Tamil Madhura ஆப்பிள் பசி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் சாவியின் ஆப்பிள் பசி – 4 (Audio)

சாவியின் ஆப்பிள் பசி – 4 (Audio)

டிந்து மண்மேடிட்டுப் போயிருந்த பெருமாள் கோவிலுக்கு சாட்சியாக கருட கம்பம் மௌனமாய் நிற்க, அரசமரத்தின் சலசலப்போடு கிராமத்துச் சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சைக்கிளை நிறுத்திக் கீழே இறங்கினான் சாமண்ணா.

அந்தச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, “தம்பி! குமாரசாமி வீடு எங்கே இருக்கு தெரியுமா?” என்று கேட்டான்.

“பாப்பா வீடா? அதோ ஒத்தை வண்டி தெரியுது பாருங்க அதான்” என்று கைகாட்டினான் ஒரு பையன்.

உள்குரல்:

“ஆறு மாதங்களுக்குப் பின் சற்றும் எதிர்பாராமல் தன்னைப் பார்க்கும் போது பாப்பா என்ன நினைப்பாள்? என்னை சரியான முறையில் வரவேற்பாளா? ஒரு வேளை அடியோடு மறந்து போயிருப்பாளா?”

சைக்கிளைத் திண்ணை ஓரமாக நிறுத்தினான்.

வாழைப் பூ வடிவத்தில் விட்டத்தில் தொங்கிய நெற்கதிர்களைச் சுற்றிக் குருவிகள் ‘லூட்டி’ அடித்துக் கொண்டிருந்தனர்.

ஜூலை மாதத்து வெயில் முதுகைப் பிளந்தது. உள்ளே முற்றத்து வெயிலில் தாம்பாளம் நிறையக் கீரை விதைகள் கறுப்பாக உலர்ந்து கொண்டிருந்தன.

சாமண்ணா தயக்கத்தோடு எட்டிப் பார்த்தான். பாப்பாவும் அவள் சிநேகிதி அலமேலுவும் தாழ்வாரத்தில் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

பின்பக்கம் இரண்டாம் கட்டிலிருந்து ‘தொம் தொம்’ என்று நெல் குத்தும் ஓசை, வீடெங்கும் நிறைந்திருந்த தானிய மூட்டைகளைக் கண்ட சாமண்ணாவின் உள்குரல்: “சுபிட்சமான பணக்காரக் குடும்பம் போலிருக்கு.”

யாரோ கனைக்கும் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த பாப்பா, ரேழியில் சாமண்ணா நிற்பதைப் பார்த்துவிட்டு ஆச்சரியம் கலந்து பூரிப்புடன், “உள்ளே வாங்க” என்றாள். மகிழ்ச்சிப் பெருக்கில் உள்ளம் சிறகடித்தது.

இதற்குள் அவள் தோழி அலமேலு கொல்லைப்புறத்து வழியாக ஓட்டமாய் ஓடி மறைந்து விட்டாள்.

“அப்பா இல்லையா?”

“பனங்கா வெட்டி வரப் போயிருக்கார்? இப்ப வந்துருவார். அம்மா பின் கட்டிலே இருக்காங்க” என்றாள் பாப்பா.

சாமண்ணாவின் உள்குரல்: ‘அம்மாவா? எந்த அம்மா? யாரைச் சொல்றா?’

“ஓடறாளே, அந்தப் பெண் யாரு?” என்று கேட்டான்.

“அடுத்த வீடு. என் சிநேகிதி. கூடப் படிச்சவ. வாங்க. இப்படி வந்து உட்காருங்க” என்று அழைத்து ஊஞ்சலைக் காட்டினாள். “எங்களை மறந்துட்டீங்களோன்னு நினைச்சோம். இத்தனை நாளா எங்க போயிருந்தீங்க? நானும் அப்பாவும் உங்களைத் தேடி ஒரு தரம் டவுனுக்குக் கூடப் போய்ப் பார்த்தோம். சரியான தகவல் எதுவும் கிடைக்கலே, டிராமாலயும் உங்களைக் காணலே…” என்று கூறியவள் தாகத்துக்கு மோர் கொண்டு வந்து கொடுத்தாள். “எங்க ஞாபகமே வரலையா, உங்களுக்கு?”

“உன்னை நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறதா அந்த ஓட்டல் ஐயர்கிட்ட போய் வத்தி வச்சிருக்கான் காதர்பாட்சா. அதைக் கேட்டுட்டு அந்த ஓட்டல்காரன் என்னைக் கண்டதும் ஒரேயடியா எகிறிக் குதிச்சான். அவன் மகளை அந்த அரைப் பைத்தியத்தை என் தலையில் கட்டிடணும்னு காத்திருந்தவனுக்கு இது ரொம்ப ஏமாற்றமாயிட்டுது. நான் அன்னைக்கு உங்களை வழி அனுப்பிச்சுட்டு ஓட்டலுக்குப் போனதும்…

‘ஏண்டா, அந்தத் தேவடியாச் சிறுக்கியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறயாமே! இதுக்குத்தான் உனக்கு இலவசமா வீடு கொடுத்து வச்சிருந்தனா? கூத்தாடிப் பயலே! உனக்கு வேறு யார்ரா பெண் கொடுப்பாங்க? தாசி மகதான் கிடைப்பாள்’ என்று கேலியாகச் சிரித்தான். அதைக் கேட்டதும் எனக்கு ரோசம் பொத்துக்கிட்டது. ரத்தம் கொதிச்சுது. பேயா மாறிட்டேன்.

‘ஏண்டா ஓட்டல்காரப் பயலே! என்ன சொன்னே? நாக்கை அடக்கிப் பேசு! பணத் திமிரா?’ன்னு பதிலுக்குக் கேட்டு அவன் கன்னத்திலே ஓங்கி அறைஞ்சுட்டேன். உடனே ‘லபோ லபோ’ன்னு கத்தி ஊரைக் கூட்டினான். ஒருத்தரும் அவனுக்கு உதவிக்கு வரலே…”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன? போலீசுக்கு லஞ்சம் கொடுத்து என் மேல திருட்டுக் குற்றம் சாட்டி எனக்கு ஆறு மாசம் ஜெயில் தண்டனை வாங்கிக் கொடுத்தான்…”

“அடப்பாவி! திருட்டுக் குத்தமா? உங்க பேர்லயா?”

“ஆமாம். நான் வீட்டிலே இல்லாத சமயம் பார்த்து மாறு சாவி போட்டுக் கதவைத் திறந்து அவன் மகள் செயினைக் கொண்டு வந்து வச்சுட்டு என் மேலே சந்தேகப்படறதாப் போலீஸ்ல சொல்லியிருக்கான். போலீஸ்காரங்க வந்து சோதனை போடறப்போ பாத்ரூமில செயினும் அலமாரியில இரண்டு நூறு ரூபா நோட்டும் கிடைச்சுது…

‘இந்த ரூபா ஏது? உன்னுதா’ன்னு கேட்டாங்க போலீஸ்ல. அது என் பணமில்லேன்னேன்.

‘செயின் மட்டும்தானே காணாமப் போயிட்டதா கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கார். அப்படின்னா இந்த ரெண்டு நூறு ரூபாய் நோட்டும் இங்கே எப்படி வந்தது’ன்னு கேட்டாங்க. எனக்குத் தெரியாதுன்னேன்… பாப்பா ஏன் அழறே? நீயும் என்னைத் திருடன்னு நினைக்கறியா?”

“இல்லை, அந்த நோட்டு ரெண்டையும் உங்களுக்கு உதவியாயிருக்கட்டுமேன்னு நான் தான் புஸ்தகத்துலே மறைச்சு வச்சுட்டு வந்தேன். அதுவே உங்களுக்கு அபகாரமாயிட்டுதேன்னு நினைக்கிறப்ப ரொம்ப துக்கமாயிருக்கு…”

“ஓகோ!, நீ வச்ச பணம்தானா அது! நான் செய்யாத குற்றத்துக்கு என்னை ஜெயில்லே போட்டு அவமானப்படுத்திட்டான் அந்த ஓட்டல்கார அயோக்கியன்! நான் மானத்தோடு வாழ்ந்துகிட்டிருந்தேன். என்னை அந்த ஊரார் முன்னே தலை குனிய வெச்சுட்டான். இருக்கட்டும் அவனை நான் சும்மா விடப் போறதில்லை” என்று கறுவினான்.

“குற்றம் செய்யறதுதான் அவமானம். செய்யாத குற்றத்துக்கு ஜெயிலுக்குப் போறது அவமானம் இல்லே” என்றாள் பாப்பா.

“நான் ஜெயிலுக்குப் போனதைக் கூட பெரிசா நினைக்கலே. உன்னை அவன் தாசி மகள்னு ஏசினதை நினைக்கறப்பதான் உடம்பெல்லாம் பத்தி எரியுது. ஜெயில்லேருந்து நேத்துதான் வெளியே வந்தேன். நேரே நாடகக் கொட்டகைக்குப் போனேன். காண்ட்ராக்டரைப் பார்த்தேன். அவர் காப்பி வாங்கிக் கொடுத்துட்டு, ‘சாமண்ணா, உன்னை நான் மறுபடியும் நாடகத்துலே சேர்த்துக்க முடியாது. என் நிலைமை அப்படி என் பேர்ல வருத்தப்படாதே’ன்னு சொல்லிட்டார். ஏன் அப்படிச் சொல்றீங்கன்னு கேட்டேன்.

‘ரொம்ப நஷ்டமாயிட்டுது. ஓட்டல்காரர்தான் கடன் கொடுத்து கை தூக்கிவிட்டார். கடன் கொடுக்கறப்பவே, சாமண்ணா திரும்பி வந்து வேலை கேட்டா, வேலை தரக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லி வச்சிருக்கார். கம்பெனியே இப்ப அவர் பேர்லதான் நடக்குது. ஓட்டல்காரருக்குச் சொந்தம் மாதிரிதான்’ என்றார்.

அங்கிருந்து நேரா ஓட்டலுக்குப் போனேன். என்னைக் கண்டதும் அந்த அயோக்கியன் பதறிப் போனான். திருதிருன்னு முழிச்சான். வேகமாகப் போய் அவன் சட்டையைப் பிடிச்சு இழுத்து தரதரன்னு நடு ரோட்ல கொண்டு வந்து நிறுத்தி, ‘ஏண்டா கலப்பட எண்ணெய்! என் மேலே பொய்க் கேஸ் போட்டு என்னை ஜெயிலுக்கு அனுப்பிச்சதுமில்லாம திரும்பி வந்தா வேலை தரக்கூடாதுன்னு வேறே காண்ட்ராக்டர்கிட்டே சொல்லி வச்சிருக்கியாமே!’ என்று அவன் மென்னியை இறுக்கப் பிடிச்சேன்.

‘ஐயோ, ஐயோ என்னைக் கொல்றானே! எல்லாரும் இப்படி வேடிக்கை பார்த்துட்டு நிக்கறீங்களே!’ என்று கூப்பாடு போட்டான்.

‘சத்தம் போட்டே, கொலையே விழும். ஜாக்கிரதை’ன்னு தொந்தியிலே ஓங்கி ஒரு குத்துவிட்டேன். அம்மாடின்னு அப்படியே விழுந்துட்டான்.

இதுக்குள்ளே கூட்டமான கூட்டம் கூடிட்டுது.

விட்டுருங்க பாவம், விட்டுருங்கன்னு, என்னைப் பிடிச்சு இழுத்து, அழைச்சிட்டுப் போயிட்டாங்க. அப்பவும் நான் சும்மா இல்லே. தெருப்புழுதியை வாரி அவன் மேலே வீசினேன்.

‘டேய், மோசக்காரா! பொய்க் கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பினே இல்லே என்னை! இரு, இரு! இன்னும் கொஞ்ச நாளில் இதே ஊர்ல நானே சொந்தமா நாடகக் கம்பெனி ஆரம்பிச்சு உன் கம்பெனியை க்ளோஸ் பண்றனா இல்லையா பார். அது மட்டும் இல்லை. உன்னையும் நடுத்தெருவிலே நிக்க வைக்கலே என் பேர் சாமண்ணா இல்லே’ன்னு நாலு பேர் முன்னால் சத்தியம் செஞ்சுட்டு வந்திருக்கேன். என் ரத்தம் கொதிச்சுப் போச்சு. உன்னைப் பார்த்து தாசி மகள்னு சொன்னவன் நாக்கை அறுத்து எறிய வேணாம்! ஆமாம், என் சபதத்தை நிறைவேத்தினப்புறம்தான் உன் கழுத்திலே தாலி கட்டப் போறேன். அதைச் சொல்லிட்டுப் போகத்தான் இப்ப வந்திருக்கேன்.”

பாப்பா பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“நீ அழாதே பாப்பா! நீ ஏன் அழறே?”

“நீங்க எனக்குத் தாலி கட்ட முடியாது. எனக்கு அப்பவே கலியாணம் ஆயிட்டுது. இத பாருங்க தாலி!” என்று தன் கழுத்தில் மறைந்திருந்த தாலியைத் தொட்டுக் காட்டினாள் பாப்பா.

“என்னது! உனக்குக் கலியாணம் ஆயிட்டுதா!”

“ஆமாம்.”

“அப்படின்னா உன் புருஷன்…?”

“நான் தாசி மகளாம்! அவன் என்னைத் தள்ளி வச்சுட்டான். இப்ப நான் வாழா வெட்டி” என்றாள் பாப்பா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 37கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 37

அத்தியாயம் 37 – கமலபதி “கண் எல்லாவற்றையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளை எல்லாம் கேட்கிறது; வாய், காரியம் இருக்கிறதோ இல்லையோ, பலரிடத்திலும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும் போதும் மற்றயாரைப் பார்க்கும் போதும் அடையாத இன்பத்தை அடைகிறது. அவர்

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 1கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 1

அத்தியாயம் 1 – பறித்த தாமரை      பூங்குளம் என்று அந்தக் கிராமத்துக்குப் பொருத்தமாய்த்தான் பெயர் அமைந்திருந்தது. நீர்வளம் நிறைந்த ஊருக்கு உதாரணம் வேண்டுமானால், பூங்குளத்தைத் தான் சொல்ல வேண்டும். ஆடி, ஆவணி மாதத்தில் ஊருக்கு வெளியே சென்று பார்த்தால் குளங்களிலும், ஓடைகளிலும்,

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1

3. இரண்டு குழந்தைகள்   இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர் வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல், அநேகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் பக்கத்தில் சற்றுத்தள்ளியோ நெருங்கியோ அமைந்துள்ள கொட்டகைகளில்