Tamil Madhura சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே',தொடர்கள் சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 01

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 01

இதயம் தழுவும் உறவே – 01

காலையின் பரபரப்பு மெல்ல குறைந்ததும் சற்று ஓய்ந்து அமர்ந்தார் மீனாட்சி அம்மா. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால், பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் அவருடைய மகன்களுக்கு விடுமுறை தினமாக இருந்தது.

மீனாட்சி அம்மாவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் மனோகரன், அவனுக்கு வித்யாவுடன் திருமணம் முடிந்து ஆதித்யா என்னும் நான்கு வயது மகன் இருக்கிறான். அவனுக்கு அடுத்து கவியரசன். மூத்தவன் தனியார் பள்ளியிலும், இளையவன் அரசு பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றுகின்றனர்.

ஓய்ந்து அமர்ந்திருந்த அன்னையின் பக்கவாட்டில் வந்தமர்ந்தான் கவியரசன். “என்னம்மா பலமான யோசனை போல?” தாயின் இலக்கற்ற பார்வையை பார்த்து மகன் கேட்க, அவனை வாஞ்சையுடன் பார்வையால் வருடினார் அன்னை. சமீபமாகவே அவர் மனதில் எல்லையற்ற சஞ்சலம். தன் இளைய மகனின் திருமணம் குறித்து. இப்பொழுதும் அதை எண்ணியபடி தான் அமர்ந்திருந்தார்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாக கவியரசனுக்கு பெண் பார்த்து வருகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தினால் வரும் வரன்கள் எல்லாம் தகையாமல் தட்டிப் போய்க்கொண்டே இருந்தது. அந்த கவலை அவரை சற்று அதிகமாகவே வாட்டியது.

ஆரம்பத்தில், கவியரசன் தனக்கு மணப்பெண் அமையாததை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் இவனது ஜாதகத்தை இருபத்தினான்கு வயதினிலேயே எடுத்து விட்டார்கள். அப்பொழுதே எதற்கு திருமணம் என்ற எண்ணத்தோடு இவன் இருக்க, மீனாட்சியோ சற்று வற்புறுத்தி தான் சம்மதிக்க வைத்திருந்தார். அதனால் வரன் தள்ளி போவதில் இவனுக்கு அப்பொழுது பெரிதாக எந்தவித சங்கடங்களும் இல்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல அன்னையின் கவலை புரிய, திருமணம் தட்டிப்போவதன் மூல காரணங்களும் விளங்க, சமீபமாக தான் அவனுக்கே திருமணத்தை தள்ளி போட வேண்டாம் என்ற எண்ணம் வலுத்திருந்தது. அதிலும் இவன் குறித்து சுற்றத்தில் பரவிக் கொண்டிருக்கும் செய்திகளின் மூலம் தான் அவனுக்கு சில விஷயங்களே புரிந்திருந்தது.

சொந்தபந்தத்தில், “இவன் இருக்கிற அழகுக்கு எந்த பொண்ணையும் பிடிக்க மாட்டீங்குதுங்கறான். எல்லாம் சம்பாரிக்கிற திமிரு தான். காசு பணம் இருக்குன்னு யாரையும் மதிக்கிறது இல்லை” என்பது போன்ற பேச்சுகள் தான் உலாவிக் கொண்டிருந்தது. கவியரசன் இதற்கும் மிகவும் லட்சணமானவன் தான். அவனது அழகினை விழிகளாலோ, மனதாலோ ஒப்புக்கொள்ள முடியாத குணவதியின் பேச்சுக்கள் இப்படித்தான் உலாவிக் கொண்டிருந்தது.

இது போன்ற பேச்சுக்கள் உலாவுவதை ஒரு உறவினப்பெண் இவனுக்கு தெரிவித்திருக்க, அதோடு பரப்பி விட்டவர் யாரென்றும் சொல்லியிருக்க அவனுக்கு அந்த செய்தி கிடைத்ததிலிருந்து மிகுந்த அதிர்ச்சி.

விஷயத்தை தெரிந்தது முதல் எல்லையற்ற கோபம் தான். இருப்பினும், இந்த விவகாரத்தை வைத்து வீட்டில் எந்த பிரச்சனையையும் வளர்க்க அவன் விரும்பவில்லை. அவன் பொறுத்துப் போகும் குணம் கொண்டவன் இல்லை தான், இருந்தும் அன்னைக்காக பொறுமை காத்தான். ஆனால், இது எதுவும் தெரியாத மீனாட்சி, என்ன காரணத்தால் மகனுக்கு திருமணம் அமையவில்லை என புரியாமல் மனபாரம் கொண்டார். நாளை பார்க்கப் போகும் பெண்ணாவது அவனுக்கு அமைய வேண்டும் என்பது தான் அவரது தற்போதைய சிந்தனை.

“என்னம்மா கேட்டுட்டே இருக்கேன். இன்னும் யோசனை போல!” தாயின் எண்ணங்களும், கவலையும் என்னவாக இருக்கும் என கவியரசனுக்கு சில நாட்களாகவே புரிந்து தான் இருந்தது. இருந்தும் எதையும் வெளிப்படையாக காட்டாமல் இயல்பாகவே கேட்டான்.

“ஒன்னும் இல்லைப்பா. நாளைக்கு போய் பார்க்கிற இடமாச்சும் உனக்கு அமையனும். அதைப்பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன்” என்றார் கவலையுடன்.

“அதெல்லாம் எந்த கவலையும் வேண்டாம்மா. நல்லதே நடக்கும்” என்றான் மகன் இன்முகமாய். இது அன்னைக்காக சொன்ன ஆறுதல் வார்த்தைகள் இல்லை. உண்மையில் அவன் மனதில் அந்த உறுதி தான் இருக்கிறது. இந்த சம்மந்தத்தை சரிபடுத்தி முடித்துக் காட்டும் உறுதி.

பெண் வீட்டைப்பற்றி, பெண்ணைப்பற்றி நேரடியாக அவனாகவே விசாரித்து தெரிந்து கொண்டான். அனைத்தும் திருப்தியே! இயன்றவரை இந்த பெண்ணையே மணம் முடித்து விட வேண்டும் என்ற தீவிரத்தோடு தான் கவியரசன் இருக்கிறான்.

ஆனால், இவனுக்கு பார்த்திருக்கும் மணப்பெண்ணின் வீட்டிலோ, மணப்பெண்ணான யசோதா இவனுக்கு எதிர்பதமாய் எண்ணி சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

“அம்மா, நான் சொல்லறதை ஏன் கேக்க மாட்டீறீங்க. அப்பா இறந்து ஒரு வருஷம் தான் ஆச்சு. அதுக்குள்ள இப்படி கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சா எப்படி? அவங்க ரெண்டு பேரும் இப்பதான் காலேஜ் வேற சேந்து இருக்காங்க” என தன் அன்னை சுந்தரியிடம் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள் யசோதா.

யசோதா, கவியரசனுக்கு தற்பொழுது பார்த்திருக்கும் மணப்பெண். யசோதாவின் வீட்டினர் சற்று நடுத்தர வர்க்கத்திற்கும் குறைவானவர்களே. குடும்ப தலைவர் இறந்திருந்தார். அம்மா சுந்தரி சிறியதாக காய்கறி கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். மூத்த மகளான யசோதா கல்லூரி படிப்பை இரண்டாண்டோடு நிறுத்திவிட்டு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கிறாள். இவளுக்கு அடுத்து இரட்டையர்கள் அசோக், அகிலா. இருவரும் கல்லூரி முதலாமாண்டு படிக்கிறார்கள். அசோக் ஒரு ஜெராக்ஸ் கடையில் மாலை நேரம் வேலை பார்க்க, அகிலா அம்மாவுக்கு உதவியாக காய்கறி கடையில் கல்லூரி முடிந்து வந்து வேலை பார்ப்பாள்.

“என் பயம் எனக்கு யசோ, நான் ஒண்டியா இருக்கேன். உங்களை எல்லாம் கரை சேத்த வேணாமா?” என தாயாக கவலை கொண்டார் சுந்தரி.

“இப்பவே என்ன அவசியம் மா? அவங்க ரெண்டு பேரும் படிக்கட்டும். அதுவரை உங்களுக்கு உதவியா வேலைக்கு போறேன் மா” என கெஞ்சத்தொடங்கினாள் யசோதா.

“அது சரி வராது. படிக்கவும் மாட்டேன்னு பிடிவாதம் செஞ்ச. ஏதோ வர வருமானத்துல சமாளிச்சுக்க போறேன், அதைவிட்டுட்டு நானும் வேலைக்கு போறேன், உங்களுக்கு உதவி செய்யறேன்னு பிடிவாதம் செஞ்ச. அப்பவே உன் பிடிவாதத்துக்கு விட்டு கொடுத்தது தப்பா போச்சு. இப்ப நல்ல வரன் வந்திருக்கு. பையன் கவர்ன்மென்ட் வேலை. இப்போ என்னடான்னா கல்யாணத்தையும் தள்ளி போட பார்க்கிற. இந்த முறை உன் பிடிவாதம் வேலைக்காகாது” என கண்டிப்புடன் தாயார் கூறினார்.

“உங்களை எல்லாம் கஷ்டப்பட வெச்சுட்டு நான் மட்டும் கல்யாணம் பண்ணிட்டு போகணுமா?” பிடிவாதமும், கெஞ்சலும் வேலைக்கு ஆகவில்லை என்றதும் அழுவது போல பாவனை செய்தாள். ம்ம் ஹ்ம்ம் எதற்கும் சுந்தரி அசையவே இல்லை.

“யாரும் கஷ்டப் படலை. என்ன சாப்பாட்டுக்கு இல்லாமையா இருக்கோம். வர வருமானத்துல சமாளிக்க எனக்கு தெரியும். நான் பாத்துக்கிறேன்” என்றார் அழுத்தம் திருத்தமாக. இனி அன்னையிடம் இந்த விஷயத்தில் சரி கட்ட முடியாது என புரிய, மனதில் வேறு திட்டங்களை தீட்டினாள் மகள்.

மறுதினம், ஞாயிற்றுக்கிழமை, கவியரசன் குடும்பத்தினர் பெண் பார்க்க வந்திருந்தனர். யசோதா தன் தங்கை அகிலாவை தான் உருட்டி மிரட்டி வைத்திருந்தாள். தான் கூறியதை வரும் மாப்பிள்ளையிடம் கூறி விடவேண்டும் என்று.

யசோதா கூறியதிலிருந்து அகிலாவிற்கு மிகவும் பதற்றமாக இருந்தது. ஆனால், செய்யாமல் விட்டால் அக்கா விட மாட்டாள் என்பதால் மிகவும் தவிப்பாக உணர்ந்தாள்.

அவளது தவிப்பைப் பார்த்த அசோக், “என்னடி உன்னையா பொண்ணு பாக்க வந்திருக்காங்க. நீ என்னமோ இப்படி மிரண்டு போயிருக்க” அகிலாவின் செய்கையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து அவளிடம் கேட்க,

அவனை நன்கு முறைத்தவள், “ம்ப்ச் போடா. நீயும் வேற படுத்தாத. நானே டென்ஷன்ல இருக்கேன்” என்று கூறிவிட்டு, மாப்பிள்ளையிடம் எப்படி பேசுவது என்ற யோசனையில் மூழ்கி விட்டாள்.

அவளை வினோதமாக பார்த்த அசோக், இவள் என்னவோ செய்து கொள்ளட்டும் என்று எண்ணி கவியரசனிடம் சென்று மெல்ல பேச்சு கொடுத்தான். அவனுக்கு இந்த வரன் வந்தது குறித்து மிகவும் சந்தோசம். தன் தமக்கைக்கு நல்வாழ்வு அமைய போகிறதே என்று மனநிறைவாய் உணர்ந்தான். அதோடு குடும்பத்தின் ஆண்மகனாய் கவியரசனைப் பற்றியும் நேரடியாக தெரிந்து கொள்ள வேண்டுமே! ஏற்கனவே அவனே பொறுப்பாய் மாப்பிள்ளையைப் பற்றியும், அவர்கள் குடும்பம் பற்றியும் விசாரித்து விட்டான். அவை அனைத்தும் திருப்தியே! இப்பொழுது நேரடியாக பேசிப் பார்க்க நினைத்தான். நல்ல வரன் என்று நினைத்து, பெண்ணை கொடுத்தபிறகு ஏமாந்து விடக்கூடாதே!

அகிலாவோ தன் மனதில், ‘இந்த அக்கா என்கிட்ட சொன்னதுக்கு அசோக்கிட்ட சொல்லி இருக்கலாம். அவன் பாரு எவ்வளவு ஈஸியா மாமா கிட்ட பேசிகிட்டு இருக்கான்’ என்று எண்ணிக் கொண்டாள். ‘மாமா’ என்னும் உரிமை அவள் மனதில் தானாக வந்திருந்தது. தன்போல அவளையும் அறியாமல் கவியரசனை யாசோதாவின் கணவனாகவே மனதிற்குள் வரித்துக் கொண்டாள். குடும்பத்தினர் அனைவரையும் கவியரசன் தன் தோற்றத்தால், புன்னகையால், பேச்சால், தகுதியால் எளிதாக கவர்ந்திருந்தான்.

“அகிமா, கொஞ்சம் அக்காவை கூட்டிட்டு வாடா” என சுந்தரி கூற, ‘அச்சோ அக்கா என்ன சொல்லுவாளோ?’ என மிரண்டபடி தான் அக்காவிடம் போனாள். அவள் எண்ணியது போலவே, “என்னடி பேசுனியா?” என யசோதா மிரட்ட,

“அக்கா இப்போ தான வந்திருக்காங்க, பொறுக்கா. யாருக்கும் தெரியாம வேற சொல்லணும்” என சொல்லியவள், “சீக்கிரம் வா. அம்மா வர சொன்னாங்க” என்று சொல்லி அவளை அழைத்துப் போனாள்.

பொதுவாகவே அனைவரின் முன்பும் மணமகனை பார்க்க பெண்கள் தயங்குவார்கள். மறைந்திருந்து தான் கவனிப்பார்கள். யசோதாவோ, எப்படியும் இந்த சம்மந்தம் அமையாது என்ற எண்ணத்தில் கவியரசனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

யசோதாவைப் பார்த்ததும் கவியரசனுக்கு பூரண திருப்தி. யாரும் எதுவும் முரணாக அம்மாவிடம் கூறும் முன்பு, “அம்மா, எனக்கு பொண்ணு, அவங்க குடும்பம் எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க கிட்டயும் சம்மதம் கேட்டுட்டு எல்லாம் பேசி முடிச்சுடுங்க. தள்ளி போடாதீங்க” என்று பளிச்சென கவியரசன் கூறிவிட, மீனாட்சிக்கு மிகந்த சந்தோசம்.

“ரொம்ப சந்தோசம் பா” என வார்த்தையிலும் கூறியவர், பேச்சுவார்த்தைகளை உடனே தொடங்கி விட்டார்.

இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மூத்த மருமகள் வித்யாவின் காதுகளில் தான் புகை வந்தது.

வித்யா, மனோகரனை திருமணம் முடித்து வரும்பொழுது, சகோதர்கள் இருவருமே தனியார் பள்ளிகளில் தான் பணியில் இருந்தனர். அதன்பிறகு, கவியரசன் அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு பணியை பெற்று விட்டான். மனோகரனால் தேர்ச்சி பெற இயலவில்லை. அதனால் இன்னமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அப்பொழுதிருந்தே வித்யாவிற்கு நெருடல் தான். அவளது சுபாவமே, தனக்கு தான் அனைத்தும் சிறப்பாக கிடைக்க வேண்டும் என்பது தான். மற்றவர்கள் அனைவரும் தனக்கு கீழாக இருப்பதையே அவள் விரும்புவாள்.

ஆனால், புகுந்த வீட்டில் இது எதிர்பதமாக மாறிவிடவும், மனோகரனின் நிம்மதி பறிபோனது. அவனும், ‘பிறர் மனை நோக்காதே!’ என பலமுறை சொல்லியாயிற்று. என்ன புண்ணியம்? ஐந்தில் வளையாதவள் ஐம்பதிலா வளையப் போகிறாள்? மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தே வயிறு எரிந்து கொண்டிருந்தாள். கூடவே, அவளையும் அறியாமல் அவளது மகிழ்ச்சியையும் எரித்துக் கொண்டிருந்தாள் என்பது புரியவில்லை பாவம்.

வித்யாவின் இயல்பு தான், கவியரசனுக்கு அமையும் பெண்களை எல்லாம் தட்டி விட்டது. அவளுக்கு அவளை விட அழகில், படிப்பில், அந்தஸ்தில் குறைவான பெண்ணையே மச்சினனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்னும் எண்ணம். ஆனால், அரசு அலுவலில், நல்ல தோற்றத்துடனும், குணத்துடனும் இருக்கும் கவியரசனுக்கு இவள் எண்ணத்திற்கு எதிர்பதமாகவே மணப்பெண்கள் குவிந்தனர்.

அத்தையிடம், “அந்த பொண்ணு கொஞ்சம் தலைக்கனம் போல தெரியுது?”, “வசதியை பாத்தா, வீட்டோட மாப்பிள்ளையா வெச்சுக்குவாங்க போல”, “பொண்ணு கவியரசனுக்கு சுத்தமா பொருத்தம் இல்லை”, “படிப்பு ரொம்ப கம்மி” என எதையாவது கூறி நாசூக்காய் தட்டி விடுவாள்.

மீனாட்சி சற்றே நிதானமாக யோசித்திருந்தால், எல்லா வரன்களையும் தட்டி கழிப்பது யாரென அவருக்கு புரிந்திருக்கும். ஆனால், அந்த அளவு பக்குவம் எல்லாம் அந்த அன்னையிடம் இல்லை. சற்று வெகுளியானவர் என்பதால் இதுவரை அவர் கண்டுபிடிக்கவில்லை.

கவியரசனே வித்யா உறவினர்களிடம் பரப்பிவிட்ட செய்திகளால் தான், அவளின் எண்ணத்தை புரிந்திருந்தான். இதை வளர விடக்கூடாது என்னும் முடிவில் தான் இப்பொழுது திருமணத்தில் இவ்வளவு உறுதியாக இருக்கிறான்.

வித்யா அங்கு இருக்கும் நிலையைப்பார்த்து குமைந்தாலும், ‘சரி அழகில் மட்டும் தானே உசத்தி, மற்றபடி படிப்பு, அந்தஸ்து என எதிலும் இந்த பெண் என்னோடு நிற்க கூட முடியாது’ என செருக்காக எண்ணிக்கொண்டாள். இருந்தாலும் ஒரு கடுப்பு. இவனே முடிவெடுக்கிறான். எங்களை எல்லாம் பார்த்தால் எப்படி தெரிகிறது என்பது போல.

இங்கு பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்க, கவியரசன், அசோக், அகிலா இருவரிடமும் அவர்கள் படிப்பைப் பற்றி பொதுவாக பேசிக்கொண்டிருந்தான்.

அசோக், அம்மா அழைத்ததால் அவ்விடத்திலிருந்து நகர்ந்து விட, இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று புரிந்து கொண்ட அகிலா, தயங்கி தயங்கி தன் தமக்கை கூறியதை கவியரசனிடம் கூறி விட்டிருந்தாள். அவள் கூறியதை கேட்டதும், கவியரசனின் முகத்தில் இருந்த புன்னகை மெல்ல தேய்ந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 04சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 04

இதயம் தழுவும் உறவே – 04 மலர்களோடு பனித்துகள்கள் உறவாடும் அழகான அதிகாலை நேரம். தொடர்ந்து கவியரசனின் அறைக்கதவை தட்டியபடி இருந்தாள் வித்யா. அதில் முதலில் உறக்கம் கலைந்தது அவன் தான். கதவு தட்டலில் பதில் இல்லாது போக கைப்பேசியில் வித்யா

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 10’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 10’

பெங்களூரில் அவர்கள் விமானம் தரையிறங்கியது. உஷ்ணம் சற்றும் குறையாமல் காதம்பரி இருக்க, சோனாவுக்கு டாட்டா காட்டிவிட்டு, பிரியாவிடை பெற்று வந்தான் வம்சி. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போலாயிற்று காதம்பரிக்கு. ‘சவாலா விடுற சவால்… அதுவும் காதம்பரிகிட்ட… காலேஜில் எத்தனை பசங்க

Chitrangatha – 23Chitrangatha – 23

ஹலோ பிரெண்ட்ஸ், உங்க எல்லாரோட கமெண்ட்ஸ்-ம் பார்த்தேன். மிக்க நன்றி… முதலிலே சொன்னது மாதிரி இந்தக் கதைக்கு நீங்க அளிக்கும் வரவேற்பு என்னோட பொறுப்பை இன்னமும் அதிகப்படுத்துது. இப்ப சரயு – ஜிஷ்ணு பிரிவை ஓரளவு டைஜெஸ்ட் பண்ணிருப்பிங்கன்னு நினைக்கிறேன். இன்னமும்