Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 12

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 12

 

அத்தியாயம் 12

 

    • சர்மா இறைமுடிமணியை நோக்கிக் கூறினார்: “பேராசை, சூதுவாது, மத்தவங்களை ஏமாத்திச் சம்பாதிக்கிறது இதெல்லாம் முன்னே டவுன் சைடிலே தான் யதேஷ்டமா இருந்தது! இப்போ நம்பளுது மாதிரிச் சின்னச் சின்ன கிராமங்கள்ளேயும் அதெல்லாம் வந்தாச்சு. ஏமாத்திச் சம்பாதிக்கிறது ஒண்ணும் பெரிய தப்பில்லேன்னு நியாயப்படுத்திப் பேசவும் ஆரம்பிச்சுட்டா. பண்ற தப்புக்களை ஒண்ணொண்ணா நியாயப்படுத்திக்கிறது தான் நாகரீகம்னு நாசூக்குன்னும் இப்பல்லாம் புது ‘பிலாஸபியே’ வந்தாச்சாக்கும்….”

 

    • “விசுவேசுவரன்! இன்னைக்கு நீ செய்திருக்கிற இந்த உதவிக்கு உனக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே அப்பா. என்னை விட அதிக வாடகை, அதிக முன் பணம் எல்லாம் தரேன்னு விடாக்கண்டன் ஒருத்தன் போட்டிக்கு வந்தும் நீ அந்த மனையை எனக்கே வாடகைக்கு விட்டிருக்கே. இடமோ ஆத்திகர்கள் நிறைந்த மடத்துக்குச் சொந்தமான அக்கிரகாரத்துக்கு நடுவிலிருப்பது. நானோ ஊரறிந்த நாத்திகன். சுய மரியாதைக்காரன். அப்படி இருந்தும் நீ அந்த இடத்தை முதல்லே சொன்ன வார்த்தைக்குக் கட்டுப்பட்டு எனக்கு விட்டிருக்கே.”

 

    • “நான் பெரிசா ஒண்ணும் பண்ணிடலே தேசிகாமணீ! நியாயம் எதுவோ அதைத்தான் செஞ்சிருக்கேன்!….”

 

    • “அப்படியில்லேப்பா! இது நிஜமாகவே பெரிய காரியம்தான். இந்த அக்கிரகாரத்து மூணு தெருவுங்களிலேயும் நான் யாரையும் பெரிசா மதிக்கறதில்லே. ஆனா அதே சமயத்தில் உன்னை மதிக்காமே இருக்கவும் என்னாலே முடியலே.”

 

    • மிகவும் நெருங்கிய சிநேகிதரான இறைமுடிமணியே திடீரென்று நேருக்கு நேர் தன்னைப் புகழத் தொடங்கவே சர்மா திக்குமுக்காடிப் போனார். கூச்சத்தோடு சொன்னார்:-

 

    • “நமக்குள்ளே மூணாம் மனுஷா மாதிரி இப்படிப் புகழ்ந்துக்கறது நன்னா இல்லே.”

 

    • “நிஜத்தைத்தானே சொல்றேன்?”

 

    • “ஒரு நிஜம், மனுஷனைத் தலை கனத்து வீங்கிப் போகச் செய்யும்படியானதா இருக்குமானா அதைச் சொல்லாம உள்ளேயே அந்தரங்கமா மனசுலே வச்சுண்டுடறது இன்னும் சிரேஷ்டம்.”-

 

    • “நல்லதை – நல்லது செய்யிற யோக்கியனை உடனே புகழ்ந்துடணும்பாரு ஐயா. அப்பிடிப்பட்டவங்களைக் கொஞ்சம் முரட்டு வார்த்தைகளாப் பொறுக்கி எடுத்துப் போட்டுச் சொல்லிக்கூடப் புகழலாம்பாரு…”

 

    • “அதனாலேதான் புகழறத்துக்காக நல்லது செய்யறவாள்னும் புகழை எதிர்பார்த்து நல்லது செய்யறவாள்னும் புகழுக்கு ஏற்பாடு செய்துகொண்டு நல்லது செய்யறவாள்னும் பல புதுப்புதுப் பிரிவுகள் இப்பல்லாம் ஜனங்கள் மத்தியிலே உண்டாயிண்டிருக்கு. ஒரு புஷ்பம் அபார வாசனையோட இருக்கலாம். ஆனா அந்த வாசனை அதை மோந்து பாக்கறவா எல்லாருக்கும் மட்டும் புரிஞ்சாலே போறும். தான் இத்தனை வாசனைன்னு அந்தப் புஷ்பத்துக்கே புரியணும்னு அவசியமில்லே தேசிகாமணி! சாஸ்திரங்கள்ளே மதுபானப் பிரியனா வெறியோடவும் தாகத்தோடவும் அதைத் தவிச்சுத் தேடி அலையறவனோட ஒப்பிட்டுத்தான் புகழையும் ஸ்தோத்திரத்தையும் வலுவிலே தேடி அலையறதைச் சொல்லியிருக்கா. புகழும் ஒருவிதமான மதுபானம்தான் தேசிகாமணி!”

 

    • தாம் சொல்லி விடை பெற்றுக்கொண்டு புறப்படக் கருதிய இறைமுடிமணி பேச்சை உடனே வேறு விஷயத்துக்கு மாற்றினார்:

 

    • “நம்ம தம்பியோட வந்திருக்கே பிரெஞ்சுக்காரி, அது தங்கமான பொண்ணாத் தெரியுது. தமிழ் நல்லாப் பேசுதே? நீ இங்கேயிருந்து எந்திரிச்சுப் போறவரை உனக்கு முன்னாலே உட்காரவே இல்லேப்பா அந்தப் பொண்ணு! உம்மேலே நல்ல மரியாதைப்பா அதுக்கு….”

 

    • “அது மட்டுமில்லே. நல்ல படிப்புள்ளவள். புத்திசாலி”

 

    • “ஒரு பிரெஞ்சுப் பொண்ணு இத்தினி அருமையாத் தமிழ் பேசறது அபூர்வமான விஷயம்ப்பா. உனக்கு ஆட்சேபணையில்லாட்டி நான் கூட அவங்களுக்கு நம்ம படிப்பகத்திலே ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணி வரவேற்புக் குடுத்துப் பேசச் சொல்லலாம்னு நினைக்கிறேன்… தம்பி ரொம்பக் குடுத்து வச்சிருக்கு. அழகு, அறிவு, இங்கிதம் மூணுமாகச் சேர்ந்து அமையற வாழ்க்கைத் துணை கிடைக்கிறது பெரிய காரியம்.”

 

    • “வாழ்க்கைத் துணையா இல்லையான்னு இனிமேல் தான் முடிவாகணும்…” – சர்மா சிரித்தபடிதான் இதைச் சொன்னார். ஆனால் இறைமுடிமணி விடவில்லை – அப்போதே சாடத் தொடங்கி விட்டார்.

 

    • “ஒருத்தர் தன் துணையைப் பற்றி முடிவு பண்ணிக்கிறத்துக்கு மத்தவங்க யாருப்பா வேணும்?”

 

    • “நடைமுறை உலகத்திலே மத்தவங்க அபிப்பிராயமும் வேண்டியதாக இருக்கே! அப்பா, அம்மா, ஊர், உலகம் எல்லாரையும் எதிர்பார்த்துதானே இங்கே எல்லாம் செய்ய வேண்டியிருக்கு.”

 

    • “குழந்தைங்க நல்லா மகிழ்ச்சியா இருக்கட்டும்பா! சாதி சம்பிரதாயம், குலம் கோத்திரம்னு நீ அவங்க வாழ்க்கையை அழிச்சிடப்படாது…”-

 

    • “பார்க்கலாம்…அப்புறம்….”

 

    • “சரி! நான் வரேன்ப்பா. அந்தப் பொண்ணுகிட்டவும் தம்பிகிட்டவும் சொல்லிடு. அப்புறம் பார்க்கிறேன். நம்ம புனித அந்தோணியர் ஸ்கூல் டீச்சர் மலர்க்கொடி விஷயமாச் சீமாவையாரைக் கொஞ்சம் கண்டிச்சு வை. மறந்துடாதே” என்று கூறி விடைபெற்றுக் கொண்டு போனார் இறைமுடிமணி.

 

    • இறைமுடிமணியின் தலை தெருத் திருப்பத்தில் மேற்குப் பக்கம் மறைந்ததுமே அஹமத் அலிபாய் – சீமாவையரோடு தம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டார் சர்மா.

 

    • வீட்டுக்கு உள்ளே போக எழுந்திருந்தவர் அவர்கள் வருவதைப் பார்த்ததும் மீண்டும் திண்ணையிலேயே உட்கார்ந்தார்.

 

    • படியேறி வந்து அவர்கள் பேச்சைத் தொடங்குவதற்கு முன் சர்மாவே தொடங்கிவிட்டார்.

 

    • “என்ன பாய்? நான் தான் சொல்லி அனுப்பியிருந்தேனே? இதுக்குள்ளே அவாளைப் போய் ஏன் சிரமப் படுத்தினேள்?”

 

    • “இல்லீங்க… நம்ம ஐயாவே வந்துடறேன்னு புறப்பட்டுக் கூட வந்துட்டாங்க?”

 

    • “உட்காருங்க சீமாவையர்வாள்! இதுக்காக நீங்க சிரமப்பட்டு இத்தனை தூரம் வந்தே இருக்க வேண்டாம்…”

 

    • சீமாவையர் வெற்றிலைப் பெட்டியையும் பிரம்பையும் முதலில் திண்ணையில் வைத்து விட்டு அப்புறம் உட்கார்ந்தார்.

 

    • “வரவேண்டானுதான் பார்த்தேன். மனசு கேக்கலே. மடத்துச் சொத்து நல்ல மனுஷாளுக்குப் பிரயோஜனப்படணும், மடத்துக்கும் பிரயோஜனப்படணும்….”

 

    • “வாஸ்தவம். அதில் சந்தேகமென்ன? ரெண்டாவது அபிப்ராயத்துக்கே இடமில்லாத விஷயம் அது.”

 

    • “பேசறதென்னவோ தேனொழுகப் பேசிடறேள், ஆனால் காரியத்திலே ஒண்ணும் பண்ண மாட்டேங்கறேளே?…”

 

    • அவர் சொற்படி கேளாமல் முந்திய நாள் ஸ்ரீ மடத்து நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தான் ஒத்திப் போட்டுத் தள்ளி வைத்த கோபமும் சீமாவையருக்குள் சேர்ந்து இருக்கிறது என்று இப்போது சர்மாவுக்குப் புரிந்தது.

 

    • தெருத் திண்ணையில் வீட்டு வாசலில் மூன்றாம் மனிதரான அஹமத் அலி பாயையும் வைத்துக் கொண்டு சீமாவையரோடு குறைந்த பட்சம் ஒரு வாக்கு வாதத்துக்கோ, அதிக பட்சம் சண்டைக்கோ சர்மா தயாராயில்லை. அவருடைய படிப்பும் பண்பாடும் அநாவசியமாக இரைந்து கூப்பாடு போட முடியாதபடி அவர் மனத்தில் பக்குவத்தையும் அடக்கத்தையும் மெருகேற்றியிருந்தன. காது சற்று மந்தமான தன் மனைவி காமாட்சியம்மாளுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக இரைந்து பேசும் சமயங்களில் கூட அதற்காகக் கூச்சப்பட்டுக் கொண்டேதான் அப்படிச் செய்வார் அவர். சீமாவையாரைப் போல் அட்டகாசமாகப் பேச அவருக்கு ஒரு போதும் வந்ததில்லை. கூடியவரை சுமுகமாகப் பேசிச் சீமாவையாரை இப்போது அனுப்பி வைக்க விரும்பினார் சர்மா.

 

    • சாயங்காலமாயிருந்தது. விளக்கு வைக்கிற நேரத்துக்கு வீட்டுத் திண்ணையில் சண்டை சத்தம் வேண்டாம் என்று எண்ணியவராய், “இப்போ நான் என்ன பண்ணணும்கறேள்? எனக்கு நாழியாச்சு, சந்தியா வந்தனத்துக்கு ஆத்தங்கரைக்குப் புறப்படணும். உங்களுக்கும் ஏகப்பட்ட ஜோலி இருக்கும். பெரிய மனுஷாளை நான் ரொம்பக் காக்க வைக்கப்படாது. வந்த காரியத்தைச் சொல்லுங்கோ” – என்றார் சர்மா.

 

    • “மறுபடியும் நான் சொல்லணுமா ஓய்? அதான் அப்பவே லெட்டர் எழுதிக் குடுத்தனுப்பிச்சேனே… நம்ம பாய்க்கு அந்த வடக்குத் தெரு எடத்தை விடணும்…”

 

    • “சரி! பாயோ, நீங்களோ ஒரு லெட்டர் எழுத்க் குடுத்துட்டுப் போங்கோ, அதை அப்படியே மேலே மடத்துக்கு அனுப்பிச்சு அங்கேயிருந்து பதில் வந்ததும் சொல்றேன்…”

 

    • “நான் முன்னாலே குடுத்தனுப்பின லெட்டரை அனுப்பினாலே போறும்.” –

 

    • – சர்மா மறுபடியும் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்துவிட்டு, “சீமாவையர்வாள்! இதிலே தேதி போடலே; தேதி போட்டுக் குடுத்திட்டுப் போங்கோ-” என்று அவரிடமே திருப்பி நீட்டினார்.

 

    • வீட்டுக்குள்ளேயிருந்து யாரோ சந்தியா கால விளக்கு ஏற்றி வரும் ஒளி இடைகழியிலிருந்து படர்ந்தது. சர்மா வீட்டின் இடைகழியைப் பார்த்தார். அவரே எதிர்பாராதபடி கமலி கையில் விளக்கோடு வந்து அதைப் பிறையில் வைத்து விட்டுப் போனாள். ஒரு சுவர்ண தீபம் இன்னொரு வெறுந் தீபத்தோடு வந்து போனதைச் சீமாவையாரும், அஹமத் அலியும் கூடப் பார்த்தனர்.

 

    • “யாரு? புதுசா இருக்கே?”

 

    • “இங்கே வந்திருக்கா…?”

 

    • “ஈரோப்பியன் மாதிரியின்னா இருக்கு?……”

 

    • “ஆமாம்! எனக்கு நாழியாறது… சந்தியா வந்தனத்துக்குப் போயாகணும், தேதி போட்டுக் குடுங்கோ….”

 

    • சீமாவையர் தேதியைப் போட்டுக் கடிதத்தைச் சர்மாவிடம் திருப்பிக் கொடுத்தார்.

 

    • “சரி! பதில் வந்ததும் நானே சொல்லியனுப்பறேன், நமஸ்காரம்” – என்று அவர்களுக்குப் பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு எழுந்திருந்தார் சர்மா.

 

    • சீமாவையரும் அஹமத் அலியும் புறப்பட்டார்கள். சர்மா உள்ளே சென்றபோது கமலி விளக்குடன் வந்து போனது பற்றியே அவர் சிந்தனை இருந்தது. அந்தக் காட்சி பல சமஸ்கிருதக் காவியங்களைப் படித்துப் படித்து நயம் சேர்ந்திருந்த அவர் மனத்தில் ‘சிறிய தீபத்துடன் ஒரு சுவர்ண தீபம் உயிரோடு நடந்து வந்து திரும்பிச் சென்றது’ போல் தோன்றினாலும் அது எப்படி நேர்ந்தது? அவளாக விளக்கேற்றிக் கொண்டு வந்தாளா? யாராவது சொல்லி அப்படிச் செய்தாளா? வெறும் வாயையே மெல்லுகிற சீமாவையர் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரியாகப் பண்ணிவிட்டாளே? – என்ற சிறு தயக்கமும் கூடவே இருந்தது.

 

    • கமலி என்ற பிரெஞ்சு யுவதி தன் மகன் ரவியுடன் வந்து தங்கியிருப்பதைப் பிறர் அறியாமல் வைத்திருப்பதென்பது அந்தச் சிறிய கிராமத்தில் இயலாத காரியம் என்பதையும் அச் செய்தி தானாகவே அதற்குள் கிராமத்திலும், சுற்றுப்புறங்களிலும் பரவியிருக்கும் என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தாலும் அயோக்கியனான சீமாவையரின் முன்னிலையில், கமலி இப்படி ஒரு தர்ம சங்கடத்தை உண்டாக்கி விட்டாளே என்று ஒரு சிறிய கலக்கமும் உள்ளூர இருக்கத்தான் செய்தது.

 

    • தன் மகனுடன் ஒரு பிரெஞ்சு பெண் வந்திருக்கிறாள் என்பது அதுவரை சீமாவையருக்குத் தெரியாமல் இருக்கவும் நியாயமில்லை. முன்பே தெரிந்திருப்பதை உள்ளேயே வைத்துக் கொண்டு, அப்போது தான் புதிதாகத் தெரிந்து கொண்டு விசாரிப்பது போல் வியந்து விசாரித்த சீமாவையரின் குள்ள நரித் தந்திரம் தான் அவருக்கு எரிச்சலூட்டியது.

 

    • கடிதங்கள், மடத்து விவரங்களடங்கிய நோட்டுப் புத்தகம் எல்லாவற்றையும் அதற்கென்றிருந்த மரப்பெட்டியில் கொண்டு போய் வைத்துவிட்டுச் சமையலறையில் எட்டிப் பார்த்தபோது புதிர் தானாக விடுபட்டது. உள்ளே தோசைக்கு மாவரைத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள் அவரைக் கேட்டாள்: “ஏன்னா வாசல்லே யாரோ புருஷாள் வந்து பேசிண்டிருந்த மாதிரி காதிலே விழுந்ததே? பாருவை விளக்கேத்தித் திண்ணைப் பெறையிலே வையின்னு குரல் குடுத்தேனே? செஞ்சாளோ? சனியன்… இங்கேயிருந்து எத்தனை தடவை தான் கத்தறது? செய்யறேன்… செய்யலேன்னு ஒரு வார்த்தை பதில் சொல்லப்பிடாதோ? பெண்கள் ரெண்டெழுத்துப் படிச்சிட்டாலே பிடிபடாமத் தலை கனத்துப் போயிடறதுகள் இந்த நாளிலே?….”

 

    • “இங்கே பாரு எங்கே இருக்கா? அவ இன்னும் வரவே இல்லியே?” – என்று வாய் நுனி வரை வந்து விட்டது சர்மாவுக்கு. ஆனால் அதைச் சொல்லாமல் “விளக்கேற்றி வச்சாச்சு. வாசல் திண்ணைப் பெறையிலே விளக்கைப் பார்த்தேன். நீ பாட்டுக்குக் கவலைப் படாமே உன் கைக்காரியத்தைப் பார்” – என்று வேறு வார்த்தைகளைச் சொல்லிச் சமாளித்தார் சர்மா. கமலிதான் அதைச் செய்தாள் என்று காமாட்சியம்மாளிடம் சொல்லி அப்போது கமலியை வம்பிலே மாட்ட வைக்க விருப்பமில்லை அவருக்கு.

 

    • நல்லவேளையாக அப்போது கமலியும் அங்கே இல்லை. மாடிக்குப் போயிருந்தாள். ரவியையும் தன்னோடு ஆற்றங்கரைக்கு அழைத்துப் போகக் கருதி மாடிக்குப் போகும் படிக்கட்டில் நாலைந்து படிகள் ஏறி அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டார் அவர்.

 

    • “அவர் இல்லை. நாலைந்து வீடுகள் தள்ளி இதே தெருவிலே யாரோ பழைய சிநேகிதரைப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன் என்று போயிருக்கிறார்” – என்று கமலி மாடியிலிருந்து எட்டிப் பார்த்து சர்மாவுக்குப் பதில் சொன்னாள். பதில் சொல்லியதோடு நிற்காமல் “ஏன்? ஏதாவது செய்யணுமா? நான் செய்யறேன் சொல்லுங்களேன்” – என்றும் தானே முன் வந்தாள்.

 

    • “ஒண்ணுமில்லேம்மா! நீ ஏதோ படிச்சிண்டிருக்கே போலிருக்கே… படி…” – என்று அவளுக்குப் பதில் கூறிவிட்டுப் புறப்பட்டார் சர்மா. முதலில் அவளை ‘நீங்கள்’ என்று தான் விளிக்க நினைத்தார் அவர். அப்புறம் அது மிகவும் செயற்கையான காரியம் என்று அவருக்கே தோன்றியது. கிராமத்தில் இளம் பெண்களையும் அவருக்கு மருமகள் ஆகிற முறைக்கு வயதுள்ள பெண்களையும், இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி விட்ட ஆனால் அவரைவிடப் பால்யமான பெண்களையும் ‘நீ’ என்று பேசித்தான் அவருக்குப் பழக்கம். திடீரென்று அதே வயதுள்ள ஓர் அந்நிய தேசத்துப் பெண்ணை மட்டும் ‘நீங்கள்’ என்று அழைக்க வரவில்லை. காரணம் அவருடைய உள் மனமோ, அந்தரங்கமோ அவளை அந்நியமாக எண்ணவில்லை. அவள் தனது அழகிய கம்பீரமான தோற்றத்தால், இரயிலிலிருந்து இறங்கிய முதல் கணமே இந்திய முறைப்படி அவருடைய கால்களைத் தொழுத பண்பால், விசாலமான அறிவு நுணுக்கத்தால், அவரை முக்கால்வாசி மனமிளகச் செய்திருந்தாள்.

 

    • காமாட்சியம்மாள் இருந்த இடத்திலிருந்தபடியே மாவரைத்துக் கொண்டு பாருவைக் கூப்பிட்டு விளக்கேற்றும்படி இரைந்த சொற்களைக் கேட்டுக் கமலி தானே வந்து விளக்கேற்றி வாசல் திண்ணைப் பிறையில் கொண்டு வந்து வைத்து விட்டுப் போன இங்கிதம் அவரை உள்ளேயே நினைந்து நினைந்து பூரிக்கச் செய்தது. அந்த இனிய பூரிப்பில் சிறு முள்ளாக உறுத்திய ஒரே ஒரு குறை, அவள் விளக்கேற்றிக் கொண்டு திண்ணைக்கு வரும்போது சீமாவையர் திண்ணையில் இருந்ததும் அவளைப் பற்றி விசாரித்ததும் தான்.

 

    • இறைமுடிமணி சென்றவுடன் சீமாவையர் அஹமத் அலியோடு வந்ததற்கும் மடத்துக் குமாஸ்தாதான் காரணமாயிருக்கும் என்று சர்மாவால் அநுமானித்துக் கொள்ள முடிந்தது. நேரே போய்ச் சீமாவையரிடம் விஷயத்தைச் சொல்லி விட்டுத்தான் அவன் போயிருப்பான் என்று அவருக்குப் பட்டது. வடக்குத் தெரு மனையை இறைமுடிமணிக்குப் பேசி விட்டாயிற்று என்று தெரிந்தும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் சீமாவையர் தன்னிடம் தகராறுக்கு வந்ததைத் தாம் நாசூக்காகச் சமாளித்து விட்டதாகச் சர்மா எண்ணிக் கொண்டார். சீமாவையரின் கடிதத்தை மடத்துக்கு அனுப்பி வைத்து விவரம் எழுதினால், “ஏற்கெனவே ஒருவருக்கு வாக்களித்தபடி வடக்குத் தெரு மனையை வாடகைக்கு விட்டாயிற்று. எனவே ஸ்ரீ மடத்தின் முந்திய முத்திராதிகாரியும் சிஷ்யரும் ஆகிய தங்கள் சிபாரிசை ஏற்க இயலாததற்கு மன்னிக்கவும்” என்று மடத்திலிருந்தே சீமாவையருக்குப் பதில் வந்து விடும். அந்தப் பதிலை அப்படியே சீமாவையருக்குப் காண்பித்து விடலாம். இதனால் தமக்கும் அவருக்கும் நேரடியாக விரோதம் எதுவும் வராது என்று எண்ணிக் கொண்டிருந்தார் சர்மா.

 

    • இணையற்ற சாஸ்திர ஞானமும் பாண்டியத்தியமும் அவருக்கு அளித்திருந்த சஹ்ருதயப் பாங்கு யாரோடும் பூசலும், போட்டியும், சண்டையும், சச்சரவும் இடமுடியாத படி அவரைச் செய்திருந்தன. பிறரையும் பிறவற்றையும் துன்புறுத்தவோ கொல்லவோ கூடாது என்ற சாதாரண சன்மார்க்கத்திற்கும் ஒரு படி மேலே போய்ப் பிறர் மனம் புண்படும்படிப் பேசவும் சச்சரவிடவும் கூடச் செய்யாத உன்னதமான சன்மார்க்கத்தை வாழ்வில் அவர் கடைபிடித்து வந்த காரணத்தால் சீமாவையரோடும் கூடத் தகராறு வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

 

    • சந்தியா வந்தனத்துக்காக ஆற்றில் படித்துறையில் அவர் இறங்கின போது யாரோ உள்ளூர் வைதிகர்கள் இரண்டு மூன்று பேர் ஏற்கெனவே ஜபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஜபம் முடித்தவர்கள் அருகே வந்து “பிள்ளை வந்திருக்கானாமே…?” – என்று அவரிடம் விசாரித்தார்கள். முதல் கேள்விக்கு அவரது பதில் கிடைத்ததுமே சிறிது தயக்கத்துடன், “அவன் கூட இன்னம் வேற யாரோ வந்திருக்காப்ல இருக்கே?” – என்று சந்தேகத்தோடு கூடிய அடுத்த கேள்வி பிறந்தது. “ஆமாம்” – என்பதற்கு அதிகமாக ஒரு வார்த்தை கூடவோ குறையவோ செய்யாமல், தயக்கத்தோடு கூடிய இந்த இரண்டாவது கேள்விக்குக் கத்தரித்தது போல் பதில் சொல்லியிருந்தார் சர்மா. அவர் பதில் சொல்லிய விதமே அதைப்பற்றி அவர்கள் மேலே எதுவும் கேட்கவிடாதபடி செய்தது.

 

    • சர்மா ஆற்றிலிருந்து வீடு திரும்பக் கிளம்பிய போது நன்றாக இருட்டி விட்டது. சிவன் கோவில் மணியோசை அந்த அழகிய சிற்றூரின் சாயங்கால மௌனத்தைப் புனித வனப்போடு கலைத்து விட்டுக் கொண்டிருந்தது. கோவிலுக்குப் போய்த் தரிசனம் செய்துவிட்டு அப்புறம் தான் வீடு சென்றார் அவர். கோவிலிலும் நடுவழியிலும் பல சந்திப்புகள். பல வழக்கமான கேள்விகள். சலிப்பில்லாத வழக்கமான அளவான ஒரே மாதிரியான பதில்கள்.

 

    • தெருவிலிருந்து வீட்டுப் படியேறி உள்ளே சென்ற போது இடைகழியிலேயே காமாட்சியம்மாள் எதற்கோ கூடத்தில் இரைந்து கொண்டிருப்பது அவருக்குக் கேட்டது. பாருவும், கமலியும், கூடத்தில் காமாட்சியம்மாளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். ரவி இன்னும் வீடு திரும்பவில்லை போலிருக்கிறது. சர்மா உள்ளே வருவதைக் கண்டு இரைச்சல் நின்று போய் ஒரு தற்காலிக அமைதி கவிழ்ந்தது.

 

    ஏதோ ஒரு சிறிய மனஸ்தாபத்துக்குரிய மௌன மூட்டம் அந்தக் கூடத்தில் அப்போது நிலவிக் கொண்டிருந்தது. சர்மாவைப் பார்த்ததும், “நீங்களே சொல்லுங்கே, இது நன்னாவா இருக்கு?” – என்று காமாட்சியம்மாள் கேட்கத் தொடங்கி அதை விவரித்த போது தான் தாம் நாசூக்காகச் சமாளித்து விட்டதாக நினைத்துக் கொண்டு புறப்பட்டுப் போயிருந்த ஒரு விஷயம் இப்போது தற்செயலாகக் கண்டு பிடிக்கப் பட்டுச் சிறியதொரு சண்டையாய்த் தலையெடுக்க இருப்பது அவருக்கே புரிந்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 14தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 14

அத்தியாயம் 14 சர்மா சிறிது தயக்கத்திற்குப் பின் மீண்டும் ரவியைக் கேட்டார்: “நீ சொல்றே. அதை நான் கூட ஒத்துண்டுடறேன்னே வச்சுக்கோ. உங்கம்மா ஒத்துக்கணுமேடா? அவளுக்கு இன்னம் முழுவிவரமும் தானாவும் தெரியலே. தெரிவிக்கப்படவும் இல்லே. அதுக்குள்ளேயே ஆயிரம் சந்தேகப்படறா… உங்கம்மாவுக்குப் பயந்து

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 6தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 6

அத்தியாயம் 6   யாரும் எதிர்பாராத விதத்தில் கமலி திடீரென்று குனிந்து விசுவேசுவர சர்மாவின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கினாள். பக்கத்து திருமண மண்டபத்தில் கெட்டி மேளம் முழங்கிக் கொண்டிருந்த அந்த மங்கலமான வைகறை வேளையில் ஒரு மணமகளை

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 32 (நிறைவுப்பகுதி)தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 32 (நிறைவுப்பகுதி)

அத்தியாயம் 32 காமாட்சியம்மாளின் அந்தரங்கத்தில் இந்தக் கலியாணம், இதன் வைபவங்கள், இது தொடர்பான கிருஹப் பிரவேச முகூர்த்தம் எல்லாவற்றின் மேலும் வெறுப்புத்தான் நிரம்பிக் கிடக்கிறதென்று தாங்களாகவே கற்பித்து நினைத்துக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் பாட்டியும் பெரியம்மாவும். ஆனால் காமாட்சியம்மாளின் உள்மனமோ