Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 11

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 11

 

அத்தியாயம் 11

 

    • கமலி, நாயுடு தன்னிடம் அளித்த பைனாகுலரை வாங்கிப் பார்த்தாள். பத்திருபது பெரிய யானைகள்…. இரண்டு மூன்று குட்டி யானைகள் – பைனாகுலரில் மிக அருகில் நிற்பது போல் தெரிந்தன. அதிக நேரம் ஓர் ஆச்சரியத்தோடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி. அவளைத் தவிர மற்றவர்கள் அங்கே பலமுறை வந்திருந்த காரணத்தாலும், அடிக்கடி யானைக் கூட்டத்தைப் பார்த்திருப்பதாலும் அதில் அதிக ஆச்சரியம் காண்பிக்கவில்லை. யானைகளைப் பற்றிக் கமலி பல கேள்விகள் கேட்டாள். எல்லாக் கேள்விகளுக்கும் வேணுமாமாவும் சாரங்கபாணி நாயுடுவும் மாற்றி மாற்றி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

 

    • ‘எலிஃபெண்ட் வேலி’யிலிருந்து திரும்பும்போது கமலி நாயுடுவிடம் ‘சாண்டல்வுட்’ மரம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்றாள். சிறிது தொலைவு சென்றதும் ஓரிடத்தில் ஜீப்பை நிறுத்தி, நன்றாக முற்றிய சந்தன மரம் ஒன்றைக் கமலிக்குக் காட்டினார் நாயுடு. இடுப்பு உயரத்தில் அந்த மரத்தின் முற்றிய கிளை ஒன்று பிரிந்த இடத்தில் யாரோ காட்டு இலாக ஆட்கள் அரிவாளால் ஒரு சிறு வெட்டு வெட்டி விட்டுப் போயிருந்தார்கள். நாயுடு அந்த வெட்டு வாயில் மூக்கை வைத்து மோந்து பார்த்து விட்டு, “அப்பாடீ! வாசனை ஆளைத் தூக்கி அடிக்குது” என்று கூறி விட்டுக் கமலியையும் அதை மோந்து பார்க்கும்படி வேண்டினார்.

 

    • கமலி தலையைக் குனிந்து அந்த வாசனையை நுகர்ந்தாள். வைரம் பாய்ந்த அந்தச் சந்தனமரத்தில் வாசனை கமகமத்தது. இரண்டு மூன்று நாட்களில் அதே வாசனையுள்ள சந்தனக் கட்டை ஒன்றைக்கீழே கொடுத்து அனுப்புவதாக அவளிடம் நாயுடு கூறினார்.

 

    • அங்கிருந்து நேரே எஸ்டேட் பங்களாவுக்குத் திரும்பினார்கள் அவர்கள். ஜீப்பில் ரவியும் கமலியும் பின் ஸீட்டில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். ரவி உற்சாகமாக இருந்தான். மலைக்காற்றின் சுகமான குளிர்ச்சியும், அருவியில் நீராடிய மதமதப்பும் அவனுடைய உற்சாகத்தைப் பல மடங்காக்கியிருந்தன. அவன் கமலியின் காதருகே மெதுவாகக் கேட்டான்.

 

    • “கமலீ! என்னைப் பொறுத்தவரை நீயே ஒரு சந்தன விருட்சம். உன் உடம்பில் இல்லாத வாசனையா அந்தச் சந்தனமரத்தில் இருக்கிறது? நான் அநாவசியமாக ஜீப்பிலிருந்து ஏன் கீழே இறங்கவில்லை தெரியுமா? இளமையும் வாசனையும் கமகமக்கும் ஒரு சந்தன விருட்சம் இங்கே என் அருகிலேயே இருப்பது தான் காரணம்! என்ன? நான் சொல்வது உண்மை தானே?”

 

    • கமலி அவனை ஏறிட்டு நிமிர்ந்து பார்த்துக் கனிவோடு புன்முறுவல் பூத்தாள். பங்களாவுக்குத் திரும்பும் போது சாரலும் மேகமூட்டமுமாக வானவில் வேறு போட்டிருந்தது. மலைச் சிகரங்களின் பின்னணியில் வானவில் மிகமிக அழகாயிருந்தது. மலைகளும், சாரலும், பசுமை நறுமணமும், வானவில்லும், அருவி நீராடலும் அவர்களைச் சிறு குழந்தையின் உற்சாகத்தைக் கொள்ளச் செய்திருந்தன. அருவியிலிருந்து திரும்பியதும் அன்று பகலில் நாயுடு எஸ்டேட் பங்களாவில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். விருந்து முடிந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்ட பின்பே அவர்கள் மலையிலிருந்து கீழே புறப்பட முடிந்தது.

 

    • “நீங்க இந்தியாவிலே இருக்கிறவரை எப்ப வேணாலும் இங்கே தாராளமா வந்து தங்கலாம். வித்தியாசமா நினைக்க வேண்டாம். இதை உங்க சொந்த வீடு மாதிரி நினைச்சுக்குங்க” – என்று புறப்படும்போது ரவியையும் கமலியையும் பார்த்துச் சொன்னார் நாயுடு. பச்சை ஏலக்காயில் செய்த மாலை ஒன்றைக் கமலிக்கு அவர் அளித்திருந்தார். அந்த மாலை தைத்துக் கோக்கப்பட்டிருந்த விதத்தை அவரிடம் வியந்து புகழ்ந்து கூறினாள் அவள்.

 

    • “வீக்-எண்ட்-பிரயாணம்னு வந்தா இதைவிட ஐடியல் பிளேஸ் சங்கரமங்கலத்துக்குப் பக்கத்திலே வேற ஒண்ணும் கிடையாது”- என்றார் வேணுமாமா.

 

    • “இவா இரண்டு பேரும் இங்கே வர போது ஒரு தடவை நம்ம எஸ்டேட் கஸ்ட் ஹவுஸ் சாவியைக் கூடக் கொடுத்து விடலாம் அப்பா” – என்றாள் வசந்தி.

 

    • அவர்கள் அனைவரும் நாயுடுவிடம் விடைபெற்றுக் கொண்டு மலையிலிருந்து கீழே புறப்படும் பொழுது பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகிவிட்டது.

 

    • ரவியும், கமலியும் சங்கரமங்கலம் திரும்பி வீட்டு வாசலில் காரிலிருந்து இறங்கும்போது பிற்பகல் நாலரை மணி. வருகிற வழியில் முதலிலேயே வேணுமாமாவும் வசந்தியும் தங்கள் வீட்டில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

 

    • வீட்டு வாயிலில் சர்மா இறைமுடிமணியோடு பேசிக் கொண்டிருந்தார். ரவியை உற்சாகமாக வரவேற்றார் இறைமுடிமணி. கமலியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான் ரவி. ‘இறைமுடிமணி’ – என்ற பெயரைத் திருப்பி உச்சரித்துச் சொல்லிப் பார்க்க முயன்றாள் கமலி. அந்தப் பெயரைப் பற்றி விசாரித்தாள்.

 

    • அது ‘தெய்வசிகாமணி’ – என்ற பெயரின் தமிழ் மொழி பெயர்ப்பு என்பதை ரவி விளக்கினான்.

 

    • “மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர் போல் தானே இந்தப் பெயரும்?” என்று கமலி ரவியிடம் பதிலுக்கு வினவிய போது,

 

    • “அடடே! தமிழ்ல கூட நல்லாப் பேசுறாங்களே! உட்காருங்க தம்பீ! அவங்களையும் உட்காரச் சொல்லுங்க” என்றார் இறைமுடிமணி. அவர் வேண்டிக் கொண்ட உடனே ரவி எதிர்த் திண்ணையில் உட்கார்ந்தான். கமலி உட்காரவில்லை. விசுவேசுவர சர்மா அங்கே இருப்பதைப் பார்த்து அவர் எதிரே அவள் உட்காரத் தயங்கினாற் போலப்பட்டது. சர்மாவும் அந்தத் தயக்கத்தை கவனித்தார்.

 

    • “நீங்க பேசிண்டிருங்கோ… நான் போய் மடத்துக் கிளார்க்கைக் கூட்டிண்டு வந்துடறேன்” – என்று சொல்லி விட்டு எழுந்திருந்து போனார் சர்மா. அவர் சென்ற பின் எஞ்சிய மூவருக்கும் பலவற்றைத் தயங்காமல் பேசிக் கொள்வதற்கு உரிய சுதந்திரம் கிடைத்த மாதிரி இருந்தது. சர்மா சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் கமலி ரவிக்கு அருகே மெல்ல ஒதுங்கி அமர்ந்து கொண்டாள்.

 

    • “தமிழ் மட்டும் சொல்லிக் கொடுத்ததோட நிறுத்திடாமே ‘அவங்களுக்கு’ நம்ம பண்பாடுகளையும் பழக்கப்படுத்தியிருக்கீங்க தம்பி! எனக்கு ரொம்ப மகிழ்ச்சி” – என்றார் இறைமுடிமணி.

 

    • அவருடைய கணீரென்ற குரல், தனிப்பட்ட உரையாடலிலும் உணர்ச்சி மயமாகி விடும்போது மேடைப் பிரசங்கம் போலப் பாய்ந்து பாய்ந்து பேசும் அவரது பேச்சு எல்லாவற்றையும் கவனித்த கமலி அவரைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள ஆவல் காண்பித்தாள். ரவி அவளுக்கு விவரித்துச் சொன்னான். அவன் கூறியதை இறைமுடிமணி பணிவோடு மறுத்தார்.

 

    • “தம்பி எம்மேலே இருக்கிற பிரியத்தாலே ரொம்ப மிகைப்படுத்திச் சொல்லுது. இந்த ஊர்ல நான் ஒரு சாதாரண விறகுகடைக்காரன். அறிவு இயக்கத்தைச் சேர்ந்த ஊழியன்.”

 

    • “உங்கள் இயக்கத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?”

 

    • “ரொம்ப நாள் உபயோகத்திலே இல்லாமல் மூலையில் கிடக்கிற செப்புப் பாத்திரத்திலே அது செப்புங்கிறதே மறைஞ்சு போற மாதிரிப் பாசமும் களிம்பும் ஏறிப் படர்ந்து விடறாப் போல இந்த நாட்டிலே அறிவும் உண்மையுமே மறையிர அளவுக்குச் சாதி சமயச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளும் பெருகிப் போச்சு. அறிவையும் உண்மையையுமே மூடி மறைக்கிற சடங்குகளைத் தகர்க்கணும்கிறது எங்க கொள்கை. பாசமும் களிம்பும் பிடிச்சு நீலம் பாரிச்சுப் போன பாத்திரத்தைப் புளிப்போட்டுத் துலக்கி அதன் அசல் நிறத்தையும், பிரகாசத்தையும் காமிக்கிற மாதிரித்தான்னு வச்சுக்குங்களேன். சுய மரியாதை இயக்கம் ஆரம்பிச்சதே இதுக்குத்தான். சடங்குகளை விட உண்மையும் அறிவும் உயர்ந்தவை.”

 

    • “சுய மரியாதை என்றால்… அதாவது?”

 

    • “எந்த நிலையிலும் பிறரால் அவமரியாதைப் படாமல் நம்மைக் காத்துக் கொள்வதும் நாம் பிறரை அவமரியாதைப் படுத்தாமல் வாழ்வதும் தான் சுயமரியாதை.”

 

    • “உங்கள் விளக்கம் அழகாக இருக்கிறது” – என்று அவரைப் பாராட்டினாள் கமலி.

 

    • “ஆமாம்! அப்பா எதுக்காக மடத்துக் கிளார்க்கைக் கூட்டிண்டு வரப்போறார்?” என்று அதுவரை அவர்களுடைய அந்த உரையாடலில் கலந்து கொள்ளாமல் கவனித்துக் கொண்டிருந்த ரவி இறைமுடிமணியிடம் கேட்டான்.

 

    • வடக்குத் தெருவில் உள்ள மடத்துக்குச் சொந்தமான காலி மனையில் தான் ஒரு பலசரக்குக் கடை வைத்துக் கொள்வதற்காக ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொள்ள வந்திருக்கும் விவரத்தை இறைமுடிமணி ரவியிடம் தெரிவித்தார்.

 

    • அப்போது கமலி திண்ணையில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க ஆவலோடு எதிர் வரிசை வீடுகளிலிருந்தும், பக்கத்து வீடுகளிலிருந்தும் முகங்கள் நீண்டு மறைவதை ரவியும், இறைமுடிமணியும் கவனித்தனர்.

 

    • “தங்கள் வீடுகளுக்கு யார் வருகிறார்கள், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனிப்பதை விட அடுத்த வீடுகளில் யார் வருகிறார்கள், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனிப்பதில் இந்தக் கிராமத்து ஜனங்களுக்குத் தான் எவ்வளவு அக்கறை?” –

 

    • “அது மட்டும் இல்லே சார்! இங்கே இப்போ ‘டாக் ஆஃப் த வில்லேஜே’ – நானும் கமலியும் தான்.”

 

    • “ஆமாம்! பேசுவானுக… நல்லாப் பேசட்டும். அதுனாலே ஒண்ணும் அசந்துடாதீங்க தம்பி.”

 

    • மடத்துக் குமாஸ்தாவுடன் சர்மா வந்து சேர்ந்தார். ரவியும் கமலியும் இறைமுடிமணியிடம் கூறி விடை பெற்றுக் கொண்டு மாடிக்குச் சென்றார்கள்.

 

    • “ஸ்டாம்ப் பேப்பர் நானே கொண்டாந்திருக்கேன். எழுத வேண்டியதை எழுதிக்கலாம். கடையை என் மருமகன் தான் நடத்தப் போறான்னாலும் ‘அக்ரிமெண்ட்’ என் பேருக்கே பண்ணிக்குவோம்.” –

 

    • “ரெண்டு மாச அட்வான்ஸ் வேணும்னு ஸ்ரீ மடத்திலேருந்து உத்தரவு. கட்டிட வேலையோ, டெம்பரரி ஷெட்டோ எதுன்னாலும் இடத்தை லீஸுக்கு எடுத்துக்குற பார்ட்டி தன் செலவிலேயே போட்டுக்கணும்னு நிபந்தனை…”

 

    • “எனக்கு முழுச் சம்மதம். அட்வான்ஸ் பணம் இதோ கொண்டாந்திருக்கிறேன்.”

 

    • சர்மாவுக்குப் பதில் சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்து எண்ணத் தொடங்கினார் இறைமுடிமணி. யாரோ படியேறுகிற செருப்புச் சத்தம் கேட்டது. ஒரே சமயத்தில் இறைமுடிமணி, சர்மா இரண்டு பேருமே நிமிர்ந்து பார்த்தார்கள். ஜவுளி வியாபாரி அஹமத் அலி படியேறிக் கைகூப்பிவிட்டுச் செருப்பை ஓரமாகக் கழற்றிக் கொண்டிருந்தார். சர்மா பதிலுக்குக் கை கூப்பிவிட்டு, “ஏது இவ்வளவு தூரம்?” என்று அஹமத் அலியைக் கேட்டார். அஹமத் அலி சிரித்துக் கொண்டே, “உங்க தயவு தான் வேணும். இந்தாங்க” என்று ஒரு கடிதத்தை எடுத்துச் சர்மாவிடம் நீட்டினார்.

 

    • “சீமாவையர் சார் உங்களைப் பார்த்து இதைக் கொடுக்கச் சொன்னாருங்க…”

 

    • கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படிக்கலானார் சர்மா. கடிதத்தில் இருந்த விஷயங்களினால் ஏற்படும் உணர்ச்சியை முகமோ கண் பார்வையோ காட்டிக் கொடுத்து விடாமல் சர்மா சுபாவமாக இருக்க முயன்றார்.

 

    • “லெட்டரைப் பார்த்துட்டேன்னு சீமாவையர் கிட்டச் சொல்லுங்கோ. நானே அப்புறமா உங்களுக்கு விவரம் சொல்லியனுப்பறேனே?”

 

    • “பணம் ஒண்ணும் பெரிசில்லே. நீங்க பண்ற முடிவுக்கு அப்படியே கட்டுப்படறேன் நான்.”

 

    • “அதான் சொல்லி அனுப்பறேன்னேனே?”

 

    • “அப்போ சரி! வரட்டுங்களா, மறந்துடாமே ஞாபகமாச் சொல்லி அனுப்புங்க… இன்னைக்கே முடிவு பண்ணிக்கலாம்…”

 

    • “சொல்லி அனுப்பறேன்…”

 

    • அஹமத் அலி சர்மாவிடம் சொல்லி வணங்கி விடைபெற்றதோடு அமையாமல் இறைமுடிமணியிடமும் மடத்துக் குமாஸ்தாவிடமும் கூடச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்.

 

    • “சாய்பு என்ன காரியமா வந்திட்டுப் போறாரு?” – என்று இறைமுடிமணி உடனே கேட்டு விடுவாரோ என்பதாக எதிர்பார்த்த சர்மாவுக்கு அவர் அப்படிக் கேட்காதது வியப்பை அளித்தது.

 

    • ஒப்பந்தப் பத்திரம் முடிந்து இறைமுடிமணியிடம் அட்வான்ஸை வாங்கி, “இந்தா! மடத்துக் கணக்கில் பாங்கிலே கட்டிடு” – என்று குமாஸ்தாவிடம் அதைக் கொடுத்து அவனை அனுப்பிய பின், “இந்தா தேசிகாமணீ! இதைக் கொஞ்சம் படிச்சுட்டுக் குடு” – என்று மடியிலிருந்த கடிதத்தை எடுத்து நீட்டினார் சர்மா.

 

    • இறைமுடிமணி அவர் கொடுத்த கடிதத்தைப் படிக்கலானார். கடிதம் சர்மாவுக்கு உள்ளூர் மிராசுதார் சீமாவையரால் எழுதப்பட்டிருந்தது. வடக்குத் தெருவிலுள்ள மடத்துக்குச் சொந்தமான காலி மனையை அஹமத் அலி சாய்புவின் புதிய ஜவுளிக்கடை பிராஞ்ச் ஒன்றைத் திறக்க லீஸில் ஓர் இருபது வருஷத்துக்கு விடச் சொல்லி சிபாரிசு செய்திருந்தார் சீமாவையர். சாய்பு எவ்வளவு வேண்டுமானாலும் வாடகையாகத் தரத் தயாராயிருக்கிறார் என்றும், முன் பணமாகவும் ஒரு பெருந்தொகை மடத்துக்குத் தருவதோடு கட்டிடத்தைத் தம் செலவில் கட்டிக் கொள்ள அவரால் முடியும் என்றும் அவருக்கு அந்த இடத்தை விடுவதால் மடத்துக்குப் பெரிய லாபம் என்றும் கடிதத்தில் எழுதியிருந்தது. படித்ததும் இறைமுடிமணி சர்மாவை நோக்கிக் கேட்டார்: –

 

    • “நம்ம ஒப்பந்தம் கையெழுத்தாறதுக்கு முந்தியே இந்தக் கடிதாசைச் சாய்பு கொண்டாந்து கொடுத்தும் நீ ஏன் பேசாமல் இருந்தே?”

 

    • “மனுஷனுக்கு வாக்கு நாணயம் வேண்டாமா? நீதான் முதல்லே அந்த இடத்தைக் கேட்டே. உனக்கு வாக்குக் குடுத்தாச்சு. அப்புறமா இன்னொருத்தர் வந்து கூடக் கொஞ்சம் ரூபாய் தரேங்கிறார்னு நான் வார்த்தை மாறலாமா? உனக்கு விடறேன்னு மடத்துக்கும் எழுதிக் கேட்டுண்டப்புறம் நான் யாருக்கும் எதுக்கும் பயப்பட வேண்டியதில்லே…”

 

    • “எப்படியோ தகவல் தெரிஞ்சுக்கிட்டு நல்ல சமயத்திலே குறுக்கே வந்து நுழைஞ்சிருக்காரு மனுஷன். சீமாவையருக்கும் அஹமத் அலி சாயபுவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் கூட உண்டும்பாங்க…”

 

    • “எப்பிடியானா என்ன தேசிகாமணி! நான் ஏமாறலே… ஏமாற மாட்டேன். தெருமுனையிலே இருக்கிற காலி இடத்திலே பலசரக்குக் கடைபோட்டால் அக்கிரகாரத்து மனுஷாளுக்கும் மத்தவாளுக்கும் சௌகரியம். பலசரக்குக் கடை அளவு ஜவுளிக்கடை அன்றாடத் தேவைக்குப் பயன்படறதா இருக்கப் போறதில்லே. ஏற்கனவே பஜார்லே பத்து இருபது ஜவுளிக்கடை இருக்கு. அத்தனையிலேயும் பெரிய கடை வந்துட்டுப் போனாரே பாய், அவரோடது தான். இவ்வளவும் போறாதுன்னு புதுசா இன்னும் தெரு முனையிலே எதுக்கு ஒரு ஜவுளிக்கடை? சிங்கப்பூர் பணம் வெள்ளம் வெள்ளமா வரது. ஊர்ல முக்கால்வாசி வீடு நெலம் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிப் போட்டாச்சு. இன்னம் ஆசை தீரலே. எதிலே, எதை லீஸுக்கு எடுக்கலாம் எங்கே கடை போடலாம்னு தேடிண்டு அலையறாங்க.”

 

    • “நிஜமாவே கடை போடணும்கிறதை விடப் போட்டிக்கு நின்னு எனக்கு அந்த இடம் கிடைக்க விடாமப் பண்ணிடணும்னு வந்த மாதிரித் தோணுதில்லே… விஷயம் முன்கூட்டியே அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சிச்சுன்னுதான் எனக்குப் புரிய மாட்டேங்குது.”

 

    • “எனக்கு இப்போ புறப்பட்டுப் போனானே மடத்துக் குமாஸ்தா இவன் மேலேயே சம்சயம் உண்டு! இவன் சீமாவையருக்கு ரொம்ப வேணுங்கப்பட்டவன் தேசிகாமணி!”

 

    • “இருக்கும்! யாரோ சொல்லித் தகவல் தெரிஞ்சு தான் சீமாவையரு சாய்புவை இங்கே ஏவிவிட்டு லெட்டர் குடுத்து அனுப்பிச்சிருக்காரு… நம்மைப் போலக் கூட்டாளிகளுக்கு ஒவ்வொரு செலவுக்கும் ரூபாய் ரூபாயாப் பணத்தைக் கஷ்டப்பட்டுத் தேடவேண்டியிருக்கு. அஹமத் அலி பாயைப் போல நாலு திசையிலேருந்தும் பணம் லட்சலட்சமாக் குவியறவங்களுக்கு அளவு மீறி அப்பிடிக் குவியற பணத்துக்கு எதைச் செலவு செய்யலாம், எந்த இடத்தை விலைக்கு வாங்கலாம், எதை அதிக வாடகைக்குப் பிடிக்கலாம்னு தேடி அலைய வேண்டியிருக்குது…”

 

    • “பணம் வெறும் சந்தோஷத்தைத்தான் குடுக்கும். ஒழுக்கமும் யோக்கியதையும் தான் மன நிம்மதியைக் குடுக்கும் தேசிகாமணி! பணம் வேணது இருந்தும் ஒழுக்கமும், யோக்கியதையும் இல்லாத காரணத்தாலே எத்தனை பேர் இராத் தூக்கமில்லாமத் தவிக்கிறான் தெரியுமா உனக்கு?”

 

    “அதெல்லாம் தெரிய வேண்டாம்ப்பா நமக்கு! அயோக்கியனா இருந்து லாபம் சம்பாதிக்கிறதைவிட யோக்கியனா இருந்தே நாம நஷ்டப்படலாம். நமக்கு அது போதும்” என்ற இறைமணிக்கு, அஹமத் அலிபாயும் சீமாவையரும் விஷயத்தை இத்துடன் விட்டுவிடமாட்டார்கள் என்பது தெரிந்துதானிருந்தது. சர்மாவும் அதை உணர்ந்திருந்தார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 13தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 13

அத்தியாயம் 13 காமாட்சியம்மாள் நேரடியாகக் கமலியைக் கடிந்து கொள்ளவில்லை என்றாலும் பார்வதியை அவள் கண்டித்துக் கொண்டிருந்த வார்த்தைகளின் வேகம் கமலியையும் பாதித்தது. சமையலறைக்குள் தோசைக்கு அரைத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள் பார்வதியைப் பார்த்ததும் முதல் கேள்வியாக “ஏண்டி! உன்னை சந்தி விளக்கை ஏத்தி

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 8தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 8

  அத்தியாயம் 8   வசந்தி மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே வந்த போது காமாட்சியம்மாள் மணைப் பலகையைத் தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு புடவைத் தலைப்பையே விரித்துச் சமையல்கட்டு முகப்பில் ஒருக்களித்தாற்போலப் படுத்துக் கொண்டிருந்தாள். மாமி தூங்கிக் கொண்டிருக்கிறாளோ என்று முதலில்

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 6தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 6

அத்தியாயம் 6   யாரும் எதிர்பாராத விதத்தில் கமலி திடீரென்று குனிந்து விசுவேசுவர சர்மாவின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கினாள். பக்கத்து திருமண மண்டபத்தில் கெட்டி மேளம் முழங்கிக் கொண்டிருந்த அந்த மங்கலமான வைகறை வேளையில் ஒரு மணமகளை