல்லுங்கள்…”

“மனசுலே ஒண்ணும் ஒளிவு மறைவில்லாமே எதுவும் தப்பா எடுத்துக்காமே நான் கேக்கறதுக்கெல்லாம் நீ பதில் சொன்னியானா எனக்குப் பெரிய உபகாரமா இருக்கும் அம்மா! நான் ரவியைத்தான் உன்னைக் கேக்கச் சொன்னேன். அவன் நீங்களே கேட்டுக்கோங்கோன்னு என்னைக் கொண்டு வந்து இங்கே நிறுத்திட்டான்.”

“…”

“ஏம்மா நீ சாயங்காலம் சந்தி விளக்கு ஏத்தி வச்சதைப் பத்திக் காமாட்சி, பாருகிட்ட என்னென்னமோ இரைஞ்சிண்டிருந்தாளே, அதுலே உனக்கு ஒண்ணும் மனசு வருத்தம் இல்லியே? தயங்காமல் நீ எங்கிட்ட நிஜத்தைச் சொல்லலாம்.”

“வருத்தப் படுவதற்கு இதில் என்ன இருக்கிறது? அவர்கள் பாருவைக் கண்டித்தார்கள். பாருவை அவர்கள் கண்டிக்கக் கூடாதென்று நான் எப்படிச் சொல்ல முடியும்? ஒரு வேளை பாருவைக் கண்டிக்காமல் அவர்கள் என்னையே நேருக்கு நேர் கூப்பிட்டுக் கண்டித்து இருந்தால் கூட நான் அதற்காக வருத்தப் பட்டிருக்க மாட்டேன். அவர்கள் உரிமையோடு என்னை ஏன் கண்டிக்க மாட்டேனென்கிறார்கள் என்பது தான் என் வருத்தமே தவிர ஏன் கண்டிக்கிறார்கள் என்பது வருத்தமில்லை. ரவியின் அம்மா உரிமை எடுத்துக் கொண்டு என்னை நேருக்கு நேர் கண்டித்திருந்தால் நான் இன்னும் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பேன்…”

– இத்தனை அடக்கமும் விநயமும் நிறைந்த ஒரு பதிலை அப்போது அவளிடமிருந்து சர்மா எதிர்பார்க்க வில்லை. அதனால் சிறிது தயக்கத்துக்கும், மௌனத்துக்கும் பின் மேலும் அவர் அவளைக் கேட்டார்:-

“ஒரு வருஷத்துக்கும் மேலே இங்கே இருக்க நேரலாம்னு கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். இந்த வீட்டிலேயே உன் சௌகரியங்களுக்கு ஒத்து வருமா? ஒத்து வருமானால் நீயும் ரவியும் தாராளமாக் இங்கேயே இருந்துக்கலாம். இல்லையானா இதைவிட சௌகரியமாகவும், தனியாகவும் வேற இடம் உங்களுக்காகப் பக்கத்திலேயே ஏற்பாடு பண்ண என்னாலே முடியும்.”

“இங்கே எனக்கு எந்த அசௌகரியமும் இருக்கிறதாகப் படவில்லை. ஒரு வீடு என்பது சௌகரியங்களும் அசௌகரியங்களும் சேர்ந்ததாகதான் இருக்கும். தனியாகச் சௌகரியங்களே நிறைந்ததும், தனியாக அசௌகரியங்களே நிறைந்ததுமான ஒரு வீடு உலகம் முழுவதும் தேடினாலும் கூடக் கிடையாது.”

“அப்படியில்லேம்மா! ஒத்துப் போகாத மனுஷா ஒருத்தர் இருந்தாலும் தினம் விடிஞ்சு எழுந்திருந்தாச் சண்டையும் பூசலுமான்னா இருக்கும்? சண்டையும் பூசலுமாகவே இருந்தா எப்போ மத்த காரியமெல்லாம் பாக்கறது?”

“நீங்கள் சொல்வதைக் கேட்டு நான் ஆச்சரியப்படுகிறேன். இதுவரை எந்த ஒரு சண்டையும் பூசலும் இங்கு என் வரையில் ஏற்பட்டதே கிடையாது. இந்த வீட்டில் தொடர்ந்து இருப்பதையே நான் விரும்புகிறேன். காமாட்சியம்மாளைப் பல விஷயங்களில் என் குருவாக நான் வரித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.”

“உன்னைச் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளும் விருப்பமோ சம்மதமோ காமாட்சியம்மாளுக்கு இல்லாமலிருக்கலாம்.”

“துரோணரின் விருப்பத்தையும் சம்மதத்தையும் எதிர்பார்த்தா ஏகலைவன் அவருக்குச் சிஷ்யனானான்? சிரத்தையும் பக்தியும் மட்டும் இருக்குமானால் எந்தக் குருவையும் வழிபட்டு பாவித்துக் கொண்டே கற்கவேண்டியதைக் கற்று விட முடியும்.”

“அப்படியானால் இதைவிட மிகவும் சௌகரியமான தனிமையான வேறு எந்த இடத்திலும் வசிக்க நீ விரும்பலையா?”

“நிச்சயமாக இல்லை. ‘ராமன் இருக்கும் இடம் அயோத்தி’.. என்பதற்காக உங்கள் நாட்டில் பழமொழி உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கும் அப்படித்தான். வசதிகளிலும், சௌகரியங்களிலும் ஏற்கனவே நான் அலுத்துப் போய்விட்டேன்…”

கீழ்த்திசைக் கலாசாரத்திலும் நூல்களிலும் தத்துவங்களிலும், அவளுக்கு இருந்த ஆழமான பிடிப்பை அவள் பதில்களிலிருந்து சர்மாவால் ஊகித்துக் கொள்ள முடிந்தது.

“சரி! உன்னை அநாவசியமாக இப்பிடி எல்லாம் கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்யறதுக்காக என்னை மன்னிச்சுடும்மா. இந்த வீட்டில் தவறுதலாகவோ, எங்கள் அறியாமையாலோ, உனக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் தயவு பண்ணி அதை பொருட்படுத்தாதே. உனக்கு வசதிக் குறைவுகள் ஏற்பட்டு நீ மனசு நோகும்படி ஆயிடப் படாதேன்னுதான் முன்னெச்சரிக்கையா இதெல்லாம் உங்கிட்டக் கேட்டேன்… தப்பா நெனைச்சுக்காதேம்மா….”

“நீங்கள் ரவியின் தந்தை. பெரிய ஸ்காலர். இந்தியக் கலாச்சாரத்தின் பூரணமான தன்மைகள் நிரம்பியவர். உங்களை நான் என்றும் எதற்காகவும் தப்பாக எடுத்துக்கொள்ளும் நிலைமை உருவாகாது – உருவாகக் கூடாது.”

சர்மா ரவியின் முகத்தைப் பார்த்தார். ‘இப்போது உங்களுக்குத் திருப்திதானா?’ என்று பதிலுக்கு முகக்குறிப்பினாலேயே கேட்பது போல் அவரை ஏறிட்டுப் பார்த்தான் ரவி.

“சரிம்மா! நான் கீழே போய்ப் பாருவை அனுப்பறேன்”… என்று கூறி விட்டு மாடியிலிருந்து கீழே புறப்பட்டார் சர்மா. “நீங்க போங்கோ அப்பா! இதோ ஒரு நிமிஷத்திலே வந்துடறேன்” என்றான் ரவி.

“மொள்ள வா… அவசரம் ஒண்ணுமில்லே” என்று அவனுக்குப் பதில் சொல்லியவாறே படியிறங்கினார் சர்மா. இந்தியக் கலாச்சாரத்தின் அழுத்தமான பழம்பெரும் தன்மைகள் நிறைந்த ஒரு சூழலில் அதன் பல அசௌகரியங்களைப் பொறுத்துக் கொண்டும் கூட அவள் வாழத் தயாராயிருப்பது சர்மாவுக்குப் புரிந்தது.

கமலியிடமிருந்து இவ்வளவு விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்ட பின் இனி அவளை ‘வேணு மாமா வீட்டில் தங்கிக் கொள்ள முடியுமா’ என்று விசாரிப்பதே முறையில்லை என்று அவருக்குத் தோன்றிவிட்டது. கமலியைப் பற்றி ரவி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அவர் இப்போது உணர்ந்து கொண்டார். காமாட்சியம்மாளின் முரண்டுகளால் என்னென்ன அசந்தர்ப்பங்கள் ஏற்படுமோ என்று தான் அவர் இப்போது உள்ளூறத் தயங்கிக் கொண்டிருந்தார். அந்த முரண்டுகளால் கூடக் கமலி பாதிக்கப்பட் மாட்டாள் என்று இப்போது அவருக்குத் தோன்றியது.

விளக்கு ஏற்றி வைத்த சம்பவத்தால் காமாட்சியம்மாள் பார்வதியிடம் பேசுவது போல் தன்னைக் குத்திக் காட்டிப் பேசியதைக் கமலி எங்கே மனத்தில் வைத்திருந்து ரவியிடம் சொல்லிக் கலகம் மூட்டி விடுவாளோ என்று எண்ணியிருந்த சர்மாவுக்கு அவளது அடக்கம் முற்றிலும் புதுமையாயிருந்தது. காமாட்சியம்மாளின் பேச்சை ஒரு பெரிய தவறாகவே அவள் மனதில் வைத்துக் கொள்ளவில்லை என்பதோடு வேறு காரணங்களுக்காகக் காமாட்சியம்மாள் மேல் அவளுக்கு ஏற்பட்டிருந்த மதிப்பும், மரியாதைகளும் இதனால் ஒரு சிறிதும் குறையவில்லை என்பது தெரிந்தது.

கமலியால் பிரச்னைகள் எதுவும் வராது என்று தெரிந்தாலும் – காமாட்சியம்மாளாலும் ஊராராலும் விரோதிகளாலும் இது சம்பந்தமாகச் சில பிரச்னைகள் எழக்கூடும் என்ற பயம் இன்னும் அவர் மனத்தில் இருக்கவே செய்தது.

மாடியிலிருந்து ரவி கீழே இறங்கி வந்தான். மறுபடியும் அப்பாவும் பிள்ளையும் கிணற்றடிக்குப் போகவில்லை. கமலியைப் பற்றி மேலே விவாதிக்கவும் இல்லை.

மறுநாள் வேணு மாமாவிடம் கார் இரவல் வாங்கிக் கொண்டு ரவியும் கமலியும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்குப் போய் ஒரு வாரம் சுற்றிப் பார்க்கும் உத்தேசத்துடன் புறப்பட்டிருந்தார்கள்.

உதவிக்கும் துணைக்குமாகக் கிளீனர் மாதிரி யாராவது ஒரு வேலைக்காரப் பையனை அழைத்துக் கொண்டு போகுமாறு அப்பாவும், வேணு மாமாவும் எவ்வளவோ கூறியும் ரவி கேட்கவில்லை.

“நானும் கமலியுமா – மாத்தி மாத்தி ஓட்டிப்போம். ரெண்டு பேருமே ஆட்டோமொபைல் எக்ஸ்பர்ட்ஸ். எந்த ‘ட்ரபிள்’ வந்தாலும் நாங்களே சமாளிச்சுப்போம்” – என்றான் அவன்.

ஒரு வாரம் என்று புறப்பட்டிருந்தாலும் அவர்கள் திரும்பிச் சங்கரமங்கலம் வரப் பத்து நாட்கள் வரை ஆகி விட்டன. பத்து நாள் வீடு வெறிச்சோடிப் போயிருந்தது.

மறுபடி அவர்கள் இருவரும் காரில் ஊர் திரும்பிய ஒரு பிற்பகலில் – காமாட்சியம்மாள் வீட்டுக் கூடத்தில் சாவகாசமாக அமர்ந்து தன்னை மறந்த லயிப்போடு வீணையில் ‘தாயே யசோதா’வின் தோடியைப் பெருகச் செய்து கொண்டிருந்தாள். முதலில் காரிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்த கமலி கூடத்தில் வீணையும் கையுமாக அமர்ந்திருந்த காமாட்சியம்மாளைப் பார்த்ததும் சாட்சாத் சரஸ்வதி தேவியையே எதிரே பார்த்தது போல் பயபக்தியுடன் அப்படியே பிரமித்து நின்று விட்டாள்.

அந்த வீடே அப்போது தோடியிலும் கிருஷ்ண கானத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கமலிக்கு அது ஒரு மெய்சிலிர்க்கச் செய்யும் அனுபவமாக இருந்தது. வீணையோடு அமர்ந்திருந்த கோலத்தில் காமாட்சியம்மாளின் முகத்திலிருந்த அபூர்வமான தேஜஸ் அவளை மிகவும் கவர்ந்தது. அவள் கண்களை அந்தத் தோற்றம் கவர்ந்தது என்றால் செவிகளை அந்த வீணாகானம் என்னும் மாதுர்ய மழை கவர்ந்திழுத்தது.

“என்னம்மா? இப்பத்தான் ஊர்லேயிருந்து வந்தியா? ஏன் இப்படிப் பிரமைபிடிச்ச மாதிரி மலைச்சுப் போய் நின்னுட்டே?” – என்று தற்செயலாக அங்கு வந்த சர்மா வினவிய பின் தான் அவளுக்குத் தன் நினைவே வந்தது. அதற்குள் கையில் காரிலிருந்து எடுத்து வந்த பிரயாணப் பெட்டிகளோடு ரவியும் வீட்டினுள் நுழைந்திருந்தான். கமலியோ வீணையோடு தரையில் பட்டுப் பாயில் அமர்ந்திருந்த காமாட்சியம்மாளின் தோற்றத்திலிருந்த கவனத்தை இன்னும் மீட்க முடியாமல் அதிலேயே மனம் இலயித்துப் போயிருந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 16தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 16

அத்தியாயம் 16 இறைமுடிமணி அவர்களைத் தம்முடைய புதுக் கடைக்கு வரவேற்று உட்கார வைத்துச் சந்தனம் கல்கண்டு கொடுத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் புறப்படுவதற்கு முன், “கொஞ்சம் இப்பிடி வர்றியா விசுவேசுவரன்? உங்ககிட்ட ஒரு நிமிஷம் தனியாப் பேசணும்” –

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 27தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 27

அத்தியாயம் 27 கமலி சங்கரமங்கலத்துக்கு வந்ததிலிருந்து அவள் சம்பந்தப்பட்ட அவர் பழகியிருக்கிற மனிதர்களைப் பற்றிய விவரங்களைச் சர்மாவிடமும், ரவியினிடமும், விசாரித்து அறிந்த பின் சாட்சியமாகப் பயன்படக் கூடியவர்கள் எனத்தாம் கருதிய பட்டியல் ஒன்றை முதலில் தயாரித்துக் கொண்டார் வேணு மாமா. சந்திப்பதற்காக

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 10தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 10

  அத்தியாயம் 10   ரவிக்கும் கமலிக்கும் வேணுமாமா வீட்டில் நிகழ்ந்த விருந்து முடியும்போது இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். எஸ்டேட் உரிமையாளர் சாரங்கபாணி நாயுடுவிடம் சொல்லி ரவியையும் கமலியையும் மலை மேலுள்ள அவரது பங்களாவில் தங்க அழைக்கும் படி