Tamil Madhura ஆப்பிள் பசி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் சாவியின் ஆப்பிள் பசி – நிறைவுப் பகுதி

சாவியின் ஆப்பிள் பசி – நிறைவுப் பகுதி

மாட்டு வண்டியில் அமர்ந்திருந்த சாமண்ணா மீண்டும் வெளியே பார்த்தான். “பாப்பா!” என்று வாய்விட்டுக் கூவினான். வானத்தின் மேகங்கள் மத்தியில் அவள் முகம் அந்தரமாகத் தெரிந்தது.

“பாப்பா! உன்னுடைய தியாகம், அன்பு, பாசம் எல்லாம் இப்போதுதான் தெரிகிறது. நீ சாதாரண மனுஷி அல்ல; தெய்வத்துக்குச் சமமானவள். உன்னை நான் பெரும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டேன். இனி ஒருபோதும் என்னால் உனக்குச் சங்கடம் இராது. நான் உனக்கு இழைத்த குற்றங்களுக்கெல்லாம் ஆண்டவன் என்னைத் தண்டித்துவிட்டான். நீ ஓடி வருவாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் உனக்கு ஒரு பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒரு வேளை என் கால் சரியாக இருந்தால் உன்னை நானே வந்து பார்த்தாலும் பார்த்திருப்பேன். ஆனால் இப்போது இந்த நிலையில் வரவே மாட்டேன். என்னுடைய அகம்பாவத்துக்குக் கிடைத்த பரிசு இது. உன்னைப் பார்க்கவே வெட்கப்படுகிறேன்.

பாப்பா, என் இஷ்டப்படி உயர உயரப் பறக்கலாம் என்று இறுமாப்புடன் வாழ்ந்தேன். கடவுள் என்னைப் பாதாளத்தில் வீழ்த்திவிட்டார். நான் இந்தக் கதிக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இப்போது என் கிராமத்திற்கே போகிறேன். உன்னைப் பார்க்கக் கூட எனக்குத் தைரியமில்லை. நான் உனக்கு இனி எவ்விதத்திலும் பொருத்தமில்லாதவன். என்னை மன்னித்து விடு.”

சீரான குளிர் காற்று வண்டியை நோக்கி வீசியது. கணத்துக்குக் கணம் அதன் வேகமும் வாடையும் கூடியது.

“விறைக்குதுங்க!” என்று சொல்லிக் கொண்டே வண்டிக்காரன் ஒரு துண்டை இழுத்து உடம்பைச் சுற்றிக் கொண்டான்.

‘சொட சொட’ என்று சத்தம். மழை வண்டிக் கூரையைத் தாக்கியது. வண்டிக்காரன் நடுங்கி ஓரமாக ஒடுங்கினான்.

புறப்பட்டபோது சாமண்ணாவுக்கு உடம்பு ஒரு மாதிரி இருந்தது. சரியாகச் சாப்பிட்டு இரண்டு நாள் ஆயிற்று. இப்போது அவனுக்கும் உடம்பு வெடவெடத்தது. தொடர்ந்து கன மழை பெய்தது. சாதாரணத் திவலைகள் அல்ல. ஒரு சமுத்திரம் சொரிந்தது. வண்டிக்குள் இம்மி பாக்கி இல்லாமல் அத்தனையும் நனைந்து தெப்பலாகிவிட்டது. சாமண்ணா வெடவெடத்தான். பெட்டியிலிருந்து மற்றொரு போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டான். ‘அம்மா, அம்மா’ என்று அரற்றினான். பெட்டி மீது சாய்ந்து கொண்டான். சாதாரணக் கல் பாவிய பாறையாதலால் கடக் கடக் என்று சக்கரம் அரைக்க, கூண்டு பெரிதாக ஆடியது. இருபக்கமும் அடர்த்தியான மர வரிசைகள் பேய் போல வடிவம் காட்டின.

“வண்டிக்காரரே! இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?” என்று கேட்டான் சாமண்ணா.

“ஆறு கல்!” என்றான் வண்டிக்காரன்.

“ஆறு மைலா?”

ஒரு நிலையாகப் படுக்க முடியவில்லை. மழை நின்றபாடில்லை. வண்டிக்காரன் ‘தா! தா!’ என்று குரல் கொடுத்து மாடுகளை அதட்டிக் கொண்டிருந்தான்.

சாமண்ணாவுக்கு நெஞ்சு படபடக்க, ஜுரக் குளிர் வேகமாக அடிக்க, “அம்மா! அம்மா!” என்றான். கண்ணைத் திறக்க முடியவில்லை.

சட்டென்று வண்டி எங்கேயோ நின்றது. வண்டிக்காரன் எட்டிப் பார்த்தான். முதலில் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. பிறகு எதிரில் நீர்க்கோடு தெரிந்தது. ஏதோ ஒரு ஓடை நிரம்பி ஓடுகிறது என்பதைப் புரிந்து கொண்டான்.

“ஐயா, ஐயா!” என்று சாமண்ணாவை எச்சரித்தான். உள்ளே பதில் இல்லை.

வண்டிக்காரன் குதித்தான். மாடுகள் புத்திசாலித்தனமாக நின்றன.

அவற்றின் தலைக்கயிறுகள் இரண்டையும் பற்றிக் கொண்டு முன்னால் தண்ணீருக்குள் மெதுவாக நடந்தவாறு போனான். வண்டியும் பின்னாடி சென்றது. மறுபக்கம் மேடு ஏறினதும், “ஐயா” என்று அழைத்தபோதும் சாமண்ணா பதில் கூறாமல் படுத்துக் கிடந்தான்.

பின்புறமாக வந்து உசுப்பினான். தொட்டவுடன் கை சுட்டது. “ஐயா, ஐயா?”

வெறும் முனகல் தான்.

திடீரென்று வண்டி பக்கவாட்டில் சாயத் தொடங்கியது. ஓடையில் வந்த வெள்ளத்தின் கனமும் வேகமும் கூடுதலாயிற்று. மாடுகள் தடுமாறின. வண்டிக்காரன் திடுக்கிட்டான். தண்ணீரின் ஆவேசம் அதிகமாகி இதற்குள் வண்டி பள்ளத்தில் இறங்கிக் குடை சாய்ந்தது. “ஐயா!” என்று அலறினான் வண்டிக்காரன்.

சாலை உடைப்பெடுத்திருந்ததால் பள்ளத்தில் இறங்கிய வண்டி உருண்டு விட்டது.

சாமண்ணா முகத்தை மெள்ள மெள்ளத் திருப்பினான். கண்ணை விழித்துப் பார்த்தான்.

எங்கே இருக்கிறோம் என்று தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.

“அம்மா… அம்மா!”

உடம்பு வெடவெடத்தது. அவனது காதில் மட்டும் பிரக்ஞை இருக்கிறதோ? ‘ஓ’ என்று இரைச்சல் கேட்கிறதே! ஷவர் இப்படிச் சத்தம் போடாதே! ஒருவேளை! மழையோ!

நாட்கணக்கில் அங்கே இருப்பது போன்ற பிரமை! திரும்பி உணர்வு வந்தபோது ‘ஷவர்’ நின்றுவிட்டது. யாரோ அவனைத் தொடுகிறார்கள்.

“உயிர் இருக்கு குமாரசாமி!” என்றது ஒரு குரல்.

“பாவம்! யாரோ தெரியலை, நினைவு இல்லாமக் கிடக்கிறாங்க!” இன்னொரு குரல்.

“இந்தா முருகேசா! முதல்லே ஆளைத் தூக்கி நம்ம வண்டியிலே போடுவம்! ராத்திரி வீட்டிலே வச்சிருந்து காலையிலே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவம்.”

சாமண்ணாவுக்குச் சிறிது நேரம் எதுவும் தெரியவில்லை. பிறகு ஈரத்தை விட்டு உடல் மேலே மிதப்பது தெரிந்தது. அடுத்து, ஒரு வைக்கோல் மெத்தையில் கிடப்பது தெரிந்தது.

‘ஊரை விட்டுப் புறப்பட்டோமே! மழை அடித்ததே! இப்போது இல்லையே! என்னவோ குரல் கேட்கிறதே!’

“நல்லா நனைஞ்சிருக்காரு குமாரசாமி!”

“ஆமாம். ஜுரம் வேற அடிக்குது. ஜன்னி கண்டிருக்கு.”

“வீட்டிலே போய் உடனே உலர்ந்த துணி போட்டுத் துவட்டிக் கம்பளியாலே போர்த்தணும்.”

கண்ணை மூடுகிறான். எல்லாம் இருட்டாகிறது.

எத்தனை யுகமான இருட்டு? தெரியாது.

கண்கள் லேசாக விழிக்க, பார்வை மங்கலாகத் தெரிய, ஏதோ ஒரு வீட்டின் அறைக்குள் இருப்பது புலனாகிறது.

‘என்ன இது? எங்கே வந்திருக்கிறோம்? என் சொந்த கிராமத்துக்குத்தானே புறப்பட்டேன்? இப்போது இங்கே எப்படி வந்தேன்! இது யார் வீடு?’

நிதானமாக அறை முழுதும் பார்த்தான். வெளிச்சம் முன்னைக் காட்டிலும் கூடியிருந்தது. அறை புதிது. இடம் புதிது. அவன் மீது உள்ள ஆடை புதிது! போர்வை புதிது!

அறைக்குள் யாரோ வரும் நிழல் தெரிந்தது. அந்த உருவத்தை வியப்போடு பார்த்தான். அடி வயிற்றில் ஒரு அதிர்ச்சி! வாய் அவனையறியாமல், “பாப்பா!” என்று அழைக்கிறது. ஆனால் சத்தம் வரவில்லை.

பிரமித்துப் பார்க்கிறான். மலங்க மலங்க விழிக்கிறான்.

“யார்?”

பாப்பாவிடம் இப்போது ஒரு கம்பீர யௌவனம் வந்திருந்தது. அமைதியாக, அடக்கமாக, அன்பின் உருவமாக நின்றாள்.

“பாப்பா!”

உணர்ச்சி பரவசத்தில் அழைத்தான்.

மந்தகாசமாக முறுவலித்தாள்.

‘இந்த ஜன்மமா, அடுத்த ஜன்மமா?’

வண்டியிலும், மழையிலும் அவன் ஜன்மம் முடிந்துவிட்டதா? அதன் பிறகு எப்படி இதைப் போன்ற ஒரு அமைதியான காட்சி எழுந்தது?

“பாப்பா!”

அவள் இன்னும் அருகில் வந்தாள்.

“நீதானா?”

“ஆமாம்…”

“இங்கே எப்படி வந்தேன்?”

“உங்க வண்டி மழையிலே தடம் மாறிக் குடை சாஞ்சிட்டுது. நீங்க பள்ளத்திலே கிடந்து உயிருக்குப் போராடிக்கிட்டிருந்தீங்க. நல்லவேளை! அந்தச் சமயம் எங்க அப்பா அந்த வழியா வந்திருக்காரு. அவர் மட்டும் பார்த்திராட்டா, நீங்க இந்நேரம் உயிரோடு இருக்க மாட்டீங்க!”

“இது… இது…”

“இது எங்க வீடுதான்!”

“இங்கே வந்துட்டனா?”

“ஆமாம்!”

“நான் எங்க ஊருக்குப் போகலையா?”

“இனிமே உங்க ஊர், வீடு எல்லாமே இதுதான்!”

“என்ன சொல்றே?”

“இனி, நீங்க இங்கே தான் இருக்கப் போறீங்க. நான் உங்களைத் தனியா விடப் போறதில்லை” என்றாள் பாப்பா.

சாமண்ணாவுக்கு அந்தக் குரலும், அதன் இதயமும், தாய்க்கு நிகரான பாசமும், உயிருக்கு உயிரான நேசமும் சட்டென்று, பளிச்சிடுவது போல இருந்தது.

“பாப்பா, என் கால்… என் கால்…” என்று துக்கம் பீறிட அழுதுவிட்டான். பாப்பா அவன் வாயைப் பொத்தினாள். “எனக்கு எல்லாம் தெரியும். இனி உங்களுக்கு வாழ்நாள் முழுதும் நான் தான் க்ரச்” என்றாள்.

பாப்பாவும் அவளது அமைதி சிந்தும் வதனமும் தனக்குச் சொந்தமாகத் தோன்றியது.

அவளை மணந்தாலும் சரி, அம்மா சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து மணக்காமல் சிநேகமாகவே அவளுடன் வாழ்ந்தாலும் சரி; இனி அவனுக்கு இதுதான் நிரந்தரமான வீடு.

முற்றும்

2 thoughts on “சாவியின் ஆப்பிள் பசி – நிறைவுப் பகுதி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 22திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 22

ஓடைக்கரை நெடுகத் தாழைப் புதர்களில் மணத்தை வாரிச் சொரியும் பொன்னின் பூங்குலைகள் மலர்ந்திருக்கின்றன. வேலுவுக்குப் பரீட்சையின்றிக் கல்லூரி மூடிவிட்டதால் ஊருக்கு வந்திருக்கிறான். அவன் முள் செறிந்த தாழைகளை விலக்கிக் கொண்டு கவனமாக இரண்டு பூங்குலைகளைக் கொய்து கொண்டு வருகிறான். மஞ்சள் பூச்சு

தனி வழி 3 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 3 – ஆர். சண்முகசுந்தரம்

3 அவன் மில்லில் வேலைக்குச் சேர்ந்து மாதம் ஒன்றுதான் ஆகிறது. விசைத்தறிகள் ‘டபடப’வென்று பலத்த சத்தத்துடன் ஓடுவதைக் கண்டதும், ‘அங்கிருந்து ஓடிவிடலாமா’ என்று நினைத்தான். ஆனால் மேஸ்திரி கருப்பண்ணன் தலைமாட்டில் தோள் மேலே கைபோட்டு நின்று கொண்டிருப்பது அவன் ஓட்டத்தைத் தடுத்து

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 30கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 30

அத்தியாயம் 30 – வஸந்த காலம் மறு நாள் உச்சிப் போதில், ஜலம் வறண்ட ராஜன் வாய்க்காலின் மணலில், இருபுறமும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த புன்னை மரங்களின் நிழலில், முத்தையன் மேல் துணியை விரித்துக்கொண்டு படுத்திருந்தான். அப்போது இளவேனிற் காலம். சித்திரை பிறந்து