சாவியின் ஆப்பிள் பசி – 3 (Audio)


 

“தம்பி, அப்படின்னா என்ன செய்யப் போறீங்க? டிராமா தான் இல்லையாமே. எங்களோடு பூவேலிக்கு வந்துடுங்களேன்,” பாப்பாவின் முகத்தைப் பார்த்து, “என்னம்மா, நான் சொல்றது சரிதானே?”

அவள் சாமண்ணாவின் முகத்தைப் பார்த்தாள்.

சாமண்ணா சொன்னான்.

“நீங்க ஏதோ டிராமாவுக்கு வந்தீங்க. வந்த இடத்திலே தற்செயலா என்னைப் பார்த்தீங்க. மழைக்குத் தங்கினீங்க. சாப்பாடு போட்டீங்க, காப்பி வாங்கி வந்து கொடுத்தீங்க. இதுக்கெல்லாம் நான் ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன். இப்ப நான் வரலையேன்னு வருத்தப்படாதீங்க.”

“உனக்கு உடம்பு சரியில்லாதப்போ தனியா விட்டுட்டுப் போறது மனசுக்கு அவ்வளவு சமாதானமா இல்லே…! அதான் யோசிக்கறோம்.”

“பரவாயில்லைங்க. என் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமாயிட்டுது. பட்டினியும் கிடப்பேன். பாயசமும் சாப்பிடுவேன்! பெரிய பெரிய குடும்பத்துப் பெண்களெல்லாம் நாடகம் பார்க்க வருவாங்க. பார்த்துட்டு என்னைப் புகழ்ந்து பேசுவாங்க. விருந்துக்கு அழைப்பாங்க. சில பெண்கள் வலிய வந்து என்னோடு சிரிச்சுப் பேசி சிநேகமாப் பழகறதும் உண்டு. ஆனால் நாடகக் கம்பெனி அடுத்த ஊருக்குப் போயிட்டா, அத்தோடு எல்லாம் நின்னு போயிடும்.”

“எங்க சிநேகத்தையும் அந்த மாதிரி நினைச்சுராதீங்க. தொடர்ந்து இருக்கும்” என்றாள் பாப்பா.

“ரொம்ப சந்தோஷம். இப்ப லாட்ஜுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம் வாங்க. இந்த நேரத்துக்கு சூடா இட்லி கிடைக்கும் மல்லியப் பூ மாதிரி” சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு புறப்படத் தயாரானான் சாமண்ணா.

வண்டி அம்பாள் லாட்ஜ் வாசலில் போய் நின்றது. வாசலில் குடுகுடுப்பைக்காரன் உடுக்கை அடித்துக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான். “வழிவிட்டு நில்லுப்பா” என்று உள்ளே போனவர்கள் ஒரு மூலையில் இருந்த கடப்பைக் கல் டேபிளைத் தேடிச் சென்று உட்கார்ந்தார்கள். அலம்பி விட்டதால் தரையெல்லாம் ஈரம் காயாமலிருந்தது.

கல்லா மேஜைக்கு மேலே லட்சுமி, சரஸ்வதி, பாலாஜி படம். மீட்டர் பெட்டிக்கு மேல் சிகப்பு பல்ப் வெளிச்சம். எதிர் சுவரில் ஓட்டல்காரர் போட்டோ என்லார்ஜ்மெண்ட்.

மீசை வைத்த பால்காரரும் மளிகைக் கடைக்காரரும் பொங்கல், வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சின்னப் பெண் கல்லா மேஜை ஓரம் காப்பிக் கூஜாவுடன் பார்சலுக்குக் காத்திருந்தாள்.

ஸில்க் ஜிப்பாவுக்குள் தங்க செயின் தெரிய ஓட்டல் ஐயர் உள்ளே வந்து கல்லாவில் அமர்ந்தார்.

மூலையில் உட்கார்ந்திருந்த சாமண்ணாவையும் அவன் பக்கத்தில் இருப்பவர்களையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே காலணா, அரையணா நாணயங்களைத் தனித் தனியாக மேஜை மீது அடுக்கி வைத்தார்.

பில் பணம் கொடுக்க சாமண்ணா எதிரில் வந்து நின்ற போது, “எட்டரையணா மூணு பேர்” என்று உள்ளிருந்தபடியே கட்டைக் குரலில் கூவினான் சர்வர்.

ஓட்டல் ஐயர், “இவாள்ளாம் யார்?” என்று சாமண்ணாவிடம் கேட்டார்.

“நாடகம் பார்க்க வந்தாங்க. வெளியூர். மழைக்காக ராத்திரி இங்கே தங்கிட்டு இப்ப ஊருக்குப் போறாங்க.”

“இன்னிலேர்ந்து நாடகம் இல்லையாமே!”

“ஆமாம். சம்பளம் வாங்கத்தான் போய்ட்டிருக்கேன். அப்புறம் வந்து பேசறேன்” என்று அவசரமாகப் புறப்பட்டான் சாமண்ணா. ஐயர் பாப்பாவையே உற்று உற்றுப் பார்த்தார். அவர் பார்வையில் சந்தேகம் இருந்தது.

‘இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கேனே! எங்கே எப்போது?’ என்று இருபது வருஷங்களுக்கு முன் தேடினார்.

“ஆமாம். அதே முகம். அதே ஜாடை! தாசி அபரஞ்சி மகளாயிருப்பாளோ?”

நாடகக் கொட்டகை வரை வண்டியிலேயே போய் இறங்கிக் கொண்ட சாமண்ணா அவர்கள் இருவரையும் ஊருக்கு அனுப்பிவிட்டு, காண்ட்ராக்டர் வருகைக்காகக் காத்திருந்து சம்பளத்தை எண்ணி வாங்கிக் கொண்டபோது மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டது. நோட்டும் சில்லறையுமாகக் கிடைத்த இருபத்தேழு ரூபாயில் புருஷோத்தமன் ஷாப்பிலே ஒரு சோப்பும் மூலைக் கதர்க் கடையில் ஒரு ரெடிமேட் சட்டையும் வாங்கிக் கொண்டான். வாடகை சைக்கிள் பிடித்து லாட்ஜுக்கே திரும்பிப் போய் இன்னொரு காப்பி சாப்பிட்டான்.

ஓட்டல் முதலாளி சுதேசமித்திரனில் ‘மிராசுதார் துயர’த்தில் மூழ்கியிருந்தார். சாமண்ணாவைக் கண்டதும் “வா சாமண்ணா! ராத்திரி அவங்க உன்னோட தான் தங்கியிருந்தாங்களா?” என்று விசாரித்தார்.

“ஆமாம்.”

“உனக்கு அவங்களை ரொம்ப நாளாத் தெரியுமோ?”

“ஊஹூம். நேத்துதான்; டிராமாவுக்கு வந்தப்பதான்…”

“அந்தப் பெண்ணை நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனா எங்கேன்னு தெரியல்ல. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. தாசி அபரஞ்சி முகம் அப்படியே உரிச்சு வச்சிருக்கு. அவள் மகளாய்த்தான் இருக்கணும்! அந்தக் காலத்திலே அபரஞ்சி அழகிலே மயங்காதவங்க கிடையாது…” என்றார்.

சாமண்ணாவுக்கு இது அதிர்ச்சியைத் தந்தது. ‘அபாண்டமாயிருக்குமோ?’ ஆனாலும் உணர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல், “அப்படியெல்லாம் இருக்காது…” என்றான்.

“நீ அவளைக் கல்யாணம் செய்துக்கப் போறதாக் கேள்விப் பட்டேனே!” என்று கேலியாகச் சிரித்தார்.

“யார் சொன்னாங்க?”

சிரித்தார். “எனக்கு அப்பப்ப எல்லா நியூஸும் வந்துடும் சாமண்ணா! காலையில காதர் பாட்சா வீட்டுக்கு வந்திருந்தான்.”

“நினைச்சேன். அவனுக்கு மண்டை வெடிச்சுடுமே. அவன் வெச்ச வத்திதானா இது? நான் அவளைத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்.”

“ஏண்டா இதுக்குத்தான் உனக்கு இலவசமா வீடு கொடுத்து வச்சிருக்கனா? பாவம், ஏழைப் பையனாச்சே, பிராமணப் பிள்ளையாயிருக்கியே, எதிர்காலத்துலே எனக்கும் ஒத்தாசையாயிருப்பியே என்று என் மகளை உனக்குக் கொடுத்து உன்னை வீட்டோடு மாப்பிள்ளையா வச்சுக்கலாம்னு நினைச்சேன். நீ என்னடான்னா அந்தத் தேவடியாச் சிறுக்கியை…”

“என்ன சொன்னீங்க? நாக்கை அடக்கிப் பேசுங்க.”

“தேவடியாச் சிறுக்கின்னு சொன்னேன். கூத்தாடிப் பயலுக்கு வேற எந்தப் பெண் கிடைப்பாள்…?” கேலியாக எக்காளமிட்டார்.

சாமண்ணாவுக்கு ரோசம் பொத்துக் கொண்டது. ஆவேசத்தில் உடல் படபடத்தது. “என்னடா சொன்னே, ஓட்டல்காரப் பயலே! உடம்பு எப்படி இருக்கு? பணத் திமிரா?” என்று எம்பி அவர் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தான்.

செயலற்றுப் பிரமித்து நின்ற ஓட்டல்காரர் கன்னத்தைத் தடவிக் கொண்டு, “டேய், அவனைப் பிடிங்கடா, உதைங்கடா!” என்று கூப்பாடு போட்டு சிப்பந்திகளள அழைத்தார். யாரும் கிட்டே வரவில்லை. “ஐயருக்கு நல்லா வேணும்!”

சாமண்ணா அங்கே நிற்காமல் அடுத்த கணம் சைக்கிளில் ஏறி மாயமாய் மறைந்து விட்டான்.

அன்று பகல் எங்கெங்கோ அலைந்து விட்டு அறையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த சாமண்ணா கீழே நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே யாரோ வருகிறார்கள் என்பதை ஊகித்தான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் எழுந்து போய்க் கதவைத் திறந்தான். அங்கே இரண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

“கொஞ்ச நாளைக்கு முன்னே யாரோ ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கிட்ட வீடுதானே இது?”

“ஆமாம், அதுக்கென்ன இப்போ?”

“இல்லே, அப்ப ஒருமுறை இங்கே வந்திருந்தோம். இப்ப நாங்க வந்தது அது சம்பந்தமா இல்லை. இது வேற கேஸ். உங்களைத்தான் தேடி வந்திருக்கோம்.”

“என்னையா? என்ன சங்கதி?”

“இந்த வீட்டைச் சோதனை போடச் சொல்லி உத்தரவு.”

“எதுக்கு?”

“உங்க பேர்ல அம்பாள் லாட்ஜ் முதலாளி கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கார். அவர் மகளுடைய தங்கச் சங்கலியைக் காணலையாம். நீங்க தான் எடுத்துட்டு வந்திருக்கணும்னு சந்தேகப்படறார். தெஃப்ட் கேஸ்…”

“அடப்பாவி! இது அக்கிரமம்! அந்த அயோக்கியன் என் மீது வீணாப் பழி போடறான். நான் யார்னு தெரியாதா உங்களுக்கு? நீங்க அந்த ஓட்டல்காரன் பேச்சை நம்பறீங்களா? அவன் பெண்ணை, அந்தப் பைத்தியத்தை நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்னு தெரிஞ்சதும் இப்படி என் மேல் திருட்டுக் கேஸ் ஜோடிச்சிருக்கான்.”

“உங்களை எங்களுக்கு நல்லாத் தெரியுங்க. அதான் டிராமாவிலே தினம் பாக்கறமே! ஆனாலும் எங்க டூட்டி. மேலிடத்து உத்தரவு.”

“நல்லாப் பாருங்க. உள்ளே வாங்க.”

முதலில் அலமாரியிலுள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து உதறினார்கள். மடிக்கப்பட்ட இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் கீழே விழுந்தன.

“இது ஏது ரூபாய்? இங்கே எப்படி வந்தது?”

“ஐயோ, எனக்குத் தெரியாது. சத்தியமாத் தெரியாது. எனக்கும் இந்தப் பணத்துக்கும் சம்பந்தமே இல்லை. என் சம்பளப் பணத்தை இதோ பாக்கெட்டில் வச்சிருக்கேன்” என்று பணத்தை எடுத்துக் காட்டினான்.

“அப்ப அந்த இருநூறு ரூபாய் உங்களது இல்லையா?”

“நிச்சயமா இல்லே.”

“ம்… அந்தத் தகரப் பெட்டியைத் திறந்து பாருப்பா…”

“தாராளமாப் பாருங்க.”

டிராமா போஸ்டர், சில காகிதங்கள், வேட்டி சட்டைகளைத் தவிர அதில் வேறெதுவும் தென்படவில்லை.

ஒரு கான்ஸ்டபிள் பாத்ரூமுக்குள் போய்த் தேடினான். அங்கிருந்த சோப்புப் பெட்டியைத் திறந்து பார்த்த அவன், “இதோ, இதில் இருக்குங்க செயின்!” என்று சத்தமாகச் சொன்னான்.

“எனக்கு ஒண்ணுமே தெரியாது. இதெல்லாம் ஓட்டல்காரர் சூழ்ச்சி. நான் இல்லாதபோது கொண்டு வச்சிருக்கார்” என்று அலறினான் சாமண்ணா.

“நீங்களே நேரே வந்து இன்ஸ்பெக்டர்கிட்டே சொல்லிடுங்க. ஸ்டேஷனுக்கு வரீங்களா?”

“இந்த ஊரில் மானம் மரியாதையோடு இருந்துகிட்டிருக்கேன். நான் ஒரு கலைஞன். உங்களோடு தெருவில் வந்தால் நாலு பேர் என்ன நினைப்பாங்க. நீங்க இப்படி என்னை அவமானப்படுத்தலாமா?”

“நாங்க என்ன செய்ய முடியும்? நீங்க இன்ஸ்பெக்டர் ஐயாகிட்ட வந்து பேசிக்குங்க. உங்களுக்கு அவமானமாயிருந்தா தனியாவே போய் இன்ஸ்பெக்டரைப் பாருங்க. அதிலே எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. நாங்க போய் ஓட்டல்லே காபி சாப்பிட்டுட்டு பின்னோடயே வந்துடறோம். நீங்க போய்க்கிட்டு இருங்க” என்றனர்.

சாமண்ணா சைக்கிளில் புறப்பட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 51கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 51

அத்தியாயம் 51 – காலைப் பிறை முத்தையன் பிடிபட்ட அன்றிரவைச் சிவராத்திரியாகக் கழித்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் கல்யாணி ஒருத்தி என்று சொல்லவும் வேண்டுமோ? பொய் மயமான இந்த உலகத்தில், எந்த ஒன்றை அழிவில்லாத உண்மை என்று கல்யாணி எண்ணியிருந்தாளோ, அது

உள்ளம் குழையுதடி கிளியே – 24உள்ளம் குழையுதடி கிளியே – 24

அத்தியாயம் – 24 சென்னைக்கு வந்தவன் முன்னரே எதிர்பார்த்தபடி உடனடியாக துபாய் செல்ல வேண்டியிருந்தது. அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தின் காண்ட்ராக்ட்டை கவனிக்க வேண்டியிருந்ததால் அவனது அலுவலக வேலைகள் அதிகமானது. அவனது நிறுவனம் துபாயின் மருத்துவ சேவை நிறுவனத்தின் இன்ப்ரா ஸ்டரக்சர் பொறுப்பை