Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 13

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 13

அத்தியாயம் 13

காமாட்சியம்மாள் நேரடியாகக் கமலியைக் கடிந்து கொள்ளவில்லை என்றாலும் பார்வதியை அவள் கண்டித்துக் கொண்டிருந்த வார்த்தைகளின் வேகம் கமலியையும் பாதித்தது. சமையலறைக்குள் தோசைக்கு அரைத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள் பார்வதியைப் பார்த்ததும் முதல் கேள்வியாக “ஏண்டி! உன்னை சந்தி விளக்கை ஏத்தி வாசப்பெறையிலே வைக்கச் சொன்னா ஏத்தியாச்சுன்னு வந்து சொல்றதில்லையா? நீ பாட்டுக்கு ஏத்தி வச்சுட்டு ஊர் சுத்தப் போயிடறதோ” என்று கண்டித்து இரைந்திருக்கிறாள்.

“நீ எப்ப சொன்னேன்னே எனக்குத் தெரியாதும்மா? நான் வீட்டுக்கே இப்பத்தான் வரேன். நீ சொன்னதை நான் கேக்கவும் இல்லை. சந்தி விளக்கு ஏத்தவும் இல்லே” என்று பார்வதி இரைந்து பதில் சொல்லியது காதில் விழுந்து மாடியில் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த கமலி கீழே இறங்கி வந்தாள்.

“நீங்க சொல்ற போது பார்வதி வீட்டிலேயே இல்லை. உங்கள் குரலைக் கேட்டு நான் தான் வந்து விளக்கேற்றி வைத்தேன்” என்று கமலி சொல்லி அதே சொற்களை இன்னும் உரத்த குரலில் அம்மாவுக்குக் காது கேட்கும்படி மறுபடி எடுத்துச் சொன்னாள் பார்வதி.

காமாட்சியம்மாள் இதைக் கேட்டு நேருக்கு நேர் கமலியைக் கடிந்து கொள்ளவில்லை. பார்வதியைத் தான் மேலும் கடிந்து கொண்டாள். ஆனால் அவள் பார்வதியைக் கண்டித்த சொற்களிலேயே கமலிக்கு மன வேதனை உண்டாக்கும் அர்த்தம் தொனித்தது.

“ஆத்து மனுஷா விளக்கேத்தணும்டீ! அப்பதான் லட்சுமி வீட்டிலே தங்குவா. வந்தவா போனவாள்ளாம் விளக்கேத்தறாப்பில விட்டுட்டு நீ பாட்டுக்கு ஊர் சுத்தப் போயிடறதாடீ?”

-அம்மா இப்படி எடுத்தெறிந்தாற் போல் பேசினது பார்வதிக்கே பிடிக்கவில்லை. மென்மையான இதயம் படைத்த கமலிக்கும் அது சற்றே உறைத்தது. இந்த சமயத்தில்தான் ஆற்றங்கரைக்குச் சந்தியா வந்தனம் செய்யப் போயிருந்த சர்மா திரும்பியிருந்தார். அப்போது அங்கே என்ன நடந்து கொண்டு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. எந்தத் தகராறு உருவாகாமல் தவிர்ப்பதற்காக ஆற்றங்கரைக்குப் புறப்படுவதற்கு முன் கமலி தான் விளக்கேற்றி வைத்தாள் என்பதை அவர் காமாட்சியம்மாளிடம் கூறாமல் போயிருந்தாரோ அந்தத் தகராறே மெல்ல உருவாகியிருந்தது இப்போது.

தன் மகனின் நட்பை நம்பி அவனிடம் தன்னைப் பூரணமாக ஒப்படைத்துக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து அவனோடு புறப்பட்டு வந்திருக்கும் ஒருத்தியைக் காமாட்சி இப்படிப் புண்படுத்தி விட்டாளே என்று சர்மாவுக்கு வருத்தமாக இருந்தது.

“நடக்கக் கூடாதது ஒண்ணும் நடந்துடலை. எதுக்காக இப்பிடிக் கூப்பாடு போட்டு இரையரே? பேசாம உள்ளே போய் உன் காரியத்தைப் பாரு” – என்று காமாட்சியம்மாளைக் கண்டித்துவிட்டுப் பார்வதியின் பக்கம் திரும்பி, “ஏய் பாரு! நீ அவளை மாடிக்குக் கூட்டிண்டு போ…” – என்று கமலியைச் சுட்டிக் காட்டினார். பார்வதியும் கமலியும் மாடிக்குப் போனார்கள். அவர்கள் சென்றபின் மேலும் காமாட்சியம்மாளைக் கண்டித்தார் அவர்:

“உனக்கு உன் பெண்ணைக் கண்டிக்கிறதுக்குப் பாத்தியதை உண்டு. அடுத்தவா மனசு புண்படறாப்ல பேசறதுக்கு நீ யாரு? நீ பேசினது கொஞ்சங் கூட நன்னா இல்லே. வீடு தேடி வந்திருக்கிறவாளைப் பேசற பேச்சா இது?”

“நான் பேசலே. ஊரே பேசிண்டிருக்குங்கறது உங்களுக்குத் தெரியாது போலிருக்கு.”

-காமாட்சியம்மாள் போருக்குக் கொடி கட்டுகிறாள் என்பது சர்மாவுக்குப் புரிந்து விட்டது. இது ஒரு பெரிய சண்டையாகி மாடியிலிருக்கும் கமலியின் கவனம் மறுபடியும் கவரப்பட்டு இரசாபாசமாவதை அவர் விரும்பவில்லை.

“பேசாமே உள்ளே போய் உன் கைக் காரியத்தைப் பாரு” – என்றார் சர்மா. அவர் அதட்டிய குரலுக்குக் கட்டுப்பட்டுக் காமாட்சியம்மாள் உள்ளே சென்றாள்.

சீக்கிரமோ, அல்லது சிறிது காலந் தாழ்த்தியோ அந்த வீட்டில் ஏற்படக்கூடும் என்று அவர் எதிர்பார்த்த ஒரு பிரச்சனை இன்றே இப்பொழுதே விளைந்து விட்டது. விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படாமல் இருக்கும்போதே காமாட்சியம்மாள் சண்டைக்குக் கிளம்பியிருந்தாள். அதட்டியும் மிரட்டியுமே அதிக நாள் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க முடியாது என்பது சர்மாவுக்குத் தெரிந்துதான் இருந்தது.

மாமியாரும் மருமகளுமாக இல்லாமலே காமாட்சிக்கும் கமலிக்கும் மாமியார் மருமகள் சண்டையை விடக் கடுமையான சண்டைகள் வந்துவிடும் போலிருந்தது. இவற்றை எல்லாம் உத்தேசித்துதான் ரவியிடம் ஓரளவு விரிவாகப் பேசி விடலாம் என்று ஆற்றங்கரைக்குப் புறப்படும்போது அவனைத் தம்மோடு அழைத்துச் செல்வதற்காகத் தேடியிருந்தார் அவர். ரவியின் திட்டம் என்ன? அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை எல்லாம் அவனிடமே மனம் விட்டுப் பேசிவிடத் தீர்மானித்திருந்தார் அவர்.

அந்த விஷயத்தைத் தள்ளிப் போடலாம் என்று நினைக்கவும் முடியாதபடி நெருக்கடி உருவாகியிருந்தது. ஊர் உலகம் என்று வெளியிலிருந்து நெருக்கடிகளும் நிர்ப்பந்தங்களும் இன்னும் வந்துவிடவில்லை. என்றாலும் வீட்டுக்குள்ளேயே எதிர்பார்த்த நெருக்கடிகள் இன்று தொடங்கியிருந்தன. சீமாவையரின் கேள்வி, படித்துறையில் ஜபம் பண்ணிக் கொண்டிருந்த வைதிகர்களின் விசாரணை எல்லாமாகச் சேர்ந்து இந்தப் பிரச்சனை நாளைக்கோ, நாளன்றைக்கோ ஊரளாவியதாகவும் ஆகக்கூடும் என்பதற்கு அறிகுறிகளாகத் தோன்றின.

தம்முடைய மனைவி காமாட்சியம்மாள் அப்படிப் பேசியதற்குக் கமலியிடம் அவள் சார்பில் தானாவது மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றியது அவருக்கு. அதற்காக மாடிப்படி ஏறியவரின் செவிகளில் மங்கலமான துர்க்கா சப்த ஸ்துதியின் அழகிய ஸ்தோத்திரம் விழுந்தது.

“ஸர்வ மங்கல மாங்கல்யே ஸிவே சர்வார்த்த ஸாதிகே
ஸ்ரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.”

பார்வதி முதலில் சொல்ல அதைத் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தாள் கமலி. கொஞ்சங்கூடக் குழப்பமில்லாத தெளிவான உச்சரிப்பில் கமலி அதைத் திருப்பிச் சொல்லியதைக் கேட்டுச் சர்மாவுக்கு மெய் சிலிர்த்தது. இப்படிப் பாந்தமாய் அழகாக ஸ்தோத்திரம் சொல்லுகிறவள் விளக்கேற்றியதால் லட்சுமி வீட்டில் தங்கமாட்டாள் என்று சாடியிருந்த காமாட்சியம்மாள் மேல் இப்போது மீண்டும் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. மேலே ஏறிச் செல்லாமல் நின்று கொண்டிருந்த படியிலிருந்தே அதை மேலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் சர்மா. தேசம், ஆசாரம், கலாசாரம், இனம், நிறம் இவற்றையெல்லாம் மானிட ஜாதியின் ஒற்றுமைக்குப் பயன்படுத்தாமல் இடையூறுகளாகவும் தடைகளாகவும் பண்ணிவிட்டவர்கள் மேல் அந்த விநாடியில் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. மேலே படியேறிப் போய்க் கமலியிடம் பேசலாமா, அவர்கள் தனிமையைக் கலைக்காமல் அப்படியே திரும்பிக் கீழே போய் விடலாமா என்று படியிலேயே தயங்கினார் சர்மா. காமாட்சியம்மாள் நடந்து கொண்டதற்கு மாற்றாகக் கமலியிடம் இரண்டு வார்த்தை பேசி மன்னிப்புக் கேட்டாலொழிய மனம் நிம்மதியடையாது போலிருந்தது அவருக்கு.

மேலே படியேறி மாடிக்குள் பிரவேசித்தார் அவர். கமலியும், பார்வதியும் சொல்லிக் கொண்டிருந்த ஸ்தோத்திரத்தை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார்கள்.

“காமாட்சிக்கு வயசாச்சு! யாரைப் பேசறோம், என்ன பேசறோம்னு தெரியாமே முன் கோபத்திலே ஏதாவது பேசிடுவா. அதெல்லாம் ஒண்ணும் மனசிலே வச்சுக்க வேண்டாம். உடனே மறந்துடறது நல்லது….”

தன்னை நோக்கித் தனக்காகத்தான் அவர் இதைச் சொல்கிறார் என்பதை அடுத்த கணத்திலேயே கமலி புரிந்து கொண்டாள். இதற்கு அவளிடமிருந்து என்ன பதில் வருகிறது என்பதை எதிர்பார்க்காமலே அவர் விடுவிடுவென்று படியிறங்கிக் கீழே போய்விட்டார். அவர் மனம் அப்போது ஒரேயடியாகக் கலங்கிப் போயிருந்தது. பேசாமல் முதலில் யோசித்திருந்தபடி கமலியையும் ரவியையும் அவர்கள் சங்கரமங்கலத்தில் இருக்கிற வரை வேணுமாமா வீட்டிலேயே தங்கவைத்து விடலாமா என்று கூட இப்போது தோன்றியது அவருக்கு. இதிலிருந்து வீட்டிலும், ஊரிலும் எந்தெந்த முனையில் எப்படி எப்படிப் பிரச்சனைகள் கிளைக்கக் கூடும் என்று நினைத்துப் பார்த்தார் அவர். வெளியே போயிருந்த ரவி வீட்டுக்கு வந்ததும் முதலில் அவனிடம் இந்தப் பிரச்னையைப் பற்றி விரிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டார். ரவியும், கமலியும் தொடர்ந்து வீட்டிலேயே தங்கி இருப்பதைப் பொறுத்து, அவருக்கு ஏற்பட்ட ஒரே ஒரு மனத்தயக்கம் கவலையில்லாமல் வளர்ந்த செல்வக் குடும்பத்துப் பெண்ணான கமலியின் பூப்போன்ற மனம் அடுத்தடுத்து வேதனைப் படும்படியான சம்பவங்கள் அந்த வீட்டில் நடந்து விடுமோ என்பதுதான்.

காமாட்சியம்மாள் என்ன பேசுவாள், எப்படி நடந்து கொள்வாள் என்பதை ஒவ்வொரு கணமும் கண்காணித்துக் கமலிக்கு ஏற்பட இருக்கும் மனத்துன்பங்களைத் தவிர்ப்பது என்பது இயலாத காரியம். இதற்காக என்றே தானோ ரவியோ இருபத்து நாலுமணி நேரமும் வீட்டில் அடைந்து கிடந்து காமாட்சியம்மாளைக் கவனித்துக் கொண்டிருப்பது என்பதும் நடைமுறையில் சாத்தியமாகாத காரியம். கமலியின் மேலுள்ள அனுதாபத்தினாலேயே அவர் இப்போது இப்படி நினைத்தார். பச்சைக் கிளியைக் கூண்டிலடைத்த மாதிரி அவளை அந்த வீட்டின் கடுமையான ஆசார அனுஷ்டானங்களில் சிக்க வைப்பதற்கு அவரே தயங்கினார். கமலியும் ரவியும் சங்கரமங்கலத்தில் வந்து இறங்குவதற்கு முன் அவர் மனத்தில் பல தயக்கங்கள் அலை போதியிருந்தன. அவை வெறும் தயக்கங்களாகத் தான் இருந்தனவே ஒழிய வெறுப்புகளாக இல்லை. கமலி வந்து பழகியபின் அவரைப் பொறுத்தவரை அந்தத் தயக்கங்கள் கூட மெல்ல மெல்ல மாறி உள்ளூறப் பிரியமாக முகிழ்ந்திருந்தது. காரணமும் அர்த்தமும் இல்லாத ஒர் குருட்டுக் காதலாக அது அவருக்குப் படவில்லை. இவன் அவள் மனத்தைக் கவர்ந்ததற்கும் அவள் இவன் மனதைக் கவர்ந்ததற்கும் நியாயமான இயல்பான காரணங்கள் இருப்பதை இப்போது அவர் உணர்ந்தார். அந்நிய தேசத்துக்குப் போய்த் திரும்பும் சராசரி இந்திய இளைஞன் திமிருக்காகவும் ஊரார் வியப்பதற்காகவும் ஒரு வெள்ளைத் தோலுக்குரியவளை உடன் இழுத்துக் கொண்டு வருவதைப் போல் இது இல்லை.

ரவியே கடிதத்தில் எழுதியிருப்பதைப் போல் இது உண்மையிலேயே காந்தருவ சம்பந்தமாகத்தான் இருந்தது. இருவருடைய பிரியங்களிலும், அந்தரங்களிலும் அவருக்குச் சந்தேகம் எதுவும் இருக்கவில்லை. வெறும் உடல் சம்பந்தப்பட்ட பரஸ்பரக் கவர்ச்சி என்று மட்டும் அதை நினைக்க முடியவில்லை. உடலையும் தவிர அறிவுக்கும் ஒத்த உணர்வுகளுக்கும் ஒத்த எண்ணங்களுக்கும் இந்தக் காதலில் அதிக சம்பந்தம் இருப்பது புரிந்தது.

காமாட்சியால் இதை வெறுக்க முடிந்ததுபோல் அவரால் இதை வெறுக்க முடியவில்லை. பூரண ஞானத்தின் கனிவு எந்த மனத்தில் நிரம்பியிருக்கிறதோ, அந்த மனத்தில் மிகவும் கொச்சையான வெறுப்புகளும், தூஷணைகளும் ஒரு போதும் வருவதே இல்லை. எங்கு கொச்சையான வெறுப்புகளும், தூஷணைகளும் நிரம்பியிருக்கிறதோ அங்கே பூரண ஞானம் இருப்பதில்லை. கொச்சையான வெறுப்புகளும் தூஷணைகளும் பூரண ஞானத்தை அழித்து விடுகின்றன. ‘தூஷணம் ஞான ஹீனம்’ – என்பதை அவர் நினைத்தார்.

வெளியே போயிருந்த ரவி திரும்பி வந்தான். வாசல் திண்ணையிலிருந்த சர்மா அங்கேயே அவனை எதிர்கொண்டு தடுத்து உட்கார வைத்து விட்டார்.

“உன்னை அப்பவே ஆத்தங்கரைக்குப் போறப்போ தேடினேன். நீ ஆப்படலே. எனக்குத் தனியாக உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்.”-

“மூணாவது வீட்டு சுந்தரராமன் கூப்பிட்டான், போய்ச் சித்தநாழி பேசிண்டிருந்துட்டு வந்தேன்.”-

“நாம இங்கேயே பேசலாமா? இல்லே மறுபடியும் ஆத்தங்கரைக்கே பொறப்பட்டுப் போலாமா?”

“ஏன்? பொழக்கடைத் தோட்டத்துக் கிணத்தடியிலேயே உட்கார்ந்து பேசலாமே அப்பா!”

“சரி! வா… சொல்றேன்.”

இருவருமாகக் கிணற்றடிக்குப் புறப்பட்டுப் போனார்கள். கிணற்றடி மேடையில் சிமெண்ட் தளம் போட்டிருந்தது. தோய்க்கிற கல்லை ஒரு ஸ்டூல் உயரத்துக்குத் தூக்கிக் கட்டியிருந்ததால் உட்கார வசதியாயிருந்தது. சர்மா அதில் உட்கார்ந்து கொண்டார்.

அதற்கு இணையான உயரத்தில் அருகே இருந்த சிமெண்ட்டுத் தொட்டியின் சுவரில் ரவி உட்கார்ந்து கொண்டான்.

தாம் பேசத் தொடங்குவதற்கு முன் அதற்குப் பயன்படும் சில பூர்வாங்கமான தகவல்களை ரவியிடம் முதலில் விவரிக்கத் தொடங்கினார் சர்மா. கமலியைப் பற்றிய காமாட்சியம்மாளின் சந்தேகங்கள், அவள் அடிக்கடி தம்மிடம் தூண்டித் துளைத்துக் கேட்கும் கேள்விகள், அன்று மாலை கமலி சந்தி விளக்கு ஏற்றி வைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, சீமாவையரின் விசாரிப்பு, படித்துறையில் ஊர் வைதிகர்களின் கேள்விகள் எல்லாவற்றையுன் ஒவ்வொன்றாய் விளக்கமாகச் சொல்லிவிட்டு, அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறான் என்று எதிர்பார்த்து அந்தப் பதிலுக்காகத் தம் பேச்சை நடுவே நிறுத்தினாற் போலச் சிறிது நேரம் நிறுத்தியிருந்தார் சர்மா.

“நீங்க சொல்றதெல்லாம் சரி அப்பா! இதிலே சிலது நான் ஏற்கெனவே எதிர்பார்த்தது தான். இப்போ நான் என்ன பண்ணணும்கறேள்…?”

“என்னைத் தப்பாப் புரிஞ்சுக்காதே! உன்னோட லெட்டர் கிடைச்சப்பவும் அதுக்கப்புறமும் இருந்த கோபமும் குழப்பமும் கூட இப்போ எனக்கு இல்லே, அந்தப் பெண் கமலியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க சிநேகிதத்திலேயும் தப்பு இருக்கிறதாப் படலே. ஆனா உங்கம்மா, ஊர் உலகம் எல்லாரும் இதுக்குக் குறுக்கே இருக்காங்கிறதை நீ மறந்துடப்படாது.”

“நீங்க தப்பாப் புரிஞ்சுக்கல்லேங்கிறதே எங்க பாக்கியம்தான் அப்பா!”

“தப்பாப் புரிஞ்சுக்கல்லைன்னாலும் சூழ்நிலைகளுக்கும் மற்றவர்களின் நிர்ப்பந்தங்களுக்கும் ஊர், உலகத்துக்கும் நான் கட்டுப்பட்டவன்கிறதை நீ மறந்துடாதே….”

“இந்தியாவின் மிகப்பெரிய துரதிருஷ்டமே அதன் பூரண ஞானவான்கள் எல்லாரும் பயந்தாங் கொள்ளிகளாக இருப்பது தான்…”

“அறிவு என்பது வேறு. சுற்றுப்புறத்தோடு ஒத்துப் போவது என்பது வேறு… நான் இதை எனக்காகச் சொல்லலே ரவி! இன்னிக்குச் சாயங்காலம் அவ தானா நல்லது செய்யறதா நெனச்சுண்டு விளக்கேத்தி வைக்கப்போக உங்கம்மா சத்தம் போட்டு இரைஞ்சாளே, அது மாதிரி ஒண்ணொண்ணா நடந்தா வீணா அவ மனசு புண்படுமேன்னுதான் யோசிக்கிறேன்.”

“சரிப்பா… நீங்களே இதுக்கு வேற யோசனை சொல்லுங்கோ. என்ன செய்யலாம்? ஒரு நா இரண்டு நாளோட போற விஷயம் இல்லே இது. இந்தத் தடவை நான் ஒரு வருஷ ‘லீவ்’லே வந்திருக்கேன். இந்தியாவிலே ஒரு காலத்திலே பிரெஞ்சுக் காலனிகளா இருந்து இன்னிக்கு இந்திய யூனியனாயிட்ட பிரதேசங்களிலே பிரெஞ்சுக் கலாசாரமும் இந்தியக் கலாசாரமும் எந்த அளவுக்கு இணைஞ்சிருந்தது என்கிறதை ஆராய்ஞ்சு எழுதறத்துக்காக அவ வந்திருக்கா. அதுக்காக அமெரிக்கன் ஃபவுண்டேஷன் ஒண்ணு அவளுக்கு உதவி செய்யறது. ஒரு வருஷம் இங்கே இருக்கப் போறா. நானும் ஏறக்குறைய இதே மாதிரி ஒரு ‘அஸைன்மெண்ட்’டிலே தான் வந்திருக்கேன். சங்கரமங்கலத்தை ஹெட் குவார்ட்டர்ஸா வெச்சுண்டுதான் எங்க காரியத்தைச் செய்யறதா வந்திருக்கோம்…”

“எனக்கு ஆட்சேபணையில்லே. ஒரு வருஷம் நீ ஊர்ல தங்கப்போறேங்கிறதைப் பத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம்-”

“பின்னே நீங்க எதைப்பத்திக் கவலைப்படறேள்னு புரியலையே அப்பா?”

“லௌகீகமே தெரியாத ஒரு பழைய காலத்து பொம்மனாட்டியோட ஆதிக்கத்திலே இதே வீட்டில் இருந்துண்டு உங்களாலே நிம்மதியா அதைச் செய்ய முடியுமான்னு தான் கவலைப்படறேன். என் தயக்கமெல்லாம் விருந்தாளியா வந்திருக்கிறவளோட மனசு கொஞ்சமும் நோகப்படாதுங்கறதுதான்.”

“கமலி விருந்தாளி இல்லே. இதுவரை எப்படியானாலும் இனிமே இந்த வீட்டிலே அவளும் ஒருத்தி….”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 11தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 11

  அத்தியாயம் 11   கமலி, நாயுடு தன்னிடம் அளித்த பைனாகுலரை வாங்கிப் பார்த்தாள். பத்திருபது பெரிய யானைகள்…. இரண்டு மூன்று குட்டி யானைகள் – பைனாகுலரில் மிக அருகில் நிற்பது போல் தெரிந்தன. அதிக நேரம் ஓர் ஆச்சரியத்தோடு அதைப்

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 5தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 5

அத்தியாயம் 5   விசுவேசுவர சர்மாவும், இறைமுடிமணியும், பல ஆண்டுகளுக்கு முன் சங்கரமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த தோழர்கள். வாழ்க்கைப் பாதையில் இருவரும் வேறு வேறு திசைகளில் நடந்தாலும் பழைய நட்பு என்னவோ நீடிக்கத்தான் செய்தது. அவர்கள்

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 17தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 17

அத்தியாயம் 17 கமலி தன் மனத்தின் உருக்கம் தெரியும் குரலில் வசந்தியிடம் சொன்னாள் – “உங்களுடைய பழைய கோவில்கள் கலைச் சுரங்கங்களாக இருக்கின்றன. ஆனால் உங்கள் நாட்டு மக்கள் இப்போது சினிமாத் தியேட்டர்கள் என்னும் புதிய ‘கோவில்களின்’ வாசலில் போய் பயபக்தியோடு